Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வாழும் நாடுகள் 3 - இந்தோனேசியாவில் தமிழர்கள்

Featured Replies

இந்தோனேசியாவில் தமிழர்கள் 

சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன் ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத்தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக் கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினி வரை பரவிக் கிடக்கின்றன. இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வட போர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்žனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்து மாக்கடலும் 74,101 சதுர மைல்கள் அடங்கிய இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன. 

தமிழர் குடியேறிய வரலாறு :

சங்க கால நூல்களில் இந்தோனேசியாவைப் பற்றிய சில செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மொலுக்காஸ் போன்ற தீவுப் பகுதிகள் முந்நீர்ப் பழந்தீவு என இந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இத்தீவுகளைப் பன்னிராயிரம் என மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது. தமிழர்கள் ஜாவாவைச் சாவகம், சாவகத் தீபம், யவத் தீபம் என்றும், சுமத்திராவை, சிரிவிசயம், சொர்ணதீபம் என்றும் அழைத்து வந்தனர். பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளிலிருந்து, தமிழ் வணிகர்களும், தமிழ்ப் பெருமக்களும் சங்க காலத்திற்கு முந்திய காலத்திலிருந்தே சாவகத்துடன் தொடர்பு வைத்திருந்ததை அறிய வருகிறோம். பொதுவாக அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக இந்தோனேசியாத் தீவுகளுக்குப் பண்டைய தமிழர்கள் சென்றார்கள்.

சாவகம் (ஜாவா) பற்றிய செய்திகள் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இடம் பெற்றிருக்கின்றன. மணிமேகலையில் சாவக நாட்டிலுள்ள நாகபுரம் என்னும் பட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பூமி சந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும் சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளதையும் மணிமேகலை (14:73-85) கூறுகிறது. மேலும், மணிமேகலை சாவக நாட்டிற்குச் சென்று, அங்கு சிறப்புற்று விளங்கிய 'தருமசாவகன்' என்ற பௌத்தத் துறவியை வணங்கியதாகவும், சாவகத்தில் ஆட்சி நடத்திய ஆபுத்திரனோடு மணிபல்லவம் வந்து, அங்கே தீவதிலகையின் மூலம் காவிரி பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதையும் மாதவியும் சுதமதியும் அறவன அடிகளோடு வஞ்சி நகர் சென்றதையும் அறிந்து அங்கிருந்து விண்வழியாக வஞ்சி நகர் விரைந்ததாகவும் மணி மேகலையில் கூறப்பட்டுள்ளது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலுள்ள பாண்டிய நாட்டினின்று கப்பல்கள் சாவகம், சுமத்திரா முதலிய நாடுகளுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள துறைமுகத்தின் வழியாகச் சென்றன. இதற்குச் சான்று மணிமேகலையில் கிடைக்கின்றது என்று அறிஞர் சி.இராசநாயகம் பண்டைய யாழ்ப்பாணம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். சாவகத்தின் முதல் மன்னனுக்குச் žர்மாறன் என்று பெயர். இந்தப் பெயர் சாவகத்தின் அரசப்பரம்பரையானது தமிழர்களோடு நெருங்கிய சம்பந்தம் உடையதென்பதை நன்கு விளக்குவதாக இருக்கின்றது. சாவகத்தில் இப்போதுள்ள பழங்குடி மக்களிடத்து, திராவிட பழங்குடி மக்கள் கூட்டத்தினரான தமிழகப் படகர்களுக்குரிய (Badagas) பெயர்கள் வழங்கி வருகின்றன. ஜாவா, சுமத்திரா நாடுகளில் இந்தியக் குடியேற்றங்களை அமைத்தவர்கள் திராவிடர்களின் வழி வந்தவர்களாக இருக்க வேண்டுமென்பதை ஜெ.குரோம் (J.Krom-1938) என்ற வெளிநாட்டறிஞர் காரணங்கள் காட்டி நிறுவியுள்ளார்.

மேற்கு ஜாவாவில் கிடைத்த கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு பல்லவர் காலத்திய கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டு ஜாவாவின் தலை நகரமான ஜகார்த்தாவின் அருகிலுள்ள தரும நகரத்தை ஆண்ட பூரண வர்மன் என்ற இந்து அரசனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஜாவாவில் சங்கல் (Changal) என்னும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டு பல்லவ கிரந்த எழுத்தின் பிற்கால வடிவில் எழுதப்பட்டுள்ளது. அக்கல்வெட்டு தென்னிந்தியாவில் குஞ்சர குஞ்சம் என்னும் இடத்திலிருந்து வந்து, குடியேறிய அரசனின் மரபிலே வந்த ஓர் அரசன் ஜாவாவின் நடுப்பகுதியில் சிவலிங்கம் ஒன்றை நிறுவிய செய்தியைச் சொல்கிறது. žன நாட்டில் குவாங்-வா-டி (Kwang-wa-ti) என்னும் மன்னன் ஆட்சி செலுத்திய காலத்தில் (ஏறத்தாழ கி.பி.75) சாவகத் தீவில் இந்துக்கள் குடியேற ஆரம்பித்தார்கள் என்று வில்லியம் ஸ்மித் என்னும் வரலாற்றாசிரியர் குறிப்பிடுகின்றார். 

வடக்குச் சுமத்திராவில் சோழர், பாண்டியர், பல்லவர், சேரர் என்னும் பெயர்களை உடைய பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய மூதாதையர் சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளில் இருந்து வந்தவராகக் கருதப்படுகின்றனர். பல்லவர் காலத்தில் (கி.பி. 550-750) கடல் மார்க்கம் வழியாக இந்தோனேசியாவிற்குப் பல தமிழ் பெருமக்கள் சென்றார்கள் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. இது சம்பந்தமாக இந்தோனேசியாவில் கல்வெட்டுகள் கூட கிடைத்திருக்கின்றன. இராசசிம்மன் எனும் பல்லவ அரசன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலை எழுப்பியனாவான். அக்கோயிலின் வெளிப்புற மதிலுக்கு அடுத்துத் தெற்குப் பக்கத்தில் பல சிறு கோயில்கள் உள்ளன. அவற்றுள் மூன்றாவதா உள்ள கோயிலை இராசசிம்மனுடைய மனைவியருள் ரங்கபதாகை என்னும் அரசி தம் சொந்த செலவில் கட்டியுள்ளார். இதை அக்கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது. அதில் ரங்கபதாகையின் தந்தைபெயர் சைல அதிராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் இந்தோனேசிய சைலேந்திர அரசனையே சுட்டுகிறது என்று தி.நா.சுப்ரமணியம் அவர் எழுதிய The pallavas of kanchi in Southeast Asia (பக் 43) எனும் நூலில் தெளிவாக்குகிறார். சைலேந்திரருடைய ஆட்சியின் தொடக்க காலகட்டமே பல்லவரின் ஆட்சி காலமாகும்.

சாவக அரசர்கள் 'மீனாங்கித சைலேந்திரர்' (மீனினை இலச்சினையாக உடைய மலைகளின் தலைவர்) என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்டு இருந்தனர் என்பதை அவர்களின் கல்வெட்டுகளால் அறிகின்றோம். பாண்டியருடைய கொடியில் எப்பொழுதும் இரட்டை கயல் மீன் பொறிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்த செய்தியாகும். சைலேந்திரர்களுக்கும் கயல்மீன் சின்னமாக இருந்தமையால், சைலேந்திரர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்படும் மலையத்துவச பாண்டியன் வழிவந்தவராக இருக்கலாம் என கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுகின்றார்.

சோழ மன்னர்கள் கல்வெட்டுகள் சிலவற்றிலும் சாவகம் குறிப்பிடப்பட்டுள்ளது. லெய்டன் சாசனம் என்ற இராசஇராச சோழனின் சாசனத்தில் கடாரத்தின் அரசன் சூளாமணிவர்மனாலும் அவன் மகன் மாற விஜயேத்துங்க வர்மனாலும் தமிழத்திலுள்ள நாகப்பட்டிணத்தில் கட்டப் பெற்ற ஒரு பௌத்த விகாரம் கி.பி. 1006 ஆம் ஆண்டில் கட்டுவதற்குத் தொடங்கப்பட்டது. இதற்கு இராசஇராசன் ஆனைமங்கலம் என்னும் ஊரை நிவந்தமாக அளித்தான் என்ற குறிப்புகள் காணப்படுகின்றன. (The Larger Leiden plates of Rajaraja I,Ep. Ind.Vol.XXII No:34).

இராசேந்திர சோழ அரசனின் மெய்கீர்த்தியைக் கூறும் சாசனம் இந்தோனேசியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஸ்ரீவிசயப் பேரரசுக்கு எதிராக சோழர்கள் எடுத்த டற்படையெடுப்பைப் பற்றி கூறியிருக்கின்றது. தமிழர்கள் விருப்பம் போல் தென்கிழக்கு ஆசியாவில் வணிகம் செய்யத் தடை ஏற்பட்டதனால் 11ஆம் நூற்றாண்டில் மாபெரும் சோழற்படை தென்கிழக்காசியாவில் பல நாடுகளிலும் புகுந்து வெற்றி வீரர்களாக ஆங்காங்குள்ள மன்னர்களோடு நட்புறவு கொண்டு தமிழர்கள் தங்குதடையின்றி வணிகம் புரியவும் குடியேறி வாழவும் வழிவகை செய்தனர்.

சோழ அரசர்களுக்கும் சுமத்திராவை ஆண்ட அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததைப் பற்றி பல சான்றுகள் கிடைத்திருக்கின்றன. சுமத்திராவில் 11ஆம் நூற்றாண்டில் பொது மக்கள் பயன்படுத்திய பத்திரங்களில் (Public Documents) தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டது என வுல்ட்ஸ் (Hultz) என்பாரும் சே.ஏ.நீலகண்ட சாஸ்திரியும் கூறுகின்றனர். மேலும் தமிழ் வாணிகக் குடியிருப்புகள் இங்கு இருந்ததாகவும் சான்றுகள் கிடைத்துள்ளன. சுமத்திராவில் உள்ள லோபுதுவா (Loboe Toewa) எனும் இடத்தில் கிடைத்துள்ள தமிழ்க் 1கல்வெட்டில் 1500 பேர் அடங்கிய ஒரு வணிகக் கூட்டமைப்பு இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. அயர்லிங்கா (Airlingga கி.பி.1019-1049) எனும் சாவக அரசனின் குறிப்புகளிலும் திராவிட, கலிங்க, சிங்கள, கருநாடக நாட்டவர்கள் சாவகத்தில் வாணிகம் செய்ய வந்தனர் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும் முதலாம் இராசராசன் காலத்திலிருந்து குலோத்துங்கன் காலம் வரையில் உள்ள கல்வெட்டுகளில் சுமத்திர பேரரசு ஸ்ரீவிசயாவைப் (கடாரம்) பற்றி செய்திகள் கிடைக்கின்றன. ஆகையால் பிற்கால சோழர்கள் காலத்தில் இந்தோனேசியாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது எனத் தெரிகிறது.

இத்தொடர்பு தொடர்ந்து நீடித்து வந்தது. இந்தோனேசிய அரசரான இராசசனாகர மன்னனின் அவைப் புலவரான பிரபன்சா (Prapantja) எழுதிய நகர கர்த்தகாமாவில் (Nagarakertagama கி.பி.1365) காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புத்தாதித்தியர் சாவக மன்னனைப் பற்றி எழுதிய பாடல்களைப் பாராட்டி சொல்லப்பட்டிருக்கின்றது. ஜெயனகர மன்னன் (1309-28) அவனுடைய முடிசூட்டு விழாவின் போது சுந்தரபாண்டியன் எனும் பட்டப்பெயர் சூட்டிக் கொண்டான். பாண்டிய இலச்சினையான மீனைத் தனது இலச்சினையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். காஞ்சிபுரத்திலிருந்து வந்த புத்த பிக்குகள் 14 ஆம் நூற்றாண்டில் சாவகத்தை ஆட்சி செய்த ஹயாம் வுருக் எனும் அரசரைப் புகழ்ந்துரைக்கின்றனர். பதினேழாம் நூற்றாண்டில் இந்தோனேசியாவை ஆண்ட டச்சுக்காரர்கள் தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளின் ஆவணங்களையும் பதிவேடுகளையும் வைத்திருந்தார்கள் என ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை மலாக்கா கடற்கரையோரப் பகுதிகளில் விவரமான அறிக்கைகள், கணக்கு(Account) தமிழிலும் வைக்கப்பட்டன எனச் சான்றுகள் கிடைத்துள்ளன. இச்சமயத்தில் தமிழர்களைக் கெலின்ங் (Keling) என அழைத்தனர்.

அண்மைக் காலத்தில் பாலியில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ள பழம்பொருள் சின்னங்கள் பாலி ஓர் இந்துக் குடியேற்ற நாடு என்பதை மெய்பித்துள்ளன. பாலியிலுள்ள பழைய கல்வெட்டுகளில் எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. இவற்றால் பாலித் தீவில் தனித்ததோர் இந்துக்குடி அமைக்கப்பட்டு இந்தியப் பண்பாடும் நாகரிகமும் போற்றி வளர்க்கப்பட்டதை அறிகிறோம். பாலியின் கிழக்குக் கரையோரத்தில் சங்கு-பெட்ராக்கு எனுமிடத்தில் ஒரு தமிழ்க் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. அங்கு எழுப்பப்பட்ட சிவன் கோயிலையும், அதில் இடம் பெற்றுள்ள முகலிங்கத்தையும் அது குறிப்பிடுகிறது. பழங்காலத்திலேயே பாலிக்குத் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய தமிழர்கள் மூன்று நான்கு தலைமுறைக்கு மேலாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். பாலித் தீவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைமுறையினர் அன்றாடம் தமிழ்ப் பாடல்களான தாயுமானவர் பாடல்களைப் பாராயணம் செய்யும் பழக்க முடையவர்களாக உள்ளதால், இவர்களும் பழங்காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்து பாலிக்குக் குடியேறி வாழ்பவர்களாக உள்ளதை அறிய வருகிறோம்.

காலிமன்தானில் (போர்னியா) ஏழு சமஸ்கிருத மொழிக் கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. பண்டைக் காலத்து மகாகன் ஆற்றுக்கு அருகில் மௌராகமன் என்ற துறைமுகம் சிறப்புற்று விளங்கியது. அத்துறைமுகம் இருந்த இன்றைய குடேய் (Kutei) மாவட்டத்தில்தான் இவ்வேழு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. குண்டுங்கன் (Kundunga) என்ற அரசனின் மரபைச் சேர்ந்தவர்கள் கிறித்துவ சகாப்தத்தின் முதல் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகள் தொடக்கத்தில் போர்னியோவை ஆண்டதாக அக்கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. குண்டுங்கன் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய ஓர் இளவரசனாகவும், கவுண்டினியன் என்ற புராண மரபில் வரும் அரசனாகவும் கருதப்படுகிறான். 'குண்டுங்கன்' என்ற சொல் தமிழ்ச் சொல்லாக இருக்கலாம் என்றும், பல்லவர் செப்பேடு ஒன்றில் 'குண்டுகூரன்' என்ற பெயர் ஒன்று காணப்படுவதாக வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர். குண்டுங்களின் மகன் அசுவவர்மன் என்பதும், அசுவவர்மனுடைய மகன் மூலவர்மன் என்பதும் அக்கல்வெட்டுகளால் தெரிய வருகின்றன. மூலவர்மன் காலத்து 'குடை' கல்வெட்டுகள் சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால், நெடுந்தொலைவிலுள்ள போர்னியா தீவில் இந்திய நாட்டு மொழி, சமயம், அரசியல், சமூக நிறுவனங்கள் பெற்றிருந்த செல்வாக்கை அறிய முடிகிறது. தமிழ் மாதங்களின் பெயர்களும், தமிழ் நீட்டல் அளவைப் பெயர்களும் அந்நாட்டில் எவ்வாறு சிறப்புற்று விளங்கின என்பதை அவை எடுத்துரைக்கின்றன. மேற்கு போர்னியோவில் ஓவிய வேலைபாடுள்ள ஸ்தூபம் கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பக்கச் சுவர்களில் எட்டு கல்வெட்டுகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வெட்டுகளில் பிற்காலப் பல்லவ கையெழுத்து முறைகளைப் பார்க்கலாம்.

செலிபிஸ் தீவு மிகப் பழங்காலத்திலேயே இந்தியாவோடு மிக நெருங்கிய உறவு கொண்டிருந்தது. இதில் தென்னிந்திய நாகரிகப் பண்பாட்டின் செல்வாக்கினைப் பேரளவில் இன்றும் நாம் காணுகின்றோம். இங்குக் கண்டெடுக்கப் பெற்ற புத்தர் சிலை குப்தர் காலத்திய கலைப்பாணியின் சாயலைக் கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் இங்குப் பண்டைக் காலத்து பூசைமணி ஒன்றும், கைத்தாளங்கள் இரண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை இன்றும் தமிழகத்து வீடுகளில் இறைவழிபாட்டின் பொழுது பயன்படுத்தப்படும் பூசைமணியையும் கைத்தாளங்களையும் ஒத்துள்ளன. பல்லவர் ஆட்சி காலத்திலேயே (கி.பி.450-900) தமிழர்கள் குடியேறிதற்குச் சான்றாக பல்லவர் காலச் சின்னங்கள் பல செலிபிஸ’ல் கிடைத்துள்ளன. செலிபிஸ் தென்னிந்தியாவோடு நேர்முகமாகத் தொடர்பு கொண்டிருந்தமை தொல்பொருள் சின்னங்களால் உறுதிப்படுகின்றன. அச்சின்னங்கள் பல்லவர்களின் எழுச்சிக்கு நெடுங்காலத்திற்கு முன்பே தமிழர்களின் குடியேற்றங்களும் வாணிகத் தொடர்புகளும் உண்டாகியிருக்க வேண்டும் என்பதை அறிவிக்கின்றன. 

நியன்ஹ“ய்ஸ் என்ற டச்சுப் புகையிலைத் தோட்ட உரிமையாளர் முதன்முதலில் ஒப்பந்த கூலிகளாக இருபத்தைந்து தமிழர்களை 1873 இல் இறக்குமதி செய்தனர். பாக்குத் தோட்டங்களைச் சுத்தப் படுத்தவும் குடிநீர் கொண்டு வரவும் மாட்டு வண்டி ஓட்டவும் சாக்கடைகளையும் சாலைகளையும் அமைக்கவும் அவர்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. 1875இல் கூலித் தமிழர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது. தமிழர்களுக்கென மேற்பார்வையாளர் ஒருவர் தோட்டங்கள் தோறும் நியமிக்கப்பட்டார். தோட்ட மேற்பார்வையாளர்கள் செய்த கொடுமைகளைப் பொறுக்காது கூலித் தமிழர்கள் ஓடினால் டச்சுக்காரர்கள் ஓடியவர்களைப் பிடித்து ஆறுமாத காலச் சிறை தண்டனை விதித்தனர். சிறை சென்ற தமிழர்கள் அரசாங்கச் சாலைகளை அமைக்க பயன்படுத்தப்பட்டனர். ஒப்பந்தக் கூலிகளைப் பிணைத்த கூலிகள் சட்டத் திட்டத்தை 1936இல் டச்சுத் தோட்ட உரிமையாளர்கள் முழுமையாக அகற்றியதால் தமிழர்கள் சுதந்திர மனிதர்களாயினர்.

ஒப்பந்த கூலிகளாக பணியேற்ற தமிழர்களைத் தவிர மற்ற சுதந்திரத் தமிழர்கள் வியாபாரம் நிமித்தமாகவும் நகர்புற வேலைகள் செய்யும் பொருட்டும் மேடான் நகரத்திற்கு வந்தனர். செட்டியார்கள், செட்டிகள், வேளாளர், முதலியார், பத்தர்கள் பலரும் மேடானில் குடியேறினர். புதுச்சேரியிலிருந்து டச்சு வர்த்தக நிறுவனங்களில் கணக்கர்களாகப் பணியாற்ற இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிள்ளை, முதலியார் எனக் குறிப்பிடப்படும் தமிழர்களும் மேடான் வந்தனர். பூசாரிகள், ஐயர்கள், முடித்திருத்துவோர், சலவைத் தொழிலாளிகள் முதலானோரும் தமிழகத்திலிருந்து மேடானில் குடியேறினர். இவர்களின் வழித் தோன்றல்கள் இன்றும் 
இந்தோனேசியாவில் வாழ்கின்றனர். 

தமிழரின் இன்றைய நிலை 

(1) சாவகத்தில் தமிழர் நிலை:

சாவகத்தில் (ஜாவாவில்) 1.2 சதவீதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த இரு நூற்றாண்டுகளில் குடியேறிய தமிழ் மக்களின் வழிவந்தோரோ இப்பொழுது இங்கு வாழ்ந்து வருகின்றனர். நடை உடை பாவனைகளில் அவர்கள் இந்தோனேசியராக மாறிவிட்டனர். பெரும்பாலான தமிழ் மக்கள் முருக வழிபாட்டையும் சக்தி வழிபாட்டையும் போற்றி பின்பற்றி வருகின்றனர். இத்தெய்வங்களுக்கும் சிறு கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றில் விழாக்கள் நடத்தப்படுகின்றன. தமிழர்கள் பொங்கல் உள்ளிட்ட பல பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். மக்களுக்கு இடப்படும் பெயர்கள் யாவும் தமிழின் வழிவந்த பெயர்களாக உள்ளன. இராமன், லட்சுமணன், முனிசாமி, வாசு, ருக்மிணி, சரஸ்வதி, ஸ்ரீ அஸ்துதி, பத்மா, ரத்தினா, நிர்மலா, பாஞ்சாலி, உத்தமி, ஆர்த்தி, ஸ்வர்ணா, ரத்னாவதி, பத்மாவதி போன்ற பெயர்கள் சாவகத்தில் வழக்கிலுள்ளன. வீட்டில் சாவக மொழிச் சொற்கள் கலந்த தமிழைப் பேசுகின்றனர்.

பண்டிகைகளின் போது வீடுகளில் தமிழ்நாட்டு உணவு சமைத்து உண்கின்றனர். ஆனால் வெளியே ஓட்டல்களில் தமிழக உணவு கிடைப்பதில்லை. ஆண்களும் பெண்களும் இந்தோனேசிய உடையையே அணிகின்றனர். இருபாலாரும் சமநிலையில் கல்வி கற்கின்றனர். தமிழ் மக்களும் பெரும்பாலோர் வாணிகம் செய்து வருகின்றனர். அவர்களுள் இராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழக இஸ்லாமியர்கள் மிகப் பலராக உள்ளனர். தமிழருள் சிலர் அலுவலகப் பணி புரிகின்றனர். அரசுப் பணியில் பொறுப்பான பதவிகளை வகிக்கும் பெரிய அதிகாரிகள் சிலர் தமிழராக உள்ளனர்.

(2) சுமத்திராவில் தமிழர் நிலை:

வட சுமத்திராவில், சுமத்திரா நாட்டுக்குடி மக்களோடு ஒன்றாகச் சேர்ந்து சுமத்திரா மக்களாக மாறிவிட்ட தமிழர்கள் பலராவர். ஆனாலும் பல்லவர், சோழர், பாண்டியர், சேரர் எனும் தங்கள் மூதாதையரின் குடிப்பெயர்களைத் தங்கள் சாதிப் பெயர்களாகக் கொண்டு இன்றும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். தோற்றத்தாலும், வீட்டினுள் பேசிக் கொள்ளும் மொழியாலும், வழிபடும் தெய்வங்களாலும், அவற்றிற்குக் கட்டியுள்ள திருக்கோயில்களாலும் கொண்டாடும் பண்டிகைகளாலும் அவர்கள் எல்லோரும் தமிழர்களாக உள்ளனர். மற்ற வகையில், அவர்கள் யாவரும் சுமத்திராவின் தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டனர்.

சுமத்திராவிலுள்ள மேடான் நகரில் மட்டும் ஏறக்குறைய 15,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் 250 ஆண்டுகளுக்கு முன்பு அங்குக் குடியேறிய தமிழ் மக்களின் சந்ததியினராவர். உணவாலும் உடையாலும் இந்தோனேசியர்களாக அவர்கள் மாறிவிட்டனர். மக்களுக்கு இடப்படும் பெயர்கள் பெரிதும் தமிழ்ப் பெயர்களாகவே உள்ளன. கேசவன், தருமராசன், முனிசாமி, சுந்தரம், நித்தியானந்தம், முருகன், இராமன் எனும் ஆண்களின் பெயர்கள் பெருவழக்காக உள்ளன. பெண்களுக்கு ராஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, மீனா, பாக்கியவதி, ரத்னாவதி, பத்மாவதி, சுžலா, திரௌபதி போன்ற பெயர்களும் வழங்குகின்றன. இந்தோனேசியாவிற்குரிய தேசிய மக்களுக்கும் இராமன், கிருஷ்ணன், இந்திரன், இலக்குமணன், இராவணன், துரியோதனன், தரும(வா)ன், அருச்சுனன் எனும் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேடானில் இந்து சமயத் தெய்வங்களின் கோயில்கள் பல உள்ளன. அவற்றுள் தண்டாயுதபாணிக் கோயில், மாரியம்மன் கோயில், பிள்ளையார் கோயில் ஆகியவை சிறப்பு மிக்கன. ஆண்டு தோறும் தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான காவடிகள் அவ்விழாவின் பொழுது முருகனுக்குச் செலுத்தப்படுகின்றன. அவற்றுள் பால் காவடியும் சர்க்கரைக் காவடியும் அதிகம். ஆடி மாதத்தில் மாரியம்மன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீமிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், கரக ஆட்டம், அலகு குத்தல் போன்ற பண்டைத் தமிழகப் பழக்க வழக்கங்கள் அங்குப் பின்பற்றப்படுகின்றன. விழாக்களின் பொழுது அந்நாட்டு அரசு தமிழர்களுக்கு மட்டும் விடுப்பு அளிக்கிறது. விழாவிற்கு வரும் இந்தோனேசியாவின் பல்வேறு பகுதி மக்களுக்கும் இலவச உணவு அளிக்கப்படுகிறது.

மேடான மைதானம் என தமிழர் சூட்டிய பெயரே திரிந்து மேடான் என நகரின் பெயராய் அமைந்தது. தமிழர்கள் தாங்கள் குடியேறிய நாடுகளில் தங்கள் ஊர்ப் பெயர்களையே தெருப் பெயர்களாகச் சூட்டியுள்ளனர். மேடானில் காவிரிப்பூம்பட்டினத்துத் தெரு, மதுரைத் தெரு, மதராஸ் தெரு முதலியவற்றைக் காணலாம். 

நவராத்திரி, தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகளின் போது புதிய புதிய தமிழ் நாட்டிய நாடகங்களும் மேடை நாடகங்களும் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. அங்குள்ள தமிழ் இளைஞர் நாடகம் படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுள் நித்தியானந்தம், தமிழ்நேசன் என்போர் முக்கியமானவர்கள் ஆவர். தமிழ்த் திரைப்படங்களுக்கு இந்தோனேசியா முழுவதும் பேராதரவு தரப்படுகிறது. மேடானின் தலைவர் (சிற்றரசர்) சுல்தான் எனப்படுபவராவார். அவருடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று அவர் கூறுகிறார்.

(3) பாலியில் தமிழர் நிலை :

பாலித் தீவில் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் பெரும்பாலோர் தமிழ்நாட்டு முஸ்லீம் பெருமக்களாவர். இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்தும் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்தும் ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் அங்குக் குடியேறிய தமிழ் மக்களின் வழிவந்தோர் வாழ்ந்து வருகின்றனர். தமிழையே வீட்டு மொழியாகப் பயன்படுத்துகின்றனர். தமிழ்ப் பத்திரிகைகளும், வார மாத இதழ்களும் அவர்களுடைய தமிழறிவை வளர்த்து வருகின்றன. பத்து ஆண்டிற்கு ஒரு முறையாகிலும் தமிழகம் சென்று வருகின்றனர். இன்றைய பாலித் தீவைக் காண்பவர்கள் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய தமிழகத்தைக் காண்பதைப் போன்ற உணர்வினைப் பெறலாம். உலக மக்களைக் கவரும் சுற்றுலாத் தலமாக திகழும் பாலியில் தமிழர்கள் வணிகத்தில் சிறந்து விளங்குகின்றனர்.

சமயம்-பண்பாடு :

இந்தோனேசிய இந்து கோயில் கட்டட அமைப்பிலும் சிற்பங்களிலும் பல்லவ காலத்து கலாச்சார பண்பாட்டின் தாக்கத்தைப் பார்க்க முடிகின்றது. எகிப்திய கூர்ங்கோபுரம் (Pyramid) போன்ற பல தள அடுக்குகளுடன் மேற்கட்டுமானப் பகுதி உள்ள இக்கோவில்கள் தமிழ்நாட்டு மகாபலிபுரத்தில் உள்ள ஏழாம் நூற்றாண்டு கோயில்கள் போல இருக்கின்றன. இதற்குத் சிறப்பான உதாரணம் டியங்பிளேட்டியு (Dieng plateau) நினைவுச்சின்னங்களாகும். இந்து சிவன் கோவில்கள் டியங்கில் (கி.பி.675) கட்டப்பட்டன.

சாவகத்திலுள்ள சிவன் கோயில்கள் பெரும்பாலும் 6,500 அடி உயரமுள்ள டியெங் பீடபூமியிலேயே உள்ளன. இங்கு மாமல்லபுரத்திலுள்ள கோயில்களைப் போல் ஐந்து கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் சிவவழிபாடுடைய திருக்கோயில்களாகும். இங்குள்ள சிவன் தாடியுடையவனாகவும், தொப்பி அணிந்தவனாகவும் காணப்படுகிறான். குடமுனிவன் என்றும், சிவகுரு என்றும் அழைக்கப்பட்ட தமிழ் வளர்த்த அகத்தியனின் குள்ள உருவமுள்ள சிலைகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்நாட்டைப் போலவே சாவகத்தில் சுடுமண்ணால் கோயில் கட்டப் பெற்றும், சுண்ணத்தினால் மேற்பூச்சுப் பூசப்பட்டும் வந்தது. பிறகு கல்லால் கட்டப் பெற்றபோது, தமிழகத்திலிருந்து கல்தச்சர்களும் ஸ்தபதிகளும் பார்ப்பனர்களும் குடியேற்றப்பட்டனர். அவர்களில் பலர் அந்நாட்டிலேயே தங்கி நிலைத்த குடிமக்களால் வாழ்ந்து வந்தனர். தமிழ் நாட்டிலுள்ள தாராசுரம், சிதம்பரம், நாகப்பட்டிணம், பட்டீஸ்வரம் முதலிய இடங்களிலுள்ள சிற்ப அமைப்புகளைச் சாவகத்தில் காணலாம். சாவகத்தில் பௌத்தமும் சைவமும் தலைச்சிறந்த சமயமாய் விளங்கின. சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் வேறுபாடு காட்டப் படவில்லை. ஆனாலும் சாவக மக்கள் தங்கள் மன்னர்களை விஷ்ணுவைப் போல் காட்டாமல் சிவனைப் போலவும் புத்தரைப் போலவுமே காட்டியுள்ளார்கள்.

இந்தோனேசியர்கள் இந்துக் கோயில்களைச் சாண்டி (Candi) என்பர். சாண்டி என்றால் பழங்கால கல் நினைவுச் சின்னங்கள் என்று பொருள். குறிப்பாக, இச்சின்னங்களைச் சாவகம், சுமத்திரா, பாலி முதலிய இடங்களில் பார்க்கலாம். இங்கு பிரம்மா, சிவன், விஷ்ணு, அகத்தியர், துர்க்கா, விநாயகர் போன்ற தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மத்திய சாவகத்திலுள்ள சோக் சக்கர்த்தாவில் சாண்டி பிரம்மா, சாண்டி விஷ்ணு கோயில்களைப் பார்க்கலாம். கி.பி.900 இல் கட்டி முடிக்கப்பட்ட பிரம்மானன் என்ற
இந்துக் கோயில் சாவகத்திலிருக்கின்றது. கிழக்குச் சாவகத்தில் உள்ள பாரா எனுமிடத்தில் இருக்கும் கணபதி உருவம் திராவிட சிற்ப மரபில் அரிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்டதாகும். மண்டியிட்டுக் கொண்டிருக்கும் பெரிய பூதங்கள் அசுரர்களின் நுழைவாயிலைப் (Portico) பார்த்துக் கொண்டிருப்பதைச் சாவக கோயில்கள் புகுவழிகளில் பார்க்கலாம். இச்சிற்பங்கள் தென்னிந்திய கோயில்களில் உள்ள பேரழகு வாய்ந்த பூதவாகனங்களைப் போன்று இருக்கின்றன. எட்டாவது நூற்றாண்டில் போரோபுதூரில் தோன்றிய பௌத்த சமய சைத்தியங்கள் கூட பல்லவர்கள் சோழர்கள் கட்டடப்பாணியை ஒட்டியே காணப்படுகிறது என வரலாற்று அறிஞரான வின்சென்ட் ஸ்மித் கூறியுள்ளார்.

சாவகத்தில் நடைபெறும் பாவைக் கூத்துகள் இந்திய மூலத்தை உடையனவாகும். ஏனெனில் இக்கூத்துகளில் இராமாயண மகாபாரத நிகழ்வுகளே ஆடப்பெறுகின்றன. எனவே இந்தியர்கள் இந்தியாவிலிருந்து பௌத்தம், சைவம் ஆகிய சமயங்களோடு இசையையும், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், இதை விளக்கும் சிற்பக் கலையையும், பொம்மலாட்டம் என்ற புதுக்கலையையும் சாவகத்திற்கு கொண்டு போனார்கள். தமிழர் கண்ட நாட்டியத்தின் மாறிய வடிவம் சாவகத்தில் காணக் கிடைக்கிறது.

பாலியில் சித்திரை 2 ஆம் நாள் கலைமகள் விழா கொண்டாடுகிறார்கள். நவராத்திரி விழா நடத்துகின்றனர். சிவராத்திரி அன்று பெருவிழா படைத்து நடனமாடுகின்றனர். பாலித் தீவு மக்கள் தொகையில் 93.37 சதவீதத்தினர் இந்துக்கள் ஆவர். இவர்கள் பெரும்பான்மையோர் சிவனை வழிபடுகின்றனர். இந்தியா, நேபாளம் நீங்கலாக இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடம் பாலித்தீவாகும். சிவவழிபாடு பிறந்த இடம் திராவிட நாடாகும். எனவே பின்பற்றும் சமயத்தில் தமிழ்ச் சமயத்தின் தாக்கம் இருக்கிறது என்று அறுதியிட்டு கூறலாம். பண்டைத் தமிழர்கள் சூரியன், நிலம், நீர், தீ, காற்று, மலை இவற்றை தெய்வங்களாகக் கருதி வணங்கினர். இதே மாதிரியான நம்பிக்கை பாலி மக்களிடம் இன்றுக் கூட நிலவுகிறது.

வட சுமத்திராவில் முப்பத்திரண்டு தமிழ் இந்துக் கோயில்களும் மேடானில் தென்னிந்திய மசூதி ஒன்றும் தமிழர்களால் எழுப்பப்பட்டன. மேடானில் 1884 இல் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் இன்றும் புகழ் பெற்று விளங்குகிறது. அங்குள்ள மற்றொரு கோயிலான சுங்கு சுப்பு மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் தீமிதித் திருவிழா நடைபெற்று வருகிறது. மற்றும் மேடானில் உள்ள காளிக் கோவிலும், தண்டாயுதபாணி கோயிலும் தமிழர்களிடையே சிறப்பு பெற்றதாகும். இந்தோனேசியத் தலைநகர் ஜகாத்தாவில் தமிழர்கள் கட்டியுள்ள சிவன் கோவிலில் சித்திரை முதல் நாள் மலாயில் எழுதிய 'அரே ராமா அரே கிருஷ்ணா' தேவார திருவாசகத்தைப் பாடி கும்பிடுவார்கள். இந்தோனேசியாவில் விலை மகளிருக்குத் தனிப்பட்ட 'சொர்க்க பூமிகள்' ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும் பொது நிலையில் žதையின் மாட்சியைப் போற்றும் நாடானமையால் அங்கு கற்பு நெறி கண்டிப்பாக வலியுறுத்தப்படுகிறது.

வாழ்க்கைத் தரம்/தொழில் :

வட சுமத்திராவில் வாழும் பதினைந்தாயிரம் தமிழர்களில் பொருளாதார முன்னேற்றம் கண்டிருப்பவர்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றனர். சுமார் முப்பது தமிழ்க் குடும்பங்களே பொருளாதார முன்னேற்றம் பெற்றுள்ள குடும்பங்கள் ஆகும். பெரும்பாலான தமிழர்கள் ஏதாவது சொந்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். மற்றும் சிலர் சாவகர்களிடமும், žனர்களிடம், தமிழர்களிடமும் வேலை செய்கின்றனர். இவ்வாறு வேலை செய்வோரின் மாத வருவாய் ஐம்பது சிங்கப்பூர் வெள்ளியிலிருந்து நூறு சிங்கப்பூர் வெள்ளிக்குள் இருக்கிறது. ஒரு சில தமிழர்கள் அரசாங்கத்திலும் பணியாற்றுகின்றனர். கல்வித் துறையில் தமிழர்கள் அதிகம் நாட்டம் காட்டவில்லை. பலர் உயர்நிலைப் பள்ளிப்படிப்போடு முடித்துக் கொண்டு ஏதாவது தொழிலில் ஈடுபடுகின்றனர்.

ஒரு காலத்தில் நூற்று இருபது வட்டிக் கடைகள் வைத்திருந்த செட்டியார்களுக்கு இன்று நான்கு கடைகளே உள்ளன. இவையும் கொடுத்த கடனை மீண்டும் பெறுவதற்காகவே இயங்குகின்றன. வட சுமத்திராவில் செட்டியார்கள் சியந்தார், ஆச்சை, மேடான் ஆகிய மூன்று இடங்களிலேயே தனி வணிகத் தொழில் செய்து வந்தார்கள். 1920க்குப் பின்னரே அவர்கள் வந்தனர். ஒரு சிலர் நேரடி ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டாலும் பலர் தனவணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். மு.அ.எ.எப் என்ற நகரத்தார் நிறுவனம் துணி, புழுங்கல் அரிசி முதலியவற்றைச் சென்னையிலிருந்து கொண்டு வந்து மேடானில் விற்றதாகத் தெரிகிறது. முதலில் டெல்லி சுல்தானின் தலைநகரான லாபுவான் எனுமிடத்தில் தங்கியிருந்தனர். டெல்லி சுல்தான் தனது தலைநகரை மேடானுக்கு மாற்றவே அவர்களும் பின் தொடர்ந்தனர். தற்சமயம் நான்கு நகரத்தார்களே மேடானில் வாழ்கின்றனர். ஜாகாத்தாவிலிருந்து சில தமிழர்கள் கைத்தறி லுங்கிகளைத் தமிழகத்திலிருந்து வரவழைத்து இந்தோனேசியா முழுவதும் வியாபாரம் செய்து வந்தார்கள். மேலும் சிலர் மேற்படி துணிகளை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். நாட்டுக்கோட்டை நகரத்துச் செட்டிமார்கள் சிலர். ஜாகார்த்தாவில் வட்டிக்கடைகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மொழி 

பன்னெடுங்காலமாக தமிழ்நாட்டோடு தொடர்பு கொண்டுள்ள இந்தோனேசிய மொழியில் தமிழ் சொற்கள் பலவும், தமிழ் வழிச் சமஸ்கிருதச் சொற்கள் சிலவும் பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுள்ளன. இந்தோனேசியாவில் வழங்கும் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை பார்ப்போம். ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பொருள் திரிந்த சொல் அடைப்புக்குள் தரப்படுகிறது : கவி (தோழன்), காப்பாளர் (காவலர்), செட்டி (விற்பவன்), தம்பி (இளைஞர், தவறு செய்யும் பையன்), திசாந்து (அபினி), பணம் (துணை), மதிப்பு (நிலை).

தமிழின் மூலம் இந்தோனேசிய மொழியில் நுழைந்த வட சொற்கள் உள்ளன.

தமிழ்வழி சமஸ்கிருத சொற்கள் இந்தோனேசியச் சொற்கள்

1. கஜம் கஜா
2. கொலா(சர்க்கரை) குலா
3. தேவதா(பெண்தெய்வம்) தேவதா
4. நாகம் நாகா
5. பீஜம் (விதை) பிஜி
6. புத்ரி புத்திரி
7. மந்திரி மந்திரி
8. மோக்ஷ‘ மோட்சா
9. ராஜா ராஜா
10. விஷம் விஷா.

அப்பம், இடம், கஞ்சி, கட்டில், கடமை, கலம், காட்டு, காவல், கூண்டு, கூலி, சுக்கு, பண்டம், பண்டிதர், மணி, மாமா, மாமி, முகம், முத்து, வட்டில் போன்ற தனித் தமிழ்ச் சொற்கள் பண்டைய சாவகக் கவிதையில் ஆளப்பட்டுள்ளன. இவையல்லாமல் கப்பல், குதிரை, கூடை, தாலி, பிட்டு, பெட்டி எனும் சொற்களும் காணப்படுகின்றன. இது தவிர இத்தோனேசியாவில் இடம், வட்டில், பண்டம், கலம், கடலை, கண்டு எனும் சொற்களும் வழங்கி வருகின்றன. கோயில் என்பது இந்தோனேசிய மொழியில் கூயில் என மருவி
வழங்குகிறது. போகர் தமிழ் நாட்டின் பழங்கால மூலிகை வைத்தியர். இவர் பெயரால் சாவகத்தில் போகர் (Bogor) எனும் ஊர் உள்ளது.

இந்தோனேசியத் தமிழர்கள் வீட்டில் மட்டும் தமிழ் பேசுகின்றனர். அது கொச்சை தமிழாக உள்ளது. தமிழை எழுதத் தெரியாவிட்டாலும் பேசுவதிலே ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்குத் தமிழைப் பயில்வதற்குப் போதிய வசதிகள் இல்லை. இங்குள்ள தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழியாகிய தமிழை மறந்து விடக் கூடிய அவலநிலை இருந்து வருகிறது. இதனால் மேடானில் உள்ள கோயில்கள் எல்லாம் மாலை வேளைகளிலும் விடுமுறை நாட்களிலும் தமிழ் கற்பிக்கும் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன. மேடான் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் கோயில்களில் எட்டாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடங்களும் பிறகலைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவிலுள்ள மத்தியப் பல்கலைக் கழகமான இந்தோனேசியப் பல்கலைக் கழகத்தில் இந்தியத்துறை பேராசிரியர் பதவி ஒன்றுள்ளது. அந்தப் பதவியில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த டாக்டர் செ.வை. சண்முகம் அவர்கள் இரண்டு ஆண்டுகள் அங்கு தங்கி தமிழ் கற்பித்தார். பல தமிழ் நூல்களும் தமிழ் பற்றிய ஆங்கில நூல்களும் இப்பல்கலைக்கழக நூல் நிலையத்தில் உள்ளன. இந்தோனேசியாவில் தமிழ் அச்சகமோ பதிப்பகமோ இல்லை.

உடை/உணவு/திருமணம் :

தமிழர்கள் தங்கள் உணவு உடை முதலிய பழக்க வழக்கங்களில் பெரும்பாலும் இந்தோனேசியர் களையே பின்பற்றுகின்றனர். சேலை கட்டிய தமிழ்ப் பெண்களை இவர்களிடையே காண்பது அரிது. விழாக்களின் போதும் திருமணங்களில் போதும் இவர்களில் 50 சதவீதத்தினர் வேட்டி, புடவைக் கட்டிக் கொள்கின்றனர். பொதுவாக தமிழ்ப் பெண்மணிகள் அணியும் ஆடை கவுன் (Gown) ஆகும். ஆகையால் தமிழர்களின் கலாச்சார அடையாளங்களான புடவை, நகைகள் முதலானவை முக்கியமான நிகழ்ச்சிகளின் போதுதான் அணியப்படுகின்றன. மேலும் இந்தோனேசிய சுதந்திரத்தின் போது சாதிப் பெயர்கள் வைத்துக் கொள்வதில்லை என இத்தமிழர்கள் தீர்மானம் எடுத்துச் செயல்படுத்தினர். žர்திருத்த திருமண முறையையே இவர்கள் விரும்புகின்றனர். தமிழ்த் திருமண முறையும் உண்டு.

தகவல்-தொடர்புச் சாதனங்கள் :

போருக்கு முந்திய காலத்திலும், அதற்குப் பிந்திய காலத்திலும் செயற்பட்ட சங்கங்கள் (1) திராவிட இந்து சபை (2) டெல்லி இந்து சபை (3) கிருஷ்ண சபை (4) தமிழ்ச் சிறார்களுக்கென நடத்திய இந்தியன் பாய்ஸ் ஸ்கௌட் (சாரணியர் சங்கம்) (5) இந்தோனேசிய இந்து இளையர் சங்கம் (6) வட சுமத்திரா பரோபகாரச் சங்கம். இன்று சிறப்பாக இயங்கும் மாதர் சங்கங்களில் பாசுந்தனன் மாதர் சங்கம் குறிப்பிடத்தக்கது. மாதர் சங்கங்கள் செவ்வாய், வெள்ளி தோறும் கூடுகின்றன.

ஜகார்த்தா தமிழர்கள் 'தரும ஏக்சுனா' எனும் புதிய தரும ஸ்தாபனத்தை அமைத்திருக்கிறார்கள். மேலும் இந்தோனேசியா தமிழர் பிரதிநிதித்துவ சங்க தேசியப் பேரவை என்ற சங்கமும் 1978 இல் அமைக்கப்பட்டது. பொதுவாக இவை தமிழர்களின் கல்வி, சமூகத்துறை, மகளிர் உபகாரச் சம்பளம், அநாதை உதவி முதலிய துறைகளில் ஈடுபட்டு வருகின்றன.

மலேசியத் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் திரையிடப்படும் தமிழ், இந்தித் திரைப்படங்களை இந்தோனேசியத் தமிழர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். சிங்கப்பூர் வானொலியும் மலேசிய வானொலியும் தொலைக்காட்சியும் இந்தோனேசியத் தமிழர்களின் தமிழுணர்வை வளர்க்க உதவுகின்றன. இந்தோனேசியத் தமிழர்களின் இல்லங்களில் தினந்தோறும் தமிழ்த் திரைபடங்களின் ஒலிச் சித்திரத்தைக் கேட்கலாம்.

தமிழர் சாதனை :

அரசியலிலிருந்து தமிழர்கள் ஒதுங்கி வாழ்ந்தனர். ஆயினும் அதிபர் சுகர்ணோ ஆட்சியின் போது பெரியசாமி கிருஷ்ணா என்ற தமிழர், தமிழர் அல்லாதார் ஆதரவுடன் வட சுமத்திரா மாநில மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொகுப்பு : ஜெ. சாந்தாராம் 

கட்டுரைக்கு உதவிய நூல்கள் :

1. அயல்நாடுகளில் தமிழர் -முனைவர் எஸ். நாகராஜன் (1989)
2. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு -டாக்டர் க.த. திருநாவுக்கரசு (1987)
3. இந்தோனேசியப் பயணக்கதை -VIII-மணியன்.

 

http://www.tamilkalanjiyam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.