Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வாழும் நாடுகள் 5 - மொரீசியஸில் தமிழர்

Featured Replies

மொரீசியஸ் தீவு இந்தியாவிலிருந்து 4000 கி.மீ தொலைவில் இந்துமாக்கடலில் அமைந்துள்ளது. 2100 ச.கி.மீ பரப்புடையது. இதன் கடற்கரையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன.

'மொரீசியஸ்' என்ற பெயர் மொரீசியஸ் தீவை மட்டுமே குறிப்பதாகத் தோன்றினாலும், இந்நாடு ரோட்ரிக்ஸ், அகலேகா, புனித பிராந்தோன் என்ற மூன்று சார்பரசு நாடுகளைக் கொண்டது. 110 சதுரக் கி.மீ பரப்புடைய ரோட்ரிக்ஸ், மொரீசியஸ் தீவின் கிழக்கே 560 கி.மீ தொலைவில் உள்ளது. அகலேகா, மொரீசியஸ’ன் வடக்கே 935 கி.மீ தொலைவில் உள்ளது. புனித பிராந்தோன் மிகச் சிறிய தீவு. இது மொரீசியஸ் தீவின் தென் மேற்கே 400 கி.மீ தொலைவில்
இருக்கிறது.

மொரீசியஸ் 9 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1983-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10,00,432 பேர் வாழ்கின்றனர். இச்சிறிய தீவுக்கு 370 ஆண்டு குடியேற்ற வரலாறு உண்டு. டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் இத்தீவை ஆண்டிருக்கின்றனர். 1968-ஆம் ஆண்டு மொரீசியஸ் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. 

மொரீசியஸ் ஒரு விவசாய நாடு. இந்நாட்டின் தேசிய வரவு செலவு திட்டம் முக்கியமான விளைபொருள்களான கரும்பையும், தேயிலையையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது. 

மொரீசியஸ் பல இனங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகள் பேசுகின்ற மக்களடங்கிய ஒருபன்மைச் சமுதாயம். வரலாற்றுக் காலந்தொட்டு மொரீசியசிலே பிறந்த மொரீசியர்களோடு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இங்கு இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களை ஐரோப்பியர்கள், இந்தியர்கள், கிரியோல்கள், žனர்கள், ஆப்ரிக்க அடிமைகள் எனப் பிரிக்கலாம். 1983-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 84 சமயங்களைச் சேர்ந்தவர்களும் 66 மொழிகளைப் பேசுகிறவர்களும் உள்ளனர். 'கிரியோல்' என்பது ஆப்ரிக்கர் மற்றும் இந்தியர், ஐரோப்பிய வமிசாவழியினரோடு கலந்ததால் உருவான கலப்பின மொரீசியஸ் மக்களைக் குறிக்கிறது. பிரெஞ்சு இலக்கண அமைப்பு உடையதும் பெரும்பாலான ஆப்ரிக்க மொழிச் சொற்களையுமுடைய 'மொரீசியன் கிரியோல்' என்ற கலப்பு மொழி இவர்களது தாய்மொழியாகும். 

தமிழர் குடிபெயர்வுக்கான காரணங்கள் :

உலக நாடுகளில் தமிழர் இரண்டு விதங்களில் குடியேறினர்.

1. வாணிகத்தின் பொருட்டு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே குடியேறி, 15-ஆம் நூற்றாண்டு வரை வாணிபத்தின் பொருட்டு நடந்த குடியேற்றம். 

2. 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் பிரஞ்சு, ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளில் தோட்ட வேலைகளுக்குக் கூலி அடிமைகளாய் கொண்டு செல்லப்பட்ட இரண்டாம் கட்ட குடியேற்றம். இந்த இரண்டாம் கட்ட குடியேற்றம் நடந்த நாடுகளில் ஒன்றுதான் மொரீசியஸ் தீவு.

17-ஆம் நூற்றாண்டில் நாயக்கராட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள், ஆர்காட்டு நவாபு முதலியோர் தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நிறுவ தென் தமிழ் நாட்டில் இருந்த 72 பாளையப்பட்டுக்காரர்களுடன் ஓயாத போரினைச் செய்து வந்தனர். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தாம். தொடர்ந்து நிலவிய பஞ்சம், வறுமை, சாதிக் கொடுமை, கிராமப்புரங்களில் போதிய தொழில் வளர்ச்சியின்மை, நிலப்பிரபுக்களின் கொடுமை, வட்டிக் கடைக்காரர்களின் பொருளாதாரச் சுரண்டல், கொத்தடிமைத்தனம், அடிமை முறை போன்றவற்றைத் தாங்கமுடியாமல், குறிப்பாக தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, இராமநாதபுரம் ஆகிய தமிழக மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் நாடு விட்டு ஓடிப் பிற நாடுகளில் குடியேறினர்.

தமிழர் குடியேற்றம் 

மொரீசியசில் தமிழர் குடியேற்றத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். 

1. முதலாவது கட்டம் : மொரீசியசின் கட்டட வளர்ச்சிக்காகவும் பிற கைவினை நுட்ப வேலைக்காகவும் கைவினைத் திறம் பெற்ற தமிழர்களைக் குடியேற்றியது.

2. இரண்டாவது கட்டம் : ஒப்பந்தக் கூலி முறையில் தோட்டத் தொழிலாளர்களாகத் தமிழர்களைக் குடியேற்றியது. 

3. மூன்றாவது கட்டம் : ஒப்பந்தக் கூலி முறையோ அல்லது வேறெந்த நிபந்தனையோ இன்றி வாணிகத்தின் பொருட்டுத் தமிழர்கள் குடியேறியது.


1. முதலாவது கட்டம் : 

mauri-01.gif1728-ஆம் ஆண்டு பெநுவா தூய்மா என்பவர் மொரீசியசின் ஆளுனராகப் பதவியேற்றார். இவர் முன்பே புதுச்சேரியில், பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியில் அலுவலராக இருந்தார். இவரால், முதன் முதலாக 275 தமிழர்கள் மொரீசியசில் குடியேற்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுள் 108 பேர் எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயதிற்குட்பட்ட இளைஞர்கள். 95 பேர் கைவினைத் திறம் பெற்ற தொழிலாளர்கள். இவ்வரலாற்றுக் குறிப்பின்படி ஆப்ரிக்க அடிமைகளுக்குப் பின்னர் மொரீசியசுக்கு வந்த முதலாவது பிற இனத்தவர் தமிழர்களேயாவர்.

1735-ஆம் ஆண்டு மயே தெ லபோர் தொன்னே புதுச்சேரியிலிருந்து கப்பல் கட்டுவதற்காகவும் கட்டங்கள் கட்டுவதற்காகவும் தமிழர்களை அழைத்துச் சென்றார். இத்தமிழர்கள் போர்ட்லூயி நகரப் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் ஆப்ரிக்க அடிமைகளைப் போல நடத்தப்படவில்லை. பிரான்ஸ் தீவை (மொரீசியஸ்) ஒரு நாடாக உருவாக்கியவர் லபோர் தொன்னே. இவரது žரிய பணிகளுக்கு உதவியாக நின்றவர்கள் தமிழர்கள். "இத்தமிழர்கள் கைவினைத் திறமும் சிறந்த தொழில் நுட்பமும் உடையவர்கள் என்றும் மொரீசியஸ் வளர்ச்சியில் இவர்களது பங்கு கணிசமானது" என்று வரலாற்றாய்வாளர் முனிந்திரநாத் வர்மா குறிப்பிடுகிறார். லபோர்
தொன்னேயின் நண்பரும், 'பாலுவும் வர்ஜினியாவும்' என்ற காதல் காவியத்தின் ஆசிரியருமான பெர்னார்தென் தென் சென் பியே "புதுச்சேரியிலிருந்து வந்த தமிழர்கள் சாதுவானவர்களாகவும், பண்புடையவர்களாகவும் இருந்தனர்" என்று குறிப்பிடுகிறார். பல தமிழர்கள் இக்காலத்தில் அலுவலங்களில் பணிபுரிந்ததை நபால் குறிப்பிடுகிறார்.

பிரஞ்சுக்காரர்கள் காலத்தில் போர்ட் லூயிஸ் நகரம் மூன்று பிரிவுகளாக இருந்தது. கிழக்குப் பகுதியில் 'மலபாரிகள்' என்றழைக்கப்பட்ட தமிழர்களும் பிற தென்னிந்தியரும் வாழ்ந்தனர். இப்பகுதியை பிரஞ்சுக்காரர்கள் 'மலபாரிகள் முகாம்' (Camp des Malabars) என்றழைத்தனர்.

1810-ஆம் ஆண்டு பிரஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் நடந்த போரில் இருவர் பக்கமும் நின்று தமிழர்கள் போராடியுள்ளனர். ஆங்கிலேயர் தம் படைக்கு 'உச்சமுடி' என்ற தமிழரை தளபதியாக்க எண்ணி இருந்ததை அறிய முடிகிறது. 

1829 முதல் 1830 வரை நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சென்னை துறைமுகம் வாயிலாக மொரீசியசில் குடியேற ஃபர்குவார் என்ற ஆங்கிலேயர் ஏற்பாடு செய்தார். 1833-ஆம் ஆண்டு அடிமைமுறை ஒழிப்பு மொரீசியசில் அமுலாக்கப்பட்டது. 

2-ஆம் கட்டம் :

தமிழர்களின் இரண்டாவது கட்டக் குடியேற்றம் 1835-ஆம் ஆண்டிலிருந்து தொடக்கம் பெற்றது. 1843-ஆம் ஆண்டு மட்டும் 14,634 பேர் குடியேறினர். 1845 முதல் 49 வரை சென்னைத் துறைமுகம் வாயிலாக குடிபெயர்வு நடைபெறவில்லை. 1843-ல் இருந்து 52 வரை 30,334 பேர் குடிபெயர்ந்ததாக அறிகிறோம். குடிபெயர்ந்த தமிழர்களில் பறையரும், வன்னியரும் அதிகமிருந் தனர் என்று பினியோ குறிப்பிடுகிறார். ஒப்பந்த முறையில் குடியேறிய தமிழர்கள் அனைவரும் கரும்புத் தோட்டத்தில் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். முகவர்கள் (Agents) குடியேறுபவர்களுக்கு ஆசைகாட்டி அழைத்து வந்து ஏமாற்றியதை உணர ஆரம்பித்து, அதன் விளைவாக பிற்காலத்தில் பல்வேறு தொழில்களும் செய்பவர்களாக இவர்கள் மாறினர். தோட்டத்தில் இவர்கள் பட்ட பாட்டை 'கரும்புத் தோட்டத்தில்' என்ற பாரதியின் பாடல்கள் மூலம் உணரலாம்.


"......அவர் விம்மி விம்மி விம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே! -துன்பக்கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ? -அவர் விம்மியழவும் திறங்கெட்டுப் போயினர்" "1810-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மொரீசியஸ் தீவைக் கைப்பற்றியதும் மொரீசியஸ் குடிமக்கள் கையொப்பமிட்ட விசுவாசப் பத்திரம் சவரிமுத்து, சின்னத் தம்பி, துரைச்சாமி என்று பலர் தமிழிலேயே கையொப்பமிட்டிருப்பதைக் கண்டேன். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பீகார், பஞ்சாப் மாநிலங்களிலிருந்து கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென குடியேறினர். மொரீசியஸ் தீவில் தமிழ் மக்கள் தம்முடைய பண்டை நிலையையும் செல்வாக்கையும் ஒருவாறு 
இழந்து விட்டனர் என்றே கூறவேண்டும்" என்கிறார் தனிநாயகம் அடிகளார்.

3-ஆம் கட்டம் :

மொரீசியசின் தலைநகரமாக போர்ட் லூயியின் மத்திய சந்தையிலேயே ஏராளமான தமிழ் வணிகர்கள் வாணிகம் செய்து வந்தனர். இச்சந்தை 1845-இல் திறக்கப்பட்டது. 1853-இல் காப்ரீசி என்ற கப்பலிலும், 1854-இல் ஆஸ்திரேலியா என்ற கப்பலிலும் 1855-இல் ஆர்லிகென் என்ற கப்பலிலும் தமிழ் வணிகர்கள் மொரீசியஸ் வந்தனர். 1862-66 குள் 749 வணிகர்கள் வந்ததாக குறிப்புண்டு. சிறந்த வணிகர்களாக இராம சூரியமூர்த்தி குறிப்பிடுபவர்கள் : எம். கைலாசம் பிள்ளை நல்லசாமி மருதை படையாச்சி, ஏ. சிவராமன், பரிமணம், ஜி.பொன்னுசாமி, டி. வேலாயுதம் பிள்ளை, முதலியோர். 

1860-ஆம் ஆண்டு மொரீசியசிலிருந்து இந்தியத் தொழிலாளர்கள் தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்த போது, பல தமிழ் வணிகர்களும் குடிபெயர்ந்தனர் அவர்களில் ஏ.எஸ்.அய்யாசாமி, ஏ.ஆர். நல்லதம்பி, எம். பொன்னுசாமி, ஆறுமுகம் செட்டி அண்ட் கோ, வையாபுரி செட்டி கம்பெனி, ஐ.வேலாயுதன் அண்ட் கோ, இருளப் பிள்ளை அண்ட் கோ ஆகியோர், தென்னாப்பிரிக்காவுக்கும், புதுச்சேரி, ரீயூனியன், மடகாஸ்கர் போன்ற இடங்களுக்கும் சென்றனர்.

தமிழரின் இன்றைய நிலை 

சமயம் :

தமிழர்கள் மொழியை மறந்து விட்டாலும் இன்றும் தங்களைத் தமிழர்கள் என்று உணர்வது சமயத்தால்தான். மொரீசியஸ் முழுவதும் சுமார் 125 கோயில்கள் இருக்கின்றன. முருகன், சிவன், விநாயகர், மாரியம்மன், கிருஷ்ணன், துர்க்கை, இராமன், வீரமாகாளி அம்மன்,  முனீஸ்வரர், மதுரை வீரன், கன்னியாகுமரி முதலிய தெய்வங்களுக்கு உருவங்கள் உண்டு.

mauri-02.jpgதலைநகரிலுள்ள சொக்கலிங்கம் - மீனாட்சியம்மன் கோயில் பெரியது. தைப்பூசத்தில் காவடி எடுப்பது உண்டு. தைபூசமே மிகப்பெரிய திருவிழாவாகும். இந்நாள் பொது விடுமுறை ஆகும். கொடியேற்றம் தொடங்கி, விரதம் எடுத்து, காவடி எடுப்பார்கள். முருகனுக்குப் பூக்காவடி, இளநீர்க்காவடி, பால்காவடிகள் எடுக்கப்படுகின்றன. காவடியோடு மாவிளக்கு, பால் குடம் எடுப்போரும் உண்டு. பெண்கள் மஞ்சள் ஆடையும், ஆண்கள் காவிநிற ஆடையும் அணிகின்றனர். பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் அலகு குத்திக் கொள்கின்றனர். இதை 'நாக்குக் குத்துதல்' என்று சொல்கின்றனர். 

'தீ மிதித்தல்' என்பது மாரியம்மன் கோயில்களில் பெருமளவில் நடத்தப்படுகிறது. திரௌபதையம்மனுக்கும் தீ மிதி நிகழ்த்துவதுண்டு. பாடி, நோன்பிருந்து விழா நடத்துவார்கள். தாலாட்டு, அரிச்சுவடி பாடி, கும்மி கோலாட்டம் அடித்து கரகாட்டம் ஆடிக்களிப்பார்களாம்.  அம்மன் கோயில்களில் தீமிதி, கஞ்சி, கத்தி பூசை முதலிய சடங்குகள் செய்யப்படுகின்றன. மற்றொரு முக்கிய விழா கோவிந்தன் விழாவாகும். (புரட்டாசி விரதம்) புரட்டாசித் திங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழர்கள் விரதமிருப்பதுண்டு. ஆடித்திங்களில் 18-ஆம் நாளன்று திருமணம் ஆன மகளிர் தங்கள் தாலிக்கயிற்றைப் புதுப்பித்துக் கொள்ளும் விழா நடைபெறுகிறது.

தமிழ்ப் புத்தாண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தெய்வாலயங்களுக்குத் தமிழர்கள் அனைவரும் செல்கின்றனர். சிறப்பு பூசையுடன் முத்தமிழ் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. காமண்டி (காமன்பண்டிகை) கதையாட்ட மாடி, இலாவணிபாடி, பொங்கல் கொண்டாடுகின்றனர். தீபாவளி, சிவராத்திரி ஆகிய திருவிழாக்களும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 

உணவு :

தமிழ்ச் சமையலுக்கு இத்தீவில் தனிச் சிறப்புண்டு. சமையலில் தமிழர் பயன்படுத்தும் பல பொருள்களுக்கும், தமிழ்ப் பெயர்களே இங்கு வழங்கப்படுகின்றன. இந்நாட்டில் 'விரதச் சாப்பாடு' சிறப்பானது. புலால் உணவை விரும்பும் இந்நாட்டு தமிழ் மக்கள் விரதச் சாப்பாட்டில் மிகவும் கட்டுப்பாடு உடையவர்கள். சோறுடன் சாம்பார், ரசம், பல்வகைக்காய்கறிகள், பச்சடி, அப்பளம், வடை, பாயாசம் அனைத்தும் வாழை இலையில் வைத்து சாப்பிடுகின்றனர். பெரும்பாலான விரதங்களில் இச்சாப்பாடு அல்லது சைவ பிரியாணி சமைக்கப்படும். சமையல் தொடர்பான அனைத்து சொற்களும் அதே பெயரில் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

உடை-அணிகலன்கள் :

அன்றாட வாழ்க்கையில் பெண்கள் கவுனிலும், ஆண்கள் பேண்ட், மேல்சட்டையுடன் உள்ளனர். பெண்கள் கும்மி, கோலாட்டம் ஆடும் நாட்களில் கால்பாதம் வரை பாவாடை, மேல் ஜாக்கெட், தாவணி அணிகின்றனர். கை நிறைய வளையல், காதில் தோடு, ஜிமிக்கி, மாட்டல், நெற்றிச் சுட்டி, நீண்ட பின்னல் அதில் குஞ்சம், மூக்குத்தி இவை அணிந்து தலைநிறையப் பூச்சூடுகின்றனர். ஆனால் அப்பூ காதிதப்பூ! திருமணத்தன்று ஒட்டியாணம் முதல் காசுமாலை வரை அவள் அணியாத அணிகலன்களே இல்லை. பட்டுப் புடவை கட்டுகிறாள். ஆண் பட்டுவேட்டி, சட்டை, துண்டுடன் காட்சியளிப்பான். கடவுள் வழிபாட்டில் பெண்கள் புடவையையே
கட்டியிருப்பார்கள்.

குடும்ப உறவு முறை :

தமிழர்கள் "கிரியோல் மொழி" பேசினாலும் உறவுப் பெயர்களை அழைக்கும் போது தமிழிலேயே அழைக்கின்றனர். சிற்றப்பா, அண்ணன், மாமாவை மட்டும் சற்றே மாற்றி 'மாமே' என்றும் மற்றும் அத்தான், அத்தை, அப்பாயி, அம்மாயி என்றும் கூப்பிடுகின்றனர்.

பெயர்கள் :

சுப்பையா, சந்நியாசி, சங்கிலி முதலிய பழைய பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. நம்பி, வெள்ளி வீதி, நக்கீரன், மங்கையற்கரசி, மணிமேகலை, கண்ணகி, மாதவி, சிவகாமி, மீனாட்சி போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளன. சில பெயர்களை மாற்றி அழைக்கின்றனர். முத்தையா-மூச்சியா, முருகன்-மூர்கன், வீரப்பன்-வீர்லப்பென், திருவேங்கடம்-திருவேங்கடும் என நல்ல தமிழ் பெயர்களும் பிரஞ்சு தொடர்பினால் திரிந்து வழங்குவதைக் காணலாம்.

பழக்கவழக்கங்கள் :

குழந்தை பிறந்தால் 30 நாள் வரை அந்த வீட்டிற்குச் சென்று வந்தால் தலை முழுகுகின்றனர். காது குத்தும் சடங்கு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு. திருமணத்தில் நிச்சயம் செய்தல், மஞ்சள் பூசுதல் (நலுங்கு வைத்தல், பரிசம் போடுதல், தாரை வார்த்தல், கன்னி காதானம் செய்து கொடுத்தல், மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் மரபு, பாதபூசை செய்தல், žர்வரிசை வைத்தல், நாத்தனார் மிஞ்சி அணிவித்தல், மாலை மாற்றல் போன்ற அனைத்துச் சடங்குகளும் தமிழ் மரபை ஒத்துள்ளன. இறப்பில் கோடி போடுதல், எட்டுப் படைத்தல், கரு மாதி, சோறு ஆக்கிப் போடுதல், மகன் மொட்டை அடித்தல் முதலிய யாவும் ஒன்றும் குறைவின்றி மொரீசியசு தமிழர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

தொழில் :

பெரும்பாலான தமிழர்கள் கரும்புத் தோட்டம், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுகின்றனர். மற்றவர்கள் நகரம் சார்ந்த தொழில்களைச் செய்து வருகின்றனர். பலர் அரசு அலுவலங்களில் பணியாற்றி வருகின்றனர். 

"பலர் செல்வம் படைத்த வணிகராகவும் கரும்புத் தோட்டங்களுக்கு உரிமையாளராகவும் இருந்தார்கள். தஞ்சாவூர் வீதி, திருச்சிராபள்ளி வீதி என்று போர்ட் லூயிசில் இருக்கும்வீதிகளில் ஒரு காலத்தில் தமிழ் பேசும் மக்களே வாழ்ந்தனர். ஆனால் இன்று தமிழர் பலர் அந்த இடங்களை இழந்து விட்டனர்" எனத் தனி நாயகம் அடிகள் கூறுகிறார்.

மொரீசியஸ் தமிழர்கள் :

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி வரை மொரீசியசில் இந்தியர்கள் எனக் கருதப்பட்டவர்கள் தமிழர்களாவர். "இவர்கள் மொரீசியஸ் மொத்த மக்கள் தொகையில் பத்து விழுக்காட்டினராக இருந்தனர். மொத்த மக்கள் எண்ணிக்கையான 60,000 பேர்களில் 50,000 பேர் அடிமைகள். இவர்களுள் இந்தியத் துணைக் கண்டத்தின் தென்பகுதியிலிருந்து குடியேறிய 6000 பேரும் அடங்குவர். 1830 களில் போஜ்புரியைத் தாய் மொழியாகக் கொண்ட பீகாரிகள் இத்தீவுக்கு வரும் வரைக்கும் கீழை மொழியாக இத்தீவில் பேசப்பட்ட மொழி தமிழாகும்" என்று இராமியத் குறிப்பிட்டுள்ளார்.

வட இந்தியர்கள் மொரீசியசில் குடியேறிய பின்னர் தமிழரின் இடம் இன்று இந்தியர் அளவில் மூன்றாமிடத்தில் உள்ளனர். இந்தி (போஜ்புரி), உருதுவுக்கும் அடுத்த நிலையிலேயே தமிழ் இருந்தது. மேலும் வாழ்க்கையை ஓட்டுவதற்கு பிரஞ்சுக்காரர்கள் காலத்தில் பிரஞ்சும், பிரஞ்சும் ஆப்ரிக்க மொழியும் இணைந்த 'கிரியோலு'ம் தமிழரிடம் முக்கியத்துவம் பெற்றது. ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி ஆட்சி மொழியானதால் ஆங்கிலத்துடனும் போட்டி போட வேண்டியிருந்தது. தமிழர்கள் தோட்டத் தொழிலாளிகளாக பேரளவில் இருந்ததால் கல்வி கற்கும் சூழல் குறைந்து, தங்களுடன் பெருமளவில் பணியாற்றிய பிறமொழியினரின் தாக்கம் காரணமாக தமிழ் மொழியை மறந்தனர். இன்று மொத்தத் தமிழரில் (65,000) 35,000 பேரே தமிழ் பேசவும் எழுதவும் கூடியவர்களாக உள்ளனர். அனைவரும் கிரியோல் பேசுபவர்களாகவே உள்ளனர்.

கிரியோல் மொழியில் தமிழ் :

பிலிப்பேக்கர் கிரியோலில் வழங்கும் திராவிட மொழிச் சொற்களைத் தொகுத்துள்ளார். கிட்டத்தட்ட 65 சொற்கள் இம்மொழியில் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்:

 

 

 

உறவு முறைச் சொற்கள் அண்ணன், அக்கா, தம்பி காய்கறி பெயர்கள் கறிவேப்பிலை, கொத்துமல்லி, முருங்கை, பீர்க்கங்காய், புடலங்காய். உணவுப் பெயர்கள் அப்பளம், ஜிலேபி, கள், கஞ்சி, கொழுக்கட்டை, முறுக்கு, மிளகுத் தண்­ர், மிட்டாய், பாயாசம், புட்டு, சாராயம், உருண்டை. விளையாட்டுப் பெயர்கள் கோலாட்டம், பல்லாங்குழி, žட்டு விளையாட்டு. தெய்வங்களின் பெயர்கள் காத்தாயி, மதுரை வீரன், முனீஸ்வரன், காளியம்மை. கோயிற் சொற்கள் சாம்பிராணி, திருநீறு, பூசாரி, காவடி, கைலாசம்
இச்சொற்கள் அனைத்தும் பொதுவாக ஆப்ரோ மொரீசியர்கள் தமிழர்களோடு கொண்டிருந்த கலாச்சாரத் தொடர்பை நன்கு காட்டுகின்றன. 

கல்வி :

1810-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய அந்நாளில் கூட தமிழர்களுக்கென்று திண்ணைப் பள்ளிகள் இருந்தன. மாலை நேரங்களில் தமிழுடன் கணிதமும் கற்பிக்கப்பட்டது என ஆங்கிலேயர் குறிப்பிட்டுள்ளனர்.

1865-ஆம் ஆண்டளவிலே 26 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. 1872-ஆம் ஆண்டில் பல தமிழ் நூல்கள் இங்கு வரவழைக்கப்பட்டன. விடுதலைக்குப் பின்னர் கல்வித் திட்டத்தில் தமிழ் இடம் பெற்றது. தமிழ் கற்க விரும்பிய பள்ளிக் குழந்தைகளுக்கு முறைமையான ஆசிரியர் பயிற்சி அளிக்கத் தமிழகத்திலிருந்து தமிழாசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். மொரீசியசு சூழ்நிலைகளுக்கேற்றவாறு தமிழ்ப் பாடநூல்களை இவர்கள் எழுதினர்.

1954-இல் 50 மாணவர்கள் தமிழ் பயின்றனர். 1957-இல் 1500 குழந்தைகள் பாலர் தமிழ் வாசகம் நூலின் வழி தமிழ் பயின்றனர். 11 பேர் ஆசிரியர் பணிக்குப் பயிற்சிப் பெற்றனர். 1966-இல் முறையான பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. 1967-இல் ஆசிரியர் எண்ணிக்கை 60, தமிழ் கற்பிக்கும் பள்ளிகள் 75, மாணவர் 5,000 ஆக உயர்ந்தனர். 1968-ஆம் ஆண்டு மார்சு 12 ஆம்நாள் மொரீசியஸ் நாடு விடுதலை பெறவே, கீழை மொழிகளுக்கு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 10,000 மாணவர்கள் தமிழ் பயில்கின்றனர். 200 தொடக்கப் பள்ளிகள் தமிழ் கற்றுத் தருகின்றன.

பள்ளித் திட்டத்தில் மட்டுமின்றித் தமிழில் ஆலம் உடையோரை ஊக்குவிக்கும் வகையில் மாலைப் பள்ளிக்கூடம் நடத்தப்படுகின்றன. மகாத்மா காந்தி நிறுவனம் நடத்தி வரும் தமிழ்ச் சான்றிதழ் பட்ட வகுப்புகளில் ஆண்டுக்கு நாற்பது பேர் தமிழ்க் கல்வி பெற்று வருகின்றனர்.

மொரீசியஸ் கல்விக் கழகமும் (Mauritius Institute of Education) மொரீசியஸ் வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்களும் தமிழ்மொழி கற்பிக்கின்றன. 

மொரீசியஸ் தமிழ் இலக்கியம்  

மொரீசியஸ் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.

1. 1930-க்கு முற்பட்ட காலம்.
2. 1930-1950 வரையிலான இடைப்பட்ட காலம்.
3. 1950-இல் இருந்து இன்று வரையிலான காலம். 

1930க்கு முன் மொரீசியஸ் இலக்கிய நூல்கள் எதுவும் தோன்றியதாகக் குறிப்பில்லை. ஆனால், அவ்வப்போது தமிழ் இதழ்களில் பல கவிதைகளும், கட்டுரைகளும் வெளியாயின. பத்திரிக்கைகள் பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. மொரீசிய தமிழ் பத்திரிக்கை வரலாறு கிட்டத்தட்ட 125 ஆண்டுக்காலப் பாரம்பரியம் உடையது என மொரீசியன் என்ற நாளிதழில் 1861-ஆம் ஆண்டு கட்டுரையொன்று வெளியிட்டது. இக்காலத்தில் பல தமிழிதழ்கள் தோன்றி மறைந்தன. 1868 தொடங்கி The Mercantile Advertiser, Mimic Trunpater என்ற இதழை 'விகட எக்களத் தூதனை' துளசிங்க நாவலர் என்பவர் நடத்தி வந்தார். இவ்விதழ் ஆங்கிலம்-தமிழ் இருமொழி இதழ். இதில் பல கட்டுரைகளையும், கவிதைகளையும் நாவலரே எழுதி வந்துள்ளார். இவ்விதழின் துணையாசிரியராக இருந்த பண்டிதர் பெருமாள் சுப்பராயன் என்பவரும் அவ்வப்போது பல கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி வந்தார் என்று தெரிகிறது.

பண்டிதர் பெருமாள் சுப்பராயன் 1919-இல் எழுதிய "இந்து வாலிபர் சங்கத்தின் அங்கதினர் கட்கோர் திறந்த நிருபம் மேற்படி சங்கத்தில் யானும் ஒரு காரிய தரியாம்" என்ற சிறு நூல் வழி அக்கால பழக்க-வழக்கங்கள், வசன நடை முதலியவற்றை அறிய முடிகிறது. 1920 களில் பெருமாள் சுப்பராயன் Guy de Theramond என்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எழுதிய 'Cavengar' என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தார். 1927 இல் ஜி.வெங்கடசாமி என்பவர் 'žதாலட்சுமி' என்ற நூலை எழுதியுள்ளார்.

1930-1950 வரையிலான இடைக்காலம் :

இக்காலத்தில் Tamil Kalvi Kazagam (1944) Tamil Maha Sangam (1947) போன்ற இதழ்கள் வெளிவந்தன. இக்காலத்தில் வீ.அருணாசல அரனடிகள் 'சக்குபாய்' என்ற மொழிபெயர்ப்பு நூலை 1935 திலும், 'கலைமகள் போதனம்' 'காவடிச்சிந்து' என்ற நூற்களை 1940 இல் எழுதியதாகத் தெரிகிறது. இவர் மாணவரான வடிவேல் செல்லன் 'ஸ்ரீ சிவ சுப்பிரமணியர்பதிகம்' பாடியுள்ளார். ஆ.உ. சுப்பராயன் என்பவர் 1940 இல் "மோரீஷஸ் ஸ்ரீமீனாட்சி அம்மன் பதிகம்" என்ற நூலை எழுதியுள்ளார். 1932-இல் பெருமாள் சுப்பராயன் எழுதிய 'தியானாபிமான கீதங்கள்' என்ற நூலை முதல் தமிழ் இலக்கியம் என்கின்றனர்.

1940-ஆம் ஆண்டு வடிவேல் செல்லனால் இயற்றப்பட்ட 'முருகவேல்மாலை', அ.சுப்பையா முதலியாரால் இயற்றப்பட்ட கவிதை; ஆறுமுகம் வெளியிட்ட 'சன்மார்க்க நீதி' என்ற மூன்று நூலையும் கண்டித்து பண்டிதர் சுப்பராயர் எழுதிய 'கவியா, தமிழ்க் கொலையா?' என்ற நூலைச் சிறந்த விமர்சன நூல் எனக் கொள்ள முடியும்.

அ.சுப்பையா முதலியார் 1940 இல் 'தமிழ் மன்னன் குமணன்' என்ற நாடகத்தை எழுதினார். இக்காலத்தில் சு. விநாயகம் பிள்ளை, ஆறுமுகம், எம்.வைத்திலிங்க பத்தர், ஆ.உ.சுப்பராயன் முதலியோர் கவிதை, கட்டுரைகள் எழுதி வளப்படுத்தினர்.

1950 முதல் இன்று வரையான இலக்கியங்கள் :

இக்காலக்கட்டத்தில் The Peacock (1961), L.Eclaireur 1963, Tamil Voice (1964) ஆகிய இதழ்கள் வெளிவந்தன. 'ஒளி' 'சக்திவேல்' என்ற இரு வார இதழ்களிலும் பெரும்பாலான செய்திகள் மும்மொழிகளில் (பிரஞ்சு, ஆங்கிலம், தமிழ்) வெளிவருகின்றன. 1970-ஆம் ஆண்டு அ.சுப்பையா முதலியார் 'பிரார்த்தனை மாலை' பாடியுள்ளார். 1974இல் 'தினசரி பிரார்த்தனைத் திரட்டு' சரவண ஐயரால் எழுதப்பட்டுள்ளது. 1977-இல் வெளியான மொரீசியசு முருகன் பாமாலையை சிவன் திருமலைச் செட்டி எழுதியுள்ளார். பேராசிரியர் வாசுதேவ் விஷ்ணு தயாலுவின் முன்னுரையுடன் 'மொரீசியசு தீவில் தமிழர்களின் சிறு சரித்திரம்' 1960 ஆம் ஆண்டு வெளியானது. முத்துக்குமாரன் சங்கிலி திருக்குறளை பிரஞ்சில் 'Le Thirukkural' என 1974-ஆம் ஆண்டு மொழிபெயர்த்துள்ளார். இவர் பாரதியார் பாடல்கள், பிரார்த்தனைப் பாடல்கள், நீதி நூல் பத்து முதலிய நூற்களையும் பிரஞ்சில் கொண்டு வந்துள்ளார். 1985-இல் வெளியான அருணாசலம் புட்பரதத்தின் 'திருப்புகழ்ப் பாடல்கள்' என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கது. இராமு. சூரியமூர்த்தியால் எழுதப்பட்ட (Tamouls a L'lle Maurice) 'மொரீசியஸ் தீவின் தமிழர்' நூல் மிகச் சிறந்த ஆவணமாகும். தி.அம்மிகன் Tamil quest in Mauritius (1735-1985) என்ற நூலை எழுதியுள்ளார்.

வாய்மொழி இலக்கியங்கள் :

மொரீசியஸ் சென்ற தமிழர்கள் பலரும் படிப்பறிவில்லாதவர்கள் ஆவர். ஆனால் அனுப அறிவு மிக்கவர்கள். அதன் அடிப்படையில் அவர்கள் பாடிய நாட்டுப்புற இலக்கியங்கள் சேகரிக்கப்படவில்லை. அவை கிட்டியிருக்குமானால் மிகச் சிறந்த ஆவணமாக இன்று திகழும். ஆனாலும் அவர்கள் என்னென்ன வகையான பாடல்களை பாடினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிட்டியுள்ளன. கும்மி, லாவணி, தெம்மாங்கு முதலிய பாடல்களே ஆகும். 

ஆப்ரோ மொரீசியர்களின் நாட்டுப்புறப் பாடல்களான 'செகா' (Sega) என்பர். இப்பாடல்களில் தமிழரின் நாட்டுப்புற இசை வடிவங்களையும், தமிழ் சொற்களையும் சு.இராஜாராம் கண்டுள்ளார். பிரஞ்சுக்காரர்கள் மொரீசியசை ஒரு காலனித்துவ நாடாக்க முயன்ற காலம் தொடங்கி ஆப்ரிக்க அடிமைகள் மற்றும் தமிழ் தோட்டதொழிலாளர்களிடையே ஏற்பட்ட நீண்ட காலத் தொடர்பே இத்தாக்கத்திற்குக் காரணம் எனலாம். 

செகாவைப் பொறுத்தவரையில் தமிழின் தாக்கத்தை அதன் இசையிலும், இசைக்கருவிகளிலும், தமிழ் நாட்டுப்புறப் பாடல்களில் வழங்கும் சில சொற்களைப் பயன்படுத்துவதிலும் காண முடிகிறது. ராவான்-பறை; கசசக-கூழாங்கல் முக்கிய இசைக் கருவிகள். 

எ.கா:

"தங்கச்சி, பொன்னம்மா
திலோ பஞ்சாலே தொமமா
திலோ பஞ்சாலே
தால் மொ தொனே
க்யுரி மொ தொனே
க்யுரி ஃபேரே தொ மோர் தம்பி"
இப்பாடலில் பயன்படுத்தப்படும் தமிழ்ச்சொற்களை பாருங்கள்!

செகா பாடல்களைத் தமிழ்நாட்டுப்புறப் பண்பிற்கு ஏற்பத் தமிழ்படுத்தி செகா இசையோடு பாடும் வழக்கமும் தமிழர்களிடையே இன்று உள்ளது.


"சின்னத் தாய் தங்கமே தங்கம்
மாப்பிளெ பொண்ணு ரெண்டுபேரும்
மணவறைச் சுத்திவரக் கல்யாணம் 
சின்னத்தாய் தங்கமே தங்கம் 
சின்னத் தாய் தங்கமே தங்கம் 

கூத்து :

தமிழகத்திலிருந்து 4000 மைல் சென்ற பின்னரும் தமிழ் கலையை மட்டும் அழியாமல் காத்து வந்த அத்தோட்டத் தொழிலாளர்களை என்றும் மறக்க முடியாது. கூத்துக்களின் பகுதிகளை 'வாத்தியார்' கூடி நடிகர்கள் மனப்பாட முறையில் நினைவில் வைத்து பாடியும், ஆடியும் வந்தனர். தமிழர் ஆடும் கூத்துக்களைக் காண வெள்ளையர் வருவார்களாம். தமிழ் நடிகர் கிடைக்காத நேரங்களில் பிறமொழியாளர்களுக்கும் தமிழைக் கற்பித்து கூத்தாட வைத்தனர் என அறிகிறோம். அக்காலத்தில் ஆடப்பட்ட கூத்தின் அமைப்பு தமிழகத் தெருக்கூடத்தின் அமைப்பை ஒட்டியே இருந்தது. இவ்வகையில் ஆடப்பட்ட கூத்துக்கள் : அரிச்சந்திரன் நாடகம், தேசிங்குராஜா கதை, நல்லதங்காள் கதை, செருத்துண்ட நாடகம், பாரதம், அலிபத்சா நாடகம், வீர குமார நாடகம், கண்ணன் சண்டை, மதுரை வீரன் நாடகம், வெங்கடேச பெருமாள் நாடகம் போன்றவை.

நாடகம் :

பண்டிதர் பெருமாள் 'சதாரம்' எழுதி நடித்தார். சுப்பையா முதலியார் 'தமிழ் மன்னன் குமணன்' எழுதினார். இராசரத்தினம் சங்கிலி எழுதிய 'பாரிஸ்டர் கமலநாதன்' நாடகம் போர்ட் லூயி நகராட்சி அரங்கில் நடிக்கப்பட்டது. 1944 முதல் வானொலியில் தமிழ் நாடகங்கள் நடிக்கப்பட்டன. சுப்பையா பிள்ளையைத் தொடர்ந்து விநாயகம் பிள்ளை வானொலியில் நிறைய தமிழ் நிகழ்ச்சிகளுக்கிடையில் நாடகத்தைக் கொண்டு வந்தார். தேசிய நாடக விழாவில் சிவன் திருமலைச் செட்டி எழுதிய நாடகங்கள் தொடர்ந்து பரிசு பெற்று வந்துள்ளன. 1987 ஆம் ஆண்டு 'ஆங்லட்' என்ற நாடகம் நடத்தப்பட்டுள்ளது. 

தகவல் தொடர்பில் தமிழ் 

வானொலி :

மொரீசியசு வானொலியில் தமிழ் ஒலிபரப்பு தினந்தோறும் அரைமணிநேரம் நடை பெறுகிறது. மூன்று வாரங்களுக்கு ஒருமுறை மொரீசியஸ் கலைஞர்கள் தமிழகக் கலைஞர்களின் அரைமணி நேர நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகின்றது. தை பூசக் காவடி திருவிழாவுக்கு முந்திய நாள் இரவு பத்து மணிமுதல் மறுநாள் காலை ஆறு மணிவரை முருகன் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. புரட்டாசி மாதத்தில் காலை பத்துமணியளவிற்குச் சிறப்பு நிகழ்ச்சி உண்டு. 

தொலைக்காட்சி :

மாதத்தில் இரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உண்டு. தமிழ் புத்தாண்டு நாளில் தொலைக் காட்சி ஒளிபரப்பு வெளி ஒளிபரப்பாக இடம் பெறுவதுண்டு. தமிழ்த் திரைப்படமும் காண்பிக்கப் படுகிறது.

வானொலி, தொலைக்காட்சி ஒளிபரப்பில் தமிழ் முறையாகக் கற்றுத்தரப்படுகிறது. மொரீசியஸ் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்பட்டுள்ளன. 

அமைப்புகள் :

மொரீசியஸ் தமிழ் கழகம் : இதில் 5800 பேர் உறுப்பினர்கள். தமிழ்க் கோயில் கூட்டுறவுச்சங்கம் (Tamil Temple co-operative Society) உலகத்தமிழ் பண்பாட்டுக் கழகம் முதலியவை உண்டு. உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகம் தம் இரண்டாவது மாநாட்டை 1980-ஆம் ஆண்டு இங்கு நடத்தியது. மாநாட்டின் நினைவாக மொரீசியஸ் அரசு அஞ்சல் தலை, வெளிநாட்டுக் கடிதம் போன்றவைகளை வெளியிட்டது. தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழிச் சிறப்பு இதழையும் வெளியிட்டன. 

மொரீசியசு தமிழ் எழுத்தாளர் சங்கம் உள்ளது. இதன் தலைவரான நாராயணசாமி திருமலைச் செட்டி, கல்வி அமைச்சரோடு இணைந்து, அரசு பொறுப்பில் பல தமிழ் கவிதை, கட்டுரைப் போட்டிகளை ஏற்பாடு செய்து வருகிறார்.

1985-ஆம் ஆண்டு மொரீசியசு தமிழர் கழகம் 250-வது ஆண்டு மொரீசியசுத் தமிழர் குடியேற்ற நினைவு விழாவை ஐந்து நாட்கள் நடத்தியது. மேலும் இங்குள்ள பிற சங்கங்கள்: இந்தோ மொரீசியர் கத்தோலிக்கர் சங்கம், தமிழ் மகளிர் சங்கம், மொரீசியஸ் தமிழ் ஐக்கிய சங்கம் ஆகியன. 

தமிழர் சாதனைகள் 

தமிழர்கள் உதவியுடன் சாலைகள், வீடுகள், கூட்டுக் குடியிறுப்புக்கள், கோட்டைகள் கட்டப்பட்டன. துறைமுக வளர்ச்சியிலும், கப்பல் கட்டும் தொழிலிலும் தமிழர்கள் பங்கேற்றனர். இன்று போர்ட்லூயிஸ் துறைமுகத்தில் அன்று தமிழர்கள் கட்டிய கட்டடங்களைக் காணலாம். கரும்புத் தோட்டங்கள், பருத்திச் செடிகள், அவுரிச் செடிகள் வளர்ச்சியடைவதற்காக பல்லாயிரம் தமிழர் பணிபுரிந்தனர். கரும்பு ஆலைகளும் தோன்றி வளர்ச்சியடைந்தன. இன்று மொரீசியசில் நாம் பார்க்கும் வளர்ச்சியின் அடித்தளமாக தமிழர் உழைப்பு இருந்ததை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். 

அ) இராஜ ரத்தினம் முதலியார் :

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆங்கில அரசிடம் தெரிவிக்க ஸ்டீவென்ஸ் என்றஆங்கிலேயருடன் சேர்ந்து கோரிக்கை மனுவை எழுதி நாடெங்கும் பரவி இருந்த இந்தியத் தொழிலாளர்களிடம் இருந்து கையொப்பம் பெற்று 1871 ஆம் ஆண்டு கவர்னரிடம் அனுப்பிய வர்களில் இவரும் ஒருவர்.

ஆ) தம்பு நாயுடு:

1901-ஆம் ஆண்டு காந்திஜி மொரீசியஸ் வந்த போது அங்கு குடியேறிய இந்தியர்களின் பிரச்சினைகளை காந்திக்கு எடுத்துக் கூறியவர்.

இ) துளசிங்க நாவலர் :

வெ.அ. துளசிங்க நாவலர் மொரீசியசின் முதல் தமிழ்க் கவிஞராவார். இவர் பன்மொழிப் புலவராவார். சிறந்த சொற்பொழிவாளரானதால் 'நாவலர்' என அழைக்கப்பட்டார். நாடக ஆசிரியரும், பத்திரிக்கையாளரும் ஆவார். படைவீரராக இருந்து இலக்கியத் துறைக்கு வந்தவர். 1915 ஆம் ஆண்டு தமிழகம் திரும்பினார்.

ஈ) பண்டிதர் பெருமாள் சுப்பராயன் :

ஏழு மொழிகளைக் கற்றவர். தோட்டத் தமிழரின் இழிவை ஒழிக்கப் பாடுபட்டவர்களின் முக்கியமான இலக்கியவாதி. தம் ஐந்து வயதில் கடலூரிலிருந்து மொரீசியஸ் சென்று குடியேறியவர். திரு.வி.க.வின் žடர். 1943-ஆம் ஆண்டு தொழிலாளரைக் கொன்ற ஆங்கிலேயரை கடிந்து பல பாடல்களைப் பாடியவர். இவர் பாடல்களில் சமூக விமர்சனம் நிறைந்திருக்கும் 'ராவெங்கார்' என்ற பிரஞ்சு நாவலை மொழிபெயர்த்துள்ளார். 

பல தமிழ்ப் பள்ளிகளையும் ஏற்படுத்தியவர். 1986-ஆம் ஆண்டு பண்டிதரின் நூற்றாண்டு விழா மொரீசியசில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு நினைவாக சைமின் கிரேனியர் என்ற இடத்திலுள்ள பள்ளிக்கு பண்டிதர் சுப்பராயன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புகழஞ்சலியில் கலந்து கொண்ட மேதகு கவனர் ஜெனரல் வீராசாமி ரிங்காடு, "பெருமாள் சுப்பராயன் 'பண்டிதர்' என எல்லோராலும் அழைக்கப்பட்டார். இப்பட்டத்திற்கு எல்லா வகையிலும் இவர் தகுதி படைத்தவர். இப்பட்டம் அவருக்கு சூட்டப்பட்டது என்பதை விட அவரால் சம்பாதிக்கப்பட்டது என்பதே பொருந்தும். 

செயின் கிரேனியேரிலுள்ள பள்ளியொன்று பெருமாள் சுப்பராயனின் பெயரால் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் நமது வரலாற்றில் இத்தேச பக்தனின் பெயரும் தொண்டும் இடம் பெறவுள்ளன. இதற்கு உழைத்த எல்லோருக்கும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அவர் அன்று செய்த தொண்டு மற்றும் தியாகத்தின் பயனை நாம் இன்று அறுவடை செய்கிறோம். மொரீசியசின் இப்பெருமகனார்க்கு நாம் பட்டிருக்கின்ற
கடப்பாட்டை ஒரு போதும் மறந்து விடலாகாது" என்று குறிப்பிட்டார்.

அரசியலில் தமிழர் :

வீராச்சாமி ரிங்காடு எனும் மொரீசியஸ் தமிழர் ஆளுனராக இருந்தார். கதிரேசம் பிள்ளை தொழில் துறை அமைச்சராக பணிபுரிந்தார். கல்வி அமைச்சராக ஆறுமுகம் பரசுராம் இருந்துள்ளார். அ.புட்பரதம் தமிழ்க் கல்வித் துறையின் தலைமையான பொறுப்பில் உள்ளார். மொரீசியஸ் தொழிற் கட்சியின் செகரட்டரி-ஜெனரலாக விஜய் வெங்கடசாமி இருந்துள்ளார்.

வணிகம்-தொழில் புரிந்தோர் : 

முதல் கட்ட குடியேற்றத்தில் சென்ற கட்டடப்பணியாளர்கள் அவ்வேலை முடிந்ததும் பல தொழில் செய்பவர்களாக நகரங்களில் பெருகினர். அடிமைமுறை ஒழிப்பு சட்டம் வந்த பிறகு தோட்டத் தொழிலை விட்டுவிட்டு, ரொட்டி சுடுதல், கூடை முடைதல், செருப்பு தைத்தல், முடிதிருத்துதல், துணி தைத்தல், மிட்டாய் தயாரித்தல், மேற்பார்வை செய்தல், நகை செய்தல், வண்டியோட்டுதல், திண்பண்டம் விற்றல், கப்பல் கட்டுதல், மரம் வெட்டுதல், வயல் வேலை செய்தல், சாலை அமைத்தல் போன்ற பல வேலைகளிலும் ஈடுபட்டனர். தோட்டங்களை விட்ட பலர் கிராமங்களில் குடியேறினர் தோட்ட முதலாளிகளாகவும் மாறினர். 

1872-ஆம் ஆண்டு இந்தியத் தொழிலாளர்களின் துயர் துடைக்கக் கமிஷன் அமைக்குமாறு கேட்ட காலத்திலேயே பல இந்தியர்கள் தோட்ட உரிமையாளர்களாக இருந்தனர். அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமுடி என்பவர் ஒருவர். அய்யாசாமி என்பவரும் அவரது சகாக்களும் Des Fontaines என்ற தோட்டத்தின் உரிமையாளராக இருந்தனர். 1910-ஆம் ஆண்டிலேயே மொத்தம் பயிரிடப்பட்டு வந்த நிலப்பரப்பில் 47,888 ஏக்கர் நிலப்பரப்பை இந்தியர் தமதாக்கிக் கொண்டனர். இது மொத்த நிலப்பரப்பில் 46% ஆகும்.

வெள்ளிவேல் அண்ணாசாமி : 

1792-ஆம் ஆண்டு மொரீசியஸ் வந்தார். ஆங்கிலேயர் காலத்தில் பண்டக சாலை பொறுப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். 1830களில் அண்ணாசாமி மொரீசியஸ் அடிமைச் சொந்தக்காரர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக விளங்கினார். தமக்குக் கொடுக்கப்பட்ட 285 அடிமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தம் நண்பர் இராம திருமுடி செட்டியார் என்பவரோடு இணைந்து, பித்தோன் அருகிலுள்ள போன் எஸ் புவார் என்ற தோட்டத்தை விலைக்கு வாங்கினார். அடிமை ஒழிப்பு சட்டம் வந்த போது தம்மிடமுள்ள அடிமைகளைக் காட்டி நஷ்ட ஈடு தொகை பெற்றார். மலகாசி, இந்தியர், மற்றும் ஆப்ரிக்கர்களாக 143 அடிமைகளை இவர் கமிஷன் முன் கொண்டு வந்தார் என்பர். 

1826-ஆம் ஆண்டு பரோடா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சின்னப்பிள்ளை மலையப்பா குடும்பத்துடன் இங்கு வந்துள்ளார். இக்கப்பலிலேயே போத்த செட்டி, மங்கீர் செட்டி முதலியோர் இங்கிருந்தோரால் பிணையம் கொடுத்து வரவழைக்கப் பட்டனர். இதன் மூலம் புதுவையிலிருந்து இந்து வேளார்கள் நிறைய வந்து இறங்கினர் என்று மாக்மில்லன் கூறுகிறார்.1829க்குப் பிறகு வணிகக் கட்டுப்பாடுகள் தளர்ந்ததால் சென்னை, புதுவை, தரங்கம்பாடி, தஞ்சாவூர், மாயவரம், கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான தமிழர்கள் மொரீசியஸ் வந்தனர். இவர்கள் அனைவரும் சிறுகடை வியாபாரிகளாவர்.

எம்.சி.இராமுசெட்டி : 

இக்காலத்தில் சிறந்து விளங்கிய கடை வியாபாரியாவார். இவருக்கு இந்தியாவிலிருந்து செருப்பு முதலிய கடை சரக்குகள் வந்ததும் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து விற்பது இவர் வழக்கமாக இருந்துள்ளது. 

திருமுடி :

1854-ஆம் ஆண்டுக் குறிப்பு தீவின் மொத்தக் கரும்பாலைகள் பற்றிக் குறிப்பிடுகையில் திருமுடி என்ற தமிழர் போன் எஸ்புவார் கரும்பாலையின் உரிமையாளராக இருந்தார் எனக் குறிப்பிடுகிறது.

மேலே கண்ட வணிகர்களும் அவர்களது வம்சாவளியினரும் இன்றும் கூட தொழிலில் சிறந்து விளங்கி வருவதை அறிய முடிகிறது. 


தொகுப்பு : ப. திருநாவுக்கரசு

பார்வை நூல்கள் :

1. மொரீசியஸ் தமிழரும் தமிழும் சு. இராசாராம் 1991.
2. மொரீசியஸ் தீவில் தமிழர்களின் சிறு சரித்திரம்-(1960)
3. மொரீசியஸ் தீவில் எங்கள் தமிழர்-கனகரத்தினம் (1980)
4. அயல் நாடுகளில் தமிழர் -எஸ். நாகராஜன் 1989.

 

http://www.tamilkalanjiyam.com

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையானதோர் கட்டுரை. ஆசிரியரின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

தொடர்ந்து தமிழர் வாழும் நாடுகளை பற்றி தேடிப் பிடித்து இணைகிறீர்கள். உங்களது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் யாழ் அன்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.