Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில் நுட்பம் மீள்பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அறிவியல் தொழில் நுட்பம் மீள்பார்வை – முனைவர் சு. பூங்கொடி
 

அறிவியல் கருத்தாக்கங்களின் போக்கு:

”அறிவாண்மை” என்பது ஒரு குறிப்பிட்ட ஆதிக்கத்தின் ”கருவூலம்” என்ற நிலை மாறி வளர்ந்த அறிவியல் ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டில் அரசியல் ஆதிக்கம் செய்த வணிக முதலாளிகளால் ஒரு பெரும் திருப்பத்தைச் சந்தித்தது. உற்பத்தியின் அடிப்படைக் குறிக்கோள் சமூகத்தேவை என்பது மாறி ”இலாபநேக்கமே” அடிப்படையாகவும் தீர்மானிக்கும் கூறாகவும் மாறியது. நவீன அறிவியலின் உயர் தொழில்நுட்பமும் வணிகர்களின் கருவிகளாக மாற்றப்பட்டன. இத்தகு தொழில்நுட்பமே மக்களை அடிமைப்படுத்தவும் இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இம் முதலாளிகளின் ஆதிக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. வேளாண்துறைகள், தொழில்துறைகள் பின்தள்ளப்பட்டு, இந்தியா முன்னேற வேண்டுமானால் நவீன அறிவியலும், தொழில்நுட்பமும் இன்றியமையாதன என நம் மக்களும் நம்பும் வகையில் அறிவியல் உலகம் தழுவியதாக்கப்பட்டது. ஆக சமூகப் பொருளாதார அரசியல் நோக்கங்களே ”அறிவியல்” நோக்கமாக மாற்றப்பட்டிருப்பதை இதன்கண் உணரலாம். டார்வின் கொள்கையையும் இன்றைய தொழில்நுட்பச் சமூகத்தின் கணிதமயமாக்கலையும், இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக கூற இயலும். உலகை கணிதமயமாக்குகிற முதன்மைப்படுத்துகிற விதியாகத் தெகார்த்தேலின் ”கார்ட்டிசீய பார்வை” செயல்படுகிறது. இவ்விதியைத் திறம்படச் செய்யக்கூடிய கருவியாக ”கணிப்பொறி” இயங்குகிறது என்றே கூறலாம்.

கார்ட்டீசிய வரைகணிதக் கொள்கை:

1. சந்தேகத்தைத் தவிர்க்க மனதிற்கு எது தெளிவாகத் தெரிகிறதோ அதை மட்டும் ஏற்றுக் கொள்வது. 2. பெரிய சிக்கலைச் சிறிதாகப் பிரித்துப் பார்த்தல் 3. எளியவற்றிலிருந்து தொடங்கிச் சிக்கலைக் குறித்து விவாதித்தல் / வாதிடுதல் 4. ஒன்றைச் செய்தவுடன் அதனைச் சோதித்து சரிபார்த்தல் / தொழில்நுட்பச் சமூகத்தின் இக்கொள்கை பற்றி ஆராயும்முன் ”தொழில்நுட்பம்” குறித்தத் தெளிவான சிந்தனை நமக்கு இருப்பது மிக அவசியம்.

தொழில் நுட்பம் – தொழில்நுட்பப் பார்வை:

”தொழில்நுட்பம்” என்பது அறிவியலின் பயன்பாடு என்ற கருத்தாக்கமே 19 ஆம் நூற்றாண்டு வரை நிலவிய கருத்து என்றாலும் தொழில்நுட்பம் வேறு. ”தொழில்நுட்பப் பார்வை” வேறு. தொழில்நுட்பம் இயந்திரங்களைச் சார்ந்ததாகப் பயன்பாடு கருதிய ஒன்று. ஆனால் தொழில்நுட்பப் பார்வை என்பது விதிமுறை என்றே சொல்ல வேண்டும். இதைப் பற்றி அறிஞர் ஜாக்வஸ் எலுவீ (Jacques Ellue) கருத்துரைக்கையில் தொழில்நுட்பப் பார்வையை மானுட இனத்தின் ஒரு மனநிலை மனோபாவமாக எடுத்துரைக்கின்றார். தொழில்நுட்பப் பார்வை என்பது புழக்கத்தில் இருப்பது பற்றியது இல்லை. இயந்திரங்களை, கருவிகளைப் பயன்படுத்துவது அல்ல. இயந்திரங்களை இயங்குவதற்காக ஓர் அமைப்பாக வடிவம் கொடுக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்டு நியாயப்படுத்துவது என்ற குணமுடைய ஒன்று. சுருங்கக்கூறின் தொழில்நுட்பப் பார்வை என்பது திட்டமிட்ட இலக்கை அடையக்கூடிய பலமுறைகளின் முழுமை. ஆக தொழில்நுட்பப் பார்வை பற்றிய பிரச்சினை என்பது மனிதன் பற்றிய பிரச்சனையாகும்.

தொழில்நுட்பப் பார்வைதான் இயந்திரங்களை இணைப்பதிலும், உருவாக்குவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இயந்திரங்களைச் சமூகத்துடன் சேர்க்கிறது, நெறிப்படுத்துகிறது. ஒரு காலக்கட்டம் வரை தொழில்நுட்பத்திற்குப்பின் அறிவியல் வளர்ந்தது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அறிவியலுக்காகக் காத்திருந்தது. ஆனால் இன்று தொழில்நுட்பப் பார்வை / தொழில்நுட்பத்தின் கையில் ஓர் கருவியாக அறிவியல் உள்ளது. இன்றையச் சூழலில் மானிட நிலைக்குத் தொழில்நுட்பத் தாக்கம் குறித்த கேள்வியே முதன்மை பெறுவதால் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்திற்கான தத்துவம் பற்றிய கருத்து தேவையற்றது. மேற்கூறிய விளக்கங்களால் இன்றைய ”தொழில்நுட்பம்” அறிவியலின் பயன்பாடு என்பது தவறு என்ற கருத்திணை உணர முடிகிறது. பெரும்பான்மையான அமைப்புகளிலும் நிறுவனங்களிலும் இத்தொழில்நுட்பப் பார்வையே செறிவாகச் செயல்படுகிறது.

தொழில்நுட்பம் – தொழில்நுட்பப் பார்வை – வேறுபாடுகள்:

1. முற்காலச் சமூகங்கள் கருவிகளின் பயன் கருவிகளை அபிவிருத்தி செய்தல் குறித்து கவனம் செலுத்தியது. இது கருவிகள் அதனளவில் கருவிகள் என்பதற்காக அல்ல.

2. கருவிகள் சிலவாகவும் கருவிகளைக் கையாள்பவர் திறன் அக்கருவிகளின் குறைகளை ஈடுசெய்யும் வகையில் இருந்தன. ஆகத் தொழில்நுட்பம் மனித வாழ்க்கைக் கலாச்சார அமைப்பு முறையில் பொதிந்த ஒரு கூறு. இன்றைய நிலை வேறு. கருவி கையாள்பவன் திறனை விட மிக்கதாய் அவனைக் கட்டுப்படுத்துவதாய் உள்ளது.

3. மனிதனுக்கான தொழில்நுட்பக் கருவிகள் மாறுதல் அடைந்த நிலைமாறி தொழில்நுட்பக் கருவிகளுக்காக மனிதனும் அமைப்புகளும் தங்களை மாற்றிக் கொள்ளும் நிலை உள்ளது.

4. மதிப்பீடுகள் அறநெறிகள் ஆகிய எந்தக் கட்டுப்பாடுமின்றி தொழில்நுட்பப்பார்வை, தொழில்நுட்பம் அதன் செயல்திறன் குறித்த கண்க்கீட்டையே கட்டுப்பாடாகக் கொண்டு வேகமாக முன்னேறுகிறது.

மேற்குறித்த வேறுபாடுகள் ”தொழில்நுட்பம்” பற்றிய பிரச்சனை என்பது மனிதன் குறித்த பிரச்சனை என்பதை உறுதி செய்கின்றன.

தொழில்நுட்பத்தின் செயல்பாடு:

ஆதிக்கச் சக்திகளின் வெளிப்பாடாக இன்றைய தொழில்நுட்பம் உள்ளது. உயிர் அமைப்பு பற்றிய ”டார்வின் கொள்கை” உரைத்தது என்ன? உயிரின் வாழ்க்கைப் போராட்டத்தில் வலிமை உள்ளதே வாழும். அவ்வாறு வலிமையில் வெற்றி பெற்ற உயிர் தான் வாழ இடம் போதவில்லை எனில் தம்மினத்துடன் புது இடத்தில் வாழலாம். அங்குள்ள புதிய கூறுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இக்கோட்பாட்டில் ஊடுருவி நிற்கும் கருத்தாக்கம் என்று உள்ளது. அது வன்முறையின் ஊடாக முன்னேற்றம் என்பதே. ஓர் உயிரானது வலிமை பெற்று விளங்க வேண்டுமெனில் பிற உயிர்களைத் தன் வலிமையால் வெல்ல வேண்டும். இந்தப் போட்டி, வன்முறை தவிர்க்க முடியாதவை. வலிமையால் வென்று தம் கூறுகளை நம் வம்சத்திடம் ஒப்படைத்துக் கண்மூடும் போது அந்த இனம் நிச்சயமாக ”வளர்ந்த இனம்” என்கிறது இக்கொள்கை. தனிஉடமை – அதைக்காக்கும் வாரிசு ஆதிக்கச் சக்திகளின் சித்தாந்தம். இச்சித்தாந்தத்தில் தொழில்நுட்பம் புகுந்ததன் விளைவு மரபணுக்கள் விதிப்படி அமையாது. சூழலுக்கு ஏற்ப எதிர்வினை புரிந்து தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையுடையனவாய் அமைகிறது. அதன்பின் தொடர்ந்து ஒருங்கிணைப்பதன் மூலமே முழுமை பெறும் என்பது இன்றைய தொழில்நுட்பக் கணிப்பொறியுகத்தின் விளைவாகும். அதாவது எல்லாமே தகவல்தான். மனித உடலின் விரிவாகப் பார்க்கப்பட்ட இயற்கை மனித மனதின் விரிவாக இயற்கையை இன்று பார்க்கிற நிலை எற்பட்டுள்ளது. எல்லாமே தகவல் என்றால் உயிர் அமைப்பும் தகவல்தான். இவை குறிப்பிட்ட கால அளவில் தகவல்களைச் சேகரிக்கிறது. பரிசீலித்து ஒழுங்கமைக்கின்றன; வெளிப்படுத்துகின்றன. பரிணாமம் என்பது சில தகவல்களை மலர்த்துவதும் பிற தகவலை ஈர்ப்பதுமாக ஒரு நிகழ்முறை மட்டுமே. உயிர் அமைப்பும், கணிப்பொறியும் ஒன்று என்ற கருத்து இன்று இணைக்கப்பட்டு உயிர்க்கணிப்பொறி உயிருள்ள கணிப்பொறி உருவாக்கப்படுகிறது. இரண்டுக்கும் ஒரு மொழி வந்துவிட்டது இரண்டும் ஒன்றை ஒன்று வளர்த்துச் செல்கின்றன. ஆக இரண்டுக்கும் இடையே வேறுபாடு இல்லை. உயிரற்ற பொருளும் மனிதனும் ஒன்று. எதையும் எதாகவும் மாற்றலாம்.

அறிவியல் தொழில்நுட்பத்தால் உயிர்க்குல மாற்றங்கள்:

அறிவியல் தொழில்நுட்பம் புதுப்புதுப் பயன்பாடுகளைத் தந்து ”பெரும் வெற்றி” தந்துள்ளது எனினும் அதன் விளைவுகளைப் பட்டியலிடுகையில் பாதகமானதாகவே அமைந்துள்ளது. 1. ”பசுமைப்புரட்சி” என்ற பெயரில் பூர்வீகப் பயிரினங்கள் இருக்க வீரிய இனங்களாகத் திணித்து உரக்கம்பெனிகள் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளுக்குப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டு இருப்பது – விளைவு மரபுவழி வித்துக்களை இழந்தது. (எ.கா. உங்கள் திட்டம், பெப்சிகோல நிறுவனம்)

2. சமூக நலக்காடுகளைப் ”பராமரிப்பு” என்ற பெயரில் தேக்குக்கன்றுகன், யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை வளர்த்தல் – விளைவு நிலத்தடிநீர் குறைந்து நிலச்சரிவுகள். காடுகளை அழித்ததால் மழைவளம் குறைந்தது – விளைவு ஆதிவாசிகளை அகதிகளாக்கியது.

3. அணைத்திட்டம் – நீர்தேக்கி வைத்தல் – பல நோய்களின் தோற்றத்திற்கும் நிலங்களில் உவர்தன்மை மிகுந்து வேளாண்மை பாதிக்கப்பட்டது. விளைவு – விவசாயிகள் வயிற்றுபிழைப்பிற்காக இடம் பெயர வைத்தது.

4. எல்லைக்கடந்து பயன்படுத்திய புகைவடிவ எரிபொருட்கள் – ஓசோன் படலத்தில் துளை ஏற்படச் செய்தது – விளைவு பூமியின்மீது வெப்பம் அதிகமாகி அமில மழை, கடல் பொங்கி வறட்சி அதிகமானது. பூகம்பம் வெடித்தது.

5. மருத்துவ முறைகள் பெரும்பான்மை அறுவைச்சிகிச்சை முறைகள், இயந்திரங்கள் சார்ந்து அமைந்தன – விளைவு தேவையான மருந்துகள் கிடைக்காது பற்றாக்குறை – பக்க விளைவுகள்

6. சிறு தொழில்களுக்குக் கடன் உதவி – இலவச விதை இலவச பரிசோதனை, இலவச மருந்து – கடன் வழங்குதல் என எல்லாவிதமான அமைப்பிலும் ”தொழில்நுட்பம்” ஊடுருவி இருக்கின்றது.

7. தொழில்நுட்ப ஊடுருவலில் கிராமங்களிலும் நகரங்களிலும் தோன்றியிருக்கும் ”பைனான்ஸ்” அமைப்புகள் கிராம நகர்ப்புற உறவுகளில் சிதைவை ஏற்படுத்தியிருப்பதை உணர வேண்டும்.

8. உயிர்த்தொழில் நுட்பத்தில் ஓர் உச்சநிலையாக ”எயிட்ஸ்” நுண்ணுயிர்கள் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு காலத்தில் அமெரிக்க போர் முறையாக கையாளப்பட்டது. ஆனால் அதிக அளவில் எயிட்ஸ் பரவியதற்கு பாலுணர்வு காரணமாக சுட்டப்படுகிறது. அதே போன்று கால்நடைகளில் பரவவிட்ட நுண்ணுயிர்கள் (ஆந்தராக்ஸ்) ”வல்லரசு” என்ற தகுதியைத் தக்க வைத்துக்கொள்ள ஒவ்வொரு நாடும் போர் முயற்சியில் இறங்குகிறது – விளைவு மனித இனம் அழியக்கூடிய அபாய நிலை மனித உணர்வுகள் மறுக்கப்பட்டு மனிதநேயம் சிதைந்து கொண்டிருக்கின்றன.

9. ஒரு விதத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கோ, நுகர்பொருள் அடிமைத்தனத்திற்கோ போதைப் பொருட்கள் வன்முறை பாலுணர்வு மனச்சிதைவுக்கோ அடிப்படைக் காரணம், தேடினால் அது நவீன அறிவியல் தொழில்நுட்பத்தால் உணரலாம்.

10. இன்றைய கணினி தொழில்நுட்பத்தில் மனிதன் கணினியின் ஒரு உறுப்பாக மாறி உள்ளான். இராணுவத்தின் இடங்களில் பயன்படுத்தப்படும் கணிதமும், விளையாட்டுக் கோட்பாடும் (Operation Research) ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படுகிறது. விண்வெளி ஏவுகணை முதல் குழந்தையின் வீடியோ கேம் விளையாட்டு வரை. குழந்தைகள் இவ்விளையாட்டு முறை ஒரு விதத்தில் இராணுவச் சிந்தனையை ஊக்குவிக்கிறது. கம்ப்யூட்டர் மயமாக்கல் வளர்ச்சி பெற்ற கார்ட்டீசிய பார்வையை முன் வைக்கிறது.

புதிய அறிவியல் தொழில்நுட்பம்:

1. குறைந்த செலவினை முன் வைத்து மக்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தொழில்திறனை படைப்பாற்றலை வளர்க்கக்கூடியதாய் அடிமைத்தனத்தை வளர்க்காத தொழில்நுட்பம் தேவை.

2. சுற்றுச்சூழல் பேரழிவு இல்லாது, மூலவளங்கள் இருக்கும் இடத்திலே இழப்பின்றி பயன்படுத்தக்கூடியதாய் அதிகாரப் பரவல் அறிவியல் தொழில்நுட்பம் தேவை.

3. இயற்கையை அடக்குவதாக அல்லது இயற்கையோடு இயைந்த தொழில்நுட்பம் தேவை.

4. மனிதனின் முழு வளர்ச்சியை இலக்காகக் கொண்ட வணிக நோக்கமற்ற தொழில்நுட்பம் தேவை.

5. போருக்கான தொழில்நுட்பத்தை ஒதுக்கி அமைதிக்கான முன்னுரிமையை அளிக்கும் தொழில்நுட்பம் தேவை.

கிராமங்களில் வாழும் மக்கள் உயிரற்ற இயந்திரங்களோடு போட்டி போட வேண்டியுள்ளது. மனித சக்தி போதிய அளவு கிடைக்காத சூழலில் இயந்திரங்கள் மனிதனுக்குத் துணை செய்ய வேண்டும். பயன்படுத்தும் வாய்ப்பே இல்லாதவர் இருக்கையில் எல்லாத்துறைகளிலும் இயந்திரங்களைப் புகுத்தி வேலை வாய்ப்பைக் குறைப்பது ஏழைச் சமூகத்தை பாதிப்பதாகும். அடிப்படை இலாப நோக்கத்தின் விளைவு சமூகத்தில் ஏற்றத்தாழ்வை உண்டுபண்ணும். ”உற்பத்தி பெருமளவில் இருக்கவேண்டும் என்று கருதக்கூடாது. மக்களுக்காக உற்பத்தி இருக்க வேண்டும்” என்ற காந்தியின் கருத்து இங்கு நினைவுகூர்தல் வேண்டும். அறிவியலும், தொழில்நுட்பமும் வேறுவேறு அன்றி அறிவியலில் தொழில்நுட்பம் கருவியாக செயல்படுத்தப்படுகிறது என்றே கொள்ளுதல் வேண்டும். இன்றைய அறிவியல் இயற்கையை வென்றடக்குவதாக இருக்கின்றது. பசுமைப்புரட்சி, உயிர்த்தொழில்நுட்பம், தகவல் புரட்சி, கணினி என்ற வடிவங்களில் இன்று அறிவியல் வளர்ச்சி பெற்று வந்தாலும் அதில் தாங்கியுள்ள அசுரத்தனமான ஆதிக்கங்களை தெளிவாக நாம் உணர்ந்திருப்பதுடன் ஆதிக்கங்களை யார் செலுத்துகிறார்கள் என்பதையும் தெரிந்தே இருக்கிறோம். இன்றைய ”அந்நியமாகி” மனிதநேயத்தை இழந்து கொண்டிருக்கிறான் என்பதே உண்மை.

நன்றி: கட்டுரை மாலை

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.