Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசப் பெருந்தெருவில் தமிழீழத்திற்கான குறுக்குத்தெரு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசப் பெருந்தெருவில் தமிழீழத்திற்கான குறுக்குத்தெரு

தத்தர்
 

 

'சர்வதேச நியமனங்களின்படி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் இந்தியா தலையிட முடியாது' என்று ஒரு தரப்புக் கூறுகின்றது.

 

'இலங்கையின் இனப்பிரச்சினை ஓர் உள்நாட்டுப் பிரச்சனையே. அதில் வேறெந்தொரு நாடும் தலையிடக்கூடாது. அதை இலங்கை அரசே தீர்த்துக் கொள்ளட்டும்' என்று இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர்.

 

'இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீதும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று மேலும் இன்னொரு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

 

இங்கு ஒவ்வொரு அரசினதும் அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களினதும் அரச நலன்சார் கொள்கைகளின் கீழ் மேற்படி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நாம் இங்கு உண்மைகளைப் பரிசீலித்து ஒரு சரியான கருத்தை முன்நிறுத்தியாக வேண்டும்.

 

சோவியத் யூனியனது வீழ்ச்சியின் பின்பு கிழக்கு ஐரோப்பிய தேசிய இனப்பிரச்சனையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் நேரடியாகத் தலையிட்டன. ரஷ்யாவிலிருந்து 14 தேசிய இனங்கள் தனித்தனி அரசுகளாகப் பிரிய மேற்படி நேட்டோ நாடுகள் நேரடியாக வழிவகுத்தன. அதேபோல யூகோஸ்லாவியா, செக்கோசிலவாக்வியா ஆகிய நாடுகளின் தேசிய இனப்பிரச்சனைகளில் நேட்டோ நாடுகள் தேவைப்பட்ட இடத்தில் இராணுவப் பிரசன்னத்துடன் தலையிட்டு புதிய அரசுகளை உருவாக்கின.

 

இவற்றுக்கு முன் பனிப்போர் காலத்தில் பங்காளிகளின் மீதான பாகிஸ்தானின் ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியா நேரடியாக இராணுவத் தலையீட்டை மேற்கொண்டு பங்களாதேஷ் என்ற புதிய நாட்டை உருவாக்கியது. இப்படி உலகமெங்கும் தேசிய இனப்பிரச்சனைகள் வரும்பொழுதும் உள்நாட்டுப் பிரச்சனை என்று கண்மூடிக் கொண்டு இருக்காது, அவ்வப்போது வெளியரசுகள் தலையிட்டு அவற்றைத் தீர்த்து வைத்துள்ளன.

 

இவ்வாறே இஸ்ரேல், பாலஸ்தீனியரின் பிரச்சனையில் 22 அரபு நாடுகளும் உலகின் வேறு பல நாடுகளும் தலையிட்டு வருகின்றன. அதனால் தேசிய இனப்பிரச்சனையை வெறும் உள்நாட்டுப் பிரச்சனை என்றோ அல்லது இனப்படுகொலை என்றோ ஒதுக்கிவிட்டதாக வரலாறு இல்லை. அவற்றுக்கப்பால் இவ்வாறான பிரச்சனைகளில் வெளிநாடுகள் தலையீட்டை மேற்கொள்வதே சர்வதேச அரசியலில் நடைமுறையாக உள்ளது.
 
ஈழத்தமிழர் விவகாரத்தில் அதனை ஓர் உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அதில் இந்தியாவோ வேறு நாடுகளோ தலையிடக் கூடாது என்றும் கூறுவது தெளிவான அரசநலன் சார்ந்த சந்தர்ப்பவாதமாகும். குறிப்பாக இந்தியா தலையிடக்கூடாது என்று கூறுவது ஈழத்தமிழர் விவகாரத்தில் பாராமுகம் காட்டுவதற்கான ஒரு வசதியான முகமாகும். ஆனால் சர்வதேச நியமத்தின்படி நாம் இன்னொரு வகையில் இதனை விளக்கமுடியும்.
 
ஒரு நாட்டில் நிகழும் உள்நாட்டுப் பிரச்சனை இன்னொரு நாட்டில் உள்நாட்டு அரசியலைப் பாதிக்குமேயானால் அதனை ஓர் உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறமுடியாது. இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கான ஒடுக்குமுறை தமிழகத்தில் அரசியல் கொந்தழிப்பை ஏற்படுத்தும்போது அது உள்நாட்டுப் பிரச்சனை இன்றி இந்தியாவின் பிரச்சனையாகவும், சர்வதேச பிரச்சனையாகவும்கூட மாறிவிடுகிறது. இந்த வகையில் தமிழகத்தின் அரசியலை கொந்தழிப்புக்கு உள்ளாக்கவல்ல ஈழத்தமிழர்களின் பிரச்சனையை இந்தியா ஓர் உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறாது அதில் தலையிடுவதற்கான முழு சர்வதேச நியமங்களையும் கொண்டுள்ளதாகவே கருதவேண்டும்.
 
பலஸ்தீனியரின் பிரச்சனையில் அரபுநாடுகளின் தலையீட்டை இவ்வகையில் புரிந்து கொள்ளலாம். அதாவது பலஸ்தீனியரின் பிரச்சனையை உள்நாட்டுப் பிரச்சனை என்று அரபு நாடுகள் பின்தள்ளவில்லை.
 
செழிப்பான தேசிய இனத்தன்மை கொண்ட ஈழத் தமிழர்கள் ஓர் அரசற்ற இனமாக இருக்கும் நிலையில் அரசுகள் தத்தம் நலன் சார்ந்து ஈழத்தமிழர் விவகாரத்தை பிய்த்துப் பிடுங்குகின்றன. ஈழத்தமிழர் விவகாரத்தை காலில் மிதிக்கும் வெளியரசுகளும் சிலவேளை தூக்கிப்பிடிக்கும் வெளியரசுகளும் தத்தம் அரச நலன்களுக்காய் தான் அவற்றைப் புரிகின்றனவே தவிர ஒடுக்கப்படும் ஈழத்தமிழ் தேசிய இனத்தின் நலன் சார்ந்த கண்ணோட்டத்தில் அல்ல. ஒருவேளை தூக்கிப்பிடிக்கும் ஓர் அரசுகூட தனக்கான நலனைச் சந்திக்கும் ஒரு கோட்டில் ஈழத்தமிழரைக் கைவிட்டுவிடும். ஆனாலும் கூட அவ்வாறு தூக்கிப்பிடிக்கப்படுவதை நாம் ஏற்று ஒருபடியாயினும் முன்னேற அதனைப் பயன்படுத்த வேண்டும். மூன்றும் இரண்டும் ஐந்தென்று எதிரி சொன்னால் என்ன, நண்பன் சொன்னால் என்ன அந்த ஐந்து சரியானதே. எனவே ஈழத்தமிழர் விவகாரத்தை தற்காலிகமாகவேனும் ஒருவன் தூக்கிப்பிடிக்கும்போது அல்லது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதைக் கூறும்போது நாம் அதனை ஒட்டி ஒருபடி முன்னேற அதனைப் பயன்படுத்த வேண்டும்.
 
அரசுகள் தத்தம் நலன்களுக்காகவே எமது பிரச்சனையை காலில் போட்டோ அல்லது கையில் தூக்கியோ கையாளும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் அதே வேளையில், எமது வளர்ச்சிக்கு ஏற்ப இவ் அரசுகளைச் சிக்கவைக்கவல்ல தவிர்க்கமுடியாத வரலாற்று விதிகள் என்னவென்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். 2007ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மு.திருநாவுக்கரசு எழுதியிருந்த 'சென்னையில் திறவுகோல்' என்ற தனது கட்டுரையில் மேற்படி மிகச்சாதகமான அந்த தவிர்க்கமுடியாத விதியை மிக விரிவாக எழுதியுள்ளார். அக்கட்டுரை பின்வருமாறான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது.
 
புதுடில்லி வேறுவிதமாகச் சிந்தித்திருந்தாலும் சென்னை ஈழத்தமிழர்களின் குரலாய் எழுச்சிபெறும்போது தவிர்க்க முடியாதவாறு புதுடில்லி அதற்கு வளைந்து பணிந்தாக வேண்டும். அவ்வாறு புதுடில்லி வளையும்போது அமெரிக்கா அதனை மீறமுடியாது ஒத்துப்போக வேண்டி நேரும். பனிப்போரின் பின்னான உலக ஒழுங்கின்படி இந்தியாவை அமெரிக்க ஒரு கட்டத்தில் அதிகம் அனுசரித்துப் போக வேண்டிய தேவையுள்ளது. இவ்வகையில் சென்னை, புதுடில்லி, வொசிங்டன் என்ற ஒரு சமன்பாட்டின் கீழ் ஈழத்தமிழர்களின் அரசியல் சர்வதேசிய அரசியலில் தவிர்க்கப்பட முடியாத வளர்ச்சி முறையைக் கொண்டுள்ளது என்று அக்கட்டுரை விபரித்துள்ளது.
 
இன்றைய நிலையில் அது மேலும் வாய்ப்பான ஒரு சர்வதேச அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. எனவே சென்னை, புதுடில்லி என்ற சமன்பாடு எதிர்காலத்தில் காரியசித்தியாகக் கூடியது. இது அரசுகளின் விருப்பங்களைத் தாண்டியும் தமிழக மக்களின் எழுச்சி ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான திறவுகோலாய் இருக்கக்கூடிய அடிப்படையைக் கொண்டுள்ளது.
 
இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேச அரசியலில் தவிர்க்கப்பட முடியாத மிக நீண்டகால கூட்டாளிகளாய் இருப்பதற்கான அடிப்படை தற்போது ஸ்தாபிதம் அடைந்துவிட்டது. இந்து சமுத்திரத்தையும் தென்னாசியாவையும் இந்தியாவின் உதவியின்றி அமெரிக்காவால் அணுகமுடியாது. அதேவேளை தென்னாசியாவிலும் இந்து சமுத்திரத்திலும் அமெரிக்காவின் உதவியின்றி தன்னைத் தக்கவைக்க ஒருபோதும் இந்தியாவால் முடியாது. எனவே இது வரப்போகும் பல தசாப்தங்களுக்கான சர்வதேச அரசியலில் ஒரு பெரும் போக்கு என்பதை நாம் புரிந்தாக வேண்டும்.
 
அதேவேளை அந்தப் பெரும் போக்கை தமிழக மக்கள் சக்தியைக் கொண்டு எமக்குச் சாதகமான வழியை நாம் கையாள்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த ஒரே ஒரு வழி மிகக் கௌரவமானதும், அடிமைத்தனமற்றதும், நாம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு ஏதுவானதுமான அடிப்படையைக் கொண்டுள்ளது.
 
சர்வதேச அரசியலில் 'வீட்டோ அதிகாரம்' எனப்படுகின்ற வெட்டுவாக்கு அதிகாரமுள்ள ஒரு அரசின் துணை இன்றி சர்வதேச அரங்கில் நாம் இலகுவில் இயங்க முடியாது. சிங்கள அரசுக்கு வெட்டுவாக்கு அதிகாரம் கொண்ட சீனாவின் ஆதரவு நிரந்தரமாக உண்டு. ரஷ்யா ஈழத்தமிழருக்கு சாதகமாக தனது வெட்டுவாக்கைப் பயன்படுத்தாது. ஆனால் இந்தியாவுடன் அதற்கு வருடாந்தம் 1000 கோடி மில்லியன் டொலர் என்ற ஆயுதவிற்பனை பற்றிய உத்தேச வர்த்தகத் திட்டம் இருக்கிறது. தற்போது 300 கோடி பில்லியன் டொலர் பெறுமானமான வருடாந்த வர்த்தகத்தை இந்தியாவுடன் கொண்டிருக்கும் ரஷ்யா வரப்போகும் சில ஆண்டுகளுக்குள் இதனை 1000 கோடியாக உயர்த்த வேண்டுமென்று உத்தேசித்துள்ளது.
 
ரஷ்யாவின் உலக வர்த்தகம் பெரிதும் கைத்தொழில் பண்டம் சார் வர்த்தகமாக அல்லாமல் ஆயுத வர்த்தகம், தொழில்நுட்ப வர்த்தகம், கச்சாய்ப் பொருள் வர்த்தகம் என்ற உலக வர்த்தக நிலையில் இந்தியாவுடனான ஆயுத தொழில்நுட்ப வர்த்தகமே அதற்கு மிகப்பெரும் இலாபகரமான சர்வதேச வர்த்தகமாயுள்ளது.
 
இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்குச் சாதகமாக அது வெட்டுவாக்கைப் பயன்படுத்தாது விட்டாலும் இந்தியா ஈழத்தமிழருக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும்போது அதை எதிர்க்காதிருக்க வேண்டிய நிலைமை ரஷ்யாவிற்கு உண்டு.
 
இறுதி ஆய்வின்படி பார்த்தால் வெட்டுவாக்கைக் கொண்டுள்ள அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற மூன்று நாடுகளில் ஏதோ ஒன்றுதான் எமக்கு சாதகமாகச் செயற்படவேண்டிய குறைந்தபட்ச நிலையைக் கொண்டுள்ளன. அதுவும் இந்திய சார்பு நிலையில் இருந்துகொண்டுதான் மேற்குலக நாடுகள் அந்த வெட்டு வாக்குகளைப் பயன்படுத்தும். குறிப்பாக அது அமெரிக்காவின் வெட்டு வாக்காகவே அமையமுடியும்.
 
தமிழகத்தால் இந்திய மத்திய அரசை நாம் திருப்ப முடியும்போது இந்திய மத்திய அரசால் அமெரிக்காவின் வெட்டுவாக்கைத் தம்பக்கம் திருப்ப முடியும். எனவே இதுபற்றி ஒரு நீண்டதூரப் பார்வையுடன் நாம் இந்த பிரச்சனையை அணுகவேண்டும்.
 
எந்தவொரு அரசும் நீதிக்காகவோ எமக்காகவோ நிற்கும் என்று நாம் கற்பனை செய்யத் தேவையில்லை. தத்தம் நலன்களுக்குப் பொருத்தமான நிலைப்பாட்டையே அவர்கள் எடுப்பார்கள். ஆனால் நாம் வரலாற்று நீதிகளினால் எமக்குச் சாதகமான ஒரு சர்வதேச வலையத்தை உருவாக்கி அந்த வலையத்துக்குள் இந்த நாடுகளை உட்படச் செய்வதன் மூலம் எமது நலன்களை ஈட்டமுடியும். அதாவது வாய்ப்புக்களை எப்படி எமது நலனுக்கான அரசியல் ஆக்கப்போகிறோம் என்பதுதான் இங்கு நோக்கம். எமது விருப்பங்களை அரசியலாக்க முடியாது. சாத்தியக்கூறுகளைத்தான் அரசியலாக்க முடியும். காணப்படும் ஒவ்வொரு வாய்ப்பினையும் அவை மிகத் தற்காலிகமானவையாக இருப்பினும் அவற்றைக் கையிலெடுத்து அதனை அடுத்த கட்டத்திற்காக தரம் உயர்த்துவதும் இறுதி அர்த்தத்தில் எமக்குச் சாதகமாக மாறக்கூடிய அரசுகளை எமக்குச் சாதகமாக மாற்றுவதற்கான செயல்முறைகளில் ஈடுபவதன் மூலம் மாற்றி எமது விடுதலையை நாம் அடைந்துவிட வேண்டும்.
 
சரியான கருத்துருவாக்கமின்றி விடுதலை சாத்தியமில்லை. ஒரு சரியான கருத்தை உருவாக்க நாம் இன்னும் அதிகதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எமது பட்டறிவும் பெரும் துயரமும் சரியான கருத்துருவாக்கத்திற்கான முன்நிபந்தனைகளை ஏற்பத்தியுள்ளன. அந்த முன்னனுபவங்களுக்குப் பணிந்து நாம் ஒரு சரியான கருத்துருவாக்கத்திற்கு வரவேண்டும்.
 
பரந்த அறிவுடன் கூடிய ஆழ்ந்த சிந்தனையும் சரியைச் சரியென்றும் பிழையைப் பிழையென்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பண்பாட்டு மனமின்றி நாம் ஓர் சரியான கருத்துருவாக்கத்தை எட்ட முடியாது. உலக அரசியல் பற்றிய பரந்த அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் மேற்படி பண்பாட்டு மனமும் கூட்டுச் சேர்ந்து எமது பட்டறிவின் பின்னணியில் நாம் புதிய கருத்துருவாக்கத்தை எட்டவேண்டும்.
 
பெரிய அரசுகள் தமது பெரிய நலன்களின் பொருட்டு சிறிய நலன்களை கைவிடவேண்டிய யதார்த்தம் வரலாற்றின் நிர்ப்பந்தங்களால் உருவாக்க முடியும். ஆதலால் வரலாற்றின் நிர்ப்பந்தங்களில் நம்பிக்கை வைத்து காணப்படும் உலக ஒழுங்கில் எமக்கான இடத்தை அடையாளம் கண்டு எமக்குப் பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்து எமது இலக்கை நாம் அடையவேண்டும்.
 
அரசுகள் தமது நலனின் பொருட்டுத்தான் செயற்படும். ஆனால் அரசுகள் தமது பெரிய நலன்களின் பொருட்டு சிறிய நலன்களை தாரைவாக்கவேண்டிய கட்டாயம் வரலாற்று யதார்த்தத்தில் உண்டு. இந்த வரலாற்று யதார்த்த நிர்ப்பந்தத்தை சரிவர அடையாளம் கண்டு அதை முதன்மைப்படுத்துவதன் மூலம் அவர்களின் கோணத்தில் சிறிதாக இருக்கக் கூடியதும், அவர்களின் கோணத்தில் பெரிதாக இருக்கக் கூடியதுமான நலனை ஈட்டுவது சாத்தியம். சர்வதேச அரசியல் கோட்பாடு இதனை வரலாற்றில் காண்பித்துள்ளது.
 
இவற்றுக்கப்பால் புவிசார் அரசியல் தேவையின் நிமித்தம் ஈழத்தமிழரின் பாதுகாப்பில் தான் இந்தியாவின் பாதுகாப்பு தங்கியுள்ளது. ஆதலால் ஈழத்தமிழருக்கான தமிழகத்தின் இனமான உணர்விற்கும் அப்பால் பரந்த இந்திய தேசத்தின் பாதுகாப்புக்காகவேனும் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஈழத்தமிழருக்கு சார்பான நிலைப்பாட்டை எடுப்பது தவிர்க்கமுடியாது. இது விருப்புவெறுப்புக்கு அப்பாலான ஒரு வரலாற்று நிர்ப்பந்தம்.
 
ஆதலால் நாம் ஒன்றுமற்றவராய் மட்டும் இருக்கவில்லை. பலமான கேந்திர முக்கியத்துவத்தைக் கொண்டவர்களாகவும் இருக்கிறோம். இவ்வகையில் எமது கேந்திர முக்கியத்துவத்தை அனுசரித்து நடக்கவேண்டிய தேவையும் பொறுப்பும் இந்திய அரசுக்கு இருக்கின்றது என்பதால் எமது விடுதலைக்கான பாதை பிரகாசமாக உள்ளது.
 
தற்காலிக நிலைமைகளைக் கடந்து உலக ஒழுங்கில் நீண்டகால நிலமைக்குள் எமக்கான விடுதலைப்பாதை தெளிவாக உள்ளது என்பதை நாம் கருத்திலெடுத்துச் செயற்பட வேண்டும். எதுவும் தங்கத் தாம்பாளத்தில் இருக்கமாட்டாது. நிலமைகளைக் கையாள்வதிலேயே தங்கியுள்ளது.
 
நாம் வளமான பண்பாட்டையும் தொன்மையான வரலாற்றையும் கொண்ட ஒரு சிறப்பான தேசிய இனமே ஆயினும் அளவால் சிறிய இனமாயும் அதேவேளை அளவால் பெரிய ஈவிரக்கமற்ற சிங்கள மேலாதிக்கத்திற்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். நாம் அரச பலத்துடன் கூடிய உலகளாவிய அவர்களது வியூகங்களிலிருந்து தப்பித்து தற்காத்து முன்னேற வேண்டிய ஓர் அரசற்ற இனமாகவுள்ளோம். எமக்கென்றோர் அரசமைப்பதைத் தவிர எமக்கென்று ஓர் பாதுகாப்பு இந்த பூமியில் இல்லை.
 
சிங்கள அரச நிறுவனத்துடன் கூடிய அவர்களது உலகளாவிய வியூகத்தின் முன் எமக்கென்றோர் அரசமைப்பதற்கு நாம் வகுக்கக்கூடிய வியூகமானது ஓர் இலகுவான காரியமல்ல. கடினமே ஆயினும் அதற்கான வாய்ப்புக்கள் இல்லாமலில்லை.
 
ஓர் சிறிய இனமான நாம் இந்த உலக ஒழுங்கை நினைத்தபடி எழுமாத்திரத்தில் கையாள முடியாது. இந்த உலக ஒழுங்கில் எமக்கிருக்கக்கூடிய பொருத்தமான, அங்கிகாரத்துக்குரிய வழிகளை நாம் கண்டறிய வேண்டும். ஒரு மருத்துவர் நோயாளியின் உடல்நிலை, பலம், பலவீனம், நோய்க்கூறுகள் என்பவற்றை அடையாளம் கண்டு அவற்றிற்கேற்ப மருந்தையும் உணவையும் தெரிவு செய்வதுடன், அவரின் மனக்கட்டமைப்பையும் முன்னேற்றி வைத்தியம் செய்வது போல் எமது விடுதலைக்கான அணுகுமுறையை நாம் மேற்கொண்டாக வேண்டும்.
 
எதிரி எமக்கெதிரான கருத்துமண்டலத்தை உருவாக்குவதிலும் எம்மைத் துண்டாடுவதிலும் அக்கறையாய் உள்ளமை மட்டுமன்றி, வேட்டைக்காரன் உடும்பின் வாலாலேயே உடும்பைக் கட்டுவதைப் போல எதிரி எங்களாலேயே எங்களைக் கட்டிப் போடுகிறான். இது விடயத்தில் எமக்குள் செழிப்பான பண்பாட்டு மனம் அவசியப்படுகிறது. கூர்மதியும் நீண்டதூரப் பார்வையும் உடனடி நடைமுறைக்குப் பொருத்தமான செயல் முறைகளும் யதார்த்தத்தை எதிர்கொள்ளவல்ல சமயோசித நகர்வுகளும் அவசியப்படுகிறது. ஒருகணம் எங்களை நாம் மதிப்பீடு செய்யவேண்டும். எமக்குரிய பொறுப்புக்களை நாம் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டும். பொறுப்புணர்வும் விடுதலையுணர்வும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாயும் இணைக்கப்பட்டு, தற்காப்புடனும் கூர்மதியுடனும் முன்னேற வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்த நாம் நான்கு ஆண்டுகளை இன்னும் சில மாதங்களில் எட்டிவிடுவோம். ஆனால் முள்ளிவாய்க்கால் பேரழிவு தோற்றிவித்த அந்த வெற்றிடத்தை நாம் இன்னும் நிரப்புவதற்குரிய நிலையை அடையவில்லை.
 
முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்பத்திய அரசியல் வெற்றிடத்தை நிரப்ப எமக்கப்பால் சில புள்ளிகள் இடப்பட்டுள்ளன. முதலாவது புள்ளி, சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இரு ஆவணப்படங்கள். முள்ளிவாய்க்கால் அவலத்தை உலகிற்கு சொல்லும் முதல் புள்ளியாய் அமைந்தது. அடுத்து, தமிழக சட்டசபையில் இலங்கை அரசின் யுத்த குற்றத்திற்கு எதிராக ஏகமனதாய் நிறைவேற்றப்பட்ட சட்டசபைத் தீர்மானமாக அமைந்தது. அடுத்து ஐ.நா நிபுணர்குழு அறிக்கை 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றிய செய்தியை உலகிற்குப் பறைசாற்றுவதாய் அமைந்தது. நான்காவதாக இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்க அரசால் பிரேரித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்தது. இந்த நான்கு புள்ளிகளுமே கடந்த நான்கு ஆண்டு காலகட்டத்தில் எமது அரசியல் வெற்றிடத்தில் நாம் நடைபோடுவதற்குக் கிடைத்த நான்கு ஊன்றுகோல்களாய் அமைந்தன. இந்த ஊன்றுகோல்களுக்கு நிகராய் எமது அரசியல் வெற்றிடத்தை நிரப்பவல்ல செயல்களை எம்மால் செய்ய முடியவில்லை. இந்த ஊன்றுகோல்கள் முற்றிலும் நாம் எதிர்பார்க்கும் வடிவில் உள்ளனவா, இல்லையா என்பதற்கு அப்பால், இவை நாம் தத்தி மேலேழும்ப உதவுகின்றன என்பதைக் கருத்திலெடுக்க தவறக்கூடாது.
 
எதுவும் முழுமையாக இந்த பூமியில் எமக்கு கிடைத்துவிடும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. கிடைப்பவற்றில் சாதகமானவற்றை உள்வாங்கிக் கொள்ளவோ அல்லது அவற்றைப் பயன்படுத்தி நாம் சாதகமாக்கிக் கொள்ளவோ கூடிய வழிவகைகளைக் கண்டறிந்து அவற்றின் மூலம் முன்னேறுவதற்கான கலாச்சாரத்திற்கு நாம் போகவேண்டும். எதனையும் எதிர்ப்பது சுலபமானது. ஆக்குவது கடினமானது. ஆக்கத்திற்குத் தேவையானவை எங்கிருக்கின்றனவோ அவற்றைக் கண்டறிந்து அல்லது அவற்றை பயன்படுத்தி நாம் ஆக்கபூர்வமான வழியில் முன்னேறவேண்டும்.
 
ஒருகணம் சுமாராக கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்தவற்றை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அரசியல் வெற்றிடத்தை நிரப்பமுடியாமல் நாம் தவிக்கும் இந்த சூழலில் எம்மால் எமக்கென உருவாக்கப்பட்டவற்றை விடவும் மேற்படி இந்த நான்கு புள்ளிகளாலும் எமக்குருவான இந்த ஊன்றுகோல்கள் மிகவும் துலக்கமானவை. காய்தல் உவத்தலின்றி இந்த உண்மைகளை நாம் முதலில் கிரகிக்க வேண்டும். அப்போது எம்மால் இந்த நான்கு ஆண்டுகளிலும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பமுடியாது போனதென்ற ஒரு குற்ற உணர்வு எம்மில் தொற்றிக் கொள்ளும். அதன்படி எமக்குரிய பொறுப்பை உணர்ந்து நாம் விரைவான பொருத்தமான ஒரு பாதையையும் வளர்ச்சியையும் தேடமுடியும்.
 
நாம் முதுகு கூனாமல் கையேந்தாமல் விடுதலை பெற வழியிருக்கின்றது. மிகப் புத்திசாதுரியத்துடனும் இராஜதந்திர நெளிவு சுளிவுடனும் செயற்பட்டால் அல்லல்படும் ஈழத்தமிழருக்கான விடுதலை வெகுதூரத்தில் இல்லை.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=7&contentid=a914b6e2-5259-4672-90d2-920e45c0b1d4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.