Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடாமல் மாணவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் இன்குலாப் அவர்களுடன் இச்சந்திப்பை ஒரு மதியப்பொழுதில் அவரது ஊரப்பாக்கம் வீட்டில் நிகழ்த்தினோம். எளிமையான உருவம். மிகவும் பணிவோடு வரவேற்றார். அவருடைய கம்பீரத்தை மேடைகளில் பார்த்திருக்கிறேன். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் மிகத்தீவிரமாகப் பங்கெடுத்த மாணவர் தலைவர்களில் அவரும் ஒருவர். ஈழப்பிரச்னை சம்பந்தமாக இப்போது தமிழ்நாட்டில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் போராடிக்கொண்டிருக்கும் புதுக்கல்லூரி மாணவர்களைச் சென்று பார்த்து வந்திருக்கிறார். போராடும் மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருப்பதாக மனம்திறந்து கூறுகிறார். ஈழத்தமிழர் பிரச்னை குறித்து அக்கறையோடு பேசுகிறார். ஈழத்தமிழ்மக்களின் வேதனை அவருக்கு சித்திரவதையைக் கொடுக்கிறது என்பதை நாங்கள் அறிந்தோம். மானுடக் கவிஞனல்லவா அவர்.

சந்திப்பு: செ.சண்முகசுந்தரம், டி.வி.எஸ். பாலு.

 

கேள்வி : அய்யா, வயதில் பாதியை போராட்டக்களத்தில் கழித்தவர் நீங்கள்.முன்பைவிட போராட்டக்காரர்களுக்கும், அரசுக்கும் இடையேயான சகிப்பின்வெளி குறைந்துள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?

 

பதில் : போராட்டம் என்பதை தெருவில் இறங்கி நடத்தக்கூடிய போராட்டமாக‌மட்டும் நான் பார்க்கல. நீடிக்கிற நிலைமைகளுக்கு எதிரான ஒரு கருத்தை வெளிச்சொல்லும்போது பெரும்பாலும் அது புறக்கணிக்கப்படுகிறது. அல்லது அதிகாரம் அந்த கருத்தை காலம், சூழல்களை வைத்து ஒழிச்சுடுறதுக்கு முயற்சி செய்யுது. போராட்டத்தின் பல்வேறு முனைகளில் நிற்கிறவர்களுக்கும், அரசுக்கும் இடையேயான இடைவெளி இருந்துக்கிட்டுதான் இருக்கும். அவ்விடைவெளி குறைந்திருக்குன்னா அரசு தன் குணத்தை மாத்திக்கிட்டிருக்கு அப்படின்னு பொருள். ஆனால் அரசு எவ்வளவுதான் நவீனமயப்பட்டுவிட்டாலும் தன்னுடைய ஒடுக்குமுறைப் பண்பை, அதன் அடிப்படைப் பண்பை மாற்றிக்கொண்டதாக நான் கருதவில்லை. ஆபத்தற்ற கருத்துகளைச் சொல்லும்போது அரசின் முகம் தெரிவதில்லை. ஆனால் தனது கருத்தில் உறுதியாக இருக்கும்போதும், ஒரு கருத்தை தீவிரமாக முன்னெடுக்கும்போதும் நிச்சயம் ஒடுக்குமுறை என்பது வரத்தான் செய்யும். அதனால் முன்பிருந்த இடைவெளி குறைந்துவிட்டது என நான் கருதுவதற்கு எந்த நியாயமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

 

கேள்வி : எல்லோரும் போராடுகிறார்கள். எல்லாவற்றிற்காகவும்போராடுகிறார்கள். போராட்டத்தின் மனசாட்சி என்பது உயிரோடு இருக்கிறதா?

 

பதில் : நல்ல கேள்வி. எல்லோரும் போராடுகிறார்கள். எல்லாவற்றிற்காகவும் போராடுகிறார்கள். போராடுகிறவர்கள் உண்மையிலேயே என்ன நோக்கத்தைச் சொல்லி அதற்காகப் போராடுகிறோம்கிறத, அதில் தெளிவா இருக்காங்களா இல்லையா என்பதல்ல பிரச்னை. உண்மையா நிற்கிறாங்களா இல்லையா என்பதுதான் பிரச்னை. தமிழ் ஈழப் பிரச்னையையே எடுத்துக் கொள்வோம். இதில் அரசியல் கட்சிகள் ஒரு வகையில் வற்புறுத்தப்பட்டிருக்கின்றன. போராடித்தான் ஆகணும் என்கிற வற்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றன. இந்த குறிக்கோளின் நியாயம், இதற்கு எத்தனை அரசியல் கட்சிகள் உண்மையாக இருக்கிறார்கள்? கடந்த காலங்கள் நமக்கு கசப்பான பாடங்களைத் தருகின்றன.

2009 மே மாதத்தில் முதலமைச்சரே உண்ணாநோன்பிருந்தார். உண்ணாநோன்பிருந்த இரண்டு மணிநேரத்தில் தாக்குதல் நிறுத்தப்பட்டுவிட்டது என்று சொல்லிவிட்டு உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார். நாடெங்கிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மூன்று மணிநேரத்தில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். அதற்குப் பின்னர் ஓரிரு நாள் கழித்து கேட்கிறார்கள். இன்னும் தாக்குதல் நீடிக்கிறதே? அதற்கு அவர் "மழை விட்டுவிட்டது. தூவானம்தான் உள்ளது" என்றார். இப்போது சொல்கிறார்: 'அன்று எனக்கு மன்மோகனும், சோனியாவும் தாக்குதல் நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள்'. அப்படின்னா இவர் போராட்டத்துக்கு எந்த அளவுக்கு உண்மையாக இருந்தார்? . இது ஒரு உதாரணம் அவ்வளவுதான். போராடவேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. ஆனால் உண்மையாக இல்லை. திமுக மட்டும்தான் இப்படி என்றில்லை. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கொள்கைகளுக்கும், மக்களுக்கும் உண்மையாக இல்லை.

 

கேள்வி : ஈழ மக்களுக்கு ஆதரவான லயோலா கல்லூரி மாணவர்கள்முன்னெடுத்த போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்திருக்கின்றன.இந்தப் போராட்டத்திற்கும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஏற்பட்டமாணவர் எழுச்சிக்கும் இடையே ஒற்றுமை, வேறுமை என்ன?

 

பதில்: 1965 ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில் நானும் ஒருவன். அப்போது இந்தி எதிர்ப்பு என்கிற ஒன்று பற்றிக்கொள்ளத்தக்க ஒரு கருத்தாக இருந்தது. அதனால் அந்தப் போராட்டம்கிறது ஒரு பருண்மையான போராட்டமாக, material force ஆக வெளிவந்தது. அந்தளவுக்கு பிரச்சாரங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இந்தி எதிர்ப்புங்கிறதில திமுகவின் பங்கை குறைச்சு மதிப்பிடலை. அதுபோக மாணவர் மத்தியில போராடனும்கிற உணர்வும் வந்துவிட்டது. ஆனால் பக்தவத்சலம் அரசின் ஒடுக்குமுறையும், முரட்டுத்தனமான அணுகுமுறையும் எதிர்ப்பை கடுமையாக்கிட்டுது. போராட்டம் தீவிரமடைந்தது. எல்லா திசைகளிலும் பரவிவிட்டது. வெகுமக்கள் பங்கேற்கிற நிலையும் வந்தது. ஈழப்போராட்டத்தில் தமிழக மக்களுக்கு 1983 களில் போராடவேண்டும் என்னும் மனநிலை இருந்தது. அம்மனநிலையை நம் அரசியல் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக முனை மழுங்கச் செய்துவிட்டார்கள். மடைமாற்றமும் செய்தார்கள்.

 இந்தச் சூழலில் லயோலா கல்லூரி மாணவர்களின் இப்போராட்டம் இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சியைத் தோற்றுவித்திருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னர் மாணவர் மத்தியில் நடத்தப்பட்ட பிரச்சாரம் போன்று இன்றைக்கு அவ்வாறு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. முன்னெடுப்பாக கருத்துப் பரிமாற்றம் நடந்ததா என்பதும் என் கேள்வி. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நாங்கள் நிறைய பிரச்சாரங்கள் செய்தோம், கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். அதனால் கல்லூரியின் ஒவ்வொரு புள்ளியும் பற்றி எரியத்தக்கதாயிருந்தது. போராட்டத்தில் சில ரகசியத்தன்மைகள் இருந்தது என்பதும் உண்மை. முக்கிய வேறுபாடாக நான் என்ன பார்க்கிறேன்னா, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற சில மாணவத் தலைவர்கள் இதை தங்களுடைய அரசியல் நிர்மாணத்திற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தினார்கள். இது எனக்குத் தெரியும். ஆனால் இப்போது மாணவர்களுக்கு அவ்விதமான வேட்கைகள் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது மிகவும் வரவேற்கத்தக்கது. இப்போராட்டத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆதாயம் தேடாமல் மாணவர்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படிச் செய்வார்களானால் வலிமையான மாணவர் அமைப்பு உருவாகும் அப்படின்னு நான் நினைக்கிறேன். அதுதான் இன்றைக்கு தேவை.

 

கேள்வி : இப்போராட்டத்திற்கு ஊடக வெளிச்சம் நிறைய கிடைச்சிருக்கு.அவ்வெளிச்சத்திற்கு மத்தியில் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதிற்குத் தேவைப்படும் ரகசியத்தன்மை தொடர்ந்து பேணப்பட முடியும் என நினைக்கிறீர்களா?

 

பதில் : போராட்டத்தின் அனுபவம் மாணவர்களுக்குக் கற்றுத்தரும். இப்போதைய அவர்களது ரகசியம்னு சொல்வதுகூட நிர்வாகத்திற்குத் தெரியாமல் போராட்டத்தைக் கொண்டு செல்வது. ஆனால் அதைவிட மோசமானது அரசு. போராட்டம் வெளிப்படையாக இருக்கணும்னு சொல்றோம். ஆனால் போராட்டத்தின் எல்லாத் தன்மைகளையும் சொல்லிக் கொண்டிருந்தால் எதிரி முந்துகிறார்கள். ஒரு நாணயமான எதிராளியை வைத்துக்கொண்டு நாம் போராடவில்லை. இதை ஒடுக்குவதற்கு கை தேர்ந்த ஒரு இயந்திரம் இதற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. போராட்டத்தின் கோட்பாடுகளை வகுக்கிறதில சில நுட்பங்கள் பின்பற்றப்படவேண்டும் அப்படின்னு நினைக்கிறேன். அது வெளிப்படையாக இருந்தாலும் எளிதில் ஒடுக்கப்படமுடியாத ஒன்றாகவும் அமைவதற்கான சில கூறுகளை அது கொண்டிருக்கும். உலகம் முழுவதும் இன்று போராட்டங்கள் ஊடகங்களின் வெளிச்சத்தில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரபுப் போராட்டங்களிலும் ஊடகங்கள் மிகப்பெரும் பங்காற்றின. போராட்டக்காரர்களுக்கும் திட்டங்கள் இருந்தன. அடுத்து செயல்படுவதற்கான ஆயத்தங்கள் இருந்தன. போராட்டத்தை நடத்தினார்கள். அதுபோல மாணவர்களுக்கு ஒரு திட்டமும், ஆயத்தங்களும் இருக்கவேண்டிய அதே சமயத்தில் ரொம்ப ரொம்ப முக்கியமானது தங்கள் பெற்றோர்களையும், பொதுமக்களையும் போராட்டத்தை ஏற்கச் செய்வது. இந்தப் போராட்டம் நியாயமானதுதான் என உணர்த்துவது. போராட்டம் அறநெறி தழுவிய ஒன்றாகத்தான் இருக்கணும். போராட்டத்தில் வன்முறையை சூழல் தடுக்கமுடியாமல் ஏற்படுத்திவிடும். ஆனால் வெகுமக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பை வன்முறை தடுத்துவிடுகிறது.

 

கேள்வி : உண்ணாவிரதம் என்ற போராட்ட வடிவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

பதில் : அதுகுறித்து முரண்பட்ட நிலைப்பாடு எனக்கு பெரும்பாலும் இருந்ததில்லை. ஆயுதப்போராட்டத்தை நம்பின காலகட்டத்தில்கூட ஆயுதம் தாங்கிட்டுதான் போராடனும் அப்படின்னு உட்காருவதைவிட ஒன்றைத் தொடங்குவதற்கு எளிதான ஒரு போராட்டவடிவம் உண்ணாநோன்பு. அதில் உண்மையாக இருக்கவேண்டும் என்பது முக்கியமான விஷயம். அப்புறம் அது வெகு மக்களை பங்கேற்கச் செய்கிறது.

 

கேள்வி : இலங்கை ராணுவமய, ராஜபக்சமய நெருக்கடிகளில் சிக்கித்தவிக்கிறது. எல்லா துறைகளிலும் இராணுவம் தனது செல்வாக்கைச்செலுத்துகிறது. அத்தகைய நெருக்கடியான சூழலில்கூட அங்கு பல்கலை.ஆசிரியர் கூட்டமைப்பு பல போராட்டங்களை முன்னெடுத்து செய்யுது. உங்கள்காலகட்டத்தோடு ஒப்பிடும்போது இன்றைய பல்கலை. ஆசிரியர்களின்போராட்டங்கள் சம்பளத்திற்கானது என்பதோடு குறுகிப் போய்விட்டனவே.

 

பதில் : இப்போக்கு ஆசிரியர்கள் மத்தியில் வெகுகாலமாக நீடித்திருக்கு. இன்று நேற்று ஏற்பட்டதல்ல. நாங்கள் போராடிய அந்தக் காலக்கட்டத்தில்கூட குறிப்பிட்ட ஆசிரியர்களின் கண்ணோட்டமானது வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு, பணிப்பாதுகாப்பு இதற்குமேல் போகக்கூடாதுன்னு நினைத்தார்கள். இன்னும் சிலர் தாங்கள் என்ன தவறு செய்தாலும் ஆசிரியர் சங்கங்கள் தங்களைக் காப்பாற்றவேண்டும் என்பதாகவே இருந்தது. இவற்றிற்கு மாறான கருத்துகளை நாங்கள் அப்போதே முன்வைத்தோம். இது ஆசிரியர்களிடம் மட்டுமல்ல. பொருளாதாரவாதம் என்பது கட்டமைக்கப்பட்ட தொழிற்சங்கங்களில் கணிசமான பங்கை வகிக்குது. இதைக்கடந்து செல்வதற்குரியவர்கள் கொஞ்சம்பேர்தான் இருப்பார்கள். ஈழத்தில் அம்மக்கள் சந்தித்த பிரச்னைகளும், அங்குள்ள அறிவுசார் மக்கள் எதிர்கொண்ட பிரச்னைகளும் நம்முடைய பிரச்னைகளிலிருந்து பண்பார்ந்த வகையில் வேறுபட்டது. அதனால் இதுகுறித்து அவர்கள் தீவிரம் கொள்வதிலும் , போராட்டத்தை முன்னெடுத்து செல்வதிலும் எனக்கு வியப்பு ஒன்றுமில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டின் இயலாமையை நியாயப்படுத்துவதற்கு நான் தயாரில்லை.

 

கேள்வி : லயோலா கல்லூரி நிர்வாகமும், திருச்சி தூயவளனார் கல்லூரிநிர்வாகமும் மாணவர் போராட்டங்களை வெளிப்படையாக ஆதரித்தன. இதைநீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

பதில் : அவர்களுக்கு ஒரு வகையான விடுதலைத் தத்துவம் போய்க்கொண்டிருக்கிறது. அக்கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில், அவர்கள் மதம் சார்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் மனித விடுதலை அவசியம் என்ற கருத்து அவர்கள் கூடவே வந்துகொண்டிருக்கிறது. ஆசிரியர்கள் மத்தியில் அந்த உரையாடல் இருக்கிறது. மற்ற இடங்களில் வேலை, சம்பளம். கற்பித்தல் என்பது ஒரு commodity, ஒரு பொருளை விற்பனை செய்வது என்று பெரும்பாலான ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஒதுங்கி இருப்பது, தனக்கு எதுவும் நேர்ந்துவிடுமோ என்று நினைப்பது. விடுதலைப்போராட்டக் காலக்கட்டத்திலும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் பேராசிரியர்கள் பலர் போராட முன்வந்தார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நான் படித்த மதுரை தியாகராசர் கல்லூரியில் பேராசிரியர் இலக்குவனார் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தார்கள். இந்த லயோலா கல்லூரி ஆசிரியர்களும், தூய வளனார் கல்லூரி ஆசிரியர்களும் ஆசிரியர்கள் மத்தியில் இயக்கங்களை முன்னெடுக்கணும், . மாணவர்களும் ஆசிரியர்களுக்குக் கற்பிக்கவேண்டும்னு நான் நினைக்கிறேன்.

 

கேள்வி : ஈழப்பிரச்னை தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களின் அறிவுஜீவிகள்மத்தியில் கவனம் பெறாமல் போனதற்கான காரணம் என்ன?

 

பதில் : ஒதுங்கியிருத்தல் என்னும் நோய் தமிழக ஆசிரியர்களைப்போலவே இந்தியத்துணைக் கண்டத்து அறிவுப்புலத்தையும் பாதிச்சிருக்கு அப்படின்னு நான் நினைக்கிறேன். இரண்டாவது ஒரு தேசிய இனத்துக்கான விடுதலைப்போராட்டத்தை அவர்களில் பலர் புரிந்துகொள்ளவில்லை. தேசியம் என்பது ஒரு கற்பிதம். அதற்காகப் போராடுவது குறுகிய நலம் சார்ந்தது அப்படின்னு நினைக்கிறாங்க. இதை ஒரு கற்பிதம்னு சொல்லும்போது உண்மையிலேயே கற்பிதமான ஒரு பெருந்தேசியத்தைத்தான் அவர்கள் வழிமொழிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் தேசியம் ஒரு கற்பிதம்னா இந்திய தேசியத்திற்கு என்ன ஒரு வரலாற்று ஆதாரம் இருக்கு, நியாயம் இருக்கு. அது வன்முறையினால் கட்டப்பட்டிருக்கு. ஈழப் போராட்டத்தை விடுங்கள். இந்தியத்துணைக்கண்டத்திலேயே மணிப்பூரில், நாகலாந்தில், காஷ்மீரில் நடைபெறக்கூடியப் போராட்டங்களை இந்தியத்துணைக் கண்டத்தின் பிறதேசிய இன அறிவாளிகள், அரசியல்வாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்களுக்கு இதுகுறித்த ஆழ்ந்த பரிசீலனை உண்டா? நியாயமான கண்னோட்டம் உண்டா? இரண்டும் கிடையாது. அப்படி இருக்கும்போது இன்னொரு நாட்டில் நடக்கக்கூடிய இன ஒடுக்கல்முறை எப்படி புரியப்போகுது?

 

கேள்வி : 2009, மே மாதத்திற்குப் பிறகு ஈழமக்களின் வாழ்வாதாரம் மிகமோசமாக சிதைக்கப்பட்டிருக்கு. இறுதி இன அழிப்புப் போருக்குப் பிறகு அங்குசென்றுவந்த தமிழக அறிவுஜீவிகள் சிலர் ஈழம் என்பதை அம்மக்கள்கேட்கவில்லை, அம்மக்களை வாழவிடுங்கள், ஈழம் என்ற கருத்தைதிணிக்காதீர்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள். அது பற்றி. . .

 

பதில் : அதாவது ஆடு நனைகிறதே அப்படிங்கிற கவலைதான் இவர்களுக்கு. அதைப் பற்றி நாங்கள் பேசலை. தமிழ்நாட்டில் ஈழம் சாராத யாரும் பேசலை. ஈழம் சார்ந்த புகலிட மக்கள் பேசுறாங்க. அதுக்கு என்ன சொல்லப்போறீங்க. அவங்க ஏதாவது நலன் கருதி இதைப் பற்றிப் பேசலை. பாதிக்கப்பட்ட தங்களது சொந்தங்களின் துயர்களைப் பார்த்துவிட்டு அவர்கள் பேசுறாங்க. இரண்டாவது அந்த மக்களிடம் போய் நீங்கள் போராட வாங்கள் அப்படின்னு சொல்லலை. அவர்களால் முடியாதுன்னு நமக்கு தெரியும். அவர்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். அவர்கள் இப்போது அதைபற்றி பேசவில்லை என்பதும் உண்மை. ’இன்றைக்கு தனி ஈழம் கேட்பவர்கள் அங்கு யாரும் இல்லை’ என்கிற ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது. இதைப்போல ஒரு கொடூரமான கருத்து வெளிப்பாட்ட நான் பார்க்கல. அவர்கள் ஈழம் இப்போது கேட்கவில்லை. ஒத்துக்கறேன். அவர்கள் கேட்டபோது நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்கள் போராடின சமயத்தில் அதை நீங்கள் நியாயம்னு சொல்லியிருக்கனும்ல. அப்பொழுதும் அதைத்தான் சொன்னீங்க. இப்பொழுதும் அதைத்தான் சொல்றீங்க. அப்ப ஈழம் வந்துவிடக்கூடாதுன்னு அவர்கள் மிகக் கவனமா இருக்காங்க. ஈழமக்கள் இப்போது தனி ஈழம் கேட்கலைங்கிறதுனால முன்பு கேட்டு போராடியதெல்லாம் பொய்யாகிவிடுமா? அவர்களது கண்ணீருக்கும், இரத்தத்திற்கும் இவர்கள் என்ன மரியாதை வைத்திருக்கிறார்கள்? குடும்பத்துல பெண்கள் சந்தோஷமாகத்தான் இருக்காங்க, அப்புறம் எதுக்கு பெண்ணுரிமை பற்றிப் பேசுறீங்க அப்படின்னு சொல்வதுபோல இருக்கு.

 

கேள்வி : நீர்த்துப்போன அமெரிக்கத் தீர்மானம் பற்றி. .

 

பதில் : இன்றைய காலகட்டத்தில் அங்கு ஒரு படுகொலை நடந்திருக்கு அப்படின்னு சொல்வதற்குரிய ஒரு கருத்து முளை விடுகிறது. அமெரிக்காவின், ஐரோப்பிய நாடுகளின் தனிப்பட்ட நலன்கள் இருக்கு. இந்தியாவும் அதை முன்னெடுத்துச் செல்லணும் அப்படின்னு சொல்லும்போது அது அப்படி எடுத்து செய்யும் அப்படிங்கிற நம்பிக்கையில் அல்ல. இது மூலமாக இந்திய வெகுமக்களுக்கு நாம் இதை உணர்த்திக்கொண்டிருக்கிறோம். இந்திய அரசு அதைச் செய்யத் தவறும்பட்சத்தில் அது அம்பலப்பட்டு நிற்கும். இரண்டாவது இந்தப்போராட்டக் காலக்கட்டத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னான்னா உலக அளவில் நமக்கு ஆதரவாக ஒருகுரலும் இல்லாமப் போச்சு. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வெகுமக்கள் மத்தியில் புலம்பெயர் மக்கள் கருத்துகளைத் திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கத்தீர்மானத்தின் போதாமையை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். புலம்பெயர் தமிழர்களும் இதைச் செய்வார்கள்னு நான் நம்புறேன். ஏற்கனவே நாம் தனிமைப்பட்டு நிற்கிறோம். எனவே நாம் இத்தீர்மானத்தை புறக்கணிக்கலாகாது. புறக்கணிக்கக்கூடாது என்பதை முற்றுமுழுதான கருத்தாக நான் வைக்கலை. அதை விமர்சிக்கனும். அதை வாய்ப்பாகக் கருதணும்.

 

கேள்வி : கியூபா, வெனிசூவேலா போன்ற சோசலிச அரசுகள் கூட அமெரிக்கஎதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்தை வைத்துக்கொண்டு இலங்கைக்கு ஆதரவானநிலைப்பாட்டை எடுக்கிறார்களே!

 

பதில் : ஈழப்பிரச்னையை விட்டுடுங்க. அரபு நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களின்போது கடாபியின் லிபியாவை ஆதரித்தார்கள். ஏன்னா அவர் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். துனிசியாவின் ஆட்சியாளரை ஆதரித்தார்கள். அரபு நாடுகளில் நடைபெறும் எல்லாப் போராட்டங்களையும் அமெரிக்கா தூண்டுகிறது என்றார்கள். அமெரிக்க தூண்டுதல் இருக்கிறது. ஆனால் மக்கள் பங்கேற்கிறார்கள். வலதுசாரிகள், இடதுசாரிகள், தொழிலாளி, முதலாளி வர்க்கங்கள், நாத்திகர்கள், ஆத்திகர்கள் இப்படி எல்லோரும் பங்கேற்கிறார்கள். ஊசிப்போன அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பைத்தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மகிந்த ராஜபக்சவை அமெரிக்க எதிர்ப்பாளன் அப்படின்னு எந்த மனிதனாவது முடிவு செய்வானா? அமெரிக்காவிலிருந்து எவ்வளவு கூடுதலான வசதிகளைப் பெற்றுக்கொண்டு இப்போராட்டங்களை அவர் முறியடித்தார். தமிழ்த்தேசியப் போராட்டங்களை விடுங்கள். நாளைக்கே சேகுவேரா மாதிரி ஒரு இயக்கம் சிங்களவர் மத்தியிலிருந்து புறப்பட்டு வந்தா ராஜபக்ச என்னும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புவாதி என்ன செய்வார்? அதை ஒடுக்குறத தவிர வேற எதையும் செய்யமாட்டார். அதனால் இந்த சோசலிச நாடுகளின் முடிவை முட்டாள்தனம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்லமுடியும்?

 

கேள்வி : மே 2009 க்கு முன்பும், பின்பும் ஈழமக்கள் சொல்லாணா துன்பங்களைஅனுபவித்துவிட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் தமிழக மீனவர்கள் 500 க்கும்மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எல்லா அவலங்களையும்இந்திய அரசு மௌனமாக வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறது. ராஜீவ்காந்தி கொலை மட்டும்தான் இதற்கான ஒரே காரணமாக இருக்கமுடியுமா?

 

பதில் : இல்லை. ராஜீவ்காந்தி கொலை என்பது ஒரு சாக்கு. Excuse. அதில் சில வன்மங்கள் இருக்கலாம். அதை நான் மறுக்கலை. சிந்தனை தெளிவில்லாத சில காங்கிரஸ்காரர்களுக்கு ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள் என்ற ஒன்றே போதுமானது. ஆனால் இலங்கையில் இந்தியப் பெருமுதலாளிகளின் நலன்கள் கொட்டிக்கிடக்குது. இந்தப்போராட்டங்கள் வரும்போது அதற்கு ஆதரவு தரக்கூடாதுன்னு சொல்றநிலையில் டாடாவும், ரிலையன்சும் இருக்கிறார்கள். இன்றைக்கு ஒரு செய்தி பார்த்தேன். சீனாவுடன் நம்முடைய உறவுகளை வலுப்படுத்தவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்லலை. டாடா சொல்றான். டாடாவுக்கு அவர்களின் பொருளாதார நலன்கள்தான் தேசபக்தி.

இலங்கை என்பது ஒரு சின்ன தீவுதான். ஆனால் அதன் வரம்பற்ற வளங்கள் இன்னும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே இவர்கள் நாளைக்கு சிங்கள வெகுமக்களுக்கு எதிராக நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்போ காங்கிரஸ்ங்கிறத நாம என்னவாப் பார்க்கிறோம்? தன்னுடைய நாட்டு பெருமுதலாளிகளுக்கும், வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கும் வலிமை வாய்ந்த ஒரு தரகு என்பதைத்தவிர காங்கிரஸுக்கு வேற எந்த அரசியல் அந்தஸ்தும் கிடையாது. அந்த வேலையைதான் செய்துகொண்டிருக்கிறது. அதற்குதான் மதச்சார்பின்மை, மனிதநேயம் போன்ற பெரும் சொல்லாடல்கள், உள்ளீடற்ற சொல்லாடல்கள் அதற்கு பயன்பட்டுக்கொண்டிருக்கு. ஆனால் உள்ளார்ந்த வகையில் இந்திய நலன்கள் மட்டுமில்லை ஏகாதிபத்திய நலன்களும் இந்திய நலன்கள் சார்ந்தவை. இந்தியப் பெருமுதலாளிகளின் நலன்கள் சார்ந்தவை. இவையும் சேர்ந்துதான் இதற்குக்காரணம். நான் சொன்னதற்கு ஏராளமான சான்றுகளை என்னால் காட்டமுடியும். அதுபற்றி நிறையப் படித்திருக்கிறேன்.

 

கேள்வி : இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் 'நாங்கள் தமிழர்கள் இல்லை'என்னும் மனோபாவம் நிலவுவதாக கூறப்படுகிறதே?

 

பதில் : இந்த மனோபாவம் ஒரு வகையில் காலம்காலமாக ஊட்டி வளர்க்கப்பட்ட ஒன்றுன்னு நான் நினைக்கிறேன். கீழக்கரைதான் எனக்கு சொந்த ஊர். தலைமன்னாரிலிருந்து 18 கிலோமீட்டர். அங்குள்ள முஸ்லீம்களின் நடை உடை பாவனைகளெல்லாம் கொழும்பு முஸ்லீம்களின் நடை, உடை பாவனைகளைச் சார்ந்தது. அங்கு உள்ள சொற்களைக்கூட இங்குப் பயன்படுத்துவாங்க. ஒரு காலத்தில் கீழக்கரையை சின்னக் கொழும்புன்னு சொல்வாங்க. நான் சிறுவனாக இருக்கும்போதும், என்னுடைய பெற்றோருக்கு சொன்னதாகச் சொல்லப்பட்ட செய்தியாக நான் ஆராய்ந்து பார்க்கும்போதும் நாம முஸ்லீம்கள், அவர்கள் தம்பளாதிகள் அப்படின்னாங்க. தம்பளாதிகள்னா தமிழர்கள்னு அர்த்தம். இந்த விசயங்கள் ஊட்டி வளர்க்கப்படுது. அங்க மார்க்கத்துறையில் படித்த ஆலிம்கள், முல்லாக்கள் எல்லாம் அரபுச் சொற்களை தூய அதன் ஓசைச் சார்ந்த வடிவத்தோடு காப்பாற்றவேண்டும் என நினைத்தார்கள். தமிழ்மக்கள் மத்தியில் அந்தச் சொற்கள் சிதைஞ்சுதான் போயிருக்கு. முகமது இப்ராஹிம் சாஹிப்பை மமராம்சா என்பார்கள். ஷேகு இப்ராஹிம் சாஹிப்பை சாரம்சா என்று உச்சரிப்பார்கள். தமிழ் உதடுகள் இச்சொற்களை தெளிவாக உச்சரிக்க முடியாது. அரபுப் பெயர்களைத்தான் சூட்டணும்னு கட்டாயப்படுத்தினாங்க. ஒரு காலத்தில் அப்படி இல்லை. முத்துதம்பின்னு பெயர் வைத்தார்கள். மரைக்காயர்னு பெயர் வைத்தார்கள். ஆனா இஸ்லாமிய கட்டமைப்புங்கறத செய்தார்கள். ஆலிம்களும், முல்லாக்களும் இதைச் செய்தார்கள். அது இலங்கையில் நடைபெற்றது. அதனுடைய தாக்கம்தான் எங்க ஊரில் நான் பார்த்தது.

ஏன் இலங்கையில் நடைபெற்றதுன்னு சொன்னா நாங்க தொடக்கத்திலிருந்தே எங்களை தமிழர்களாகக் கருதிக்கொள்ளவில்லை அப்படின்னு சொல்றாங்க. ஆனால் தமிழர்களாகக் கருதி தமிழ் மக்களோடு ஐக்கியப்படக்கூடாதுங்கறதுல இரண்டு சக்திகள் தெளிவாக இருந்தாங்க. ஒன்று கொழும்பை மையமாகக்கொண்டு கிழக்கிலங்கையை சார்ந்திருந்த முஸ்லீம்கள். அவர்கள் பெரும்பாலும் வணிகர்கள். கொழும்பை மையமாகக் கொண்ட முஸ்லீம்களில் பெரும்பாலோர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் இல்லை. காயல்பட்டினத்தையும், கீழக்கரையையும் மையமாகக் கொண்டவர்கள். இந்த சூழ்நிலை இலங்கையில் வலிமை பெற்றது.

நான் இரண்டு சக்திகளைச் சொன்னேன். இதில் இரண்டாவது சக்தி தமிழ் ஆதிக்க சக்திகள். அவர்கள் நாங்கள் இஸ்லாம் மாணவர்கள், நாங்க தம்பளவன் இல்லை அப்படின்னாங்க. இவங்களோ நாங்கள் தமிழர்கள், அவங்க வேற அப்படின்னாங்க. இப்படி இரண்டு பேரும் வளர்த்தார்கள். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களையும், முஸ்லீம்களையும் குழாய்ப்புட்டில் இருக்கும் புட்டும் தேங்காயும் போல இருப்பார்கள் அப்படின்னு சொல்வாங்க. ஒருபக்கம் தமிழர் கிராமங்கள், அதையடுத்து முஸ்லீம் கிராமங்கள் இப்படி தொடர்ச்சியாக இருக்கும். அவர்கள் நாட்டுப்புறப்பாடல்களையும், மற்ற இலக்கியங்களையும் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். அதைக் கெடுத்ததில் இருவருக்கும் பங்குண்டு. நான் கனடாவுக்குப் போயிருந்தபோது கூட ஒரு நிகழ்ச்சியில் இதைத் தெரிவித்திருக்கிறேன்.

முஸ்லீம்களை ஒரு தனித்துவமிக்க சக்தியாக காப்பாற்றி வைக்கணும்கிறதுல தமிழ் முஸ்லீம் வணிக‌ சக்திகளுக்கு, அதிகார வர்க்கத்தினருக்கு கடுமையான முனைப்பு இருந்தது. இவர்களைக்காட்டி அதிகாரவர்க்கத்திற்கான ஆதாயங்களை அடைவது. நீதிபதியாவது, எம்.பியாவது, அப்புறம் வணிக நோக்கில் அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொள்வது. இப்படியாக முஸ்லீம் ஆதிக்க சக்திகளாலும், வெள்ளாள ஆதிக்க சக்திகளாலும் ஒரு திருகல்நிலை இருந்தது. ஆனால் இதற்கும் மேல் அவர்களது ஒற்றுமை வலுவாக இருந்தது. போராட்டம் நடைபெற்ற அந்த தொடக்கக் காலங்களில் முஸ்லீம்கள் பங்களிப்புகள் செய்திருக்கிறார்கள். யாராக இருந்தாலும் ஒரு செய்தியை சொல்லாமலேயே போய்விடுகிறார்கள்.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் அண்ணன் அ.மனோகர் கேம்பிரிட்ஜ் பல்கலை. க்கு இலங்கையின் தேசிய முரண்பாடுகள் பற்றி ஒரு ஆய்வை சமர்ப்பித்திருக்கிறார். அதில் 1985-ல் பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி இஸ்ரேலின் மொஸாத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். ஒப்பந்தம் செய்து கொண்டதற்குப் பிறகு தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்குமான வேறுபாடு தீவிரமடைகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த உண்மையை பேசமாட்டேங்கிறாங்க. தமிழர்களும் காரணமாக இருந்திருப்பார்கள். முஸ்லீம்களும் காரணமாக இருந்திருக்கிறார்கள். துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தேவையற்றவை. காத்தான்குடி சம்பவத்தை புலிகள் ஒப்புக்கொள்ளவேயில்லை. யாழ்ப்பாணத்தைவிட்டு முஸ்லீம்களை வெளியேற்றியது தவறு என்று புலிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். புலிகள் அதற்காக மன்னிப்பும் கேட்டார்கள். இங்கிருக்கும் அறிவுஜீவிகள் சிலர் புலிகள் இன்னமும் மன்னிப்பு கேட்கவேயில்லை என்கிறார்கள்.

2003 க்குப் பின்னான காலத்தில் முஸ்லீம்கள் திரும்பிவரலாம் என்றும் புலிகள் சொன்னார்கள். மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என தலைவர் பிரபாகரனைப் பார்த்து கேட்டேன். நாங்கள் இனி செய்வதற்கு என்ன இருக்கிறது. நாங்க வாங்கன்னு சொல்லிட்டோம். அதை செய்யவேண்டிய பொறுப்பு புனர்நிர்மாண அமைச்சர் ராவூஃப். அவரைக் கேட்கச் சொல்லுங்கள் என்றார். பிற‌கு ஏன் அவங்க அதைச் செய்யலை. ஏன்னா இதைச் சொல்லியே முஸ்லீம்களை தமிழர்களிடமிருந்து பிரிச்சு வைப்பதுதான் நோக்கமாக இருந்தது. எனவே உண்மையான reconciliation ஏற்படுத்தனும்கிற நோக்கம், மீண்டும் இவங்களை இணைக்கணும்கற நோக்கம் சிங்களப்பேரினவாதிகளுக்கும் கிடையாது. இஸ்லாமியத் தலைவர்களுக்கும் கிடையாது.

 

நன்றி : குமுதம், தீராநதி, ஏப்ரல்-2013.

 

- செ.சண்முகசுந்தரம்

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23506

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.