Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருத்துவ ஊர்தி ஓட்டுநர் ஃபிரான்ஸிஸ் ஹாரிசன்

Featured Replies

ஃபிரான்ஸிஸ் ஹாரிசன்

தமிழில்: அகிலன் எத்திராஜன்

ஓவியங்கள்: ரோஹிணி மணி

கூடாரத்துக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் கால் துருத்திக்கொண்டிருப்பதை அவன் ஓரக் கண்ணால் பார்த்தான். அதில் அசைவு ஏதும் தெரியவில்லை. எனவே அவன் அதற்கு அதிகக் கவனம் கொடுக்கவில்லை. தற்காலிகத் தூக்குப் படுக்கைகளில் உயிரோடிருப்பவர்களை இழுத்துப் போட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் அவன் மும்முரமாயிருந்தான். எங்கு பார்த்தாலும் கதறலும், குழப்பமுமாய் இருந்தது. ஆனால் சாவைப் பார்த்துப் பார்த்து உணர்வு மரத்துப்போய் அவன் ஒரு ரோபோ போல இயங்கிக்கொண்டிருந்தான். அவன்கூட, அங்கே எளிதாக அப்படி விழுந்து கிடக்கக்கூடும் என்ற எண்ணம் பணியினூடே அவனுக்கு வந்து போனது. பன்முகத் தாக்குதலுக்கான ஏவுகணைப் பீரங்கிகளுக்குப் பாகுபடுத்திப் பார்க்கும் திறனில்லை. அவன் படுத்துறங்குகிற கொட்டகையோ எதிரிலிருந்த வயற்காட்டில் இருந்தது.

ambulance-01.jpg

கோடு போட்ட இளஞ்சிவப்புச் சட்டையும், காக்கிக் கால் சராயும், வெண்ணிறப் பைம்மிதியடிகளும் அணிந்து காட்சியளித்த உதயன், தான் ஒரு மருத்துவ ஊர்தி ஓட்டியாகப் பணிபுரிய நேருமென்று ஒரு நாளும் எதிர்பார்த்ததில்லை. அவனுடைய உண்மைப் பெயரை அவன் என்னிடம் சொன்னதேயில்லை. யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழக மாணவனாக இருந்தபொழுது தற்காப்புக்காக அரசியலில் அதீத ஈடுபாடு காட்ட வேண்டி வந்ததாக மட்டுமே அவன் என்னிடம் கூறியிருந்தான். தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார எல்லைக்குள் தப்பி வந்துவிட்ட அவன், ஆரம்பக் காலத்தில் மென் பானங்கள் விற்றுப் பிழைப்பு நடத்திவந்தான். ஆனால் வீடிழந்து நிற்கும் நிலையில், அங்கிருந்த மக்கள் கோகா கோலா வாங்கிப் பருகுமளவுக்கு வசதியற்றவர்களாக ஆனார்கள். மேலும், தன்னுடைய ஊர்திக்கு டீசல் வாங்கக்கூட உதயனுக்கு வசதி இல்லாமல் போனது. ஒரு சில வாரங்களில், டீசலின் விலை பத்து மடங்குக்கும் மேல் எகிறியிருந்தது.

காயமடைந்திருந்த ஐம்பது பேரை அப்புறப்படுத்திய பிறகு இறந்து போனவர்களை இனம் பிரிக்க உதயன் திரும்பி வந்தான். கூடாரத்துக்குள்ளிருந்த மூதாட்டியின் உடலைத் தூக்கி வெளியே கொண்டுவந்து, சாலையின் மருங்கே விரிக்கப்பட்டிருந்த பாயில், முப்பது சடலங்களுக்குப் பக்கத்தில் கிடத்தினான். அந்த மூதாட்டிக்கு அருகாமையில் ஒரு தகரப் பெட்டி இருந்தது. அவள் யாரென்று தெரிந்துகொள்ள அதைத் திறந்து பார்த்தான். உள்ளே ஒரு குடும்ப அட்டை இருந்தது. அதில் அவள் ஐந்து குழந்தைகளுக்குத் தாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களுள் ஒருவர் ஓரிரு மாதங்களுக்கு முன் காலமாகிவிட்டிருந்ததையும் அவன் தெரிந்து கொண்டான். இன்னொருவர் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். உதயன் அந்தப் பெட்டியை அந்த மூதாட்டியின் சடலத்துக்குப் பக்கத்தில் வைத்தான். யாராவது அதைப் பார்த்து அவளுடைய பிள்ளைகளுக்குத் தகவல் சொல்லக்கூடும் என்று நம்பினான். “இப்படி ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் பல சம்பவங்கள். எங்களுக்கு நின்று நிதானித்து யோசிக்கக்கூட நேரம் இருந்ததில்லை. அப்படியிருக்க, இறந்தவர்களின் உறவினர்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து எப்படித் தகவல் சொல்லிக் கொண்டிருப்பது?” என்று அவன் வருத்தப்பட்டான். எவ்வளவோ குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர் என்ன ஆனார்கள் என்பது இறுதி வரை தெரியாமலே போய்விடும் எனும் எண்ணம் அவன் மனதைப் பீடித்திருந்தது.

‘பாதுகாப்பு மண்டலம்’ என்று அறிவிக்கப்பட்டிருந்த பகுதியில் ஜனவரி மாதத்தில் நடந்திருந்த ஒரு குண்டுவீச்சுத் தாக்குதலில் உதயனுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவனுடைய குடும்பம் காயமடைந்திருந்தது. அதன் பிறகுதான் உதயன் ஒரு மருத்துவப் பணியாளனாகச் சேவை செய்ய முன்வந்திருந்தான். அந்தக் குண்டு வீசப்பட்டிருந்தபொழுது அவன் வெளியூர் சென்றிருந்தான். ஆனால், செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அவர்களைக் காண மருத்துவமனைக்கு விரைந்தான். நண்பனின் மனைவி மிக மோசமாகக் காயமடைந்திருந்தாள். அவளுடைய தந்தையும் அவ்வாறே காயமடைந்திருந்தார். அவர்களுடைய ஒன்றரை வயதுக் குழந்தை ஒரு காலை இழந்திருந்தது. அது உதயனுக்கு மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடிய காட்சியாக இருந்தது. ஆனால் அந்த மிகச் சிறிய மருத்துவமனை கை, கால் இழந்திருந்த மக்களால் நிரம்பி வழிகிறது என்பதை வெகு சீக்கிரத்திலேயே அவன் புரிந்துகொண்டான். அந்த மருத்துவமனையில் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தார்கள். அவர்கள் திக்குமுக்காடிக் கொண்டிருந்தார்கள். தூக்குப் படுக்கைகளில் வருவோரைத் தூக்கிப் படுக்கையில் கிடத்த, அவர்களின் காயத்தோடு ஒட்டிக் கிடக்கும் துணிகளை நீக்கித் தர, இறந்தவர்களை அப்புறப்படுத்த, என்று பல்வேறான பணிகளுக்கும் அங்கே உதவி தேவைப்பட்டது.

ambulance-02.jpg

உதயன் செய்த முதல் காரியம், மிக அவசரமாகத் தேவைப்பட்ட ரத்த தானம் செய்ததுதான். மருத்துவமனையின் தாழ்வாரமெங்கிலும், மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தனர். ஒருசிலர் தூக்குப் படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு அவசரமாக ஓடிக்கொண்டிருந்தனர். ஒருசிலர் உடல் நோவு பொறுக்கமாட்டாமல் தங்களுக்குப் பின்பல மாகச் சுவரைக் கையால் பற்றியபடி வாய்விட்டுக் கதறிக்கொண்டிருந்தனர். சின்னக் குழந்தையொன்று இரண்டு கண்களிலும் காயம்பட்டு வெண்ணிறக் காயத் துணிகளால் இரு கண்களும் மூடப்பட்டுக் கிடந்தது. அந்தக் குழந்தையை நெஞ்சோடு தழுவியபடி ஒரு பெண் பிரமை பிடித்தவளாய் உட்கார்ந்திருந்தாள். தூக்குப் படுக்கையில் கிடத்தப்பட்டு ஜன்னி வந்ததுபோல் பிதற்றிக்கொண்டிருந்த தங்கள் பெற்றோரைக் கண்ட சிறுவரும், சிறுமியரும், தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தவாறிருந்தனர். “எங்கே என் பெண்” என்று வீறிட்டவாறு தலைதெறிக்க ஓடி வந்த ஒரு பெண், தன் குழந்தையின் சடலத்தைப் பார்த்தவுடன் தாங்கொணாத துயரத்தில் அந்தச் சடலத்தின் மேல் மார்பை மோதி மோதிக் கதறிக்கொண்டிருந்தாள். அந்த அறை முழுக்க நிறைந்திருந்த துயரங்கள் அவள் மனதில் உறைக்கவேயில்லை. கை கால் துண்டிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதும், குருதி தோய்ந்த ரணக்கட்டுகளுடன் வரும் குழந்தைகளைக் கவனிப்பதும் உதயனுக்கு அன்றாட வாடிக்கையாகிப் போனது.

“முதல் ஐந்தாறு நாட்கள் அவர்களின் இழப்புகளைக் கேட்டுப் பச்சாதாபப் பட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் அழும்பொழுது அவர்களுக்காக இரங்கினேன். ஆனால், ஏழுபேரை நாங்கள் காப்பாற்ற முயன்றுகொண்டிருக்கும்பொழுது, காயமடைந்த மேலும் நூறுபேர் கொண்டு சேர்க்கப்படுவார்கள். தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளி போல நான் இருந்தேன். அந்த அழுகையும் ஓலமும் எனக்கு வெறும் ஓசைகளாகிப் போய்விட்டன. அவற்றை அலசிப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அந்த நேரத்தில் என்னுடைய உணர்ச்சிகளும், உணர்வுகளும் மழுங்கிப் போயிருந்தன. எவ்வளவு பேரை முடியுமோ அவ்வளவுபேரைக் காப்பாற்றுவதுதான் எங்களுடைய முக்கிய நோக்கமாக அப்பொழுது இருந்தது. மேலோட்டமானக் காயங்களின் ரத்தப் பெருக்கை நிறுத்தி, சிகிச்சை அளிப்பது மட்டும்தான் அப்போதைக்கு எங்களால் முடிந்திருந்தது. அவர்களுக்கு உள் காயங்கள் உண்டாகி அவற்றிலிருந்து ரத்தப்பெருக்கு இருந்தாலோ, தலைக் காயங்கள் இருந்தாலோ, வயிறு கிழிந்திருந்தாலோ, எங்களால் ஒன்றுமே செய்ய முடிந்ததில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் ஒவ்வொரு நாளும் கொண்டுவந்து அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், ஒரு நாளைக்குப் பத்திலிருந்து, பன்னிரண்டு நோயாளிகளுக்கு மட்டுமே, மருத்துவரால் அறுவைச் சிகிச்சை செய்ய முடிந்தது. ஆக, மீதமிருந்தவர்கள் இறந்துபோக வேண்டியிருந்தது.”

தன்னுடைய உணர்வுகளை அலசிப் பார்க்கக்கூட நேரமின்றிக் கிடந்தது உதயன் மட்டுமல்ல. ஒரு விமானத் தாக்குதலுக்கு அஞ்சி ஒரு உழும் இயந்திரத்தில் தன்னுடைய குடும்பத்தினரோடு தப்பியோடிக்கொண்டிருந்தார் ஒரு நபர். அவருடைய மகன் தெறிகுண்டு ஒன்றால் தாக்கப்பட்டு, அதனுடைய ரவை வயிற்றில் பாய்ந்து காயப்பட்டிருந்தான். அவனுடைய தந்தை கதறிக்கொண்டே, அவனை மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்கு முன்பாகவே அடிபட்டிருந்த அவருடைய மகன் இறந்து போயிருந்தான். அவனுடைய சாவுக்குத் துயரப்படக்கூட ஒரு கணம் அந்தத் தந்தை தாமதிக்கவில்லை. இறந்துபோன மகனை ஒரு துணியால் போர்த்தி, தன்னுடைய உழும் இயந்திரத்தில் மற்ற உடைமைகளோடு ஓர் உடைமையாய் அவன் சடலத்தையும் கிடத்தி, அவர் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார். இந்தக் காட்சியை விவரித்த உதயன் வருந்தினான், “ஏராளமான இழப்புகளைப் பார்த்துப் பார்த்து எங்கள் மனம் மரத்துப் போயிருந்தது. சுற்றிலும் மரணத்தைப் பார்த்து நின்றோம். அந்தத் தந்தைக்குக் கண்ணீர்கூட மிச்சமாக இல்லை.”

சாலையில் காணப்பட்ட உழும் இயந்திரங்களும், பார வண்டிகளும் சிதிலமான வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட உத்தரங்கள், நசுங்கிப்போன நெளி தகடுகள் மற்றும் ஜன்னல் சட்டங்கள் ஆகியவற்றை நிரப்பிச் சென்றன. கற்பனைகூடச் செய்ய முடியாத அவலமான காட்சி அது. வாழ்க்கையின் அத்தியாவசியப் பொருள்கள் போல அவை தோன்றவில்லை. மாறாக, தேவையற்றவை என்று யாரோ தூக்கிப் போட்டுவிட்ட ஓட்டை உடைசல்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தது போல் தோற்றமளித்தது. கலப்பைகளையே அதிகமாய் இழுத்துப் பழகியிருந்த செந்நிற எருதுகள், தங்களுடைய எஜமானர்களின் உலகாயத உடைமைகள் நிரம்பிய வண்டிகளைப் பழக்கமின்றி இழுத்துக்கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துகொண்டே இருந்தார்கள். நிலைமையை மேலும் சிக்கலாக்க, மழை வேறு பலமாகப் பெய்துகொண்டேயிருந்தது. ஏரிகள் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. பாதையெல்லாம் நீரில் மூழ்கியிருந்தது. உலர்ந்த உணவுக் கையிருப்பெல்லாம் வெள்ள நீரில் வீணாகியிருந்தது. நூறு மீட்டருக்கு ஒன்று வீதம் பழுதுபட்டோ அல்லது தட்டுப்பாட்டிலிருக்கும் எரிபொருள் கிடைக்காமலோ வாகனங்கள் முடங்கிக்கிடந்தன. சாலையில் மக்கள் மணிக்கணக்காகத் தேங்கிக் கிடந்தனர். போக்குவரத்து நெரிசலின் ஊடே மருத்துவ ஊர்திகள் எளிதாய்ப் போய்வர முடியவில்லை.

கிழக்குக் கரையோர கிராமங்கள் ஒவ்வொன்றாய் ராணுவத்தின் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய நிலை வந்தபோது தூக்குப் படுக்கைகளில் ரத்தநாளக் குழாய்களில் செலுத்தப்படும் மருந்து உபகரணங்களோடு கிடத்தப்பட்டிருந்த நோயாளிகளையும் இடம்பெயர்க்க வேண்டி வந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் கூண்டு உந்துகளிலோ அல்லது பார வண்டிகளிலோ, பின்புறத்தில் பொதிபோல் ஏற்றப்பட்டு குண்டும் குழியுமான பாதையில் பயணம் செய்யும் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராகினர். ஜனவரி மாதத்தில் சாலைகள் மிகுந்த ஜன நெரிசலுடன் இருந்தன. மருத்துவ ஊர்தியின் எச்சரிக்கைச் சங்கை அலறவிட்டுக்கொண்டே வாகனத்தை ஓட்டியபோதும்கூட, வெறும் பத்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துபோய் வருவதற்கு, உதயனுக்கு ஒரு நாள் முழுவதுமே ஊர்திக்குள்ளேயே அமர்ந்திருக்கும்படி ஆனது. “அந்தத் தூரத்தை நடந்து கடப்பது எவ்வளவோ விரைவாக இருந்திருக்கும்” என்று அவன் கூறுகிறான். அந்தக் கடுமையான பயணத்தைத் தாங்கும் தெம்பு இல்லாமல் நோயாளிகளில் பலரும் வழியிலேயே இறந்துவிட்டார்கள். ஆனால், அப்படியே அவர்கள் பிழைத்திருந்தாலும், புதிய மருத்துவமனையை அடைந்தவுடன் தருவதெற்கென்று மருந்துகள் எதுவும் இல்லை என்று அவனுக்கேயுரிய உறுதியான தொனியில் உதயன் கூறினான். இதையும் தகவலின் பொருட்டே அவன் கூறினான். குண்டு வீச்சு இப்பொழுது வாடிக்கையாகிப் போன நிலையில், மக்களுடைய எதிர்வினையில் நிறைய மாற்றங்கள் தென்பட்டதை உதயன் கவனித்தான்.

“எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. முன்பெல்லாம் குண்டு வீச்சு நிகழ்ந்தால், மக்கள் பதுங்கு குழியைத் தேடி ஓடி ஒளிந்துகொள்வார்கள். ஆனால் இப்பொழுது இரண்டு மீட்டர் தூரத்திற்கு அப்பால் குண்டு விழுந்திருக்கும். அதில் மக்கள் பலரும் கொல்லப்பட்டு சுற்றிலும் கிடப்பார்கள். இதற்குப் பழகிப்போன நிலையில், மக்கள் பாட்டுக்குத் தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பார்கள். யாரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடவேயில்லை. அந்த அளவிற்கு மரணத்தைப் பார்த்துவிட்டதால், குண்டு அவர்களைத் தாக்கவில்லை என்றால், தப்பித்தாயிற்று என்று விட்டேற்றியாக இருக்கும் மன நிலைக்குப் பழகிவிட்டனர்.”

ஒரு நாள், தன்னுடைய சினேகிதி வசந்தாவுடன் ஒரு பதுங்கு குழியில் உட்கார்ந்து உதயன் அரட்டையடித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஏதோ சத்தம் கேட்டது. கதவைத் தாக்கியிருந்த தெறிகுண்டுச் சிதறல் ஒன்று தரையில் இருப்பதைக் கண்டான். சுற்றிலும் பார்த்தபொழுது, அவனுடைய சினேகிதி கழுத்தில் உதிரம் கொட்டக் கிடப்பதைப் பார்த்தான். சற்று முன்னர் வேடிக்கையாகப் பேசி அரட்டையடித்துக்கொண்டிருந்த அவள் இப்பொழுது உயிருடன் இல்லை. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவளை அடக்கம் செய்ய வேண்டும் என்ற முனைப்பில், அங்கிருந்த கைவிடப்பட்ட ஒரு மறைகுழியில் அவள் சடலத்தைக் கிடத்தி, அதை மண் வாரிப்போட்டு மூடும்பொழுதுகூட அவளுடைய உடல் சூடு தணியாமல் இருந்ததை உதயனால் உணர முடிந்தது. வசந்தாவின் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அவளுடைய மரணத்துக்காகத் துயரப்படக்கூட நேரமில்லை. வேறு பாதுகாப்பான இடம் தேடி அவர்கள் இடம்பெயர வேண்டி இருந்தது.

எவ்வளவோ முறை மயிரிழையில் உதயன் தப்பிப் பிழைத்திருந்தான். அவனுடைய பெற்றோர் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்தனர். அவர்களை மீண்டும் காணத்தான் உயிருடன் இருப்போமா என்ற சந்தேகம் உதயனுக்கு வலுக்க ஆரம்பித்தது. கட்டணம் செலுத்தி செயற்கைக்கோள் தொலைபேசியை உபயோகித்துக்கொள்ளும் வசதி இருந்த தகவல் போக்குவரத்துக் கடை ஒன்றை உதயன் பார்த்தான். இந்தக் கடையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தி வந்தனர். அங்கிருந்து தன்னுடைய பெற்றோர்களுக்கு உதயன் இறுதிவிடை கொடுத்தான்.

அவன் நினைவுகூர்கிறான்: “எங்களுடைய இறுதி நாட்களை நாங்கள் நெருங்கிவிட்டோமென்று நான் அவர்களிடம் கூறினேன். அதைச் சொல்வது மிகவும் சங்கடமாக இருந்தது. ஆனாலும், தங்களுடைய வாழ்க்கையின் கடைசி நாள் அதுவாகத்தான் இருக்கப் போகிறது என்ற அச்சம் ஒவ்வொருவரிடமுமே மிகுந்திருந்தது. அதிலிருந்து மீண்டு தப்பிப் பிழைப்போம் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.”

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை, உதயன் இடம் பெயர்ந்தவாறே இருந்தான். மிகச் சிறிய கைப்பையில் இரண்டு சட்டைகளை மட்டுமே வைத்திருந்தான். ஆஸ்திரேலியாவில், மக்கள் ஒரு நாள் பயணத்துக்குத் துணிமணிகளை எடுத்துச் செல்ல எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்பொழுது அவனுக்கு வேடிக்கையாக இருக்கிறது. இலங்கையில், போர்க் காலங்களில், எஞ்சிய வாழ்நாள் முழுமைக்குமாகவே அவர்கள் ஓரிரு உடைகளைக் கொண்டு காலம் தள்ள வேண்டியிருந்தது.

பாதுகாப்பு மண்டலத்துக்குள்கூட குண்டுகள் வீசப்பட்டதை உதயன் பார்த்திருந்தான். காயங்களுக்குச் சிகிச்சை பெறத் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்த நோயாளிகள் குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர். மருத்துவப் பணியாளர்கள் காயமடைந்தனர். அங்கிருந்து மற்றொரு தற்காலிக மருத்துவமனைக்கு உதயன் இடம்பெயர்ந்தபொழுது அவனுக்கு இன்னொரு புது அனுபவம் கிடைத்தது. கொத்து வெடிகுண்டுகள், அல்லது காற்றில் வெடித்துச் சிதறும் சிதர் குண்டுகள் அங்கே வீசப்பட்டன. முதலில், வானிலிருந்து குண்டுகள் நழுவவிடப்படும் ஓசை கேட்கும். அதைத் தொடர்ந்து இன்னொரு வெடிச் சத்தம். அதையும் தொடர்ந்து ஆறு குண்டுமணிகள் தரையைத் தாக்கும். காற்றில் வெடியோசை கேட்ட ஐந்து நொடிகளுக்குள், குண்டுமணிகள் தரையைத் தொட்டவுடன், ஆறு அல்லது ஏழு பேரோசைகள் காதைத் துளைக்கும். பார்க்க ஒரு தச்சுத் தொழில் வினைஞரின் ரஸமட்டக் கருவி போலவோ, அல்லது கழுத்தில் சிவப்பு நாடா முடிச்சுடன் கூடிய ஒரு சிறிய விளையாட்டுப் பொம்மையைப் போலவோ அந்தக் குண்டுமணி இருந்தது. இந்த மாதிரியான பொருள்களைக் கண்டால் தொட வேண்டாம் என்று புலிகளின் வானொலி தொடர்ந்து எச்சரித்த வண்ணம் இருந்தது. குறிப்பாகக் குழந்தைகளை. மருத்துவமனையில் அனுமதித்திருந்த ஒரு மனிதனின் முழங்காலுக்குக் கீழே ஒரு குண்டுமணி புதைந்திருந்தது. இன்னொரு பெண்ணின் தொடைக்குள்ளேயும். ஒரு குடும்பமே சிதர் குண்டு தாக்கப்பட்டு எரிந்து கருகிப்போனதை உதயன் பார்த்திருந்தான். அந்தக் குடும்பத்தினர் தங்கியிருந்த கூடாரத்தின் தார்பாலின் துணியில் தீப்பிடித்து பலமான காற்றால் தீ மளமளவெனப் பரவி அந்தக் குடும்பத்தைக் கருக்கியிருந்தது.

ரசாயனத் தீமூட்டிகள் பயன்படுத்தப்பட்ட ஒரு கொடூரமான தாக்குதலிலிருந்து உதயன்கூட மயிரிழையில் தப்பியிருந்தான். ஒரு வறண்ட மண் சாக்கடைக்குள் ஒளிந்திருந்தபோது, ஒரு சில மீட்டர் தூரத்திற்கப்பால், பெரும் தீப்பிழம்பைப் பார்த்தான். அங்கு வீசப்பட்டிருந்த குண்டின் துணுக்குகள் அனைத்தும் தாமாகவே எரிந்தன. குண்டின் ரவைகள் மிஞ்சிய தடயமே அங்கில்லை. “நான் அங்கேயே இறந்திருக்க வேண்டியவன்” என்று உதயன் கூறுகிறான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மார்ச் மாதத்தில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் வெண் ஃபாஸ்ஃபரஸ் எனும் ரசாயனப் பொருள் உபயோகப் படுத்தப்பட்டதையும் அவன் பார்த்திருந்தான். அது அடர்ந்த வெண் புகைப் போர்வையை எழுப்பிப் பலரையும் சாகடித்திருந்தது. “இது ஏற்படுத்திய காயங்கள் சாதாரண தீக்காயங்களிலிருந்து மாறுபட்டுத் தெரிந்தன. இம்மாதிரியான காயம்பட்டவர்கள் மருத்துவமனைக்குள் வந்தபோதே கவனித்தேன். அவை தீக்காயங்கள் போலவே இல்லை. திராவக வீச்சால் புண்ணானதுபோல் தான் இருந்தது. தோலின் மேற்புறத்தில் நீரும் ரத்தமும் கோர்த்துக்கொண்டிருந்தன. சாதாரணத் தீக்காயங்களில் நரம்புகள் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த வகை ஆயுதங்கள் தாக்கும்பொழுது நரம்புகள் செயலிழக்கின்றன. கையோ காலோ நீக்கப்படும் நிலை ஏற்படுகிறது.” உதயனைப் போலவே வேறு பலரும், அப்பகுதி முழுவதிலும் வெண்புகை பரவியிருந்ததைப் பார்த்ததாகச் சொல்லியிருக்கின்றனர். தலைச் சுற்றி மயக்கம் வரவழைக்கும் பயங்கரமான நெடியும், நீரைக்கூட நெடியடிக்க வைக்கும் தன்மையும்கொண்டிருந்தது அப்புகை.

ambulance-03.jpg

பிப்ரவரி மாதத்தில் நடந்த ஒரு தாக்குதலில் ஒரு தனியார் மருத்துவமனை முற்றிலுமாகத் தரைமட்டமாகி இருந்ததை உதயன் காண நேர்ந்தது. மார்ச் மாதத்திலும், தொடர்ந்து ஏப்ரல் மாதத்திலும் வான் தாக்குதல்கள் தீவிரமடைந்தன. ஒவ்வொரு நாளும், முன்னூறிலிருந்து அறுநூறு பிணங்கள்வரை விழுந்ததாக உதயன் கணக்கிட்டிருந்தான். தான் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே அவன் அஞ்சினான். ஒரு நாள் தன்னுடைய நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபொழுது விண்ணிலிருந்து ஏவப்பட்ட ஒரு வெடிகுண்டு அவன் கண்ணெதிரிலேயே மூன்று பேரைச் சாகடித்தது. அருகாமையிலிருந்த மேலும் பதினைந்து பேரைக் காயப்படுத்தியது.

தனித்திருக்கும் அச்சம் பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருக்கும்போது தாள முடியாததாய் இருந்தது. உள்ளே மிகவும் புழுக்கமாக இருந்ததால் நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டது. கும்மிருட்டிலே, யாராவது அடிபட்டு அலறிக்கொண்டிருந்தால் அது யாராயிருக்கும் என்ற சஞ்சலத்துடனும், தாங்கள் மறுநாள் காலையில் உயிருடன் கண் விழிக்க முடியுமா என்ற அச்சத்துடனும் அவர்கள் தூக்கமின்றி இரவுகளைக் கழித்தனர்.

ஏப்ரல் மாதத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் குடிமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதியைவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றனர். இரவெல்லாம் நடந்து ராணுவ எல்லை நோக்கிச் சென்றனர். ஆனால் அவர்கள் அனைவருமே திருப்பி அனுப்பப்பட்டனர்; வெட்ட வெளிப் பிரதேசங்களில், அவர்களைப் பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தி ராணுவம் முன்னேற யத்தனித்ததுதான் காரணம் என்று உதயன் கூறினான். ராணுவம் நெருங்க நெருங்க நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில், இரு படைகளுக்கும் நடுவிலே சிக்கிக்கொண்ட நிராதரவான ஓராயிரம் குடிமக்களாவது உயிர் இழந்திருக்கக்கூடும் என்று உதயன் நம்புகிறான். இந்தக் கொடூரமான, ஈவிரக்கமற்ற போரில், பெண்களின் உடல்களும், குழந்தைகளின் உடல்களும், மரங்கள் போலவோ அல்லது கட்டடங்கள் போலவோ தடுப்புக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. இருதரப்பினருமே நடுவிலே யார் சிக்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுகொள்ளவேயில்லை.

குடிமக்கள் பெரும் குழப்பத்திலிருந்தார்கள். தப்பிக்கும் முயற்சியில், சுடப்பட்டு இறக்கும் ஆபத்தை எதிர்கொள்வதா? அல்லது இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு, போர் நிறுத்தத்திற்கான அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பதா? விடுதலைப் புலிகள் வசம் இருக்கும் எல்லையைவிட்டு வெளியேறி ராணுவத்திடம் அகப்படும்பொழுது தங்களுக்கு என்னவாகும் என்பது குறித்த அச்சம் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இருந்தது. அப்படி ஒரு நிலையில், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவார்கள்; ஆண்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று விடுதலைப் புலிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். “நாங்கள் ராணுவத்தினரோடு நெடுங்காலமாகப் போரில் ஈடுபட்டிருந்தோம். அவர்கள் எங்கள் எதிரிகள். எனவே, விடுதலைப் புலிகளை நம்பி நாங்கள் காத்திருந்தோம்” என்று உதயன் விளக்கினான். மே 15ஆம் நாள்வரை பொறுத்திருக்கும்படி விடுதலைப் புலிகள் மக்களைக் கேட்டுக்கொண்டார்கள். சர்வதேச உதவி கிடைக்குமென்றும், போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முயற்சி நடந்து வருவதாகவும் அவர்கள் கூறி வந்தனர். ஆனால், நார்வே நாடு மத்தியஸ்தம் செய்துகொண்டிருந்த சரணாகதித் திட்டத்தை விடுதலைப் புலிகள் நிராகரித்துவிட்ட செய்தியைத் தமிழ் மக்களுக்கு அவர்கள் தெரியப்படுத்தவேயில்லை. கை நழுவிக்கொண்டேயிருந்த ஓர் அரசியல் உடன்படிக்கையை யதார்த்த நிலைக்கு மாறாக அவர்கள் எதிர் பார்த்துக் காத்திருந்தனர். பேரம் பேச அவர்களுக்கு எஞ்சியிருந்த ஒரே துருப்புச் சீட்டு, அப்பாவிக் குடி மக்களே. எனவே, அவர்களை அடித்துத் துன்புறுத்தியும், துப்பாக்கியால் சுட்டும் அவர்களை இருந்த இடத்திலேயே இருக்கும்படிச் செய்யப் புலிகள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். “போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படும் என்று நாங்கள் அனைவருமே நம்பியிருந்தோம். ஆகவே, அங்கேயே தங்கியிருந்தோம்,” என்று உதயன் விவரித்தான்.

எந்த இடர் மீட்பு அரசியல் திட்டமும் இனி எதிர்பார்க்கப்படுவதற்கில்லை என்ற நிலையில், மே 15 ஆம் நாள் மடையைத் திறந்துவிட்டதுபோல் குடிமக்களையும், போராளிகளையும் அவ்விடத்தைவிட்டு அகல, புலிகள் அனுமதித்தார்கள்.

ராணுவ எல்லைக்குள் நுழைந்தவுடன், காட்டிக் கொடுக்கும் தகவல் சொல்லிகளைத்தான் உதயன் முதலில் கவனித்தான். போரின் கடைசிக் கட்டத்தில், விடுதலைப் புலிகளின் எல்லையை விட்டு வெளியேறியிருந்த, கீழ்மட்டப் பெண் விடுதலைப் புலிகளையும், இறுதிக்கட்டத்தில் கட்சி மாறிவிட்டது போல் தோன்றிய ஒரு சில ஆண் விடுதலைப் புலிகளையும் அவனால் அடையாளம் காண முடிந்தது. மாணவ அரசியலில் பங்கு கொண்டவன் எனும் பின்னணியில், தன்னை யாரும் அடையாளம் காட்டி விடுவார்களோவென உதயன் கலங்கியவாறே இருந்தான். நைந்து, உடல் மெலிந்து, உயிர்பிழைத்து, ஓடிவந்த குடிமக்களை அங்கே ஒரு நெல் வயற்காட்டில் பட்டியில் அடைப்பதைப்போல் அடைத்துக்கொண்டிருந்தனர். அவன் நின்றிருந்த வரிசை வயலை நெருங்கும்பொழுதுதான், அவர்கள் ஒவ்வொருவரும் படமெடுக்கப்படுவதை உதயன் கவனித்தான். அதைப் பார்க்கவே மிகவும் கலக்கமாக இருந்தது. காட்டிக்கொடுக்கும் தகவல் சொல்லி ஒருவனால் அடையாளம் சொல்லப்பட்டு தனக்குத் தெரிந்த பாடகன் ஒருவன் இழுத்துச் செல்லப்படுவதை உதயன் பார்த்துக்கொண்டிருந்தான். கைது செய்யப்பட்ட ஒரு சிலர், பின்னர் அகதிகள் முகாமில் தகவல் சொல்லிகளாகப் பணிபுரிய விடுவிக்கப்பட்டனர். யாரை நம்புவதென்றே யாருக்கும் புரியவில்லை. இரண்டாம் நாளன்று விடுதலைப் புலிகளின் பெண்கள் அணித் தலைவர் ஒரு சக தமிழனால் ராணுவ அதிகாரிகளுக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டிருந்தார்.

ஒரு தொழிலாளியின் அடையாளத்தில், ஓர் ஊர்தியின் பின்புறத்தில் ஒளித்துவைத்து, மாணிக் பண்ணை அகதிகள் முகாமிலிருந்து உதயனைக் கடத்தி வெளியே கொண்டு வர அவனுடைய பெற்றோர் கையூட்டு கொடுத்து ஏற்பாடு செய்திருந்தனர். அந்த முகாமுக்கு அருகாமையில் அவனை மறைத்து வைத்து, கருணையும், துணிச்சலும் மிகுந்த அன்னியர்கள் சிலர் அவனைக் காப்பாற்றத் தங்கள் உயிரையும் பணயம் வைத்து உதவினார்கள். இன்னமும் அவர்கள் ஆபத்தில் சிக்கிவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால், அவர்கள் யாரென்று அடையாளம் சொல்ல இப் பொழுதும்கூட உதயன் மறுக்கிறான். அந்தக் கூட்டத்தோடு கூட்டமாய் ஒன்றிவிட, இசைக் கருவி வாசிப்பவனைப் போல் நடிக்க வேண்டியிருந்த வேடிக்கைத் தருணங்களை அவன் நினைவுகூர்கிறான்.

நாட்டைவிட்டு எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று உதயன் பரிதவித்துக் கொண்டிருந்தான். ஆனால், முகாமிலிருந்து தப்பிச் செல்கின்ற தமிழ்ப் பயணிகளை ராணுவம் சோதனையிட்டுப் பிடித்துக்கொண்டிருந்தது. எனவே ரயில் வண்டியில் தலைநகர் கொழும்புவுக்குச் செல்ல அவன் மனம் துணியவில்லை. அவனுடைய அன்னை யாழ்ப்பாணத்திலிருந்து வந்து அவனைப் பாதுகாப்பாகத் தொடர் -புறவழிச் சாலைகள் ஊடே அழைத்துச் சென்றாள். போரின் இறுதி மாதங்களில் அவன் போர் மண்டலத்தைவிட்டு வெளியேதான் இருந்தான் என்று நிரூபிக்கச் சில போலி ஆவணங்களை அவள் முன்னதாகத் தயார் செய்து கொண்டுவந்தாள். இந்தத் தந்திரம் ராணுவ சோதனைச் சாவடிகளை ஏமாற்றப் பெரிதும் உதவியாயிருந்தது. தலை நகரில் அவர்கள் உறவினர் வீட்டில் தங்கினர். அங்கிருந்தபடியே, கடவுச் சீட்டுக்கும், மலேசியா நாடு செல்ல நுழைவனுமதிக்கும் விண்ணப்பித்தார்கள். இதற்குத் தோதாக கோலாலம்பூரில் இருந்த, அவனை இதுவரை பார்த்தேயிராத, ஒரு அத்தை அவனுக்காகப் பொறுப்பேற்பு உத்தரவாதக் கடிதம் ஒன்றை மனமுவந்து அளித்திருந்தாள். ஒரு தனி இளைஞனாய் அவனைப் பார்த்து யாரும் சந்தேகப்பட்டுவிடக் கூடாதென்று அவனுடைய அன்னை மலேசியா வரை அவனோடு உடன் வந்தாள். பின்னர் அவள் தாயகம் திரும்பிவிட்டாள்.

கனடா நாட்டில் அவனுக்கொரு மாமா இருந்தார். அங்கு செல்லவே உதயன் முதலில் திட்டமிட்டிருந்தான். ஆனால் அவரிடமிருந்து பொறுப்பேற்பு உத்தரவாதக் கடிதம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பரிதவிப்போடு ஒரு தேநீர்க் கடையில் ஒரு நாள் உட்கார்ந்திருந்தபோது, ஆஸ்திரேலியாவுக்கு ஒரு படகு செல்லவிருப்பதாக யாரோ பேசிக்கொண்டிருந்ததை அவன் தற் செயலாகக் கேட்டான். அவர்களிடம் தொடர்பு எண்ணைக் கேட்டு வாங்கி, சம்பந்தப்பட்ட ஆள் கடத்தியிடம் பேசினான். அவன் பதினைந்தாயிரம் யு.எஸ். டாலர்கள் கொடுக்க வேண்டுமென்று நிபந்தனை விதித்தான். மலேசியாவிலிருக்கும் ஒருவரிடம் அந்தத் தொகையைக் கொடுத்துவிடுவதாகவும், ஆனால், அவன் பத்திரமாக ஆஸ்திரேலியா சென்றடைந்த பிறகுதான் பணம் கைமாற்றப்படும் என்றும் உதயன் அவனிடம் பேரம் பேசினான். அந்த ஆட்கடத்தியும், அதற்கு ஒப்புக்கொண்டான். தங்கள் மகனுடைய வாழ்க்கையை எப்பாடுபட்டாவது மீட்டெடுத்துவிடப் பரிதவித்துக்கொண்டிருந்த உதயனுடைய பெற்றோர், யாழ்ப்பாணத்திலிருக்கும் தங்கள் சொத்தை விற்று அந்தப் பயணத்துக்கான தொகையைக் கட்ட முன்வந்தார்கள்.

மலேசிய நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரமாகப் பேருந்தில் ஒரு நாள் முழுக்கப் பயணம் செய்தபின், ஒரு கட்டிடத்தில் மூன்று நாட்கள் உதயன் தங்கவைக்கப்பட்டான். அதன் பிறகு, இன்னொரு பேருந்துப் பயணம் அவனை மற்றொரு வீட்டிற்குக் கொண்டு சென்றது. அங்கே இவனுக்கு முன்பாகவே முன்னூறு பேர் காத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள். 2009ஆம் ஆண்டு, மலேசிய குடியரசு தினமான ஆகஸ்ட் 31ஆம் நாள், உதயன் படகில் ஏறினான். அது மிக மோசமாகப் பராமரிக்கப்பட்டிருந்த, ஓட்டையான, மீன்பிடி படகு. முன்னமே தெரிந்திருந்தால் அப்பயணத்தை மேற்கொள்ள உதயன் சம்மதித்திருக்கவே மாட்டான். ஆனால் இப்பொழுது எல்லாமே தலைக்குமேல் போய்விட்டது. “ஒரு சரக்குக் கப்பலில்தான் எங்களை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார்கள்” என்று உதயன் ஆதங்கப்பட்டான்.

இரண்டு நாட்கள் கடலில் பயணம் செய்த பின்னர், ஒரு புயல் அவர்களைத் தாக்கியது. இருமருங்கிலும், தொடர்ந்து பேரலைகள் தாக்கியதில், மீன்பிடிப் படகினுள் நீர் புகுந்துகொண்டது. தொடர்ந்து பல நாட்கள் அவர்கள் இலக்கின்றிக் கடலில் அலைந்துகொண்டிருந்தார்கள். அந்தப் படகின் மலாய் மீகான், மாற்று ஏற்பாடு வேண்டி வானொலிச் செய்தி அனுப்பியவண்ணம் இருந்தான். வேறொரு படகில் உணவு, ஒரு மூட்டை சிமென்ட், கொஞ்சம் கார்க் ஆகியன வந்து சேர்ந்தன. சிமென்ட்டும், கார்க்கும் படகின் ஓட்டையை அடைக்க. தொடர்ந்து அந்தப் படகில் பயணம் செய்வது ஆபத்தானது என்று எண்ணிய இருபத் தைந்து பேர், மீள் படகில் மலேசியா திரும்பிவிட்டனர். இன்னொரு வாய்ப்பு தனக்குக் கிட்டுமா என்று சந்தேகப்பட்ட உதயன், தன்னுடைய நல்வாய்ப்பைச் சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்தான்.

ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் படகு பழுதுபட்டது. அப்பொழுது அவர்கள் இந்தோனேஷியக் கரைகளுக்கு அருகில் இருந்தார்கள். படகு முழுதாய்ச் சேதமாகி இருந்தது. உணவும் நீரும் மிகக் குறைவான அளவே இருந்தன. ஒரு நாளைக்கு ஒரு மிடக்குத் தண்ணீரும், ஒரு சில சிற்தேக்கரண்டி அரிசிக் கூழும் என்று பயணிகள் தேவைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. இலங்கையில், போரின் உச்சக் கட்டக் காலங்களில், தாங்கள் வாழ்ந்து பழகியிருந்த விரதச் சாப்பாட்டிற்கே விதிவசமாய் அவர்கள் மீள வேண்டியிருந்தது. ஒரு வாரத்திற்கும் மேலாகக் கடலில் இலக்கின்றி மிதந்துகொண்டிருந்த நிலையில், மற்றொரு உதவிப் படகு வந்து சேர்ந்தது. அதில், பழுது நீக்கவென உலோகத் தகடுகள், மரப் பலகைகள், மற்றும் சிமென்ட் ஆகியவை கொடுத்தனுப்பப்பட்டிருந்தன. உணவும் டீசலும்கூட அதில் வந்திருந்தன.

இறுதியாக, செப்டெம்பர் 22ஆம் தேதியன்று, கிருஸ்மஸ் தீவுக்கு அருகில், இந்த ஒழுகும் மீன்பிடிப் படகை ஆஸ்திரேலியக் கப்பற்படை பார்க்க நேர்ந்தது. அதைச் சோதனையிட்டு விசாரிக்க ஒரு விசைப் படகை அது அனுப்பி வைத்தது. தீவுக்கு அருகில் ஒழுகும் படகைக்கொண்டு செலுத்திய பின்னர், இன்னொரு கப்பலில் மலாய் ஆட்கடத்திகள் பிடிபடாமல் மறைந்துவிட்டனர். படகினுள் புகுந்துகொண்டிருக்கும் கடல் நீரை வெளியேற்ற நீர்வாங்கு விசைக் குழாயை வெறித்தனமாய் இயக்கிய வண்ணம் யார் ஆதரவுமின்றிக் கடல் நீரில் ஒரு ஓட்டைப் படகில் எட்டு மணி நேரமாகத் தத்தளித்துக்கொண்டிருந்தனர் அடைக்கலம் தேடி வந்த அந்தப் பயணிகள்.

அப்படகை எப்படி இயக்குவது என்பது அப்படகுக்குள் இருந்த ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆஸ்திரேலியக் கப்பற்படையினர் தான் தத்தளித்துக்கொண்டிருந்த அந்தப் படகுக்குள் ஏறி வந்து இயக்கி அதைக் கரை சேர்த்தனர். அந்தப் படகின் மோசமான நிலையைக் கண்டு பயணிகள் அனைவருமே அதிர்ந்துபோயிருந்ததாக உதயன் குறிப்பிடுகிறான். இம்மாதிரிப் படகுகள் பிடிபட்டவுடன் அவை மீண்டும் பயன்படுவதைக் கட்டுப்படுத்த, ஆஸ்திரேலிய அதிகாரிகள் அவற்றை அழித்துவிடுவார்கள். இதை நன்கு தெரிந்துவைத்திருந்த ஆட்கடத்திகள் எதற்கும் உதவாத இம்மாதிரிப் படகுகளையே இப்படிப்பட்ட பயணங்களுக்குப் பயன்படுத்துவார்களென்பதை உதயன் பிறகு அறிந்துகொண்டான். ஒரு வருடமும் ஐந்து நாட்களும் கிருஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு மையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த பிறகு, உதயனுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டு அவன் ஆஸ்திரேலிய நாட்டினுள் அடியெடுத்து வைத்தான்.

ஃபிரான்ஸிஸ் ஹாரிசனின் ‘ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்’ (காலச்சுவடு, 2012) 2009 ஈழப் போரில் சிக்கித் தவித்த பத்து தமிழர்களின் அனுபவப் பதிவு. அதில் இடம்பெறாத புதிய பகுதி இக்கட்டுரை.

 

 

நன்றி-: காலச்சுவடு

www.kalachuvadu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.