Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் - திருமாவளவன்

Featured Replies

புதன், 22 மே 2013

 

மரக்காணம் கலவரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக செயல்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை, உணரவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஒடுக்கவும் இந்த அரசு தயங்காது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பா.ம.க. நிறுவனர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது கூறினார். மேலும் மரக்காணம் கலவரம் தொடர்பாக கருணாநிதி கண்டன அறிக்கை எதுவும் விடாதது விடுதலை சிறுத்தைகள் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டது.

இது குறித்து திருமாவளவன் கூறுகையில்:

ஆளுங்கட்சியை விமர்சிப்பது எதிர்கட்சியின் கடமை. அந்த அடிப்படையில் மரக்காணம் கலவரம் தொடர்பான அரசின் நடவடிக்கையை தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டித்து இருப்பதாக கருதுகிறேன்.

இந்த பிரச்சினைக்கு பிறகு தி.மு.க.வின் முன்னணி தலைவர்களை சந்தித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்து கொள்ளவேண்டும் என்பதற்காக தி.மு.க. முயற்சி செய்கிறது என்று கூறுவது தவறு. அதற்கான வாய்ப்பு இல்லை.

மரக்காண கலவரத்தையும், தேர்தலையும் இணைத்து பார்க்க விரும்பவில்லை. மரக்காணம் கலவரத்திலும் முதல்-அமைச்சரை கருணாநிதி கண்டித்தது பிரச்சினையின் அடிப்படையில்தானே தவிர தேர்தல் அடிப்படையில் அல்ல. தேர்தலை மனதில் வைத்து பா.ம.க. இப்படிப்பட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என முதல்- அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் பா.ம.க. எங்கள் மீது கடுமையான வீண் பழிகளை சுமத்தியுள்ளது. தலித் மக்களை, உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்ற வகையில் வன்முறையை தூண்டுவது ஆபத்தானது.எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறுகள், வீண் பழிகளை போக்க வேண்டும்.

தேர்தலை பற்றி சிந்திக்க நேரமில்லை. சுயநல அரசியலுக்காக உழைக்கின்ற மக்கள் பலியாகின்றனர். அவர்களை காப்பாற்றுவதற்காகத்தான் அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்தோம். இதற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மரக்காணம் கலவரத்தில் தி.மு.க.விற்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் எழவில்லை. எங்கள் உறவில் எந்த கசப்பும் உருவாகவில்லை. உரசலோ, விரிசலோ ஏற்படவில்லை. இந்த பிரச்சினையை தேர்தல் அரசியலாக யாரும் கருதவில்லை. பா.ம.க. மட்டும் தேர்தல் அரசியலாக பார்க்கிறது. முழுக்க, முழுக்க தேர்தலுக்காக இந்த பிரச்சினையை அவர்கள் கையில் எடுத்து இருக்கிறார்கள்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1305/22/1130522009_1.htm

 

  • கருத்துக்கள உறவுகள்

மரக்காணம் கலவரம் - உண்மை அறியும் குழு அறிக்கை

25.4.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் தலித் மக்கள் மற்றும் அவர்களின் வீடுகள் உடைமைகள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதைக் குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழக உண்மை அறியும் குழுவின் அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம், மகாபலிபுரத்தில் நடைபெற்ற கோடி வன்னியர்கள் கூடும் ‘சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா’வையொட்டி 25.4.2013 அன்று கிழக்குக் கடற்கரைச் சாலை மரக்காணம் காலனி (தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு) கட்டையன் தெரு, இடை கழியூர், கூனிமேடு ஆகிய இடங்களில் தலித் மக்கள் தாக்கப்பட்டது மற்றும் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டது குறித்த உண்மைகளை அறிய மக்கள் சிவில் உரிமைக் கழகம் (ம.சி.உ.கழகம்), தமிழ்நாடு & பாண்டிச்சேரி, ஒரு குழுவினை அமைத்தது. குழுவில் பங்கு பெற்றவர்கள்:

பேராசிரியர் சரசுவதி-தலைவர், ம.சி.உ.கழகம், தமிழ்நாடு & பாண்டிச்சேரி

திரு. பா. செயப்பிரகாசம், எழுத்தாளர்.

திரு. த. முகேஷ், பொறியாளர் - ம.சி.உ. கழக மாநில பொதுக் குழு உறுப்பினர்

திரு. ராகவராஜ் - ம.சி.உ. கழக மாநில பொதுக் குழு உறுப்பினர்

திரு. கௌதம் பாஸ்கர் - புதுவை சட்டக் கல்லூரி மாணவர்.

உண்மை அறியும் குழுவினர் 29.4.2013 திங்களன்று தாக்குதலுக்குள்ளான பகுதிகளையும் வீடுகளையும் தலித் மக்களையும் நேரில் சென்று பார்த்தனர். மக்களைச் சந்தித்தனர். அவர்கள் கூறிய தகவல்கள், அவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்கு மூலங்கள், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆகியவற்றோடு உண்மையறியும் குழுவின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

1.            மரக்காணம் காலனி, கட்டையன் தெருவில் வாழும் அஞ்சலை, க/பெ. நாராயணசாமி இவர்களின் வீடு முற்றாக எரிக்கப்பட்டு வெறும் குட்டிச்சுவர்களே மிஞ்சியிருந்தன. வீட்டிலிருந்த பண்ட பாத்திரங்கள், கிரைண்டர், மின் விசிறி போன்ற அனைத்தும் எரிந்து கருகிக் கிடந்தன. அரிசி எரிந்து சாம்பலாகி இருந்தது. கண்ணீர் மல்க திருமதி அஞ்சலை கூறியது:

                “சம்பவம் நடந்த அன்று இந்த கிராமத்தின் வலது பக்கம் பா.ம.க.வைச் சேர்ந்த சேதுவின் தோட்டத்தில் நிறைய பேர் கூடியிருந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் குடித்திருந்தார்கள். மத்தியானம் 12 மணி அளவில் அவர்கள் கையில் வெட்டரிவாள், உருட்டுக் கட்டை, பெட்ரோல் குண்டுகளுடன் எங்கள் பகுதியை நோக்கி வருவதைப் பார்த்து, எங்களைத் தாக்கத்தான் வருகிறார்கள் என்று எண்ணி, உயிரைக் காத்துக் கொள்ள மேற்குப் பக்கம் ஓடி விட்டோம். அங்கிருந்து ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, வீடுகளை உடைத்து, பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். பெட்ரோல் குண்டு ‘டமால்’ என்று வெடித்து, குப்பென்று தீயும் புகையும் மேலெழுந்தது. எங்களது கூரை வீடுகள் கொளுந்துவிட்டு எரிவதைத் துடிக்கத் துடிக்கப் பார்த்துக் கொண்டு நின்றோம்” என்றார்.

2.            அடுத்த வீட்டில் செல்வியம்மா என்பவர் சொந்தக் கோயிலாக அங்காளம்மன் கோயிலை நடத்தி, பராமரித்து வருகிறார். பூசாரியும் அவரே. கோயிலையொட்டி ஒரு சிறு கடையும் நடத்தி வந்தார். பெட்ரோல் குண்டுகளை வீசி, கோயிலையும் கடையையும் கொளுத்தியிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் பா.ம.க.வினரின் மஞ்சள் சீருடை அணிந்திருந்ததாக, செல்வியம்மா சொல்கிறார். இந்த செய்தியை நாங்கள் சந்தித்த ஒவ்வொருவரும் உறுதிப்படுத்தினார்கள். பூசாரி செல்வியம்மா சொன்னவை:

                “கோமுட்டி சாலை என்ற இடத்தில் வன்னியர்கள் தங்கியிருந்தார்கள். அங்கிருந்து தைலக்காடு வழியாக ஓடி வந்தார்கள். 25-ந் தேதி திண்டிவனத்தில் நடைபெறும் தீ மிதித் திருவிழாவில் கலந்து கொள்ள நானும், மகளும், குழந்தைகளும் ரோட்டுக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது வன்னிய ஆட்கள் திமு திமுவென்று ஓடி வருவதைப் பார்த்தோம். பக்கத்தில் முந்திரிக் காடும், தைலமரக் காடுகளும் நிறைந்திருந்த இடத்தில் ஒளிந்திருந்தார்கள். எல்லோர் கையிலும் ஆயுதம் வச்சிருந்தாங்க. கோயில் கட்டுவதற்கு ரூ.40 ஆயிரம் வரை தேவைப்பட்டது. வருகிறவர்கள் போட்ட உண்டியல் காசு மூலம் ரூ.36 ஆயிரம் சேர்த்து வைத்திருந்தேன். 7 பவுன் நகை வச்சிருந்தேன். ரூபாய், நகை அத்தனையையும் கொள்ளையடித்து போய் விட்டார்கள். கடையும் சாமான்களும் ரூ.25 ஆயிரம் பெரும். எல்லாம் எரிந்து போயின. பண்ட பாத்திரம் எல்லாமும் கொளுத்தி விட்டார்கள். கோயிலோடு சேர்ந்து அங்காளம்மன் சாமியும், அருகிலிருந்த புற்றும்கூட எரிந்துப் போச்சு” என்றார்.

3.            மணமகன் : ஆ - அருண்    மணமகள் : ஆ. அனுசுயா

                மணநாள் : 27.5.2013 - திங்கட்கிழமை என்றிருந்த திருமண அழைப்பிதழை நாங்கள் கண்டோம். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த மணமகள் ஆ. அனுசுயாவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. மணமகள் அனுசுயா பிளஸ் டூ படித்திருக்கிறார். திருமணச் செலவுக்காக வைத்திருந்த மூன்று லட்ச ரூபாயும், 15 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக அனுசுயாவும், அவருடைய தாயாரும் கண்ணீர் மல்க துயரத்துடன் தெரிவித்தார்கள். “இரவு தங்குவதற்கு இடமில்லாமல் தூரத்தில் இருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டில் தினமும் தங்கிவிட்டு, பகலில் திரும்புகிறோம்” என்று வேதனையோடு சொன்னார் அனுசுயா. தன்னுடைய திருமணம் நடக்குமா என்ற துயரமும் அவர் பேச்சில் இழையோடியது.

4.            அங்காளம்மாள் என்பவரது வீடு எரிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் வெந்து உருகிய பாத்திரங்கள் மட்டுமல்ல, தீ வைத்தவர்கள் குடித்துவிட்டுப் போட்ட கிங் பிஷர் (Kingfisher) பீர் பாட்டில்கள் 20-க்கும் மேல் கிடந்ததை நாங்கள் காண நேரிட்டது. இவர்கள் எரித்ததில் பலாமரம்கூட தப்பவில்லை. நிறைய காய்களைச் சுமந்து நின்ற பலாமரத்தைச் சுற்றிப் போடப்பட்ட வேலியும் காய்களும் கருகிக் கிடந்தன. கடைசி நேரத்தில் போலீஸ் வந்து விரட்டியதால், போகிற போக்கில் ஒரு வீட்டுக் கூரையில் வைத்துவிட்டுப் போன நெருப்பு மேலும் பரவாமல் அணைக்கப்பட்டிருந்த அடையாளத்தைக் கண்டோம்.

5.            தில்லையாம்பாள் என்ற 67 வயது மூதாட்டியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் பக்கத்தில் போடப்பட்டிருந்த வைக்கோல் போரும் எரிந்து போயிருந்தன.

6.            சென்னையில் பணியாற்றும் கணேசன் என்பவருடைய செங்கற்களால் கட்டப்பட்ட வீடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. சன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு தூள் தூளாகச் சிதறியிருந்தது. கண்ணாடியை உடைத்த கல்லும் அருகிலேயே கிடந்ததைக் காண முடிந்தது. கணேசனுடைய தம்பி மனைவி தேவி. இவர் மகளிர் சுயநிதிக் குழுத் தலைவி. சுயநிதிக் குழுவின் தொகை ரூ.10 ஆயிரமும் தன்னுடைய 4 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார், தேவி.

கூலித் தொழிலாளியான கலைவாணன், வயது 45. தலையில் வெட்டுக் காயத்துடன் கட்டுப் போடப்பட்டு காட்சித் தந்தார். 20 பேர் கொண்ட கும்பல் விரட்டி வந்ததாகவும், மற்றவர்கள் ஓடிவிட்டதாகவும், தான் மட்டும் அகப்பட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். தாக்கிய அதிர்ச்சிக் காரணமாக நாக்கு லேசாய் துண்டிக்கப்பட்டு பேச்சு தடுமாறியது.

துரைசாமி என்பவர் கையில் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக அவருடைய மனைவி வித்யா தெரிவித்தார்.

துரையின் மனைவி ரூபாவதி (வயது 35) என்பவர் வீட்டைக் கொளுத்தும்போது, சினைப் பசுவும் எரிந்து இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

ஆண்கள் முன்னிலையில் பேசத் தயங்கிய சில பெண்கள், பேராசிரியர் சரசுவதியைத் தனியாக அழைத்து, ‘தாய் மாதிரி இருக்கீங்க, ஒங்ககிட்ட சொல்றதுக்கென்னம்மா - ஊருக்குள்ள நொழஞ்ச ஆம்பளைங்க, ஜட்டியைக் கழட்டி தலமேல போட்டுக்கிட்டு, முன்பக்க வேட்டியை விரிச்சி விலக்கிக் காட்டி, வாங்கடி, வாங்கடி என்று கூப்பிட்டாங்கமா, நாங்க அப்படியே கூசி குறுகிப் போனோம்மா!’ என்றார்கள்.

இடைகழியூர்

மரக்காணம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இடைகழியூர். அங்கு கழிக்குப்பம் அம்மச்சியம்மன் கோயில் தெருவில் எரிக்கப்பட்ட இரு வீடுகளைப் பார்வையிட்டோம்.

மணிமேகலை அவருடைய மகன் பார்த்திபன், மருமகள் காஞ்சனா. மகனுக்கு மூன்று குழந்தைகள். அந்த விதவைத் தாய், மகன் இருவரது வீடுகளும் கொளுத்தப்பட்டிருந்தன. மகனும், மருமகள் காஞ்சனாவும் தவணை முறையில் வாங்கியிருந்த கிரைண்டர், டி.வி., டி.வி.டி. பிளேயர், மின்விசிறி என 2 லட்சம் பெறுமான பொருட்கள் எரிந்து போயிருந்தன. எட்டு சவரன் நகையைக் காணவில்லை எனவும் தெரிவித்தார்கள். பிரதான சாலையில் முதலில் இருப்பது ஒரு செட்டியார் வீடு. முதலில் இருந்த செட்டியார் வீடு தாக்குதலுக்கு உள்ளாக வில்லை. அதற்கடுத்து இருந்த தலித் வீடுகள் குறி வைத்து கொளுத்தப்பட்டிருந்தன.

கொளுத்தப்பட்ட இரு வீடுகளுக்கும் எதிரில் ஒரு மேல்நிலை குடிநீர்த் தொட்டி உள்ளது. தண்ணீரை எடுத்து தீயை அணைத்து விடுவார்கள் என்பதற்காக தொட்டியிலிருந்து தண்ணீர் பிடிக்கும் குழாயை வெட்டிவிட்டிருக்கிறார்கள்.

தீ வைப்பு அடுத்தடுத்து இருந்த தலித் வீடுகள் மீதும் நடந்திருக்கும். ஆனால் நிறையப் பேர் திரண்டு வந்துவிட்டதால், தாக்கிய கும்பல் எதிர்கொள்ள முடியாமல் திரும்பியிருக்கிறது.

கூனிமேடு

கூனிமேடு பகுதியிலுள்ள பள்ளிவாசல் அருகில் ஒரு சுற்றுச் சுவர், விழாவுக்கு வந்தவர்களின் வாகனம் மோதி இடிக்கப்பட்டிருந்தது. எதிரிலிருந்த பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டிடத்துக்குள் மது பாட்டில்கள் வீசப்பட்டதாக தெரிவித்தார்கள். அருகிலுள்ள கடைகள் தாக்கப்பட்டிருந்தன. மகளிர் அரபிப் பாடசாலையில் பயின்று கொண்டிருந்த பெண்கள் மீதும் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தினர். பெண்கள் பயந்து சிதறி ஓடியதைப் பார்த்த அப்பகுதி பொது மக்கள், முஸ்லீம்கள், வன்னியர்கள், தலித்துகள், மீனவர்கள் என்று அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கலவரக்காரர்களை எதிர்த்து விரட்டியடித்திருக்கிறார்கள். தாக்கியவர்கள் எல்லோரும் குடிபோதையில் இருந்ததாகவும், அரை மணி நேரம் கலாட்டா நீடித்ததாகவும், இந்திய தேசிய முஸ்லிம் லீக்கின் கூனிமேடு பகுதி செயலர் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு.மனோகரன், ஐ.பி.எஸ்.ஐ சந்தித்தோம்.

‘2002 ஆம் ஆண்டே மோதல்கள் நடந்திருக்கும் பகுதியாயிற்றே - சமீபத்தில் தர்மபுரியிலும் தாக்குதல் நடந்திருக்கிறது - காவல்துறை ‘அலர்ட்’ஆக இருந்திருக்க வேண்டாமா’ என்று கேட்டதற்கு,

‘அது நடந்து 10 வருஷம் ஆச்சே. ஏற்கனவே மாமல்லபுரம் இளைஞர் திருவிழாவுக்கும், திண்டிவனம் தீமிதித் திருவிழாவுக்கும் போலீஸ்காரர்களைப் பிரித்து அனுப்பிவிட்டோம். அதனால் போலீஸ் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனால் நானே நேரில் மரக்காணம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புப் பகுதியில் நின்றேன்” என்று தெரிவித்தார். மக்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படவேண்டும் என்றும் பொதுவாகக் கூறினார்.

வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா, அவை பற்றிய விவரங்கள் தர இயலுமா என மரக்காணம் காவல் நிலைய துணை ஆய்வாளர் சரசுவிடம் கேட்டோம். அவர்,

“வழக்கு எங்கள் கையில் இல்லை. ஏழு சிறப்புப் படைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு, விசாரிக்கும் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் இதைப் பார்த்து வருகிறார்கள். விசாரணை பற்றிய அனைத்துத் தகவல்களும் மேல்நிலையிலுள்ளவர்களுக்கே சமர்ப்பிப்பார்கள். எங்களுக்கு அளிக்கப்படுவதில்லை” என்று தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளான கட்டையன் தெருவிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள அகரம் என்ற ஊரிலிருக்கும் பா.ம.க. ஒன்றியச் செயலாளர் சேது என்பவரைச் சந்திக்கச் சென்றோம். அவர் ஊராட்சி ஒன்றியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ளார். “25-ந் தேதி தலித் மக்கள் மீதான தாக்குதல் எதுவும் தங்களுக்குத் தெரியாது என்றும், மதியம் இரண்டரை மணி வரை சேது வீட்டில் இருந்ததாகவும், மதியம் இரண்டரை மணிக்குமேல் அவர் இறால் பண்ணை மீன்களுக்கு உணவு வாங்கவும், பழுதான இயந்திரப் பாகங்களை வாங்கி வருவதாகவும் கூறிச் சென்றதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்பது தனக்குத் தெரியவில்லை” எனவும் அவருடைய மனைவி தெரிவித்தார்.

உண்மை அறியும் குழுவினரின் ஆய்வு முடிவு:

1.            முன் கூட்டியே துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்:

                பாண்டிச்சேரியிலிருந்து / பாண்டிச்சேரி வழியாக விழாவிற்கு வந்தவர்கள், பாண்டிச்சேரியில் ஏராளமான காலி மது பாட்டில்களையும் சேகரித்திருக்கிறார்கள். தாங்கள் பயணம் செய்த வாகனங்களிலேயே தாக்குதல்களுக்கான ஆயுதங்களையும் எடுத்து வந்திருக்கிறார்கள். தாக்குதலை நடத்தியவர்கள் வெளியூர்காரர்கள்தான் என்றாலும், அவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தந்து உதவியிருப்பவர்கள் உள்ளூர்க்காரர்களே. பிற சாதியினர் வீடுகள் எதுவும் தாக்கப்படவில்லை. உதாரணமாக, கழியூர் குப்பத்தில் பிற சாதியினர் வீடுகளைத் தாண்டி இருக்கும் தலித் வீடுகளை, உள்ளூர்காரர்கள்தான் அடையாளம் காட்டியிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதைப் போலவே மரக்காணம் கி.க. சாலையிலிருந்து பார்க்கும்போது, காடுகள் அடர்த்தியாக இருப்பதன் காரணமாக, காலனி இருப்பதே கண்களுக்குத் தெரியாது. உள்ளூர்க்காரர்கள் காட்டியிருக்காவிட்டால், வெளியூர்க்காரர்கள் அறிய வாய்ப்பில்லை.

2.            வாக்கு வங்கி அரசியல்

                மரக்காணம் பகுதியில் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் தலித் மக்கள். குறிப்பாக 18வது வார்டில் (காலனி) வன்னியர்களுக்கு ஒரு வாக்கும் கிடைக்காது என்று உள்ளூர் பா.ம.க.வினருக்குத் தெரியும். ஆனால் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் அவர்களை உள்ளூர்காரர்கள் நேரடியாகத் தாக்க முடியாது என்று இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வெளியூரிலிருந்து வருபவர்களுக்குத் தகவல் கொடுத்து, உசுப்பிவிட்டிருக்கலாம். பா.ம.க. கவுன்சிலர் சேதுக்கு இதில் ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது.

3.            காவல்துறையின் மெத்தனம்:

                2002 ஆம் ஆண்டிலிருந்தே சமுதாய மோதல் வரலாறு கொண்ட பகுதி என்பதாலும், அண்மையில் தருமபுரி தாக்குதல் நடந்திருப்பதைக் கருத்தில் கொண்டும் காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி, தாக்குதல்களும் மோதல்களும் நிகழாமல் செயல்பட்டிருக்க வேண்டும். அன்று அந்தப் பகுதியில் போதுமான காவலர்கள் இல்லை என்பது, காவல் துறையின் மெத்தனப் போக்கையும், அலட்சிய அணுகுமுறையையும் காட்டுகிறது.

4.            அரசின் பாராமுகம்:

                இரு சமூகத்தினரிடையும் தொடர்ந்து நிலவும் விரோத மனப்பான்மையைப் போக்குவதற்கும் சுமூக நிலையை உருவாக்குவதற்கும் அரசுகள் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளுவதில்லை. மோதல்கள் ஏற்படும்போது மட்டுமே செயல்படும் அரசு எந்திரம், சாதாரண காலங்களில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு எத்தகைய திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை.

பரிந்துரைகள்:

1.            மரக்காணம் காலனி மக்களுக்கு பிரதானத் தொழில் உப்பள வேலைகளே. ஆனால், உப்பளங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே மாதம் வரை 5 மாதங்களுக்குத்தான் வேலை கிடைக்கும். அவர்களில் எவரும் உப்பள ஒப்பந்தக்காரர்கள் இல்லை. பெரும்பாலும் வன்னியர்களும் சாதி இந்துக்களுமே உப்பள உரிமையாளர்கள். தலித் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த, அரசு, அந்தப் பகுதியில் வேலை வாய்ப்பு தரும் தொழில்களை, தொழிற்சாலைகளை உருவாக்கி ஊக்குவிக்க வேண்டும்.

2.            தங்கள் குடியிருப்பின் அருகிலிருக்கும் காடுகள், சமூக விரோத சக்திகளுக்கு புகலிடமாக மாறி, தங்கள் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக மக்கள் குறிப்பாக உணருகிறார்கள். எனவே அரசாங்கம், காடுகள், சமூக விரோத சக்திகளின் கூடாரமாக மாறாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

3.            கூனிமேடு பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து தாக்கியவர்களை விரட்டியடித்தார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. இத்தகைய சமூக நல்லிணக்கத்துக்கான முன்னெடுப்புகளை அனைத்து தரப்பினரும், மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள், இயக்கங்கள் மற்றும் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

4.            உயிர், உடல், பொருள் இழப்புகள் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு, உரிய நிவாரணங்கள் உடடினயாக வழங்கப்பட வேண்டும்.

5.            பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப, மக்கள் அச்சமற்று வாழ்வதற்கான நம்பிக்கையையும் சூழலையும் உருவாக்குவது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல அது நமது அனைவரின் பொறுப்பும் ஆகும்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23789

  • கருத்துக்கள உறவுகள்

மரக்காணம் அவலத்திலிருந்து மீண்டு வாருங்கள்!

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வேண்டுகோள்: 

சென்ற சனவரி 25ஆம் நாள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வுகள் தமிழின ஒற்றுமையில் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் ஆழ்ந்த கவலை அளிக்கக் கூடியன.

‘கோடி வன்னியர் கூடும் குடும்ப விழா’வுக்காக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்த ஊர்திகளில் ஒன்று விபத்துக்குள்ளானதும், பெரும்பாலும் தலித்துகளாகிய உள்ளூர் மக்களுக்கும் வண்டிகளில் வந்த வன்னியர்களுக்கும் மோதல் வெடித்ததும், வன்னியர்கள் சிலர் அருகிலிருந்த தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளைக் கொளுத்தி உடைமைகளைச் சூறையாடியதும், காவல் துறையினர் வானோக்கித் துப்பாக்கியால் சுட்டும் தடியடி நடத்தியும் சாலை மறியல் செய்த கூட்டத்தைக் கலைத்ததும், விபத்தினாலோ எதிர்த்தரப்பினரின் வன்செயலாலோ வன்னிய இளைஞர்கள் இருவர் உயிரிழந்ததும்... இந்த நிகழ்வுகள் நடந்த விதம், நடந்த வரிசை பற்றியெல்லாம் நம்மால் எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது. இவை எந்த அளவுக்குத் தற்செயலானவை, எந்த அளவுக்குத் திட்டமிட்டவை என்று கண்டறிவதற்கு விரிவான, புறஞ்சார்ந்த, நடுநிலை தவறாத புலனாய்வும் விசாரணையும் தேவை.

தற்செயலாக என்றாலும் சரி, திட்டமிட்ட முறையில் என்றாலும் சரி, நடந்த அவலங்களுக்கு அறப்பொறுப்பு ஏற்க வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் நிறுவுநர் மருத்துவர் இராமதாசு அவர்களும்தான்.

முதலாவதாக, மாமல்லபுரம் விழாவை நடத்தியது வன்னியர் சங்கமா?  பாமக-வா? இரண்டும் ஒன்றுதானா? ஒன்றுதான் என்றால் பாமக-வில் இடம்பெற்று, அதன் வளர்ச்சியில் பங்காற்றிய தோழர்கள் இரும்பொறை குணசேகரன், வள்ளிநாயகம், பழனிபாபா, குணங்குடி அனீபா, ஜான் பாண்டியன், முருகவேல்ராஜன், பசுபதி பாண்டியன், தலித் எழில்மலை, பொன்னுசாமி போன்றவர்களுக்கெல்லாம் நீங்கள் தரும் இடம் என்ன? இப்போதும் பாமக பொதுச் செயலாளராக அறியப்படும் தோழர் வடிவேல் இராவணனை ஒப்புக்குத்தான் முன்னிறுத்துகின்றீர்களா? அவர் தன் சமுதாய மக்களுக்காகத் தனியமைப்பு நடத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா? பாமக-வின் இலட்சிய வழிகாட்டிகளாக கார்ல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் படங்களைப் பயன்படுத்துவீர்களே, அவர்களையும் வன்னியர் சங்கத்தில் சேர்த்து விட்டீர்களா?

சாதி அரசியலும் சனநாயக அரசியலும் ஒத்துப் போக மாட்டா என்பதை விளங்க வைப்பதற்காகவே இந்த வினாக்கள்.

நமக்குத் தெரிந்த வரை வன்னியர் சங்கத்திலிருந்துதான் மருத்துவர் இராமதாசின் பொதுவாழ்வுப் பயணம் தொடங்கியது. வன்னியருக்குத் தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையில் சமூகநீதியின் பாற்பட்ட ஒரு நியாயம் இருந்த படியால் நாமும் அந்தப் போராட்டத்தை ஆதரித்தோம். மருத்துவர் இராமதாசின் பார்ப்பனிய எதிர்ப்பும், தமிழ்ச் சார்பும், தேர்தல் புறக்கணிப்பும், தலித்துகளோடு ஒன்றுபடும் ஆர்வப் பேச்சும் கடந்த கால வன்னிய சாதித் தலைவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டின.  திரு இளையபெருமாளோடு சேர்ந்து அவர் மேற்கொண்ட தீண்டாமை-இழிவுநீக்க முயற்சிகளும், பிற்காலத்தில் குடிதாங்கிக் கிராமத்தில் தன் சாதியினரின் எதிர்ப்பை மீறிச் செயல்புரிந்து ‘தமிழ்க் குடிதாங்கி’ என்று தோழர் திருமாவளவனிடமே பட்டம் பெற்றதும் அவரது மதிப்பை உயர்த்தின.     

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கித் தேர்தல் அரசியலுக்குச் சென்ற பிறகும் தமிழீழ விடுதலை, தமிழகத் தன்னுரிமை, ஒரு-மொழிக் கொள்கை, மண்டல் பரிந்துரைச் செயலாக்கம் ஆகிய நிலைப்பாடுகளில் தமிழ்த் தேசிய, சமூகநீதி ஆற்றல்கள் உங்களோடு தோழமை கொண்டு நின்றோம். இப்போதும் அதுதான் சரியென்று நம்புகிறோம். மண் பயனுற மக்கள் தொலைக்காட்சி நிறுவியதை மருத்துவரின் முதன்மைச் சாதனைகளில் ஒன்றாக இப்போதும் மதிக்கிறோம்.

பாமக-வும் விடுதலைச் சிறுத்தைகளும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் அணிசேர்ந்த போது வரவேற்றோம், துணைநின்றோம், தோள் கொடுத்தோம்.    

தேர்தல் வழிப் பதவி அரசியலில் முக்குளிக்க முக்குளிக்க பாமக-வின் முற்போக்குக் கொள்கைகள் கரைந்து போய் விட்டன. யாரும் கொள்கை பார்ப்பதில்லை, நான் மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? என்பது மருத்துவரய்யாவின் மந்திரக் கேள்வி ஆயிற்று. ஒளிவுமறைவற்ற சந்தர்ப்பவாத அரசியலால் பாமக-வின் பெயர் கெட்டது. இது நம்பத்தகாத கட்சி என்று மாற்றுக் கட்சியினர் மட்டுமல்லாமல், கட்சி சாராத பொதுமக்களும் கருதலாயினர்.

சென்ற 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாமக அடைந்த படுதோல்வி மருத்துவரை விரக்திப் படுகுழியில் தள்ளியிருக்க வேண்டும். இதிலிருந்து எழுந்து வர கொள்கை அரசியலைத் துணைக் கொள்வதற்குப் பதிலாக அப்பட்டமான சாதி அரசியலைக் கையிலெடுத்து விட்டார்.

எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் காதல் எதிர்ப்பு, தலித் எதிர்ப்பு என்ற பிற்போக்கு நிலைப்பாடுகளிடம் மருத்துவர் தஞ்சம் புகுந்து விட்டார். சென்ற 2012 சித்திரை முழு நிலவில் காடுவெட்டி குருவின் பேச்சு இதற்கு முன்னோட்டம் ஆயிற்று. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு காதல் திருமணம், இதையொட்டி ஒரு ‘கௌரவ’த் தற்கொலை என்பவற்றைச் சாக்கிட்டு மூன்று சேரிகளை வன்னிய சாதி வெறியர்கள் தாக்கிச் சூறையாடியதை பாமக ஒப்புக்குக் கூடக் கண்டிக்கவில்லை. மாறாக மருத்துவர் அந்த வன்கொடுமையை நியாயப்படுத்துவதற்காக காதல், கலப்பு மணம், நாடகத் திருமணம் என்றெல்லாம் தத்துவ விசாரம் செய்து, ‘புள்ளிவிவர’ங்களை அள்ளி விட்டதோடு, தலித்துகளை நக்கலடிக்கவும் தயங்கவில்லை. சாதிப் பொருத்தம், சாதகப் பொருத்தம், பணப் பொருத்தம் பார்த்து நடத்தப்படும் ஏற்பாட்டுத் திருமணங்களே உண்மையில் நாடகத் திருமணங்கள் என்ற உண்மையை மறைத்து, செம்புலப் பெயல்நீர் போலும் அன்புடை நெஞ்சம் தான் கலந்திடும் இயல்பான காதலை நாடகம் என்று மருத்துவர் இராமதாசு வர்ணித்தது அவரது பிற்போக்கு உள்ளக்கிடக்கையை உலகறியச் செய்து விட்டது. ஐயா, உங்கள் முற்போக்கு நாடகம் முடிந்து திரை விழுந்து விட்டது.  

இந்த சாதிவெறி அரசியலில் பிற சாதிவெறி ஒட்டுக் குழுக்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்வதும், தலித் அல்லாதார் கூட்டணியை உருவாக்க முயல்வதும் சமூக நீதிக்குக் குழிபறிக்கும் வேலை என்பதில் ஐயமில்லை. பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்று ஈரோட்டுப் பெரியார் சொன்னதை ‘தாடி வைக்காத  திண்டிவனத்துப் பெரியாரு’க்கு யார் புரிய வைப்பது?         

பாமக-வின் இந்த சாதிய அரசியலின் ஒரு வெளிப்பாடுதான் மரக்காணம் கொடுநிகழ்வுகள். வன்னியர் விழாவுக்கு வந்தவர்களிடம் இராமதாஸ்-குரு வகையறா ஊட்டி வளர்த்த சாதி வெறிதான் அவர்களை மரக்காணம் தெற்குக் காலனிக்குள் நுழைந்து தீவைப்புத் தாக்குதலில் ஈடுபடச் செய்துள்ளது. தலித்துகள் ஒருவேளை மறியலில் ஈடுபட்டிருந்தாலும் கூட அது காவல்துறை தீர்க்க வேண்டிய சிக்கலே தவிர சாலையை விட்டு விலகிப் போய் ஊருக்குள் புகுந்து வன்செயல் புரிவதற்கு நியாயமில்லை. இரண்டு வன்னிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்பு விபத்தா கொலையா, கொலை என்றால் செய்தது யார் என்று காவல்துறை புலனாய்வு செய்துவருகிறது. தமிழகக் காவல்துறையை நம்புவதற்கில்லை என்றால் பாமக கோருவது போல் சிபிஐ புலனாய்வுக்கு வகை செய்யலாம். மரக்காணம் வன்செயல்கள் அனைத்துக்கும் சேர்த்து எல்லாத் தரப்பினரும் ஏற்கும் படியான நீதி விசாரணைக்கும் கூட ஆணையிடலாம். சாதிப் பகைமை  மறைந்து நல்லிணக்கம் மீள எவ்விலையும் தரலாம்.

மரக்காணம் அவலத்துக்கு அறப் பொறுப்பு பாமக-வையே சாரும் என்பதில் ஐயமில்லை. அக்கட்சியும் அதன் நிறுவுநரும் அக்கறையோடு தமது அணுகுமுறையை மீளாய்வு செய்து, சாதிய அரசியலிலிருந்தும், அதற்கு வழிகோலிய சந்தர்ப்பவாதப் பதவி அரசியலிலிருந்தும் மீண்டெழுந்து தமிழின நலனுக்கும் சமூகநீதிக்குமான போராட்ட அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

“நுனிக் கொம்பேறினார் அ(.)திறந்தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்” என்ற எச்சரிக்கையை அரசியல் வகையில் பாமக சீர்தூக்கிப்  பார்க்க வேண்டுகிறோம்.

மரக்காணம் நிகழ்வுகளில் மருத்துவர் இராமதாசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது பழி சுமத்துவதை ஏற்க இயலாது. அக்கட்சியின் உள்ளூர் ஆதரவாளர்கள் சிலர் ஆத்திரமூட்டலுக்குப் பலியாகி வன்முறையில் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பை நாம் மறுக்கவில்லை. ஆனால் அக்கட்சித் தலைமை, குறிப்பாகத் தோழர் தொல். திருமாவளவன் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டதும், ஏட்டிக்குப் போட்டியாக சாதிவெறியைத் தூண்டாமல் சமூக நல்லிணக்கத்தையும் தமிழ் மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்தியதும் போற்றுதலுக்குரியது. தம்மிடமிருந்து அம்பேத்கர் சுடர் விருது பெற்ற ஒருவர் முன்பு தர்மபுரியிலும் இப்போது மரக்காணத்திலும் தலித் எதிர்ப்பை அரசியலாகக் கைக்கொண்டிருப்பது குறித்துத் திருமாவே வேதனைப்படுவார்.

மருத்துவர் இராமதாசின் சாதிய அரசியலைக் கண்டிப்பது வேறு. வன்னியர்கள் அனைவரையும் சாதிவெறியர்களாகவும் வன்கொடுமைக்காரர்களாகவும் படம்பிடிப்பது வேறு. வன்னியர்களும் உழைக்கும் மக்களே. அவர்களும் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் ஓர் அங்கமே என்பதை மறந்து விடலாகாது. தலித் அல்லாத பிற்பட்ட வகுப்பினர் அனைவரையும் ஆதிக்க சாதியினர் என்று முத்திரையிடுவது சமூக அறிவியலுக்கும், தமிழ்த் தேசியக் கருத்தியல் மற்றும் நடைமுறைக்கும் புறம்பானது. சாதியடுக்கில் ஆதிக்க சாதி என்பது ஒரு சார்புநிலைக் கருத்தாக்கமாகவே இருக்க முடியும். பார்ப்பனர்களைக் கொடுமுடியாகவும் தலித்துகளை அடிக்கல்லாக்கவும் கொண்ட வர்ண-சாதி இந்துச் சமூக அமைப்பில் இடைச்சாதிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்புநிலையில் ஆதிக்கம், அடிமை ஆகிய இருவகைக்கும் பொருந்தக் காணலாம். ஏன்? பார்ப்பனர்களுக்குள்ளேயும், தலித்துகளுக்குள்ளேயும் கூட, இந்தப் பிரிவுகள் இருப்பது மெய்.      

தமிழ்ச் சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதியினர் என்று ஒதுக்கி வைத்து விட்டுத் தமிழ்த் தேசியம் வெல்வது முயற்கொம்பே. தீண்டாமைக்கும் சாதிய வன்கொடுமைகளுக்கும் எதிரான போராட்டத்தை உறுதியாக முன்னெடுக்கும் போதே தமிழின ஒற்றுமைக்கு அடிப்படையான தாழ்த்தப்பட்டோர்-பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமைக்காகவும் போராடுவது புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தட்டிக்கழிக்கக் கூடாத ஒரு பணி.

தோழர் திருமா பதவி அரசியலுக்காக எத்தனையோ விட்டுக் கொடுத்தும் கூட, இந்த நெருக்கடியில் அவருடைய தேர்தல் கூட்டாளிகள் நியாயத்தின் பக்கம் நிற்பதை விடவும் வாக்கு வங்கி சார்ந்த சாதிக் கணக்கு பார்த்தே வாய் திறந்தார்கள் என்பதை அவர் கவனித்திருப்பார் என நம்புகிறோம்.

வேடிக்கை என்னவென்றால், மருத்துவர், திருமா இருவருமே போராட்ட அரசியலில் இருந்துதான் பதவி அரசியலுக்குச் சென்றார்கள். இருவருமே  தேர்தல் புறக்கணிப்பில் தீவிரமாக இருந்து விட்டுத்தான் சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலில் குதித்தார்கள். மரக்காணம் அவலங்களிலிருந்து மீண்டு வருவதென்றால் சந்தர்ப்பவாதப் பதவி அரசியலை விட்டு உரிமைப் போராட்ட அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்று பொருள்.

மரக்காணம் தொடர்பான ஜெ. அரசின் அணுகுமுறை அரசுக்கும் காவல்துறைக்கும் உள்ள பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகவும், எதிர்காலத்தில் சனநாயக உரிமைகளைப் பறிப்பதற்குக் காரணங்களை உருவாக்குவதாகவும் உள்ளது.

கோரிக்கை எதுவானாலும் சரி, ஓர் அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்த வந்த மருத்துவர் இராமதாசைத் தளைப்படுத்தி சிறையில் அடைத்ததும், அவர் பிணையில் வெளியே வர முடியாத படி புதுப் புது (அல்லது பழைய பழைய) வழக்குகளில் மீண்டும் மீண்டும்  தளைப்படுத்துவதும் ஜெ. அரசின் பழிவாங்கும் அரசியலுக்கே சான்றாகும். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான வழக்குகளை விலக்கிக் கொள்ளும்படி இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய அதே போழ்தில் மருத்துவர் இராமதாசு கூடங்குளம் வழக்கில் தளைப்படுத்தப்பட்டது ஜெ. அரசின் வக்கிரத்தையே காட்டுகிறது.    

மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் நீங்கலாக மற்ற அனைத்து  வழக்குகளையும் விலக்கிக் கொள்வது இயல்புநிலை மீளத் துணைசெய்யும். மருத்துவர் இராமதாசின் சாதிய அரசியலை எதிர்க்கும் போதே அரசின் தயவில் அவரோடு கணக்குத் தீர்க்கத் தேவையில்லை. சாதிய அரசியலை சமூக நீதி அரசியலால் எதிர்கொண்டு முறியடிக்கும் தெளிவும் துணிவும் நமக்குத் தேவை.

எவ்வித நிபந்தனையும் இன்றி மருத்துவர் இராமதாசை உடனே விடுதலை செய்யக் கோருகிறோம். (இதை எழுதி முடிக்கும் நேரத்தில் மருத்துவர் இராமதாசு பிணை விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.) 

பொதுவாக மற்றவர்கள் மீதான வழக்குகளையும் விலக்கிக் கொண்டு மரக்காணம் வன்முறை, மகாபலிபுரம் கூட்டம், மற்றும் பின்னிகழ்வுகள் தொடர்பாகச் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்யக் கோருகிறோம். வன்செயல்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கக் கோருகிறோம்.

சட்டப் பேரவை உறுப்பினர் குருவுக்கு எதிராக தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருப்பதைக் கண்டிக்கிறோம். காடுவெட்டி குருவின் தடாலடி மேடைப் பேச்சால் ஒரு தேசத்தின் பாதுகாப்புக்கே ஆபத்து என்றால் அந்தத் தேசம் ஒழிந்து போவதே நல்லது. தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற ஆள்தூக்கிச் சட்டங்கள் எவருக்கு எதிராக ஏவப்பட்டாலும் எதிர்க்கும் கொள்கைத்  தெளிவும் திடமும் தமிழக சனநாயக ஆற்றல்களுக்குத் தேவை.    

இறுதியாக, மாணவர் போராட்டத்தால் தலைநிமிர்ந்த தமிழன்னை மரக்காணத்தால் தலைகுனிந்து நிற்கிறாள். அவளை மீண்டும் தலைநிமிரச் செய்யும் பொறுப்பு நம் அனைவருக்குமுண்டு.

-   தியாகு, பொதுச் செயலாளர், த.தே.வி.இ.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23891:2013-05-13-15-23-48&catid=1:articles&Itemid=264

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகள் வரும்போதுதான் திருமாவளவன் என்பவர் தமிழ் நாட்டில்

அரசியல் செய்கின்றார் எனத் தெரிய வருகின்றது.

 

திமுக வை விட்டால் கூட்டணியில்  இவரைச் சேர்ப்பதற்கு இன்றைய நிலையில்

வேறு எந்தக் கட்சியும் தயாராக இல்லை  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.