Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயம் – பணம் - பலம் == சுப. உதயகுமாரன்

Featured Replies

பயம் – பணம் - பலம்   == சுப. உதயகுமாரன்

 



நம்மில் பெரும்பாலானோருக்கு ஏதாவது ஒரு பயம் இருக்கிறது. மரண பயம் (இறையச்சம், உயிரச்சம்), முதுமை பயம், பாதுகாப்பின்மை (insecurity) பயம் – இப்படி ஏதாவதொன்று மனதின் பின்புலத்தில் நிழலாடியவாறே நம் வாழ்வின் இயல்புகளையும், இயக்கங்களையும் வெவ்வேறு அளவுகளில், பற்பல வழிகளில் பாதிக்கிறது. சிலருக்கு மனம் சார்ந்த பயங்கள் மேலெழுந்து வாழ்வையே சிதைக்கின்றன. இம்மாதிரியான நோயாகிப்போன பயங்களை ஆங்கிலத்தில் ஃபோபியா (phobia) என்று குறிப்பிடுகிறார்கள். இருட்டில் நுழைய பயம், உயரத்தில் ஏற பயம், தண்ணீரைக் கண்டால் பயம் – இப்படி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன பலருக்கும்.

மனித பயங்களுள் பெரிய பயம் பாதுகாப்பின்மை (insecurity) பயம்தான். பாதுகாப்பு (security) அல்லது பாதுகாப்பு உணர்வு (feeling of security) என்பது என்ன? தனிமனித வாழ்க்கை அனுபவங்களை வைத்துத்தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும். நம்மில் கிட்டத்தட்ட அனைவருமே பாதுகாப்பாக உணரவே விரும்புகிறோம். அந்தப் பாதுகாப்பை எப்படிப் பெறுவது என்பதுதான் கேள்வி. மிகப்பெரும்பாலானோர் பணம் மூலம் பாதுகாப்பைப் பெறலாம் என முடிவெடுத்து, அதன் பின்னால் ஓடுகிறோம். பணம் என்றால் பிணமும் வாய் திறப்பது அதனால்தான்.

தமிழகத்திலும், இந்தியாவிலும் பலர் என்னை கோடிக் கணக்கில் வெளிநாட்டுப் பணம் வாங்கிப் பதுக்கி வைத்திருக்கிறவன் என்றே நினைக்கின்றனர். பிரதமர் மீதும், மத்திய அமைச்சர் மீதும் வழக்குத் தொடுத்த பிறகும், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பணம் வாங்கியிருப்பதாக நிரூபித்தால் நான் தூக்குத் தண்டனைக்கு தயாராயிருக்கிறேன் என்று அறிவித்தப் பிறகும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை. காரணம் பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் பெரும்பாலும் பணத்துக்காகத்தான் வருகிறார்கள் என்பதும், பணம் இல்லாமல் பொது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாது என்பதும்தான் நமது நாட்டின் யதார்த்தம், பொது புத்தி.

எல்லா சாதாரண மனிதர்களையும் போல எனக்கும் பாதுகாப்பின்மை பயம் ஓரளவு இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாடுகளுக்கோ, இந்தியாவில் உள்ள ஊர்களுக்கோ சென்று பணம் சம்பாதிக்க இயலவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதி சம்பாதித்திருப்பது வெறும் ரூ. 16,000 தான். அந்த காசோலைகளைக் கூட எனது வங்கிக் கணக்கில் போட முடியாத நிலை. கடவுச்சீட்டு முடக்கப்பட்டு விட்டது. குழந்தைகளின் உயர்கல்விக்கு என்ன செய்வோம், எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்பன போன்ற பல கேள்விகளும், அச்சங்களும் மனதில் அவ்வப்போது எழுந்து மறைகின்றன.

ஆனால் இடிந்தகரை வாழ்வில் பணம் எனக்கு ஒருப் பிரச்சினை அல்ல. பங்குத்தந்தை இல்லத்தில் தங்குகிறேன். ஊர் மக்கள் தங்கள் செலவில் உணவு அளிக்கிறார்கள். துணிகள் போன்ற விடயங்களை வீட்டிலிருந்து மனைவி அனுப்புகிறார். அவர் எப்போதோ தந்த ரூ.1,000 முடி வெட்டுவதற்கும், சோப் போன்ற பொருட்கள் வாங்குவதற்கும் இதுவரை உதவியது. சென்ற வாரம் என்னைப் பார்க்க வந்த எனது தாயார் தனது ஓய்வூதியத்திலிருந்து ரூ. 2,000 தந்தார்கள்.

நாம் வாழும் உலகமயமாக்கப்பட்ட உலகில், பயங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. அதிக பயத்திற்கு விடை அதிக பணம் எனும் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. பணம் இல்லாதவர் சோம்பேறி, முயற்சியற்றவன், தகுதியற்றவள், தோல்விகரமானவன் என்றெல்லாம் கருதப்படுகிறார், நடத்தப்படுகிறார். நான் சிறுவனாய் இருந்த 1960களில் ஏழ்மையை எதிர்கொள்வது ஓரளவு எளிதானதாக இருந்தது. ஒட்டு மொத்த சமூகமே ஏழ்மையாக இருந்தது; எளிமைப் போற்றப்பட்டது; வறுமையும் செழுமையும் அருகருகே ஆடிக்கொண்டிருக்கவில்லை; சமூக பொருளாதார வாய்ப்புக்கள் குறைவாகவே இருந்தன; நுகர்வு கலாச்சாரமில்லை; ஆடம்பரப் பொருட்கள் ஏதுமில்லை; எல்லாவற்றுக்கும் மேலாக, ஏழைகளுக்கு சமூக அரவணைப்பு ஓரளவு இருந்தது. இன்றையக் காலகட்டத்தில் ஏழ்மையை எதிர்கொள்ளும் பிரயத்தனம் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும்.

பணம்தான் பலம் என்றால், அதை அடைய வழி என்ன? உலகம் “பணம், எந்திரம், சந்தை” (Money, Machine, Market) என்ற மும்மையுடன் (Trinity) இயங்கிக்கொண்டிருக்க, தனி மனிதர்கள் “டாலர், தங்கம், பங்கு” (Greenbacks, Goldbars, Shareholdings) என்ற மும்மையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். குறுகிய காலத்தில், எளிய வழியில், நிறையப் பணம் சம்பாதிப்பதே உய்வடையும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது! அரசு அதிகாரியாக இருந்தால் தன் சக்திக்கேற்ப லஞ்சம் வாங்கலாம், ஊழல் செய்யலாம். அதிகாரமற்றவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி பணம் சம்பாதிக்கலாம். வேலையற்றவர்கள், வீணர்கள், சமூக விரோதிகள், சாக்கடைகள் எல்லாம் அரசியலில் குதிப்பதற்கு காரணம் பணம் சம்பாதிக்க, அல்லது தவறான வழியில் சம்பாதித்த பணத்தைக் காப்பாற்ற என்பதுதான் இன்றைய விதியாக இருக்கிறது.

அரசியலுக்கு வருகிறவர்கள் பணத்தைத் தேடி வைத்துவிட்டால், தானும், தன் குடும்பமும் பாதுகாப்பாக வாழலாம், தனது பொது வாழ்க்கையையும் பாதுகாப்பாக அமைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர்.
“பணமும் புகழும் உடைத்தாயின் பொதுவாழ்க்கை
பண்பும் பயனும் அது”
என்பது நமது சமூகத்தின் நவீன திருக்குறளாகி இருக்கிறது. அதிகாரிகள், வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்துத் தரப்பினருமே “பணமே பலம், அதுவே பாதுகாப்பு” என்று அலைகின்றனர். பணம் சேர்ந்துவிட்டால் இன்னும் இன்னும் வரவேண்டும், வந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை, வெறி தோன்றுகிறது. பணக்கார வர்க்கத்தில் உறுப்பினரானதும், உங்கள் பார்வை, பழக்கவழக்கங்கள், விழுமியங்கள் அடியோடு மாறி விடுகின்றன. நாளடைவில் பணம் ஒரு மன நோயாகிவிடுகிறது.

சமூகம் ப்ளூட்டோகிராஃபி (Plutography) எனும் குழிக்குள் விழுந்து குமைகிறது. காமவெறி (Pornography) போன்றதே இந்தக் காசுவெறி (Plutography). இந்த வார்த்தையை உருவாக்கிய டாம் ஊல்ஃப் (Tom Wolfe) இதனை “பணக்காரர்களின் செய்கைகளைப் பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டுவது” என்று விவரிக்கிறார். நமது தொலைக்காட்சி விளம்பரங்களில், நிகழ்ச்சிகளில் தினமும் பார்க்கிறோமே? அமெரிக்காவில் இதற்கென “Rich and Famous” என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியே ஒளிபரப்பப்படுகிறது. விமானங்களின் இருக்கைகளில் இன்றைய நவீன வாழ்க்கைக்குத் “தேவையான” விலை மதிப்புமிக்கப் பொருட்களின் பட்டியல் புத்தகம் இப்போது வைக்கப்படுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னால் முகேஷ் அம்பானி ஐந்து பேர் கொண்ட தனது குடும்பத்துக்கு 27-மாடி வீடு ஒன்றைக் கட்டினார். அதற்கு ஆண்டிலியா (Antilia) என்ற கற்பனைத் தீவு ஒன்றின் பெயரைச் சூட்டினார். அந்த வீட்டின் மாடியில் மூன்று ஹெலிகாப்டர் தளங்களும், நீச்சல் குளமும், திரைப்பட அரங்கும், உடற்பயிற்சி அரங்கும், பாரும் (Bar) உள்ளன. வீட்டின் முதல் ஆறு தளங்களில் 160 கார்களை நிறுத்தும் வசதி உள்ளது. முகேஷ் அம்பானியின் வீடு இந்தியாவிலுள்ள முக்கியமானவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைகிறது.

இந்திரா காந்தி நகர்வாலா ஊழலில் 60 லட்சம் லஞ்சம் பெற்றதாகச் சொல்வார்கள். ஆனால் இன்றோ 2G ஊழல் ஒரு லட்சத்து எழுபத்தாறு கோடி என்றும், நிலக்கரி ஊழல் ஒரு லட்சத்து என்பத்தாறு கோடி என்றும் வளர்ந்திருக்கின்றன. நாம் பலம் வாய்ந்தவர்களாகி விட்டோம். தனிமனித அளவில் உங்கள் கைபேசி, மடிக்கணினி, காலணி போன்றப் பொருட்கள்தான் உங்கள் தரத்தை, மதிப்பை, மரியாதையை நிர்ணயிக்கின்றன. நீங்கள் பலம் வாய்ந்தவராகிவிட்டீர்கள்! பணத்தால் பயம் விலகிவிட்டது!!

“பயம் கொள்ளேல், பணம் விரும்பேல்” என்பதல்ல எனது வாதம். “நெறி தவறேல், வெறி கொள்ளேல்” என்பதுதான்! “பயம் – பணம் – பலம்” எனும் மும்மைப் பிரச்சினைக்கு விடை ஆழமானக் கல்வி – அளவான செல்வம் – அளவற்ற வீரம்!

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
யூன் 3, 2013
8440_565235970193857_660635629_n.jpg

 

 

https://www.facebook.com/SFFETN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.