Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பும் முதலமைச்சருக்கான வேட்பாளரும் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பும் முதலமைச்சருக்கான வேட்பாளரும் - நிலாந்தன்

14 ஜூலை 2013

வடமாகாண சபைக்கான கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் யார் என்பது பற்றிய முடிவுகள் வெளிவராத ஒரு நிலையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

கிடைக்கப்பெறும் செய்திகளின் படி, மாவை சேனாதிராசாவிற்கும், ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் கூட்டமைப்பு இரண்டு பட்டிருப்பதாகத் தெரிகிறது.

தமிழரசுக் கட்சியும் உட்பட கூட்டமைப்பில் உள்ள ஏனைய எல்லாக் கட்சிகளும் மாவை சேனாதிராசாவையே முன்மொழிவதாகத் தெரிகிறது.

ஆனால், கட்சித் தலைமையும் சுமந்திரனும் ஓய்வு பெற்ற நீதியரசரை முன்மொழிவதாகத் தெரிகிறது. இருப்பினும், பெரும்பாலும் கதைத்துப்பேசி ஒரு சமரச முடிவுக்கே வரக்கூடும் என்று ஒரு தகவல் உண்டு.

மாவையை ஆதரிப்பவர்கள் பின்வரும் காரணங்களைக் கூறுகின்றார்கள். முதலாவது அவர் கட்சிக்குள் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், ஏறக்குறைய கட்சியின் இரண்டாம் நிலையிலும் இருப்பவர்.

இரண்டாவது, அவர் கட்சியின் எழுச்சி, வீழ்ச்சிகளின் போது கட்சியோடு நின்றவர்.

மூன்றாவது, அவர் எளிதில் அணுகப்படக்கூடியவர். அதோடு மற்றவர்களோடு கூடிய பட்சம் அனுசரித்துப்போகக்கூடியவர்.

நாலாவது, கட்சிக்குள் அவருக்கே ஆதரவு அதிகமாயிருக்கிறது. எனவே, அவரை தெரிந்தெடுப்பதே ஜனநாயகமான ஒரு முடிவாயிருக்கும்.

ஐந்தாவது, அவரைக் கூட்டமைப்புக்குள் உள்ள எல்லாக் கட்சிகளும் முன்மொழிவதால் அவரைத் தெரிவு செய்வதன் மூலம் கட்சியின் ஐக்கியத்தைப் பாதுகாக்க முடியும்.

இவையெல்லாம் மாவையை முன்மொழிபவர்கள் கூறும் நியாயங்கள். இவை தவிர வேறொரு காரணமும் உண்டு. அதாவது, மாவைக்கு மேற்கண்ட தகுதிகள் அனைத்தும் இருந்தபோதிலும் அவருக்குத் தலைமைத்துவப் பண்பு குறைவு என்றொரு பரவலான கருத்து உண்டு. அவ்விதம் தலைமைத்துவப் பண்பு குறைந்த ஒருவரை கட்சியின் இரண்டாம் இடத்தில் வைத்துப் பலப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் அவரைக் கையாள்வது இலகுவாயிருக்கும் என்று தமிழரசுக் கட்சியல்லாத ஏனைய கட்சிகள் சிந்திக்க இடமுண்டு. பதிலாக, கட்சிக்கு வெளியில் உள்ள ஒருவரை உள்ளே கொண்டு வந்து அவரை கட்சியின் இரண்டாம் இடத்தில் பலப்படுத்தினால் சிலசமயம் எதிர்காலத்தில் தமது இருப்பு கேள்விக்கிடமாக்கப்படலாம் என்றொரு அச்சமும் அவர்கள் மத்தியில் தோன்ற இடமுண்டு.

அதாவது, மாவையின் ஆளுமைக் குறுக்கு வெட்டு முகத்தோற்றம் அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், வெளியிலிருந்து வரக்கூடிய ஓராளுமையானது எதிர்காலத்தில் பதவியில் தன்னைப் பலப்படுத்திக்கொண்ட பின்னர் கையாளக் கடினமான வளர்ச்சிகளைப் பெறக்கூடும் அல்லது இவர்களிற்குச் சவாலாகவும் எழுச்சி பெறக்கூடும். எனவே, மாவையைத் தெரிவு செய்வதன் மூலம் தமது இருப்பைப் பலப்படுத்த வேண்டிய ஒரு தேவை மேற்படி கட்சிகளுக்கு உண்டு.

ஆனால், கூட்டமைப்பின் தலைமை வேறுவிதமாகச் சிந்திப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பான உரையாடல் ஒன்றின்போது சம்பந்தர் High Profile ஐ உடைய ஒருவரே நியமிக்கப்படுவார் என்று கூறியிருக்கிறார். High Profile என்று அவர் கருதியது மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் சக்தி மிக்க உயர் தோற்றப் பொலிவுதான். சம்பந்தரும், சுமந்திரனும், அவர்களுடைய ஆதரவாளர்களும், குறிப்பாக, கொழும்பு வாழ் படித்த தமிழ் உயர் குழாத்தினரும் அப்படியொரு உயர் தோற்றப் பொலிவுடைய ஆளுமையே நியமிக்கப்பட வேண்டும் என்று வாதிடுவதாகத் தெரிகிறது. ஓய்வுபெற்ற நீதியரசருக்கு அத்தகைய தோற்றப் பொலிவொன்று உண்டு என்றும், அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது. ஒரு முதலமைச்சரை வெளிநாட்டுத் தலைவர்களும், பிரதிநிதிகளும் சந்திக்கும்போது அவர் உயர் தோற்றப்பொலிவுடையவராக இருக்குமிடத்து அதற்கென்று ஒரு தனிப்பெறுமதி உண்டு என்றும் அவர்கள் நம்புகின்றார்கள். அண்மையில் மன்னார் ஆயர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த கருத்துக்களிலும் இது வலியுறுத்தப்பட்டிருந்தது. அதாவது ராஜீய உறவுகளைக் கையாளவல்ல, வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஈடுகொடுக்கவல்ல ஓராளுமையே முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று.

இத்தகைய ஒரு பின்னணியில் இன்று இக்கட்டுரையானது யாருக்கு மேற்படி உயர் தோற்றப் பொலிவு அதிகமுண்டு என்ற விவாதத்தில் இறக்கப்போவதில்லை. மாறாக, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு அரசியல் சூழலில் கூட்டுக் காயங்களிலும், கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்குமொரு சமுகத்தைப் பொறுத்தவரை எது உயர் தோற்றப் பொலிவாக இருக்க முடியும்? என்பது பற்றியும் அத்தகைய உயர் தோற்றப் பொலிவைக் கட்டியெழுப்பும் தகைமைகள் எவையென்பது பற்றியும் பார்ப்பதே இன்று இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலில் ஒரு விசயத்தில் தெளிவாயிருக்க வேண்டும். மாகாணக் கட்டமைப்பு எனப்படுவது அப்படியொன்றும் சமஷ்டிக் கட்டமைப்பு அல்ல. வெளிநாட்டுத் தலைவர்கள், ராஜதந்திரிகளுடன் கலந்துபேசி முடிவுகளை எடுக்குமளவுக்கு அது ஒரு தன்னாட்சிக் கட்டமைப்பும் அல்ல. அது ஒரு நொண்டிக்குதிரை. யார் ஏறி அமர்ந்தாலும் அது நொண்டி நொண்டித்தான் நடக்கும். மேலும் அதன் கடிவாளம் முதலமைச்சரிடம் மட்டும் இருக்கப்போவதில்லை. ஆளுநரிடமும் இருக்கும். இத்தகைய பொருள்படக் கூறிக் முதலமைச்சர் ஒரு அரைச்சாரதி தான். இப்படிப்பார்த்தால், உள்ளதோ ஒரு நொண்டிக் குதிரை அதற்கும் இரண்டு சாரதிகள் இந்த லட்சணத்தில் குதிரையோட்டி உயர் தோற்றப் பொலிவுடன் இருந்து எதைச் சாதிக்கப்போகிறார்;?

முதலில் அவர் ஆளுநருடன் முட்டுப்படவேண்டியிருக்கும். முதலமைச்சர் ஓர் உயர் தோற்றப் பொலிவுடையவராக இருக்குமிடத்து அவர் ஆளுநருக்குச் சவாலாக விளங்க முடியும் என்பது ஒரு மிகை மதிப்பீடே. ஏனெனில், எனது கட்டுரைகளில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல், ஆளுநர் ஒரு கருவி மட்டுமே. கர்த்தா அல்ல. பிரச்சினையாகவிருப்பது கட்டமைப்புத்தான். மாகாணக் கட்டமைப்பு மட்டுமல்ல. முழு இலங்கைத்தீவிலுடையதும் அதிகாரப் படிநிலைக் கட்டமைப்பே (Bureaucratic Structure) முழுக்க முழுக்க இனச்சாய்வுடையதுதான்.

அந்த அதிகாரப் படி நிலைக் கட்டமைப்பின் பிரதிநிதிதான் ஆளுநர். எனவே, மிகப் பலவீனமான ஒரு அதிகாரப் பகிர்வு அலகை நிர்வகிப்பதற்கு எத்தனை பெரிய மகா ஆளுமை வந்தாலும் ஓர் எல்லைக்கு மேல் எதையும் சாதித்துவிட முடியாது. வேண்டுமானால், சிவில் சமூகம் கோரியிருப்பது போல வடமாகாண சபையை ஒரு பரிசோதனைக் களமாக மாற்றலாம். அதன் மூலம் மாகாண கட்டமைப்பின் போதாமைகளை வெளியுலகிற்கு நிருபித்துக்காட்டலாம். இந்த அடிப்படையில் வேண்டுமானால், ஓர் உயர் தோற்ற பொலிவுடைய முதலமைச்சர் தேவை என்று எடுத்துக்கொள்ளலாம்.

உலகில் உள்ள அதிகாரப் பகிர்வுக்குரிய கட்டமைப்புகளில் குறிப்பாக, அமெரிக்க, ஐரோப்பியக் கண்டங்களில் உள்ளவற்றுடன் ஓப்பிடுகையில், மாகாண சபையானது வரிசையில் மிகக் கீழ் மட்டத்தில்; தான் காணப்படுகிறது. அதிகம் போவான் ஏன்? இந்தியாவின் மாநிலக் கட்டமைப்பை எடுத்துக் கொள்வோம். அது மாகாண சபைகளை விட உயர்வானது. அது ஓர் அரைச் சமஷ்டிக் கட்டமைப்பாகும். அங்கெல்லாம் முதலமைச்சர்கள் உயர் தோற்றப் பொலிவுடன் காணப்படுகின்றார்களா? அல்லது அத்தகைய உயர் தோற்றப் பொலிவுடைய முதலமைச்சர்கள் தமது மாநிலத்திற்கும் - மைய அரசிற்கும், மாநிலத்திற்கும் - வெளிநாடுகளுக்கும் இடையிலான உறவில் எத்தகைய புதிய வழிகளைத் திறந்துவிட்டிருக்கிறார்கள்?

இந்திய மாநிலங்களின் நிலைமையும் வடமாகாண சபையின் நிலைமையும் ஒன்றல்ல என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஏனெனில், வடக்கிலிருப்பது பூரணமான ஒரு இயல்பு வாழ்க்கை அல்ல. அது ஒரு ''இயல்பற்ற இயல்புதான்'. அதாவது, ஆயுத மோதல்கள் முடிந்துவிட்டன. ஆனால், யுத்தத்திற்குக் காரணமான முலகாரணங்கள் அப்படியே கூர்கெடாது காணப்படுகின்றன. எனவே, இயல்பற்ற இயல்பினுள் வாழும் ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் எத்தகைய உயர் தோற்றப் பொலிவுடையவராக இருக்கவேண்டும்?

மாகாண கட்டமைப்பை ஏதோ பெரிய தன்னாட்சிக் கட்டமைப்பாக உருவகித்து, அதன் முதலமைச்சருக்கு இருக்க வேண்டிய உயர் தோற்றப் பொலிவைப் பற்றி விவாதி;க்கப்படுகிறது. இதை கவித்துவமாகக் கூறின்... பட்டு வேட்டிக்காகப் போராடிப் போய், கோவணத்துடன் நிற்கும் ஒரு கால கட்டத்தில் அந்தக் கோவணத்துக்குச் செய்யக்கூடிய சரிகை வேலைப்பாடுகள் குறித்து விவாதிப்பதைப் போன்றதே இது எனலாம்.

எனவே, ஒரு நொண்டிக் குதிரையை ஓட்டப்போகும் அரைச் சராதிக்கு இருக்க வேண்டிய தகைமைகளைக் குறித்தே இப்பொழுது விவாதிக்கப்படுகிறது. தனக்கென்று சுயாதீனமான வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடியாத ஒரு மாகாண சபையானது சுயாதீனமான ராஜிய உறவுகளை எதையும் பேண முடியாது. வெறுமனே சம்பிரதாய பூர்வமான சந்திப்புகளுக்கு மட்டுமே அங்கு இடமுண்டு. எனவே, நொண்டிக் குதிரையை ஓட்டப்போகும் அரைச் சாரதி யானையேற்றம் பயின்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் மொழிப்புலமையும், கல்வித் தகைமையும், சமூக அந்தஸ்தும் மட்டும் தலைமைத்துவத்தை உருவாக்கிவிடுவதில்லை. அண்மை நூற்றாண்டுகளில் மேற்கத்தேய ஜனநாயக பரப்புகளில் தோன்றிய பெரும்பாலான தலைவர்கள் கல்வித் தகைமைகளை உடையவர்கள் என்பதை இககட்டுரை ஏற்றுக்கொள்கிறது. கல்வித் தகைமையும் ஆங்கிலப் புலமையும் ஓரளவுக்குத் தொடர்புடையவைதான். அதேசமயம் கெடுபிடிப் போர் காலத்தில் சீன, ரஷ்ய போன்ற ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டிராத நாட்டின் தலைவர்கள் பலர் அவர்களுக்கு ஆங்கிலப் புலமை இருந்தபோதும் கூட உத்தியோகபூர்வ சந்திப்புகளின்போது மொழிபெயர்ப்பாளர்களுடன் வந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மேலும், தகவல் புரட்சியின் வேக வளர்ச்சியோடு ஆங்கிலமானது ஓர் தொடுப்பு மொழியாக (Link Language) வளர்ச்சி பெற்றுவரும் ஒரு பின்னணியில் உலகின் பெரும்பாலான தலைவர்கள் பிறமொழிப்புலமையுடன் இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

இயல்பான வாழ்க்கையை உடைய ஒரு ஜனநாயக அரசியல் சூழலில், உலகப் பொதுவான நியமங்கள் வழமைகளைப் பற்றி உரையாடலாம். ஆனால், ''இயல்பற்ற இயல்பினுள்' வாழும் ஒரு மக்கள் திரளைப் பொறுத்து அவ்வாறு எதிர்பார்க்கலாமா? இங்கு இயல்பற்ற இயல்பு எனப்படுவது அதிகம் அழுத்திக் கூறப்படவேண்டிய ஓர் அம்சமாகும். எல்லாம் இயல்பிற்குத் திரும்பிவிட்டதாக நம்பும் போதே உயர் தோற்றப் பொலிவைக் குறித்த உயர் குழாத்து அளவுகோலை பிரயோகிக்கும் ஒரு நிலையும் உருவாகியது. மாறாக இயல்பற்ற இயல்பினுள் வாழும் ஒரு மாகாண சபைக்கு தலைமை தாங்கப் போகும் ஒருவருக்கு எத்தகைய தகைமைகள் இருக்க வேண்டும்?.

நிச்சயமாக அது மேலிருந்து கீழ் நோக்கி நியமிக்கப்படும் ஒரு ரெடிமேட் தலைமையாக இருக்க முடியாது. மாறாக, அது கீழிருந்து மேல் நோக்கித் தானாக உருவாக வேண்டும். படிப்படியான உருவாக்கம் என்பது இங்கு மிக முக்கியமான ஒரு பண்பாகும். உலகின் செழிப்பு மிக்க எல்லா ஜனநாயகப் பரப்புகளிலும் இதைக் காண முடியும். அங்கெல்லாம் தலைமைகள் தொழில் சார் தகைமைகளோடு படிப்படியாக உருவாக்கப்படுகின்றன. மிக அடிமட்டத்திலிருந்து அர்ப்பணிப்பு, விசுவாசம், பற்றுறுதி போன்றவற்றுக்கூடாகவே தலைமைத்துவம் உருவாக்கம் பெறுகிறது. ஜனநாயக நாடுகளில் மட்டுமல்ல, சீனாவைப் போன்ற ஒரு கட்சி ஆட்சி முறைமைக்குள்ளும் தலைமைத்துவம் எனப்படுவது படிப்படியாக வார்த்து எடுக்கப்படுவதுதான்.

தனது பெரும் செயல்களின் மூலமும், தனது மக்களின் நலன்களைப் பொறுத்த வரை விட்டுக்கொடுப்பற்ற அதேசமயம் நடைமுறைச் சாத்தியமான முடிவுகளை எடுப்பதன் மூலமும், அந்த முடிவுகளின் பொருட்டு எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதன் மூலமும் இறந்த காலத்திலிருந்து படிப்பினைகளைப் பெறுவதன் மூலமும்தான் ஒரு தலைமைத்துவம் கீழிருந்து மேல் எழுகிறது. தனது ஜனங்களின் வலியை உணரவும், பகிரவும் கூடிய இயத்தைப் பெற்றிருப்பதால் அது ஒரு ஜனவசியம் மிக்க தலைமைத்துவமாக இருக்கும். தனது ஜனங்கள் மத்தியில் ஜனவசியம் மிக்க தலைமைதான் வெளியாரின் மத்தியிலும் உயர் தோற்றப் பொலிவுடன் மிளிர முடியும். அதாவது, உள்ளுரில் ஜனவசியமாக இருப்பது வெளியரங்கில் உயர் தோற்றப் பொலிவாக அதன் அடுத்த கட்ட வளர்ச்சியைப் பெறுகிறது.

ஆனால், கூட்டமைப்பின் தலைமைத்துவமானது அப்படிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை. அப்படிச் சிந்திக்க விரும்பவில்லையா? அல்லது சிந்திக்க முடியவில்லையா? என்பதே இப்போதுள்ள கேள்வி. சிந்திக்க முடியவில்லை என்பது ஒரு யதார்த்தம் என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஏனெனில், கூட்டமைப்பானது முழு அளவில் சுயாதீனமாகச் செயற்படத் தொடங்கி நான்கு ஆண்டுகளே ஆகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை அது கிளிநொச்சியிலிருந்து கிடைத்த உத்தரவுகளை நிறைவேற்றும் ஒரு கட்சியாகவே தோற்றமளித்தது. ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பின் நிழலாக அது காணப்பட்டது. ஆனால், அந்த அமைப்பின் வீழ்ச்சிப் பின் அந்த நிழலே மையமாக செயற்பட வேண்டிய ஒரு அரசியல் சூழல் உருவாகியது.

எனவே,; கூட்டமைப்பானது கடந்த நான்காண்டுகளாகத் தான் தனது சொந்தக் காலில், சொந்தப் பலத்தில் நின்று சுயமுடிவுகளை எடுத்து வருகிறது. அந்த முடிவுகள் ஆகக்கூடிய பட்சம் ஜனநாயகமானவைகளாக இல்லாமலும் இருக்கலாம். இப்பொழுதும் கூட முதலமைச்சருக்கான ஒரு வேட்பாளரைக் குறித்த சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வர அவர்கள் உட்சுற்று வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்லத் தயாரில்லை. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகக் கட்டமைப்பானது மேலும் பலப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் தலைவர்கள் கீழிலிருந்து மேலுருவாகும் ஒரு பாரம்பரியமும் வளர்த்தெடுக்கப்படும். இல்லையெனில் மேலிருந்து நியமிக்கப்படும் தலைமைத்துவங்களையே தேடவேண்டியேற்படும்.

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, இத்தகவல்கள் சரியாக இருந்தால் விக்னேஸ்வரனுக்கு இரண்டு ஆண்டுகளும், மாவைக்கு இரண்டு ஆண்டுகளும் தருவது என்று ஆலோசிக்கப்படுவதாகக் கூற்ப்படுகிறது. கீழிருந்து மேலெழுந்த ஒருவரும், மேலிருந்து கீழ் நோக்கி நியமிக்கப்பட்ட ஒருவரும்.

இது எதைக் காட்டுகிறது என்றால், கூட்டமைப்பின் ஜனநாயகக் கட்டுமானம் மேலும் பலப்படுத்தப்பத்தப்பட வேண்டும் என்பதைத்தான். அப்படிச் செய்தால்தான் கூட்டமைப்பு காலாவதியாவதையும் தடுக்கலாம். அதோடு கீழிலிருந்து மேல் நோக்கி எழும் தலைவர்களையும் உருவாக்கலாம்.

ஈழத்தமிழர்கள் சமயம் பார்த்தோ சாதி பார்த்தோ பிரதேசம் பார்த்தோ தமது தலைமைகளைத் தெரிந்தெடுப்பது இல்லை என்பதை ஏற்கனவே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். . பெருமளவுக்கு இந்துக்களாகவுள்ள ஈழத்தமிழ் வாக்காளர்கள் அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவராகிய செல்வநாயத்தை ஈழத்துக் காந்தி என்று அழைத்து தலைவராக ஏற்றுக்கொண்டதை இங்கு சுட்டிக்காட்டலாம். மேலும் தமிழ் நாட்டைப் போலன்றி ஈழத் தமிழர்கள் மத்தியில் வாரிசு அரசியல் பாரம்பரியம் கிடையாது என்பதையும், மேற்படி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்;டியிருக்கிறார்கள். செயல்தான் ஈழத்தமிழர்களுக்கு முக்கியம். சாதியோ, மதமோ, பிரதேசமோ, சமுக அந்தஸ்தோ, கல்வித் தகைமையே அல்ல. அர்ப்பணிப்புமிக்க பெருச்செயல்களை யார் செய்தாலும் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் செழிப்பான இதயம் ஈழத்தமிழர்களிற்கு உண்டு. அத்தகைய அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களே ஜனவசியம் மிக்க தலைவர்களாக மேலெழுகிறார்கள்.

அவர்களுக்கு அவர்களுடைய மக்களால் வழங்கபபட்ட ஆணையே பிரதான பலம். உலகின் செழிப்பான ஜனநாயகப் பாரம்பரியங்கள் எல்லாவற்றிலும் இதுதான் நடைமுறை. அதாவது மக்கள் ஆணையே தலைமைத்துவத்திற்குள்ள பிரதான பலம்.

கூட்டமைப்புக்கும் தமிழர்கள் அப்படியொரு ஆணையை வழங்கியிருந்தார்கள். ஒரு முறையல்ல. மூன்று முறை வழங்கியிரு;க்கிறார்கள்.. அந்த மக்கள் ஆணையே கூட்டமைப்பிற்கு அனைத்துலக அரங்கில் அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்தது. போருக்குப் பின்னரான கூட்டுக்காயங்களிலும், கூட்டு மன வடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு மக்கள் கூட்டம் வழங்கிய ஆணையது. கூட்டமைப்பானது அந்த மக்கள் ஆணையின் பெறுமதியுணர்ந்து முடிவுகளை எடுக்குமா?

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94003/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.