Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழைக் காப்பவர் தலைவர் - பேராசிரியர் அறிவரசன்

Featured Replies

அறிவரசன்:- ஒரு முறை செய்திவாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா என்ற போராளியை சந்திக்கும் வாய்ப்புக்

கிடைத்தது.  

arivarasan%20aya1111.jpgஅப்போது அவர்களிடத்தில் சொன்னேன், ‘எல்லோரும் தமிழ்ப் பெயர் வைக்கவேண்டும் என தலைவர் அறிவித்துள்ளார் என அறிகிறேன். ஆனால் உங்களது பெயர் தமிழில் இல்லையே,  இசை என்பது மட்டும்தானே தமிழ், பிரியா என்பது தமிழ் இல்லையே’ என்று நான் கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள் ‘எனது பெயர் இசைஅருவி என்பதுதான்’ என. ‘இசைஅருவி ஒரு சிறந்த தமிழ்ப் பெயர் ஆச்சே. அப்படி ஒரு சிறந்த தமிழ்ப் பெயரை வைத்துக்கொண்டு, ஏன் உங்களை இசைப்பிரியா என்று அழைத்துக்கொள்கின்றீர்கள்?’ என்று சொன்னபோது, ‘தோழிகள் எல்லாம் அப்படி அழைத்தார்கள். அதனால் இசைப்பிரியாவாக என்னை மாற்றிக்கொண்டுள்ளேன்’ என்றார்கள். ‘இதனைத் தலைவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன். நீங்கள் அந்தத் தமிழ்ப்பெயரையே பயன்படுத்துங்கள். அதுதான் என்னுடைய விருப்பம் தலைவரும் அதனையே விரும்புவார்’ என்றேன். அவர் அதனை ஏற்றுக்கொள்ளுவார் என்ற நம்பிக்கையில்லாமல் நான் அவரைப் பிரிந்துவிட்டேன்.

அன்று இரவு தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கின்றபோது, நான் சொன்னதை அவர் ஏற்று தமிழ்ப் பெயர் தாங்கியிருப்பதுதான் தக்கது என்ற காரணத்தால் ‘செய்திகள் வாசிப்பவர் இசைஅருவி’ என்று சொன்னதோடு மட்டுமல்ல எழுத்திலும் இசைஅருவி என்று காட்டினார்கள். அது ரொம்ப உள்ளத்தைத் தொடுவதாக இருந்தது.

இதுபோல புலிகளின் குரல் பொறுப்பாளர் ‘தமிழன்பன்’ அவர்களுடைய முதல் இயக்கப் பெயர் ‘ஜவான்’ என்பது, நான் அது என்ன ஜவான் என்று கேட்டபோது, ஒரு மாவீரருடைய பெயர் என்று சொன்னார். அதன்பின்னர் தலைவர் சொன்னதைக் கேட்டு நான் ‘தமிழன்பன்’ என்று மாறிவிட்டேன் என்றார். அவரிடத்தில் வண்டியில் போகும்போது சொன்னேன், ‘தமிழன்பன் என்று என்னிடத்தில் பெயர் சொன்னீர்கள், ஆனால் உங்கள் பணியாளர்கள், உங்களைப் பார்க்கவருபவர்கள் எல்லாம் ஜவான், ஜவான் அண்ணை என்றுதானே அழைக்கின்றார்கள். அப்படின்னா என்கிட்டை மட்டும் அந்தப்பெயரைச் சொன்னீர்களா?’ என்ற போது, ‘இல்லை ஐயா நான் தமிழன்பன் என்று பெயரை மாற்றிக்கொண்டது உண்மைதான். அந்தப் பழைய பழக்கத்தின் காரணமாக அதைச்சொல்லுகின்றார்கள்’ என்று அதைச்சொல்லி, உடனே வண்டியில் இருந்தபடி தொலைபேசியில் அலுவலக பொறுப்பில் இருந்தவரை அழைத்து, ‘இனிமேல் என்னை யாரும் ஜவான் என்று அழைக்கக்கூடாது. தமிழன்பன் என்றுதான் அழைக்கவேண்டும்’ என்பதை அவர் கடுமையாகச் சொல்லி, அதுபோல அதை நடைமுறைப்படுத்தினார்.

இப்படி எத்தனையோ உள்ளத்தைத் தொடக்கூடிய தமிழ் உணர்வை வெளிப்படுத்தக்கூடிய நல்ல தமிழர்கள். அதாவது ‘பிள்ளைக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டு’ என்ற முத்துக்கூத்தன் பாடல் ஒன்று உள்ளது. அதுமாதிரி அந்த உணர்வை ஏற்று நடக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.

ஊடக இல்லம்:- தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை நீங்கள் சந்தித்தமை பற்றிக் குறிப்பிடுங்கள்?

அறிவரசன்:- நான் 2006 ஆம் ஆண்டு அங்கு போய்சேர்ந்தவுடனேயே தமிழேந்தி அவர்களிடத்தில் நான் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். ‘ஐயா நான் இரண்டு ஆண்டுகள் தங்கியிருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கின்றீர்கள். அந்த இரண்டு ஆண்டு காலத்தில் மூன்று முறையாவது தலைவரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும்’ என்று கேட்டேன். ‘இல்லைத் தலைவரே சொல்லியிருக்கின்றார். எனக்கு வாய்ப்பான நேரத்தில் சொல்கிறேன். நான் அவரைப் பார்க்கவேண்டும் அழைத்துவாருங்கள் என்று, ஆனால், காத்திருக்கவேண்டும்’ என்றார்.

ஐந்தாறு மாதங்கள் அந்த அழைப்பு வராத நிலையில் எனக்கு பெரிய ஏக்கமாகப் போச்சு. 2006 நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அவருடைய பிறந்த நாள் அன்னைக்கு ஒரு 2 வாரத்துக்கு முன்னாடி தலைவர் அழைக்கிறார் அங்குபோகலாம் என்று தமிழேந்தி அவர்கள் என்னை அழைத்துச் சென்றார். தலைவர், தமிழேந்தி, நான் மூவரும் இரவு உணவு அருந்திக்கொண்டு இரண்டரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதன் பின்னர் 2008 மார்ச்சு மாதம் பயிற்சி எல்லாம் முடித்துத் திரும்புறதென்று முடிவாகிவிட்டது. மறுபடி தலைவர் அழைத்திருந்தார்.

அப்போது தலைவரது துணைவியாரும் அங்கிருந்தாங்க. தலைவர்கூட வேடிக்கையாக ஒன்று சொன்னார். ‘ஐயா இவங்களைத் தெரியுமா?’ என்று அந்த அம்மாவைக் காட்டிக் கேட்டாங்க. அந்த அம்மாவும் சிரிக்கிறா நானும் சிரிக்கிறேன். உடனே தலைவர் சொன்னார். ‘ஐயா உங்க மாணவி இல்லையா? உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.’ இந்தமாதிரி வேடிக்கையாக எல்லாம் பேசினாரு. அந்தமுறை நினைவுப் பரிசு எல்லாம் கொடுத்தாங்க. அந்த அம்மா எனது துணைவியாருக்கு புடவை ஒன்று கொடுத்தாங்க. படங்கள் எல்லாம் எடுத்திட்டோம். இரண்டு மணிநேரம் தாண்டி போய்க்கொண்டிருந்தது. எனக்குக்கூட என்ன இவ்வளவு ஓய்வா இருக்கிறாரே. நிகழ்ச்சி முடிக்கிறமாதி இல்லையே என்று நினைத்தபோது, என்னுடைய நினைப்பைப் புரிந்துகொண்டவர்போல தலைவர் சொன்னார். ‘ஐயா நடேசனையும் புலித்தேவனையும் வரச்சொல்லியிருக்கிறேன் அதற்காகத்தான் காத்திருக்கிறேன்’ என்றார். அவர்களும் வந்ததற்கப்புறம் எல்லாரும் படங்கள் எல்லாம் எடுத்தோம்.

இரண்டாவது முறை சந்திப்பின் போது ஒன்றைத் தெளிவாகச் சொன்னார். ‘தமிழ் அழிந்து போகக் கூடிய மொழிகளில் ஒன்று என்று யுனெஸ்கோ நிறுவனம் அறிக்கை பதிவுசெய்திருந்தது. அது தற்போது மாற்றப்பட்டுவிட்டது என்று கேள்வி.’ அதுபற்றிப் பேசியபோது, ‘அது தமிழ்நாட்டைப் பார்த்து அந்தமுடிவுக்கு வந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். தமிழ் ஈழத்துக்கு வந்திருந்தால் அந்த மாதிரி சொல்லியிருக்க மாட்டாங்கள். தமிழ் நாட்டில் தமிழை அழியவிட்டாலும் நாங்கள் தமிழை அழிய விடமாட்டோம்.’ என்று ரொம்ப உறுதியாகச் சொன்னார். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

அத்தோடு, பெயர்கள் எல்லாம் தமிழில் வைப்பது பற்றி பேசும் போது, என்னுடைய பெயர் தமிழ் பெயரா என்று கேட்டார். ‘பிரபாகரன்’ என்பது தமிழ் பெயர் அல்ல அது வடமொழிச் சொல்லு. இல்லை என்று சொல்ல நான் தயங்கிச் சிரிச்சபோது ‘அப்படியே வந்து, ஐயா எனக்கு கரிகாலன் என்று ஒரு பெயர் உண்டு அது தமிழ்தானே?’ என்றபோது நான் ‘தமிழ்தான்’ என்றேன்.

அவருக்கு ஒரு பழக்கமிருக்கின்றது. அதைநானும் நினைத்தேன். ஒரு திரைப்படத்துறை சார்ந்தவரைப் பார்த்தால் அந்தத் திரைப்படத்துறை சார்ந்தே பேசுவார். ஒரு அரசியல் துறைசார்ந்தவரைப் பார்த்தால் அரசியல் கதைப்பார். நான் ஒரு தமிழ்ப் புலவன், தமிழ்ப் பேராசிரியர் ஆகவே இரண்டுமுறையும் என்னைச் சந்திக்கும்போது தமிழ்பற்றியே பேசினார். ரொம்ப நிறைவாக இருந்தது. எங்க ஊரில் ஒரு சில தலைவர்கள், அங்குபோனால் ஒரு சில நிமிடங்களில் எனக்கு வேலை இருக்கின்றது. போயிற்றுவர்றீங்களா? என்று அனுப்புவாங்கள். அதுமாதிரி எல்லாம் இல்லாமல் மிக மிக ஓய்வாக மனங்கலந்து உரையாடிய வாய்ப்பு ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ரொம்ப மகிழ்ச்சியாக நிறைவாக இருக்கின்றேன்.

இன்னொருவிடயம் எனக்கு 74 ஆண்டுகள் அகவையாகின்றது. 30 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினேன். 3 ஆண்டுகள் சென்னையில் நாளேட்டில் துணை ஆசிரியராக இருந்தேன். அதில் எல்லாம் கிடைக்காத பெருமைகள் 2 ஆண்டுகள் வன்னியில் இருந்தபோது கிடைத்தது. ஏனென்று கேட்டால் தமிழ் நாட்டில் நாங்கள் எல்லாம் முழங்குவோம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று. ஆனால் எங்கும் தமிழ் இல்லை எதிலும் தமிழ் இல்லை என்பதே உண்மை. ஆனால் அங்கு அந்த முழக்கம் செயற்பாட்டில் இருந்தது. வன்னியில் ஏ-9 சாலையில் போனால் எல்லா பெயர்ப்பலகைகளும் தமிழ்ப் பெயரில் மட்டுமே இருந்தன. ‘சேரன் வாணிபம்’, ‘பாண்டியன் சுவையூற்று’, ‘சோழன் வாணிபம்’, ‘தென்றல் வாணிபம்’ என எங்குமே தமிழ்ப் பெயர்ப் பலகைகள. இவற்றையெல்லாம் பார்க்க பார்க்க ஆவலாக இருந்தது. ஒருவாரகாலம் வன்னிப்பகுதியெங்கும் சுற்றிக்காட்டி விட்டு தமிழேந்தி கேட்டார், ‘ஐயா தமிழீழத்தைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?’ என்று, ‘தமிழ்நாட்டில்’ இருந்து ‘தமிழர்நாட்டுக்கு’ வந்திருப்பதாக உணர்கிறேன் என்றேன். என்ன புரியலையே என்றார்.

அதாவது நாடென்கிறது நில அமைப்பினால் அதற்கு சிறப்பில்லை. அது மேடாக இருக்கலாம், காடாக இருக்கலாம், பள்ளமாக இருக்கலாம். அங்கு வாழ்கின்ற மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதில் தான் ஒரு நிலத்திற்கு சிறப்பு என்று ஒளவையார் பாடிய பாடல் புறநானூற்றில் இருக்கிறது. அவ்வாறே தமிழர்கள் எத்தகைய உணர்வோடு இருக்கவேண்டும் என்று எடுத்துக்காட்டாக இருக்கின்றார்கள். அதனால் இதனைத் தமிழர்நாடு என்று சொன்னேன், அப்படீன்னேன். அவர் மகிழ்ச்சியடைந்தார்.  

ஊடக இல்லம்:- நீங்கள் தமிழீழத்தில் தங்கியிருந்த காலத்தில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அப்போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி?

அறிவரசன்:- 2006 மார்ச் மாதம் நான் தமிழீழம் கிளிநொச்சியை போய்ச் சேர்ந்தேன். யூலைமாதத்தில் இருந்து குண்டுவீச்சுகள் தொடங்கிவிட்டன. ஏ-9 சாலை மூடப்பட்டுவிட்டது. அன்றாடம் குண்டுவீச்சு நடக்கும். பொதுவாக அனைத்து இடங்களிலும் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. வகுப்பு பாடம் நடந்துகொண்டிருக்கும் போது கிபிர் சத்தம் கேட்கும். முதலில் ஆளில்லா வேவு விமானங்கள் வட்டமிடும். அதன் இரைச்சல் எனக்குக் கேட்காது. பிள்ளைகளுக்குக் கேட்கும். அதற்கு ‘வண்டு’ என்று பெயர் வைத்துள்ளார்கள். ஐயா ‘வண்டு’ சுத்துகிறது என்று சொல்வார்கள். எனக்கு எரிச்சலாக இருக்கும். பாடவேளைகளில் இப்படிச் செய்கிறார்களே. நான் கோபத்துடன் ‘வண்டுதானே சுற்றுகிறது. சரி எழுதுங்கள்’ என்பேன்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் கிபிர் வந்துவிடும். வந்ததுதான் தாமதம் எல்லோரும் அனுமதியில்லாமல் பதுங்குகுளி நோக்கி ஓடிவிடுவார்கள். அப்படியான நிலையே இருந்தது. 2007 நவம்பர் 2 ஆம் நாள், காலை 6 மணி இருக்கும் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த பகுதியில் கிபிர் தாக்குதல் நடத்தப்பட்டது. மாலை செய்தி வந்தது. அவர் இறந்து விட்டதாக. அவருடைய இறுதி நிகழ்வில் கண்ணாடிப்பேளையில் வைத்து அவரது உடல் கொண்டுசெல்லப்பட்டது. மறுநாள் சமாதான செயலகத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி தெரிவித்தேன். 20 மரபுக்கவிதைகள் எழுதி வானொலியில் தொடர்ந்து வாசிக்கப்பட்டது. போர்ச்சூழல் என்பது கொடுமையான விடயம். விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தை பார்வையிட்டு வரும்போது, நான் இசையமைத்துப் பாடிய பாடல் ஒன்று புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பப்படும் என்று அறிவிக்கிறாங்கள். உடனே ஓரமாக வண்டியை நிறுத்து தம்பி இரைச்சல் இல்லாமல் கேட்போம் என்று நின்றபோது, அப்போ விசுவமடுவின் இன்னொரு பகுதியில் குண்டு வீசுறாங்கள். 9 பேர் அதில சாவு. புலிகளின் குரல் வானொலியில் ‘தமிழ் முழக்கம்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு ஞாயிறும் உரையாற்றினேன். 2007 நவம்பர் 27 ஆம் நாள் குண்டு வீசி புலிகளின் குரல் வளாகம் தரைமட்டமாக்கப்பட்டது. முதல் நாள் வானொலி நிலையத்தில் நின்றிருந்தேன்.   

ஊடக இல்லம்:- இன்று ஊடகங்களில் பிறமொழிக் கலப்பு அதிகமாக உள்ளது. அது பற்றிய உங்கள் பார்வை எவ்வாறு உள்ளது.?

அறிவரசன்:- அதாவது எங்களுடைய தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் நாளேடுகள், கிழமை ஏடுகள் போன்ற ஊடகங்களில் பிறமொழிக் கலப்பு என்பது மிகப்பெரியளவில் உள்ளது. அந்த இதழ்களின் பெயர்களிலேயே பிறமொழி இருக்கும். பெயர்களில் மட்டுமல்ல உள்ளே புரட்டினால் வரிக்குவரி பிறமொழி இருக்கும். பாவலநேயர் என்கின்ற பெருச்சித்தனார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதாவது பாவாணருடைய மாணவர். தனித்தமிழ் இயக்கம் மறைமலையடிகள் அந்த வழியில் வந்தவர். அவர் மறைந்துவிட்டாலும்கூட அவருடைய குடும்பத்தினரால் ‘தென்மொழி’ என்கின்ற ஏடு வெளிவிடப்படுகின்றது. அது போல ‘தெளிதமிழ்’ என்கிற ஓர் ஏடு புதுவையில் இருந்து வருகிறது. அதுபோன்ற சிற்றிதழ்கள் தான் தனித்தமிழைப் பேணிக்காத்து வந்துகொண்டிருக்கின்றன. மற்றைய இதழ்கள் எல்லாம் வணிகநோக்கம். இணையங்களில் கூட பிறமொழிக்கலப்பு உயர்வாக உள்ளது. பிறமொழிக்கலப்பு என்பது இயல்பானது என்ற போக்கே உள்ளது. இது மாற்றப்படவேண்டியது. மாறவேண்டியது. வருந்தத்தக்கது.

ஊடக இல்லம்:- தென்னிந்திய சினிமாவிலும் பிறமொழிக்கலப்பு உச்சம் பெற்றுள்ளது. இந்த நிலமை பற்றி..?

அறிவரசன்:- ஒரு கட்டத்தில் அதாவது ஐந்து அல்லது ஏழாண்டுகளுக்கு முன்னர் என்று நினைக்கின்றேன். வருகின்ற தமிழ் திரைப்படங்களின் பெயர்கள் எல்லாம் ஆங்கிலப் பெயர்களாக வருகின்றது. அந்த நேரத்தில் அரசு தலையிட்டு அதை ஒரு கடுமையாகவும் கண்டிக்காமல், தமிழில் பெயர் சூட்டினால் அதற்கு இந்தமாதிரியான ஒரு சலுகை உண்டு. வரிச்சலுகையோ ஏதோ என்று சொன்னாங்கள். அதற்கு பின்னர் கொஞ்சம் தமிழ்ப்பெயர்கள் வந்தன.

தமிழ்ப்பெயர்களில் வந்தாலும் கூட அதில உரையாடல்கள், பாடல்கள் எல்லாம் ஆங்கிலமொழி, பிறமொழிக்கலப்பு நிறைய இருக்கு. அதைத் தவிர நானெல்லாம் திரைப்படங்கள் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏனென்றால் கதையே இல்லாமல் திரைப்படங்கள் வருகின்றன. அதாவது குறிப்பிட்ட வரையறை. இரண்டு சண்டை, இரண்டு காதல் பாட்டு, ஒரு நகைச் சுவைக்காட்சி இவ்வளவுதான் ஒரு படம் என்பது போல ஒரு வரையறை செய்துகொண்டு,  இன்றைக்குத் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது தவிர வன்முறைக்காட்சிகள் மிக மிக அதிகமாக உள்ளன. ஒரு தமிழ் திரைப்படமென்றால் தமிழ் இனத்திற்கு இப்படிக்கொடுக்கவேண்டும் என்றில்லாமல் எந்த ஒரு கொள்கையுமின்றி பல திரைப்படங்கள் வருகின்றன. அது இளைஞர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியது. அதாவது ஆபாசக் காட்சிகள், வன்முறைக்காட்சிகள், பிறமொழிக் கலப்பு இவையெல்லாம் சேர்ந்ததுதான் இன்றைய தமிழ் சினிமா.

ஊடக இல்லம்:- புலம்பெயர் மண்ணில் தமிழ் மொழியின் நிலை நீங்கள் அவதானித்த வகையில் எவ்வாறு உள்ளது?

அறிவரசன்:- புலம்பெயர் மண் என்கின்றபோது நான் பல நாடுகளில் தமிழ்மொழி பற்றி கேள்விப்பட்டுள்ளேன். முதல்முறையாக பிரான்சு மண்ணுக்கு வந்துள்ளேன். இங்குள்ள தமிழ்க் கல்விக்குப் பொறுப்பாகவுள்ள அம்மையார் என்னை அழைத்தபோது, இந்த மாதிரி ஒரு தமிழ் பயிற்சி அளிக்கவேண்டும் வாருங்கள் என்று சொன்னார்கள். நான் வன்னியில் செய்ததுபோல இங்கும் செய்யவேண்டும் என்று எண்ணி இங்கே வந்தேன்.

தமிழ்ச்சோலை பள்ளிகளும் இருப்பதாக சொன்னாங்கள். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது என்னால் வியப்பைத் தாங்கமுடியவில்லை. அத்தனை புத்தகங்கள் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள். மழலையர் நிலையில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை புத்தகங்கள் நல்ல தமிழில் அச்சிட்டிருக்கிறார்கள். தனித்தமிழில் அச்சிட்டிருக்கிறார்கள். 

இதெல்லாம் பிள்ளைக்குப் புரியுமா என்ற எண்ணமில்லாமல்,  சில புதிய சொற்களைப் போடுறார்கள். வாரத்தில் 5 நாட்கள் அரசுப் பள்ளிக்கு போகின்ற பிள்ளைகளை, அந்த வார இறுதியில் உள்ள விடுமுறை நாட்களில் தமிழைக் கற்பதற்கு ‘தமிழ்ச்சோலை’ என்கின்ற பள்ளிக்கு அனுப்புறார்கள். பிள்ளைகளும் அங்கு வந்து படிக்கிறாங்கள் என்பதை என்னால் நம்பவே முடியல. ஏனென்றால் என்னுடைய சூழலில் இருந்திட்டு,  இப்படியும் பெற்றோர்கள் இருக்கிறாங்களா? இப்படியும் பிள்ளைகள் இருக்கிறாங்களா? என்பதை நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.

தலைவர் சொன்னது போல தமிழை ஈழத்தமிழர்கள் அழியவிடாமல் உண்மையிலேயே நடைமுறைப்படுத்துறார்கள்.

ஊடக இல்லம்:- தமிழ் மொழியின் அவசியம் குறித்து புலம்பெயர் இளைய தலைமுறையினருக்கு நீங்கள் கூறவிரும்புவது என்ன?

அறிவரசன்:- ஒரு இனத்தை அடையாளம் காட்டக்கூடியது மொழி. அந்தமுறையில் நாங்கள் தமிழ் இனம். ஒரு தனித் தேசிய இனம். சிறப்பான தொன்மைவாய்ந்த வளமான இலக்கியங்களைக் கொண்ட ஒரு மொழிக்கு உரிமையாளர்கள் நாங்கள். அதனால் புலம்பெயர்ந்து வாழக்கூடிய ஒரு நொருக்கடிக்குள் நாங்கள் அங்கங்கே இருக்கின்றோம். எந்த நாட்டில் இருந்தாலும் எமது மொழியை சிதைந்து விடாமல் பேணிக்காப்பதும் வளர்ப்பதும் நமது கடமை என்று புலம்பெயர் தமிழர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது தொய்வில்லாமல் தொடர

வேண்டும். தொடர்ந்தால் தமிழ் காக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஊடக இல்லம்:- தாயக, புலம்பெயர் மற்றும் தாய்த்தமிழக மக்களுக்கு நீங்கள் கூறவிரும்பும் அறிவுரை என்ன?

அறிவரசன்:- தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகத்தில் வாழ்ந்தாலும் அவர்களை எல்லாம் நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. இன்றைக்கு அவர்கள் வாழ்கின்ற இடம் என்ற வகையில், அவர்கள் இனத்தால் ஒன்றுபட்டவர்கள். மொழியால் ஒன்றுபட்டவர்கள். எந்தப்பகுதியில் வாழ்ந்தாலும் தங்கள் மொழி எது என்பதை மறந்து விடக்கூடாது. மொழி விழியைப் போன்றது என்பதை மறக்காமல் செயற்படவேண்டும். இன அடையாளத்தைப் பேணுகின்ற முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பதைத்தான் அவர்களுக்கு சொல்லவேண்டும்.

செவ்விகண்டவர் - கந்தரதன்   /   படங்கள் - கஜி

(செவ்வி நிறைவு)

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32367/64//d,fullart.aspx

தமிழை பேணும் உங்கள் முயற்சி நல்லது! மகிழ்ச்ச்சி!!!

தாய்நாடு அமைந்தபின் தமிழ்ப் பெயர் வைத்தல் அல்லது "பிரியா" போன்ற சினச்சின்ன விடயங்களில் கூடிய கவனம் செலுத்தலாம்.

இவை எல்லாம் இப்போதே சரியாக வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது தாய்நாடு அமைக்கும் பணிக்கான நேரத்தை குறைத்துவிடும். முதலில் சுவரைக் காப்பாற்றிக் கொண்டு பின்னர் சித்திரம் வரையலாமே!

 

மேலும் தமிழ் நாட்டில் உங்கள் கனவை நனவாக்கினீர்கள், அல்லது முயற்சி செய்தீர்கள் என்றால்  உங்களை உலகம் போற்றும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.