Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுளம்பிற்கு மருந்தடிக்கும் ஒரு பயணம் - சேரமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாரம் தமிழீழத் தாயகப் பகுதிகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் மேற்கொண்டுள்ள பயணம், தமக்கு விரைவில் நீதி கிட்டும் என்ற நம்பிக்கையை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களிடையே தோற்றுவித்துள்ளது.

Page%2013-3.jpg

தென்னாபிரிக்காவை தனது தாயகமாக நவநீதம்பிள்ளை அம்மையார் கொண்டிருந்தாலும் தாய்த் தமிழகத்தை தனது பூர்வீகமாகக் கொண்ட தமிழர் அவர். ஒரு சட்டத்தரணியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நவநீதம்பிள்ளை அம்மையார் தென்னாபிரிக்காவில் முதன் முதலாக சட்ட நிறுவனத்தை ஆரம்பித்த ‘கறுப்புத் தோல்’ பெண்மணி என்ற பெருமைக்குரியர்.

 

நெல்சன் மண்டேலா அவர்களின் பரிந்துரைக்கு அமைய 1995ஆம் ஆண்டு தென்னாபிரிக்க உயர் நீதிமன்றத்தின் நீதியாளராகக் கடமையாற்றியவர். அதே ஆண்டு ருவாண்டாவிற்கான பன்னாட்டு குற்றவியல் நடுவர் மன்றத்தின் நீதியாளராக நியமிக்கப்பட்டவர். 1999ஆம் ஆண்டிலிருந்து இந் நடுவர் மன்றத்தின் தலைமை நீதியாளராகக் கடமையாற்றிய நவநீதம்பிள்ளை அம்மையார், அதன் பின்னர் 2003ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளராக நியமிக்கப்படும் வரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் நீதியாளராகக் கடமையாற்றினார்.

 

இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், இன அழிப்பு, நிறவெறி போன்ற கொடுஞ் செயல்களுக்கு எதிராகவும் செயலாற்றிய பெருமைக்குரியவராக இவர் திகழ்கின்றார். தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகவும், ருவாண்டாவில் இன அழிப்பிற்கு ஆளாகிய ருட்சி இன மக்களுக்காகவும் குரல்கொடுத்த நவநீதம்பிள்ளை அம்மையார் தனது இரத்த உறவுகளான தமிழ் மக்களின் நலன்களிலும் கரிசனை கொண்டவர்.

 

‘தான் ஆடா விட்டாலும் தசையாடும்’ என்ற பொன்மொழிக்கு ஏற்ப தமிழ் மக்களின் நலன்களில் அவர் காட்டும் அக்கறைக்கு சான்றாக நான்காம் கட்ட ஈழப்போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பன்னாட்டு சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் விடுத்து வரும் கோரிக்கைகளை கொள்ளலாம். நவநீதம்பிள்ளை அம்மையாரைத் தவிர அனைத்துலக மட்டத்தில் அதிகாரம் கொண்ட எவரும் இவ்வாறான கோரிக்கைகளை இதுவரை முன்வைத்ததில்லை.

இறுதியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் கூட பன்னாட்டு சுயாதீன விசாரணை பற்றிய வாசகம் நவநீதம்பிள்ளை அம்மையாரை மேற்கோள்காட்டியே உள்ளடக்கப்பட்டது. இவ்வாறான பண்பியல்புகளைக் கொண்ட நவநீதம்பிள்ளை அம்மையார் தமிழீழத் தாயகத்திற்கு மேற்கொண்டுள்ள பயணம் முக்கியமானதுதான். இவரது வருகையை முதலில் ஆட்சேபித்த சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச பின்னர் அவ் ஆட்சேபனையால் பொதுநலவாய மாநாட்டை தென்னிலங்கையில் நடத்தும் முயற்சி முடங்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக தனது ஆட்சேபனையை மீளப்பெற்றுக் கொண்டார்.

 

ஆனாலும் நவநீதம்பிள்ளை அம்மையாரின் பயணத்திற்கான தனது ஆட்சேபனையை இராசரீக மொழியில் வெளிப்படுத்தும் வகையில் அவர் கொழும்பை சென்றடைந்த அதே நாளில் நாட்டை விட்டுப் புறப்பட்ட மகிந்தர், பெலாறுஸ் சென்று அங்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டார். போதாக்குறைக்கு அவரது அடிதடி அமைச்சரான மேர்வின் சில்வாவோ நவநீதம்பிள்ளை அம்மையார் விரும்பினால் அவரைத் திருமணம் செய்து இலங்கையின் வரலாற்றை அவருக்கு புகட்டுவதற்கு தான் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

 

நவநீதம்பிள்ளை அம்மையார் ஏற்கனவே திருமணமாகிய ஒரு குடும்பப் பெண்மணி. மேர்வின் சில்வாவும் ஏற்கனவே திருமணம் முடித்த ஒரு குடும்பத்தவர். இப்படியிருக்க தனது இரண்டாவது தாரமாக நவநீதம்பிள்ளை அம்மையாரை திருமணம் செய்வதற்கு தான் தயாராக இருப்பதாக மேர்வின் சில்வா ஏன் கருத்து வெளியிட வேண்டும்? மேர்வின் சில்வா வெளியிட்ட இக்கருத்தை வெறுமனவே நவநீதம்பிள்ளை அம்மையாரை அவமதிக்கும் செய்கையாகவோ அன்றி மகிந்தரின் அடிதடி அமைச்சர் என்ற கோதாவில் மேர்வின் சில்வா புரிந்த கோமாளித்தனமாகவோ நாம் கருதிவிட முடியாது. அவ்வாறு கற்பிதம் செய்வது மேர்வின் சில்வாவின் கருத்தின் பின்னால் பொதிந்திருக்கும் சில உண்மைகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகவே அமைந்துவிடும்.

 

நவநீதம்பிள்ளை அம்மையார் ஓர் பச்சைத் தமிழச்சி. மேர்வின் சில்வாவோ ஒரு பச்சை சிங்கள இனத்துவேசி. இப்படிப்பட்ட ஒரு பச்சை இனத்துவேசியான மேர்வின் சில்வா, ஒரு வேற்று இனப் பெண்மணியான நவநீதம்பிள்ளை அம்மையாரை மணம் முடிக்க விரும்புவதாகக் கூறிய கருத்தை நாம் மறுவாசிப்பிற்கு உட்படுத்தினால் அதில் பொதிந்திருக்கும் சிங்கள இனவாதத்தையும், ஐக்கிய நாடுகள் சபையின் கையாலாகாத்தனம் பற்றிய சிங்களத்தின் புரிதலையும் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

 

அதாவது இவ்வாறான கீழ்த்தரமான கருத்தை வெளியிட்டதன் மூலம் பின்வரும் செய்தியை நவநீதம்பிள்ளை அம்மையாருக்கு மேர்வின் சில்வா வழங்கியுள்ளார்: ‘நீ ஒரு தமிழச்சி. நான் ஒரு சிங்களவன். சிங்களவனின் முதல் தாரமாக இருக்கும் தகுதி சிங்களப் பெண்களுக்கு மட்டுமே உரித்தானது. எனது இரண்டாவது தாரமாக அதாவது ஆசை நாயகியாக’ வேண்டுமானால் நீ இருக்கலாம். அப்படி இருக்கும் தகுதி மட்டுமே உன்னைப் போன்ற அனைத்துத் தமிழச்சிகளுக்கு உண்டு. அதாவது தமிழர்களாகிய நீங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள். நீங்கள் எங்களோடு உறவு வைக்கலாம். ஆனால் சமதரப்பாக அல்ல. எமது அடிமைகளாக.”

 

இதே எண்ணவோட்டத்துடனேயே யாழ்ப்பாணப் பெண் ஒருவரை இரண்டாம் தாரமாக திருமணம் முடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் மேர்வின் சில்வா அறிவித்திருந்தார். நவநீதம்பிள்ளை அம்மையார் ஒரு தனிமனிதர் அல்ல. உலக சமாதானத்திற்காக நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலகைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர் அவர். ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இணையான இராசரீக தகமை அவருக்கு உண்டு. அப்படிப்பட்ட ஒருவர் தமது நாட்டிற்கு வரும் பொழுது அவரை நோக்கிக் கீழ்த்தரமான கருத்தை வெளியிட்டதன் மூலம் இனவாதத்தை மட்டும் மேர்வின் சில்வா கக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் கையாலாகாத்தனம் பற்றிய பின்வரும் செய்தியையும் அவர் கூறியுள்ளார்:

 

“நீ ஐக்கிய நாடுகள் சபையைப் பிரதிநிதித்துவம் செய்யலாம். ஆனால் அதனையிட்டு எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. நீ வேண்டுமானால் அறிக்கைகளை வெளியிடலாம். பன்னாட்டு சுயாதீன விசாரணை பற்றி கூச்சல் எழுப்பலாம். ஆனால் நீ தலைமை தாங்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஒரு கையாலாகாத அமைப்பு. தமிழ் மக்களை நாங்கள் கொன்றுகுவித்த பொழுது எதனையும் செய்யத் திராணியற்றிருந்த உனது அமைப்பு இனியும் எங்களை எதுவும் செய்துவிட முடியாது. அப்படி நீ நினைத்தாலும் அதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் அங்கீகாரம் தேவை. அதற்கு அமெரிக்கா இடம் கொடுக்காது. அப்படி அமெரிக்கா நினைத்தாலும் அதனை சீனாவும், ரசியாவும் தடுத்து நிறுத்தி விடும். ஆனால் நாங்கள் ஒரு இறைமையுள்ள நாடு. இங்கு நாம் நினைத்ததையே செய்வோம். நீ வேண்டுமானால் இங்கு வரலாம். அறிக்கை வெளியிடலாம். ஆனால் எங்களை உன்னால் எதுவும் செய்ய முடியாது. எங்கள் மீது செல்வாக்குச் செலுத்தும் நோக்கம் உனக்கு இருந்தால் நீ என்னை திருமணம் முடிக்கலாம். அதன் பின் நடப்பதைப் பார்ப்போம்.”

 

1995ஆம் ஆண்டு சூரியக்கதிர் நடவடிக்கையின் விளைவாக யாழ்ப்பாணத்தை விட்டு ஐந்து இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்த பொழுது இது விடயத்தில் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பொழுது அதன் செயலாளர் நாயகமாக விளங்கிய பூட்ரோஸ் காலி கோரிக்கை விடுத்தார். அதனை உடனடியாகவே நிராகரித்த லக்க்ஷ்மன் கதிர்காமர், ‘நுளம்பிற்கு மருந்தடிக்கும் வேலையோடு தனது பணியை ஐக்கிய நாடுகள் சபை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்தார்.

அப்பொழுது உலக நாடுகள் அனைத்தும் கண்ணை மூடிக் கொண்டு அமைதி காத்தன. வேறு வழியின்றி பூட்ரோஸ் காலியும் வாயை முடிக் கொண்டார். இப்பொழுதும் அதுதான் நடக்கப் போகின்றது. நான்காம் கட்ட ஈழப்போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய பன்னாட்டு சுயாதீன விசாரணையை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் பற்றி ஆராயும் நிமித்தம் தமிழீழ தாயகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள நவநீதம்பிள்ளை அம்மையாரின் கதியும் பூட்ரோஸ் காலியின் கதையாகவே முடியப் போகின்றது.

 

ஆனால் இதில் ஒரு சிறு மாற்றம். யாழ்ப்பாண மக்களுக்காக பூட்ரோஸ் காலி அறிக்கை வெளியிட்ட பின்னரே அவரை நுளம்பிற்கு மருந்தடிக்குமாறு கதிர்காமர் எள்ளிநகையாடினார். ஆனால் தனது பயணம் பற்றி நவநீதம்பிள்ளை அம்மையார் அறிக்கை விடுவதற்கு முன்னரே அவரைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறி அவரை மகிந்தரின் அடிதடி அமைச்சர் மேர்வின் சில்வா எள்ளிநகையாடுகின்றார்.

இதன்மூலம் அப்பொழுது லக்க்ஷ்மன் கதிர்காமரும், இவ்வாரம் மேர்வின் சில்வாவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்த செய்தி இதுதான்: “இது சிங்களவர்களின் நாடு. இங்கு நாம் நினைத்ததையே செய்து முடிப்போம். நாங்கள் நினைத்தால் தமிழர்களின் கதையையும் முடிப்போம். நீங்கள் வேண்டுமானால் தமிழர்களுக்காக கூச்சலிடலாம். ஆனால் நுளம்பிற்கு மருந்தடிப்பதையும், எங்களின் ஆசைநாயகிகளாக இருப்பதையும் தவிர உங்களால் வேறு எதனையும் செய்ய முடியாது.??

 

நவநீதம்பிள்ளை அம்மையார் நல்லவர். தமிழ் மக்களின் நலன்களின் அக்கறை கொண்டவர். ஆனால் வெறும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர அவரால் எதனையும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. அப்படிச் செய்வதாயின் அதற்கு முதலில் சிங்களத்திற்கு எதிராக மேற்குலகம் - குறிப்பாக அமெரிக்கா போர்க்கொடி தூக்க வேண்டும். ஆனால் நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது இது உடனடியாக நடக்கக்கூடிய ஒரு விடயமாகத் தென்படவில்லை.

 

இது நவநீதம்பிள்ளை அம்மையாருக்கும் தெரியும்: சிங்களத்திற்கும் தெரியும். ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்வேன்’ என்று கொழும்பில் இறங்கிய மறுகணமே அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததன் அர்த்தம் இதுதான். இம் மெய்யுண்மையை உணர்ந்து கொண்டு ‘வலியது வாழும்’ என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதே தமிழர்கள் செய்யக் கூடிய யதார்த்தபூர்வமான செய்கையாக அமையும்.  

 

நன்றி: ஈழமுரசு

 

http://www.sankathi24.com/news/32717/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.