Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பெற்ற படிப்பினைகள் - வடக்கு தேர்தலில் உள்வாங்க வேண்டியது அவசியம்

Featured Replies

  [ சனிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2013, 04:17 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]

poll.jpgகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் கற்றுக்கொண்ட படிப்பினைகள் மீது வடக்கு தேர்தலில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள் கவனம் செலுத்துவது அவசியமானது. வடக்குத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவல்ல, பெறக்கூடிய வெற்றியை மேலும் உச்சப்படுத்துவதற்காக - சி.தண்டாயுதபாணி

[இக்கட்டுரையாளர் சி.தண்டாயுதபாணி, எதிர்க்கட்சித் தலைவர், கிழக்கு மாகாண சபை, திருக்கோணமலை] 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண சபைத்தேர்தல் செப்டெம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ளது. அரசாங்கத் தரப்பினர் எதனைத்தான் சொன்னாலும் அனைத்துலக அழுத்தத்தின் காரணமாகவே இத்தேர்தலை நடாத்த வேண்டிய ஒரு கட்டாய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. 

வட பகுதி மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே அரசாங்கம் இத்தேர்தலை நடாத்துகின்றது என்று அரசாங்க அமைச்சர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். மக்களது ஜனநாயக உரிமைகளில் கரிசனை உண்டென்றால் அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை இவ்வளவு காலத்திற்கு இழுத்தடித்ததற்கான அவசியமென்ன? ஏனைய மாகாணங்களைப்போல வடக்கில் ஆட்சியமைக்க முடியாது என்பதை அரசாங்கம் தெளிவாகவே உணர்ந்திருந்தது. இந்தப் பயம் காரணமாகவே சாக்குப்போக்குகளைச் சொல்லிக்கொண்டு தேர்தலை இழுத்தடித்தது. 

ஆனால் கடந்த ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தில் அரசாங்கம் அளித்த வாக்குறுதி, நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய நாடுகளின் மாநாடு, அனைத்துலக அழுத்தம் என்பன காரணமாக இத்தேர்தலை மேலும் இழுத்தடிக்க முடியாத நிலையில் நடாத்தியாக வேண்டிய கட்டாயத்தில் தேர்தலுக்கு நாளும் குறிப்பிட்டாகிவிட்டது. 

வடக்கு தமிழ் மக்கள் அரசு தரப்பினரின் தேர்தல் ஜாலங்கள் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆளுங்கட்சி தனக்கிருக்கும் எல்லா வகையான பலத்தையும் பிரயோகித்து தேர்தலில் வெற்றியைத் தனதாக்க முயற்சிக்கும். 

கடந்த ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. வன்முறைகள், அச்சுறுத்தல்கள், வாக்காளரை திசை திருப்புதல் போன்ற விடயங்கள் திட்டமிட்ட ஒழுங்கில் நடைபெற்றன. கிழக்கின் வாகரை போன்ற சில பிரதேசங்களில் த.தே.கூட்டமைப்பினரின் பரப்புரை நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன. வாகனங்கள் சேதமாக்கப்பட்டன. வாக்காளர்களைக் குழப்பமடைய வைத்து அவர்களது தேர்தல் நோக்குகளை திசை திருப்புகின்ற விடயங்கள் நடந்தேறியது. இவ்விடயத்தில் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம். 

திருகோணமலை தேர்தல் தொகுதியை சேர்ந்த குச்சவெளி பிரதேசத்திலே தேர்தல் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக அதிகாலை வேளையில் பிரதான வீதி நெடுகிலும் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள் வீசப்பட்டிருந்தன. “புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பிரதம மந்திரி திரு.வி.உருத்திரகுமார் அவர்களின் அவசர வேண்டுகோளை அடுத்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்கு கொள்ளாது விலகிக் கொள்வதாக த.தே.கூட்டமைப்பின் அதி உயர்பீடம் முடிவெடுத்துள்ளதாகவும், ஆயினும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்காது, வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்காது வேறொரு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும்” த.தே.கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தன் அவர்களது போலியான கையொழுத்துடனும் அவரது படத்துடனும் இப்பிரசுரம் வெளியாகியிருந்தது. 

இப்போலியான பிரசுரம் பற்றி அதனைக் கண்டெடுத்தவர்கள் எமக்குத் தகவல் தந்ததன்பேரில் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்தினோம். இத்தகைய போலிப் பிரசுரங்களை யார் வெளியிட்டார்கள் என்பது எல்லோருக்கும் வெளிப்படையானது. ஆயினும் சாதாரண பாமர மக்களை இத்தகைய பொய்யான செய்திகளைக் கொண்ட பிரசுரங்கள் குழப்பக்கூடியன. அவகாசமில்லாத இறுதி நேரங்களிலேயே இத்தகைய போலிப்பிரசுரங்கள் வெளியாகும். ஆகவே இது பற்றி தமிழ் மக்களும், தேர்தல் செயற்பாட்டாளர்களும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். 

நிராகரிக்கப்படும் வாக்குகள் 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் [2012] நிராகரிக்கப்பட்ட வாக்குகள் காரணமாக த.தே.கூட்டமைப்பிற்கு சேர வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கை குறைந்து போனமை அவதானிக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் 11324 வாக்குகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 17224 வாக்குகளும், அம்பாறை மாவட்டத்தில் 16774 வாக்குகளுமாக கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 45291 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பான்மையான வாக்குகள் த.தே.கூட்டமைப்பிற்கு அதாவது வீட்டுச் சின்னத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குகளாக இருந்நதன என்று வாக்கெண்ணும் பணிகளை கண்காணித்த முகவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறு பெருமளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தமை வாக்களிப்பு முறை பற்றிய அறிவூட்டல் வாக்காளர்களுக்கு போதாது என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. 

தேர்தலுக்கான பரப்புரைகள், கொள்கை விளக்கம் என்பவற்றுக்கப்பால் வாக்காளர்களுக்கு குறிப்பாக கல்வி அறிவு குறைந்த வாக்காளர்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது என்ற விளக்கம் தெளிவாக அளிக்கப்படவேண்டியது, வாக்குகளைத் திரட்டிக் கொள்வது தொடர்பாக கவனிக்க வேண்டிய ஒரு தொழில்நுட்ப விடயம் என்பதை தேர்தல் செயற்பாட்டாளர்கள் மறந்து விடக்கூடாது. ஆகவே வாக்களிப்பு முறை பற்றியும், வாக்குச் சீட்டு அமைப்பு பற்றியும் குறிப்பாக கிராமப்புற வாக்காளர்களுக்கு தெளிவூட்ட வேண்டிய அவசியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். மாதிரி வாக்குச் சீட்டுகளை இதற்காகப் பயன்படுத்தலாம். 

தேர்தல் வாக்குச் சீட்டுகளில் கட்சிகளின் பெயர்கள் முதலிலும் அதன் பின்னராக சுயேட்சைக்குழு - 1, சுயேட்சைக்குழு - 2 என அடுத்தடுத்த வரிசையில் தொடர்ச்சியாகக் காணப்படும். இத்தேர்தலில் சுயேட்சைக்குழுக்கள் அதிகளவில் போட்டியிடுவதால் சுயேட்சைக்குழு - 1, 2, 3, 4 என தொடர்ச்சியாக அச்சிடப்பட்டிருக்கும். 

வாக்காளர்கள் தமது வாக்கை விரும்பும் கட்சியின் சின்னத்திற்கு எதிரே அளித்து விட்டு தனது மூன்று விருப்புரிமையை அளிப்பதற்கு வாக்குச்சீட்டின் அடியில் அச்சிடப்பட்டிருக்கும் இலக்கங்களின் மீது அளிப்பதற்கு பதிலாக தவறுதலாக அல்லது தெரியாத்தனத்தினால் சுயேட்சைக்குழு இலக்கங்களுக்கு புள்ளடிகளை அளித்து விடுகின்றனர்;. இவ்வாறு அளிக்கப்பட்ட வாக்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளுக்கு அல்லது சுயேட்சை குழுக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளாக கருதப்பட்டு நிராகரிக்கப்படுகின்றன. பல சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுவதன் காரணமாகவும், சுயேட்சைக் குழுக்களின் இலக்கங்களை, வேட்பாளர்களின் விருப்புரிமை இலக்கங்களாக தவறாகக் கருதுவதன் காரணத்தினாலும் வாக்காளர்கள் தடுமாறி பிழையான முறையில் வாக்களித்து விடுகின்றனர். 

உதாரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 16 சுயேட்சைக்குழுக்கள் போட்டியிட்டன. இது வாக்காளர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆயினும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில், போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள் ஒப்பீட்டளவில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை விட குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

ஆகவே இந்த விடயம் தொடர்பாக தேர்தலை எதிர்நோக்கும் கட்சியின் வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விளக்கத்தை மாதிரி வாக்குச் சீட்டுகளை கையாண்டு செய்து காட்டல் மூலமாக வாக்காளர்களுக்கு குறிப்பாக கல்வியறிவு குறைந்தவர்களுக்கு புரிய வைக்கவேண்டும். 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இந்த விளக்கம் கிராமப்புறங்களில் அளிக்கப்பட்டிருந்தாலும் கூட போதுமான அளவுக்கு இது மக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மையாகும். ஆகவே வட மாகாண சபை தேர்தலில் இந்த விளக்கத்தை அளிப்பதில் உன்னிப்பான கவனத்தைச் செலுத்த வேண்டும். 

வாக்களிப்பு வீதம் 

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் 65.6 ஆகவிருந்தது. இவ்வாக்களிப்பபு வீதத்தை மாவட்ட ரீதியாக நோக்கினால் திருகோணமலை மாவட்டத்தில் 66.8 ஆகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 64.3 ஆகவும் அம்பாறை மாவட்டத்தில் 66.1 ஆகவும் காணப்பட்டது. 

மூவின வாக்காளர்களும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். இன ரீதியான வாக்களிப்பு வீதம் பற்றிய கணிப்புக்கள் உத்தியோக பூர்வமாக செய்யப்படுவதில்லை. ஆயினும் தமிழ் வாக்காளரது வாக்களிக்கின்ற வீதம் ஏறத்தாழ 60 வீதமாக இருந்திருக்கலாம். வீட்டுச் சின்னத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குகளையும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளையும் கொண்டு இதனை ஊகிக்க முடியும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டவாறு தமிழ் மக்களின் வாக்களிப்பு 75 வீதமாக அல்லது அதற்கதிகமாகவோ அமையவில்லை 70 வீதமாக அமைந்திருந்தாலும் கூட கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் த.தே.கூட்டமைப்பு வசம் வந்திருக்கும். 

இந்த அனுபவம் வடக்கின் தேர்தல் நடவடிக்கைகளில் மிகவும் கவனமாக உள்வாங்கப்பட வேண்டும். வாக்களிப்பு வீதத்தை எந்தளவிற்கு உயர்த்த முடியுமோ அந்தளவிற்கு த.தே.கூட்டமைப்பின் வெற்றி பலப்படுத்தப்படும். அதாவது அதிகளவு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். 

வட மாகாண சபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றும் என்பது சந்தேகத்திற்கிடமற்ற ஒரு விடயம் என்றாலும் கூட கூட்டமைப்பின் வெற்றியை முடியுமான அளவிற்கு உச்சப்படுத்துவதில் தேர்தல் செயற்பாட்டாளர்கள் கவனம் கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டங்களும், பரப்புரைக் கூட்டங்களும் மாத்திரம் வாக்களிப்பு வீதத்தை உயர்த்தி விட மாட்டாது. 

தேர்தல் தினத்தன்று மக்கள் வாக்குச் சாடிகளை நோக்கி ஆர்வத்துடன் திரண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிராம மட்டத்திலான தேர்தல் பணிக்குழுக்கள் நிறுவப்பட்டு வாக்களிப்பு தொடர்பான வேலைகளை கண்காணிப்பதற்கு இக்குழுக்களுக்கு வழிகாட்டுதல் வேண்டும். 

இடம் பெயர்ந்துள்ளவர்கள், தொழில் மற்றும் வேறு தேவைகள் காரணமாக வேறு ஊர்களில் வதிபவர்கள், அடையாள அட்டை இல்லாதவர்கள், அங்கவீனர்கள், வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் எனப் பல்வேறு பிரச்சனைகள் வாக்களிப்பு வீதத்தை பாதிக்கக் கூடியன. ஆகவே கிராமமட்ட தேர்தல் பணிக்குழுக்கள் இந்த விடயம் பற்றிய முன்னேற்பாடுகளை செய்யவேண்டும். 

விருப்புரிமை வாக்குகள் 

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையிலுள்ள விருப்புரிமை வாக்குகள் என்ற ஒழுங்குமுறை ஒரே கட்சியின் வேட்பாளர்களுக்கிடையேயான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை பாதிக்கின்ற விடயமாக அமைந்துள்ளதை பல அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சகல பிரதான கட்சிகளினதும் வேட்பாளர்கள் தனித்தனியே செயற்பட்டதையே பெரிதும் அவதானிக்க முடிந்தது. த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தேர்தலில் ஆரம்ப கூட்டத்தில் ஒன்று சேரந்து இயங்கினார்கள். தேர்தல் ஒழுங்குகள், பரப்புரைகள், வாக்களிப்பு நிலைமையை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை நடாத்தினார்கள். ஆனால் பின்னர் வேட்பாளர்கள் ஒன்றிணைந்த செயற்படுவது குறைந்து போய்விட்டது. 

தேர்தல் நாள் நெருங்கி வர வர விருப்புரிமை வாக்குகளைப் பெற வேண்டுமென்ற ஆர்வத்தில் தனித்து இயங்கத் தொடங்கி விட்டார்கள். இத்தேர்தல் முறையில் இது தவிர்க்க முடியாதது என்றாலும் தேர்தலுக்கு முன்னரான சில நாட்களிலாவது விருப்புரிமை வாக்குக்கான கோரிக்கைகளை குறைத்துக் கொண்டு கட்சியின் வெற்றிக்கு முன்னுரிமை அளித்து கட்சியின் சின்னத்திற்கு வாக்களிப்பதை முன்னுரிமைப்படுத்தி வேட்பாளர்கள் யாவரும் செயற்பட்டிருப்பார்களாயின் இன்னும் சில பத்தாயிரம் வாக்குகளை த.தே.கூட்டமைப்பு பெற்றிருக்க முடியும். 

ஆகவே இந்த விடயம் தொடர்பாக வடக்குத் தேர்தலின் த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்கள் கவனம் கொள்ள வேண்டும். கூட்டமைப்பின் வெற்றி உச்சப்படுத்தப்படும் போதுதான் மாகாண சபைக்கு அதிகளவான உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள முடியும். கட்சிக்கு கிடைக்கின்ற வாக்குகள்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர்கள் எத்தனை பேர் என்பதனைத் தீர்மானிக்கும். ஆகவே கட்சியின் சின்னத்தை முன்னுரிமைப்படுத்தி விருப்புரிமைக்கான கோரிக்கைகளை குறைத்துக் கொண்டு வேட்பாளர்கள் யாவரும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும். தேர்தலில் சிரத்தை இல்லாது இருக்கும் வாக்காளர்களும் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லத் தூண்டப்படுவர். 

அத்துடன் தேர்தல் பணிகளின் முன்னேற்ற நிலைமைகள் பற்றி மாவட்டத்தில் மீளாய்வுக் கூட்டங்களை நடாத்துதல் வேண்டும். இக்கூட்டங்களில் வேட்பாளர்களும், முக்கியமான தேர்தல் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு பலவீனமான விடயங்கள் பற்றி கவனம் செலுத்துதல் வேண்டும். 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் கற்றுக்கொண்ட படிப்பினைகள் மீது வடக்கு தேர்தலில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள் கவனம் செலுத்துவது அவசியமானது. வடக்குத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவல்ல, பெறக்கூடிய வெற்றியை மேலும் உச்சப்படுத்துவதற்காகவே இவற்றைக் கூறுகின்றோம்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130831108971

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.