Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணையில் தேசியம் : -யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணையில் தேசியம் : -யதீந்திரா
 

 
தமிழ்த் தேசிய அரசியல் போக்கானது இன்று இந்தளவிற்கு வீரியம் கொள்வதற்கான பிரதான காரணம்,இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த வெற்றிகரமான அரசாங்கங்களின் எதேச்சாதிகார போக்குகளும்,அவற்றின் உதாசீனப்போக்குகளுமே ஆகும். இதில் என்னிடம் இரு வேறு கருத்துக்கள் கிடையாது. உதாரணமாக பண்டா-செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால்,பின்னர் 83இன் துயர் நிகழ்ந்திருக்காது. அது 2009 வரை நீண்டிருக்காது. இத்தனை அழிவுகள் ஏற்பட்டிருக்காது. எனவே இன்றும்,தமிழ் தேசியம்,ஒரு விடயமாக விவாதிக்கப்படுவதற்கான பின்னனியாக,அரசாங்கத்தின் எதேச்சாதகாரப் போக்கே இருக்கின்றது. ஆனால் இவ்விடத்தில் நம் முன் எழும் கேள்வி – அவ்வாறு நியாயபூர்வமான காரணங்களின் அடிப்படையில் எழுச்சிபெற்ற தமிழ் தேசியமானது,பிற்காலங்களில் தன்னை சரியான ஒன்றாக நிறுவியிருக்கிறதா? அதனால் அவ்வாறு தன்னை நிறுவ முடிந்ததா? இக் கேள்விகளிலிருந்துதான்எனது சில அவதானங்களை இங்கு பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.
 
yathi-01.jpg
 
பொதுவாக ஒரு தேசிய இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்; இயக்கத்தையே நாம்   தேசியம் என்போம். அந்த வகையில் தமிழ் தேசியத்தின் மீதான விசாரணை என்பது,கடந்த அறுபது வருடங்களாகதமிழர் அரசியலில் மேலாதிக்கம் செலுத்தியபிரதான இரு போக்குகளான,மிதவாத மற்றும் தீவிரவாத தேசியம் தொடர்பான விசாரணையாகும். நான் இதனை இலகுவாக விளக்கும் நோக்கில்,ஒரு கருத்தை எடுத்தாள விரும்புகின்றேன். தேசியம் தொடர்பில் பல்வேறு பார்வைகள் உண்டு. பல்வேறு விவாதங்கள் உண்டு. அத்தகைய விவாதங்களில் இவ்வுரை கவனம் கொள்ளவில்லை ஆனால் அல்ஜீரிய சிந்;தனையாளர் பிரான்ஸ் பனானின் தேசியம் என்பது ஒரு வெற்றுக் கூடு(Nationalism is empty shell)   என்னும் கூற்றை நான் இங்கு எடுத்தாள விரும்புகிறேன். தேசியவாதத்தை இலகுவாக விளங்கிக் கொள்வதற்கு இது மிகவும் பொருத்தமான ஒன்று என்பதே எனது அபிப்பிராயம். ஏனெனில் இந்த தேசியமென்னும் வெற்றுக் கூடு எவர் வசமிருக்கிருக்கிறதோ,அது அவர் சார்பில் தொழிற்படும். உதாரணமாக இந்த வெற்றுக் கூடுஅடிப்படைவாதிகள் வசமிருந்தால்அது அவர்களுக்கு சேவை செய்யும். இடதுசாரிகள் வசமிருந்தால்இடதுசாரி முகம் காட்டும். அதுவே பயங்கரவாதிகள் வசமிருந்தால்பயங்கர முகம் காட்டும். இதுவே இத்தேசியத்தின் பண்பு.
எனவே தேசியம் என்னும் அந்த வெற்றுக் கூடு,மக்கள் நலன்சார்ந்து முகம்காட்ட வேண்டுமாயின்அது மக்கள் நலனை முன்னிறுத்தி செயலாற்றுவோரின் சிந்தனைகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் இந்த வெற்றுக் கூட்டு அவதானத்தை,கடந்த அறுபது வருடகால தமிழ் தேசிய இயங்குநிலையுடன் பொருத்திப் பார்ப்போமாயின்இதனை நாம் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழ் தேசியத்தின் ஆரம்பகாலம் மிதவாத முகமாகவும்பின்னைய காலம் தீவிரவாத முகமாகவும் மாறிஇறுதியில் அது,கடந்த முப்பது வருடங்களாக வெறுத்தொதுகப்பட்ட,அந்தமிதவாத முகத்திற்கே மீண்டும் திரும்பியிருக்கிறது. இந்த ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு நோக்கினால்இந்த வெற்றுக் கூடுகடந்த காலங்களில்எவ்வாறு பல்வேறுபட்ட தரப்பினரது கருத்துக்களால் நிரப்பப்பட்டிருந்தது என்பதை காணலாம். எனவே தேசிய வாதத்தின் முகம் என்பது,அதனை பிரதிநிதித்துவம் செய்வோரது கருத்துநிலையின் வெளிப்பாடாகும்.
 
ந்த வகையில் மிதவாத முகம் காட்டிய தமிழ் தேசியம் இருதசாப்தங்களுக்கு மேல்,பிரிவினைவாத நிலைப்பாடுகளுக்கு எதிரான ஒன்றாகவே தன்னை அடையாளப்படுத்தியிருந்தது. ஜக்கியப்பட்ட இலங்கைக்குள்அதிகாரப்பகிர்வு என்பதே மிதவாத தமிழ் தேசியத்தின் இலக்காக இருந்தது. அதாவது ஒரு பெரிய அரசியல் அலகுக்குள்ஒரு உப அலகாக இருத்தல். 1949இல் தமிழரசு கட்சி ஸ்தாபிக்கப்பட்ட போது,அதன் இருபெயர் பயன்பாடே இதனை தெளிவாக அடிக்கோடிட்டது.
 
தமிழ் பகுதிகளில் தங்களை தமிழரசு கட்சியாக அடையாளப்படுத்திய மிதவாதிகளோ,கொழும்பில் தங்களை பெடரல் பாட்டியாகவே அடையாளப்படுத்தினர். கொழும்மை விரோதித்துக் கொள்ளாதவொரு அரசியலையே செய்ய விரும்பினர். இதுவே மேற்படி இருபெயர் பயன்பாட்டின் வெளிப்பாடாகும். மேற்படி மிதவாதிகள் 1976ல் முன்வைக்கப்பட்ட பிரிவினை வாத கோரிக்கையின் சொந்தக்காரர்களாகவரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பினும் கூட,அவர்கள் அதில் உறுதியாக இருந்ததற்குச் சான்றில்லை. பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில்இதனை மதிப்பிடுவதாயின்,மிதவாத தமிழ் தேசிய தரப்பினர்இத்தகையதொரு கடும்போக்கான நிலைப்பாட்டுக்கு தாவியதற்கு பின்னால்மூன்று காரணங்கள் இருந்திருக்கலாம். ஓன்று, 1972இல் அறிமுகமான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான தரப்படுத்தல்,மற்றும் 1972இல் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு ஆகியவை மக்கள் மத்தியில் குறிப்பாகயாழ் மத்தியதரவர்க்க பிரிவினர் மத்தியில் ஏற்படுத்தி அதிருப்தியைமிதவாத தேசியத்துள் உள்வாங்கிக் கொள்ளும் ஒரு உக்தியாக பிரிவினைவாதக் கோரிக்கையை அவர்கள் முன்தள்ளியிருக்கலாம். இரண்டு,கொழும்பின் ஆளும் குழுமத்திற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுக்கும் நோக்கில்ஒரு அழுத்த அரசியல் உக்தியாக அதனைக் கையாண்டிருக்கலாம். மூன்று, 1971இல் நிகழ்ந்த பங்காளதேசத்தின் உருவாக்கமும்அதனை பின்னிருந்து செயற்படுத்தியஇந்தியாவையும் கருத்தில் கொண்டுஇத்தகையதொரு முன்மொழிவை செய்திருக்கலாம்.
 
yyy.jpg
 
தாம் ஒரு பிரிவினைவாத நிலைப்பாட்டை எடுக்கும் போதுஅதற்கான பிராந்திய ஒத்துழைப்பை கோர முடியுமென்று மிதவாதிகள் நம்பியிருக்கலாம். திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவ்வாறு நம்பியதற்கான சாத்தியம் அதிகம் உண்டு என்பதை கலாநிதி வில்சனின் பதிவொன்று சுட்டிக்காட்டுகின்றது. 71இல் பங்களாதேசின் தோற்றம் ஏற்படுத்திய தாக்கத்தை தொடர்ந்து, 1972ஆம் ஆண்டு பெப்ரவரியில் வடக்கின் கரையோர நகரமான வல்வெட்டித்துறையில் அனைத்து கட்சிகளின் கூட்டமொன்று இடம்பெறுகிறது. இதன்போதுமொழி உரிமை,பிராந்திய சுயாதிபத்தியம்,குடியேற்ற கொள்கை,தொழிலில் பாகுபாடு,ஆகிய விடயங்களை உள்ளடக்கிய (Six-point formula) ஆறு அம்ச கோரிக்கை வெளிவருகிறது. இது பற்றி குறிப்பிடும் வில்சன்,இவ் ஆறு அம்ச கோரிக்கையானதுபங்களாதேசின் சுதந்திர யுத்தத்தின் போது சேக் முஜிபர் ரகுமானால்அரசியல் பேரவையின் முன் சமர்பிக்கப்பட்டஆறு அம்ச கோரிக்கையை மீளுருப்படுத்தியதாக குறிப்பிடுகின்றார். இதே மாதத்தில் செல்வா தமிழ் நாட்டிற்கு முக்கிய விஜயமொன்றை மேற்கொண்டு,அங்கு திராவிட முன்னேற்றக்கழக மற்றும் காங்கிரசின் முக்கிய தலைவர்களைச் சந்தித்திருக்கின்றார் என்பதையும் இந்த இடத்தில் நாம் குறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 
 
இந்த விடயங்களை உற்றுநோக்கும் போது,பிராந்திய ஒத்துழைப்பு மூலம்ஒரு தனிநாடு அமைவதற்கான வாய்ப்பு ஏற்படக் கூடுமென்னும் நம்பிக்கை செல்வநாயகம் அவர்களிடம் அதிகம் இருந்திருக்கிறது என்னும் முடிவிற்கே நாம் வரவேண்டியிருக்கிறது. இந்த நம்பிக்கையின் விளைவாகவே வட்டுக் கோட்டை தீர்மானம் வெளிவந்திருக்க வேண்டும். இவ்வாறு சிந்திக்குமாறு மேற்படி வில்சனின் தகவல்கள் என்னை வலியுறுத்துகின்றது. ஆனால் விடயங்களை தொகுத்து நோக்கினால்ஒரு உண்மை தெளிவாகும். மிதவாத தரப்பினரின் தனிநாட்டுக் கோரிக்கையென்பது,அவர்களது செயலின் மீதுள்ள உறுதியின் விளைவாக வெளிவந்த ஒன்றல்ல. மாறாக புறச்சக்திகளின் தேவைகளின் பொருட்டு, அப்படியொன்று நிகழுமாயின்அதற்கு தலைமைப்பாத்திரம் வழங்குவதற்கான ஒரு ஆர்வம் மட்டுமே அவர்களிடம் இருந்திருக்கிறது. மிதவாத தரப்பினரின் பிற்காலத்தைய செயற்பாடுகள் இதனையே நமக்கு தெளிவுபடுத்துகின்றன. மிதவாதிகளின் இந்த சுலோக உச்சரிப்பைபின்னர் வந்த தீவிரவாதிகள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. அவர்கள் விளங்கிக் கொள்ள முயற்சிக்கவும் இல்லை.
 
ஆனால்,வட்டுக்கோட்டை தீர்மானம்தீவிர தேசியவாதத்திற்கானதொரு வலுவான அடித்தளமாக மாறியது. அதுவரை மிதவாதிகளது கருத்துக்களால் நிரம்பிக்கிடந்த அந்த தேசியமெனும் வெற்றுக் கூடு,பின்னர் தீவிரவாதிகளது விருப்பங்களாலும் எதிர்பார்ப்புக்களாலும் நிரம்பியது. இதுவே மிதவாத தமிழ் தேசியம்,தீவிரவாத தமிழ் தேசியமாக உருமாறியதன் பின்னனியாகும். இக்காலப்பகுதியில்மிதவாதிகள் வீசிய வட்டுக்கோட்டை பூமறாங்அவர்களையே துரத்தி வேட்டையாடவும் தொடங்கியது. அவர்களோடு மட்டும் நின்றுவிடாதுவட்டுக்கோட்டைக்கு மாற்றான நிலைப்பாடுள்ள அனைவரையும் அதுஅரங்கிலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்தித்தது. வெளியேற்றியது.
 
தமிழ் தேசியத்தின் இரண்டாவது பகுதி பல்வேறு ஆயுத இயக்கங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட போதும், 1990களுக்கு பின்னர்தமிழ் தேசியம் என்பது முற்றிலுமாகதமிழீழ விடுதலைப்புலிகளின் வசமானது. விடுதலைப்புலிகள் என்று சொல்வதிலும் பார்க்கஇக்காலப்பகுதியில் இந்த தேசியமென்னும் வெற்றுக் கூடு,ஒரு தனிநபரது விருப்பங்களாலும்,அவரது கோபங்களாலும்,அவரது ஆர்வங்களாலும்,அவரது தடுமாற்றங்களாலும்,அவரது அறியாமைகளாலும் நிரம்பிக்கிடந்ததென்பதே உண்மை. இக்காலகட்ட தமிழ் தேசியவாதம் என்பதுஒரு தன்னிலை மோகத்துள் கட்டுண்டு,இறுதியில் தன்னைத்தானே சிதைத்துக் கொண்டது. அது அவ்வாறே வரலாற்றில் பதிவாகவும் செய்யும். இதனை இன்னும் ஆழமாக நோக்கினால்இக்காலகட்ட தமிழ் தேசியவாதம் என்பது முற்றிலும் ஒரு இராணுவ வாதமாக தன்னை சுருக்கிக் கொண்டது. தமிழ் தேசியத்தின் இருப்பு என்பதுமுற்றிலும் இராணுவ பலத்திலேயே தங்கியிருக்கிறது என்னும் கருத்துநிலை இக்காலகட்டத்தில்மேலாதிக்கம் பெற்றது. இக்காலகட்டத்தில் நிகழ்ந்த மயிர் கூச்செறியும் இராணுவ சாகசங்கள்,அத்தகையதொரு கருத்துநிலை மேலாதிக்கத்திற்கான நியாயமாகவும் அமைந்தது. எனவே இக்காலகட்ட தமிழ் தேசியம் என்பதுமுற்றிலுமாக ஒரு தமிழ் இராணுவ மனோநிலைக்குள் கட்டுண்டு கிடந்தது எனலாம். இதன் காரணமாக,தனக்கு வெளியில் எவரையும் நேசிக்க வேண்டிய அவசியம் அதற்கு இருந்திருக்கவில்லை. அல்லது அத்தகையதொரு நேசிப்பிற்கான அவசியப்பாடு தனக்கில்லையென்றே அது கருதிக் கொண்டது,ஏனெனில் அது அபார இராணுவ வெற்றிகள் வழங்கியஉற்;சாகத்தில் திழைத்துக் கிடந்தது.
 
இக்காலகட்ட தமிழ் தேசியமானது,மாற்று இயக்கங்களை தடைசெய்து விரட்டியதன் மூலம்தமிழர் ஆற்றலை சிதறடித்தது. யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியதன் மூலம்மொழியால் ஒன்றுபட்டுக்கிடந்த முஸ்லிம் மக்களை,தமிழ் தேசியத்தின் எதிர்நிலையில் நிறுத்தியது. சாதாரண சிங்கள மக்களையும் இராணுவ இலக்குக்குள் கொண்டுவந்;த போது,ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் எதிர்நிலையில் நிறுத்தியது. பிராந்திய சக்தியான இந்தியாவை பகைத்துக் கொண்டதன் மூலம்,இந்தியாவை எதிர்நிலையில் நிறுத்தியது. அனைத்துலக அனுசனையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பங்காளியான ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தோற்கடிக்க உதவியதன் மூலம்,மேற்குலக சமூகத்தை எதிர்நிலையில் நிறுத்தியது. இவ்வாறு ஒவ்வொரு தரப்பையும் தனது செயற்பாடுகள் மூலம்எதிர்நிலையில் நிறுத்திய போதெல்லாம்அது குறித்து எந்தவொரு தடுமாற்றமும் அத்தேசியத்திடம் இருந்;திருக்கவில்லை. இதுவே இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஏனெனில் அந்தளவிற்குஅது ஒரு தன்னிலை மோகத்துள் கட்டுண்டு கிடந்தது. இறுதியில் நேசசக்திகளற்ற அத் தேசியம்,தன்னை நம்பிய மக்களை ஒரு அனாதரவற்ற சந்தியில் நிறுத்தி ஓய்ந்தது.
 
 
y-02.jpg
 
விடுதலைப்புலிகளின் அழிவைத் தொடர்ந்து,தமிழ் தேசியம் மீண்டுமொரு புதிய அத்தியாயத்திற்குள் பிரவேசித்திருக்கிறது. இதனை தமிழ் தேசியத்தின் மூன்றாவது அலையென்றும் நாம் குறிப்பிடலாம். இதனை அவ்வாறு குறிப்பிட முடியாதென்றும் சிலர் கூறலாம். ஆனால் அந்த வெற்றுக் கூடு, மீண்டும்பிறிதொரு தரப்பிற்கு கைமாறியிருக்கிறதுஎன்பதே இன்றைய யதார்த்தம். இப்பொழுது மிதவாதிகளும்முன்னாள் ஆயுததாரிகளும் சேர்ந்து,அக் கூட்டை நிரப்பியிருக்கின்றனர். ஜனநாயக ரீதியாக பெருவாரியான மக்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ஒரு அமைப்பென்னும் வகையில்,இன்றைய சூழலில் தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அமைப்பாகதமிழ் தேசியக் கூட்டமைப்பே வெளித்தெரிகின்றது. கூட்டமைப்பு இன்றைய சூழலில் எத்தகையதொரு தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவம் செய்து வருகின்றதுஎன்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. விடுதலைப்புலிகளின் அழிவைத் தொடர்ந்து,தமிழ் தேசியம் மீண்டும் ஜக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை கோருதல் என்னும் ஆரம்பகால மிதவாத தமிழ் தேசியக் கோரிக்கைக்கேதிரும்பியிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசியவாதத்தின் புதிய அலையை பொறுப்பெடுத்திருக்கும் பின்னனியில் இரண்டு புதிய விடயங்கள் நமது சூழலில் நிகழ்ந்திருக்கின்றன என்பது எனது கணிப்பு.     
 
முதலாவது,கிழக்கு மகாணத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான இராஜவரோயம் சம்பந்தன் அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பது. இரண்டு,மிதவாத பாரம்பரியத்தில் வந்தவர்களும்முன்னைநாள் ஆயுத இயங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றுபட்டு தேசியத்தை பிரதிநிதித்துவம் செய்துவருவது. இங்கு இரா.சம்பந்தன் அவர்கள் பற்றி பிரத்தியேகமாக குறிப்பிடுவதற்கு ஒரு தெளிவான காரணம் உண்டு. கடந்த அறுபது வருடகால தமிழ் தேசிய இயங்குநிலையில்கிழக்கு மகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ் தேசியத்திற்கு தலைமை வகிப்பதானதுஇதுவே முதல் தடைவையாகும். அதாவது வேலுப்பிள்ளை செல்வநாயகத்திலிருந்து வேலுப்பிள்ளை பிரபாகரன் வரையானகடந்த அறுபது வருடகால தமிழ் தேசியம் என்பது,யாழ்;ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாலேயே வழிநடத்தப்பட்டிருக்கிறது. இது வரலாறு,எனது புனைவல்ல. அந்தவகையில் தமிழ் தேசியத்தின் மூன்றாவது அலையில்இது ஒரு முக்கியமான விடயமாக நோக்கப்பட வேண்டிய தேவையுண்டென்றே கருதுகிறது.
 
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நான்குவருட கால அணுகுமுறைகளை உற்று நோக்கினால்,ஒரு விடயம் தெளிவாகிறது. புலிகளால் எவரெல்லாம் எதிர்நிலையில் நிறுத்தப்பட்டார்களோஅவர்களையெல்லாம் மீண்டும் நேசக்திகளாக அரவணைத்துக் கொள்ளும் ஒரு செயற்பாட்டையேதமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது. இது மிதவாத அரசியலின் ஒரு பண்பாகும். மிதவாத அரசியல் எவரையும் எதிரியாக்குவதில்லை. எதிரிகளையும் அணுகி நண்பராக்கிக் கொள்ளும் ஒரு பண்பையே அது வெளிப்படுத்தி நிற்கும். இந்த இடம்தான் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகள் மையங்கொள்ளும் இடமாகவும் காணப்படுகிறது.
 
தமிழ் தேசியம் இத்தகையதொரு பண்புநிலையை பேணிக்கொள்ள வேண்டுமாயின்அதன் தலைமைத்துவம் மிதவாத பாரம்பரியத்தில் ஊறித்திழைத்த ஒரு கட்சியிடம்தான் இருக்க வேண்டுமென்பதில் சம்பந்தன் தரப்பினர் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. அத்தகைய பண்புள்ள பல புதியவர்களை உள்ளிழுத்துக் கொள்வதன் மூலம்அவர்கள் தங்களை பலப்படுத்திக் கொள்ளவும் எத்தக்கின்றனர். அவ்வாறு உள்வாங்கிக் கொள்ளப்படும் புதியவர்கள் கொழும்பின் ஆளும் பிரிவுடன் உரையாடக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டுமென்றும் அவர்கள் கருதுவதாகவும் தெரிகிறது. அத்தயைதொரு நிலைமை ஆரம்பகால மிதவாத தேசியத்திடம் இருந்தது. தனிநாட்டுக் கோரிக்கையை முன்தள்ளிய பின்னரும் கூட,கொழும்பின் சிங்கள ஆழும் பிரிவினருடான தொடர்பைஅவ் மிதவாத தேசியம் ஒரு போதுமே துண்டித்துக் கொள்ளவில்லை.
 
விடுதலைப்புலிகளின் எழுச்சியைத் தொடர்ந்தே கொழும்புறவு அரசியல் முற்றிலுமாக தமிழர் அரசியலில் இல்லாமல் போனது. ஆனால் தற்போது புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து,தொடர்பறந்துபோனஅந்த கொழும்புறவு அரசியலை புதுப்பிக்க வேண்டுமென்னும் போக்கும்மெதுவாக மேலெழுந்து வருகிறது. இவ்விடத்தில் கூட்டமைப்பின் உள் பலவீனங்கள்,அரசியல் தீர்வு குறித்து அது வெளிப்படுத்திவரும் தடுமாற்றப்போக்கு என்பவற்றை இவ்வுரை கருத்தில் கொள்ளவில்லை. புலிகளின் அழிவுக்கு பின்னரான சூழலை முன்னிறுத்தியே சில விடயங்களை இங்கு சுட்டிக் காட்டியிருக்கின்றேன். அதே போன்றேதமிழ் தேசியத்தின் இங்குநிலையில் மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் தலையீடு எவ்வாறிருந்ததுஎன்பது குறித்த எனது அவதானத்தையும் இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இது எனது அவதானம். இது குறித்து மாறுபட்ட அபிப்பிராயங்கள் உங்களுக்கு இருக்க முடியும்.
 
ஆனால் இறுதியாக ஒரு விடயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதாவது,தமிழ் தேசியம் என்பது இன்றைய சூழலில் திரும்பிப்பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. அவ்வாறு திரும்பிப் பார்ப்பதன் மூலம்தான்,நாம் தமிழ் தேசியத்தை மக்களுக்குரிய ஒன்றாக உருமாற்ற முடியும். ஒரு காலத்தில் அரசியலிருந்து ஓரங்கட்டப்பட்ட பல்வேறு ஆளுமைகளும் சமூதாய அரங்கிற்குள் மீண்டும் வந்திருக்கின்ற இன்றைய சூழலானது,தமிழ் தேசியத்தை திரும்பிப்பார்ப்பதற்கு ஏற்ற காலமாகும். தமிழ் தேசியம் என்பது தொடர்ந்தும் விசித்திரவுலக வாதங்களை காவிச் செல்லும் வாகனமாக இருப்பின்அது மீண்டும் மக்களை பிறிதொரு அனாதரவற்ற சந்தியில் நிறுத்துவதற்கே பயன்படும். அழிவு,அலைச்சல்,அச்சம்,குழுவாத மனப்பாண்மை இவையே மீண்டும் நம்மைச் சூழும். இதனை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் நமது கடந்தகாலத்தின் மீது காய்த்தல் உவத்தலற்ற விமர்சனம் நமக்கு அவசியமாகும். மக்கள் நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் நமக்கு தேவை. அத்தகையதொரு அரசியல் கலாச்சாரத்திற்கான சிறிய அழைப்பே இக்கட்டுரை.
 
http://eathuvarai.net/?p=4030

இந்த கட்டுரையின் அடித்தொனி, மக்களுக்கான அபிலாசைகள் பற்றி பேசுவதை தவிர்த்து, அவை மக்கள் மீது திணிக்கப்பட்டதான ஒரு கருதுகோளை முன் வைக்கிறது. முப்பது வருட விடுதலை போராட்டத்தை, ஒரு தனி நபரின் மீது சுமத்தி தனிமைப்படுத்த முயல்கிறது.அனேகமாக 2009 க்கு பின்னான காலங்களில் இவ்வாறான விமர்சனங்கள் அதிகம் எனலாம். அதேவேளை ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை புனிதப்படுத்தும் செயலிலும் இறங்கியுள்ளது எனலாம். வெற்றிடமொன்றில் தமக்கான சாத்தியங்களை உள்வாங்கி பண்பு மாற்றம் பெறுவது என்பது, உருவாக்கப்பட்ட கொள்கைகளில் இருந்து விலகிப்போகாத ஒரு மாற்றமாகவே இருக்க வேண்டும். ஆனால் கூட்டமைப்பின் பண்பு மாற்றமானது ,முழுமையான ஒரு நிற மாற்றத்தையே விரும்பி நிற்கிறது. இதேவளை கொழும்புடனான அரசியல் பேணல் நிலையானது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படு இருந்தால் ஈ பி டி பி ஒரு தேசிய கட்சியாக உருமாறி இருக்கும்.

 

தமிழ் தேசியத்தை திரும்பிப்பார்த்தல் என்பது மீள தமிழ் மக்களை எழுபதுகளுக்கே கொண்டு செல்லும்.அப்படியாயின், அதுதான் இன்றைய தேவையாயின், இழந்தவைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு காபெட் வீதிகளுடாக ஒரு இணக்கத்துக்கு போக வேண்டி வரும்.ஆனால் அந்த இணக்கத்தையும் 2009 இல் நிற்கும் சிங்கள பேரினவாதம் ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.