Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூலுக்கான முன் குறிப்பு: தோழமையுடன் ஒரு குரல் - வ.ஐ.ச ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத அரசியலிலிருந்து வெளியே எடுக்க வேண்டியுள்ளது-எம்.பௌசர்

180353_1761995003755_3380765_n.jpg

நூலுக்கான முன் குறிப்பு

——————————————–

ஈழத்து நவீன தமிழ் கவிதையில், வ.ஐ.ச. ஜெயபாலன் முக்கியத்துவம் பெறும் அம்சங்கள் பல வகைகளில் தனித்துவமானது. கவிஞர் என்கிற அடையாளம் அறியப்பட்ட அளவு, அவர் ஒரு சமூக ஆய்வாளரும் என்கிற அறிதல் நமது சூழலில் மிகக் குறைவாகவே உணரப்பட்டுள்ளது. சமூக ஆய்வுத்துறையில் அவர் தொடர்ச்சியாக தேடல்களை மேற்கொண்டு வந்தாலும் அத்துறை சார்ந்து முழுநேரப்பணியாளராக அவர் இல்லாததும், அவரது ஆய்வுகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெறாததும் அதற்கு காரணமாக இருக்கலாம்.

சமூக ஆய்வியலில் அவரது ஈடுபாட்டிற்குரிய பல்வேறு விடயங்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் இனத்துவம், சமூக அரசியல் பொருளாதார பண்பாடு சார்ந்தும், அம்மக்களுக்கிடையிலான சகவாழ்வு, ஒருமைப்பாட்டிற்குமான நமது காலகட்டத்தின் மிக முக்கிய விடயம் அவரது முதன்மையான அக்கறைக்குரிய துறையாக மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இருந்து வந்திருக்கிறது.

இத்துறையில் ஒரு களப்பணியாளனாக, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக, அதிகார பீடங்களுக்கும் அதன் அச்சுறுத்தலுக்கும் அடிபணியாத ஒரு ஓர்மமிகு மனிதனாக அவர் உள்ளார். வ.ஐ.ச ஜெயபாலனின் பலம் வெளிப்படும் தளமாக இது இருந்தும் வந்துள்ளது. தனிப்பட்ட நலன்கள், நன்மைகளை முன்னிறுத்தி சமரசம், அடக்கி வாசித்தல், கள்ளமௌனம் என்பவற்றை நான் இவரிடத்தில் இந்த விடயத்தில் கண்டதே இல்லை.

இத்தொகுப்பிலுள்ள அவரது எழுத்துக்களில் முக்கியத்துவம் பெறும் விடயங்கள் குறித்தும் இத்தொகுப்பு வெளிவரும் காலம் குறித்தும் சில விடயங்களை சொல்லலாம் என நினைக்கிறேன்.

000000

வ.ஐ.ச ஜெயபாலனின் எழுத்துக்களை மீள வாசிக்கின்ற போது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் நியாயமான வழியில் முன்னகர்வதற்கும் ஆக்கபூர்வமான கட்டத்தை எட்டுவதற்குமான பல்வேறு முன் நிபந்தனைகளில் ஒன்றாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில்; தமிழ் முஸ்லிம்களின் சக வாழ்வையும் இன ஐக்கியத்தையும் காண்கிறார், அதன் வழியே அவர் அகமும் புறமுமாக நின்று இரு தரப்புக்களுடனும் பேசுகிறார்.

‘தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்” (அலை வெளியீடு 1981) எனும் அவரது ஆய்வு, தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக முகிழ்ந்த போது அப்போராட்டத்தில் அக்கறை கொண்ட ஒரு சமூகப் போராளி தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் தலைமைகள், அதன் கருத்தியலாளர்களை நோக்கி, “முஸ்லிம்களை புரிந்து கொள்ளும்” வகையில் சொல்லப்பட்டவை அன்றைய காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளின் போக்கில் முக்கியமானவை என இன்றைய மறு வாசிப்பில் நான் உணர்கிறேன்.

01. தமிழ் மொழியை தாய்மொழியாக முஸ்லிம்கள் கொண்டிருந்தாலும் முஸ்லிம்கள் தனித்துவமான இனப்பிரிவினர். அவர்களுக்கான அரசியல் தலைமையை கொண்டிருக்க உரித்துடையோர். வடக்கு கிழக்கு அம்மக்களினதும் பாரம்பரியத் தாயகம்.

02. வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் போராட்டங்களில் முஸ்லிம்களின் இணைவும் ஒத்துழைப்பும். தமிழ் முஸ்லிம் இன ஐக்கியத்தின் முக்கியத்துவமும்

03. பேரினவாத அரசாங்கங்களால் சாதாரண முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகள்.

04. முஸ்லிம் உயர்குழாம் அரசியல் தலைமைகளின் நலன்கள், அவர்களது அரசியல் தேர்வு, முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுவரும் சமூக வளர்ச்சிகள், அரசியல் மாற்றங்கள்.

இந்த விடயங்களையும் மாற்றங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள், முஸ்லிம்களை புரிந்து கொள்வதற்கு இந்த ஆய்வை ஊண்றிப் படியுங்கள் என தமிழ்த்தரப்பை நோக்கி சொல்வது அவரது பிரதான நோக்கங்களில் ஒன்றாக அன்று இருந்திருக்கிறது என நம்புகிறேன். எதார்த்தத்தில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை வகித்த சக்திகளின் பார்வை நோக்கில் முஸ்லிம்கள் தொடர்பாக அவர்கள் கொண்டிருந்த கருத்தியல், அபிப்பிராயங்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்கியதுடன் கசப்புணர்வுகளையும் முரண்பாடுகளையும் வளர்த்ததில் பெரும்பங்காற்றியது நாம் அறிந்ததே.

அதற்கு அடுத்ததாகவே முஸ்லிம்களுக்குள் இந்த ஆய்வு நூல் அளித்த பங்களிப்பினை கருதுகிறேன். தேசிய இனப் பிரச்சினையில் முஸ்லிம் மக்களின் நிலை தொடர்பாக தமிழில் முதன் முதலாக வெளிவந்த நூலாக இதனை கொள்ளலாம். வ.ஐ.ச ஜெயபாலன் இந்த விடயத்தில் முன்னோடியானவர். முஸ்லிம் மக்களுக்குள் இருந்த அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும், இளம் ஆய்வாளர்களுக்கும், அரசியல் துறை மாணவர்களுக்கும் மத்தியில் இந்த ஆய்வு கருத்தூன்றி வாசிக்கப்பட்டதுடன், புதிய கருத்துருவாக்கத்திற்கும் பலன் சேர்த்தது.

1980களின் ஆரம்பத்தில் முஸ்லிம் மக்களுக்குள் நிகழ்ந்து வந்த அரசியல் போக்கின் மாற்றமொன்றை அவர் தெளிவாக அடையாளம் கண்டார் “இன்று முஸ்லிம் மக்களது பல்வேறு பிரதேசங்களிலும் பாரம்பரிய கிராமங்களிலும் கல்வியும் மத்திய தரவர்க்கமும் பரவலாகி வளர்ச்சி அடைந்து வருகின்ற ஒரு காலகட்டமாக அமைந்துள்ளது. இதனால் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கும், அதனிடம் சரணாகதியடைந்துள்ள கொழும்பு சார் முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும் அரசியல் வஞ்சனைக்கு எதிராக பரந்துபட்ட முஸ்லிம் மக்களது குரல், குறிப்பாக இளைஞர்களது குரல் இலங்கை தீவின் நாலாபுறங்களிலிருந்தும் ஓங்கி ஒலிக்கத் தொடங்குகிறது” என 1981ம் ஆண்டு வெளிவந்த தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் என்ற இந்த ஆய்வு நூலில் கட்டியம் கூறினார். இதுவே 1986ம் ஆண்டுகளில் எம்.எச்.எம் அஷ்ரஃப் தலைமையில் முஸ்லிம் கங்கிரசாக அரசியல் இயக்கம் கண்டது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே, கொழும்பு தலைமைக்கு எதிராக மேற்கிளம்பிவரும் அரசியல் விழிப்புணர்வையும் கொழும்பு உயர்குழாம் முஸ்லிம் தலைமைகளிடம் இருந்து கிழக்கை நோக்கி முஸ்லிம் அரசியல் தலைமை கைமாற வேண்டிய முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியவர் வ.ஐ.ச. ஜெயபாலன். இந்த மாற்றமும், இதன் முக்கியத்துவத்துவமும் கருதி, இதன் அரசியல் போக்கை உணர்ந்து கொண்டவர்களாக தமிழ்த் தேசிய தலைமைகள் இருக்க வேண்டும் என்பதையும், இந்த நல்லதருணம் தமிழ் முஸ்லிம் மக்களின் ஐக்கியத்திற்கும் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் நல்ல வாய்ப்பு என நம்பியவர் ஜெயபாலன்.

முஸ்லிம்களை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்கள் கையாண்டதன் ஒரு பகுதி விளைவாக (அரசின் பங்கும் இதில் உள்ளது) 1984, 1985ம் ஆண்டு காலகட்டம், கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வில் மிக சோதனையானதும் அவலமானதுமான காலகட்டமாக மாறியது. பாரம்பரியமான இன உறவின் பாகங்கள் சிதையத் தொடங்கிய காலகட்டம் இது. வ.ஐ.ச ஜெயபாலன் நம்பிய இரண்டு விடயங்கள் இங்கு நடக்கவில்லை. ஒன்று தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட சக்திகள், முஸ்லிம்கள் மீது தமது மேலாதிக்கத்தை திணித்து அவர்களது இன, அரசியல் தனித்துவத்தை புறம்தள்ள தொடங்கின. இரண்டு கிழக்கிலிருந்து முகிழ்ந்த முஸ்லிம் அரசியல் தலைமை பிரதான நெருக்கடி நிலையாகவும் உடனடிப் பிரச்சினையாகவும் இயக்கங்களின் மேலாதிக்கத்தை எதிர் கொள்ள வேண்டி வந்தமை.

தேசிய இனப்பிரச்சினையின் இன்னொரு வடிவமாக இக்காலகட்டத்தில் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் – தமிழர், முஸ்லிம் பிரச்சினை தோற்றம் பெற்றது. 1990 ஒக்டோபர் வடமாகாணத்தை தமது தாயகமாகக் கொண்ட முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டனர். முஸ்லிம்களும் தமிழ் மக்களைத் தாக்கி கொலைகளைச் செய்ததுடன் உடமைகளுக்கும் சேதம் விளைவித்தனர். இந்த நிகழ்வுகள் தமிழ் முஸ்லிம் மக்களின் ஐக்கியத்தின் ஆன்மாவையே அசைத்தது. வ.ஐ.ச ஜெயபாலன் உட்பட தமிழ், முஸ்லிம் முற்போக்கு சக்திகள் இந்த நிகழ்வுகளை வன்மையாக எதிர்த்ததுடன் தமது எதிர்ப்பினையும் வரலாற்றில் பதித்துள்ளனர்.

இந்தக் காலகட்டங்களில் தமிழர் தரப்பு விட்ட தவறுகளை முஸ்லிம் தரப்பும் விட்டது. கிழக்கு மாகாணத்தில் கொலைகளும் பலிவாங்குதலும், விரோதமும் மலிந்தன. ‘இனங்களுக்கிடையிலான பிரச்சினையில் சுயவிமர்சனமற்ற விமர்சனம், இனவாதமே” என வ.ஐ.ச ஜெயபாலன் எழுதினார் – அதுவே உண்மையாகும். பிறர் தவறுகளை முன்நிலைப்படுத்தும் நாம்; நம் பக்கத் தவறுகளை பேச மறுப்பதும் பார்க்க மறுப்பதும் ஆரோக்கியமன்று என்பதுடன் உண்மையான ஐக்கியத்திற்கும் அதுவே தடையானது.

00000

tholamai-470x694.jpg

 

1995 தொடக்கம் 1997 வரை ‘சரிநிகர்” பத்திரிகையில் வ.ஐ.ச ஜெயபாலன் எழுதிய 13 கட்டுரைகள் இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட காலகட்டம் மிக நெருக்கடியானது, தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவு ஆழமான சிதைவுச் சூழலில் இருந்த காலம். இக்கட்டுரைகளின் பிரதான பேசுபொருளாக-

1. தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் பொறுப்புகள்

2. முஸ்லிம் மக்களும் விடுதலைப் புலிகளும்

3. வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்

4. முஸ்லிம் மக்களும் மலையக மக்களும்

5. தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடுகள்

என எதிர்ப்பு, கண்டனம், சுட்டிக்காட்டல்கள், முன்மொழிவுகள் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியாதாக உள்ளது.

தமிழ் முஸ்லிம் மக்களின் ஐக்கியத்திற்கும், ஒருமைப்பாட்டிற்கும் நானறிந்தவரை தமிழ் முஸ்லிம் மக்களுக்குள் இருந்து எழுதியும் பேசியும், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தவறுகளை சுட்டிக்காட்டியும் மோசமான நெருக்கடி நிலையினைக் கடக்க பணி செய்த ஒரு மனிதனாக வ.ஐ.ச ஜெயபாலன் உள்ளார். அவரளவு அந்த விடயத்தில் தீர்க்கமாக உழைத்த ஒருவரை பெயர் குறிப்பிட்டு சொல்வது மிக அரிதானது. அந்த வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்றிய ஆளுமை அவர். தமிழ் முஸ்லிம் மக்களின் ஐக்கியத்திற்காக உழைத்த வரலாற்று மனிதனாக, ஆவேசமும் கண்ணீருமாக கிழக்கு மாகாணத்தின் காடுகளிலும் வயல்வெளிகளிலும் கிராமங்களிலும் அலைந்துழனறவர் அவர்.

தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் பொறுப்புகள் விடயத்தில், இனவாத நிலைப்பாடுகளும் பிரதேச மேலாதிக்கப் பலத்தினை வைத்துக்கொண்டு சிறுபான்மையினரை ஒடுக்குகின்ற நிலைப்பாட்டை கைவிட்டு, அம்மக்களுக்கு நம்பிக்கையும் அரசியல் உத்தரவாதமும் வழங்கப்பட வேண்டும் என்பதில் வ.ஐ.ச ஜெயபாலன் தெளிவான நிலைப்பாட்டை கொண்டவராக இருந்துள்ளார். விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறை, கொலைகள், முஸ்லிம் தரப்பிலிருந்து தமிழ் மக்களுக்கெதிராக நடைபெற்ற வன்முறை, கொலைகள் மிக ஆபத்தானவை என அவர் எச்சரித்து வந்துள்ளார். ‘ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோம்” என விளித்து கூறும் வ.ஐ.ச ஜெயபாலன், தமிழ் இனவாதம், முஸ்லிம் இனவாதத்திற்கு எதிராக என்றும் குரல் கொடுத்தவர்.

முஸ்லிம் மக்களும் விடுதலைப்புலிகளும் தொடர்பாக, விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் விடயத்தில் இழைத்த தவறுகளை வெளிப்படையாக பேசும் வ.ஐ.ச ஜெயபாலன் அவர்களது கடமையையும் பொறுப்பினையும் இந்த தருணங்களில் சுட்டிக்காட்டி வந்துள்ளார். அதேவேளை முஸ்லிம்களுக்குள் இருந்து காட்டப்படுகின்ற அரசியல் தோற்றப்பாடானது நிலைமையை மேலும் சிக்கலாக்குவதுடன், தேசிய விடுதலைப் போராட்டம் குறித்த பார்வையின் அவசியத்தை வலியுறுத்துகிறார். ‘முஸ்லிம் தலைமைகளின இலட்சியம் பதவி, முஸ்லிம் மக்களின் கோரிக்கை உதவி” என்கிற நிலைமை மாற்றப்படவேண்டும் என்பதுடன், சொந்த மக்களுக்கான அரசியல் உரிமை விடயத்தில் முஸ்லிம்களுக்குள் தீர்க்கமான அரசியல் பார்வையின் தேவையை சுட்டிக் காட்டுகிறார்.

வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம், மீள்குடியேற்றம் தொடர்பில், முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து இனச் சுத்திகரிப்பு செய்ததற்கு எதிராக வ.ஐ.ச ஜெயபாலனின் எழுத்துக்கள் பரவலான கவனத்தையும், எதிர்ப்பையும் பெற்றதை பலர் அறிந்திருக்கக் கூடும். ‘சரிநிகர்” பத்திரிகைக்கும் அந்த விடயத்தில் ஜெயபாலனின் அனுபவமே கிட்டியது என நம்புகிறேன் – வ.ஐ.ச ஜெயபாலனும் ‘சரிநிகர்” பத்திரிகை ஆசிரியர் குழுவும் இந்த விடயத்தில் எடுத்த உறுதியான நிலைப்பாடு மிக முக்கியத்துவமானது. ‘சரிநிகர்” முஸ்லிம்களின் வெளியேற்றத்தை ‘தேசியத் தற்கொலை” என வர்ணித்தது. வ.ஐ.ச ஜெயபாலன் முஸ்லிம்களை வெளியேற்றியதற்கு எதிராக ‘அறம்பாடிய” கவிஞரானார்.

முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் விடயத்தில் தென்பகுதி முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் ஒருவரோடு ஒருவர் கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன என சுட்டிக்காட்டும் வ.ஐ.ச ஜெயபாலன் – மலையக, முஸ்லிம் சமூகத்திற்குள் ஏற்பட்டுவருகின்ற கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளிலான வளர்ச்சியின் போக்கை காட்டுகிறார். குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்குள் ஏற்பட்டுவந்த உயர் கல்வித்துறையில் முஸ்லிம் பெண்கள் காட்டும் ஆர்வத்தை எடுத்துரைக்கிறார். முஸ்லிம் ஆய்வாளர்கள், சமூக சக்திகள் உருவாவதுடன் சமூக கற்கை, ஆய்வுகளின் செயற்பாடுகளையும் வலியுறுத்துகிறார்.

தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் – வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வை விடுதலைப் புலிகள் முன்வைக்க வேண்டுமென வலியுறுத்திய வ.ஐ.ச ஜெயபாலன் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கான தனி அதிகார அலகும், அம்பாரை மாவட்ட தமிழர்களுக்கான அரசியல் உரிமையையும் உத்தரவாதத்தையும் முஸ்லிம் தலைமைகள் வழங்கவேண்டுமென வலியுறுத்துகிறார். தமிழர் தலைமைகள் முஸ்லிம்களின் அரசியல் தனித்துவத்தை மதித்து சரியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டுமென கோரும் வ.ஐ.ச ஜெயபாலன், தமிழ் மக்களின் விடுதலைக்கான தோழமை சக்திகளாக முஸ்லிம் தலைமைகளை பார்க்க வேண்டுமெனவும், அதேநேரம் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற அரசியல் தலைமைகள் எடுக்கின்ற அரசியல் நிலைப்பாட்டை விமர்சிப்பதுடன் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் அடிப்படையான கோரிக்கையிலிருந்து விலகி தடம்மாறிச் செல்வதையும் சுட்டிக் காட்டுகிறார்.

0000

1981 தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் எனும் ஆய்வும் 1995, 1997 ‘சரிநிகர்” கட்டுரைகளையம் நூலாக்குகின்ற போது குடிசன விபரங்கள் மற்றும் ஓரிரு தகவல்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை கவனிக்க வேண்டும். அத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்பு அழித்தொழிப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டும் விட்டது. முஸ்லிம்களுக்குள் தோன்றிய தேசிய அரசியல் இயக்கம் சீரழிவு கண்டு அதன் அரசியில் பண்பினையும் இழந்தும் விட்டது. ஆனால் தமிழ் முஸ்லிம் மக்களின் ஐக்கியமும் சமத்துவமுமான வாழ்வும் ஆழமான முரண்பாடுகளினதும் கசப்பான அனுபவங்களின் பின்னும் தவிர்கமுடியாத தேவையாக இன்றைய நிலையில் மேலெழுந்துள்ளதே எதார்த்தமாகும்.

இரு இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தின் தேவையை உணரும் காலகட்டம் இதுவென நாம் உறுதியாக நம்பலாம். இதற்கான முயற்சிகள் செய்யப்பட வேண்டும். வ.ஐ.ச ஜெயபாலன் போன்ற மனித ஆளுமைகளின் பங்களிப்பிற்கும் எழுத்துக்களுக்கும் வரலாறு மீண்டும் ஒரு வாசலை திறந்து வைத்திருக்கிறது.

0000

இந்த நூல் வெளிவருகின்ற இன்றைய காலகட்டம் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் தமிழ் முஸ்லிம் மலையக மக்களினதும் இனத்தேசிய அரசியலில் பொறுப்புமிகு காலகட்டமாகும். இலங்கை முஸ்லிம்கள் மீதான இன மத அடையாளங்கள் சார்ந்த நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. சிங்கள தமிழ் இன முரண்பாடு தீவிரம் பெற்றதை அடுத்து முஸ்லிம்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் ஆளும் அரசால் அடக்கிவாசிக்கப்பட்டு வந்த நிலை, சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்குமான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் அவ்வெற்றியின் இனத்துவப் பெருமையும், அரசியல் களிப்பும் அடுத்த கட்டப் பாய்ச்சலாக முஸ்லிம்கள் மேல் திரும்பியுள்ளது.

சிறுபான்மை தேசிய இனங்கள் மீது திட்டமிட்ட வகையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இனம் சார்ந்தும், மதம் சார்ந்தும் பொருளாதார நலன் சார்ந்தும் பேரிணவாதிகள் தொடர்ச்சியான அரசியல் குரோதத்தையும் அடக்கிஒடுக்குதலையும் மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இந்தச் செய்கையின் பின்னால் சிங்கள மக்களின் நலனும் பாதுகாப்பும் தேசப்பற்றும் உள்ளதென சிங்கள மக்களுக்குள் அர்த்தம் கற்பித்து வந்திருக்கின்றனர். இப்போது முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை தீவிரப்படுத்தும் காலகட்டம் இதுவாக உள்ளது.

இந்த இக்கட்டான நிலைமையில் தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியேயும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் எழுத்தாளர்களும் சிவில் சமூகமும் இந்த விடயங்களையிட்டு பரந்துபட்ட வகையில் ஆக்கபூர்வமான உரையாடல்களை தொடங்குவது அவசியமானதாகும். தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத உணர்ச்சி சார்ந்த அரசியலிலிருந்து வெளியே எடுத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும் சமத்துவமான வாழ்விற்குமான களத்திற்கு இட்டுச்செல்லவேண்டியுள்ளது. இந்த விடயத்தில் இந்நூல் முக்கியமான பங்களிப்பை வழங்கும் என உணர்கிறேன்.

00000

தோழமையுடன் ஒரு குரல்

வ.ஐ.ச ஜெயபாலன்

எழுநா வெளியீடு 10

யூன் 2013

 

http://eathuvarai.net/?p=4138

முக்கியமான கட்டுரை..
தமிழர்கள் முஸ்லிம்கள் என அனைவரும் வாசிக்க வேண்டியது...
நன்றி கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.