Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் யுத்தம் ஈழவரலாறு முதல் பகுதி தொடர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் 2009 ல் டிசம்பரில் எழுதிய கட்டுரை ஏற்கனவே தெரிந்திருந்தாலும் சில பார்வை கோணங்கள் வித்தியசமாக உள்ளது ஆகவே இங்கு இணைத்துள்ளேன் . முதல் யுத்தம்

 
பிரபாகரன் என்பவரை இந்த நிமிடம் வரைக்கும் வளர்த்தது அவருடைய தன்னம்பிக்கை என்றாலும் அதற்கு மேலும் அவருடைய மூர்க்கத்தனத்தை முழுமையாக ஆளுமை என்று நம்ப வைத்ததிற்கு மறைமுக காரணம் ஜெயவர்த்னே என்றால் அது சற்று கூட மிகையில்லை. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் அத்தனை பேரும் சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்தார்களே தவிர இவரது கால தமிழர் தாக்குதல்கள் என்பதும் ஒப்பிடும் போது குறைவு.  இதுவே தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை என்பதாகவும், அச்சம் என்ற நிலைமையிலும் அவரை ஆதரிக்க வைத்தது.   இரண்டும் கலந்து நாள்பட பாசமாகவும் மாற்றம் பெறத் தொடங்கியது.
 
ஒவ்வொரு இலங்கை ஆட்சியளார்களும் உருவாக்கிய குறுக்கு வழிகளை பயன்படுத்திக்கொண்ட சிங்களர்கள் எவரும் இன்று வரையிலும் உலக அளவில் மிகப்பெரிய பங்களிப்புகளை தந்துவிடவில்லை.  இருந்தாலும் ஒப்பீட்டளவு என்று பார்த்தால் மிகக்குறைவு.  இதே நிலைமை தான் அரசாங்கத்திலும். சுதந்திரம் பெற்று இன்று வரையிலும் இலங்கையில் 60 வருடத்தில் எந்த சுயசார்பும் இல்லை.  ஒரு மரபணு சோதனை வசதியோ, நவீன விஞ்ஞான தொழில் நுட்ப வசதிகளோ என்று பல விசயங்களையும் உதாரணம் காட்டலாம்.  காரணம் மலையக தமிழர்கள் உருவாக்கிய தேயிலை வருமானம், தென்னை சார்ந்த, இயற்கை கொடையாக கொடுத்த துறைமுக வருமானம் என்பதாகத்தான் இன்று வரையிலும் வளர்ந்துள்ளது.
 
தமிழர்களை அழிக்க பயன்படுத்திய செலவுகளையும், வாழ்வாதாரங்களை சூறையாட பயன்படுத்திய சிந்தனைகளை ஒரு போதும் தன்னுடைய நாட்டு வளர்ச்சிக்கு இன்று வரையிலும் செலவிடப்படவில்லை.  அதுவும் சந்திரிகா ஆட்சி காலத்தில் பிச்சை எடுக்கும் அளவிற்கும் வந்தது.
 
மந்தப்புத்தி, குறுக்குவழி, மொத்த ஆட்சியாளர்களிடமிருந்த இனவெறி பார்வை என்று அவர்கள் வளராத வளர்ச்சிக்கு அவர்களே காரணமாக இருக்கின்றனர்.
 
தொடக்கத்தில் திருகோணமலையை அடிப்படையாகக்கொண்டு ஜெயவர்த்னே அமெரிக்க ஆதரவு நிலை எடுத்தார்.  அதுவே கால மாற்றம் பெற்று ராஜபக்சே சீனா ஆதரவு எடுத்துள்ளார்.  ஆட்சியாளர்கள் சுருட்ட முடிந்த அளவிற்கு உள்ளே உள்ள அடிப்படை சிங்களர்களின் வாழ்க்கைத் தரமும் அந்த அளவிற்கு உயர்ந்த நிலைமைக்கு வந்ததாக சொல்ல முடியாது?
 
"ஆதரவு கொடு. அவர்களை அழிக்கின்றேன்" என்று வந்த ஒவ்வொருவரும் இருவரையும் தான் அழித்தார்கள்.  ஆனால் தொடக்கம் முதல் யுத்த தர்மம் என்ற பார்வையில் சிங்கள மக்களை பிரபாகரன் கொன்றார் என்றோ தேவையில்லாத பிரச்சனைகளை செய்தார் என்று பார்த்தால் ஓப்பிட்டளவில் குறைவு.  ஆனால் ஆட்சியாளர்கள் இந்த விசயத்தில் மிகத் தெளிவு.
 
"உன்னைத் தாக்க எங்களால் முடியாது.  உன் இனத்தை ஒன்றுக்கு ஆயிரமாக தாக்குவோம்".  இதுவே தான் இன்றுவரையிலும். ஆனால் அன்று முதல் இன்று வரையிலும் இந்தியாவிற்கு தனிநாடு என்ற பிரபாகரன் கொள்கைக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அவர்களை தங்களுக்கு சாதமாக எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற ஒரு நோக்கம் மட்டுமே.   ஏறக்குறைய கருவேப்பிலை போல.
 
இலங்கை நாட்டின் ஒத்துழைப்பு வேண்டும்.  இலங்கை தமிழர்களை போராட்டங்கள் மூலம் திருப்தி படுத்த வேண்டும்.  இந்த இரண்டுங்கெட்டான் தான் இன்று வரையிலும்.
 
இது தமிழ்நாட்டில் இன்று வரையிலும் பலரையும் வாழ வைத்துக்கொண்டுருக்கிறது.
 
ஆனால் இலங்கை என்பது தொடக்கம் முதல் இந்தியா என்ற வல்லரசை பேயரசாகத் தான் பார்த்து வந்து கொண்டுருக்கிறது.  இன்று வரையிலும்.  1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் சண்டையின் போது பாகிஸ்தான் போர் விமானங்கள் எரிபொருளுக்காக இறங்கிச் செல்ல அனுமதித்தது.
 
1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கச்சத் தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக்கொள்ளலாம் என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாவது விதி கூறுகிறது.  ஆனால் அது இன்று மீனவர்களின் விதியை தீர்மானம் செய்கிறது.
 
1964 ஆம் செய்த சிறீமாவோ சாஸ்திரி ஓப்பந்தம்படி இந்தியாவிற்கு திருப்பி அழைக்கப்படும் தொழிலாளர்களை அது வரையிலும் பணிபுரிந்த இடத்தில் உள்ள ஊதியம், ஊக்கத்தொகை, ஓய்வுதியத் தொகை, அழைக்கும் வரையிலும் பாதுகாப்பு என்று இருந்ததும் அத்தனையும் அப்பட்டமாக மீறப்பட்டது.
 
அணிசேரா மாநாட்டில் அமெரிக்காவின் கைக்கூலியாக இருந்த இலங்கை , இந்தியா கொண்டு வந்த அமெரிக்க படையை திருகோணமலையை விட்டு அனுப்பும் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.
 
ஒரு நாட்டின் அதிபராக இருப்பவர் ஜெயவர்த்னே போன்று எந்த நாட்டிலும் எந்த காலகட்டத்திலும் அப்பட்டமான தமிழர் எதிர்ப்பை மிகத் தைரியமாக ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டவர் எவரும் இல்லை. அத்தனை குரோதம், வெறுப்பு, காழ்புணர்ச்சி.  இந்தியா என்பது அவரைப் பொறுத்தவரையிலும் தமிழ்நாடு தான்.  கடைசி வரையிலும் எந்த மாற்றமும் இல்லை.
 
1961 ஆம் ஆண்டு முதிய வயதில் தந்தை செல்வா சிறையில் அடைக்கப்பட்ட போது அறிஞர் அண்ணா வெளியிட்ட அறிக்கையின் இறுதி வாசகம்.
 
" இந்த அறிக்கை விண்ணப்பம் பகை உணர்ச்சியால் எழுதப்பட்டது அல்ல. துக்கத்தின் மையினால் எழுதப்பட்டது. எனவே இந்த நீண்ட பேரணி மூலம் இனிமேலாவது இலங்கையில் அமைதி திரும்பும் என்று நம்புகிறோம்"
 
அப்போது அறிஞர் அண்ணா ஐ.நா சபைக்கு மொத்த நிகழ்வுகளையும் தந்தியாக அனுப்பினார்.
 
1983 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டக்கல்லூரி மாணவர்களும், மற்ற அத்தனை கல்லூரி மாணவர்களும் நடத்திய கண்டன பேரணி காரணமாக டெல்லி வட்ட மேஜை மாநாட்டுக்கு வருகை தந்த ஜெயவர்த்னே தமிழ்நாட்டு வருகையை தவிர்த்து ஓடிப் பறந்தார்.
 
இலங்கை நல்வாழ்வு என்ற நோக்கத்தில் உணர்ச்சி வேகத்தில் முதன் முதலில் தீக்குளித்தவர் 21.6.1984 அன்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஷாஜகான் (மதுரை மாவட்டம் நத்தம் என்ற ஊரில் பிறந்தவர்).  வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக (கருணாகரன்) அடுத்து சென்னையில் இருந்த இலங்கை தூதரகம் முன்பு தீக்குளித்து கடைசியாக போராடி காப்பாற்றினார்கள்.
 
இதே ஆண்டில் எம்.ஜி.ஆர் பொது வேலைநிறுத்தம், கண்டன பேரணி, அமெரிக்க தூதரகத்தில் மகஜர் அளித்தல் என்று முடிந்தது. கலைஞர் கருணாநிதி எதிர்கட்சி தலைவர் பதவியை துறந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இதே ஆண்டில் ராஜினமா செய்தார்.
 
எம்.ஜி.ஆர் அளித்த பொருள் உதவியும், பழ. நெடுமாறன் அளித்த ஒத்துழைப்பும் விடுதலைப் புலிகளை சுய சார்பு நிலைமைக்கு கொண்டு வர உதவியது.  இந்திரா காந்தி அளித்த ஆயுதப்பயிற்சி என்பது பிரபாகரன் வேண்டா வெறுப்பாக பயன்படுத்திக்கொண்ட விசயங்கள்.  காரணம் தொடக்கம் முதலே தன்னை மட்டும், தன் கொள்கைகளையும் மட்டுமே நம்பியவர்.  இந்தியாவை தொடக்கம் முதலே சந்தேகக் கண்ணோடு பார்த்தவர்.

ஆனால் பிரபாகரனை பொறுத்தவரையிலும் இந்தியாவை, தமிழ்நாட்டை எந்த பார்வையில் பார்த்து இருந்தாலும் அவருடைய முக்கிய வளர்ச்சியில் இன்று வரையிலும் இருப்பவர்கள் பழ. நெடுமாறன், திராவிடர் கழகம்.  ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு கூட மற்றவர்களைப் போல தங்களுடைய நாக்கு தடம் புரள இவர்கள் அனுமதிக்கவில்லை. எம்.ஜி.ஆர் சட்டத்திற்கு உட்பட்டு, தன்னால் செய்ய முடிந்ததை எவையெல்லாம் செய்தாரோ, அதே போல் இவர்கள் சட்டத்தின் படியும் சட்ட புறவாசல் வழியாகவும் தங்களுடைய ஈழ ஆதரவை பிரபாகரன் ஆதரிப்பு மூலம் வஞ்சகம் இல்லாமல் காட்டினார்கள். தொடக்க காலத்தில் திராவிடர் கழக வெளியீட்டு புத்தகங்கள் ஒவ்வொன்றும் காலப்பெட்டகம்.
 
இந்த ஒரு இடத்தில் தான் பிரபாகரனுக்கும் மற்றவர்களுக்கு உள்ள பெரிதான வித்யாசங்கள் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது. ஆனால் பிரபாகரன் போல் உமா மகேஸ்வரன் கூட புகழ்பெற்ற சிறை உடைப்பு சமாச்சாரங்களை நடத்தி உள்ளே இருந்தவர்களை வெளியே கொண்டு வந்ததும் நிகழ்ந்தது.  இந்தியாவின் தலையீடும், இவர்கள் உருவாக்கிய குயுக்தியும் மொத்த பிரச்சனையும் உருவாக்கியது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.  அது தான் மாத்தையா வரை பலர் சாவதற்கும் காரணமாக இருந்தது.
 
வலியோடு வாழ்ந்தவர்கள் செய்த ஒவ்வொன்றும் அதிரடி தான்.  சந்தேகம் இல்லை. பெற்ற வலிகளும் அதிகம் தான்.  படித்தவர், படிக்காதவர், சம்மந்தம் இருந்தவர், இல்லாதவர் என்று அத்தனை பேர்களும் இலங்கை ஆட்சியாளர்களின் பார்வையில் அழிய வேண்டியவர்கள்.  இதுவரையிலும் நடத்தப்பட்ட தனி மனித படுகொலைகள் மொத்தமாக காரண காரியங்களோடு பார்க்க வேண்டியதை பின்னால் பார்க்கலாம்?
 
இந்த நோக்கம் ஒன்றே பிரபாகரன் கொண்டுருந்த கொடூர குணத்தை மக்கள் அங்கிகரிக்கத் தொடங்கினார்கள்.  அவரின் பார்வையில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை சூறையாடப்பட காரணமாக இருக்கும் ஆட்சியாளர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்.  அதே சமயத்தில் தன்னுடைய தனித்தன்மையையும், தங்களுடைய வளர்ச்சியையும் முன்னிலைபடுத்த வேண்டிய அக்கறையில் ஒவ்வொரு அடியும் மிகக் கவனமாக எடுத்துச் செல்ல வேண்டியதை முழுமையாக உணர்ந்து நகர்ந்தார்.
 
குடும்பம் என்று உருவான போதும் கூட அவருடைய எண்ணங்களில் எந்த மாற்றமும் உருவாகவில்லை.  குழந்தைகள் வந்த போதும் கூட அவருடைய திட்டமிடுதலில் எந்த குறைபாடும் காண இயலவில்லை.  வெறி என்பதே ஊறி, உணர்ந்து, உள்வாங்கி, ஒரு தனி மனிதராக வரி வசூல் முதல் உள் கட்டமைப்பு வரைக்கும் இயக்கம் தொடங்கிய முதல் ஏழு ஆண்டுகளுக்குள் சாதிக்க முடிந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
காரணம் இது வரையிலும் பதுங்கு தாக்கு என்ற கொரில்லா முறை மாறி முறைப்படி இராணுவ ரீதியான தாக்குதல்களும், இலங்கை தமிழர் போராட்டத்தில் முதல் யுத்தம் என்ற முறைப்படியான யுத்தம் இனி தொடங்கப்போவதும், இன்னும் இரண்டு வருடத்திற்குள் திம்பு பேச்சு வார்த்தை, ராஜிவ் காந்தி தலையிடல், ராஜிவ் காந்தி படுகொலை என்று தொடரப்போகிறது.
 
இந்தியா உள்ளே நுழைய சகோதர யுத்தங்களும், ரத்தச்சுவடுகளும் தனிப் பாதையில் பயணிப்பதும், விடுதலைப்புலிகளின் மொத்த கட்டுமாணம், ஆளுமை, வியப்பு, பயம், அச்சம் என்று இனி ஒருங்கே பயணிக்கப் போகிறோம்?
தீர்க்கதரிசனம்
 
ஜெயவர்த்னே ஆட்சியில் நடந்த உச்சத்தின் முதல் பகுதி யாழ்பாண நூலக எறிப்பு.  காகிதங்களை கொளுத்தி முடித்த பிறகு அடுத்து மனிதர்கள்.  சமயம் பார்த்துக் கொண்டுருந்தவர் பிரபாகரன் தாக்குதல்களால் இறந்த இராணுவ வீரர்களை இறுதி அஞ்சலி என்ற போர்வையில் வலம்வரச் செய்து வெறீயூட்டும் நிகழ்வும் நடந்தது.  சாதரணமாகவே காத்துக்கொண்டுருந்த அத்தனை சிங்களர்களும், காவல்துறையும் ஆழித்தீயின் கோரத்தாண்டவம் போல் ஆடித்தீர்த்தனர்.
colombo%20riots.jpg
உலகமெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் பிரபாகரனுக்கு பணமாக பொருளாக ஆதரவுக் கரம் நீட்டியதற்கு பல காரணங்கள்.  அச்சம், மிரட்டல், ஆதரவு, பாசம், வேறு எவரும் இல்லை, வேறு வழியில்லை.  இந்த ஆறு காரணங்களும் ஒன்றாக சேரச்சேர அவருடைய வளர்ச்சி 1978 முதல் 1984க்குள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு வளர்ச்சி பெற்று தனியாக ஆயுதக் கொள் முதல், தனியாக கப்பல் போக்குவரத்து,போன்ற அத்தனை உள்கட்டமைப்பு உள்ள இராணுவ வளர்ச்சியாக படிப்படியாக வளர்ச்சி அடைந்து கொண்டே வந்தது.
 
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் அப்போது இருந்த மற்ற இயக்கங்கள் உமா மகேஸ்வரன் PLOTE.  சிறீ சபாரெத்தினம் தலைமையில் TELO. பத்மநாபா தலைமையில் EPRLF. கடைசியாக EROS  என்ற அமைப்பும் லண்டன் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுக்கொண்டுருந்தது. அவவ்போது பிரபாகரனால் நடத்தப்பட்ட தனி மனித தமிழர் படுகொலை என்பது தண்டணை என்பதாக இருந்ததே தவிர சகோதர யுத்தம் என்பதாக மாற்றம் பெறவில்லை.  காரணம் அதுவரைக்கும் இந்தியா உள்ளே நுழையவில்லை.
 
மற்றவர்களுக்கும் பிரபாகரன் போராளிகளுக்கும் உள்ள வித்யாசம், தாக்குதல்கள் ஒவ்வொன்றும் துல்லியமாக திட்டமிட்டு நடத்தப்பட்டது.  ஆனால் அதன் மொத்த விளைவுகளையும் மக்கள் சந்திக்க நேர்ந்தது. இந்த கருப்பு ஜுலையின் கோரத்தின் கொல்லப்பட்ட தமிழர்களும், இழந்த சொத்துக்களும், அகதிகளாக தப்பி வந்தவர்களும் கணக்கில் அடங்கா.  இது போக இராணுவ பாதுகாப்பு நிறைந்த வெலிக்கடை சிறையில் இருந்த குட்டிமணி தங்கதுரை உள்ளே இருந்தவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களும், கண்ணீர் வரவழைக்கும் கோரச் சுவடுகளும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத ஜுலை மாதமாக ஆனது.
 
மக்களின் துன்பம் ஒரு வகையில் இந்தியாவின் பார்வையிலும், தமிழ்நாட்டின் பார்வையிலும் பட அது வேறு வகையில் பிரபாகரனுக்கு உதவியாய் இருந்தது.  அதுவே ஆண்டு கொண்டுருந்த எம்.ஜி.ஆர். தமிழீழம் என்ற கனவு அடைய எவ்வளவு செலவாகும்? என்று கேட்கும் அளவிற்கு.  அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். "தனி நாடு தான் இனி தீர்வு" என்பதை மனப்பூர்வமாக நம்பியவர்.
 
ஆனால் மொத்த தாக்குதல்களையும் அமிர்தலிங்கம் இந்திரா காந்தியிடம் வந்து சொன்ன போது, தனிநாடு என்ற கோரிக்கையை விட சுயாட்சிக்கு ஆதரவு தயார் என்பதாக மாற்றம் பெற்றது.  அமிர்தலிங்கம் மொத்த கதையையும் சொன்ன போதும் கூட வேறு வழியில்லை என்பதாகத் தான் பேச்சுவார்த்தைக்கு அமிர்தலிங்கம் முன்வந்தார். இதன் தொடர்ச்சியாக திம்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.
 
எம்.ஜி.ஆர் ஒரு பக்கம், கலைஞர் ஒரு பக்கம், பழ, நெடுமாறன் ஒரு பக்கம்.  தமிழ்நாட்டில் கண்டன பேரணிகளும், ஆர்ப்பாட்டமும், கடல் வழியாக நாங்கள் இலங்கைக்குச் செல்கிறோம் என்ற நெடுமாறன் பயணமும் என்று மொத்தமாக தமிழ்நாடு இலங்கை ஆதரவு நெறி கட்டிக்கொண்டுருந்தது.  அப்போது கலைஞர் சொன்ன வாசகம்
 
" பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசத்தை பிரித்துக் கொடுப்பதைப் போல தமிழர்களுக்கு தமிழீழம் தான் இனி ஒரே தீர்வு"
 
இந்திரா காந்தியின் சார்பாக அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்மராவ் கொழும்பு சென்றபோதும் கூட ஜெயவர்த்னே அவமானபடுத்தியோடு அசைந்து கொடுப்பதாகவும் இல்லை. இதை பிரபாகரன் கவனித்துக்கொண்டுருந்தாலும் உள் மனம் "சிங்களர்களை தவறாக இந்தியா பார்த்துக்கொண்டுருக்கிறது"  என்பதாக தன்னுடைய பாதையில் மிகக் கவனமாக இருந்தார். அவரின் ஆயுதப்பாதையும் ஒரு பக்கம் வலுவடைந்து கொண்டுருந்தது.
 
இதே சமயத்தில் விடுதலைப்புலிகளின் மொத்தக் கோட்பாடுகளின் ஒன்றாக திருமணம் செய்து கொள்ளல் கூடாது என்ற கொள்கை பிரபாகரன் மீறும் சூழ்நிலை உருவானது.  காரணம் 1983 கருப்பு ஜுலை கலவரத்தின் காரணமாக பெரதேனியா பல்கலைகழகத்தின் பயின்று வந்த மொத்த தமிழ் மாணவ மாணவியர்களும் எங்களை யாழ்பாண பல்கலைகழகத்திற்கு மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.  காரணம் ஏற்கனவே நடந்த கலவரத்தில் திட்டமிட்டு தமிழ் மாணவ மாணவியர்கள் அத்தனை பேர்களும் தாக்கப்பட்டனர்.  இதன் பொருட்டு மாணவிகள் (  ஜெயா, லலிதா, வினோஜா, மதி என்கிற மதிவதனி) சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் தொடங்க, பிரபாகரன் பார்வைக்கு வந்த அவர்களை கட்டாயப்படுத்தி தமிழ்நாட்டு அழைத்து வந்தனர்.
 
அப்போது தமிழ்நாட்டில் இருந்த ஆன்டன் பாலசிங்கத்திடம் "மதிவதினியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக" சொன்ன போது முதலில் யாரும் நம்பும் சூழ்நிலையில் இல்லை. காரணம் ஏற்கனவே உமா மகேஸ்வரன் பிரச்சனை, அது போக போராளிகள் எவரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற பிரபாகரன் உருவாக்கிய வைத்திருந்த கட்டளை, இதன் பொருட்டு உள்ளே போராளிகளாக இருந்தவர்களின் மொத்த அபிலாசைகளும் தனக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் என்று மொத்தமாக ஒரு தர்மசங்கடத்தை உருவாக்கியது.
 
இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க அம்சம், மதிவதினியிடம் நேரே பேச தயங்கி ஆன்டன் பாலசிங்கம் மூலம் ஒரு புரிந்துணர்வை உருவாக்கியதும், மொத்த போராளிகளிடமும் கலந்து பேச வைத்து அவர்களின் சம்மதத்தையும் பெற்று, பல சங்கடங்களையும் கடந்து சென்னை திருப்போரில் (1984 அக்டோபர் 1).  மதிவதினியின் பெற்றோர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு தேடப்படும் தீவிரவாதியின் மொத்த சாதக பாதக அம்சங்களையும் அவர்கள் அத்தனை பேரையும் வைத்து அலசி ஆராய்ந்துவிட்டு அமைதியாக நடந்தது.
 
காதல் கல்யாணம் என்பதுடன் ஜாதி மறுப்பு என்கிற நிலையிலும் அமைந்தது.  அதைத் தொடர்ந்து போராளிகள் திருமணம் என்ற வாழ்க்கையும் நடைபெறத் தொடங்கியது.  தாமதம் என்றாலும் வரும் காதலை எவரால் தடை போட முடியும்?
 
அப்போது சீறீ சபாரெத்தினம் தலைமையில் இயங்கிக்கொண்டுருந்த டெலோ இயக்கம் மட்டும் இயக்கத்தில் பெண்களை இணைத்து இருந்தனர்.  ஒரு பாதிரியார் உத்தரவின்படி பிரபாகரன் அதற்குப் பிறகு படிப்படியாக பெண்களை இயக்கத்தில் சேர்க்க ஆர்வம் காட்டினார்.
 
முதன் முறையாக இந்த சமயத்தில் அனிதா பிரதாப் என்ற பெண் பத்ரிக்கையாளர் பிரபாகரனை சந்தித்ததும், அவர் மூலம் முன்பே இந்த ஜுலை கருப்பு தினத்தை உலகம் முழுக்க பரப்பியதற்காக அவருக்கு பிரபாகரன் நன்றி சொன்னதும், இயக்கத்தில் உள்ளவர்களின் ஓழுக்க ரீதியான முன்னேற்பாடுகளை பார்த்து அனிதா பிரதாப் வியந்து நின்றதும், அத்துடன் பிரபாகரன் அன்று சொன்ன வாசகம் அவரின் தீர்க்கதரிசனத்தையும் பறைசாற்றியது.
 
இப்போதைய சூழ்நிலையில் இந்தியா எல்லா உதவிகளையும் உங்களுக்குச் செய்கிறது.  உங்கள் போராளிகளுக்கு பயிற்சி முகாம், தமிழ்நாட்டில் உங்களுக்கு பண உதவி என்று எல்லாபக்கமும் உதவி என்பதை எவ்வாறு கருதுகிறீர்கள் என்று கேட்ட போது பிரபாகரன் சொன்ன பதில்.
 
”இப்போது எங்களுக்கு இந்தியா செய்கின்ற உதவி எங்கள் சுதந்திரத்திற்காக அல்ல.  அவர்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக.  இலங்கையை பயமுறுத்தி வைப்பதற்காக.  இதே இந்த இந்தியாவுடன் நாங்கள் எதிர்காலத்தில் போரிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்"
 
காரணம் அன்னை இந்திரா காந்தியின் இறப்பும், மக்கள்தலைவர் எம்.ஜி.ஆர் இறப்பும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வுரிமை போராட்டத்தில் மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கியது என்றால் அது மிகை இல்லை.  அதுவே தனிப்பட்ட முறையில் பிரபாகரனின் வளர்ச்சிக்கும், ஆளுமைக்கும் , அவரை மட்டும் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையில் அதுவரையிலும் நடந்து நிகழ்வுகளில் இருந்து மற்றவர்களைவிட சற்று புத்திசாலித்தனமாய் சுயசார்பு என்ற நிலையையும் எட்டியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வெறித் தீ
 
யாழ்பாணத்தில் நடக்கும் மாவட்ட சபை தேர்தலில் ஜெயித்து விட வேண்டும் என்று தன்னுடைய சீடர்களான சீறீ மாத்யூ, காமினி திசநாயகா போன்ற அமைச்சர்களை ஜெயவர்த்னே அனுப்பி வைத்தார். அவர்கள் உருவாக்கிய கலவரங்கள் (1981), கடைத்தெரு முதல் யாழ்பாண மார்க்கெட் வரைக்கும் பரவியது. எறிவதை அணைக்க முயற்சிப்பவர்களை எறியும் தீயில் தள்ளி எறியூட்டப்பட்டனர்.
 
தமிழர் விடுதலைக்கூட்டணி முன்னாள் எம்.பி வெற்றிவேல் யோகேஸ்வரன் வீட்டை காவல்துறை முற்றுகையிட்டு வீட்டை கொளுத்த, மயிரிழையில் உயிர் தப்பி மனைவியுடன் பின் வாசல் வழியாக தப்பினார்.  மொத்த அலுவலகத்தையும் சூறையாடப்பட்டது.
 
1981 ஜுன் 1.
 
யாழ்பாண நூலகம் மொத்த கலவரக்காரர்களால் தீ வைக்கப்பட்டது. சிங்கள இனவாதிகள் மேற்பார்வையிட, காவல்துறையினர், சிங்கள இளைஞர்கள் என்று பெரிய கும்பல் கோரத்தாண்டவம் ஆடியது.  உள்ளே இருந்த மொத்த நூல்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல். அரிய சுவடிகள் முதல் ஏராளமான தமிழ் புதையல் அது.  ஆசியாவிலேயே முதன்மையானது.
Jaffnalibrary1.jpeg
ஆசியாவில் இதற்கு முன்னால் நடந்த கோரச்சுவடுகள்.
 
போர்த்துகீசியர்களால் (1619) எறிக்கப்பட்ட தமிழ்நாட்டு சரஸ்வதி மகால். 12ம் நூற்றாண்டில் நாலாந்தா பல்கலைக்கழகம்.  ஹிட்லர் படையெடுப்பின் போது நூலகத்தை தவிர மற்றவற்றை கவனித்துக் கொள்ளுங்கள் என்றார்.  ஆனால் இவர்களோ ஹிட்லரையும் மிஞ்சி விட்டனர்.
 
இவர்களின் வெறியின் தொடர்ச்சியாக பருத்தித்துறை (1984) ஹார்ட்லி பல்கலைக் கழகத்தில் இருந்த புத்தகங்கள், வல்வெட்டித்துறை நூலகம், ஈழவேந்தனின் தனிப்பட்ட அக்கறையின் பால் உருவாக்கி வைத்திருந்த (1977) ஆவண காப்பகம்,  சிவ சிதம்பரத்தின் (1983) பொக்கிஷங்கள் என்று தொடர்ந்த மொத்த தமிழர்களின் எந்த வரலாற்றுச் சுவடும் இருந்து விடக்கூடாது என்பதில் பிரத்யோக கவனம் செலுத்தினர்.
 
தமிழறிஞர்கள், மூத்தவர்கள் என்று எவரும் பாரபட்சம் இல்லாமல் சிறையில் அடைத்தனர்.  காந்திய இயக்கம் என்று நடத்திக்கொண்டுருந்த டேவிட், இராஜசுந்தரம் என்பவர்களை திடீர் என்று கைது செய்து,  சிறைக்கு இழுத்துச் சென்று அங்கு தேக்கி வைத்திருந்த நீரில் இரவு முழுவதும் முழு நிர்வாணமாக நிற்க வைத்து, ஊர்ந்து வரச்செய்து, மொத்த வெறியையும் தணித்துக்கொண்டனர். இது போல் ஆயுதப் பாதையில் சம்மந்தம் இல்லாத பலரும் பலவிதமான சித்ரவதைக்குள்ளானர். யாழ்பாண நூலகம் எறிவதைக் கேட்ட மாத்திரத்தில் பாதர் ரெவண்ட் அந்த இடத்திலேயே மாரடைப்பால் காலமானார்.
 
காந்திய இயக்கத்தின் டேவிட் அவர்களால் எழுத்தப்பட்ட தனி இதழ்கள் மொத்த விடுதலைப்புலிகளின் சாதக பாதக அம்சங்களை சுட்டிக்காட்டுவது போல, தமிழ்த் தலைவர் அமிர்தலிங்கம் குறித்து மொத்த புரிதல்களையும் உருவாக்குகிறது.  ஏறக்குறைய இன்றைய தமிழ்நாட்டு புலனாய்வு கட்டுரை போல அமிர்தலிங்கத்தின் மொத்த நிறை குறைகளையும், அவர் அடைந்த ஆதாயங்களையும் பாரபட்சம் பார்க்காமல் அடித்து துவைத்து காயப்போட்டுருக்கிறார்.
 
இந்த நூலகத்தீ என்ற "கலாச்சார பேரழிவு" மொத்த தமிழ்மக்களையும் ஆயுதப்பாதையை ஆதரிக்க வைத்தது என்பதில் மிகையில்லை. ஆனால் மக்கள் இன்னமும் அமிர்தலிங்கம் மூலம் முடிவு வந்து விடும் என்று நம்பிக்கை வைத்துருந்ததும் கலையத் தொடங்கியது. தந்தை செல்வா ஒவ்வொரு இலங்கை சுதந்திர தினத்தை தமிழர்கள் கருப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்ற கொள்கையை அமிர்தலிங்கம் மாற்றியது, அவர் முழுமையாக அரசாங்க சார்பாளராக மாற்றம் பெற்று வந்து கொண்டுருந்ததை உணர்ந்த பிரபாகரன் இனி நம்முடைய முயற்சியை முழுமையாக மாற்ற வேண்டுமென்று தொடங்கியது தான் மற்றொரு புதிய ஆயுத தாக்குதல்.
 
ஜெயவர்த்னே (1982 செப் 29) தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்பாணம் வந்த போது கடற்படையினர் பயணித்து வந்த ஜீப்புக்கு குண்டு வைக்க அது தோல்வியில் முடிந்தது. ஜெயவர்த்னே மீண்டும் ஜெயித்து இரண்டாவது முறையாகவும் ஆட்சியில் அமர அக்டோபர் 27 சாவகச்சேரி காவல் நிலையத்தை சீலன் தலைமையில் (மாத்தையா,புலேந்திரன் அடங்கிய எட்டு பேர் குழு) தாக்க, காவல் துறையினரால் திருப்பிச் சுடப்பட்ட போது குண்டுகள் பாய்ந்தும் தப்பிவிட்டனர். ஆனால் இராணுவத்தினரில் தொடர் முயற்சியில் பிடிபட்ட சங்கர் தப்பிக்க பாய்ந்த குண்டு உயிரைப்பறித்தது.  அந்த சங்கரின் இறப்பு தினம் தான் பின்னாளில் மாவீரர் தினமாக மாற்றம் பெற்றது.
Jaffnalibrary_dome.jpeg
 
மற்ற இயக்கங்களின் வளர்ச்சியையும் வழிமுறைகளையும் பார்த்துக்கொண்டே வந்த ஆன்டன் பாலசிங்கம் பிரபாகரனின் சர்வதேச தொடர்பாளாக மாற்றம் பெற்று உலகத்தமிழர்களிடம் பிரபாகரனை கொண்டு சேர்த்ததில் முக்கியப் பங்காற்றினார்.  அதுவே பின்னால் ஆயுதம் முதல் கப்பல் வணிகம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது. விடுதலைப்புலிகளின் மொத்த உலக ஆயுத கொள்முதல் சார்பாளராக கேபி என்ற கே பத்மநாபன் 1984 முதல் செயல்படத்தொடங்கினார்.
 
ஜெயவர்த்னே இரண்டாவது முறையாக போட்டியிட்ட போது அமிர்தலிங்கம் தமிழர்களின் சார்பாக எவரையும் நிறுத்தாமல் இருந்த முதல் காரணமும், அதுவே அதிகாரமற்ற உள்ளாட்சி தேர்தலை தமிழர்களை புறக்கணிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகளின் எதிர்ப்பையும் மீறி தன்னுடைய "தமிழர் விடுதலைக் கூட்டணி" தேர்தலில் நிற்போம் என்று கூறியதும் மொத்தமாக அமிர்தலிங்கம் "தமிழர்களின் எதிரி" என்று விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டார்.  காரணம் அப்போது விடுதலைப்புலிகளின் அறைகூவலை கேட்ட அத்தனை வேட்பாளர்களும் பயந்து விலகிக்கொண்டனர். எதிர்ப்பை மீறி நின்ற இரண்டு வேட்பாளர்களுக்கு விடுதலைப்புலிகளின் சார்பாக மரண தண்டனை கொடுக்கப்பட்டது.
 
நடந்த தேர்தலில் பருத்தித்துறை, வெல்வெட்டித்துறை இரண்டு இடங்களிலும் பதிவான வாக்கு வெறும் 2 சதவிகிதம்.  மற்ற அத்தனை இடங்களிலும் வாக்கு சதவிகிதம் இந்த அளவிற்குக்கூட இல்லை.  அமிர்தலிங்கம் விடுத்த அறைகூவலை மக்கள் ஏற்கத்தயாராய் இல்லை என்பதற்கு காரணம் அச்சம் ஒரு பக்கம். விரக்தி மறு பக்கம்.
 
33 பேர்கள் இருந்த இயக்கத்தில் சங்கர், ஆனந்தன், சீலன் ஆகிய மூன்று பேர்களும் நடந்த தாக்குதல்களில் உயிர் இழக்க இனி தீவிரமாக களம் இறங்க வேண்டும் என்று நிணைத்துக்கொண்ட பிரபாகரன் நடத்திய நேரிடையான கண்ணிவெடித்தாக்குதல்களில் பலியான ராணுவ வாகனமும் (திருநெல்வேலி), கைப்பற்றிய ஆயுதங்களும் பெரும் நம்பிக்கையை தந்தாலும் தாக்குதலில் இறந்த செல்லக்கிளி என்பவர் கண் எதிரே இறந்த போது முதன் முறையாக பிரபாகரன் கண்களில் இருந்த கண்ணீர் வந்தது.
 
இந்த தாக்குதல்களினால் இறந்த ராணுவ வீரர்களின் சடலங்களை கொழும்புக்கு கொண்டு சென்ற போது அது வரையிலும் (1983 ஜுலை 24) தமிழர்களின் வாழ்க்கையில் பார்த்திராத கருப்பு தினமும் விடிந்தது.
திருப்புமுனை தி.நகர்
 
"மக்கள் இயக்கம்"  என்று மாறவேண்டிய அவஸ்யத்தை உமா மகேஸ்வரன் சொன்ன போது "அது காலப்போக்கில் வெறும் அரசியல் கூச்சல் இயக்கமாக மாறிவிடும்" என்று வாதப் பிரதிவாதிகளைத் தொடர்ந்து பிரபாகரன் மொத்தமாக ஆயுதங்களை ஓப்படைத்து விட்டு வெளியேறிய நேரம்.  "முடிவு ஒருவர் மட்டுமே எடுக்க வேண்டும்.  செயலில் மட்டுமே இயக்கப் போராளிகள் பங்கெடுக்க வேண்டும்"  என்ற நோக்கமுள்ள பிரபாகரன் தனியாக புதிய நிர்மாணம் செய்ய முயற்சித்துக்கொண்டுருந்தார்.  இதே சமயத்தில் அமிர்தலிங்கம் உருவாக்கிய சமாதானமும் எடுபடவில்லை.
 
வெளியே வந்தவரை டெலோ இயக்கத்தில் தங்கதுரை இணைத்துக்கொள்ள, இயக்கத்தில் இருந்த குட்டிமணி பிரபாகரனை இயக்கத்தின் பயிற்சி பொறுப்பாளாராக நியமித்து தனியாக ஆயுதங்கள் கொடுத்தார். இதன் தொடர்பாக போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுப்பதற்காக (1980)  திருச்சியிலும் மதுரையிலும் முகாம் அமைக்கப்பட்டது. " மற்றொரு இயக்கத்திற்கு அதன் வலிமைக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறோம்" என்று மனதிற்குள் இருந்த ஆதங்கம் "தான் தன்னுடைய" என்ற சிந்தனைக்கு வித்திட்டது.
 
அப்போது இருந்த பொருளாதார நெருக்கடியில் தோன்றியது தான் "இனி ஆயுதங்கள் வாங்க செலவழிக்கக்கூடாது.  எதிரிகளிடம் இருந்தே கைப்பற்றவேண்டும்".
 
தொடர்ச்சியான அரசாங்கத்தின் தேடலின் காரணமாக குட்டிமணியும் தங்க துரையும் இந்தியாவிற்கு தப்பி வர முயற்சிக்க பருத்திதுறைக்கு அருகே உள்ள மணல்காடு என்ற இடத்தில் வைத்து ஆட்சியாளர்களால் கைது செய்யப் பட்டனர்.  கொண்டு வந்த விட்டவர் சீறீ சபாரெத்தினம்.   படகு ஏற்பாடு செய்து இருந்தது பிரபாகரன்.  இவர்கள் இருவருக்கும் மட்டும் தெரிந்து இந்த விசயம் காவல்துறைக்கு தெரிந்த காரணத்தால் சங்கிலியால் பிணைக்கப்பட்டு தனி விமானத்தில் இருவரையும் கொழும்பு கொண்டு சென்றனர். பின்னாளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, மேல் முறையீட்டு காரணமாக சிறையில் இருந்தவர்களை உருவான கலவரத்தில் உள்ளே இருந்த சிங்கள கைதிகள் 53 பேர்களை கொன்று , தமிழீழத்தை என் கண்களாவது பார்க்க வேண்டும் என்று சொன்ன கண்களை நோண்டி எடுத்து காலில் போட்டு மிதித்ததும் நடந்தது.
 
ஜெயவர்த்னே மொத்த இயக்க தடைகளையும் தீவிரமாக கண்காணித்துக்கொண்டுருந்த தருணம் அது.   டெலோ இயக்கத்தில் இருந்த மற்றவர்களும் பிடிபட மொத்தமாக இயக்கம் முடங்கிப்போயிருந்தது.  தேடலும், துரத்தலும் அதிகமாக பிரபாகரன் சென்னைக்கு வந்து (1981) வளசரவாக்கத்தில் தங்கியிருந்தார்.  அப்போது  பிரபாகரன் கொள்ளைகையை மீறீ உமா மகேஸ்வரன் PLOTE என்ற தனி இயக்கம் (1980) தொடங்க, அப்போது தோன்றிய மற்ற இயக்கம் EROS.  இதில் இருந்து விலகிய பத்பநாபா,டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உருவாக்கிய இயக்கம் EPRLF (Ealem People Revolutionary Left Front).
indiraghanditime.jpg
இயக்கத்தின் கொள்கைகளை அறிக்கையாக்க தட்டெழுத்துப் பயிலகத்திற்கு வரும் உமா மகேஸ்வரன் அங்கு இருந்த ஊர்மிளா என்ற பெண்ணுடன் தொடர்பு உண்டாக, அதுவே உறவு வரைக்கும் தொடர, அதை பலரும் பார்க்க வேண்டிய சூழ்ந்லையில் சந்தர்ப்பங்கள் அமைந்து விட மொத்தமாக பிரச்சனை வெடித்தது.  ஊர்மிளா விதவைப்பெண்.  உமா மகேஸ்வரன் ஏற்கனவே உறவு பெண்ணுடன் திருமணம் என்ற தொடக்க முயற்சியில் இருக்க ஒன்றுடன் ஒன்று இயக்கத்திற்குள் பல கேள்விகளை எழுப்பியது.
 
பிரபாகரனின் இயக்க கொள்கையான ஓழுக்கம் என்பதை விட ஓழுக்கக்கேடாக மாற்றம் பெற உண்டானது அடுத்த மோதல்.  ஆன்டன் பாலசிங்கம் சமாதானம் எடுபடவில்லை. விலக்கப்பட்ட உமா மகஸ்வரன் தனியாக PLOTE என்ற இயக்கம் பிரபாகரன் எதிர்ப்பையும் மீறி தொடங்கப்பட்டது.  பிரபாகரனின் கொள்கை "இயக்கத்தில் இருந்து வெளியேறினால் புதிய இயக்கம் தொடங்கக்கூடாது".
 
வெளியே வந்த உமா மகேஸ்வரன், தனியாக செயல்பட்டுக் கொண்டுருந்தார்.  அப்போது பிரபாகரன் டெலோ இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுருந்தார்.  வெளியே செயல்பட்டுக்கொண்டுருந்த உமா மகேஸ்வரனுடன் இருந்த  சுந்தரத்தை, பிரபாகரன் உத்தரவின்படி சத்தியசீலன் சுட்டுக்கொன்றார்.  காரணம் வெளியேறியவர்கள் தாங்கள் தொடங்கிய "புதிய பாதை" என்ற செய்திதாளின் மூலம் அப்போது பிரபாகரன் உருவாக்கிக்கொண்டுருந்த விடுதலைப் புலிகளைப்பற்றியும், பிரபாகரன் பற்றியும் வசைமாறி பொழிந்து கொண்டுருந்தனர்.
 
இது போக பிரபாகரன் பிரிந்த சமயத்தில் மொத்த ஆயுதங்களையும் தனியாக எடுத்து பதுக்கியவர் இந்த சுந்தரம்.  டெலோ முடங்கி விட்டது என்று உமா மகேஸ்வரன் தனி ஆவர்த்தனம் நடத்திக்கொண்டுருந்த போது இறந்த சுந்தரத்தைப் பார்த்து தன்னையும் இனி சுட்டுக்கொன்று விடுவார்கள் என்று தமிழ்நாட்டில் வ்நது தஞ்சம் புகுந்தார்.  பிரபாகரனும் அதி முக்கிய குற்றவாளி என்ற அரசாங்கத்தின் தேடல் தீவிரமானதைத் தொடர்ந்து தப்பித்து வந்து வளசரவாக்கத்தில் தங்கியிருந்தார்.
 
ஏற்கனவே இலங்கையில் நடந்து சமாதான உடன்படிக்கை பிரபாகரன் உமா மகேஸ்வரன் இருவரிடத்திலும் சரியான புரிந்துணர்வை உருவாக்காத காரணத்தால் ஆன்டன் பாலசிங்கம் இந்த முறை இருவரும் சென்னையில் இருப்பதால் நேரிடையாக தன்னுடைய மனைவி அடேலுடன் வந்து உருவாக்கிய போதும் பிரபாகரன் அசைந்து கொடுக்கவில்லை.  ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்வதில்லை என்று பிரிந்தனர். அப்போது உண்டான புரிந்துணர்வு ஒப்பந்தம் இனி நான் LTTE யை சொந்தம் கொண்டாட மாட்டேன் என்று உமா மகேஸ்வரன் கொடுத்த வாக்குறுதி.
 
பிரபாகரன் ஒதுங்கினாலும் சுந்தரம் கொலைக்குப்பிறகு தானும் சாகடிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இருந்த உமா மகேஸ்வரன் , பிரபாகரனை தீர்த்துக்கட்ட சமயம் எதிர்பார்த்து காத்துருக்க வேறொரு புதிய சூழ்நிலை உருவானது.
 
சென்னை தி.நகரில் உணவகத்தில் இருந்து வெளியே வந்த உமா மகேஸ்வரன் அவருடன் இருந்த கண்ண்ன், சாலையில் நடந்து வந்து கொண்டுருந்த பிரபாகரனை பார்த்து விட தன்னை கொல்லவருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு உமா மகேஸ்வரன் துப்பாக்கியை எடுக்க அதற்குள் பிரபாகரனின் தோட்டா சீறிப்பாய்ந்தது.  குனிந்து தப்பிக்க இருவரும் (மே 19 1982) பாண்டிபஜார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.  எதிர்காலத்தில் பிரபாகரன் என்ற பெயர் எந்த அளவிற்கு உலகம் முழுக்க பரவும் என்பதை அன்று உணர்ந்திராத காவல் துறையிடம் (இன்ஸ்பெக்டர் நந்தகுமார்) தன்னுடைய பெயராக பிரபாகரன் சொன்னது தான் கரிகாலன்.
 
அன்று வாங்கிய கைரேகை மற்ற அடையாளம் ஒன்று மட்டுமே பிரபாகரன் இறப்பு என்ற சொல்லப்படுகின்ற கடைசி வரைக்கும் ஒப்பிட பயன்பட்டது.  கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அக்கறையாக இந்த கைரேகைகளை இலங்கைக்கு எடுத்துக்கொண்டு பயணித்தார் ஒரு தனி அதிகாரி.
mgr-actor.jpg.jpg
அப்போது அரசாங்கத்தில் இருந்த எம்.ஜி.ஆர். பார்வைபட்டதும், வள்ளல் பெயரை நீரூபித்ததும், ஆதரவுக்கரம் கொடுத்ததும், ஜெயவர்த்னே அமெரிக்க ஆதரவு போக்கை மட்டுப்படுத்தி பயமுறுத்த உருவாக்கி இருந்த RAW (Research and analysis Wing) அமைப்பு மூலம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மூலமாக இந்தியாவில் போராளிகளுக்கு பயிற்சி முகாம் ஏற்படுத்திக்கொடுத்ததும் இதன் தொடர்ச்சியாக.
காரணம் அன்றைய தினம் பிரபாகரன் தலைக்கு இலங்கை அரசாங்கம் வைத்திருந்த விலை 10 லட்சம்.  மேலும் 1973 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின் போது இதேபோல் குட்டிமணியை இலங்கை அரசாங்கத்திடம் கலைஞர் ஒப்படைத்தது போல் வீணான பிரச்சனைகளை எம்.ஜி.ஆர் உருவாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
 
காரணம் தமிழ்நாட்டில் அப்போது ஈழ ஆதரவு கொளுந்து விட்டு எறிந்து கொண்டுருந்த தருணம் அது.
 
காவல்துறையின் கட்டளையின்படி ஏழுமாதங்கள் பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்ததும், அப்போது உருவான பழ.நெடுமாறன் உதவியும் பிரபாகரனுக்கு எல்லாவிதங்களிலும் வளர உதவியது. மற்ற இயக்கங்கள் மறைந்து   செயல்படாமல் முடங்கிக் கொண்டுருந்தது. தனித்தன்மையாக LTTE புதிய நிர்மாணம் தொடங்கிய காலம்.  "தான் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும்" என்ற பிரபாகரன் கொண்டுருந்த கொள்கைக்கு மக்கள் ஆதரவு கிடைக்க ஆண்டு கொண்டுருந்த ஜெயவர்த்னே மற்றொரு காரியம் செய்தார்.  இவர்களின் உள் குழப்பங்களைப் போலவே உலகமே காறித்துப்பும் உலகப் புகழ்பெற்ற யாழ்பாண நூலகத்தை தீயிட்டு மகிழ்ந்தார்.
அரசியல் ஞானி
 
ஆசையை வெறுத்து அடையப் பெற்றது புத்த ஞானம்.  ஆனால் அழிவை கண் எதிரே கண்டு ரசித்து ருசித்து தொடர்ந்து கொண்டுருந்தவர் அரசியல் ஞானி ஜெயவர்த்னே. ஒரு பக்கம் மலையகத் தமிழர்களின் தலைவர் தொண்டைமான்.  அவருக்கு அமைச்சர் பதவி.  அவருடன் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவர் பதவி.
 
இது போக தன்னுடைய கட்சி சிஷ்ய கோடிகளான சிங்கள இனவாதிகளான அதுலத் முதலி, சிறீல் மாத்யூ போன்றவர்கள்.  மறைமுக ஆட்சியாளர்களான புத்த பிக்குகள்.  இது போக தன்னுடைய பதவிக்கான அபிலாஷைகள் என்று நான்கு பக்கமும் சுழன்று சூறாவாளியாய் செயல்பட்டுக்கொண்டுருந்தார்.
 
சிரிக்காத முக லட்சணம் இருப்பவர்கள் அத்தனை பேர்களும் சிந்தனைகள் அதிகம் பெற்றவர்கள் போல் அவருடைய ஒவ்வொரு நிகழ்வுகளும் தமிழர்களுக்கு ஓராயிரம் இடியாய் இறங்கிக்கொண்டுருந்தது.  இத்தனைக்கும் தொண்டைமான், அமிர்தலிங்கம் அரசில் இருந்தனர்.
 
1977 ஆம் ஆண்டு நடந்த கலவரங்களில் மொத்தத்தையும் இழந்து கொழும்பு அகதிகள் முகாமில் இருந்த மலையகத் தமிழர்களை அவர்களுடைய பழைய வாழ்விடங்களுக்கு அழைத்து வந்து அப்போது தொண்டைமான் சொன்ன வாசகம். " இனி எப்போதும் பூர்வகுடி தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள்".  அதற்கான காரணம் அவருக்கு மட்டும் தெரிந்த ரகஸ்யம்.  ஆனால் கேள்விகள் ஏதுமின்றி அவர்களும் எம்.ஜி.ஆர் போல் அவரை நம்பிக்கொண்டுருந்த காலம்.
 
" உங்களுக்கு இனி விடிவு காலம் வந்துவிட்டது.  தேர்தல் மூலம் ஜெயவர்த்னே நமக்கு நல்லது செய்யப்போகிறார்" என்றதும் ஐயா சொல்லிவிட்டார் என்று குத்து குத்தென்று குத்த அவரும் அமைச்சராக அலங்கார பதவியில் அமர்ந்தும் விட்டார். 1981 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் மொத்த மலையகத் தமிழர்களையும் குறிவைத்து ஜெயவர்த்னே குண்டர் படை தாக்க அப்போது இரத்தினபுரியில் உள்ள காவந்தை என்ற பகுதியில் ஒரே அறையில் 12 பேர்களை வைத்து பூட்டி எறியூட்டப்பட்ட போது தொண்டைமான் வந்து பார்ப்பதற்கு அவருடைய "பனிச்சுமை" இடம் கொடுக்கவில்லை.
 
ஆனால் ஜெயவர்த்னே நன்றி மறக்காதவர்.  அப்போது நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்குரிமை என்பது சிங்களர்களுக்கு மட்டும் தான் என்று முகத்தில் அப்பிய கரியை துடைத்துக்கொண்டு தொண்டைமான் அமைதி காத்தார்.  அப்போது ஜெயவர்த்னே சிஷ்யர் காமினி திசநாயகா சொன்ன வாசகம் " நாயில் ஒட்டுண்ணி போல் ஒட்டிக்கொண்டுருப்பவர் தொண்டைமான்.  அவர் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டிய அவஸ்யம் இல்லை",
 
ஆனால் மலையகத்தமிழர்களின் வாழ்வுரிமையை முற்றாக பறித்த ஜெயவர்த்னே குறித்து ஏதும் பேசாமல் மௌனம் காத்த தொண்டைமானை மீறி அப்போது போட்டியிட்ட சிங்கள வேட்பாளர்கள் தோல்வி அடையும் அளவிற்கு மொத்த மலையகத் தமிழர்களும் தங்களுடைய விழிப்புணர்ச்சியை வெளிப்படுத்தினர்.  அப்போது இருந்த 14 மலையக சங்கங்களும் தங்களை காத்துக்கொள்வதில் மட்டும் உறுதியாய் இருந்தனர்.  இதைவிட சிறப்பாக உலக வங்கியிடம் கடன் வாங்கி நட்சா திட்டம் மூலம் மலையக மக்கள் வாழ்ந்த இடங்களையும் தாரை வார்ப்பதும் கண ஜோராக நடந்து கொண்டுருந்தது.
 
மொத்தமாக அப்போது போராடிக்கொண்டுருந்த ஊதிய உயர்வு மலையகத் தமிழர்களைத் தவிர மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார் ஜெயவர்த்னே. மறுபக்கம் சிங்கள குடியேற்றம்.  தொண்டைமான் தலைவராக ஜெயவர்த்னே தீர்க்கதரிசியாய் ஒவ்வொன்றையும் அவரை வைத்துக்கொண்டே பேச முடியாத அளவிற்கு மிக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுருந்தார்.
 
மற்றொரு புறம் அமிர்தலிங்கம்.  நடந்து கொண்டுருந்த இனவெறி தாக்குதல்களை நிறுத்தும் பொருட்டு ஊர்க்காவல் படை அமைக்க வேண்டும் என்று ஜெயவர்த்னேவிடம் விண்ணப்பம் கொடுத்தார். அவரும் சிறப்பாக செய்தார்.  சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுக்கு மட்டும். இத்துடன் ஜெயவர்த்னே செய்த மற்றொரு சிறப்பு, நடக்கும் கலவரங்களில் கொல்லப்படுபவர்கள் நீதி விசாரணை கோர முடியாது.  உறவினர்கள் பிணங்களை பார்க்கக்கூட முடியாது.  தொடங்கியது முதல் மூடும் வரைக்கும் ஊர்காவல் படையினர் தங்கள் கடமையில் கண்ணும் கருத்தாய் இருப்பார்கள் என்றார். பிரபாகரன் எப்படி தன்னுடைய கொள்கை சரி என்று நகர்ந்து வந்தாரோ அதே போல் தொடக்கம் முதல் ஜெயவர்த்னேவும்.
 
சிங்கள தமிழர்கள் மனக்கசப்பு உருவாகாத (1944) காலத்தில் சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்று தீர்மானத்தை கொண்டு வந்தவர்.
 
ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) ஆண்டு விழாக் கூட்டத்தில் (1955) சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற தீர்மானத்தை முதன்மையாக முன்மொழிந்தவர்.
 
பண்டாரா நாயகா (1957) தமிழர்களுக்கு ஓரளவிற்கேனும் உரிமைகள் கொடுக்கலாம் என்று முன்வந்த போது (பண்டா செல்வா ஒப்பந்தம்) இது சிங்களர்களுக்கு கொடுக்கப்பட்ட முதல் உதை என்று குண்டர்கள் புடை சூழ கண்டி நோக்கி பாத யாத்திரை நடத்தியவர்.
 
ஆட்சிக்கு வந்ததும் (1977) " சண்டை என்றால் சண்டை. சமாதானம் என்றால் சமாதானம்" புதிய அறைகூவல் விடுத்து சிங்களர்களுக்கு சிக்னல் காட்டியவர்.
 
பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தங்கள் கட்சியின் உறுப்பினர்களுக்கு பச்சைக்கொடி காட்டியதோடு மட்டுமல்லாமல் அப்போது நடந்த சிங்கள தமிழ் இன துவேச வாக்குவாதத்தை (1981) பல முறை வானொலியில் ஒலி பரப்பி சிங்களர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்து திடீர் என்று கலவரத்தை ஏற்படுத்தியவர்.
 
"குமார் பொன்னம்பலம் தவிர அத்தனை பேர்களும் தமிழீழம் என்ற கொள்கையை கைவிட்டு விட்டனர்"  என்று திடீர் என்று ஒரு புதிய தத்துவம் சொன்னவர்.  கேட்ட சிங்களர்கள் குமார் பொன்னம்பலம் வீட்டை தாக்குவதற்கு பச்சைக்கொடி காட்டியவர்.
 
" 1975 ஆம் ஆண்டு முதல் 37 காவல் துறையினர்,9 அரசியல்வாதிகள், 13 இராணுவத்தினர்களை தமிழ் பயங்கரவாதிகள் கொன்றுவிட்டனர்.  ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் நீங்கள் கொன்ற தமிழ் தீவிரவாதிகள் எண்ணிக்கை மிக சொற்பம் "
 
என்று 10. 6, 1983 அன்று வெளிநாட்டு பயணத்துக்கு முன் ஆயுதப்படையினர் முன்னால் உரையாற்றிய வாசகம் மேலே சொன்னது.  அது மட்டுமல்லாமல் " இனி தமிழ் தீவிரவாதிகளை அழிக்க தமிழர்கள் வாழும் பகுதியில் இராணுவ ஆட்சியை செயல்படுத்தி அவர்களை முழுமையாக அழிக்கும் வரைக்கும் எனக்கு வேறு வேலை எதுவும் இல்லை" என்று அப்போது உருவான கலவரத்திற்கு அடிகோலியவர். இவ்வாறு சொன்னது லண்டன் டெலிகிராப் பத்திரிக்கைக்கு (1983) கொடுத்த பேட்டி.  பயந்த நிருபர் பின்வாங்கியதாக செய்தி.
 
"கடமையை மட்டும் செய்ய வேண்டும்.  பேச்சு கூடாது.  பலன் வரும்" என்பது பிரபாகரன் வாதம்.
 
"பேச, ஏன் நீ வாழவும் கூடாது.  மீறப்படும் போது மிதிக்கப்படுவது மட்டுமன்றி நசுக்கப்படுவீர்கள் " என்பது ஜெயவர்த்னே பிரதிவாதம்.  ஆனால் மொத்தமாய் "முடக்குவாதமாய் போனது தமிழர்களின் வாழ்க்கை. அன்று வாதத்தால் பாதிக்கப்பட்ட உடம்பு உறுப்புகளை இறுதி முள்ளிவாய்க்காலில் இராசாயன குண்டுகளில் வந்து நிறுத்தியுள்ளது.
maname_vasappadu-dec-08.jpg
 இப்போது பிரபாகரன் வயது 27ஆனால் ஜெயவர்த்னேவின் அரசியல் அனுபவம் மட்டும் இந்த எண்ணிக்கையை விட அதிகம்.  ஆண்ட சிங்கள தலைவர்களில் இவர் எப்படி வித்யாசமாக இருந்தாரோ அதே போல் தராசு இரண்டு பக்கமும் ஒரே மாதிரி நின்று முள் நேராக நின்றது விதி அல்லது ஆச்சரியம்.  ஜெயவர்த்னேவுடன் நேருக்கு நேர் போட்டியில் மல்லுக்கு நின்ற பிரபாகரன் ஆளுமை குறிப்பிடத்தக்கது.
 
"வாங்கப்பா உட்கார்ந்து பேசலாம்" என்று ஆட்சியாளர்களும் அன்று அழைக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை. உட்கார்ந்து பேச தயராய் இருந்த அஹிம்சைவாதிகளையும் மதிப்பாரும் இல்லை.  தீர்வும் கிடைத்தபாடில்லை.  தீர்க்கதரிசனத்தை உருவாக்குகிறோம் என்றவர்களும் இன்று வரையிலும் புதிராகத்தான் இருக்கிறார்கள்?
வலியின் பாதை
 
"மக்களுக்கான போராட்டம் என்றால் நமக்கு வெகு ஜன ஆதரவு அவஸ்யம் தேவை. மக்களுடன் நாம் ஒன்றாக கலக்காவிட்டால் எதிர்காலத்தில் நாம் தனிமைபடுத்தப்பட்டவர்களாக ஆக்கப்படுவோம்"  இது தொடக்கம் முதலே உமா மகேஸ்வரனின் சிந்தாந்தம்.
 
" மக்களுக்குத் தேவை செயல் மட்டுமே.  வெறும் வாய்ப்பேச்சு அல்ல"  இது பிரபாகரனின் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் கடைபிடித்த கொள்கை.
 
முடிவான செயல் என்று எதை நாம் உருவாக்குகிறோமே அதன் விளைவுகளையும் விபரீதங்களையும் நாம் தான் சமாளிக்க வேண்டும்.  வெறும் அரசியல் பேச்சுகள் பேசியது போதும் என்பது போல பிரபாகரனின் ஒவ்வொரு செயல்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று கோர்த்து மாலையாக மாற்றம் பெற்றுக் கொண்டே வந்தது.
 
"இது வரையிலும் செய்த மொத்த கொலைகளையும் நாங்கள் தான் செய்தோம்"  என்று உமா மகேஸ்வரன் கையொப்பமிட்டு வீரகேசரியில் வெளியான போது தான் பிரபாகரன் குறித்த அச்சமும் அவரின் கொள்கைகள் குறித்த தாக்கமும் அனைவருக்கும் புரியத் தொடங்கியது.
 
அன்று முதல் இன்று வரையிலும் உலகமெங்கும் தீர்வு காணப்படாத மொத்த பிரச்சனைகளும் அரசாங்கத்தின் பார்வையில் பட வேண்டும், அவர்களின் கவனம் திசை திருப்பப்படவேண்டும் என்றால் கையாளும் வன்முறைகள் தான் இறுதித் தீர்வாக இருக்கிறது.  தெலுங்கானா வரைக்கும்.
 
பிரபாகரன் தமிழர்களின் வாழ்வுரிமை என்பது தீர்க்கப்படவேண்டியது என்பதை ஆட்சியாளர்களின் கவனம் பெற வைக்க வேண்டும் என்று தொடக்கத்தில் தொடங்கியது தான், பயணித்த வந்த பேரூந்தை ஆட்கள் அணைவரையும் இறக்கி விட்டு கொளுத்தியது.  அதுவே வளர்ச்சி பெற்று அரசியல் அமைப்புச் சட்டம் தீர்மானமாய் (1978) கொண்டு வரப்பட்ட போது AVRO 748 ரத்மலானாவிலிருந்து பாலை செய்யும் விமானத்தை ஆட்கள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு (செப்டம்பர் 7) குண்டு வைத்து தகர்க்கும் அளவிற்கு முன்னேறியது.
 
அந்த வெற்றிக்குப் பிறகு இணைந்தவர்கள் தான் ரகு, சதாசிவம் பிள்ளை என்ற கிட்டு, மாத்தையா. ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபாகரன் இயக்கத்தில் சேர்ந்து கொண்டுருந்த இளைஞர்கள் பலவிதங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள்.  கல்லூரியில் தமிழன் என்பதால் இடம் மறுக்கப்பட்டவர்கள், காவல்துறை பணிக்கு இதே காரணத்தால் மறுக்கப்பட்டவர்கள், கண் எதிரே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தங்கை, அம்மா என்று பார்த்து புத்தி பேதலித்தவர்கள் என்று தொடர்ந்து கொண்டே இருந்தது.
 
காரணம் அப்போதைய சூழ்நிலையில் அஹிம்சை வழியில் நம்பிக்கை இழக்காமல் போராடிக்கொண்டுருந்த மிதவாத தலைவர்களிடம் இந்த ஆயுதப்பாதை சலசலப்பை உருவாக்கியிருந்தது. அதே காலகட்டத்தில் கியூபாவில் நடந்த (1979) உலக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மாநாடு நடக்க அங்கு உரையாற்ற வேண்டிய அறிவார்ந்த கருத்துக்களை எழுதும் பொருட்டு அறிமுகமானவர் தான் ஆன்டன் பாலசிங்கம்.
 
வீரகேசரியில் பணிபுரிந்த பத்திரிக்கை ஆசிரியர்.செய்தியாளர், உயர்கல்வி கற்ற யாழ்பாண தமிழர், பிரிட்டீஷ் தூதரகப்பணியில் இருந்தவர்.  தொடக்கத்தில் திருமணம் செய்திருந்த பெண் இறந்த காரணத்தால் தன்னிடம் இருந்த நீரிழிவு நோயையையும் பொருட்படுத்தாமல் அடேல் என்ற ஆஸ்திரிய நர்ஸ்யை திருமணம் செய்து கொண்டு (1978) பின்னாளில் லண்டனில் வாழ்ந்து கொண்டுருந்தவர்.
 
1979 ஆம் ஜெயவர்த்தனே உருவாக்கிய "மொத்த உள்நாட்டில் இருக்கும் பயங்கரவாதிகளின் அமைப்புகளையும் தடை செய்கின்றேன்" என்று சொல்லி இருந்தால் அது ஒரு சட்டக்கடமை ஆகியிருக்கும்.  ஆனால் அந்த உத்தரவு கொடுக்கப்பட்ட போதே "உங்கள் வானாளவிய அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று பச்சை விளக்கை காட்டியதும் தொடர்ந்து உருவான கலவரங்களும், கண்ணீர்களும் மொத்தமாக ஆயுதப்பாதையை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றது.
 
படித்தவர், படிக்காதவர், நடந்துகொண்டுருந்தவர்கள், பள்ளிக்குச் சென்று கொண்டுருந்தவர்கள் என்று தொடங்கி தமிழன் என்றாலே நீ தீவிரவாதி என்று கோரத் தாண்டவம் தொடங்கியது.  விதவிதமான சித்ரவதைகள், அச்சமூட்டும் அவஸ்த்தைகள். இலங்கையில் ஆண்ட மொத்த ஆட்சியாளர்களை விட இப்போது ஆட்சி புரிந்து கொண்டுருக்கும் ஜெயவர்த்தனே என்ற ஒரு தனி மனிதரால் பிரபாகரன் எந்த அளவிற்கு மூர்க்கத்தனமாக வளர்ந்தாரோ அந்த அளவிற்கு மொத்த தமிழர்களின் முகவரியும் முடங்கப்பெற்று, தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் சுடுகாடாய் மாற்றம் பெறத் தொடங்கியது.
 
"நயவஞ்சகன்" என்ற பட்டம் ஜெயவர்த்தனேக்கு தமிழர்கள் மட்டும் கொடுக்கவில்லை.  ஆண்ட சீறீமாவோ, சார்ந்து இருந்த அமிர்தலிங்கம் என்ற அத்தனை பேர்களும் எள்ளும் கொள்ளும் வெடித்து கொடுத்த பட்டங்கள்.  அந்த அளவிற்கு ஒரு தீர்க்கதரிசியாய், ஞானி போல் ஒவ்வொரு காரியத்தையும் சுருதி சுத்தமாய் செய்து கொண்டுருந்தார்.
 
அதுதான் பிரபாகரன் வார்த்தைகளில் "  அவர் மட்டும் உண்மையான பௌத்தராக வாழ்ந்து இருந்தால் நான் ஆயுதம் தூக்க வேண்டிய அவஸ்யம் இருந்து இருக்காது" என்பது போல் மாறியது.  சேனநாயகா ஆட்சி முதல் அரசாங்கத்தில் இருப்பவர்.  ஒவ்வொரு கால காட்டத்திலும் அவருடைய பதவிகள் மாறியிருக்கும்.  எதிர்கட்சி என்ற போதிலும் அவருடைய மொத்த எண்ணங்களும் "தமிழர் எதிர்ப்பு" என்ற விதத்தில் ஒரு இம்மி அளவு கூட மாற்றம் பெறவில்லை.
 
முழுப்பெயர்  (Junius Richard Jayewardene ) ஜுனியஸ் ஜெயவர்த்னே.  சுப்ரிம் கோர்ட் நீதிபதியின் மகன்.  கிறிஸ்துவத்திற்கு மதம் மாறியவர்.  டட்லி சேனநாயகா (சிங்களர்களின் தந்தை) ஆட்சிகாலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர். முப்பது வருடங்கள் காத்து இருந்து ஆட்சியை பிடித்தவர்.  ஆட்சியை பிடித்ததும் தமிழர்கள் குறித்து எந்தப் புகார் பட்டியல் வந்தாலும் உடனே "அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று தான் தொடங்கி வைப்பார்.  உருவாகும் கலவரம் முற்றுப்பெறும் போது தமிழர்களின் சொத்தும், வாழ்வாதாரமும் சூறையாடப்பட்டு இருக்கும்.  ஒரே பாதை. கொள்கை.  ஒரே தீர்மானம்.
 
இவர் இந்த அளவிற்கு தமிழர்கள் மேல் வெறுப்பு கொண்டுருந்தமைக்கு ஒரு பழைய பமையும் காரணமாய் இருந்தது.  1977 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது (துரையப்பா மைதானம்) தான் பேசிக்கொண்டுருந்த மேடை மொத்தமாக சரிய வைக்கப்பட்டு அவமானம் பெற்ற சம்பவம் அவர் ஆழ்மனதில் பதிந்து போயிருந்தது.  காரணம் அப்போது அந்த நிகழ்வை நிகழ்த்தியவர்கள் EROS  குழுவினர்.
 
ஆண்டு விட்டுச் சென்ற அத்தனை ஆட்சியாளர்களும் இது சிங்கள நாடு என்ற முன்னேற்பாடுகளைச் செய்தார்களே தவிர இவர் ஆட்சிகாலத்தில் அதை நடைமுறையாக மாற்றம் செய்தவர். சீறிமாவோ பண்டார நாயகா தோற்கடிப்பட்டு நடந்த எட்டாவது பொதுத்தேர்தலில் வென்று ஆட்சியைப்பிடித்த ஜெயவர்த்னேவுக்கு ஆதரவு கரம் நீட்டி எதிர்க்கட்சி பதவியை வாங்கிக்கொண்டு அலங்கரித்தவர் அமிர்தலிங்கம். தந்தை செல்வா இறந்த பிறகு அவரால் முன் மொழியப்பட்ட புகழ்பெற்ற தனி நாடு தான் இனி தீர்வு என்ற "வட்டுக்கோட்டை தீர்மானத்தை" கையில் எடுத்துக்கொண்டு ஜெயித்த வந்த அமிர்தலிங்கம் அப்போது கேட்ட இளைஞர்களிடம் " சற்று காலம் பொறுமையாக இருப்போம்" என்றார்.
 
யாழ்பாணத்தில் இருந்த ரோட்டரி கிளப் புற்றுநோய் சிகிச்சைக்காக நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சியை புனித பாட்ரிக் கல்லூரியில் நடத்திக்கொண்டுருக்கும் போது அனுமதி சீட்டு வாங்காமல் உள்ளே புகுந்த காவல்துறையினரை இளைஞர்கள் கண்டிக்க அப்போது தொடங்கிய வன்முறையில் மொத்த யாழ்பாணமே சுடுகாடு போல் மாற்றம் பெற்றது.  யாழ்பாண மார்க்கெட் தீக்கிறையானது.
அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் தான் தாக்கப்பட்டதிற்கு ஜெயவர்த்னேவிடம் கோபம் கொப்புளிக்க கேள்வியாய் கேட்க அப்போது அவர் சொன்ன வாசகம்.
 
" திருகோணமலையை தலைமையாய்க் கொண்டு தனிநாடு என்ற கோரிக்கையை பார்த்துக்கொண்டு சிங்கள மக்கள் எவ்வாறு பொறுமை காப்பார்கள்?  சண்டை என்றால் சண்டை. சமாதானம் என்றால் சமாதானம்" என்றார்.  எதிர்கட்சி தலைவர் பதவி அழும் கட்சி பதவியாய் மாற்றம் பெற்றது.
 
அப்போது நடந்து பாராளுமன்ற வாக்குவாதம் மேலும் கலவரங்கள் பரவ காரணமாய் இருந்து கொழும்பில் வாழ்ந்த அத்தனை தமிழர்களின் சொத்தும் சூறையாடப்பட்டது.  மலையகத்தமிழர்கள் 60.000 பேர்கள் காடுகளுக்குள் புகுந்து நிர்கதியாய் மாறிப்போனார்கள். 100 கோடி மதிப்புள்ள தமிழர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாய் ஆனது.
 
இந்தக் கலவரத்தின் மற்றொரு கிளைநதி, யாழ்பாணத்தில் இருந்த பல்கலைகழகத்தை மொத்தமாக வெறுத்துக்கொண்டுருந்த சிங்கள மாணவர்கள் தாங்கள் வாழும் பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப் பெற்ற கலவரத்தீ மொத்த தமிழர்களும் வாழ்ந்த அத்தனை பகுதிகளுக்கும் பரவி கோரத்தாண்டவம் ஆடியது.
 
 
மொத்தமாக அஹிம்சைவாதியான அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் வலு இழந்து போனதும், ஹிம்சையான பிரபாகரன் ஆயுதப்பாதை வலுவடைந்துக் கொண்டு மாற்றம் பெற்றதும் வலியான தமிழர்களின் வாழ்வுரிமை கோரச் சுவடுகள் தொடக்கம் பெற்றதும் 1977ல் தொடங்கி தொடர்ந்து கொண்டு இருந்த கலவரங்கள்.
 
 
 
 
பாயும் புலி
 
"நான் இனி உங்களுக்கு பயன் உள்ளவனாக இருக்கமாட்டேன். என்னை மறந்து விடுங்கள்"  தலைமறைவு கானக வாழ்க்கையின் தன்னை தேடி காட்டுக்குள் வந்த அப்பாவிடம் பிரபாகரன் சொன்ன வாசகம் இது.
 

தன்னுடைய பள்ளிப் பருவத்திலே(14 வயது) ஒத்த சிந்தனைகள் உடையவர்களை ஒன்று இணைக்க முடிந்த பிரபாகரனுக்கு வெடிப் பொருட்கள் மேல் ஆசையும், அப்போதைய சூழ்நிலையில் கந்தகத் துகள்களை ஒன்று சேர்த்து வெடிக்க வைத்த ஆர்வமும் உள்ளே கனன்று கொண்டு இருந்து இருக்கிறது. காரணம் எப்போது வீட்டை விட்டு நிரந்தரமாக கிளம்ப வேண்டும் என்று தோன்றியதோ அப்போதே தான் இருக்கும் அத்தனை குடும்ப புகைப்படங்களையும் கிழித்து அழித்து இருந்தார்.  எந்த சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் தன்னைப் பற்றிய தடயங்கள் இருந்து விடக் கூடாது என்ற பழக்கம் இளம் வயதிலேயே இருந்துள்ளது.
 
குடும்பச் சூழ்நிலைக்கும் தனக்குள் உருவான ரசாயன மாற்றங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டுருந்த போது அறிமுகமானவர்கள் தான் குட்டிமணி தங்கதுரை. பின்னாளில் சிறையில் உன்னுடைய கண்கள் இருந்தால் தானே மலரப்போகும் தமிழீழத்தை பார்க்க முடியும் என்று நோண்டி எடுத்து தரையில் போட்டு சிதைத்த கொடுமையும் நடந்தது.  இவர்கள் 25 பேர் கொண்ட குழுவுடன் தனியாக சிவகுமரன் போல் வேறு ஒரு பாதையில் செயல்பட்டுக் கொண்டுருந்தனர்.  அப்போது பிரபாகரன் இவர்களை அண்ணாந்து பார்க்கும் பருவம்.  அண்ணா என்று அழைத்தவரை அவர்கள் அப்போது அழைத்த தம்பி என்ற பதமே மொத்த இலங்கை வாழ் மக்களின் கடைசி வரையிலும் பிரபாகரனின் செல்லப்பெயர் ஆனது.
 
சிவகுமரன் தொடங்கி வைத்த ஆயுத பாதையான  சிங்கள இனவாதியான கலாச்சார துறை அமைச்சர்  சோமவீர சந்திரசிறீ (1970) உரும்பிராய் இந்து கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்த போது அவரது காருக்கு வைத்த குண்டு வெடித்து மயிரிழையில் பலத்த சேதத்துடன் அமைச்சர் தப்பிக்க மொத்தமாக போராடிக் கொண்டுருந்தவர்களுக்கும் அந்த நிகழ்ச்சி தான் முதல் பால பாடம்.
 
சீறிமாவோ ஆட்சி காலத்தில் புரட்சியில் ஈடுபட்ட ஜனதா விமுக்தி பெரமுணா என்ற சிங்கள கிளர்ச்சியாளர்களின் ஆயுதப்போராட்டங்களும், அவர்கள் சேர்த்து வைத்து இருந்த வெடிப்பொருங்கள் வெடித்து சிதற உண்டான கலவரம் என்பதும், ஆயுதம் தான் இனி முடிவு பாதை என்று யோசித்துக்கொண்டுருந்தவர்களை மொத்தமாக தைரியமுட்டிய நிகழ்ச்சி அது.
 
ஆயுதம் இருந்தால் அரசாங்கத்தை பயமுறுத்தலாம், திரும்பி பார்க்க வைக்கலாம்.
 
ஓய்வு நேரத்தில் குட்டிமணி குழுவில் பிரபாகரன் சேர்ந்த போதும் பின்னாளில் அவர்களுடன் இணைந்த போதும் மொத்தமாக குரு இல்லாமல் தனக்குத் தானே கற்றுக்கொண்டதும்,  துப்பாக்கி இயக்கத்தின் மொத்த ஆளுமையும் அவரிடம் வந்து இருந்தது.  அதுவே வீட்டில் சேர்த்து வைத்து இருந்த பணம் மூலம் தனியாக ஒரு துப்பாக்கி வாங்கும் அளவிற்கு.
 
1974 ஆம் ஆண்டு தனித் தமிழ் ஈழம் என்பது தான் இனி தீர்வு என்று போட்டியிட்டு வென்ற தந்தை செல்வா மூலம் கிடைத்த தேர்தல் வெற்றி என்பதும் அப்போது எண்ணங்களில் மட்டும் வாழ்ந்து கொண்டுருந்த அத்தனை இளைஞர்களையும் மேலும் மேலும் உரமூட்டியது.
 
உருவாக்கும் எண்ணங்கள் தான் வாழ்க்கை.  ஆனால் குடும்ப சூழ்நிலைக்கும் பிரபாகரன் எண்ணங்களுக்கும் துளிகூட சம்மந்தம் இல்லை.  தீர்வு என்பது இந்த தீவுக்குள் கிடைக்க வேண்டுமென்றால் தனி நாடு தான்.
 
எந்த சந்தேகமும் இல்லை.  தொடக்கம் முதலே ஊறிப்போன அந்த எண்ணமே அவரை நகர்த்தியது.  நடந்து கொண்டுருந்த ஒவ்வொரு ஆயுதப் போராட்டங்களினால் உருவான கிளர்ச்சி அவரை வழி நடத்தியது.  யாழ்பாணத்தில் வந்து சேர்ந்த பேரூந்தை பயணித்தவர்களை மொத்தமாக இறக்கி விட்டு எறித்த போது அது ஒரு முடிவுக்கும் வந்து இருந்தது.  அதுவே ஆல்பர்ட் துரையப்பாவை ஒரே ஒரு தோட்டாவில் சுட்டுக்கொன்ற போது வலிமை உள்ளதாக மாற்றி இருந்தது.
 
கானக வாழ்க்கை மொத்த அச்சத்தையும் போக்கி இருந்தது.  எப்போதும் சந்தேகம். எவர் மீதும் பாரபட்சம் இல்லாத பார்வை, கொண்ட கொள்கையில் உறுதி, இடையில் வளர்த்துக்கொண்ட குணங்கள் ஒவ்வொன்றும் மிகப் பலமான அஸ்திவாரம் போல் உள்ளே இறுகி விட்டது. தொடக்கத்தில் ஒவ்வொருவருடனும் இணைந்த போதும், உண்டான பிரிவினைகள், எழுந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் தனிமனித வக்ரமும், ஆசையும் இருந்த போதெல்லாம் தன்னுடைய ஒழுக்க பாதையை எவரும் நெருக்க, நெருங்க முடியாத அளவிற்கு தன்னை நிர்மாணம் செய்து இருந்தார்.
 
தான் சொல்வது சட்டம் என்பது போல் நடந்த போது உருவான பாகப்பிரிவினைகள் போதும் பயம் ஏதும் இல்லாமல் ஒதுங்க முடிந்தவரால் அதே போல் மிக விரையில் புதிய கட்டுமானமும் உருவாக்க முடிந்தது.  ஒதுங்கிப்போனவர்களும், ஒதுக்கியவர்களும் மறைந்தே போனார்கள்.  அவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரபாகரன் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் செய்த ஒவ்வொன்றுக்கும் பொறுமையின் உச்சத்தில் தோட்டா மூலம் பதில் உரைத்தார்.
 
நண்பன்,  பகைவன் என்றோ பாகுபாடும் இல்லை.  ஆனால் இவனால் ஆபத்து என்றால் உடனடி தீர்வு.  தொடக்கத்தில் பார்த்த செட்டி காவல்துறை உளவாளியாக மாறிய போது கதை முடிக்கப்பட்டது.  அதே போல் உளவாளியாக செயல்பட்டுக்கொண்டுருந்த (நடராஜன்) பெட்ரோல் பங்க் உரிமையாளர் கதையும் முடிக்கப்பட்டது.  ஆல்பர்ட் துரையாப்பா கொலை விசாரனையில் ஈடுபட்டுக்கொண்டுருந்தவர்கள், தமிழ் இளைஞர்களை கிள்ளுக்கிரையாக நினைத்துக்கொண்டுருந்த காவல்துறை அதிகாரி பஸ்தியம் பிள்ளை என்று வரிசையாக கொன்று கொண்டே வந்த எண்ணிக்கை மிக நீளம்.
 
பிடிபட்டவர்களை சிங்கள ஆட்சியாளர்கள் படுத்தும் பாடும், அதனால் தொடக்கம் முதலே ஒவ்வொருவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவஸ்யம் என்பதையும் தன்னுடைய மொழியில் பிரபாகரன் சொன்ன போது எவரும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை.  தான் எவரையும் நம்புவது இல்லை என்பதை உறுதிபடுத்தும் பொருட்டு அப்போது நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவருக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது.
 
"தான் கொண்ட கொள்கை ஏதும் தவறானது இல்லை" என்பது போல் ஒவ்வொன்றும் உணர்த்திக்கொண்டே இருந்து அதுவே கடைசி வரைக்கும் பாடம் போல் ஆகிவிட்டது.  போராடுகிறோம் என்று வந்தவர்கள் போராட்டத்தை தவிர மற்ற அத்தனையும் செய்து கொண்டுருந்தது ஒரு பக்கம். நீ போராடினால் என்னுடைய பதிலடி இப்படித்தான் இருக்கும் என்று சிங்கள ஆட்சியளார்கள் கொடுத்த மரண அடி மறுபக்கம்.  ஒவ்வொரு அடியும் இடிபோல் இறங்கிக்கொண்டேயிருக்க சினம் கொண்ட புலியின் சீற்றமும் சீறிப்பாய்ந்து கொண்டே இருந்தது.
 
வலிமை உடையவர்கள் நடத்திய போராட்டங்களும் வலிமைய பெற்றவர்கள் சார்பாக நடத்தப்பட்ட போராட்டங்களுக்கும் இடையே படிப்படியாக மொத்த தமிழர்களின் வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக சூறையாடப்பட்டது.
 
கலவரங்கள் தொடர்வது என்பது சிங்களர்களைப் பொறுத்தவரையில் அனுமதிக்கப்பட்ட சட்டபூர்வமான கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு.  ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையிலும் பதவிக்கான பசை.
 
தூண்டுதல் நடக்கும்.  தூண்டப்பட்டவர்களால் நடத்தப்படும் எந்த செயல்பாடுகளுக்கும் ஒரு வரைமுறையோ இருக்காது.  பாலியல் துன்புறுத்துதல் என்பது பால் அருந்துவது போல அவர்களுக்கு காலப்போக்கில் மாற்றம் பெற்றதாக ஆகிவிட்டது.   அவர்களுக்கு ஒரே நோக்கம் கொலை, கொள்ளை.  ஆனால் உள்ளே தமிழீழத்திற்கு போராடுகிறோம் என்று இருப்பவர்களின் ஒரே நோக்கம் தலைமைப்பதவி.  தான் என்கிற நோக்கம்.
 
உள்ளே ஒன்றாக இருப்பவர்களும் போட்டி பூசலில் மாட்டிக்கொள்வது வரைக்கும் ஊன்றி கவனித்த காரணத்தால் மற்றவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போதும் தன்னுடைய இருப்பை மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்க செய்ய முடிந்தது.  நிலையில்லாத இருப்பிடம், தன்னுடைய மனதுக்குக்கூட தெரியாத ரகஸ்யமாய் தன்னை வைத்துக்கொண்ட பழக்கவழக்கங்களும் ஆட்சியாளர்கள் கையில் கடைசி வரையிலும் சிக்க வைக்க முடியவில்லை.
 
 
அதேபோல் பிரபாகரன் , இயக்க வளர்ச்சிக்காக புத்தூர்(1975) வங்கியை மிக எளிதாக கொள்ளையடித்து சென்றதைப்பார்த்து , ஈரோஸ் என்ற இயக்கம் லண்டனில் போட்டியாக தொடங்கியதைப்போல அங்கிருந்து பிரிந்தவர்களான முத்துக்குமாரசாமி, வரதராஜப்பெருமாள் உருவாக்கிய இயக்கமான ELO (Eealam Liberation Organisations)  புலாவி கூட்டுறவு வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டு பிடிபட்டனர்.  பிரியும் இயக்கங்கள் பெயர் கூட இல்லாமல் நாளடைவில் மறையத் தொடங்கியது.
 
தந்தை செல்வாவிற்கு பிறகு அமிர்தலிங்கம் பொறுப்புக்கு வந்த போது ஆயுத இளைஞர்களின் வன்முறை என்பது அவரே நினைத்துப் பார்க்க முடியாத இடத்துக்கு வந்து சேர்ந்து இருந்தது. அடக்க முடியாது என்ற நிலைமையில் ஒரு கட்டத்தில் அவரே சற்று அமைதியாய் செயல்படலாமே என்கின்ற அளவிற்கு?
 
தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு பதிலடி என்று சிங்கள ஆட்சியாளர்கள் கொடுத்த மரண அடி என்பது அப்பாவிகளை மட்டுமல்ல அறிவார்ந்த தமிழ் பெரியவர்களையும் சிறையில் தள்ளும் கொடுமையும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
 
சிங்கள சிறை என்பது செய்த தவறுக்கு கொடுக்க வேண்டிய தண்டனைக்கான இடம் என்பதைவிட மொத்த சிங்கள அதிகாரிகளின் வக்ர எண்ண வடிகால் போலத்தான் இருக்கிறது.  அம்மணமாக நிற்க வைத்தல் என்று தொடங்கிய வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு புத்தி பேதலித்தவர்களால் ஒரு அளவிற்கு மேல் செயல்படாத நிலைமை என்கிற அளவிற்கு மிகக் கொடூரமாக இருந்தது. சிங்கள மந்தப்புத்தியும், குறுக்குவழி கல்வியும், மறக்கப்பட்ட புத்த போதனைகளும் போதை மனம் கொண்டவர்களால் ஆயுதப் பாதை என்பது நீண்டு கொண்டே இருக்க உதவியது.  இன்றுவரையிலும்?
 
பிரபாகரனிடம் இருந்து பிரிந்தவர்கள், சர்வாதிகாரி என்று திட்டித்தீர்த்தவர்கள், அவரின் எதிர்மறை குணாதிசியங்களை பக்கம் பக்கம் எழுதியவர்கள் என்று அத்தனை பேர்களும் ஒரு சேர சொல்வது பிரபாகரன் என்றொரு தனி மனிதன் இல்லை என்றால் போராட்டம் தொடக்கம் ஆன நிலையில் இருந்த போது இருந்த இலங்கை பாதுகாப்பு பட்ஜெட் அடுத்த 30 ஆண்டுகளில் (1970/2000) மக்கள் நல்வாழ்க்கைக்கு கூட ஒதுக்கமுடியாமல் மொத்த வரவுகளையும் ராணுவத்திற்கு ஒதுக்க வேண்டிய அளவிற்கு அச்சப்படுத்தும் அளவிற்கு வளர்ந்தமையைத் தான் ஒவ்வொருவரும் குறிப்பிடுகிறார்கள். இது பிரபாகரன் என்றறொரு தனி மனித உழைப்பு என்பதை மறக்காமல் குறிப்பிடுகிறார்கள்.
 
அழுந்த அழுத்த வெடித்து சிதறும் ரசாயன குண்டுகள் போல உண்மையான தீர்வைத் தவிர சிங்கள ஆட்சியாளர்கள் அத்தனையும் செய்தார்கள்.  காரணம் சீறிமாவோ ஆட்சி மாறி ஜெயவர்த்தனே வந்த போது பிரபாகரன் வலிமையும் கூடியிருந்தது. அப்போது தொடர்ச்சியாக நடந்த கலவரத்தின் விளைவாக உலகப்புகழ் பெற்ற யாழ்பாண (ஒரு லட்சம் தமிழ் புத்தகங்கள்) நூலகம் எறிக்கப்பட்ட போது மொத்த தமிழ் மக்களையும் ஆயுதப்பாதை தேர்ந்தெடுத்தவர்களை சரிதான் என்று சொல்லும் அளவிற்கு ஒன்றிணைத்தது.
புழு முதல் புலி வரை
 
தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை என்று பிரபாகரனின் தொடக்க கால போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுருந்த போதிலும் நினைத்த அளவிற்கு ஒத்த சிந்தனையுடையவர்களை திரட்ட முடியவில்லை. மேலும் இயக்கம் சார்ந்த சிந்தனையாளர்களுக்கு வேறு எந்த பழக்கமும் இருக்கக்கூடாது என்பதில் இறுதி வரையிலும் உறுதியாய் இருந்தார்.
 
இதற்கிடையே இயக்கத்திற்கு தேவையான பொருளாதார சிக்கல்கள்.  சோர்ந்து போன சிந்தனைகளுடன் தேடப்படும் குற்றவாளியாக (யாழ்பாண மேயர் ஆல்பர்ட் துரையப்பா சுட்டுக்கொலை) இருந்த பிரபாகரன் அங்கிருந்து தப்பித்து வந்து, தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த போது அறிமுகமானவர் தனபாலசிங்கம் என்ற செட்டி. கொலை, கொள்ளையில் அதிகமாக ஈடுபட்டுக்கொண்டு, தன்னுடைய வசதிக்காக தமிழீழம் என்ற கொள்கையை உருவாக்கிக்கொண்டு ஒத்த இளைஞர்களை அப்போது திரட்டிக்கொண்டுருந்தவர்.
 
பிரபாகரனின் இலங்கையில் வாழ்ந்த தொடக்க நீண்ட கால தலைமறைவு வாழ்க்கையில் அறிமுகமானவர் பெயர் சிவக்குமார் என்ற ராகவன். பல்கலைகழக பட்டதாரி, தொடக்க கால பிரபாகரனின் போராட்டத்தில் மிக்க  நம்பிக்கைக்கு உரிய தளபதியாக விளங்கியவர்.  பின்னாளில் (1984) முரண்பட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டவர்.
 

விடுதலைப்புலிகளின் தொடக்க கால கட்டுப்பாடான புகைபிடித்தல் கூடாது என்ற கொள்கையில் சற்று விலக்கு பெற்று இருந்தவர்.  தொடக்கம் முதலே தேநீர், காபி குடித்தாலே அதில் போதை உள்ளது என்று பிரபாகரன் வெறும் பால் மட்டும் தேவைப்படும் சமயத்தில் அருந்துபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
அளவெட்டி கூட்டுறவு சங்கத்தில் திருடிய மொத்த பணத்துடன், அனுராதபுரம் சிறையில் இருந்து தப்பித்து வந்து செட்டியுடன், இரத்தினகுமார் என்பவரும் ஒன்றாக கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த போது தான் செட்டியை பிரபாகரன் சந்திக்க அப்போது உருவானது தான் "தமிழ் புதிய புலிகள்"  அப்போதைய கால கட்டத்தில் செட்டியைப்பற்றி அனைவருமே நன்கு புரிந்து வைத்தனர்.  சொல்லப்போனால் பிரபாகரனை அப்போது எதிர்த்துக் கொண்டுருந்தவர்களும் செட்டியுடன் பிரபாகரன் சேர்வதை விரும்பவில்லை.  காரணம் உண்மையான நோக்கம் கொண்ட பிரபாகரன் கொள்கை மாறிவிடுமோ என்று அஞ்சினர்.
 
கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த அறையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்தை வைத்து "தமிழ் புதிய புலிகள்" என்ற புதுப் பெயர் இயக்கத்தை தொடங்கினார்கள்.   செட்டியைப் பற்றி முன்பே நன்றாக தெரிந்து இருந்த பிரபாகரனுக்கு இவரை வைத்து லட்சியத்தை அடைய முடியும் என்ற ஒரே நோக்கத்தில் ஒன்றாக செயல்பட ஒப்பந்தம் உருவானது. இலங்கைக்கு மொத்தமாக திரும்பி வரவும் 1975 ஆம் ஆண்டு காவல்துறையினரால் செட்டி கைது செய்யப்பட "தமிழ் புதிய புலிகள்" பிரபாகரன் கைவசமானது. அப்போது (1975) புத்தூர் வங்கி கொள்ளை மூலம் தேவையான பணம் திரட்டப்பட்டது. இதன் பிறகு தான் இயக்கத்தின் வேகம் வளர்ச்சி பிடித்து தொடர்ச்சியாக (1976) இயக்கத்திற்கென்ற கொள்கைகள், கோட்பாடுகள், நிர்வாக கட்டமைப்பு போன்ற கட்டுக்கோப்புகள் உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இறுதியில் உருவானது தான் "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற அமைப்பு.
 
"தமிழ் புதிய புலி"களுக்கென்று உருவாக்கப்பட்ட கமிட்டி என்ற அமைப்பு, சேர்க்கப்பட்டுக்கொண்டுருக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி என்று மாற்றம் பெறத் தொடங்கும் போதே உள்ளே புகைச்சலும் பூசலும் வலுப்பெறத்தொடங்கியது.  முதலில் ஐந்து பேர்களாக இருந்த கமிட்டியின் எண்ணிக்கை பிறகு ஏழு பேர்கள் என்று மாற்றம் பெற்றாலும் பிரபாகரன் மொத்த ஆளுமையை பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளே இருந்த மற்றவர்கள் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
 
எண்ணிக்கை அதிகமாக்கி மாற்றப்பட்ட கமிட்டியில் வந்து சேர்ந்தவர் தான் உமா மகேஸ்வரன். அப்போது உள்ளே இருந்த மற்றவர்கள் பற்குணம், கிருபாகரன், கணேஷ் மாஸ்டர், தங்கராசா மற்றும் ராகவன் போன்றோர்.  பிரபாகரின் தொடக்க கால பிடிவாத கொள்கையான " ஈழப் போராட்டத்தின் எதிர் சக்தியாக இருக்கும் எவரும் உயிருடன் இருக்கக்கூடாது.  இருந்தால் நம்முடைய உழைப்பு வீணாகிக் கொண்டே இருக்கும்" என்பதை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்தரப்பு வாதமாக வைத்துக்கொண்டு எதிர்க்க தொடங்கினர். ஆனால் எதிர்த்த அத்தனை பேர்களின் மொத்த காரணம் அதுவாக இருந்தாலும் முக்கிய காரணம் பிரபாகரன் ஆளுமையை பொறுத்துக்கொள்ள முடியாதது.
 
தொடக்கம் முதல் பிரபாகரன் தன்னுடைய சுய ஓழுக்கத்தின் எத்தனை அக்கறையாக இருந்தாரோ அதையே மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் போதும், போதிக்கும் போது எதிர்விளைவுகளை உருவாக ஆரம்பித்துவிட்டது.  காவல்துறையினரால் தேடப்பட்டுக்கொண்டுருக்கும் மைக்கேல் என்பவர் தொடக்க கால இயக்கத்தில் இருந்தவர்.  மட்டக்களப்பில் பிரபாகரன் ஒரு பேரூந்தை எறிக்க முற்பட்ட போது அருகில் இருந்தவர். அப்போது உண்டான தன்னுடைய எறிந்த காலுடன் பயிற்சி கொடுத்துக் கொண்டுருந்த காட்டுப்பகுதிக்கு பிரபாகரன் தளராமல் வந்ததும் இட்ட முதல் கட்டளை "மைக்கேல் சிறிது காலம் வெளியே செல்லக்கூடாது.  சம்பவ இடத்தில் உன்னை பார்த்த காரணத்தால் பிடிபட்டால் இயக்கத்தின் மொத்த நடவடிக்கையும் வெளியே தெரிந்து விடும்" என்றபோது கேட்காதவரை கமிட்டி என்ற பேரில் இருந்தவர்களின் "ஒப்புதலுடன்" சுட்டுக்கொல்லப்பட்டார்.  இயக்கத்திற்குள் நடந்த முதல் கொலை இது.
 
இதே போல் இயக்கத்தில் இருந்த பற்குணம் என்பவர் பிரபாகரன் வளர்ச்சியை பிடிக்காமல் தினந்தோறும் தேவையில்லாத சச்சரவுகளை உருவாக்கிக் கொண்டுருந்தார். பல்வேறு பொறுப்புக்கள் கொடுத்து அவரை பிரபாகரன் திருப்திபடுத்தினாலும் வரவு செலவு விசயங்களை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு, கொடுக்கப்பட்ட பொறுப்புகளை அக்கறையின்றி செயல்பட்டு அலட்சியப் போக்குடன்  இருந்தவரை பிரபாகரன் கண்டிக்க சச்சரவு அதிகமானது. தொடக்கம் முதல் "இயக்கத்தில் இருப்பவர் வெளியேறினால் வேறு இயக்கம் தொடங்கக்கூடாது" என்ற கண்டிப்பான விதிமுறையை பிரபாகரன் உருவாக்கி வைத்து இருப்பதை உணர்ந்தும் "நான் வேறு இயக்கம் உருவாக்கப் போகின்றேன்" என்பவரை காட்டுக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.  இது இரண்டாவது இயக்க கொலை.
 
இயக்கத்தின் சட்டதிட்டங்கள், கொள்கை வகுப்பாளர்கள் என்று ஜனநாயக கமிட்டி என்ற போர்வையில் இருந்தாலும் பிரபாகரன் ஆதரவு எதிர்ப்பு என்ற இரண்டாக உருவாக, உண்டான சச்சரவில் மொத்த இயக்க வேலைகளும் தடுமாறிக் கொண்டு இருந்தது.  நாள்பட இரண்டாகவும் உடைந்து விட்டது.
 
உள்ளே இருந்த நாகாராஜா, ஐயர், சுந்தரம், மதிவாத்தி, குமாரசாமி,குணரட்ணம் போன்ற 15 பேர்கள் ஒருபக்கம். பிரபாகரன், ராகவன், பேபி சுப்ரமணியம் போன்ற 18 பேர்கள் ஒரு பக்கமுமாய் சிதைந்து பிரிந்தது.
 
முதல் குழுவினர் "புதிய பாதை" என்ற பெயரில் செயல்படத் தொடங்கினர்.  பிறகு, உமா மகேஸ்வரனும் அவர்களுடன் சேர்ந்து அங்கு தலைவராக செயல்படத் தொடங்கினார்.  அங்கும் உருவான தலைமைப் பதவிக்கு ஒயாத போராட்டம்.
 
ஆனால் இயக்க நடவடிக்கைகளுக்குப் பதிலாக, போட்டி பொறாமைகளுமாய் இருந்தவர்களுடன் இனியும் ஒன்றாக இருக்க முடியாது என்று ஆயுதங்களையும் முறைப்படி ஒப்படைத்து விட்டு பிரபாகரன் வெளியேறினார்.
 
அதன் பிறகு "டெலோ" (TELO) என்ற இயக்கத்தில் (குட்டிமணி) பிரபாகரன் இணைந்து கொண்டார். அதுவும் குட்டிமணி பிரபாகரனை இழக்க விரும்பாத காரணத்தால்.பிரபாகரன் இல்லாமல் தனியாக சென்று செயல்பட்டவர்களால் (செல்லக்கிளி) இயக்கத்தை நடத்த முடியாமல் தடுமாற்றம் அடைந்தது. அப்போதை சூழ்நிலையில் பிரபாகரனை மட்டும் நம்பி வந்தவர்களால் டெலோ இயக்கம் முன்னேறப் பெற்றது.
 
டெலோவில் பிரபாகரன் இருந்த போது நடத்ததப்பட்ட, வன்னிய சிங்கம் நகை அடகுக்கடை கொள்ளை, நீர்வேலி வங்கி போன்றவை. இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னாளில் குட்டிமணி தங்கதுரை போன்றவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். டெலோவில் (ஓபரோய் தேவன்) பிரபாகரன் குறித்த வேண்டுமென்றே உருவாக்கிய தரங்கெட்ட விமர்சனத்தை பொறுக்க முடியாமல் அவரை வெளியேற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதனை தொடர்ந்து உள்ளே இருந்த சீறி சபாரெத்தினத்திற்கும் பிரபாகரனும் உருவான பிரச்சனையால் டெலோவில் இருந்து குட்டிமணி வேண்டுதலையும் புறக்கணித்து வெளியேறினார் பிரபாகரன்.
 
தான் உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற விருப்பமான பெயரை, முடங்கிக்கிடந்த இயக்கத்தை மீண்டும் இராகவன் போன்றவர்களை வைத்து உயீருட்டினார்.
 
முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் செயலாளர் என்ற முறையில் கையொப்பமிட்டு (1978 ஏப்ரல் 25) அப்போது வீரகேசரியில் வெளிவந்தது.  அந்த அறிக்கையின் மூலம் அதுவரையில் கொல்லப்பட்ட அரசாங்க,காவல்துறை அதிகாரிகள் 11 பேர்களும் "தமிழீழ விடுதலைப்புலிகள்" மூலமாக நடந்தது என்று உரக்கச் சொன்ன போது மொத்த அரசாங்கத்தின் பார்வையிலும் ஏன் மக்களின் பார்வையிலும் இந்த பொடியன் என்ற பார்வை போய் சற்று பயத்துடன் பவ்யமுமாய் மாறியது.
 
பிரபாகரன், தான் உருவாக்கி வைத்து இருந்த இயக்கத்தில் கடந்த நிகழ்வுகளை மறந்து, உருவாக்கி வைத்துருந்த கமிட்டியில் சிறப்பு சீர்திருத்தம் செய்து, தனக்கு இணையான பதவியை உமா மகேஸ்வரனுக்கு வழங்கியிருந்தார்.  இராணுவம் சம்மந்தப்பட்டது பிரபாகரன் வசம்.  வெளித்தொடர்புகள், மற்றும் இயக்கம் சார்ந்த வெளி வேலைகள் மொத்தமும் உமா மகேஸ்வரன் வசம்.
 
இதே காலகட்டத்தில் (1977) பிரபாகரன் தலைமையில் LTTE. தங்கதுரை தலைமையில் TELO. அருளர் தலைமையில் EROS. இது போக இயக்கத்தின் கொள்கைக்கு மாறாக பாலியல் (ஊர்மிளா) விவகாரங்களில் ஈடுபட்டுக்கொண்டுருந்த உமா மகேஸ்வரன் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் பிரபாகரனிடம் இருந்து பிரிந்து உருவாக்கப்பட்டது PLOTE (People's Liberation Organisation of Tamil Eealam)
150. கொரில்லா குரங்கு அல்ல
 
தொடக்கத்தில் எந்த ஆட்சி முறையும் மக்களுக்கு தேவையாய் இல்லை.  சிற்றூர்.  கூடிப்பேசும் கூட்டம்.  உடனே தீர்வு. காழ்புணர்ச்சி இல்லாத சம உரிமைகள். மொத்தத்தில் அமைதி.
 
நட்ட கல்லை சுற்றி வந்த கூட்டம் அது.  நல்ல வளர்ச்சி எது என்று தெரியாமல் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.  கலப்பும் இல்லை அவர்களின் வாழ்க்கையின் மொத்தமும் எந்த கலக்கமும் இல்லை.
 
மன்னர் வந்தார்.  அறிமுகமானது மன்னராட்சி.  அருகே இருந்தவர்கள் வாழ்ந்தார்கள்.  மன்னர் எப்போதும் போல ஆண்டார்.  ஆண்டவன் வாழ்ந்தார்.  அருகிப்போனது மக்களின் வாழ்க்கைத் தரம் மட்டும் அல்ல.  அச்சப்படுத்தும் சுயநல கொள்கைகளால் ஆன்மீகம் என்ற பதமே செல்லரிக்கத் தொடங்கியது.
 
ஒரு பக்கம் படை எடுத்து வந்தவர்கள் பாடையில் ஏற்றினார்கள்.  பல் இளித்துக் கொண்டு வாழ்ந்தவர்கள் பதவியுடன் வாழ்ந்தார்கள் ஆங்கியலேயர்கள் வெளியேறும் வரைக்கும்.
 
ஜனநாயகக் குழந்தை பிறந்தது. மருத்துவர்கள் வெளியே வந்து சொன்னார்கள்.
 
வெற்றி. வெகு சிறப்பு. ஆனால் நடக்க நாளாகும்.
 
காரணம் கருவிலே உருவான போதே கண்டதையும் தின்று செரிக்காத பிண்டமாய் தான் அதன் பிரவசம் நிகழ்ந்தது.
 
மன்னர்களால், படை எடுத்தவர்களால் பிரச்சனை என்பது போய் உள்ளே இருக்கும் ஒரு குறிப்பிட்ட சக்திகளால் மொத்தமாய் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை தரம் சகதியாய் நாறத் தொடங்கியது.
 
ஜனநாயகம், பாராளுமன்றம், சட்டமன்றம், சட்டங்கள் எல்லாமே மேலே உடுத்திய ஆடைகள்.  உள்ளே சீழ் வடியும் கோர கொப்புளங்கள்.  தீர்வுகள் சரியான முறையில் தீர்க்கப்படாமல் உலகமெங்கும் உருவானது தான் கிளர்ச்சிகள், வர்க்கப்போராட்டங்கள்.  அதன் தொடர்ச்சி தான் கொரில்லா தாக்குதல்கள்.
 
சுடத் தெரிந்தவனுக்கு ஓரு குறியும் ஒரு தோட்டாவும் போது.  அவனைப் பொறுத்தவரையில் உடனடித்  தீர்வு.  ஆனால் கொரில்லா தாக்குதல் இழப்பும் வலியும் அதிகம்.  அதைவிட வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவர்களுக்கும், உடன் வாழும் சக மனிதர்களுக்கும் தினந்தோறும் கொடூரம்.
 
விடுதலைப்புலிகள் தேர்ந்தெடுத்த தொடக்க கொரில்லா தாக்குதல்கள் முறைப்படுத்தாத, ஆனால் முகம் முழுக்க பரவிய ஆவேசத்தால் ஆட்டம் காணத்தொடங்கியது மொத்த இலங்கையும்.
 
பொடியன்கள் உருவாக்கிய தாக்கம் என்பது அவர்களின் செல்லரித்த ஜனநாயகத்ததை பொடிப் பொடியாக்கியது.
 

நெல்சன் மண்டேலா, யாசர் அரபாத், சே குவாரா,ஹோ சி மின், மா சே துங், பிடல் காஸ்ட்ரோ என்று தொடங்கி இன்று வரையிலும் நின்றபாடில்லை. தீர்வுகளும் தீர்ந்தபாடில்லை.
 
"பதுங்கு தாக்கு" என்ற இந்த இரண்டு வார்த்தையில் பல உயிர்கள் பறிபோனது.  பதில் அளித்தவர்களின் மொத்த குறியும் அப்பாவியை மட்டுமே வந்தடைந்தது.  இலங்கையின் பார்வையில் தீவிரவாதம்.  விடுதலைப்புலிகளின் பார்வையில் தமிழீழம் என் தாகம்.
 
மக்கள் கண நேரத்தில் துளைத்த தோட்டாவால் விக்கிக்கொண்டு செத்தார்கள். சாகாதவர்களை சமரசம் ஏதுமின்றி கொளுத்தி கொண்டாடினார்கள். இது மக்களுக்கு வழங்கிய இலங்கை ஆட்சியாளர்கள் ஒரு பக்கம்.
 
விடுதலைப்புலிகள் மறுபக்கம்.  தீர்மானம் ஒன்று.  தமிழர்களின் மானம் பெரிது.  அதை விட வாழ்வுரிமை மிகப் பெரிது.
 
நம்முடைய சக்தியை காட்ட வேண்டுமென்றால் நீங்கள் பொறுத்து தான் ஆக வேண்டும் என்று பொங்கி எழுந்த போதெல்லாம் அப்பாவி மக்கள் அனுபவித்த வலி நிறைந்த வாழ்க்கை என்பதும் வாழ்ந்தவர்களுக்குத் தான் தெரியும்.  இனியும் இங்கு வாழ்ந்து தான் தொலைக்க வேண்டுமா? என்கின்ற அளவிற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டுங்கெட்டானாக்கி தத்தளிக்க வைத்தது.
 
பிரபாகரன் தவிர்த்து உருவான மற்ற அத்தனை பேராளிகளுக்கும் ஜனநாயக கதவு திறக்காதா? என்ற எதிர்பார்ப்பில் அவ்வப்போது தன்னை மாற்றிக்கொண்டார்கள்.  மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தார்கள்.  தங்களுக்கான வாழ்க்கையையும் அதில் தேடித் தினம் அலைந்தார்கள்.
 
33 வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கையை, இலங்கை நாடாளுமன்றம் என்ற போலியான பதம் இனி எந்த நாளும் தமிழ் மக்களுக்கு உண்மையான இதமான சூழ்நிலையை உருவாக்க வாய்ப்பே இருக்காது என்று தீர்மானமாய் நம்பிய ஒரே காரணம் தான் இறுதிவரையிலும் பிரபாகரன் ஆளுமையை சுட்டிக்காட்டியது.  அதன் தொடர்ச்சியாக உலகம் முழுக்க அவர் மேல் அச்சப் பார்வையையும் பார்க்க வைத்தது.
 
பாலஸ்தீனம் இஸ்ரேல் என்று உலகம் முழுக்க சுற்றி வாருங்கள்.  இன்று ஆந்திரா தெலுங்கானா, ஜார்கண்ட் மாவோயிஸ்ட் என்று உள் நாட்டுக்குள் வந்து நில்லுங்கள்.  கடைசியாக கருவில் இருக்கும் மதுரையை தலைமையிடமாக கொண்டு தென்மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற உள்ளுருக்குள் வந்து நில்லுங்கள்.
 
போராட்டங்கள் தவறு என்றால் போராடத்தூண்டும் காரணங்கள் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறது.  இது தான் ஜனநாயகம் தந்த பாலபாடம்.  காந்தி சொன்ன " கிராமத்திற்குள் சென்று வாழ்ந்து விட்டு ஆட்சியில் அமருங்கள்"  என்ற எளிமை சூத்திரம்.
 
ஐனநாயகத்திற்கே இத்தனை பிரச்சனைகள் என்றால் "நீங்கள் வாழ்க்கை வாழவே தகுதியில்லாதவர்கள்" என்று சொன்ன, சொல்லிவிட்டு போன, சொல்லிக்கொண்டுருக்கும் அத்தனை இலங்கை ஆட்சியாளர்களையும் எங்கு கொண்டு சேர்ப்பீர்கள்?  தீவிரவாதம் தவறு என்றால் தீர்க்கப்படாத பிரச்சனைகள் என்று தீர்வு காணப்படும்?
 
போராளிகள் என்று சொல்லிக்கொண்டு களம் புகுந்தவர்கள் தனக்கு தானே சூட்டிக்கொண்ட பட்டங்களும், வாழ்க்கையும், வசதிகளும், எதிர்பார்ப்புகளும் உள்ளுற வன்மத்தையும், வக்கிரத்தையும் தான் வளர்த்து.  தமிழ் மக்களின் வாழ்க்கையை புறந்தள்ளியது.  ஒரு வகையில் பிரபாகரனால் மதிப்பு பார்வையில் இருந்தவர்.  தனக்கு தகுதியான இணையான பதவியை உருவாக்கி உட்கார வைத்து அலங்கரித்து பார்த்தவர் என்ற பெருமை உடைய உமா மகேஸ்வரன் என்ற முகுந்தனை முதலில் அழைப்போம்.
 
இலங்கை தேசிய காங்கிரஸ் என்று தொடக்க காலம் முதல் இருந்த ஜனநாயக பாதை கடைசியில் தந்தை செல்வா காலத்தில் மூன்று கட்சிகளும் ஒன்றாக இணைந்து மாறியது.  அமிர்தலிங்கம் அதையும் மாற்றி வேறு ஒரு பாதையில் பயணித்தார்.  தமிழர்களுக்கு பலன் இல்லை.  ஆனால் தமிழன் பெயரைச் சொல்லி பலன் அடைந்தவர் பலர்.
 
தமிழ் மாணவர் பேரவை, புதிய தமிழ் புலிகள் என்ற மாற்றம் பெற்றது இனி எத்தனை விதமாக மாற்றம் பெறப்போகிறது?  என்ன காரணங்கள்?
 
பிரபாகரன் சர்வாதிகாரம் காரணம்
 
தனிமைவிரும்பி?
 
"எனது பள்ளிப்பருவத்தில் என்னை கவர்ந்தது இந்திய சுதந்திரப் போராட்டமே. ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை முன்னிறுத்தி வளர்க்கப்பட்ட சூழலில் தான் நான் வளர்க்கப்பட்டேன். வெளியாட்களுடன் பழக அனுமதிக்கப்படவில்லை"
 
ஓழுக்கம்?
 
"எனது தந்தை (வேலுப்பிள்ளை) அவரது நடத்தையாலே எனக்கு முன் மாதிரியானார். அவர் உணவில் கருவேப்பிலையைக்கூட உண்ண மாட்டார். அவர் அரசாங்க மாவட்ட (நில அளவை) அதிகாரி. அவர் நடந்து சென்றாலே புல்வெளிக்குக் கூட காயம்படாதவாறு நடந்து செல்வார் என்று எம் பகுதி மக்கள் கூறுவார்கள்.  என்னை குற்றச் சாட்டும் பொழுதுகூட அப்படிப் பட்டவருக்கு இப்படியொரு பிள்ளையா என்பார்கள்.  அவர் மிகவும் கடுமையானவர். மொத்த குடும்ப நிகழ்வுகளையும் காரண காரியங்களோடு தோழமையோடு உரையாடுவார். எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் அவர் உருவாக்கிய புரிந்துணர்வு முக்கிய காரணம். அமைதியாக வாழ்ந்த அவரது வாழ்க்கை முழுக்க மொத்த இனக்கலவரங்களையும் வெறும் வார்த்தைகளாக உரையாடல் மூலம் உணர்ந்து கொள்ள முடிந்தது.வாழ்க்கை இழந்தவர்கள் இழந்து கொண்டே தான் இருந்தார்கள்"
 
நோக்கம்?
 
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் நேதாஜியின் பங்கு என்னை மிகவும் கவர்ந்தது. குழந்தைப்பருவம் முதலே அவரின் ஆன்மிக தேடலில் இருந்த போதும் திரும்பி வந்த போது நான் தனிமையாக தனி ஆளாக சுற்றி கானக வாழ்க்கை வாழ்ந்த போது இவைகள் தான் என்னை அடைகாத்தன. குறிப்பாக " எனது கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை எமது மண்ணின் விடுதலைக்காக நான் போராடுவேன்"  இந்த வார்த்தைகள் எனக்குள் உருவாக்கிய தாக்கம் தான் இறுதி வரை இழுத்து வந்தது".
 
எண்ணங்களின் தாக்கம்?
 
" அநீதிக்கு எதிராக திரும்பத் தாக்கியவர்கள் என பலரது வரலாறும் வாழ்க்கையும் எனக்கு பிடித்தமாக இருந்தது. சிங்களிர்களின் கொடூர எண்ணங்களும், கொடுமையாக (1958) தாக்குதல்களும் தினந்தோறும் தினசரி வாயிலாக படித்துக்கொண்டே வந்த போது உருவாக்கிய தாக்கம் மேலும் என்னை என் பாதையை உறுதிபடுத்தியது"
 

கடைசி வரையிலும் கடைபிடித்த இயற்கை என் வழிகாட்டி?
 
" தமிழர்களின் வாழ்வில் நீக்கமற கலந்துருக்கும் மத நம்பிக்கைகளை, பாண்டுராவில் உள்ளே உறங்கிக்கொண்டுருந்த புரோகிதரை ஒரு கயிற்றுக் கட்டிலில் கட்டி மொத்தமாக பெட்ரோல் ஊற்றி சிங்களர்கள் எரித்த போதும், மக்கள் அந்த நிகழ்வுகளையும் செய்தியாகவே பார்த்த போது படித்த போதும், மத எண்ணங்களை விட திரும்பி தாக்க முடியாத எங்களது மக்களின் எண்ணங்கள் எனக்கு வேறு விதமான தாக்கத்தை உருவாக்கியது"
 
வாசித்த அனுபவமும் வாழ்க்கையை நெறிபடுத்தியவைகளும்?
 
நடந்து கொண்டுருக்கும் இனகலவரங்களையும், குறிப்பாக 1958 அன்று நடந்த மொத்த கோரங்களையும் வீட்டில் பெற்றோர்கள் பேசிக்கொள்ளும் போதும் உருவான தாக்கம் அளவிடற்கரியது. அப்போது சென்னையில் இருநது வரும் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் இதழ்களில் வரும் போர் பற்றிய செய்திகளை ஆர்வமாய் படித்து தெரிந்து கொள்வதுண்டு. மேலும் மகாபாரதம் சொல்லும் "நன்மையை தீமை அழித்து ஒழிக்கும். இறுதியில் வெல்லும்"  என்ற வார்த்தைகள் என்னுடைய வலிமையை அதிகப்படுத்திக்கொண்டே இருந்தது.  நான் பள்ளியில் படிக்கும் போது ஹோம் கார்டு பயிற்சிக்காக வி நவரத்னம் என்ற ஆசிரியரிடம் பயின்றேன்.  அவர் தமிழ் சமஷ்டி கட்சியில் இருந்து வெளியேறியவர். பல இளைஞர்களும் அவரைத் தொடர்ந்து வெளியேறினார்கள். அவர் பல நாடுகளில் நடக்கும் போராட்டங்களையும் விரிவாக எடுத்துரைப்பதோடு பாராளுமன்றத்தால் எதிர்காலத்தில் இலங்கையில் எதுவும் தமிழர்களுக்கு உருவாக்காது என்றவர். அப்போது என்னுடைய வயது 15.  அப்போது தான் என்னுள் உருவான தாக்கம் " நமக்கென்று ஒரு தனி நாடு இங்கு வேண்டும்.  நாமும் திருப்பித் தாக்க வேண்டும்"
 
 
ஆதர்ஷ்ண நாயகர்கள்?
 
" வரலாற்றில் நெப்போலியன் எழுச்சி, மகாபாரதத்தில் பீமன், கர்ணன் இவர்களின் குணாதிசியங்களையும், விவேகானந்தர் சொற்பொழிவு மூலம் கோர்த்து சேர்த்த போது மொத்தமாக இளைஞர்களின் மொத்த சக்தியும் எனக்கு புதிய புரிந்துணர்வை உருவாக்கியது."
 
பக்தி உருவாக்கிய தாக்கம்?
 
" ஊரில் ஆன்மிக சொற்பொழிவுகள் (கிருபானந்த வாரியார்) எங்கு நடந்தாலும் விடாமல் போய்க் கேட்டுக் கொண்டே இருப்பேன். பார்த்த சாக்ரடீஸ் நாடகத்தில் உள்ள கதாபாத்திரம் வாயிலாக ஒப்பிட்டுக்கொள்வதுண்டு.  நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.  ஆனால் செய்வது அத்தனையும் வலிமையாக அவர்கள் உருவாக்கிய வலியை உருவாக்கிய வடுக்கள் மறையும் அளவிற்கு மக்களுக்கு வழிகாட்டும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று உள்ளுற உணர்வாக மாற்றம் பெற்றுக்கொண்டே வளர்ந்தேன்"
 
ஆயுதம் மட்டுமே சிறந்தது?
 
" ஆயுதங்கள் இல்லாமல் அமைதி வழியிலேயே அவர்களிடம் வாழும் எம் மக்களை அவர்களால் உருவாக்கப்படும் ஒவ்வொரு பிரச்சனைகளும் வாழ்வாதாரத்தை சீர் குலைத்துக்கொண்டு இருந்ததே தவிர வழி தெரிவதாக தெரியவில்லை. ஆயுதம் மூலம் மட்டுமே இவர்களின் அடக்குமுறையை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதில் உறுதியாய் இருந்தேன்"
 
குடும்பத்தை ஒதுக்கி வாழ்ந்த வாழ்க்கை?
 
" 19 வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை தொடங்கி விட்டேன். குடும்பத்துடன் இருந்தால் அது மேலும் மேலும் பல தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கும் என்று உணர்ந்து 1973 முதல் 1983 வரை தலைமறைவு வாழ்க்கையை அறிமுகம் செய்தது. இராணுவத்தின் வெறியான தேடல்கள் அத்தனையும் என்னையும் என் வெற்றிக்கான பாதையையும் கற்றுத்தந்தது"
 
அரசியல் கொள்கை?
 
" 33 ஆண்டுகள் இலங்கை பாராளுமன்றத்தில் ஒலித்த எந்த வார்த்தைகளுக்கும் மதிப்பு இருந்ததாக அவர்களின் போராட்டம் எதையும் உணர்த்தவில்லை.  மக்கள் அரசியல் தேவை என்றாலும் அது வெறும் வார்த்தைகளால் கொண்டு சேர்க்கப்படும் போது இவர்களுக்கு எங்களின் மக்களின் வலியை புரிந்து கொள்ளும் திராணி இல்லாத காரணங்களினால் என்னுடைய ஆயுதப்போராட்டங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் வலுப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது.  மாற்றம் காணாத வாழ்க்கை அத்தனையும் இரு பக்கமும் வலியை உருவாக்கிக் கொண்டே இருந்தாலும் அவ்வப்போது கிடைத்த வழிகள் ஒவ்வொன்றும் நான் தேர்ந்தெடுத்த பாதை எனக்கொன்றும் தவறு போல் எனக்கு உணர்த்தவில்லை"
 
தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதை?
 
" இந்திய அரசியல் சுதந்திர வரலாற்றில் மகாத்மாவுக்கு எத்தனை முக்கியத்துவம் இருக்கிறதோ அந்த அளவிற்கு நேதாஜிக்கும் முக்கிய இடம் உண்டு.  இல்லாவிட்டால் இன்று சீனார்கள் டெல்லிவரைக்கும் வந்து ஆளுமை புரிந்து இருப்பார்கள்.  எங்கள் ஆயுதப்போராட்டத்தை குறை சொல்பவர்கள் அத்தனை பேரும், இந்தியா இன்று வளர்த்துக்கொண்ட இராணுவ மேலாதிக்கத்தினால் மட்டுமே இன்றும் ஆசியா நாட்டில் ஒரு வல்லரசாக இருக்கிறது.  அமைதி முக்கியம் சொலும் எந்த சர்வதேச நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆயுதங்களையும் வளர்த்துக்கொண்டு தான் வளர்ந்துள்ளது"
 
இரக்கம் என்பது?
 
வெளிப்படையாகச் சொல்லப்போனால் உலகத்தில் உள்ள மொத்த இராணுவ வாழ்க்கை என்பதே இயல்பாகவே வெளியே அத்தனை சீக்கிரம் தெரிந்து விடாத இரக்கமில்லாத தன்மையை உடையது. எங்களுடைய எதிரிகளால் வெளியே பரப்புரையாக சொல்லபடும் எந்த விசயங்களையும் நான் பொருட்படுத்தியதே இல்லை.  காரணம் உண்மையான விசயங்கள் உள்ளே வாழ்ந்த மக்களுக்குத் தெரியும். பரபரப்பு ஊடகங்களுக்கு அது தேவையில்லாத விசயங்கள். கண்ணீரும், கதறலும் அவர்களுக்கு வியாபாரம்.  எங்களுக்கு அதை தீர்க்க வேண்டிய கடமை"
 
சகோதர யுத்தங்கள்?
 
" ஆயுதங்கள் கொண்டவர்கள் அதிகாரத்திற்கு ஆசைப்படுகிறார்கள்.  தவறு இல்லை.  ஆனால் அவர்களிடம் அடிப்படையில் இல்லாத ஒழுக்கம் ஒரு சர்வாதிகாரியை அறிமுகப்படுத்துமே தவிர மக்களுக்குத் தேவையான எந்த அதிகாரத்தையும் தந்து விடாது.  இரக்கம் இல்லாதவர்களுக்கு மட்டும் தான் எங்களுடைய ஆயுதங்கள் இரக்கம் இல்லாமல் செயல்படும்.  அப்படி செயல்படவில்லை என்றால் எங்கள் வலியை, வலிமையை,எதிர்பார்க்கும் சுதந்திர வாழ்க்கை வந்து அடையாது.  கொலை,கொள்ளை,மேலாதிக்கம் போன்ற தொடக்க கால சகோதரர்களால் எங்களுடைய வழிகாட்டலை தவறு என்று உணர்ந்தவர்களை வேறு எந்த வழியில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்? என்னை சர்வாதிகாரி என்பவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் ஓப்பிட்டுக்கொள்வதில்லை. என்னுடைய ஆசை மக்களின் சுதந்திரம்.  ஆனால் அவர்களின் ஆசை மொத்தமும் அவர்களின் இருப்பு.  எந்த சூழ்நிலையிலும் சமாதான கதவை நான் மூடி வைத்ததே இல்லை.  எல்லா நல்ல வாய்ப்புகளையும் அடைபடும் சமயத்தில் மட்டுமே என்னுடைய கொள்கைகள் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது"
 
மாவீரர்கள்?
 
சயனைடு சுவைத்து உண்டவர்கள் அவர்கள் மறைமுகமாக எங்கள் போராட்டத்திற்கு வலிமை சேர்த்துவிட்டு செல்கிறார்கள். எங்கள் இயக்கத்தில் நூற்றில் பத்து பேர்கள் கூட எதிரிகளின் கையில் சிக்கி விடமாட்டார்கள். சிக்கினால் என்ன நடக்கும் என்பதையும் அவர்கள் நன்றாக உணர்ந்தவர்கள்.  போராட்டத்தில் உள்ள தலைமைப் பொறுப்புகள் மட்டும் ஆராதனைக்குரியவர்கள் அல்ல.  வாழ்வில் பங்கெடுத்த ஒவ்வொரு வீரரும். அதனால் அவர்களுக்கு உண்டான பதில் மரியாதை மாவீரர் தினம்.  தாங்களும் மதிக்க்ப்படுகிறோம் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி இது"

ஜனநாயகம்?

என்னுடைய கொள்கைகள் சரியில்லாதவைகள் என்றால் ஜனநாயகப் பாதையில் சென்ற தகுதியானவர்கள் வென்றெடுத்த விசயங்களையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.  நாங்கள் தமிழின காப்பாளர்கள் என்று வந்தவர்கள் தாங்கள் விலைபோன நிகழ்வுகளையும் உற்று நோக்க வேண்டும். சிங்கள பேரினவாத தந்திர அரசியல் என்பதையும் அவர்களுக்கு எது சரியான மொழி என்பதையும் புரிய வைக்கும்.
 
முடிவும் முற்றும்?
 
நான் அரசியல்வாதியல்ல.  பேச்சுக்கு முன் செயலில் காட்டி நமக்கான உரிமையை வென்று அடைந்த பிறகு தான் பேச்சுக்கு தயாராக வேண்டும்.  காரணம் சிங்களர்களின் ஆதிகம் என்பது 30 வருடங்கள் கடந்தும் கொள்கைகளால், இரக்கமற்ற குணத்தால், தெளிவான தந்திர முன்னேற்றம் கொண்ட போலியான ஜனநாயகத்தை நாம் வென்று எடுத்து நாம் முன்னேறியவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களும் நாம் யார் என்று புரியவைக்கும். என்னுடைய காலத்தில் இந்த சுதந்திரப் போராட்டம் முடிவடையும் என்ற எண்ணமெல்லாம் இல்லை.  நான் ஒருவன் முயற்சியில் இருக்கின்றேன்.  நான் வெல்லாவிட்டால் எனக்குப் பிறகு வேறு ஒருவர் வந்து இதை தொடர்வார்கள்.  தீர்வு என்பது சரியான முறையில் தீர்க்கப்படாத வரையில் இந்த போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்?
 
ஆயுதமா அன்பா என்பது சிங்களர்களின் கையில் தான் இருக்கிறது?
மாவீரர் தினமும் புலிகளின் நிறமும்
 
சிறீமாவே பண்டாரா நாயகா ஆட்சி.  சிங்கள தீவிரவாத ஜனதா விமுக்தி பெரமுணா (1971) உருவான நேரம். இந்தியா பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் நாட்டை சுதரந்திர நாடாக மாற்றிய தாக்கம்.
 
யாழ்பாண தமிழ் மாநாட்டை காரண காரியங்கள் ஏதும் இல்லாமல் சூறைக்காற்று போல் அமைதியாய் கூடியிருந்த மக்களை சின்னபின்னாபடுத்தி சிதறடிக்க காரணமாக இருந்த காவல்துறை அதிகாரி சந்திரசேகராவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட கொடுமை.
 
மேலே உள்ள ஒவ்வொரு புள்ளியும் சேர்ந்து யோசிக்க வைத்து ஒன்றாக மொத்த இளைஞர்களையும் ஆயுதப்புள்ளியாக மாற்றிய தருணமிது.  தொடக்கத்தில் உரிமை வேண்டும் , தமிழர்களின் தீர்வு என்றெல்லாம் வாதாடிக்கொண்டுருக்கும் காகிதப்புலிகளின் பார்வையில், " இதெல்லாம் சரிப்பட்டு வருமா?"  என்பதாகத்தான் இருந்தது.
ஆயுத எண்ணங்கள் கொண்ட இளைஞர்களுக்கு அந்த தலைவர்கள் அப்போது நடந்த தேர்தலில் தோற்ற போது மொத்தமாக சிந்தனைகளையும் இணைத்து ஒரு முற்றுப்புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியது.
 
"ஆயுதம் தான் இனி தீர்வு."
 
பிரபாகரன் என்பவரைக் குறித்து அப்போது யாருக்கும் தெரியாது. ஆனால் அவரால் முதன் முதலாக சுட்டுக்கொல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட யாழ்பாண மேயர் ஆல்பர்ட் துரையப்பா (1975 ஜுலை 27) என்று நிகழ்ச்சிக்குப்பிறகு பரவலாக எல்லோராலும் கவனிக்கப்பட்டவர்.  அப்போது பிரபாகரனுக்கு வயது 20. அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு வரும் தனித்தனி பாதையில் பலரும் செயல்பட்டுக்கொண்டுருந்தனர்.
 
பிரபாகரன் தனது ஆயுதப்போராட்டத்தை தொடங்கியது முதல் 38 வருடங்கள் தொடர்ந்து அவருடைய நேரமும் சரியாக ஒத்துழைத்தது. உறுதுணையாக இருந்தது என்றால் அது மிகையில்லை.  பிரபாகரனின் மொத்த வாழ்க்கையில் காவல் துறையில் சிக்கிய ஒரே தருணம் தமிழ்நாட்டில் தி.நகரில். ஆனால் இளைஞர்களின் மொத்த ஆயுதப் போராட்டத்தையும் பிள்ளையார் சூழி போட்டு தொடங்கி வைத்தவர் உரும்பிராய் சிவகுமரன்.
 
நன்றாக சிங்களம் பேசக்கூடியவர்.  தமிழ் மொழியை வெறியாய் நேசித்தவர். யாழ்பாண தமிழ் மாநாட்டை சீரும் சிறப்புமாக நடத்திக்காட்ட தினந்தோறும் பாடுபட்டவர்.  மாநாட்டுக்கு தொடக்கம் முதல் இடம் தராமல், ஏராளமான பிரச்சனைகளை உருவாக்கி உருக்குலைக்க முயற்சித்த ஆல்பர்ட் துரையப்பாவை மனதில் குறித்து வைத்துருந்தவர். தமிழர் என்றும் தமிழர் நலனே எனக்கும் முக்கியம் என்றும் மொத்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு சார்பாக தன்னை அடிபொடியாக வாழ்ந்து கொண்டுருந்தவர் இந்த ஆல்பர்ட் துரையப்பா. அப்போது யாழ்பாண மேயராக இருந்தவர். சிவகுமரன் என்பவர் அப்போது உருவாகி இருந்த தமிழ் மாணவர் பேரவையில் செயல்பட்டு கொண்டுருந்தவர். முதன் முதலாக சயனை சுவைத்து உயிரை மாய்த்து மொத்த ஆயுதபோராளிகளின் வாழ்க்கையிலும் புதிய பாதையை உருவாக்கியவர்.
 
சிவகுமரனின் முதல் குறி தமிழ் மாநாட்டை சீர்குலைத்த காவல் அதிகாரி சந்திரசேகரா.  முயற்சித்த போது அப்போது துப்பாக்கி வேலை செய்யவில்லை. முதன் முதலாக நேருக்கு நேர் ஆயுதம் பேசத்தொடங்கி விட்டது என்று ஆட்சியாளர்கள் மொத்தமாய் இளைஞர்கள் அத்தனை பேரையும் அள்ளி போட்டுக்கொண்டு போய் கொள்ளி வைக்காத விதமாய் கொடூரம் காட்டிய தருணம் அது.  யாழ்பாண கைலாசப்பிள்ளையார் கோவிலுக்கு அருகே குடியிருந்தவரை சந்திர சேகராவை தினமும் கவனித்த சிவகுமரன் கையால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி செயல்படாத காரணத்தால் அவரை ஜீப்பில் இருந்து இறக்கி கத்தியால் கொல்லவும் முடியவில்லை.  காரணம் உடன் வந்தவர்கள் ஓட்டம் பிடித்த காரணத்தால் வெற்றிகரமான தோல்வி.
 
தலைமறைவான சிவகுமரனை பிடித்துக்கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் என்று அரசாங்கத்தால் அறிவிப்பு (1974) வெளியிடப்பட்டதும் இவருக்குத் தான். கோப்பாயில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க முற்பட்ட போது தப்பிக்க சயனைடை உண்ண ஆனால் காவல்துறையால் காப்பாற்றப்பட்டு யாழ்பாண மருத்துவனையில் வைத்துருந்த போது இறுதியில் சிகிச்சை பலன் அளிக்காமல் அப்போது இறக்கும் தருவாயில் சிவகுமரன் சொன்ன வாசகம்.
 
"துரோகிகளால் ஏமாற்றப்பட்டு விட்டேன்."
 
1975 ஜுன் மாதம் உயிர் பிரிந்து சவ ஊர்வலத்தில் கூடிய மொத்த இளைஞர்கள் கூட்டத்தின் கண்களிலும் ஒரு புதிய ஒளி பரவத்தொடங்கியது. "செய் அல்லது செத்துமடி."  காகிதப் புலிகளின் அறிவுரை எடுபடாமல், மாறி ஆயுதப்புலிகளின் வளர்ச்சியும் தொடர்ந்தது.
 
பிரபாகரன் வாழ்க்கையில் இந்த சிவகுமரன் நிகழ்வுகள் ஒவ்வொன்று ஆழப்பதிந்த பாடங்கள்.  உடன் இருப்பவர்களின் துரோகம், ஆயுத அறிவு, அதன் முக்கியத்துவம் என்று தன்னை உருமாற்றிக்கொண்ட காலம் அது.
 
ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் என்று தொடக்கம் பெற்று வளர்ந்த சூழ்நிலையில் யாழ்பாணத்தில் இராணுவ முற்றுகையில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த கம்பர் மலையைச் சேர்ந்த சத்தியநாதன் என்ற சங்கர் இறந்த நாளே பிரபாகரனால் கொண்டாடப்படும் வருட (நவம்பர் 27) மாவீரர் தினம். இறந்த வீரர்களுக்கு அஞ்சலி.  அப்போதைய நிகழ்வுகளை படம் பிடித்துக்காட்டும் மாவீரர்களின் சார்பான உரை. தமிழர்களின் பரம்பரியான நடுகல் முறை உருவாக்கி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள்.
 

இராணுவ தாக்குதலில் படுகாயமடைந்த சங்கர் என்று சத்தியநாதனை உயிர் பிழைக்க தமிழ்நாடு அழைத்து வரப்பட்ட போதும் 1982 நவம்பர் 27 அன்று வீரமரணம் அடைந்தார்.  இவர் இறந்த நாளை பின்னாளில் மாவீரர் தினம் என்று பிரபாகரனால் அறிவிக்கப்பட்டது. 1982ல் இறந்த சங்கர் மரணத்தை 1989 அன்று தான் மாவீரர் தினம் என்று பிரபாகரனால் உருவாக்கப்பட்டது.
 
பிரபாகரனால் இறந்த மாவீரர்களில் மரணத்தை கடைசி வரைக்கும் அங்கரிகப்படாத ஒரே நபர் இராஜிவ் காந்தி படுகொலையில் ஈடுபட்டு இறந்த பெண்(1991 மே 21) தனு.
 
பிரபாகரன் இயக்கம் தொடங்கி முதல் 2004 டிசம்பர் வரைக்கும் (ஆதாரம் சூரியப்புதல்வர்கள்) களப்பலியில் மாவீரர்கள் ஆண்கள் 13995 பெண்கள் 3875, கரும்புலிகள் ஆண்கள் 192 பெண்கள் 69 மற்ற எல்லைப்படைவீரர்கள் 280 பேர்கள்.
 
தொடக்கத்தில் இருந்த தமிழர் மாணவப் பேரவை , TNT (Tamil New Tigers) என்று மாற்றம் பெற்று 1978 ஆம் ஆண்டு வெளிப்படையாக LTTE (Liberation Tigers of Tamil Ealam) தமிழீழ விடுதலைப் புலிகள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இடையே பல படிகள் கடந்த இயக்கமும் பிரபாகரன் வாழ்க்கையும்.  நோக்கமும், திசையும் மாறவில்லை.  ஆனால் உடன் வந்த அத்தனை பேர்களும் மாற்றம் பெற்றனர்.
 
மொத்தமாக ஆயுதப்பாதையை தேர்ந்தெடுத்த இளைஞர்களில் இறுதிவரையிலும் பிரபாகரன் ஆளுமை அதிகமாக இருந்த போதிலும் இருந்த மற்ற இயக்கங்கள்
 
1. உமா மகேஸ்வரன் என்ற முகுந்தன் (PLOT) தமிழீழ விடுதலைக்கழகம்.
Peoples Liberation Organisation of Tamil Eelam.
 
பிரபாகரனை தொடக்கம் முதல் கவர்ந்தவர். போராளி இயக்கம் என்பது மக்களை சென்றடைந்து மக்கள் ஆதரவு வேண்டுமானால் உலகளாவிய பார்வையுடன் நீண்ட காலம் பலன் அளிக்கக்கூடிய திட்டங்களுடன் செயல்பட வேண்டும் என்றவர்.  சரளமாக ஆங்கிலத்தில் எழுத பேச தெரிந்தவர். ஊர்மிளா என்ற பின்னால் வரப் போகும் பெண் பிரச்சனையால் பிரிந்தவர்.
 
2. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Ealam People Revolutionary Liberation Frton EPRLF) பத்பநாபா.
 
3. ஈழப் புரட்சி அமைப்பு (Eelam Revoulutionary Organisation)  EROS  பாலகுமார்
 
4. தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organisation) TELO சிறீ சபாரெத்திரனம்
 
5. தமிழீழ விடுதலை இராணுவம் (Tamil Ealam Liberation Army) TELO காஸ்ட்ரோ
 
6. தமிழீழ இராணுவம் (Tamil Ealam Army) TEA தம்பிப்பிள்ளை மகேஸ்வரன்
 
7. தமிழீழத் தேசிய முன்னணி (National Liberation Front of Tamil Eealam) NLFT இது ஒரு குழுவாக செயல்பட்டது.
 
இது தவிர ஏறக்குறைய தோன்றி மறைந்து கொண்டுருந்த மற்ற 30 இயக்கங்கள்.
 
இலங்கை தமிழர்களின் வரலாற்றில் ஆங்கிலேயர்கள் காலத்தில் அருணாச்சலம் தொடங்கி ஜீஜீ பொன்னம்பலம் வரைக்கும்.
இனவாதிகள், தந்தை செல்வா தொடங்கி அமிர்தலிங்கம் வரைக்கும் மிதவாதிகள்.  பிறகு பிரபாகரன் போன்ற இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட "ஆயுதம் என்றே இனி தீர்வு" என்று கொண்ட கொள்கையினால் இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் தீவிரவாதிகள்.
 
"தீவிரவாதம் என்பது மட்டுமே இனி ஒரே தீர்வு" என்று யார் உருவாக்கினார்கள்?
 
சிங்களர்களுக்கு தொடக்கம் முதலே ஒரே பாதை? ஒரே ஒரு காரணம்?
 
இது சிங்கள நாடு.  சிங்களர்களால் ஆளப்பட வேண்டிய நாடு.  ஆனால் தமிழ் தலைவர்கள் என்று உள்ளே வந்தவர்கள் பலநோக்கம். பல பாதை.  பூர்வகுடி ஒரு பக்கம்.  மலையக தோட்டத் தமிழர்கள் ஒரு பக்கம்.
 
அன்று அவர்களின் பாதையும் வதையில் தான் முடிந்தது.  வதைபட்டவர்கள் தலைவர்கள் அல்ல.  அப்போதும் அப்பாவி மக்கள் தான்.  சொத்து இழந்து, உயிர் இழந்து, கற்பிழந்து என்று மொத்தமாய் அத்தனை உரிமைகளையும் இழந்தார்கள்.  எந்த விடியலும் தோன்றவில்லை.  காரணம் சிங்கள ஆதிக்கம் என்பது அத்தனை கொடூரமாக இருந்தது. இன்று வரையிலும் அது மட்டும் தான் இருக்கிறது.
militant_unity1.gif
ஆனால் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பிறகு மக்களும் இறந்தார்கள்.  கொண்ட கொள்கையாளர்களும் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு அடித்துக்கொண்டு இறந்தார்கள்.
 
"எனக்கு உயிர் முக்கியம் தான்.  ஆனால் உயிரை விட தமிழ் மக்களின் சுதந்திரம் பெரிது.   நீர்த்துப் போகச் செய்யும் எந்த செயல்பாடுகளையும் அனுமதிக்க மாட்டேன் "
 
ஒவ்வொரு கால காட்டத்திலும் தான் கொண்டு வாழ்ந்த கொள்கை சரி என்று கருதிக்கொண்டு பிரபாகரன் கொன்ற பட்டியல் மிக நீளம். காரணம் அவர் எதிர்பார்த்த " சுதந்திர சமரசம் என்பது மக்களுக்கு இறுதி தீர்வாக இருக்க வேண்டுமே தவிர இடைக்கால தீர்வாக இருக்கக்கூடாது.  நடந்த பாடங்கள் மொத்தமும் உணர்த்துவது இனி தமிழர்களும் சிங்களர்களும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் வாழ முடியாது. தனி நாடு தான் ஒரே தீர்வு"என்பதில் மொத்த உறுதியாய் இருந்தார்.
 
அப்போது வாழ்ந்த தந்தை செல்வா போன்ற தமிழ் தலைவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பங்களிப்புகளை செய்த போதிலும் எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தை அவரால் கொடுக்க முடியவில்லை.  அவரே பின்னாளில் தனிநாடு என்ற கோரிக்கை வைக்காமல் ஏமாந்து விட்டோம் என்று புலம்பியது தனிக்கதை.  பின்னால் வரும் அமிர்தலிங்கம் போன்றவர்களும் அதே நிலைமை.
 
உமா மகேஸ்வரன், அமிர்தலிங்கம், மாத்தையா என்று ஒவ்வொருவர் இறப்புக்கு பின்னாலும் ஆயிரம் காரணங்கள்.  சில காரணங்கள் தெளிவாக நமக்கு உணர்த்துவது பால பாடமான தமிழர்களின் ஒற்றுமையின்மையும் சுயநலமும்.
 
சுய நலத்தினால் விலை போய்க் கொண்டுருப்பவர்களையும், தரமற்றவர்களையும், கொள்கையாளர்கள் என்று சொல்லிக்கொண்டு கொலை கொள்ளை வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டுருப்பவர்களையும் பார்த்துக்கொண்டு இருந்தவரால் இவர்கள் இனிமேலும் இருந்தால் நம்முடைய பாதையும் கேள்விக்குறியாக கேலிக்குறியாக இருந்து விடும் என்பது அவருக்கு அவராலே உணர்த்தப்பட்ட நீதி வாக்கியம் நிறைய யோசிக்க வைத்தன் விளைவே சகோதர யுத்தங்கள்.  ரத்தச் சகதிகள்.
 
என்ன நடந்தது? ஏன் நடந்து?  ஆனால் அதற்கு முன்னால் பிரபாகரன் கடந்த வந்த 20 வருட வாழ்க்கையின் அடிப்படை சூத்திரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். "சர்வாதிகாரம் தான் சிறந்தது" என்று எந்த தலைவரை முன்னோடியாக தேர்ந்தெடுத்து பின்பற்றினார்.  அதிக கல்வி அறிவு இல்லாத அவரை எந்த வாசிப்பு அனுபவம் உயர்த்தியது போன்றவற்றை அவரது நேர்காணல்களை உணர்ந்து கொண்டு தொடர்வோம்...........
 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பதிவுக்கு......

தொடருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.