Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலசம் – கருணாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலசம் – கருணாகரன்

images-1.jpg



அன்று காலை தபால் அலுவலகத்துக்குப் போயிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரைப் பார்த்தேன். உள்ளே அதிகாரியோடு பேசிக் கொண்டிருந்தார்.

அவர் இருந்த கதிரையின் காலோடு அவர் எப்போதும் கொண்டு திரியும் தூக்குப் பை சாத்திவைக்கப்பட்டிருந்தது. அவருடைய அடையாளங்களில் இந்தப்பையும் ஒன்று. மிக முக்கியமான விவகாரங்கள் தொடர்பாக வெளிநாடுகளுக்கு அடிக்கடி போய்வந்த நாட்களிலும் அவர் இந்தப்பையைக் கைவிடவில்லை. அவருடைய தொண்டு ஆர்வம் காரணமாக வாய்த்த அந்தப் பயணங்கள் எத்தனை முக்கியமானவையாக இருந்தன? தன்னுடைய பயணங்களின் வழியாக, அங்கே நிகழும் சந்;திப்புகளின் வழியாக தன் காலடியில் தேங்கியிருக்கும் கண்ணீரைத் துடைத்துவிடலாம் என்று நினைத்திருந்தார்.

பயணம் முடிந்து ஊருக்குத் திரும்பிய பிறகு சந்தைக்கோ கடைத்தெருவுக்கோ அவர் வரும்போது சைக்கிளில் இந்தப்பையைக் காணலாம். இப்பொழுது அது சாய்ந்தபடி மடிந்திருக்கிறது. உள்ளே அதிகம் பொருட்கள் இல்லைப் போலும்.

ஒளி மங்கிய அந்த மண்டபத்தில் அவர் அதிகாரிக்கு எதிரிலிருந்து பேசிக் கொண்டிருந்ததை வாடிக்கையாளர் பகுதியிலிருந்து பார்த்தேன். காலை என்பதால் வாடிக்கையாளர் இடத்தில் சற்று அதிகமான கூட்டம். மெல்லிய பரபரப்பு.

இரண்டு வாரமாக வெளியூர்த் தபால்கள் வரவில்லை. மிஞ்சியிருந்த ஒரே போக்குவரத்துப் பாதையையும் படையினர் மூடி நேற்றுத்தான் திறந்திருந்தார்கள். அதனால் அவசர கடிதங்களைப் பெறுவதற்காகச் சனங்கள் அந்தரப்பட்டனர். அதிலும் பதிவுத் தபாலில் அனுப்பவேண்டிய விண்ணப்பங்களை சேர்க்கும் கடைசி நாள் கழிந்து விட்டதாக சில இளைஞர்களும் பெண்களும் பரபரத்துக் கொண்டிருந்தார்கள்.

அது பரீட்சையோ அல்லது வேலை வாய்ப்பாகவோ இருக்கலாம். இப்படி எல்லாவற்றுக்கும் அலைய வேண்டியிருக்கிறதே என்ற எரிச்சல் அவர்களுக்கு. சலிப்போடு பேசிக் கொண்டனர். ஒன்றுமே செய்ய முடியாத நிலையிலிருக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தம் அவர்களுடைய முகத்தில்; தெரிந்தது. அதனடியில் வன்மம் நிறைந்த கோபம் படிந்திருந்ததை கண்கள் காட்டின. வருவது வரட்டும் என்ற நிலையில் படிவங்களைப் பூர்த்தி செய்து அஞ்சலிட்டார்கள்.

என்னுடைய வேலை முடிந்த பிறகு அவருக்காகக் காத்திருந்தேன். அவர் இன்னும் அதிகாரியோடு பேசிக் கொண்டேயிருந்தார். காலை நேரம் என்பதால் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்க முடியாது. தலைமை அதிகாரிக்கு வேறு வேலைகள் இருக்கும். அதனால் ஒரு பத்து நிமிடத்துக்குள் அவர் எப்படியும் வெளியே வந்தே ஆகவேணும். ஆனால், இந்தச் சந்திப்பு தனிப்பட்டது. நட்பு ரீதியானது என்பதால் சிலவேளை தாமதிக்கலாம் என்றும் எண்ணினேன்.

அது போரினால் உருக்குலைந்த கட்டிடம். மேற்பகுதி முற்றாகச் சிதைந்து போயிருந்தது. இரண்டு மாடிகளில் ஒன்று முற்றாகவே இல்லை. சுவரில் எழுதப்பட்டிருந்த ‘பிரதம தபால் கந்தோர்’ என்ற எழுத்துகள் மங்கிப் புராதன அறிவிப்புப் போல தென்பட்டன. அதிலும் குண்டடிபட்ட காயங்கள். காயங்கள் தவிர வெடிப்புகள் வேறு.

இன்னும் அது திருத்தப்படவில்லை. மண்ணெண்ணெய் வரும் பீப்பாய்த் தகரங்களை உருமாற்றி குறுக்குத்தடுப்புகள் போட்டு அதை இயங்கக் கூடிய அலுவலகமாக்கியிருந்தார்கள்.

பத்து நிமிசம் கழிந்திருக்கலாம். அவர் வெளியே வந்தார். கையில் அதே பை. நான் அவருக்கு எதிரே சென்றேன். அவரால் என்னை உடனடியாக அடையாளங் காண முடியவில்லை.

இவ்வளவுக்கும் நாங்கள் இரண்டு கிழமைக்கு முதலும் சந்தித்துப் பேசியிருந்தோம். அப்பொழுது அவர் பதினோராவது இடத்திலேயே இருந்தார். இப்பொழுது பன்னிரண்டாவது இடத்துக்கு இடம் பெயர்ந்து வந்திருக்கிறார்.

அவர் இருந்த இடத்திலிருந்து சனங்கள் அகதிகளாகி வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள். என்றபடியால் அவரும் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். இதனால் அவரைத் தேடிக் கொண்டிருந்தேன்.

இப்போது எங்கே வந்து தங்கிருக்கிறாரோ? என்னைக் கவனிக்காமல் ஏதோ ஆழ்ந்த யோசனையில் நடந்து கொண்டிருந்தார். களைத்த முகம். அதுவும் இந்தக் காலையில்.

அவருடைய கவனத்தைத் திருப்பும் விதமாக அழைத்தேன். நிமிர்ந்து பார்த்தவர் அடையாளம் கண்டு கொண்டார்.

‘கருணா’ என்றபடி திரும்பி வந்தார். மன்னிக்கக் கோரும் தோரணை தெரிந்தது.

கைகளைப்பற்றிக் கொண்டு ‘ எங்கே இருக்கிறியள்’ என்று கேட்டேன்.

கையை விரித்து ‘எங்கும் இல்லை’ என்றார். பழுத்துப் போயிருந்த கண்கள் கலங்கின. எனக்கு நாவில் தாகமேறியது. உடல் உள்ளே மெதுவாக நடுங்குவதை உணர்ந்தேன்.

நீர் கோர்;த்;த விழிகள் அவரைப் பேசவிடவில்லை. அவர் அழுது நான் ஒரு போதுமே பார்த்ததில்லை. அவருடைய மகன் இறந்தபோது கூட அவர் இந்த அளவுக்கு ஆடிப்போனதில்லை. தன்னுடைய ஒரு சிறு நீரகத்தையே மகனுக்குக் கொடுத்திருந்த போதும் அவரால் மகனைக் காப்பாற்ற முடியவில்லை. அந்த நிலையிலும் அவர் ஓரளவுக்குத் தெம்பாக இருந்தார். ஆனால் இப்போது இப்படிக் குலைந்து போயிருக்கிறார்.

‘வாங்கோ கருணா ஒரு இடத்தில இருந்து கதைப்பம்’ என்று ஆட்களற்றிருந்த அருகே நின்ற மரத்தடிக்கு அழைத்துச் சென்றார். அதிகம் தெரியாவிட்டாலும் தளர்ந்து போயிருந்தது நடை. சோர்வான குரலில் ‘என்னால் இதுக்கு மேல தாங்க முடியேல்லைக் கருணா’ என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுங்கினார்.

ஒவ்வொரு இடப்பெயர்வாக இதுவரையில் பதினொரு இடங்களுக்கு மாறி விட்டார். பிடுங்கிப் பிடுங்கி நட்டால் எதுதான் துளிர்விடும்? நிற்க முடியாத ஓட்டம். ஓடாது விட்டால் பலி. உயிரைக் கொண்டு எதுவரைதான் ஓடுவது? ஆனால் ஓடாமல் நிற்கமுடியாது. இனி ஓடுவதில்லை என்று தீர்மானமெடுத்தாலும் அப்படித் தரித்து விடமுடியாது. எல்லாமே அலைச்சல்தான்.

நோயாளியான மனைவியையும் அழைத்துக் கொண்டு தெரியாத இடங்களில் ஒவ்வொரு முறையும் குடியேறும்போது இதுதான் இனி நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டபோதும் அப்படி எதுவும் அமையவில்லை. இதற்குள் அவர் முக்கியமான பலவற்றையும் இழந்திருக்கிறார். ஒவ்வொன்றும் முக்கியமானவை. எந்த நிலையிலும் இழக்க முடியாதவை. போனவருசம் அவருடைய தோழியாகவே இருந்த மனைவியும் போய்ச் சேர்ந்து விட்டாள். ஆறு நாட்காய்ச்சல். மருந்துக்கு வழியில்லாத மருத்துவ மனையில் அழுவதற்கு மட்டுமே இடமிருந்தது. எத்தனை வருசப் பிணைப்பு?

படிக்கிற போதே ஏற்பட்ட நெருக்கம். எதிர்பாராதவிதமான உறவு அது. இப்போது நினைத்தாலும் அதிசயமாகவும் நம்பக் கடினமாகவும் இருக்கும். இருக்காதா பின்னே. படிக்கும் போது அவரையும் விட வயதில் கூடிய அந்தப் பெண் அவருக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுத்தாள். அந்தப் பழக்கம் பிறகு காதலாக மாறி நாற்பது ஆண்டுகள் நிலைத்திருக்கிறது. ஆனால் அந்தக் காதல் வெறுமனே பரவசத்தாலோ தனியே காமத்தினாலோ ஏற்பட்டதில்லை. அவருடைய வறுமையே அந்தப் பெண்ணை அவரோடு இணைத்து வைத்தது என்று சொல்லிருக்கிறார். அவர் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று அந்தப் பெண் விரும்பினாள். ஆனால் அதற்கு வசதிகள் இல்லை.

என்றபடியால் தானே படிப்பிக்கிறதாக அந்தப் பெண் தீர்மானித்தாள். தன்னுடைய மாதச் சம்பளத்தில் அவரை அவள் படிப்பித்தாள். வீட்டில் வந்த எல்லா எதிர்ப்புகளையும் கடந்து அவள் இதைச் செய்தாள். அதுவே பிறகு இருவருக்குமிடையிலான இணைவும் ஆனது. அது ஒரு யதார்த்தமாகி உறவாகி நாற்பது ஆண்டுகள் நிலைத்திருக்கின்றன. எந்த விளக்கத்திலும் நிற்காத அந்த உறவு இன்னும் அவருக்குள் தீயாகவும் குளிராகவும் கலந்து ஒருவித வாசனையோடிருக்கிறது. அந்த நினைவுதான் எல்லாத் துயரங்களின்போதும் அவரைத் தளர விடாமல் நிலைப்படுத்தியிருக்கிறது. இப்போதும் அவருக்கு அந்த உறவின் விளைவாயான நாற்பது ஆண்டுகளின் நிகழ்ச்சிகள் நினைவாகிப் பலமளிக்கின்றன. இதை அவர் என்னிடம் பேசும்போது உணர்ந்திருக்கிறேன். அவர் ஒரு தீராப்புதிராகவும் அதிசயமாகவும் தெரிந்தார்.

கடைசியாக அவரோடு நெருக்கமாக இருந்த ஃபாதரும் படையினரால் கொல்லப்பட்டு விட்டார். எதிர்பாராத கொலை அது. இந்தக் கொலையோடு அவர் நன்றாக ஆடிப்போனார். பள்ளித் தோழரைப்போல எப்போதும் அன்போடும் வாஞ்சையோடும் இருந்தவர் அந்த மதகுரு. நெருக்கடிகள் வந்த போதெல்லாம் ஃபாதர் ஆறுதலாக இருந்தார். பல சமயங்களிலும் உளவியல் ரீதியாக அவருக்குப் பலமூட்டினார்.

ஃபாதர் கொல்லப்பட்ட அன்று அரை மணிநேரத்துக்கு முன்னர் இருவருமே ஒன்றாக வண்டியில் பயணித்திருந்தார்கள். இடையில் வண்டி பழுதடைந்து விட்டது. அதனால் ஃபாதரை விட்டு விட்டு அவர் மட்டும் வேறு வண்டியில் வீடு திரும்பினார். வண்டியை திருத்துவதற்காக ஃபாதர் அதை எடுத்துக் கொண்டு காராஜ்ஜை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோதே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார் ஃபாதர். அதுவும் அன்று ஞாயிற்றுக் கிழமை. காலையில் தேவாலயத்தில் பூசையை முடித்த பிறகே இந்தச் சம்பவம் நடந்தது.

மனைவியை இழந்து தவித்தபோது பெரும் ஆறுதலாக இருந்தவர் ஃபாதர். இப்போது அவரும் இல்லை. தனிமை அவரைப் பிளந்தெறிந்து விட்டது. ஆனாலும் தான் ஆடிப்போய்த் தளர்ந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்;. தளர்ந்தால் தனக்கே இன்னும் நெருக்கடி என்ற தெரிந்ததால் முடிந்த அளவுக்கு தன்னை நிலைப்படுத்தும் பயிற்சியிலே கடுமையாக ஈடுபட்டிருந்தார்.

ஆனால் இப்போது அதெல்லாம் எங்கோ பின்னகர்ந்து விட்டன. நம்பிக்கையோ ஆறுதலோ தருவதற்கு என்னிடம் எந்த வார்;த்தைகளும் இருக்கவில்லை. எல்லாவற்றையும் சூழல் அள்ளிச் சென்று விட்டது. நான் எதுவும் சொல்வதற்கின்றி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எதைச் சொல்லி அவரை ஆறுதற் படுத்துவது? எல்லாவற்றையும் அறிந்தவர் அவர்.

‘கருணா என்னால் இனி எந்தப் பிரிவையும் தாங்கேலாது. போதும் இருவது வருசமாக ஒவ்வொண்டையும் இழந்திழந்து இப்ப கடைசிப் புள்ளிக்கு வந்திட்டன்’

அதற்கு மேல் அவர் பேசமுடியாமற் திணறினார். என்னாலும் அந்த நிலையில் அதற்கு மேல் ஒரு சொல்லைத் தானும் தாங்கமுடியாது என்று பட்டது.

ஆதரவாக அவருடைய கைகளைப் பிடித்தேன். ‘வாங்கோ வீட்டுக்குப் போகலாம்’ என்று அழைத்தேன். ‘போய்த்தான் என்ன ஆகப்போகிறது’ என்பதைப்போல சிரித்தார்.

‘இப்ப இருக்கிறதுக்கு ஒரு நண்பர் வீட்டில் இடமிருக்கு. வேண்டுமானால் பிறகு பார்த்துக் கொள்வோம். வந்த களை ஆறட்டும். இரண்டு மூண்டு நாள் பார்த்துப் பிறகு யோசிப்பம்’ என்றார். அங்கே இருந்து ஆறுதலாகப் பேசமுடியாது. வெயில் வெக்கையாகத் தொடங்கியது.

தபாலக வளாகத்தை விட்டு வெளியே வந்தோம். அந்த வெயிலிலும் தெருவில் கூட்டம் அதிகமாக இருந்தது. சில வண்டிகள் அகதிகளையும் அவர்களுடைய பொருட்களையும் ஏற்றிக் கொண்டு சென்றன. துயரத்தின் மிகப் பெரிய வலை படர்ந்திருப்பதாகப் பட்டது. எண்ணற்ற கண்ணிகள். அந்த கண்ணிகளில் ஒவ்வொருவரும் சிக்கியிருக்கிறோம். அந்த வலை எங்கே எல்லோரையும் கொண்டுபோய்ச் சேர்க்கப்போகிறது?

சந்தியின் ஒதுக்குப்புறத்தில் ஒரு மரத்தின் கீழ் வந்தபோது அங்கே சற்று இருக்கலாம் என்றார். அவருக்கு நிறைய எல்லாவற்றையும் பேச வேண்டும் போலிருந்தது. ஆனால் முடியவில்லை. களைத்துச் சோர்வாயிருந்த முகத்தைத் துடைத்துக் கொண்டார். சற்று நேரம் மௌனம். அதற்குள் ஏராளம் எண்ணங்களும் நினைவுகளும் ஓடியிருக்க வேண்டும். தலையை மேலும் கீழுமாக ஆட்டியபடி சிரித்தார். எல்லாவற்றுக்கும் இறுதியில் என்ன அர்த்தம் என்பதாகப் பட்டது. நான் எதுவும் பேசவில்லை. அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதுபோல நாங்கள் ஒருபோதும் இருந்ததில்லை. காணும்போது பல விசயங்கள் பேசுவதற்கிருக்கும். வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்வார். அண்மையில் படித்த புத்தகங்களைப்பற்றிப் பேசுவார். அவர் இருக்கும் அயலில் குழந்தைகள் எப்படியெல்லாம் வியப்பூட்டும் படி குறும்பாகவும் கெட்டித்தனமாகவும் இருக்கின்றன என்பதை விவரிப்பார். அவர்களுடைய கெட்டித்தனங்களை பொதுவாகவே குழந்தைகளை நாம் அதிகம் உன்னிப்பாகக் கவனிக்கத் தவறிவிடுகிறோம் என்ற கவலை எப்போதும் இருக்கும். அதைப்பற்றி நிறையச் சொல்வார். ஆனால் இப்போது எதைப்பற்றியும் பேசாமல் இப்படி அமைதியாக இருக்கிறார். எதைப்பற்றியும் கதைத்துத்தான் என்ன ஆகப்போகிறது என்று நினைத்திருக்கலாம். அல்லது இதையெல்லாம் இன்னும் என்னால் பேச முடியாது என்று கருதியுமிருக்கலாம். மௌனம் வளர்ந்து சென்றது. நான் எதுவும் பேசவில்லை. எங்கிருந்து பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாத குழப்பத்திலிருந்தேன்.

சற்று நேரத்தின் பின் அவரே பேசினார். ‘கருணா எனக்கு எல்லாமே போதும் என்றுதான் படுகுது. இனி நான் என்னதான் செய்யப்போறன். இன்னும் பிரிவுகளைத் தாங்கக் கூடிய சக்தி என்னிடமில்லை’

மனதில் வைராக்கியம் பிறந்து விட்டது என்ற தொனி அந்தப்பேச்சில் தெரிந்தது. தெளிவாகச் சொற்கள் வந்தன. அவருடைய பேச்சின் அமைதி அப்படியே இருந்தது. ஆனால் பேசும் விவகாரங்கள் மாறிவிட்டன.

அவரையிட்டு ஒரு வித அச்சம் தோன்றியது. என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிலைமை தோன்றும்போது ஒரு வித கலக்கம் பிறக்குமல்லவா! அப்படியான நிலையில் இருந்தேன். அச்சத்தால் என் உதடுகள் உலர்ந்திருப்பதை உணர்ந்தேன்.

என்னுடைய நிலைமையை அவர் உணர்ந்திருக்கலாம். ‘ஊரில வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது திண்ணையில் இருந்து கொண்டு ‘யாரது பஞ்சுவா அப்பம் வாங்கி வந்தாயா’ எண்டு குஞ்சியாச்சி கேட்பா. ‘வடை வாங்கி வந்தாயா பஞ்சா?’ எண்டு பெரியப்பு கேட்பார். ‘வெற்றிலைக்குக் காசு தாடா பஞ்சு’ எண்டு உரிமையோடு அதட்டுகிற தம்பு மாமாவையெல்லாம் விட்டுப்போட்டு இப்பிடிப் பரதேசியாய் அலையுறன்’

அவர் விம்மினார். ‘ஊரில் வீடு வாசலை மட்டும் இழக்கேல்ல கோயில்; குளத்தை மட்டும் விட்டுப்போட்டு வரேல்ல. மனிசரை வளத்த பிராணியள சேத்த பொருள் பண்டத்தை மட்டுமில்ல எல்லாத்தையும் தான் விட்டிட்டு பிரிஞ்சிருக்கிறன். எங்க கோயில் மணியைக் கேட்டாலும் எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற சிவன் கோயில் மணி எண்டுதா நினைச்சுக் கொண்டிருந்தன். என்னை நானே ஏமாற்றியிருக்கிறன். ஏமாற்றத்துக்குத் தண்டனை இப்ப கிடைச்சிருக்கு’

என்னுடைய மௌனத்தின் மீது அவருடைய வார்த்தைகள் அழுத்தமாகப் பதிந்து கொண்டிருந்தன. வெயில் உலர்ந்து கொண்டிருந்தது. வெண் முகில்கள் எங்கே போவதென்று தெரியாமல் வானத்தில் இறுகிப் போயிருந்தன. காற்றில்லை.

‘அந்தப் பிரிவை எல்லாம் தாங்கினன். அதுக்குப் பிறகு வந்த எல்லா இழப்புகளையும் தாங்கினன். ஆனால் இனி எந்தப் பிரிவையும் தாங்கக் கூடிய நிலையிலை இப்ப நானில்லை. கருணா நம்பமாட்டீங்கள் கடைசி ஆறுதலாக இருந்த ஆரதிக்குட்டியை விட்;டிட்டு வந்திருக்கிறன் இப்ப. ‘தாத்தா என்னை விட்டிட்டுப் போறியளா தாத்தா நானும் வாறன் நானும் வாறன் தாத்தா’ என்று ஓடிவந்து சைக்கிளில அந்தப்பிள்ளை அந்தச் சின்னன் ஏறிச்சுது. நான் அதை எப்பிடி விட்டிட்டு வருவன்? சொல்லுங்கோ கருணா’ உடைந்து குலைந்தார்.

என் மனதில் ஏராளம் வார்த்தைகள் குவிந்தன. ஆனால் ஒரு வார்த்தையைக் கூட வெளியேற்ற முடியாமல் தவித்தேன்.

‘அந்தச் சின்னனைக் கூட்டிக் கொண்டு நான் எங்கே போவேன்? அதை எப்பிடிப் பார்ப்பேன். கடவுளே கூட்டிக் கொண்டு வராமல் விட்டுப்போட்டு அதை இனி எப்பிடிப் பார்ப்பேன்?’ என் கண்களை ஆழமாக உற்றுப் பார்த்தார். அவருடைய கேள்வியின் கூர் அதிலிருந்தது. தன்னுடைய எல்லைக்கோட்டிற்கு வந்து விட்டார். குரல் மாறிக் கம்மியது.

ஆரதி என்ற அந்தச் சின்னப்பெண்ணைப்பற்றி அவர் பல தடவை சொல்லியிருக்கிறார். அவருடைய இழப்புகளையும் பிரிவுகளையும் அந்தப் பெண்ணே நிரப்பி வந்தாள். அவருக்கான புதிய உலகத்தை அவளே சிருஷ்டித்திருந்தாள். அதில் அவர் மிகச் சுவாரஷ்யமாக இருந்தார். வினோதங்கள் நிறைந்த உலகம். எல்லா வேடிக்கைக்கும் பதிலாக அவளின் வேடிக்கைகள் இருந்தன. பெரும் ஈர்ப்பு சக்தியோடு அவள் இருக்கிறாள் என்பதை அவர் பலதடவை உணர்ந்திருக்கிறார். அந்த ஆச்சரியம் அவரை அவளை நோக்கி ஊக்கியது. அந்த ஆச்சரியத்தை அறிவதில் அதில் பயணிப்பதில் அவர் உள்ளுர ஒருவிதமான தீராத வெறியோடிருந்தார்.

‘எல்லாத் தாங்கு சக்தியும் முடிஞ்சுது. இனி என்னை நான் எங்குமே செலுத்த முடியாது. என்னிலும் எதுவும் இனித் தாங்க முடியாது. போர் எல்லாத்தையும் தின்றிட்டுது. அதின்ரை தீராப் பசிக்கு எல்லாமே இரைதான். இப்பதான் தெரியுது. ஒவ்வொரு பிரிவும் தனித்தனிப் பிரிவுகளல்ல. எல்லாமே ஒன்றோடு ஒன்று கலந்திருக்கு. இருவத்தைஞ்சு வருசமா இந்தப் பிரிவுத் துயர் வற்றாத ஆறாக என்னுக்குள்ள ஓடிக் கொண்டிருந்திருக்கு. இப்ப அது பொங்கியிருக்கு. பொங்கிக் கரையை உடைச்சுக் கொண்டு ஓடுது. சமனிலை கொள்ளிறதுக்கு சூழலிலயாவது வெளிப்பிருக்கோணும். ஆனா சூழலே இருண்டு போய்க்கிடக்கு. கண்ணீரை நெடுகலும் பார்த்துக் கொண்டிருந்தால் மனிசனுக்குப் பைத்தியம்தான் பிடிக்கும். அப்பிடிப் பைத்தியம் பிடிக்கேல்லை எண்டால் சந்தேகமேயில்லை. அவன் குரூபி. இரத்தவாடையை மறக்கிறதுக்கு நான் எவ்வளவோ முயன்று பாக்கிறன். ஆனால் அது புலனில ஆழமாகப் படிஞ்சு போயிருக்கு. என்னவோ ஒரு குற்றவுணர்வு என்னைக் கொண்டு கொண்டேயிருக்கு. தூங்க முடியவில்லை. இதுக்கெல்லாம் நான் என்ன சம்மந்தம்? ஒரு தொடர்பும் இல்லை எண்டாலும் என்னால் சமனிலை காணவே முடியவில்லை. முடியாது. கடவுளே.. போதும் எல்லாம்’

அவர் முடிக்கவேயில்லை. பெருக்கெடுத்துப் பிரவாகிக்கும் அந்த நீரூற்றை அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. நான் அமைதியாக அவரைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

‘என்னைத் தேற்றித்தேற்றியே வந்திருக்கிறன். ஆனால் இப்ப எங்குமே இல்லாத இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறன். இனி எங்க போய்த்தான் என்ன? போகாமல் விட்டுத்தான் என்ன?’

இது நிர்க்கதியா? அல்லது இனி அவரால் எதற்கும் முடியாத ஒரு முடிவுப்புள்ளிக்கு வந்து விட்டாரா? அவருடைய மனதில் மிஞ்சியிருந்த நம்பிக்கையின் ஒரு சிறு துளியும் வற்றிப் போய் விட்டதா எனத் தடுமாறினேன்.

திசைகளில்லாத ஒரு வெளிக்கு அவர் என்னையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாரா?

யுத்தத்தின் நீட்சி இப்படித்தான் நிராயுதபாணியாக்கி ஒவ்வொருவரையும் சிதைக்கிறதா? ஒவ்வொருவரையும் பலி கொண்டவாறு அது மாபெரும் சக்கரமாய் சுழன்று கொண்டேயிருக்கிறதா?

அம்புலன்ஸ் வண்டி அலறிக் கொண்டோடும் ஒலி கேட்டு அதிர்ந்தேன். அவர் எதுவும் தெரியாததைப்போல எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எங்கே அழைத்துச் செல்வதென்று தெரியவி;ல்லை. எங்கள் வீட்டுக்கு அவர் வருவார் என்று தோன்றவில்லை. இன்னொரு பிரிவைத் தாங்கள் கூடிய நிலையில் அவரில்லை. அதற்காக எந்த உறவையும் பலமாக்க அவர் தயாரில்லை.

இன்றைக்கு வந்த இந்த இடம் புதியது. முன்னெப்போதும் இந்த மாதிரி இடத்துக்கு வந்ததில்லை என்று தோன்றியது எனக்கு.


http://malaigal.com/?p=3602

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.