Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளியில் எல்லாம் பேசலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

9932523_p.jpg

            

 

 

 

 

 

வீட்டில் இருந்து புறப்படும்போது மனதில் ஒரு திருப்தி இருக்கவில்லை. ஏன் அந்த அதிருப்தி என்றும் விளங்கவில்லை. சில சமயங்களில் இப்படி நேர்ந்து விடுகிறது. அடிமனதில் உறைந்துபோன வாழ்வு அனுபவங்களின் வெளிப்பாடாக இருக்கலாம். மனதில் திருப்தியீனத்துடன் வெளியே செல்வதற்கு விருப்பமில்லை. அப்படிச் செல்லாமல் இருப்பதற்கும் இயலவில்லை. மிக முக்கியமான காரியம். அதனை எப்படித் தவிர்த்துவிட இயலும்? தவிர்த்து விட்டு பின்னர் அதற்கென்ன நியாயம் சொல்லிக் கொள்ளலாம்.
 
  அவன் மனம் அவனுக்குப் புரியவில்லை. மனதின் விந்தை விளையாட்டு இதுதான். இதனை விளையாட்டென்று சொல்ல இயலாது. மனதின் எச்சரிக்கையாகவும் அது இருக்கக்கூடும். அந்தச் சமிக்ஞை, முன்னெச்சரிக்கை என்ன என்று உணராது, மீறி நடந்து, ஆபத்தில் போய் வீழ்ந்துவிடவும் நேரலாம். ‘’ மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம். ’’ என்பது வாழ்வு அனுபவந்தான். ஆனால், எங்கும் அது பொருந்திவரத் தகுந்ததல்ல. வெளியே போகும்படி ஏவிக்கொண்டிருப்பதும் இந்த மனம்தான். அதேசமயம் புறப்படுவதில் அதிருப்திப்பட்டுச் சலித்துக் கொள்வதும் இந்த மனம்தான். இந்த மனதுக்கு எத்தனை முகங்கள்! எந்த முகம் உண்மையான முகம்! எது சத்தியத்தின் முகம்!
 
   ஒன்றும் புரியவில்லை! எல்லாம் புரியாத குழப்பமாகத் தோன்றியது. புரியவில்லை என்பதால் புறப்படாமல் இருந்துவிட முடியவில்லை. மோட்டார் சைக்கiளை எடுத்துக்கொண்டு வெளியே செல்லத் தயாராகின்றான். வீட்டில் இருந்து வெளிக்கேற் வரை வளுவளுப்பான சிவந்த சீமந்துத்தரை. அதன் இரண்டு பக்கங்களிலும் செழித்துப் பூத்துக் குலுங்கும் பூஞ்செடிகள். குளுகுளுத்து நிற்கும் வண்ண வண்ணக் குறோட்டன்கள், அவைகள் எல்லாம் அவன் கவனிப்பின் பூரிப்புகள். மலர்ச்சிப் புன்னைகைகள். நித்தமும் மாலை நேரம், விடுமுறை நாட்கள் அவன் அவைகளுடன் கழிப்பான்.
 
அவைகள், அவனுக்கு, அவன் செல்லக் குழந்தைகள் போல. அவன் புறப்பட்டு வெளியே போகும் சமயங்களில் மெல்ல மெல்ல நகர்ந்து நகர்ந்து அந்தப் புஸ்ப எழிலை  ஆவலுடன் கண்டுகளித்த வண்ணம் செல்வான்.
 
   வீடு விட்டுப் புறப்படுகையில் மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மனம் நிறைந்திருக்க வேண்டும். அதுதான் அவன் மனதின் நாட்டம். அந்த மகிழ்வு, நிறைவுகளை அவன் வளர்க்கும் அந்தப் பூஞ்செடிகள்  அவனுக்குத் தரும். அதற்கு அப்பாலும் அவன் மனம் நாடுவது இன்னொன்றை. மனதின் அந்தரங்கம் அது. மனைவி வெளியே வர வேண்டும் அவள் கேற்றைத் திறந்து, மலர்ந்து நின்று வழியனுப்பி வைக்க வேண்டும். அவள்தான் மனதின் முழு நிறைவு. மனதுக்கு நிறைவு பூஞ்செடிகளா? அல்லது அவளா? அவளாகத்தான் இருக்க வேண்டும்.
 
   அவன் மோட்டார் சயிக்கிள் மெதுமெதுவாக ஏன் நகர்ந்து கொண்டிருக்கின்றது? வேலையும் கையுமாக உள்ளே இருக்கும் அவள் வந்துசேர வேண்டுமல்லவா! மலர்களை, செடிகளை இரசிப்பதாக உண்மையில் அவளை மனம் தேடுகின்றது. அவள் மலர்ந்த மனதில் மணம் பரப்பும் பூஞ்செடியா? அல்லது பூங்கொடியா? அவள் இன்னும் வந்து சேரவில்லை. அவள் வருகையை எதிர்பார்த்து மலர்களை அனுபவிப்பதாக எவ்வளவு நேரம் பாவனை பண்ணிக் கொண்டு நிற்கலாம்? சில சமயங்களில் அவள் அப்படித்தான். அவனோடு பிணக்கு என்றால் அவள் வீட்டுக்கு வெளியே வராமல் இருந்து அவனைப் பழிவாங்குவாள். அந்த நாள் அவன் முற்றாக குழம்பிப்போவான். அது கரிநாள். அவனுக்கு அப்படியொருமனம்.
 
  அவள் வந்து கேற்றைத் திறந்து விடுகின்றாள். அவள் முகத்தில்வழமையான மலர்ச்சி இல்லை அதிகாலை புலர்ந்து பனித்துளியில் நனைந்து சொட்டும் புஸ்பமாக அவள் வந்தனமில்லை. கொட்டும் வெயில் காங்கை தாங்காது ஈரம் உலர்ந்த பூவாக அவள் தோன்றுகின்றாள். அவன் குறிப்பாக அவள் முகம் நோக்குகின்றான். அவள் உதடுகள் லேசாகப் பிரிகின்றன. அது மகிழ்ச்சியின் மலர்வல்ல. அவள் உதடுகளில் செத்துக் கிடந்தது அந்தச் சிரிப்பு. அவளுக்கு மனம் மலரா முகம். செத்துப்போன புன்னகைதான் அவள்.
 
  விடுமுறை தினம் என்றால் அவளுக்கு ஒரே குஷி. மோட்டார் சயிக்கிளில் அவன் பின்னால் ஏறி அமர்ந்திருக்க வேண்டும். நகைக்கடை, சேலைக்கடை, மரக்கறிச் சந்தை,    மீன் சந்தை, இறைச்சிக் கடை, கருவாட்டுக்கடை… இடையிடையே கோவில்கள் என ஏற்றிச் செல்ல வேண்டும். அதில் அவளுக்கொரு உல்லாசம், ஆனந்தம்;. சமையல் சாப்பாடு என்று குடும்பத்துக்காக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு இவையெல்லாம் வேண்டும் தேவைகள்தானே. கணவனுடன் இணைந்து ஒன்றாக வெளியில் செல்வதில் மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சி! அவன் சில சமயம் சோம்பல் பட்டால் அவள் விட்டு வைக்கமாட்டாள். அவளை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவே அவன் சலிக்காமல் புறப்படுவான்.
 
  அந்த மகழ்ச்சி இன்று தனக்கில்லை என்பதனாலா அவள் முகம் சற்று வாடிப்போனது? ஒரு மனதின் சாகசங்களை எல்லாம்  எப்படி இன்னொரு மனது ஊகித்து உணர்ந்து கொள்ளலாம்?
 
  எதற்கும் ஒரு வார்த்தை அவளிடம் கேட்டு வைக்கலாம். ஆனால், அவள் உள்ளத்தைச் சீண்டி அவளுக்குள் இருப்பதை வெளிக்கொண்டு வருவதில் என்ன இலாபம்? வலிந்துபோய் வீண் தொல்லைகளைத் தேடிக் கொள்ளக் கூடாதென மனம் எச்சரிக்கிறது. அவன் எப்பொழுதும் அப்டித்தான்  பிரச்சனை கண்டு விலகிக் கொண்டு விடுவான். இப்பொழுது மனமகிழ்ச்சியுடன் வீட்டில் இருந்து போகவேண்டும். அதற்கு அவளை மகிழ்விக்க வேண்டும். அவளை நோக்கி உயிர்ப்புடன் ஒரு புன்னகை அவளுக்கு கொடுத்து விட்டு, கேற்றைத்தாண்டி அவன் வெளியே வருகின்றான்.
 
  அவன் பிறந்த வீடு நோக்கி மோட்டார் சயிக்கிள் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவன் மனம் அவனைப் பின் தள்ளிவிட்டு அவளது காய்ந்த முகம்… செத்த சிரிப்பு என நினைவுச் சூழலில் அலைகிறது.
 
  அவன் சகோதரி குடும்பத்துடன் வாழுவதற்குப் போதுமான குடிநிலம் வேண்டும். அவர்கள் வீட்டோடு சேர்ந்த நான்கு பரப்பு நிலம் பணம் கொடுத்து வாங்க வேண்டும். அந்த நிலத்தில் வசதியாக அவளுக்கு வீடு ஒன்று கட்டிக் கொடுக்க வேண்டும்.  சுவிசில் இருந்து வந்து வீட்டில் தங்கி நிற்கும் அண்ணா அதற்கான செலவுகளைச் செய்ய தயாராக இருக்கின்றார்.
 
  இந்த நிலத்தின் உடைமையாளனை முதலில் போய்ச் சந்திக்க வேண்டும். விலைவாசி பேச வேண்டும். அண்ணா அதற்காக அவனை வரச் சொல்லி இருக்கின்றார். அவளுக்கும் அது தெரியாமலில்லை. ஆனால், அதுதான் அவள் முக வாட்டத்திற்கு காரணமோ! அந்தச் செலவுகளில் ஒரு பகுதி அவன் தலையில் விழுந்த விடக் கூடுமென அவள் மனம் அஞ்சியிருக்கக் கூடும். அவள் மன அச்சம் நியாயமானது. மூன்று பெண்களை கரை சேர்க்க வேண்டுமென்ற கவலை இருக்காதா அவளுக்கு?
 
  ஓ...வல்லை வெளி வந்து விட்டது. இளம் பருவ வாலிப வனப்பில் நண்பர்களுடன் சேர்ந்து வல்லைப் பாலத்தின் மேல் நின்று தூண்டில் போட்டு மீன் பிடித்ததும், தென்னைத் தோப்பில் களவாக இளநீர் பறித்துக் குடித்ததும், உப்பு விளையும் காலத்தில் உப்பள்ளிச் சேர்த்ததும்...என உல்லாசமாக திரிந்த இடம். தொண்டமான் உப்பாறு நீண்டு கிடக்கும் பரந்து விரிந்த பொட்டல் வெளி. இந்த வெளிக்குள்ளும் இத்தனை உல்லாசங்கள் கொட்டிக் கிடந்தனவா? அவையாவும் இப்பொழுது எங்கே தொலைந்து போயின? வாலிப வனப்புடன் அவைகளும் மறைந்து மங்கிப்போய் விட்டனவா? வாலிபம் அழிந்து போன இடைக்காலத்தில் இந்த வெளியில் எத்தனை பயங்கரங்கள். எப்பொழுதும் உயிர் அச்சம்! யுத்தக் கெடு பிடியில் மடிந்து போன மனித உயிர்கள்.
 
  இப்பத்தான் என்ன! வாகனங்கள்...வாகனங்கள் எனப் போக்குவரத்து நெரிசல். கரணந் தப்ப வேண்டாம். கவனம் தப்பினால் போதும் நிச்சயம் அது மரணம். சோதனை இல்லாத  காவலரண்கள் மீது வெறுப்பில்லை. மானமாக, மரியாதையாக மனிதன் போய் வரலாம். புதிய வல்லைப் பாலத்தின் மேலே மோட்டார் சயிக்கிளில் ஏறி சிலுசிலு என ஓடிச் செல்வதில் புதுமையான ஓர் இதம்.
 
  அண்ணா அவனை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றார். அவன் படலை திறந்து சயிக்கiளை உள்ளே கொண்டு செல்ல இயலவில்லை.  வளவுக்குள் போவதற்கு இயலாத இட்டு முட்டு. கையளவு நிலத்தில் ஒரு வீடு. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த இடம். அவர்கள் பிறந்த வளர்ந்த மண். அண்ணா சுவிசில் இருந்து வந்து ஒருவார காலமாக அங்கு தங்கி இருக்கின்றார். அவர் இங்கிருந்து சுவிஸ் போய் பத்தாண்டுகள். அவர் குடும்பத்தை அங்கு அழைத்துக் கொண்டு விட்டார். இப்ப தன் உறவுகளைப் பார்த்துப் போக, சகோதரிக்கொரு வீடு கட்டிக் கொடுக்க இங்கே வந்திருக்கின்றார்.
 
  மோட்டார் சயிக்கிளைப் படலைக்கு வெளியில் தெரு ஓரத்தில் நிறுத்திவிட்டு அவன் உள்ளே போகின்றான். அந்த ஓலைக் குடிசைக்குள் அண்ணா மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருக்கின்றார். அவருக்கு எந்த அசௌகரியமும்  இருப்பதாகத் தெரியவில்லை. பிறந்த மண்ணில்….சொந்த வீட்டில்… வாழ்வதில்தான் என்ன சுகம்! அந்த இன்பம் அவர் அனுபவித்துக் கொண்டிருப்பது அவரது முகம் சொல்லாமல் சொல்லுகிறது.
 
  அவனைக் கண்டு ’’போவோமா’’ எனப் புறப்படுகின்றார். காலை ஒன்பது மணி பிந்தாமல் நிலச் சொந்தக் காரனைப் போய்ச் சந்திக்க வேண்டும். ஒன்பது பிந்தினால் அடிவளவுக் கள்ளில் கொஞ்சம் கொஞ்சமாக அவர் மூழ்க ஆரம்பித்து விடுவார். அதன் பிறகு அவரைக் கண்டு பேசப் போனால் அவர் குலப் பெருமை…  அரச உத்தியோகம் துறந்த தமிழ்ப் பெருமை எல்லாம் அவர் வாயினால் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் கேட்கவேண்டும். கள்ளுக்கு இசைவு கதை என்பாhகள். அந்த உண்மையை அவர் சொல்லிச் சொல்லி நிரூபித்துக் கொண்டிருப்பார். அந்தக் கதைகள் எல்லாம் அவர்கள் ஏன் கேட்கவேண்டும்.
 
  அவன் மோட்டார் சயிக்கிளை எடுக்கின்றான். அவன் பின்னால் வந்து அண்ணா அதில் ஏறிக்கொள்கிறார். அவர்கள் வீட்டு ஒழுங்கைப் புழுதி, கல், மேடு பள்ளம் எல்லாம் தாண்டி ஓடிச் சென்று சற்று நேரம் கழிந்து நேர்த்தியான தார் போட்ட தெருவில் அந்த வீட்டுப் படலையில் வந்து தரித்து நிற்கிறது. அந்தப் படலை கோயில் கதவுபோல, வயிரம் பாய்ந்த மரத்தினால்  செய்யப் பெற்ற பழைய காலச் சங்கடப் படலை. சராசரியான ஒரு மனிதனால் இழுத்துத் திறக்க  இயலாத கனதியான படலை. படலையின் இரு பக்கங்களிலும்; கறுத்துப் பாசி படர்ந்த தெரு ஓரக் கற்சுவர்கள். அந்தச் சுவர்களுப் பின்னே பரந்த வளவு. அந்த நிலப் பரப்பின் மத்தியில் அந்த தெருவோரச் சுவர் போலப் பழைய ஒரு வீடு. அந்த வீட்டுக்கும் வெளி மதிலுக்கும் இடையே பரந்த முற்றம். முற்றத்தில் இரண்டு மாமரங்கள், ஒரு பலா, கொய்யா, தென்னை, பனை எனச் செறிந்து வளர்ந்த பயன்தரு தாவரங்கள். இவைகள் மத்தியில் அந்த வீடு பழைய காலக் கோடடை போலக் காட்சி அளிக்கிறது.
 
  வீட்டு சங்கடப் படைலைக்கு வெளியே தெருவில்  சற்று நேரம் தாமதித்து நின்றார்கள். மோட்டார் சயிக்கிள் வந்து தரித்து நிற்கும் சத்தம் கேட்டு வீட்டு முற்றத்தில் நின்று நாய் ஒன்று குரைக்க ஆரம்பித்தது. நாயின்  குரைப்பொலி கேட்டு வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே வந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் தொடர்ந்து தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள். நாய் ஓயாமல் குரைத்துக் கொண்டு நிற்கிறது.  இப்ப என்ன செய்யலாம்? தெருவில் நின்று கொண்டிருக்க இயலாது. உள்ளே பார்த்துக் குரல் கொடுக்க வேண்டியதுதான். எப்படி அழைப்பது? ‘சேர்’ என்று ஆங்கிலத்தில் யாரையும் அழைக்கலாம். ஆனால் ‘ஐயா’ என்பதன் பரிமாணங்கள் பல! யாழ்ப்பாணத்து ‘ஐயா’ சாமானியமானவரல்ல. பாரம் பரியமான ‘ஐயா’ வைச் சொல்லி அழைப்பதற்குத் தயக்கமாக இருக்கிறது. இப்ப உள்ளே பார்த்துக் குரல் கொடுப்பது யார்? இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சுணங்கி நிற்கின்றார்கள். இனி வேறு வழியில்லை என்ற நிலை. அண்ணா குரல் கொடுக்கின்றார்.  ‘’ஐயா...ஐயா…ஐயா’’ ஓர் அசுகையுமில்லை. சற்றுப் பலமாக மீண்டும் குரல் கொடுக்கிறார். நாய் ஆதாளி போடுகிறது. அங்கும் இங்கும் பார்த்து ஓடுகிறது. என்ன செய்வது? காரியமாகவேண்டும். ’’வா...உள்ளே போவம்…’’ அண்ணா சங்கடப் படலையைப் பிடித்து மெல்ல   இழுக்கிறார்.   
 
‘’ஆரது…?    அங்கே வெளியே நில்லுங்கோ 
வாறன்!’’
 
  வீட்டுக் கதவைத் திறந்த வண்ணம் மிடுக்கான அவர் குரல் உள்ளே இருந்து ஒலிக்கிறது. ‘’டேய் போ உள்ளுக்கு!’’ நாயை அதட்டுகின்றார். அது வாலை மடக்கிக் கொண்டு திறந்து கிடக்கும் கதவுக் கூடாக வீட்டுக்குள்ளே ஓடுகிறது. அவர் விறு விறுவென்று நடந்து வந்து சங்கடப் படலையை இழுத்து திறந்து கொண்டு தெருவுக்கு வருகின்றார். அவர் அரையில் கறுத்த கரையிட்ட நான்கு முழ வேட்டி, தோள் மீது பச்சை வண்ணக் கைத்தறிச் சால்வை, நெற்றியில் அழுந்திப் பூசிய திருநீறு என்பற்றோடு முகத்தில் விழுந்த சுருக்கங்களுமாய்த் தோன்றுகின்றார். 
  
  தெரு ஓரத்தில் இருவரும் நின்று கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இருவரையும் விழிகளை அகலத் திறந்து அதிசயமாக அவர் பார்க்கின்றார். கைமுட்டச் சட்டை, கால்முட்டக் களிசான், காலில் சப்பாத்து, மடிப்புக் கலையாத உடுப்பு, ஒழுங்காக வாரிவிடப்பட்ட கேசம். படித்தவர்கள் பதவிகளில் இருப்பவர்கள், பணவசதி படைத்தவர்கள் பெரிய குடும்பத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்  முதல் பார்வையில் அவர் தீர்மானித்து விடுகின்றார். அவர்களை இப்படி தெருவில் நிறுத்தி இருக்கக் கூடாதென அவர் உள்ளம் குறுகுறுக்கிறது. ஆனாலும்  ‘ஆரென்று அறியாமல்…’ என எண்ணிக் கொண்டு கண்களைக் கூசி உதட்டைப் பிதுக்கி, நெற்றியைச் சுருக்கி, மேலும் கீழும் பார்த்து இருவரையும் நோட்டமிட்ட வண்ணம் அவர்கள் இருவரையும் படலைக்கு வெளியே தெருவில் நிறுத்தி வைத்துப் பேசுவது தவறாக இருக்குமோ? என ஒருகணம் மனம் விசனப்படுகிறது. இப்ப என்ன வந்து விட்டது? பிறகு உள்ளே அழைத்துக் கொண்டு போகலாம் என மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு ‘’தம்பியவை நீங்கள் ஆரைத் தேடுகிறியள்?’’ மிக அன்போடு பணிவாக வினாவுகிறார்.
 
‘’உங்களைத் தான் தேடி வந்தனாங்கள்.’’
 
‘’என்னையோ?’’
 
அவருக்கு அதிசயமாக இருக்கிறது. தெளிவாக ஒன்றும் விளங்காமல் அந்தரப்படுகின்றார்.
 
‘’தம்பியவை எங்கே இருக்கிறநீங்கள்?’’
 
மிக மரியாதையாக அவர்களை நெருங்கி வந்து நின்று கேட்கின்றார்.
 
‘’இந்த ஊரிலே தான்’’
 
‘’இந்த ஊரிலேயோ….? புத்தூரிலேயோ.. இதென்ன எனக்குத் தெரியாதா…?’’
 
அவர் தன்னை மறந்து அதிசயத்தில் வாயைத் திறந்து கொண்டு நிற்கிறார்.
 
‘’நான் முந்தி விதானையாராக இருந்தனான்.’’
 
‘’எங்கே?’’
 
‘’இந்தப் பகுதிக்கு’’
 
‘’எனக்கு ஒண்டுமாத் தெரியேல்லைத் தம்பி வர வர மறதி கூடிப்போச்சு’’ அவர் மேலும் குறுகிப் போகிறார்.
 
‘’சின்னட்டியின்ரை’’
 
‘’அட...அட…இவன் கள்ளுக் காரச் சின்னடடியின்ரை மோனே நீ?’’ சட்டென்று அவர் நிமிருகின்றார். ‘’இதைச்  சொல்லுறதுக்கு ஏன் சுத்தி வளைக்கிறாய்?  நீ எங்கே விதானையாக இருந்தனீ? கிராம சேவகர் வேலை பார்த்தனீ. சேவகர் வேறை, விதானை எண்டது வேறை. என்ரை பேரன், தாய்மாமன் எல்லோரும் விதானைமார். தகப்பன் வழிப்பேரன் மணியகாரன். அதெல்லாம் உங்களுக்கு தெரியாமல் இருக்காது. அது சரி...உன்னைக் கனகாலம் கண்ணில காணயில்ல?’’
 
  அவர் பேசப் பேச அவர்கள் இருவர் முகமும் படடென்று கறுத்துச் சோர்ந்து போகிறது. அண்ணா தான் மனதில் உண்டான உளைச்சலை வெளியே காட்டிக்கொள்ளாமல் ‘’சுவிசுக்குப் போயிருந்தனான்’’ என மெல்லிடுகிறார்.
 
‘’இதார் உங்கடை ஆக்கள் மாதிரித் தெரியயில்ல’’
 
‘’என்ர தம்பி’’
 
‘’தம்பியோ…? இவன் பொடியனை நான் ஒரு நாளும் காணயில்லை. என்ன செய்கிறான்?’’
 
‘’பாங் மனேஜர். வடமராச்சியில் கலியானம் செய்திருக்கிறார்.‘’
 
‘’உதென்ன உத்தியோகம்? நானுந்தான் உத்தியோகம் பார்த்தனான். அது போகட்டும்…இப்ப என்னத்துக்கு வந்தனீங்கள்;?’’
 
‘ எங்கடை வீட்டோட சேர்ந்த நிலம்…’’
 
‘’எடேய் தம்பியவை, நான் வித்துத் தின்ற சாதியில்ல கண்டியளோ?
 
‘’ நாங்கள் குடியிருக்கிறதுக்கு வசதியில்லை…’’
 
‘’ஓமோம்...நீங்களும் இப்ப வசதி பாத்திருக்கத் துடங்கி விட்டியல். அதில எங்களுக்கு அஞ்சு பரப்பு நிலம்  மலிவான விலைக்கு என்ரை தகப்பன் குடுத்தவர். அது போகட்டும். நீங்களும் வந்து நிற்கிறியள். நான் இப்ப என்ன செய்ய வேணும்?‘’
 
‘’வீட்டோடை சேர்ந்த நாலு பரப்பையும் தந்தால்…’’
 
‘’அதுதான் சரி. நீங்கள்  எங்கடை பிள்ளையள். அந்தக் காணியை உங்களுக்குத்தான் தர வேணும். வேறை  பக்கத்தாலையும் கேள்வி வந்தது. குடி இருக்கிற உங்களை ஒரு சொல்லுக் கேட்க வேணுமெண்டுதான் நினைச்சுpருந்தனான். அதுசரி விலை தலை என்ன மாதிரி?’’
 
‘’நீங்கள்தான் ஒருமாதிரிப் பார்த்துச் செய்யுங்கோ!’’
 
‘’ஊர் உலகத்திலே போற விலையைத் தந்தால் சரி‘’
 
‘’உள்ழூருக்கே நாப்பது நாப்பத்தைஞ் செண்டு போகுது’’
 
‘’உதென்ன சூடை விலை பேசுகிறாய்?’’
 
‘’நாங்கள் ஒரு ஐம்பது தரலாம்‘’
 
‘’ஓ அப்படியா?’’
 
‘’ஓம் ஐயா‘’
 
‘’ஒரு பரப்பு மூன்று லெட்சப்படி எண்டால் தருவன். வாங்கினால் நாலு பரப்பும் வாங்க வேணும். வேறு கதைக்கு இடமில்லை.‘’ அவர் அறிதியாகச் சொல்லி முடிக்கின்றார்.
 
  அண்ணாவும் அவரும் பேச அவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு நிற்கின்றான். அவன் மௌனமாக அப்படி நின்று கொண்டிருப்பது அவர் மனதில் எரிச்சலை மூட்டுகிறது. ‘’நீ என்ன பேசாமல் நிக்கிறாய்?’’
 
அவனைப் பார்த்து அலட்சியமாக முகத்துக்கு நேரே கேட்கின்றார். அவரை விழித்துப் பார்த்த வண்ணம் அவன் வாய் திறக்காமல் நிறகிறான்.
 
  அவன் வீட்டில் இருந்து புறப்பட்ட சமயம் அவன் மனதில் தோன்றிய அந்த அதிருப்தி இப்பொழுது பெருகிக் கொண்டிருக்கிறது. அவன் வாய் திறந்து ஏறு மாறாக எதனையாவது சொல்லி விடக்கூடாதென்னும் எச்சரிக்கை உணர்வுமனதில் எழ ‘’நான் மூத்தவன் தானே கதைக்க வேணும்‘’ என அண்ணா முந்திக் கொள்கின்றார்.
 
  ‘’சரி...சரி...வீட்டுக்குப் போய் யோசிச்சுக் கொண்டு வாருங்கோ! எல்லாம் பேசலாம் ‘’முடிவாக அவர் சொல்லிக் கொண்டு அந்தச் சங்கடப் படலையைப் பிடித்திழுத்து உள்ளே புகப் போனவர், திடீரென்று அது நினைவுக்கு வர, படலையைக் கைவிட்டு விட்டு, மீண்டும் அவர்கள் பக்ம் திரும்பி,‘’ நீங்கள் வந்து படலையிலே நிண்டு கூப்பிடுங்கோ, நான் வருவன்‘’ எனக் கண்டிப்பாகச் சொல்லி வைத்து விட்டு அந்த படலையைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்து திறந்து கொண்டு உள்ளே போகின்றார்.
 
  அவர்கள் இருவர் பாதங்களுக்கு கீழுள்ள நிலம் மெல்ல மெல்ல நழுவிப் போய்க் கொண்டிருப்பது போல அவர்கள் இருவரும் உணருகின்றார்கள்.
 
நன்றி 41  வது ஆண்டு மலர்
ஜனவரி 2006 (இலங்கை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.