Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்போது நடுக்கம் வந்துவிட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காமராஜர் சென்ட்!’
காங்கிரஸின் சர்வரோக நிவாரணி
ப.திருமாவேலன், ஓவியங்கள்: கண்ணா
 
 

நாற்பது ஆண்டுகால வரலாற்றில், முதன்முதலாக தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்போது நடுக்கம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி இருக்கும் திசையின் பக்கமே திரும்பவில்லை அ.தி.மு.க.. ஏதோ, அவர்களைப் பார்ப்பதே பாவம் என்பதைப்போல கழுத்தைத் திருப்ப ஆரம்பித்திருக்கிறது தி.மு.க.. இனி எந்த இறைத்தூதன் வந்து காங்கிரஸ் தலைவர்களை இந்தத் தேர்தலில் காப்பாற்றுவானோ தெரியவில்லை!

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனும், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பேசும் பேச்சைப் பார்த்தால், அத்தனை தொகுதிகளிலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி படைத்ததாக தங்கள் கட்சி இருக்கிறது என்ற கர்வம் தெறிக்கிறது. இந்தக் கர்வம் பாராட்டப்பட வேண்டியதே!

எந்தப் பெரியக் கட்சியும் வேண்டாம் என்று தங்கள் சொந்த பலத்தை நம்பி ஜெயலலிதாவும் கருணாநிதியும் போட்டியிடத் தயாராகிவிட்டதைப் போல, இந்தத் தேர்தலில் காங்கிரஸும் அப்படியரு முடிவை தமிழகத்தில் எடுக்க வேண்டும். முதன்முதலாகக் காலம் அப்படி ஒரு வாய்ப்பை தமிழ்நாடு காங்கிரஸுக்குக் காட்டுகிறது. தி.மு.க-வுடனோ, அ.தி.மு.க-வுடனோ கூட்டணி அமைத்து பத்துக்கும் பன்னிரண்டுக்கும் டெல்லித் தலைமையில் இருந்து 130 முறை பேச்சுவார்த்தை நடத்துவதைவிட, 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களே நிற்க ஒரு வாய்ப்பு இது.

40 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களைப் படக்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறோம். இதனால் முட்டி மோதி, அடித்துப் பிடித்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்க வேண்டிய சிரமம்கூட காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லை.

p36.jpg

இதுவரை கருணாநிதிக்கு வாக்கு கேட்டீர்கள், ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்டீர்கள். இப்போது முதன்முதலாக காங்கிரஸுக்கு வாக்கு கேட்கப்போகிறீர்கள். இதுவே கம்பீரமானது. யாருக்கு இது மகிழ்ச்சி தருமோ இல்லையோ... நிச்சயம் பெருந்தலைவர் காமராஜருக்கு மகிழ்ச்சி தரும்!

'தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று காமராஜர் சொன்னதுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகக் கூட்டத்தில் (2.7.1975) காமராஜர் பேசிய பேச்சை யாரும் சொல்ல மாட்டார்கள்.

'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு ஒட்டோ உறவோ இல்லை. இந்த இரு கட்சிகளோடு உறவு வைத்துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை’ என்று காமராஜர் பேசிய பேச்சுதான் அவரது 'மரண சாசனம்’ என்று அழைக்கப்படும். ஆனால், காமராஜர் உடல் தாங்கிய பேழையை சமாதியில் இறக்கியபோது, அந்த சாசனத்தையும் வைத்துப் புதைத்துவிட்டார்கள்.

p36a.jpg

1952, 57, 62, 67 ஆகிய நான்கு தேர்தல்களிலும் யார் தயவும் இல்லாமல் தனித்து நிற்கும் தைரியம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் இருந்தது. 1967-ம் ஆண்டு தேர்தலில் வாங்கிய மரண அடி, கட்சியை நிலைகுலைய வைத்தது. 1971-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதியுடன் கைகோத்தார் இந்திரா. அடுத்த தேர்தலில் (1977) அரவணைக்க எம்.ஜி.ஆர். வந்தார். 1980-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதியுடன் சேர்ந்து நின்றார்கள். அடுத்து நடந்த நான்கு தேர்தல்களிலும் (1984, 89, 91, 96) அ.தி.மு.க-வுடன் கூட்டணி. 1998-ல் தனித்துப் போட்டியிட்டு, 1999-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க-வுடன் ஐக்கியமானார்கள். 2004-ல் கருணாநிதியுடன் இணைந்தவர்கள், கடந்த தேர்தலிலும் (2009) அவரோடு இருந்தார்கள். இப்போதைய நிலை, ப.சிதம்பரம் வார்த்தைகளில் சொல்வதென்றால், 'காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது’!

காமராஜர் மறைவுக்குப் பிறகு எதிர்கொண்ட தேர்தல்களில் எல்லாம் (ஒரே ஒருமுறை தவிர) தி.மு.க. அல்லது அ.தி.மு.க. தோளில் ஏறிப் பயணம் செய்துவிட்டு, 'காமராஜர் ஆட்சியை அமைப்போம்’ என்றால், நம்புவதற்கு காமராஜர் என்ன ஏமாளியா?

p36b.jpg

'காமராஜர் ஆட்சியே லட்சியம்’ என்பதெல்லாம் சும்மா ஒப்புக்கு முழங்கப்படும் கோஷம். சிவகங்கையை ப.சிதம்பரத்துக்குத் தரவேண்டும், ஊட்டியை பிரபுவுக்கு ஒதுக்க வேண்டும், மயிலாடுதுறையை மணிசங்கர் அய்யருக்கு அளிக்க வேண்டும், சேலம் தங்கபாலுவுக்கு என்பதுதான் அவர்களின் லட்சியமாக இருக்கிறது. இந்தக் குறுகிய குணாம்சம்தான் 45 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை கடும் இருட்டில் வைத்துள்ளது.

மாநிலம் முழுக்கச் சிந்திக்காமல் தொகுதி எம்.பி-க்களாக இருக்கும் தலைவர்களைத்தான் டெல்லித் தலைமைக்கும் பிடிக்கிறது. 1980-ம் ஆண்டு தேர்தலில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த ப.நெடுமாறனுக்குச் சொல்லாமல் தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை இந்திரா முடித்தார். 'இது எனக்கு ஏற்பட்ட அவமானம்’ என்று தலைவர் பதவியையே ராஜினாமா செய்தார் நெடுமாறன். இப்படிப்பட்டவர்களை டெல்லி விரும்புவது இல்லை. 1996-ல் தமிழ்நாடே ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்தபோது, காங்கிரஸின் 90 சதவிகிதத் தொண்டர்கள் 'அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம்’ என்றபோது, 'வேண்டும்’ என்று முடிவெடுத்தார் நரசிம்மராவ். அவருக்குத் தலையாட்டினார் குமரி அனந்தன். டெல்லிக்கு இப்படியானவர்கள்தான் தேவை!

p36c.jpg

ல்லாக் கட்சிகளிலும், செல்வாக்கானவர் யார் என்று பார்த்து தலைவராக நியமிப்பார்கள். காங்கிரஸில் மட்டும்தான் செல்வாக்கு அடைந்துவிடாதவர்களாகத் தேடிப் பிடிப்பார்கள். ஒரு மனிதன் கோவையிலோ, கோவில்பட்டியிலோ, மதுரையிலோ, மன்னார்குடியிலோ தெரிந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. டெல்லி சோனியா வீட்டில், காங்கிரஸ் கமிட்டித் தலைமை அலுவலகத்தில், ராகுல் அலுவலகத்தில் யாரையாவது தெரிந்திருந்தால் போதும். அகமது படேல் தெரியுமா, ஜார்ஜுக்கு உங்கள் முகம் அறிமுகமா, குலாம் நபி ஆசாத் உங்களைப் பார்த்துச் சிரிப்பாரா... இந்த மூன்று தகுதிகள் இருந்தால் போதும். தமிழக காங்கிரஸின் மாநிலத் தலைவர் ஆகலாம்; மாநிலங்களவைக்கும் போகலாம்; மக்களவைக்கும் போகலாம்.

யாருக்காவது சந்தேகம் இருக்குமானால் தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், மாணிக் தாகூரைக் கேட்கலாம். இவர் பெயர் மாணிக்கம் தாகூரா, மாணிக் தாகூரா என்று காங்கிரஸ்காரர்களுக்கே தெரியாத நிலையில்தான் விருதுநகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சிவகங்கையில் பிறந்து, டெல்லியில் செட்டில் ஆனவருக்கு விருதுநகரில் சீட் கொடுக்கலாம் என்று காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்த புத்திசாலி, வரும் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்டால்... தைரியசாலி! வென்றால், அவரையே தமிழ்நாட்டின் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்கலாம். தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்காமல், டெல்லிக்கு ஓப்பன் டிக்கெட் வாங்கிக் குறுக்கு வழியில் போனவர்களால் கருணாநிதி, ஜெயலலிதா தயவால் ஒரு முறை எம்.பி., ஆக முடியுமே தவிர, காங்கிரஸை வளர்க்க முடியாது.

p36d.jpg

அதேபோல் காங்கிரஸைத் தரைமட்டம் ஆக்கியவர்கள், டெல்லியில் இருந்து வரும் மேலிடப் பார்வையாளர்கள். சல்மான் குர்ஷித், கமல்நாத், ரமேஷ் சென்னிதாலா, அம்பிகா சோனி, குலாம் நபி ஆசாத்... இப்போது முகுல் வாஸ்னிக் என்று டிசைன் டிசைனான குர்தாக்களை அணிந்தவர்களை அனுப்பினால் போதும்... காங்கிரஸ் வளர்ந்துவிடும் என்று சோனியாவும் ராகுலும் நினைக்கிறார்கள்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் சத்தியமூர்த்தி பவன் வரை இவர்கள் வந்து போவார்களே தவிர, தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு செல்வாக்கான இடம் எது, காங்கிரஸ் செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய இடம் எது என்று எதுவும் தெரியாது. ஆனால், இவர்களிடம்தான் தமிழ்நாட்டு நிலைமையை டெல்லித் தலைமை கேட்கிறது என்றால், உருப்படுமா?

p36e.jpg

கிரீஷ், கிருஷ்ணா என்ற இரண்டு பேரை, தமிழ்நாடு காங்கிரஸில் உள்ள இரண்டு சதவிகிதம் பேருக்குக்கூடத் தெரியாது. தமிழ்நாடு மாணவர் காங்கிரஸின் செயல்பாடு பற்றி கிரீஷிடமும், இளைஞர் காங்கிரஸ் பற்றி கிருஷ்ணாவிடமும்தான் ராகுல் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். கிரீஷ், ஒரு பேராசிரியர். கிருஷ்ணா, ஐ.டி. பொறியாளர். இருவரும் ஏதோ ஒரு மாநிலத்தில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். ராகுல் ஏதாவது கேட்டால், லேப்டாப் பார்த்துச் சொல்வார்கள். 2009-ம் ஆண்டு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் 14 லட்சம் பேர். 2012-ல் மீண்டும் அதனைப் புதுப்பித்தவர்கள் 5 லட்சம் பேர் என்றால், மீதம் உள்ள 9 லட்சம் பேர் எங்கே போனார்கள்? காங்கிரஸை விட்டு ஏன் விலகினார்கள்? இதில் 22 ஆயிரம் பேர் நிர்வாகிகள். ஆனால், திருச்சியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் எழுச்சி மாநாடு 600 பேர் அமர வசதியுள்ள மண்டபத்தில் நடந்தபோது, அதில் 300 பேர்தான் கலந்துகொண்டார்கள். மாணவர் காங்கிரஸுக்கு, தமிழ்நாடு முழுக்க சேர்ந்தது மொத்தமே ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர். இதன் தலைவராகத் தேர்வானவரே, கல்லூரியில் படிக்கவில்லை என்று புகார் கிளம்பி டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்றால், உறுப்பினர்களில் எவ்வளவு பேர் உண்மையானவர்கள்? உறுப்பினர்களாகச் சேர்ந்த இளைஞர்கள் கழன்றுகொண்டதற்கும், உறுப்பினர்களாக மாணவர்கள் சேராமல் போவதற்கும் என்ன காரணம்?

p36f.jpg

மிழ்நாட்டின் தலையாயப் பிரச்னைகள் எதற்கும் காங்கிரஸ் தலைவர்கள் கருத்துச் சொல்வது இல்லை. கருத்துச் சொன்னாலும், வெகுஜன மக்களின் சிந்தனைக்கு எதிராகப் பேசுவர். ஈழத்தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் தாக்கப்படுவது, மாணவர்கள் போராட்டம், கூடங்குளம், காவிரி, முல்லைப் பெரியாறு என எதற்கும் தமிழக நலன் சார்ந்து கருத்து அறிவிப்பது இல்லை. ப.சிதம்பரம் என்ன பேசினார் என்பது இருக்கட்டும். ஆனால், அவர் இலங்கைப் பிரச்னை பற்றி ஒரு கருத்தரங்கம் பேசலாம் என்று முடிவெடுப்பதற்கே ஐந்து ஆண்டுகள் ஆகின.

தமிழர்கள் நியாயம் பேசுவதைவிட ராஜபக்ஷேவுக்கு நோகாமல் பேசுவது சுதர்சன நாச்சியப்பன் போன்றவர்களுக்கு சுகமாக இருக்கிறது. விமர்சனத்துக்கும் விதண்டாவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் இளங்கோவன். ஞானதேசிகனுக்கு எல்லாமே கருணாநிதி எதிர்ப்புக் கண்ணாடிதான். 2009 தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸின் முக்கியத் தலைவர்களான தங்கபாலு, இளங்கோவன், மணிசங்கர் அய்யர், பிரபு... போன்றவர்கள் தோல்விக்குக் காரணமான ஈழத் தமிழர் பிரச்னையில்கூட டெல்லியின் மனமாற்றத்துக்குமான முயற்சிகளை இவர்கள் எடுக்கத் தயங்கினார்கள் என்றால், வேறு எதற்காகக் குரல் கொடுப்பார்கள்? ஓர் இனமே அழிந்தபோது கருத்துச் சொல்லாத ராகுல், ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக ஆர்வத்தோடு கருத்துச் சொல்வதன் பின்னணியும் அலட்சியமும்தான் கட்சியை அதலபாதாளத்துக்குக் கொண்டுபோய் விட்டுள்ளது.

ஆனால், 'தி.மு.க-வை அழுக்கு மூட்டை’ என்கிறார் இளங்கோவன். அழுக்கு மூட்டை என்பது ஊர் அறிந்ததுதான். எவ்வளவு அழுக்கானாலும் துவைத்து புதுத்துணியாக உடுத்தும் சாமர்த்தியம் கருணாநிதிக்கு இருக்கிறது. ஆனால், கந்தல் ஆடையாகிவிட்டதே காங்கிரஸ். கதர் துணி அணியும் பழைய காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியும்... கதர் துணி கிழிந்து தைத்தால், தைத்த இடத்தில் மறுபடி கிழியும். புதுச்சட்டை போடுவதைத் தவிர வேறு வழி இல்லை.

p36g.jpgதமிழ்நாடு காங்கிரஸும் புதுப் பாதையில் பயணிக்க வேண்டும். உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்கு இருக்கிறது என்பதை அறிய 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும்.

'தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுபவர்கள், ஏன் டெல்லி சென்று வருகிறார்கள்?’ என்று காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், பெரியவர் தி.சு.கிள்ளிவளவனிடம் கேட்டாராம்.

'டெல்லி ஆபீஸில் இரண்டு விதமான சென்ட் பாட்டில்கள் இருக்கும். கருணாநிதியுடன் கூட்டணி என்றால், அவருக்குப் பிடித்த சென்ட் எடுத்துக் கொடுப்பார்கள். ஜெயலலிதாவுடன் கூட்டணி என்றால், அவருக்குப் பிடித்த சென்ட் பாட்டிலை எடுத்துக் கொடுப்பார்கள். காங்கிரஸ் தலைவர் டெல்லி போவது சென்ட் பாட்டில் வாங்கத்தான்’ என்றாராம் அவர்.

காமராஜருக்குப் பிடித்த சென்ட் (அதாவது மரண சாசனமாகச் சொன்னது!) பாட்டிலை இந்த முறையாவது பயன்படுத்திப் பாருங்கள். இது இறுதிக் கட்டம். இல்லாவிட்டால், உயிர் காக்கும் ஆக்சிஜனுக்கு அலைய வேண்டி வரும்!

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90720

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.