Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லைட்டாப் பொறாமைப்படும் கலைஞன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லைட்டாப் பொறாமைப்படும் கலைஞன்

இசை

தினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் வரை அனைவரின் வாயிலும் வடிவேலுவின் வசனங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. இது மட்டுமல்லாது தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் பலரும் வடிவேலுவின் வசனங்களைத் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் இனத்தை மாளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு எரிபுகுந்த முத்துக்குமாரின் கடிதத்திலும் “இது வரைக்கும் யாரும் என்னத் தொட்டதில்ல” என்கிற வடிவேலுவின் வசனம் உண்டு.

இலக்கியவாதிகளுக்குத் தனிக்கொம்புண்டு என்றும் அவர்கள் தேவதூதர்கள் என்றும் நம்பிக்கொண்டிருந்த காலத்தில் வடிவேலுவின் வசனத்தை எடுத்தாண்டிருந்த ஒரு இலக்கியவாதிக்குக் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறேன். தங்களின் அமரத்துவம் வாய்ந்த எழுத்தில் ஒரு கோமாளி நகைச்சுவை நடிகனுக்கெல்லாம் இடம் அளிக்கலாமா என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். ஆனால் அக்கடிதம் அத்தருணத்தில் எனக்கும் முளைத்திருந்த ஒரு குட்டிக்கொம்பால் எழுதப்பட்டது என்பதை வடிவேலு சீக்கிரமே நிரூபித்துக் காட்டினார். தன் நகைச்சுவைகளின் பின்புலத்தில், அவர் தமிழ்வாழ்வை, தமிழ்மனத்தின் உளவியலை, அதன் நுட்பமான மனவோட்டங்களை, அபிலாஷைகளை நிகழ்த்திக் காட்டினார். சில சமயங்களில் வடிவேலு இதையெல்லாம் தெரிந்துதான் செய்கிறாரா என்று எனக்கு வியப்பாய் இருக்கும். ஆனால் ஒரு கலைஞன் எதையும் தெரியாமல் செய்துவிடுவதில்லை. ஒருவேளை அவனுக்குத் தான் என்ன செய்கிறோம் என்பதைத் துல்லியமாகச் சொற்களால் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அப்படி அவர் எதுவும் தெரியாதவருமல்ல என்பதற்கு ஆனந்தவிகடனில் சமஸிற்கு அவர் அளித்த நேர்காணலே சான்று. நான் என்னளவில் இந்நேர்காணலை இலக்கியம் என்கிற வகைமைக்குள்ளேயே வைக்க விரும்புவேன்.

2e7f9c881afc474cae9af850efed1db3.jpg

வடிவேலுவின் பெரிய வெற்றி என்பது அவர் நம் அன்றாடத்துடன் கலந்ததுதான். வெற்றுக்கோமாளிகளால் இது முடியவே முடியாது.

“என்னடா பொழுது போய் பொழுது வந்துருச்சே. இன்னும் ஒன்னும் நடக்கலையேன்னு பாத்தேன். . .” என்றொரு வசனம்.

கடவுள் முகம் திருப்பியே பார்க்கமாட்டேன் என்று விறைப்பாய் அமர்ந்திருக்கும் வாழ்வு சில அதிர்ஷ்டக் கட்டைகளுடையது. அவர்களிடம் கேட்டால் தெரியும், இது ஒரு எளிய நகைச்சுவை வசனம் மட்டுமா என்று. பொங்கி வருகிற கண்ணீருக்குப் பதிலாக நான் பல தடவைகள் இந்த வசனத்தை வாய்விட்டுச் சொல்லியிருக்கிறேன். இதுபோல் பல வசனங்களை அவர் இவ்வாழ்வின் துன்பங்களுக்கு எதிராக உருவாக்கி வழங்கியிருக்கிறார். “பொறாமையா. . ?” என்கிற கேள்விக்கு “லைட்டா. . .” என்றவர் பதிலளிக்கையில் நான் அதை எப்படியெல்லாமோ விரித்துப் பார்த்துக்கொள்கிறேன். சத்தமிட்டுச் சிரிக்கிற அதேவேளையில் எனக்குள்ளே எங்கோ ஒரு வெளிச்சப்புள்ளி தோன்றி மறைகிறது. நான் என் பொறாமைகளைப் பரிவோடு பார்த்துப் புன்னகை செய்கிறேன். ஆலயமணி சிவாஜிதான் எவ்வளவு பாவம் என்று நினைத்துக்கொள்கிறேன்.

pulikesi29030623lv2.jpg

இப்படி நான் எழுதிச்செல்வது வடிவேலு தும்மினால்கூட அதனுள்ளே ஒரு மானுடத்துக்கம் ஒளிந்திருக்கும் என்று நீருபிக்க அல்ல. அவரிடமும் எண்ணற்ற எளிய கிச்சுகிச்சுக்கள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் மீறி அவர் தன்னை ஒரு கலைஞனாக வெளிப்படுத்திக்கொள்ளும் தருணங்களும் நிறையவே உண்டு.

தீப்பொறி பறக்கும் மதுரை மொழியை அவர் நகைச்சுவைக்கும் பகடிக்குமானதாக மாற்றிக்காட்டினார். எளிய மனிதர்களின் குசும்புகளை, ஏமாற்றங்களை, தில்லுமுல்லுகளை நேர்த்தியாகச் சித்திரித்தார்.

“வேட்டிக்கட்டு வெயிட்டா இருந்தாத்தான் நாலுபேர் பயப்படுவான் என்று உறுதியாக நம்பும் ஒருவன் ஆரஞ்சு கலர் டவுசரில் பாதி தெரியுமளவு வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு வீதியில் நடந்துபோய்ப் போலீசிடம் உதைபடுகிறான். . .”

Seval-933.jpg

தன்னிடம் இருக்கும் பணத்தை வட்டிக்கு விட்டுப் பெரும் பணக்காரனாகிவிட ஆசைப்பட்டு நகரத்திற்கு வரும் ஒருவன் நண்பன் வீட்டில் இராத் தங்குகிறான். விடிகையில் தலைக்கு மேலே மேகங்கள் ஊர்ந்து போக வெட்ட வெளியில் கிடக்கிறான். நண்பன் பணத்தை மட்டுமல்லாது அந்த செட் - அப் வீட்டையும் பிரித்து எடுத்துப் போய்விடுகிறான்.

500 வாழைகளையும் 500 தென்னைகளையும் விளைவித்துக் கொடுத்துக்கொண்டிருந்த தன் வற்றாத கிணற்றைத் திடீரெனக் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கிறான் ஒருவன்.

தன் வினோத உடல் மொழியாலும் ஊளையைப் போன்றதொரு அழுகையாலும் குழந்தைகளின் மனதிலும் நிறைந்து நின்றார் வடிவேலு. அவருடைய வசனங்களில் பயன்படுத்தப்படும் ரிதமிக்கான வரிகள், சொற்களில் இயங்குபவன் என்கிற முறையில் என் கவனத்தை ஈர்ப்பவையாகவே இருந்திருக்கின்றன. அக்காட்சியின் வெற்றியில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அக்காட்சியை எளிதில் தேய்ந்து போகாதவண்ணம் காப்பாற்றுகின்றன.

“பங்குனி வெயில் பல்லக்காமிச்சுட்டு அடிச்சிட்டிருக்கு, பனிமூட்டம்ங்கற. . .” போன்ற வசனங்களை இந்த வகையில் சேர்க்கலாம்.

வெறும் நடிப்பு என்றல்லாது பாடல், நடனம் என்று வெவ்வேறு திறமைகளோடு இயங்கியவர் வடிவேலு. அவரின் குறிப்பிட்ட ஒரு நடன அசைவைப் பிரபல நடிகர்கள் சிலர் அப்படியேயும் சற்றே மாற்றியும் தங்கள் நடனத்தில் பயன்படுத்தி உள்ளனர். தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்ட இந்நாளில் அநேக நடிகர்களும் பாடகர்களாகிவிட்டனர். வடிவேலுவும் சில முழுப்பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் அதைவிடவும் காட்சிகளுக்கிடையே வாத்தியங்களின் துணையின்றிப் பாடிக்காட்டிய பாடல்கள் அவரது இசைலயிப்புக்குச் சான்றுகள்.

maxresdefault.jpg

வடிவேலுவின் புகழை உச்சிக்குக் கொண்டுசென்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் புலிகேசி பாத்திரம் அவருக்குச் சாதாரணமானதுதான். அவர் வழக்கமாகச் செய்வதுதான். ஆனால் நாயக வேடமேற்றிருந்த உக்கிரபுத்தன் பாத்திரம் அவருக்குச் சவாலானது. மறக்கவே முடியாத நகைச்சுவைகளின் மூலம் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் முகமாக மாறிப்போயிருந்த தன் முகத்தை வீரதீரங்கள் புரியும் நாயகனாகவும் மக்கள் ஏற்கும்படி செய்யவேண்டிய சவால் அதிலிருந்தது. வடிவேலு அதைத் திறம்படச் செய்து காண்பித்தார்.

vadivelu-wallpaper09.jpg

வடிவேலுவின் வாழ்வில், ஒரு சூப்பர்ஸ்டார் தன் படத்தின் வெற்றிவிழாவின்போது “முதலில் வடிவேலு கால்ஷீட்டைத்தான் வாங்கச் சொன்னேன்” என்று வெளிப்படையாகச் சொன்ன காட்சி ஒன்று உண்டு. அவர் ஜெயக்கொடி பறந்த சினிமாத் துறையிலிருந்து யாரையும் அழைக்காமல் ஒரு ரகசிய நடவடிக்கைபோலத் தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்த காட்சியும் உண்டு. இந்த இரண்டு காட்சிகளுக்கும் இடையேதான் 2009 பொதுத்தேர்தல் என்கிற காட்சி வருகிறது. திடீரென அரசியல் தெளிவு பிறந்து அந்த மகத்தான லட்சியத்தில் தானும் பங்கேற்க விரும்பி அவர் அந்தத் தேர்தலில் கர்ஜிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அத்தேர்தலையொட்டி அவருக்குச் சில கணக்குகள் இருந்திருக்கும். அது பொய்த்துப்போனது குறித்து எனக்கு வருத்தமேதுமில்லை. ஆனால் ஆன்ற சுற்றமும் அருமை நட்பும் அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டன குறித்து எனக்கு வருத்தமுண்டு. தவிர, ஒரு மனிதன் தான் விரும்பும் கட்சிக்கு ஆதரவாகப் பேசவும் இயங்கவும் உரிமையுண்டு என்றுதான் நமது ஜனநாயகமும் சொல்கிறது என்று நினைக்கிறேன்.

jagajala_pujabala_thenaliraman_movie_sti

“ஒரு உண்மையைச் சொல் லட்டுங்களா. .? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. . . யாரும் போன்கூடப் பண்றது இல்ல. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படல. மௌனமாக் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். இது ஒரு காலம். இதையும் தாண்டி வருவோம்னு இருக்கேன்” என்று வடிவேலுவே ஆதங்கப்பட்டாலும் திரை உலகம் அவரை ஒதுக்கி வைத்தாலும் சாமானிய மக்களிடம் அவர் குவித்து வைத்த புகழ் சேதாரம் ஏதுமின்றி அப்படியேதான் இருக்கிறது என்பது என் எண்ணம். அவர் இல்லை என்று சொல்லப்படுகிற இந்த இரண்டாண்டு காலம் எனக்கு அவர் இல்லாதது போன்ற உணர்வே இல்லை. தொலைக்காட்சிச் சேனல்கள் அந்தக் குறை தெரியாது பார்த்துக்கொண்டன. தவிரவும், வெறும் இரண்டு வருட இடைவெளியில் மறந்து போகக்கூடிய கலைஞனுமல்ல அவர். தமிழ்ச்சமூகம் அவரின் மீள்வருகைக்காக ரகசியமாகக் காத்திருக்கிறது என்றே தோன்றுகிறது. “ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமனுக்காக” நானும் காத்திருக்கிறேன்.

http://www.kalachuvadu.com/issue-169/page118.asp

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் நிஜமான வரிகள்.. வடிவேலு ஒரு அற்புதமான கலைஞன்..

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.