Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அது..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது..!

சுதாராஜ்

எழுத்தாளர் சுதாராஜ்இருள் கசியத் தொடங்கும் மாலை ஆறுமணிப் பொழுதில் அந்த வீதியில் வந்துகொண்டிருந்தேன். முக்கிய நகரங்களைத் தொடுக்கும் பிரதான வீதிதான் அது. எனினும் சன நடமாட்டம் குறைவாயிருந்தது. நகரத்திலிருந்து எட்டுக் கட்டை தொலைவிலிருந்த அந்தப் பகுதியில் குடிமனைகளும் குறைவு. அடுத்த நகரம் சுமார் நாற்பது கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தது. நாட்டில் சுமுக நிலையற்ற காலம் அது. இருள்வதற்கு முன்னரே மக்கள் வீடுகளுள் அடங்கிப்போய்விடுவதற்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னும் வெட்டப்படாத காட்டு மரங்களும் பற்றை புதர்களும் இரு மருங்கும் கொண்ட வீதியில், இந்தத் தனிமை வேளையில் எனது ஐம்பது சீசீ ஸ்கூட்டரில் பயணித்து வருவது சற்றுத் திரில்லாகக்கூட இருந்தது. முகத்திலடிக்கும் குளிர் காற்றின் சுகத்துடன் பறந்து செல்லும் ஒரு குருவியாக நான். ஆனால் வீதியில் மூச்சிரைக்கும் வேகத்தில் அவ்வப்போது வரும் வாகனங்கள் இந்த அனுபவிப்பைக் கெடுத்துவிடும்.

முக்கிய தேவை ஒன்றிற்காக ஒருவரைப் பார்க்க வந்துவிட்டுத் திரும்பும் பயணம் அது. முக்கியம் என்ன… பணத் தேவைதான்! வீட்டுக்குப் போனால், ஆள் தோட்டத்தில் என்றார்கள்.. தோட்டத்திற்கு வந்தால் வீட்டில் என்றார்கள். எனது மிட்சுபிசி காரை சில காலத்தின் முன் அவருக்கு விற்றிருந்தேன். அவசர பணத் தேவைக்காக விற்கவேண்டியிருந்தது. அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தந்து மிகுதிப் பணத்திற்குத் தவணை கேட்டிருந்தார். எனது கஷ்ட நிலைமையில் அதற்கு உடன்பட்டுக் கொடுத்திருந்தேன். ஆனால் தவணை கடந்தும் ஆளைப் பிடிக்க வாரோட்டம் ஓடவேண்டியிருந்தது.

வாழ்க்கைப்பாட்டைக் கொண்டு நடத்துவதற்குப் பணம் தேவைப்படுகிறது. வெளிநாட்டுக் கம்பனியில் பணி புரிந்து மாதாமாதம் ஊதியம் பெற்றபோது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. பிள்ளைகளைப் பிரிந்து எவ்வளவு காலம்தான் வெளிநாடுகளில் தனிமையாக இருப்பது.. ஊரோடு வந்து சொந்தமாக ஏதாவது பிஸினெஸ் செய்யலாமே என ஆரம்பித்தால்;, அது கவிழ்த்துவிட்டது!

தூரத்தில் ஒரு லொறி இரைந்து வந்துகொண்டிருந்தது. பிரதான வீதியில்; ஓடும் லொறி பஸ் போன்ற வாகனங்கள் இதுபோன்ற ஸ்கூட்டர்களுக்கு இடம் விட்டு விலத்திப் போகமாட்டார்கள். பாரத்துடன் செலுத்தும் வாகனத்தின் ஸ்பீட்டைக் குறைத்து ஓரம் கொடுத்துப் போவது அவர்களுக்குச் சிரமமாயிருக்கலாம். அல்லது அவர்களது தூரப் பயணம் தாமதமாகலாம். ஆக்ஸிலேட்டரில் அழுத்திய காலை எடுக்காமல், அந்த ரோட்டு தங்களுக்கே சொந்தம் என்பதுபோல அசுர கதியில் ஓடுவார்கள். நாங்கள்தான் ஓரம் போகவேண்டும். அல்லது அதோ கதியாகப் போக நேரிடும். லொறி அண்மையில் வந்ததும் சட்டென ஸ்கூட்டரை ஓரத்திற்கு இறக்கினேன்.

அப்போதுதான் அது தென்பட்டது.

ஒரு சிறிய பயணப் பை! அதைப் பயணப் பை என்றும் சொல்லமுடியாது. லப்ரொப் ஒன்றைக் கொண்டுதிரியக்கூடிய அளவிலான சிறிய கறுப்பு நிறப் பை. அல்லது அதற்குள் ஒரு லப்ரொப்தான் உள்ளதோ என்றும் தெரியவில்லை.

லொறி விலத்திச் சென்றதும் ஸ்கூட்டரை ஒரு யூ வளைவெடுத்துத் திரும்ப வந்து நிறுத்தினேன். அண்மிக்காமல் ஸ்கூட்டரில் இருந்தபடியே நோட்டம் விட்டேன். யாரோ கொண்டுவந்து தேவையற்ற பொருள் என வீசப்பட்ட பழைய பை போலத் தெரியவில்லை. புதியதுபோலத் தோன்றியது. யாராவது தவற விட்டிருப்பார்களோ? அவ்விடத்தில்; புல்பூண்டுகள் மடிந்து முறிந்துபோய்க் கிடந்தன. எதிர்ப்பட்டு வந்த வாகனமொன்றை விலத்துவதற்காக, ஸ்கூட்டரிலோ அல்லது மோட்டார் சைக்கிளிலோ வந்த ஒருவர் ஓரம் கட்டியபோது அது விழுந்திருக்கலாம். அல்லது அவரே விழுந்து எழும்பியிருக்கலாம். அதை எடுத்து உரியவரிடம் சேர்த்துவிடுவதுதான் சரி என்று தோன்றியது.

அது எப்படி இன்னும் யாருடைய கண்ணிலும் படாமற் கிடக்கிறது என யோசித்தேன். இலங்கையில் அப்போது யுத்தகாலம். ‘வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் உள்ள பார்சல்களையோ பைகளையோ எடுக்கவேண்டாம்.. அது ஒரு வெடிகுண்டாகவும் இருக்கக்கூடும்...’ என அறிவுறுத்தல்கள் வந்துகொண்டிருந்தமையால், அதைக் கண்டவரும் காணாதவர்போலப் போயிருக்கலாம்.

ஸ்கூட்டரை விட்டு இறங்கினேன். எனினும் அதை எடுப்பதா விடுவதா என மனத்தயக்கம். அது ஒரு வெடிகுண்டாகவே இருந்து எடுக்கும்போது வெடித்துவிட்டால்? வெடிகுண்டு நிஜத்தில் எப்படியான தோற்றத்தில் இருக்கும் என்று எனக்கு ஏதும் சரியான அறிவு இல்லை. யுத்த காலத்தில் மீட்கப்பட்ட குண்டுகள் என ரீவீக்களில் காட்டியிருக்கிறார்கள். அதையெல்லாம்விட ஏற்கனவே சினிமாப் படங்களில் பார்த்திருக்கிறேன்;.. அதுதான் மனக்கண்ணில் முந்திக்கொண்டு வந்தது! சிவப்பாக ஒரு பல்ப் மின்னிக்கொண்டிருக்கும்.. சில வயர்கள் துருத்திக் கொண்டு தெரியும். அப்படியான ஏதும் சமாச்சாரங்களை அதிற் காணவில்லை. சற்றுத் துணிவு ஏற்பட்டது. எனினும் எச்சரிக்கையுணர்வுடன் ஒரு நீளமான தடியைத் தேடி எடுத்தேன். அது குண்டுதானா என்று தடியினால் புரட்டிப் பார்க்கலாமல்லவா!

தடியுடன் என்னைக் கண்டவர்கள் நான் ஏதோ பாம்பை அடிக்கப்போவதாக எண்ணிக்கொண்டுபோலும் இன்னும் வேகமாக வாகனங்களைச் செலுத்திக்கொண்டு ஓடினார்கள்! புரட்டியபோது, பை மிக இலகுவாக மறுபக்கம் புரண்டது. அதற்குள் ஏதும் இல்லையோ? லப்ரொப் உள்ளே இருந்திருந்தால், அதன் கனதி கைக்குத் தெரிந்திருக்கும். தேவைப்படாது என யாரோ வீசிவிட்டுப்போன பையுடன் நான் மினக்கெடுகிறேனா? எனினும் ஒரு உந்துதலில் பையைக் கையில் எடுத்தேன். அதன் ஸிப்பைத் திறந்தபோது..

ஒரு கட்டுக் காசு! எல்லாம் ஆயிரம் ரூபாய்த் தாள்கள்!

அது பயணப் பை அல்ல.. பணப் பை!

கடவுளே.. என்ன இது?

கடவுள் என்னைச் சோதிக்கிறார்! பணநெருக்கடியிற் கஷ்டப்படும் என் கண்களில் இப்படி ஒரு கட்டுக் காசைக் காட்டிச் சோதிக்கிறாரோ? அல்லது கடவுளின் கருணையா இது? இப்படிக் கண்ணுக்கு முன்னாக அற்புதங்கள் புரியக்கூடியவரா கடவுள்? நான் பொதுவாக கஷ்டநிலை வந்தால் மட்டும் கடவுளிடம் வேண்டுகிற ரைப் ஆன ஆள். பணத்தேவை காரணமாக நான் சில நாட்களாக கடவுளின் தீவிர பக்தனாக மாறியிருந்தேன். அதுதான் கடவுள் கண் திறந்தாரோ?

பணத்தைக் கண்டவுடன் இப்படியெல்லாம் எண்ணங்கள் ஓடிவிட்டது. பணக்கட்டுடன் சேர்த்து.. ஒரு நில அளவை ரேப், சில எழுதப்படாத ஏ4 சைஸ் தாள்கள், இரண்டு பென்சில்கள் ஆகிய பொருட்களும் இருந்தன. உரிமையாளர் பற்றிய விபரங்கள் எதையும் அதற்குள் காணமுடியவில்லை.

ஸிப்பை இழுத்து மூடினேன். இந்த இடத்தில்.. இந்த நேரத்தில்.. இவ்வளவு பணத்துடன் நிற்பதை யாராவது கண்டால், கொலை விழுந்தாலும் விழும். ஏதும் நடக்காததுபோல் மிகச் சாதாரணமாகப் பையையும் காவிக்கொண்டு ஸ்கூட்டரை ஸ்ரார்ட் செய்தேன்...

வீட்டில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டுப் பையுடன் இறங்கியதும் முதலில் எதிர்ப்பட்டவள் எனது மகள் விசித்திராதான்.

“என்னப்பா.. லப்ரொப்பா? புதுசா வாங்கினீங்களா..?” எனத் தொடராகக் கேள்விகளைக் கேட்டவாறே அண்மையில் ஓடிவந்தாள். பிள்ளைக்கு ஒரு லப்ரொப் தேவைப்படுவது எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் எனது கஷ்ட நிலை கருதி வாங்கித்தருமாறு கேட்டிருக்கவில்லை. இப்போது அவளது ஆச்சரியத்தை அவளது முகம் காட்டியது.

“இல்லையம்மா.. இது வேற ஒராளின்ட பை..”

அதற்குமேல் ஏதும் பேசாமல் உள்ளே போனேன். மேற்கொண்டு கேட்கப்படக்கூடிய கேள்விகளுக்கு என்னிடம் பதில் தயாரில்லாமலிருந்தது. ஆனால் மகளின் குரல் கேட்டு என் மனைவி முன்னே வந்தாள்!

“என்ன அது..?”

“ஒன்றுமில்ல.. இது இன்னொராளின்ட பை..” எனச் சாதாரணமாகக் கூறியவாறு அறைக்குட் சென்று பையை வைத்தேன். அதற்கு ஒரு நேரம் தேவைப்படவில்லை.. நான் சேர்ட்டைக் கழற்றிக் கொழுவியில் மாட்டுவதற்கிடையில், பையைத் திறந்து பார்த்துவிட்டாள்!

“என்ன.. கார்க் காசு தந்திட்டாரா?” – நான் போயிருந்த காரணம் அவளுக்குத் தெரியுமாகையால், கார் வாங்கியவர் மிகுதிப் பணத்தைத் தந்திருக்கக்கூடும் என நினைத்திருக்கிறாள்.

“ஆளையே பிடிக்க முடியயில்ல.. எப்பிடிக் காசு கிடைக்கும்..?”

“அப்ப அது..?” – மேசையிலிருந்த பையைக் காட்டிக் கேட்டாள்.

“அது வேற ஒருத்தற்றை காசு..”

“என்ன பிறகும் வட்டிக்குக் காசு எடுத்திட்டீங்களா..?” – அவளது குரல் அதிர்ச்சியாக வெளிப்பட்டது.

“இல்ல இது வேற விஷயம்..”

“நீங்க எனக்குப் பொய் சொல்லுறீங்க..! வட்டிக்குத்தான் எடுத்து வந்திருக்கிறீங்கள்.. ஏற்கனவே பட்ட கடன்களுக்கு வட்டி கட்டேலாமல் பெரிய பாடு படுறீங்கள்… அதுக்குள்ள பிறகுமா..?”

இப்போது நான் சரணடையவேண்டியிருந்தது. நடந்த விஷயத்தைக் கூறினேன்.

“ஐயோ.. அதை இஞ்ச கொண்டு வந்திட்டீங்களா..?” அவளுக்கு மீண்டும் அதிர்ச்சி.

“அது யாற்றையென்று தெரியாதபடியாற்தான் கொண்டு வந்திருக்கிறன்..”

அப்போது விசித்திரா குறுக்கிட்டுச் சொன்னாள்.. “தெரியாவிட்டால் அதைப் பொலிஸ் ஸ்டேசனிலை ஒப்படைக்கவேணும்.. அல்லது அது சட்டப்படி குற்றம்..!”

விசித்திரா சட்டக் கல்லூரிக்கு மேற்படிப்புக்காக விண்ணப்பித்திருந்தாள். அதனால் வீட்டில் ஏதாவது இதுபோன்ற பிரச்சனைகள் தோன்றும் வேளைகளில், சட்ட நுணுக்கங்களை ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறக்கூடிய வல்லமை பெற்றிருந்தாள்!

“பொலிசிலையா..? அவ்வளவுதான்..! ஒரு ஸ்ரேற்மன்ற் எழுதி எடுத்துக்கொண்டு.. காசையும் வேண்டி வைச்சிடுவாங்கள்.. அதோட கதை முடிஞ்சுது.” - இப்படிக் கூறியது விசித்திராவுக்கு அடுத்த எனது மகன். உயர் வகுப்பிற் படிக்கும் இவன், வெட்டொன்று துண்டு ரெண்டெனத்தான் பேசுவான். ஆனால் வெட்டு சரியான இடத்திற்தான் விழும்.

அவன் அப்படிக் கூறியதும் நான் உஷாரடைந்தேன். ஏனெனில் பணத்தைக் கொண்டுபோய்ப் பொலிஸில் கொடுத்துவிடலாமோ என்ற ஒரு எண்ணம் என்னிடமும் இருந்தது. இப்போது மனதை மாற்றிக்கொண்டு, “காசு வீட்டிலையே இருக்கட்டும்.. அதை உரியவரிட்டையே சேர்க்கிறதுதான் சரி..” என அந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயன்றேன்.

“அதுதான் யாரென்று தெரியாதே.. எப்பிடிக் குடுக்கப்போறீங்க..?” – மனைவிக்கு இன்னும் என்மேற் சந்தேகமிருந்தது. பணநெருக்கடி காரணமாக இந்த ஆள் அதை அமுக்கிவிடுமோ என்ற சந்தேகம்தான்.

“காசைத் தொலைச்சவர் அதைத் தேடாமல் விடுவாரா.. காலையில் அந்த வீதியில் போய்ப் பார்க்கலாம்.. யாராவது தேடிவருவார்கள்..” - இது சற்று சாத்தியமற்ற யோசனையானாலும், மனைவியைச் சமாதானப்படுத்துவதற்கு ஏதாவது கூறவேண்டியிருந்தது.

அப்போதுதான் எனது இளைய மகன் ரியூசன் முடிந்து வீட்டுக்கு வந்திருந்தான். மோப்பசக்தி அபரிதமாகக் கொண்ட ஜந்து இவன்! அறைக்குள் போன பிள்ளை பாடப் புத்தகத்தைப் படிப்பதில் ஊக்கமாக இருக்கிறான் என எண்ணிக்கொண்டிருந்தால்...

“அப்பா.. இவ்வளவும் உங்கட காசா..?” என்ற கேள்வியுடன் வெளியே வந்தான்.

அவனது முகம் மகிழ்ச்சியில் மலர்ந்துபோயிருந்தது. ரியூசனுக்குப் போய்வருவதற்கு ஒரு சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டிருந்தான். வேறொன்றுமில்லை.. குட்டிச் சைக்கிள் ஓடவேண்டுமென்ற ஆசைதான் அது! பிள்ளைகளென்றால் அவர்களது வயதிற்கேற்ப ஏதாவது பொருட்கள் தேவைப்படுவது இயல்புதான்;. ஆனால் அவற்றையெல்லாம் நிறைவேற்றமுடியாத அப்பாக்களில் நானும் ஒருவன்.

‘அப்பாவிட்டைக் காசில்லை அப்பன்.. காசு வந்தபிறகு வாங்கித் தாறன்..’ என அவனைச் சமாளித்து வைத்திருந்தேன்.

இப்போது அந்தக் கட்டுக் காசை ஒரு கைவிசிறியைப்போல கையில் வைத்து ஆட்டிக்கொண்டே கூறினான்... “சரியாக ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் இருக்கு..!”

அப்போதுதான் அதில் எவ்வளவு காசு இருந்தது என எங்கள் எல்லோருக்குமே தெரியவந்தது! மனைவி ஓடிச் சென்று அதை அவனது கையிலிருந்து பறித்தாள்.. “இஞ்ச விடு..! அது வேற ஒராளின்ரை காசு..” திரும்பவும் அது அறைக்குட் கொண்டு சென்று பத்திரப்படுத்தப்பட்டது.

நான் மகனைச் சமாதானப்படுத்த முயற்சித்து, நடந்த விஷயத்தைக் கூறினேன்.

“ஆரப்பா அது.. இவ்வளவு காசையும் கவனமில்லாமல் விட்டது..?”

“அதுதான் தெரியயில்லை அப்பன்.. அந்தப் பைக்குள்ள ஒரு விபரமும் இல்லையே..!”

“அப்ப எப்பிடிக் காசைத் திருப்பிக் குடுப்பீங்க..?”

“எப்பிடியாவது குடுக்கத்தானே வேணும்.. யோசிப்பம்..”

இந்த அளவில் வீடு கொஞ்சம் அமைதி நிலைக்கு வந்தது. நாங்கள் சாப்பிடுவதற்காக ஆற அமர்ந்தோம். வழக்கம்போல பாடங்களைப் படிக்க அறைக்குள் போயிருந்த இளைய மகன் அப்போது, “அப்பா.. அப்பா..!” என உச்சஸ்தாயியில் அழைத்தான். நான் எழுந்து போவதற்கு முன்னரே கையில் ஒரு தாளுடன் வெளியே வந்தான். ‘இது அந்த பாய்க்குக்கு உள்ள இருந்ததப்பா..!’

அதற்குள் இருந்தது எப்படி என் கண்ணிற் படாமற் போனது? “பாய்க்குக்கு உள்ளேயே ஒரு பொக்கட் இருக்கு.. அப்பிடி ஒரு பொக்கட் இருக்கிறதே தெரியாதமாதிரித்தான் செய்திருக்கிறாங்க..” என விளக்கமளித்தான் மகன். அப்படியெல்லாம் துளாவிச் சோதித்துப் பார்க்கவேண்டுமென்று எனக்குத் தோன்றியிருக்கவில்லை.

தாளில் பென்சிலால் சில குறிப்புக்கள் போடப்பட்டிருந்தது. மேலோட்டமாக வரைபடம்போல வரையப்பட்டிருந்த கோடுகளுடன், நீள அகல அளவுகள் குறிக்கப்பட்டிருந்தன. ‘மிஸ்டர் அலோசியஸ், ஊமைக்காடு கிழக்கு’ என்ற விபரமும் இருந்தது! ஆகவே இது ஒரு நில அளவையாளருக்குச் சொந்தமானதுதான் என்பது ருசுவாகியது.

மீண்டும் நாங்களெல்லாம் ஒன்றுகூடி அந்த விபரங்கள்பற்றிக் கலந்துரையாடினோம். ‘மிஸ்டர் அலோசியஸ் என்றது காணிச் சொந்தக்காரரின்ட பெயராயிருக்கும்.. அவரைக் கண்டுபிடிச்சால் சேவையரின்ட விபரங்களை விசாரிச்சு அறியலாம்..’ என விசித்திரா விளக்கம் தந்தாள்.. “ஊமைக்காடு கிழக்கு என்றதுதான் காணி உள்ள இடம்.. அங்க போய்ப் பாருங்க..அப்பா!”

எனக்குத் திகிலாக இருந்தது. ஊமைக்காடு என்ற பெயரே பயங்கரமாக இருக்கிறது. அங்கு நான் போகவேண்டுமா? அங்கே காணிச் சொந்தக்காரர்தான் இருப்பாரோ.. அல்லது பேய் பிசாசுகள்தான் இருக்குமோ என்னவோ..!

“அந்தப் பகுதியில அப்பிடி ஒரு இடம் இல்லையே.. அது சிங்கள ஆட்கள் கூடுதலாக உள்ள ஏரியா.. எல்லா இடங்களும் சிங்களப் பெயரிலதான் இருக்கு..” எனச் சமாளித்தேன். அதற்குப் பதில் எனது மூத்த மகளிடமிருந்து வந்தது..

“இல்ல அப்பா.. ஆதி காலத்தில அது தமிழ் பேசிற ஆட்கள் இருந்த இடமாயிருந்திருக்கும்.. பிறகு பிறகுதான் சிங்களக் குடியேற்றங்களும் வந்து ஊர்களின்ட பெயரையும் மாற்றியிருப்பாங்க..”

இவள் வரலாற்றுத்துறையில் மேற் படிப்புப் படித்துக்கொண்டிருப்பவள். இப்படி ஒவ்வொரு சப்ஜெக்டிலும் துறை போனவர்கள் எங்கள் வீட்டில் இருந்தமையால், இதுபோன்ற சிக்கலான சமயங்களில் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வது சுலபமாயிருந்தது!

ஆக நான் காலையில் அங்கு போகவேண்டியது ஊர்ஜிதமாகியது. இளைய மகன் குதூகலித்தான்.. “அப்பா நானும் வாறன்.. போகலாம்..!”

நான் எங்கு போனாலும் விடுப்புப் பார்ப்பதற்காக எப்போதும் என் கால்களைச் சுற்றிவருகிற பூனைக்குட்டி இவன். எனக்குத் தெம்பாயிருந்தது. நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையானாலும், நான் இளமையான தோற்றமுடையவன். சந்தேகத்திற்கிடமான தமிழ் இளைஞர்களைப் பிடித்து உள்ளே ‘போடுகிற’ காலம்.. தெரியாத இடத்தில் யாரையாவது விசாரிக்கப் போக, எனக்கும் அந்தக் கதி நேரலாம். எனவே மகனுடன் போவது குடும்பஸ்தன் என்ற ரீதியில் ஓரளவு பாதுகாப்பாயிருக்கும்.

“சரி.. சரி போகலாம்..!” என ஆமோதித்தேன்.

“ஏன் ஸ்கூலுக்குக் கட் அடிக்கவோ?” – மனைவிக்கு என் நிலைமை புரியவில்லை.

அடுத்தநாள் மகன் ஸ்கூல் விட்டு வந்தபின் இருவருமாகப் புறப்பட்டோம். பிரதான வீதியிலிருந்து ஒவ்வொரு கிறவல் ரோட்டுக்களாக இறங்கி தேடுதலைத் தொடங்கினோம். தென்னந்தோட்டங்கள்.. தேக்குமரக் காடுகள்.. எல்லாம் ஓடிப் பார்த்தாயிற்று. தோட்டங்களில் உள்ளவர்களிடமும் பாதையில் தென்படுகிறவர்களிடமும் விசாரித்தோம். ஊமைக்காடு எங்கிருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை. அது நிலஅளவைப் படங்களில் மட்டும் பதியப்பட்டிருக்கும் பெயராயிருக்கலாம்.

இந்த இடம் பற்றிய தகவல்களை நிலஅளவைத் திணைக்களத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளலாமே என்று தோன்றியது. இப்படித் தாமதமாகத்தான் எனக்கு உருப்படியான யோசனைகள் தோன்றுவதுண்டு! அடுத்தநாள் அங்கு பணிபுரியும் ஒருவரின் உதவியுடன், உரிய கட்டணத்தைச் செலுத்தி பழைய வரைபடங்களைத் தேடி எடுத்துப் பார்த்தபோது பலன் கிடைத்தது. ஊமைக்காடு பற்றிய குறிப்புகளை எடுத்தபோதுதான் தெரிந்தது.. நாங்கள் முதல்நாள் வேறு திக்குகளில் அலைந்திருக்கிறோம். நானும் மகனுமாக மனம் தளராது மீண்டும் ஊமைக்காட்டைத் தேடிப் போனோம்.

அளந்து பிரிக்கப்பட்ட பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. புதிதாகக் காடு வெட்டித் துப்புரவு செய்து தென்னம்பிள்ளைகள் நடப்பட்ட தோட்டங்கள். சனசந்தடி அவ்வளவாக இல்லை. தூரத்தில் இரைந்து உறுமல் சத்தம் கேட்டது. அந்தத் திசையை நோக்கிப் போனோம். டோசர் இயந்திரமொன்று வேலை செய்துகொண்டிருந்தது. அங்கு சில தொழிலாளர்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தி இறங்கியதும் காவல்காரர் வாசலுக்கு வந்தார். விசாரித்தோம். வெற்றி! அதுதான் மிஸ்டர் அலோசியஸின் தோட்டம். ஆனால் அங்கே அவர் இல்லை என்றும், வேலைகளை மேற்பார்வை செய்பவர் உள்ளே நிற்பதாகவும் அவரிடம் பேசலாம் என்றும் கூறினார்.

உள்ளே அவரைச் சந்திக்கப் போகும்போது மகன் ஒரு விஷயத்தைக் கூறினான்.. “எங்கடை தோட்டக் காணி அளக்கவேண்டியிருக்கு.. இங்க வேலை செய்த சேவையரின்ட விலாசத்தைத் தரமுடியுமா.. என்று கேளுங்க அப்பா..”

நான் விழித்தேன். “எங்களுக்குத்தான்; தோட்டம் இல்லையே..!” என்றேன்.

“இல்ல அப்பா.. அப்பிடிக் கதை விட்டுத்தான் விசாரிக்கவேணும்.. காசு கண்டெடுத்த விஷயமெல்லாம் இவங்களுக்குச் சொல்லக்கூடாது..”

அந்த வகையில் பேசினோம். தேவையான விபரங்கள் கிடைத்தது. இப்போதே அவரைக் காணப் போகலாம் என மகன் அவசரப்படுத்தினான். காசைத் தொலைத்தவருக்கு, அது தானாகவே திரும்ப வந்து கிடைக்கும்போது ஏற்படும் சந்தோசத்தைக் காணும் ஆர்வம்! சில வியாதிகள் மரபணு ரீதியாகத் தொற்றும் என்கிறார்கள். என்னிடமிருந்து அது அவனுக்கும் தொற்றியிருக்கிறது.

வீட்டுக்குச் சென்று ஸ்கூட்டரை நிறுத்தமுதலே மகன் பாய்ந்து சென்று, அந்தச் செய்தியைத் தாயிடம் கூறினான். தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்ற நிலையடைந்து நின்றாள் மனைவி! என்னைக் கண்டதும், “கெட்டிக்காரர்தான்..!” என மெச்சினாள். அவளிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளை இலகுவிற் பெறமுடியாது. அதனால் நான் அந்தப் புகழ்ச்சியை மெய்மறந்து அனுபவித்தேன்.

பணப்பையை அது வெளியே தெரியாதபடி இன்னொரு பொலித்தீன் உறையிற் போட்டுக் கட்டினான் மகன். அவர்தான் உரியவர் என்று நிட்சயமாகத் தெரியாமல் எப்படிக் கொடுப்பது? அவரையும் விசாரிக்கவேண்டுமாம். எங்கள் ஐம்பது சீசீ காற்றில் பறந்தது.

வீட்டு வாசலில் நாட்டப்பட்டிருந்த பலகையில், ‘உத்தரவு பெற்ற நில அளவையாளர்’ என அவரது பெயர் விபரங்கள் போடப்பட்டிருந்தது. பணப்பையை வெளியில் மதிலோரமாக ஸ்கூட்டரிலேயே விட்டுச் சென்று கதவைத் தட்டினோம்;.

கதவைத் திறந்தவரிடம் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டதும், “நான்தான்.. என்ன விஷயம்?” என்றார்.

“ஒரு அலுவல்.. பேசவேணும்..”

உள்ளே அழைத்தார். யாராவது காணி அளக்கும் தேவைக்காக வந்திருக்கலாம் என அவர் நினைத்திருக்கக்கூடும்.

மகன் எனது இடுப்பில்; மெல்லச் சுரண்டினான். அவனிடம் காது கொடுத்தேன்.

“காசைத் துலைச்சவர் இவர்தான் அப்பா..!”

“உனக்கு எப்பிடித் தெரியும்..?”

“வீட்டுக்கு ஆராவது வந்தால் நீங்கள் சந்தோஷத்தோடதானே உள்ள கூப்பிடுவீங்க..? இவரைப் பாத்தீங்களா.. கவலைப்பட்டுக்கொண்டு நிக்கிறார்.. காசு துலைஞ்ச கவலையாய்த்தானிருக்கும்..!”

வந்த காரியத்தைக் கேட்டு எங்களுடன் பேசத் தொடங்கினார். சற்று நேரத்தில் கதையைத் திருப்பி, ‘ஊமைக்காடு என்ற பகுதியில் காணி அளக்கப் போயிருந்தீங்களா.. அவர்களிடம்தான் விசாரித்து வந்தோம்..’ எனச் சொன்னதும் அவர் உடைந்துபோனார். கேட்கமுதலே தனது சோகக் கதையைக் கூறத்தொடங்கினார். காணி அளந்த கூலியை அன்று தோட்டக்காரர் இவரிடம் கொடுத்திருக்கிறார். வழக்கம்போல மோட்டார் சைக்கிளின் பின் கரியரில் பையை வைத்துக்கொண்டு வந்தாராம். எங்கேயோ தவறிவிட்டதென்பது வீட்டுக்கு வந்தபின்புதான் தெரிந்ததாம். காணிஅளவு வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களின் சம்பளங்கள்கூட இன்னும் கொடுக்கப்படவில்லை.

அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே மகன் ஒரு பாய்ச்சலில் வெளியே ஓடிச்சென்று பணப்பையை எடுத்து வந்தான்.

அதை அவரிடம் கொடுத்தோம்..

“இதுதானே அது..?”

அவரது கண்கள் விரிந்து பூத்தது. முகமும் மலர்ச்சியடைந்தது.

எங்கள் பணி முடிந்துவிட்டது. நாங்கள் புறப்பட ஆயத்தமானோம்.

“கொஞ்சம் பொறுங்க..” - உட்கதவைத் தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் சென்றார்.

பொறுத்திருந்தோம்.. அவரது மனைவியாக இருக்கலாம்.. வந்து, கதவை இன்னும் சற்று நீக்கி எங்களைப் பார்த்துவிட்டுப் போனார். எங்களுக்குத் தேனீர் கொடுக்குமாறு கூறியிருப்பார்போலும் என ஊகித்தேன்.

பக்கத்திலிருந்த மகன் என் கையைச் சுரண்டி கண்களால் சமிக்ஞை காட்டினான். உள்ளே அவர் பையைத் திறந்து காசைக் கையிலெடுப்பது கதவு இடுக்கினூடு தெரிந்தது. “எங்களுக்குச் சன்மானம் தரப்போகிறாரோ..!”

“வேணாம் என்று சொல்லுங்க அப்பா..!” என்றான் மகன்

“சரி..அப்பன்! அவர் வெளியில வரட்டும் சொல்லலாம்..”

பார்த்துக்கொண்டு இருந்தோம். கைச்சுறுக்காகக் காசை எண்ணி எடுத்தபின் வெளியே வந்து, “சரி.. போயிற்று வாங்க..!” என விடை தந்தார்.

எழுந்து வெளியேறினோம். மகனது மனம் வெந்து வெடித்தது.. “பாத்தீங்களா அப்பா.. நம்பிக்கை இல்லாமல் காசை எண்ணிப் பாத்திருக்கிறார்!”

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1950:2014-02-04-02-41-35&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.