Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குரு பார்க்க கோடி நன்மை - வாக்கிற்கும், அறிவுக்கும் அதி தேவதையான குருபகவான் பற்றிய விளக்கம்

Featured Replies

kuru.jpg

வியாழ பகவான் துதி

பெருநிறை செல்வம் மேன்மை பெற்றிடுஞ் சுகங்கல்யானம் 

வருநிறை மரபு நீடி வாய்க்குஞ்சந் ததித ழைக்கத் 

தருநிறை ஆடை ரத்னந் தான்பெற அருளும் தேவ 

குருநிறை வியாழன் பெற்றாள் குரைகழல் தலைக்கொள்வோமே.

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாய், அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய், பிரமம்மமாய், ஜோதிப் பிளம்பான இறைவன் படைப்பிலடங்கிய ஜீவராசிகள் அனைத்தும் தத்தமது முன் வினைகளுக்கேற்ப சுகங்களையும் துக்கங்களையும் அனுபவித்து வருவது கண்கூடு.

ஜீவராசிகளின் முன்வினைகளுக்கேற்ப சுக, துக்கங்களை அதன் பலாபலன்களை இறைவன் ஆகர்ஷண சக்தியினால் பூமியுடன் தொடர்புகொண்டுள்ள கிரகங்களின் மூலமாக நமக்கு அளித்து வருகிறார் என்பதனை ஜோதிட சாஸ்திரமூலம் நாம் அறிகின்றோம்.

பூமியில் பிறக்கின்ற ஒவ்வொரு ஜீவனும் பிறக்கின்ற நேரத்தில் ராசி மண்டலத்தில் எந்த இடத்தில், எந்த கிரகம் சஞ்சரிக்கின்றதோ அதைப் பொறுத்தே வாழ்வில் நன்மையும் தீமையும் மாறி மாறி அனுபவிக்கின்றனர்.

அரசனாக, சுகமான வளமாக வாழ்வதும் ஆண்டியாக வறுமைக்கோட்டில் வாழ்வதும், நோய் நொடிகளினால் துன்பப்படுவதும், கல்விமானாக சிறந்து விளங்குவதும், வளமான தொழில் அமைவதும், நல்வழிகாட்ட, நல்ல குரு அமைவதும் வாழ்க்கைத் துணையாக நல்ல மனைவி அமைவதும் ஜாதகத்தில் கிரகங்களின் இடத்தைப் பொறுத்தே அமைவதாகும்.

சுபக்கிரகமாக விளங்கும் குருபகவான் தனு - மீன ராசிகளுக்கு அதிபதி, கடக ராசியை உச்சம் பெறும் வீடாகவும், மகர ராசியை நீசம் பெறும் வீடாகவும் கொண்டவன். புனர்பூஷம், விசாகம், பூரட்டாதி குருபகவானுக்கு விருப்பமான நட்சத்திரங்களாகும். வாழ்வில் ஒருவன் சிறப்புகள் பெற வேண்டுமானால் குருபகவானின் அருட்பார்வை நிறைந்திட வேண்டும்.

தேவர்கள், முனிவர்களுக்கு நல்லறிவு, ஆன்மீக ஞானத்தை வழங்கும் ஞானகுருவான வியாழ பகவானுக்கு ”பிரகஸ்பதி” என்ற பெயர் ஏற்பட்டது.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஓராண்டு காலமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும் ஆட்சிபெற்றாலும் அந்த ஜாதகனுக்கு நல்லொழுக்கம், சாஸ்திர ஆராச்சி, தர்ம சிந்தனைகள் ஏற்படும் என்பது சாஸ்திர விதியாகும்.

ஒருவருடைய ஜாதகத்திலுள்ள கிரக தோஷம் குருபகவானின் பார்வையினால் விலகுகிறது. அதனாலேயே ....குரு பார்க்க கோடி நன்மை’ என்று சாஸ்திரமறிந்தவர்கள் கூறுவர்.

வாக்கிற்கும், அறிவுக்கும் அதி தேவதையான குரு உச்ச வீடாகிய கடகராசியில் இருக்கப் பிறந்த ஜாதகன் என்றுமே சுகமான வாழ்வு வாழ்வான் என்பது ஜோதிடசாத்திரம். மேலும், சுவாதி, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வியாழக்கிழமையில் அமைந்தால் அன்றைய நாள் குருபகவான் வழிபாட்டிற்கு மென்மேலும் சிறப்புடையதாகும்.

வியாழ சுகம் குறைந்தவர்கள் வியாழக்கிழமைகளில் மஞ்சள் கலந்த நீரினால் வியாழ பகவானுக்கு அபிஷேகம் செய்வித்து மஞ்சல் நிற பட்டுச் சாத்தி, முல்லை, பொன்நொச்சி மலர்களால் அர்ச்சனை செய்து, மஞ்சள் கலந்த எலுமிச்சம்பழ ரசத்தால் அன்னம் படைத்து கடலை நிவேதனம் செய்து குருபகவானுக்கு விருப்பமான ‘அடானா’ ராகத்தில் கீர்த்தனைகள் பாடி வழிபட்டால் குரு கிரகதோஷங்கள் நீங்கி வாழ்வில் சுகம் உண்டாகும். பசு நெய்யினால் தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லா நன்மைகளும் ஏற்படும்.

மேலும், சுவாதி, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வியாழக்கிழமையில் அமைந்தால் அன்றைய நாள் குருபகவான் வழிபாட்டிற்கு மென்மேலும் சிறப்புடையதாகும். குருப் பெயர்ச்சி (வியாழ மாற்றம்) காலத்தில் வியாழ பகவானுக்கு கடலை சுண்டல் நிவேதனம் செய்து, மஞ்சல் நிற வஸ்த்திரம் தானம் செய்து அரசு சமித்தினால் ஹோமம் செய்து 9, 12, 16, 24 என்ற எண்ணிக்கையில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கப்பெற்று சுகானந்தப் பெருவாழ்வு வாழலாம்

நவகிரகங்களிலேயே, இதிகாச-புராணங்களில் அதிக அளவில் இடம் பெற்றவர்கள் என்றால், அவர்கள் தேவகுருவான வியாழ பகவானும்-அசுர குருவான சுக்கிராச்சார்யாரும்தான் என்றே சொல்லலாம். அவர்கள் இருவரைப் பற்றியும் தனி நூலே எழுதி விடலாம். அந்த அளவிற்கு, அவர்களைப் பற்றிய தகவல்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. 

தேவகுருவின் உபதேசங்களும் அசுர குருவின் உபதேசங்களும் மிகவும் புகழ் பெற்றவை, குரு அருள் இன்றேல், திருவருள் இல்லை ஆகையால், வியாழ பகவான் உபதேசம் ஒன்றைப் பார்த்து விட்டு, பிறகு அவரைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

ஒரு சமயம், இந்திரன் துர்வாசரின் சாபத்தால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தான். துயர வசப்பட்ட அவன், தேவ குருவான வியாழ பகவானைத் தேடி ஓடினான். அப்போது வியாழ பகவான் கங்கைக் கரையில், கிழக்கு நோக்கி சூரியனைப் பார்த்து நின்றபடி, ஜபம் செய்து கொண்டிருந்தார். மெய்சிலிர்த்துப் போய்ப் பரமானந்த நிலையில் முகத்தில் ஒரு பெருமிதம் ததும்பத் தவம் செய்து கொண்டிருந்த அந்த உத்தமசீலரின் திருவடிகளில் போய் இந்திரன் விழுந்து வணங்கினான். தன் துயரையெல்லாம் சொல்லி அழுதான். 

அதைக்கேட்ட வியாழ பகவான் அவனுக்கு ஆறுதல் சொல்லி உபதேசமும் செய்தார். ‘‘தேவேந்திரா! ஏன் அழுகிறாய்? விவரம் அறிந்தவன், நீதி அறிந்தவன் இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்ட காலத்திலும் பயப்பட மாட்டான். ஏனென்றால், செல்வங்களும் இப்போது உனக்கு நேர்ந்ததைப் போன்ற பிரச்னைகளும் நிரந்தரமானவை அல்ல! அனைத்தும் முற்பிறப்புகளில் செய்யப்பட்ட செயல்களின் விளைவாகவே உண்டாகின்றன. வாழ்வில் மேடும் பள்ளமும் வரத்தான் செய்யும். வண்டிச் சக்கரம் உருளும்போது, கீழே இருந்த பகுதி மேலே போவதும் மேலே இருந்த பகுதி கீழே வருவதுமாக இருக்கிறது அல்லவா? 

அதைப்போல, நன்மைகளால் உயர்வு அடைவதும் தீமைகளால் கீழ்நிலை அடைவதும் மாறி மாறி வரத்தான் செய்யும். அப்படி இருக்கும்போது, நீ ஏன் அழுகிறாய்? நல்லதோ, கெட்டதோ எவ்வளவு காலமானாலும் சரி! அவற்றை அனுபவிக்காமல் தப்ப முடியாது. யாராக இருந்தாலும், தாங்கள் செய்த செயல்களின் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்று சாமவேதத்தில் பரமாத்மா பிரம்மனுக்கு உபதேசித்திருக்கிறார்’’ என்று வியாழ பகவான்  இந்திரனுக்குக் கூறினார். 

அத்துடன் தானம் செய்வதின் மகிமை, அவற்றின் பலன்கள் அதிகரிக்கும் விதம், இடத்திற்குத் தகுந்தபடி தானப் பலன்கள் அதிகரிப்பது எனப் பல வகைகளிலும் இந்திரனுக்கு உபதேசம் செய்த வியாழ பகவான், இந்திரன் துயரத்தில் இருந்து விடுபட்டுப் பழைய நிலையை அடைய வழியும் காட்டினார். இந்திரனும் அப்படியே செய்து, பழையபடியே சொர்க்கலோக வாழ்வைப் பெற்றான். இப்படிப்பட்ட குருபகவான், நவகிரகங்களில் ஐந்தாவதாக இடம் வகிக்கிறார். 

இவருக்கு வியாழ பகவான், பிரகஸ்பதி என்ற வேறு பெயர்களும் உண்டு. தேவ குருவாக இந்திர சபையில் வீற்றிருக்கும் இவர் கல்வியில் சிறந்தவர், நுண்ணறிவு மிகுந்தவர், சாத்வீக குணம் மிகுந்தவர். மங்கலமே வடிவானவர்.

பிரம்மதேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கிரச முனிவருக்கும் சிரத்தா தேவிக்கும் புதல்வராக உதித்தவர் வியாழ பகவான். (தாயார் பெயர் வசுதா என்றும் சொல்லப்படுவதுண்டு). பரீட்சித்தின் பிள்ளையான ஜனமே ஜயன் என்பவன் பாம்புகளை எல்லாம் அழிப்பதற்காக ஒரு யாகத்தைச் செய்தான். அந்த யாகத்தை நிறுத்தச் செய்து, பாம்புகளையெல்லாம் காப்பாற்றியவர் வியாழ பகவான். ஒருசமயம், இந்திரன் தெய்வத்தின் திருவருளைச் சிந்தித்து, பக்தியில் ஆழ்ந்து, தான் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாதிருந்தான். தேவர்களுக்கு அரசனாக இருந்து தேவேந்திரன் அவ்வாறு கடமைகளைச் செய்யத் தவறியதால், தேவர்களின் வாழ்க்கையில் ஏராளமான இடையூறுகள் உண்டாகின. 

அந்த நேரத்தில் தேவர்கள் எல்லோரும் தங்கள் குருவான பிரகஸ்பதி பகவானிடம் போய் முறையிட்டார்கள். அவர்களின் குறையைக் கேட்ட வியாழ பகவான், இந்திரனின் மனதை மாற்ற, அவனை மறுபடியும் செயல்பாடுகளில் இறங்க வைக்க, வேறு வழியில்லாமல், உலகாயத வாழ்க்கை முறையை இந்திரனுக்கு உபதேசித்தார். ‘‘நன்றாக சுவைமிகுந்த உணவை உண்டு, விலை உயர்ந்த அலங்காரமான ஆடைகளை அணிந்து, பெண்களுடன் மகிழ்ச்சியாக சுகங்களை அனுபவிப்பதே வாழ்க்கையின் லட்சியம்’’ என்று பல விதங்களிலும் எடுத்துச் சொல்லி, இறைவழிபாட்டிலிருந்து இயல்பான வாழ்க்கைக்கு இந்திரனை இழுத்தார் வியாழ பகவான்.

இந்திரனும் வியாழ பகவானின் வார்த்தைகளால் மனம் மாறி, தெய்வ சிந்தனையைவிட்டு விலகினான். அதன்பிறகு தன்னுடைய சொர்க்க லோக வாழ்க்கையில் முன்னிலும் ஆர்வமாக ஈடுபட்டான். அவனை அப்படியே விட்டுவிட்டால் இழுக்கு உண்டாகும் என்பதால், சில காலம் சென்றதும் வியாழபகவான் மெல்ல மெல்ல இந்திரனுக்குக் கடவுள் உணர்வை ஏற்றினார். இவருக்குத் தெரியாத, இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் ‘சஞ்ஜீவினி’ என்ற வித்தையை, இவர் பிள்ளையான கசன், சுக்கிராச்சார்யாரிடம் சீடனாக இருந்து கற்றான்.

வியாழ பகவான் காசிக்குச் சென்று, ஒரு லிங்கத்தை நிறுவி வழிபட்டார். அந்த வழிபாடு, பதினாயிரம் தேவ வருடங்கள் நடந்தது. முடிவில் சிவபெருமான் அங்கே தரிசனம் தந்து வியாழ பகவானிடம், ‘‘அரும்பெரும் தவத்தைச் செய்து, உன் மனதை இந்த லிங்கத் தியானத்திலேயே நிறுத்தியதால் உன்னை ‘ஜீவன்’ என்று உலகத்தவர் வழங்குவார்கள். உன்னுடைய குணங்களாலும் நம்முடைய திருவருளாலும் நீ இந்திரனுக்கு குருவாக விளங்குவாயாக!’’ என்று சொல்லி வரமளித்தார் எனக் காசிகாண்டம் எனும் நூல் கூறுகிறது.

வியாழ பகவான் தங்க நிறம் கொண்ட திருமேனி படைத்தவர். நான்கு திருக்கரங்களைக் கொண்டவர். அவற்றில் கமண்டலம், அட்சமாலை, யோக தண்டம், அபயம் என ஏந்தி இருப்பார். 

சாந்தமான வடிவத்தோடு, சதுரமான பீடத்தில் இருப்பார். கிழக்கு நோக்கி, தலையில் மகுடம் தாங்கி வீற்றிருப்பார். பொன்னிறத் திருமேனி கொண்ட இவர் பொன்னிறச் சந்தனம் பூசி, பொன்னிற மலர், பொன்மாலை, பொன்னாடை, பொற்குடை, பொன்னிறக்கொடி, பொன் தேர் ஆகியவற்றைக் கொண்டவர். 

தனுர் ராசிக்கும் மீன ராசிக்கும் அதிபதியான வியாழ பகவானுக்கு உரியவை:

தானியம் - கடலை, 

ரத்தினம்-புஷ்பராகம், 

மலர்-முல்லை, 

சமித்து-அரசு, 

சுவை-இனிப்பு, 

உலோகம்-தங்கம், 

மிருகம்-மான், 

பட்சி-கௌதாரி, 

அன்னம்-தயிர்சாதம், 

திசை-வடக்கு, 

தேவதை-பிரம்மா, 

பிரத்யதி தேவதை-இந்திரன்.

இவருக்கு சுராசார்யார், வாகீசர், பீதாம்பரர், யுவர், திரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர், தயாகரர், நீதிகாரகர், தாராபதி, கிரஹபீடாபஹாரகர், சௌம்யமூர்த்தி என பல்வேறு திருநாமங்கள் உண்டு. 

வியாழ பகவான் தன் மனைவி தாரையோடும் பரத்துவாசர்-யமகண்டன்-கசன் என்னும் பிள்ளைகளோடும் எழுந்தருளி இருப்பார். இவருக்கு வாகனம் யானை; அன்ன வாகனம் என்றும் ஒரு நூல் கூறுகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர், வியாழ பகவானைத் துதித்து கீர்த்தனை எழுதியிருக்கிறார். வியாழ பகவான் மிகுந்த வலிமை உடையவர். 

சர்வ வியாபகர். வாக்குக்கு அதிபதி, இந்திரன் முதலானவர்களின் வழிபாட்டிற்கு உரியவர். திருமால் முதலானவர்களால் புகழ் பெறுபவர், வஜ்ராயுதம் கொண்டவர், கற்பகம் போல வேண்டியவற்றை அருள்பவர். ஏழைக்கு இரங்குபவர், பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்னும் நான்கு வகையான வாக்குகளாக விளங்குபவர், கருணைக்கடல், தூயவர், நீதி சாஸ்திர ஆசிரியர், களங்கமற்றவர்  என்றெல்லாம் ஸ்ரீதீட்சிதரின் கீர்த்தனை வியாழ பகவானைப் புகழ்கிறது. வியாழ பகவான் நமக்கு நல்ல வாக்கு வன்மையையும் ஞானத்தையும் அருள வேண்டுவோம்!

தன்னைப் பணிந்து விரதமிருந்து வழிபடும் அடியவர்க்கு அவரவர் வேண்டும் வரங்களைத் தந்து, குற்றங்களைக் களைந்து ஆபத்துக்களைப் போக்கி, நோய் நொடிகளை அகற்றி வேண்டிய செல்வங்களையும் கெளரவத்தையும், நல்ல சந்ததி ஏற்பட சற்புத்திர பாக்கியத்தையும் தருபவர், தனகாரகன், புத்திரகாரகன், பீதாம்பரர், பிரஹஸ்பதி, வியாழ பகவான் என போற்றப்படும் குருபகவான்.

இன்று நாமும் ஆசாரசீலராக விரத மிருந்து ஆலயம் சென்று குருபக வானையும் தெட்சணாமூர்த்தியையும், இஷ்ட தெய்வங்களையும் குல தெய்வங்களையும் வணங்கி வழிபட்டு குருபார்வை பெற்று சகல தோஷங்களும் நீங்கப் பெற்று மண்ணில் நல்லவண்ணம் வாழ்வோமாக!

மறைமிகு கலைநூல் வல்லோன்

வானவர்க் காவின் மந்திர்

நறைசொரி கற்பகப் பொன்

நாட்டினுக் அதிபனாகி

நிறைதனம் சிவிகை மண்ணில்

நீடு போகத்தை நல்கும்

இறையவன் குரு வியாழன்

இரு மலர்ப் பாதம் போற்றி!!

சுபம்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.