Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'தினமலருக்கு' , அளித்த, சிறப்பு பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக, அ.தி.மு.க., அணியின் கதவுகள் மூடப்பட்டு உள்ளதால், அனைவரின் பார்வையும், தி.மு.க., அணியின் பக்கம் திரும்பி உள்ளது.

இந்த நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'தினமலருக்கு' , நேற்று அளித்த, சிறப்பு பேட்டியில், பா.ஜ., கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி, தன்னுடைய நண்பர் என, கூறி, கூட்டணியின் போக்கு தொடர்பாக, புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளார்.

முழு பேட்டி வருமாறு:

* கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், இலவசங்களை அறிவிக்க, தேர்தல் கமிஷன் தடை போட்டிருக்கிறதே... அது பற்றி, தங்கள் கருத்து என்ன?இலவசங்களை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கும்போது, அதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது குறித்தும், தெளிவுபடுத்த வேண்டுமென்று, தேர்தல் கமிஷன் சொல்லியிருக்கிறது.

* வரும், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, இலவசங்கள், மானியங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லாமல் சந்திக்க, தி.மு.க., துணியுமா?வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில், தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலை யில், வாங்கும் சக்தி குறைவாகவே உள்ள, ஏழை, எளிய நடுத்தரக் குடும்பத்தினருக்குத் தேவையான இலவசங்கள் மற்றும் மானியங்களை வழங்குவது, தவிர்க்க முடியாதது.

* குஜராத் மாநிலத்தில், இலவசங்கள் இல்லாமல் இவ்வளவு மனித வளமும், தொழில் வளமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதே... அது, தமிழகத்தில் சாத்தியம் இல்லையா?

குஜராத் மாநிலத்தின், மனித வளம் மற்றும் தொழில் வளம் குறித்து, கருத்து வேறுபாடுகள், தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை, தி.மு.க., ஆட்சி காலங்களில், நாங்கள் நிரூபித்திருக்கிறோம். இந்தியாவில், தி.மு.க., ஆட்சியில், மூன்றாவது இடத்தில் இருந்த, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, இன்றைக்கு, அ.தி.மு.க., ஆட்சியில், எந்த அளவுக்கு, கீழ் நோக்கி, கடைசி இடத்துக்கு சென்று விட்டது என்பதை, நீங்களே அறிவீர்கள்.

* குஜராத் முதல்வர், மோடி குறித்து, உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன?

மோடி, மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர் என்பதை, அவர் தொடர்ந்து மேற்கொண்டு இருக்கும் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் உணர்த்துகிறது. அவர், எனக்கு நல்ல நண்பரும் கூட.

* திருச்சி மாநாட்டில், 'மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது' என, அறிவித்தீர்கள். அது, பா.ஜ., குறித்த அறிவிப்பா? தேர்தல் முடிந்த பின், பா.ஜ., கூட்டணியில் சேர வாய்ப்பிருக்கிறதா?

நான், மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது என்று, சொன்னது, உங்களுக்கு, பா.ஜ., குறித்த அறிவிப்பாக தோன்றுகிறது என்றால், நீங்களே, அந்த கட்சி, மதவாத கட்சி என்று, ஒப்புதல் வாக்குமூலம் தருகிறீர்களா! லோக்சபா தேர்தலுக்கு பின், என்ன நிலை என்பதை, இப்போதே யூகித்து கூற முடியாது.

* அ.தி.மு.க., அரசு செயல்படுத்தி வரும், 'அம்மா' உணவகங்கள் போன்ற மலிவு விலை திட்டங்கள், மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதா? அரசின் மலிவு விலை திட்டங்கள், எந்த அளவுக்கு, மக்களை சென்று அடைகின்றன என்பதைப் பற்றியும், அந்த திட்டங்களில், நாள்தோறும் ஏற்பட்டு வரும் பிரச்னைகளைப் பற்றியும், 'தினமலர்' பத்திரிகையை தொடர்ந்து படித்தாலே, புரிந்து கொள்ளலாம். 26.12.14 அன்று, 'தினமலர்' நாளிதழில் வந்த செய்திப்படி, சப்பாத்தி செய்வதற்காக வாங்கிய இயந்திரங்களில், கோளாறு என்றும், அதற்கான ஒப்பந்தத்தையே, ரத்து செய்வதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அந்த திட்டங்கள், எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு, இது ஒரு உதாரணம்.

* தே.மு.தி.க., மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல், அ.தி.மு.க.,வை, தேர்தலில், தி.மு.க.,வால் தனித்து எதிர்கொள்ள முடியுமா?

மூக்கைச் சொறிந்து விட முயற்சிக்கிறீர்கள்... அது உங்களால் முடியாது!

* தமிழகத்தில் இருந்து முதலீடுகள், பிற மாநிலங்களுக்கு செல்லவில்லை என்று, தமிழக அரசு கூறி வருகிறதே?

கோவையில், கர்நாடக முதல்வர், முதலீட்டாளர்களை, அவருடைய மாநிலத்திற்கு வருமாறு, நேரில் அழைத்தது பற்றியும், கோவை வட்டார முதலீட்டாளர்கள், 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வந்திருப்பது பற்றியும், செய்தி வெளியிட்டதே, 'தினமலர்' தானே!

* மின்சார பற்றாக்குறையை சமாளிக்க, இந்த அரசு, போதுமான நடவடிக்கை எடுத்துள்ளதா? தி.மு.க., ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

மின்சார பற்றாக்குறைக்கு சமாதானம் சொல்வதற்கு, அ.தி.மு.க., ஆட்சியினர் எடுத்து வரும் நடவடிக்கைகளை போல, மின்சார பற்றாக்குறையை சமாளிக்க, இந்த அரசு போதுமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது தான், உண்மை. ஆனால், நடவடிக்கை எடுப்பதாக, அவ்வப்போது, காலக்கெடு குறிப்பிட்டு, வாக்குறுதி வழங்கி வருகின்றனர். அந்த வாக்குறுதி எதையும், இதுவரை அவர்கள் காப்பாற்றவில்லை.

தி.மு.க., ஆட்சியில், மின்சார பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும், புதிய மின் திட்டங்களை தொடங்கினோம். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அந்த திட்டங்களில், அக்கறை காட்டாமல், தாமதம் செய்தனர். அதன்பின், அதிக அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், வேறு வழியின்றி, தி.மு.க., ஆட்சி திட்டங்களில் கவனம் செலுத்தினர்; அவற்றின் உற்பத்தி தான், தற்போது, ஆட்சியாளர்களை காப்பாற்றி வருகிறது.

* மின் துறையில், 43 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை, தி.மு.க., தான் சேர்த்து வைத்தது என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டுக்கு, பலமுறை விளக்கம் அளித்தாகி விட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், அவருடைய ஒவ்வொரு அறிக்கையிலும், தமிழக அரசுக்கு ஏராளமான கடன்களை, தி.மு.க., அரசு வாங்கி வைத்து விட்டதை போல குறிப்பிட்டார். 2006ம் ஆண்டு, மே மாதம் தான், தி.மு.க., ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன்பே, 31.3.2006 அன்றே, அதாவது, ஜெயலலிதா ஆட்சி செய்த, ஐந்து ஆண்டு காலத்திற்கு பின், தமிழக அரசின் மொத்த கடன் பொறுப்பு, 57 ஆயிரத்து 457 கோடி ரூபாய். அது போல தான், மின் வாரியத்திலும், 2005 - 06ம் ஆண்டில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு, கடன்சுமையை வைத்து விட்டு தான், ஜெயலலிதா

ஆட்சியை விட்டு இறங்கினார். இதுகுறித்து, தி.மு.க., பொறுப்புக்கு வந்தவுடன், ஜெயலலிதா இவ்வளவு கடன் சுமையை வைத்து விட்டு போய் விட்டார் என்று, அறிக்கை விட்டு கொண்டிருக்கவில்லை. அரசு என்றால், கடன் வாங்க தான் நேரிடும். அதுவும், இந்தியா போன்ற நாடுகளில், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், கடன் வாங்கி தான், நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

* மின் வெட்டால், கடுமையாக பாதிக்கப்பட்டு, உள்ளூர் நிறுவனங்கள் மூடப்பட்டு வரும் நிலையில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, 24 மணி நேர மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுப்பது சரிதானா?

உள்ளூர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதால், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, மின்சார வசதி செய்து கொடுக்கக் கூடாது என்று கூற முடியாது. பன்னாட்டு நிறுவனங்களில், பல்லாயிரக்கணக்கில், நமது ஊரைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் மூலம், நமக்கு கிடைக்கிற அனுகூலங்களை மனதில் கொண்டு, அவர்களுக்கு மின் வசதி போன்றவற்றை செய்து தர, நாம் கடமைப்பட்டவர்கள் தான். அதே நேரத்தில், உள்ளூர் நிறுவனங்களும் மின் வெட்டால் பாதிக்கப்படாமல் இருக்க, தேவையான அனைத்து முயற்சிகளிலும், அரசு ஈடுபட்டாக வேண்டும். தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு அடிப்படையில், உள்ளூர் தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பையும், பன்னாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதையும், சரிசமமாக பார்த்து கொள்ள வேண்டியது, அரசின் பொறுப்பாகும்.

* தற்போதைய ஆட்சி நிர்வாகம் குறித்து, என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ஆட்சி நிர்வாகம் குறித்து, உங்கள் மதிப்பெண் என்ன?

தற்போதைய ஆட்சி நிர்வாகம் குறித்து, திருச்சி மாநாட்டில் விரிவாக சொல்லியிருக்கிறேன். கருத்து சுதந்திரம், பறி போய்விட்டது. அதிரடி அறிவிப்புகள், ஆடம்பர முழுப் பக்க விளம்பரங்கள், '110' அறிக்கைகள், நிர்வாக அலங்கோலங்கள், அச்சத்தின் பிடியில் பத்திரிகைகள், தமிழகத்தின் அனைத்து பிரிவினரிடமும் சளிப்பு, அ.தி.மு.க.,வினரிடம் மட்டுமே களிப்பு, ஆக்கப்பூர்வமான திட்டம் ஏதுமில்லை, வளர்ச்சி பணி சிறிதுமில்லை. நடப்பது எல்லாம், திராவிட இயக்க லட்சியங்களுக்கு எதிரான காரியங்கள், தி.மு.க., ஆட்சியில், சிந்தித்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா; மத்திய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை; எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ஏகடிய பேச்சு; அரசியல் தரத்தை தாழ்த்தி, அன்றாடம் மற்றவர்கள் மீது குற்றச்சாட்டு, கேலிப் பேச்சு; ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஆட்சி தான், தமிழகத்தில் நடைபெறுகிறது. இங்கே நடைபெறுவது, ஆட்சி அல்ல; காட்சி; வெறும் காணொலி காட்சி. இவை தான், தற்போதைய ஆட்சி நிர்வாகம். இதற்கு, பள்ளிகளில் மாணவர்களுக்கு, சாதாரணமாக வழங்கப்படும், 'கருணை மதிப்பெண்' கூட கொடுப்பதற்கில்லை.

* நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கள் விற்பனைக்கு அனுமதி அளிப்பீர்களா?

கள் விற்பனைக்கு அனுமதி அளிப்பது குறித்து, தொடர்புடைய அனைத்து பிரிவினரிடமும், ஆலோசனை பெற்று பரிசீலிப்போம்.

* நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மது விற்பனை ஏற்கனவே இருந்தது போல், தனியாரிடம் வழங்கப்படுமா?

அப்போதைய சூழ்நிலைகளுக்கு

ஏற்பவும், நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகும், அரசின் நிதி நிர்வாகம் எவ்வாறு உள்ளது என்பதன் அடிப்படையிலும், சிந்தித்து முடிவெடுப்போம்.

* தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் பேசும்போது, 'நீங்கள் இன்னும் வளரவே இல்லை' என, உங்களை சொல்லியிருக்கிறாரே?

உண்மை தான். பொருளாதார ரீதியில், தனிப்பட்ட முறையில், நான் இன்னும் வளரவில்லை என்பதை தான், அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, இன்றைய முதல்வரை போல, கோடநாடு எஸ்டேட்டோ, சிறுதாவூர் பங்களாவோ இல்லாமல், தெரு வீடு ஒன்றில் வசித்து வருவதை தான், உண்மையான உணர்வோடு, நான் இன்னும் வளரவில்லை என்று, பன்னீர்செல்வம் கூறியிருப்பதாகக் கருதுகிறேன்.

* மக்களின் பொழுதுபோக்குக்காக, சென்னையில் விரைவில், 'அம்மா' தியேட்டர் கட்டப்படும் என, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனரே?

அ.தி.மு.க.,வினர் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். எந்த அளவிற்கு முதல்வரை பாராட்டுகிறோமோ, அந்த அளவிற்கு நமக்கு லாபம் உண்டு என்று கருதி தான், இப்படிப்பட்ட அறிவிப்புகளை செய்கின்றனர். இந்த அறிவிப்பு வெளிவருவதற்குள், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள், அதற்கு வரவேற்பு தெரிவித்து, அறிக்கையும் வெளிவிட்டனர். ஆனானப்பட்ட நடிகர்கள் சிலரே, பட்டபாட்டிற்கு பின், யாருக்காவது உண்மையான கருத்தை சொல்ல, துணிவு வருமா என்ன?

* லோக்சபா தேர்தலில், கட்சிக்காரர்கள், உங்களுக்கும் விருப்ப மனு போட்டிருக்கின்றனர்; தேர்தலில் போட்டியிடுவீர்களா?

என் உயரம் எனக்கு தெரியும் என்று, பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆர்வத்தாலும், என் மீதுள்ள பற்று காரணமாகவும், விருப்ப மனு செய்திருக்கின்றனர்.

* உங்களுக்கு பிரதமர் ஆகும் ஆசை இல்லையா?

நிச்சயமாக இல்லை!

* 'காங்கிரசுடன் கூட்டணி இல்லை' என்று, பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள். பிறகும், காங்., தரப்பில், உங்களுக்கு தொடர்ந்து தூது வந்து கொண்டிருக்கிறதாமே?

பா.ஜ.வுடன், அ.தி.மு.க., கூட்டணி அமைத்து, பல தொந்தரவுகளை செய்து, இறுதியாக அந்த கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., விலகியது. அப்போது, பிரதமராக இருந்த மூத்த தலைவர், வாஜ்பாய், 'நான் இன்று தான் நிம்மதியாக தூங்குவேன்' என்று கூறினார். அந்த அளவிற்கு, அ.தி.மு.க.,வோடு கூட்டணி அமைந்தபோது, பா.ஜ.,வுக்கு நெருக்கடிகள். ஆனால், தற்போது காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று, நாங்கள் முடிவெடுத்த பிறகும், அந்த கட்சியின் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் போன்றவர்கள், எங்களோடு தோழமையோடு பழகுகின்றனர் என்றால், நாங்கள் பின்பற்றிய, கூட்டணி பண்பாடும், அரசியல் நாகரிகமும் தான் காரணம்.

* இத்தனைக்கு பிறகும், காங்கிரசோடு, தி.மு.க., கூட்டணி அமைக்குமா?

பொதுவாக, எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை.

* 'எங்கள் அணிக்கு தே.மு.தி.க., வந்தால் வரவேற்போம்' என, சொல்லி கொண்டிருக்கிறீர்கள். ஆனால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி, தொடர்ந்து தி.மு.க.,வை விமர்சிக்கின்றனரே?

அந்த விமர்சனங்களுக்கு, நான் இதுவரையில் பதில் சொல்லவில்லை என்பதை, நீங்கள் அறிந்து தானே இருக்கிறீர்கள்.

* உங்கள் அணியில் இருக்கும் ஜவாஹிருல்லா, திருமாவளவன், எஸ்ரா சற்குணம் என, பலரையும் விஜயகாந்திடம் தூது அனுப்பியும், அவர் தொடர்ந்து முரண்டு பிடிக்கிறாரே?

உங்கள் கேள்வி முற்றிலும் தவறு. இவர்கள்

Advertisement

யாரையும், நாங்கள், விஜயகாந்திடம் தூது அனுப்பவில்லை.

* 'பா.ஜ,வும், தி.மு.க.,வும் கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறது' என, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, தொடர்ந்து சொல்லி வருகிறாரே?

எந்த அடிப்படையில், அவர் அவ்வாறு சொல்கிறார் என்பதை, அவரிமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

* மூப்பனாருக்கு, பிரதமர் பதவிக்கான வாய்ப்பு வந்தபோது, அதை தடுத்தீர்கள் என, தொடர்ந்து உங்கள் மீது, குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?

இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய் என்பதை, பலமுறை தெளிவுபடுத்தி இருக்கிறேன். பிரதமர் பதவியை, மூப்பனாரே விரும்பவில்லை என்பது தான் உண்மை.

* 'தி.மு.க.,வில் தான் ஜனநாயகம்

தழைத்தோங்குகிறது' என, நீங்கள் சொல்கிறீர்கள்; ஆனால், தற்போது உட்கட்சி தேர்தலில், முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழப்படுகிறதே?

பாதிக்கப்படுவோர், முறைகேடுகள் நடப்பதாக தான் சொல்வர். பொதுத் தேர்தல்களில் கூட, முறைகேடுகள் நடப்பதாக தான், புகார்கள் வருகின்றன. அதனால், இந்தியா ஜனநாயக நாடு இல்லை என்றாகி விடுமா!

* தமிழக அரசின், 'தொலைநோக்கு திட்டம் - 2023' சாத்தியப்படுமா?

தொலைநோக்குத் திட்டத்தில் இலக்குகளும், அவற்றை அடைவதற்கு, தேவையான நிதியை திரட்டுவதற்கான அடிப்படை ஆதாரம் எதையும் குறிப்பிடவில்லை. உதாரணமாக, அரசின் ஆறு துறைகளில் மட்டும், 217 உட்கட்டமைப்பு திட்டங்களை, 15 லட்சம் கோடி ரூபாயில் செயல்படுத்துவது குறித்து, சொல்லியிருக்கின்றனர். அந்த 15 லட்சம் கோடி ரூபாயை, எப்படி திரட்டுவது என்பதைப் பற்றியோ, இதுவரை எவ்வளவு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியோ, எந்த குறிப்பும் இல்லை.

அத்திட்டத்தில் சொல்லியிருக்கும் கணக்குப்படி பார்த்தால், 2014 - 15ம் ஆண்டிற்குள், பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களில், 2,13,258 கோடி ரூபாய், முதலீடு செய்திருக்க வேண்டும். அதில், இதுவரை எந்த அளவுக்கு, முதலீடு செய்திருக்கின்றனர் என்பதை, அரசு தான் விளக்க வேண்டும்.

* தென் மாவட்டங்களுக்கான இரட்டை ரயில் பாதை திட்டம், நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. ஆனால், டி.ஆர்.பாலு, மன்னார்குடியில் இருந்து, ஜோத்பூருக்கு ரயில் விட கோரிக்கை விடுத்து, சாதித்தும் காட்டியுள்ளார். இது மட்டும் எப்படி சாத்தியமாகிறது? இரட்டை ரயில் பாதை என்பது, மிகப் பெரிய திட்டம்; ஏராளமாக பொருள் செலவழிக்கப்பட வேண்டிய திட்டம். அதுவும் படிப்படியாக நிறைவேறி வருகிறது. ஆனால், மன்னார்குடியில் இருந்து, ஜோத்பூருக்கு ஒரே ஒரு ரயில் விடுவதை, இரட்டை ரயில் பாதை திட்டத்தோடு ஒப்பிட முடியாது.

* தென் மாவட்டங்களின் வளர்ச்சியில், உங்களுக்கு உண்மையில் அக்கறை இருக்கிறதா? அனைத்து திட்டங்களும், சென்னையை சுற்றியே அமைக்கப்படுகிறதே... இது ஏன்?

தி.மு.க., ஆட்சியில், தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக, உச்ச நீதிமன்ற, முன்னாள் நீதிபதி, ரத்தினவேல் பாண்டியன் தலைமையில், வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. மாறன், மத்திய தொழில் அமைச்சராக இருந்தபோது தான், தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக, நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டது. ஏன், தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக தான், சேது சமுத்திர திட்டத்தை, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

* 'தலித் மக்களுக்கு, தனி வங்கி ஏற்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. அதை செயல்படுத்துவீர்களா?

வாய்ப்பு வரும்போது, நிச்சயமாக அதை செயல்படுத்துவோம்.

* தமிழகத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு வருமா?

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பதே, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதும், முரணானதுமாகும்.

* சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டத்துக்கு, தமிழக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதன் உண்மையான பின்னணி தான் என்ன?

காழ்ப்புணர்ச்சி; தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்; அது தான், காரணம்.

* மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை, ஏற்கனவே, 'சின்னப் பயல் சிதம்பரம்' என, விமர்சித்திருக்கிறீர்கள். அரிசிக்கும் வரி போட்டபோது, உங்கள் விமர்சனம் சரி தான் என, நினைக்க தோன்றியதாக, பலரும் பேசிக் கொள்கின்றனரே?

'தினமலர்' பாணியில், இதுவரை, எந்த கேள்வியும் கேட்கப்படவில்லையே என்று, நினைத்து கொண்டிருந்தேன். பூனைக்குட்டி வெளிவந்து விட்டதை போல, இந்த கேள்வியை கேட்டிருக்கிறீர்கள்! மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை, நான் எப்போதும், நாகரிகக் குறைவாக நடத்தியதோ, பேசியதோ கிடையாது என்பதை, அவர் நன்றாகவே அறிவார். பொய்யை சொல்வதற்கும், ஒரு பொருத்தம் வேண்டாமா! சிதம்பரம் மீது, 'தினமலருக்கு' அப்படி என்ன தான் தீரா கோபமோ! அரிசிக்கான வரியைக் கூட, அவர் திரும்ப பெற்று விட்டாரே!

* தேசிய அரசியலில், தி.மு.க.,வின் முகமாக, கனிமொழி முன்னிறுத்தப்படுவாரா?

லோக்சபா, ராஜ்யசபாவில் உள்ள, தி.மு.க., உறுப்பினர்கள் அனைவருமே, தேசிய அரசியலில், தி.மு.க.,வின் முகங்கள் தான். தி.மு.க.,வை பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில், யாரும் முன்னிறுத்தப்படுவதில்லை என்பது தான் நிதர்சனம்.

* மத்திய அமைச்சர் வாசனுக்கு, தி.மு.க., தரப்பில் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை விட்டு கொடுத்திருக்கலாம் என, காங்கிரசில் கருத்து இருக்கிறதே? அப்படி எந்த கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை.

* நடிகை குஷ்புவுக்கு, லோக்சபா தேர்தலில், 'சீட்' வழங்கப்படுமா?

லோக்சபா தேர்தலில் போட்டியிட, விருப்ப மனு எதையும், அவர் தாக்கல் செய்ததாக தெரியவில்லை.

* தி.மு.க., சார்பில், போட்டியிட, வாரிசுகளுக்கு, 'சீட்' வழங்குவீர்களா?

நேர்காணல் முடிந்து, வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படும்போது, உங்களுடைய இந்த கேள்விக்கு விடை கிடைக்கும். இவ்வாறு, கருணாநிதி பேட்டி அளித்தார்.

- நமது நிருபர் குழு -

Dinamalar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
* மூப்பனாருக்கு, பிரதமர் பதவிக்கான வாய்ப்பு வந்தபோது, அதை தடுத்தீர்கள் என, தொடர்ந்து உங்கள் மீது, குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே? 

 

 

அடிக்கடி ஞாபகப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கின்றோம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.