Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைன்... இந்த ரஷ்யா- அமெரிக்காவுக்கு என்ன தான் பிரச்சனை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.கே.கான்

 

கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவை ஒட்டிய மிக முக்கிய தேசம் உக்ரைன். அங்கே ஒரு உக்கிரமான மோதலுக்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் தயாராகி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 603,628 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த தேசம் ஐரோப்பிய யூனியனில் இணைந்தால் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய தேசமாக இருக்கும்.

 

03-russia-10-600.jpg

 

15ம் நூற்றாண்டு முதலே இந்த நாட்டின் பல்வேறு பகுதிகள் பல்வேறு குழுவினரால், நிர்வாகங்களால் ஆளப்பட்டு வந்தன. இந்த நாட்டின் முக்கிய அம்சமே அதன் மண் வளம் தான். இந்த நாட்டின் பெரும்பாலான பகுதி விளை நிலமாக உள்ளதால் உலகிலேயே விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியில் 3வது இடத்தில் உள்ளது இந்த நாடு. மேலும் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இருந்தபோது தொழில்துறையிலும் பெரும் வளர்ச்சி கண்டது இந்த தேசம். உக்ரைன் நாட்டில் 24 மாகாணங்களும், சுயாட்சி பெற்ற கிரைமியா என்ற பகுதியும் அடக்கம். இதில் கிரைமியா மீது ரஷ்யாவுக்கு எப்போதுமே கண் உண்டு.

 

 

 

 

உக்ரைனில் ரஷ்ய கடற்படைத்தளம்

 

 

இந்த கிரைமியாவில் உள்ள ஸ்வெஸ்டோபோல் நகரில் இன்னும் ரஷ்யாவின் கருங்கடல் பிரிவு கடற்படை நிலை கொண்டிருக்கிறது. அதாவது சுதந்திர நாடாக இருந்தாலும் இந்த நாட்டை ஆண்டவர்கள் பலரும் ரஷ்ய ஆதரவு நிலை கொண்டே இருந்ததால் ரஷ்ய கடற்படை இங்கு சுதந்திரமாக வலம் வருகிறது.

 

03-russian-fleet-600.jpg

 

சுமார் 4.6 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் உக்ரைனியர்கள். 17 சதவீதம் பேர் ரஷ்யர்கள். மேலும் பெலாரஷ்யர்கள், ருமேனியர்களும் கணிசமாக வசிக்கின்றனர். உக்ரைன் தான் இந்த நாட்டின் தேசிய மொழி என்றாலும் சோவியத் ஆளுமையில் இருந்ததால் ரஷ்ய மொழியும் பரவலமாக பயன்பாட்டில் உள்ளது. இந்த நாட்டை ஆக்கிரமிக்கவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் பல நூற்றாண்டுகளாகவே பல போர்கள், தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 1657 முதல் 1686 வரை 30 ஆண்டுகாலம் இந்த நாட்டைக் கைப்பற்ற ரஷ்யா, போலந்து, துருக்கி மற்றும் கோசாக்ஸ் பிரிவினரிடையே போர் நடந்தது. இதில் ஸ்வீடனும், லித்துவேனியாவும் தலையிட்டு சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் நடந்தது.

 

 

உக்ரைன் மொழிக்கே தடை

 

 

1768ம் ஆண்டில் லித்துவேனியா, போலந்துக்கு எதிராக உக்ரைனில் நடந்த Koliivshchyna புரட்சியில் ஆயிரக்கணக்கான போலந்து மக்களும் அவர்களுக்கு ஆதரவாய் இருந்த jews மக்களும் கொல்லப்பட்டனர். 1783ம் ஆண்டில் கிரைமியா பகுதியை ரஷ்யா தனது நாட்டுடன் இணைத்தது. இதற்கு New Russia என்ற நாமகரணமும் சூட்டப்பட்டு உக்ரைனியர்களும் ரஷ்யர்களும் ஏராளமாக குடியமர்த்தப்பட்டனர். இதனால், ரஷ்யர்கள் உக்ரைனியர்களிடையே மோதல்கள் வெடித்தன. ரஷ்ய நாட்டை ஜார் மன்னர்கள் ஆண்டபோது உக்ரைன் முழுவதுமே ரஷ்யமயமாக்கப்பட்டதோடு, உக்ரைன் மொழிக்கே கிட்டத்தட்ட தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர் உக்ரைனில் அதிக அளவில் துருக்கி மக்கள் குடியேற ஆரம்பித்தனர்.

 

03-kiev-600.jpg

 

 

1768-1774ம் ஆண்டில் ரஷ்யா- துருக்கி இடையே போர் வெடித்தது. அப்போது ரஷ்யாவுக்கு உக்ரைனும் கிரைமியாவும் ஆதரவு தந்தன. மேலும் நாட்டில் துருக்கியர்களை சிறுபான்மையினராக்குவதற்காக ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பியர்களுக்கு நாட்டைத் திறந்துவிட்டன உக்ரைனும் கிரைமியாவும். இதனால் ஐரோப்பியர்கள் அதிக அளவில் குடியேற ஆரம்பித்தனர். 19ம் நூற்றாண்டில் உக்ரைன் கிட்டத்தட்ட ஒரு ஏழை, கிராமப்புற நாடு என்ற அளவுக்கு தரம் தாழ்ந்தது. இதனால் அந்த நாட்டின் மீது ரஷ்யா அதிக அக்கரை செலுத்தவில்லை. இந்த காலகட்டத்தில் உக்ரைனில் இருந்து மக்கள் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் குடியேற ஆரம்பித்தனர். சைபீரியாவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்ட பின் கிட்டத்தட்ட 17 லட்சம் உக்ரைனியர்கள் ரஷ்யாவை ஒட்டிய பகுதிகளில் குடியேற ஆரம்பித்தனர். 

 

 

ஆஸ்திரியா Vs ரஷ்யா

 

இந் நிலையில் முதலாம் உலகப் போர் வெடிக்கவே அதில் உக்ரைன் நாட்டின் ஒரு பிரிவினர் ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகவும் இன்னொரு பிரிவினர் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் போரில் குதித்தனர். இந்தப் போரின்போதே ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மக்களை போராடத் தூண்டியது ஆஸ்திரியா. இதற்கு ஹங்கேரியும் ஆதரவு தந்தது. முதலாம் உலகப் போரின் முடிவில் ரஷ்ய, ஆஸ்திரிய ஆட்சிகள் இரண்டும் கவிழ்ந்தன.

 

03-war-600.jpg

 

1917ம் ஆண்டில் ரஷ்யப் புரட்சி ஆரம்பித்த போது உக்ரைனிலும் தீவிர கம்யூனிஸ சிந்தனைகளுடன் உருவான பல அமைப்புகள் உக்ரைனின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததோடு, அந்தப் பகுதிகளை தனி சுயாட்சி கொண்ட நாடுகளாக அறிவித்து, ரஷ்யாவுக்கு ஆதரவு தந்தன. இன்னும் இரு பிரிவினர் உக்ரைனின் பிற பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆஸ்திரியா, ஹங்கேரிக்கு ஆதரவு தந்தன. இதனால் ரஷ்ய மற்றும் ஆஸ்திரிய, ஹங்கேரி ஆதரவுப் பிரிவினரிடையே மோதல் வெடித்து உக்ரைனில் உள்நாட்டுப் போர் மூண்டது. இந் நிலையில் உக்ரைன் மீது போலந்து போர் தொடுத்து நாட்டின் மேற்கு, கிழக்குப் பகுதிகளை ஆக்கிரமித்தது. ரஷ்யாவும், பெலாரஸ் நாடும் மற்ற பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டன.

 

 

 

 

சோவியத் யூனியன்

 

 

1922ம் ஆண்டு டிசம்பரில் சோவியத் யூனியனை ரஷ்யா உருவாக்கியபோது உக்ரைனை அதில் இணைத்தது ரஷ்யா. இதையடுத்து தனது படைகளை அனுப்பிய சோவியத் யூனியன் போலந்து வசம் இருந்த பல உக்ரைன் பகுதிகளையும் கைப்பற்றியது. ஆனாலும் மேற்கு உக்ரைனின் ஒரு பகுதி போலந்து வசமே மீண்டும் தரப்பட்டது. புகோவினா பகுதியை ருமேனியாவும், கார்பதியன் ருதேனியா பகுதியை அமெரிக்கா ஆதரவுடன் செக்கோஸ்லோவாக்கியாவும் ஆக்கிரமித்தன.

 

03-ussr--600.jpg

 

இதற்கிடையே சோவியத் யூனியனிடம் இருந்து உக்ரைனை விடுவிக்க போலந்து நாட்டில் Organisation of Ukrainian Nationalists (OUN) என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்புக்கும் சோவியத் ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் 15 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக உக்ரைன் மொழி மீதான தடையை சோவியத் யூனியன் நீக்கியது. உக்ரைன் இலக்கியவாதிகளுக்கு ஆதரவு தந்தது. மருத்துவ சேவைகள், கல்வி, சமூகப் பாதுகாப்பையும் உக்ரைன் மக்களுக்கு சோவியத் வழங்கியது. இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. உக்ரைன் தொழிலாளர்கள், கீழ் மட்ட மக்களிடையே சோவியத் யூனியனுக்கு ஆதரவு பெருகியது. சோவியத் யூனியனின் தொழில் புரட்சியால் உக்ரைனின் பொருளாதாரமும் பெரும் வளர்ச்சி கண்டது.

 

 

மக்களை பட்டினி போட்டு கொன்ற சோவியத் யூனியன்:
 

ஆனால், கூட்டு விவசாயம் என்ற பெயரில் சோவியத் யூனியன் கொண்டு வந்த திட்டங்களை உக்ரைன் விவசாயிகள் ஏற்க மறுத்தனர். இதனால் அவர்களின் விளை பொருட்களை சோவியத் யூனியன் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டதோடு விவசாயிகளை பட்டினி போட்டு கொல்ல ஆரம்பித்தது. மாபெரும் சோவியத் ராணுவம், உளவுப் பிரிவினரை விவசாயிகளால் எதிர்க்க முடியவில்லை. இதனால் பல லட்சம் விவசாயிகள் பட்டினியால் இறந்தனர்.

 

03-famine-in-berdyansk-ukrain.jpg

 

இதற்கு எதிராக உக்ரைன் மக்கள் போராட்டத்தில் இறங்கியபோது அவர்களை ராணுவத்தைக் கொண்டு கொடூரமாக அடக்கியது சோவியத் யூனியன். 1929-34 மற்றும் 1936-38 ஆண்டுகளுக்கு இடையே சுமார் 7 லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந் நிலையில் இரண்டாம் உலகப் போர் வெடிக்கவே, போலந்துக்குள் நுழைந்த ஜெர்மனியும் சோவியத் யூனியனும் அந்த நாட்டை இரண்டாகப் பிரித்து கைப்பற்றின. இதில் போலந்து வசம் போன உக்ரைன் பகுதிகளை மீண்டும் உக்ரைனுடன் இணைத்தது சோவியத் யூனியன். இதையடுத்து சோவியத் மிரட்டலுக்குப் பணிந்து ருமேனியாவும் தன் வசம் இருந்த உக்ரைன் பகுதிகளை திருப்பித் தந்தது.
 

 

 

ஜெர்மனி- ரஷ்யா மோதல்

 

இந் நிலையில் சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைனுக்குள் ஹிட்லரின் ஜெர்மன் ராணுவம் 1941ம் ஆண்டில் புகுந்தது. உக்ரைனின் கிவ் நகரைப் பிடிக்க முயன்ற ஜெர்மன் படைகளை சோவியத் படைகள் கடுமையாக எதிர்த்தன. அவர்களுடன் உக்ரைன் மக்களும் இணைந்து போராடினர். ஆனால், Organisation of Ukrainian Nationalists அமைப்பினர் ஜெர்மன் படைகளுடன் இணைந்து சோவியத் படைகளை எதிர்த்தன. இந்த நகரை ஜெர்மனியிடம் இருந்து காக்க 6 லட்சம் சோவியத் படைகளும் உக்ரைன் மக்களும் உயிர்ப் பலி கொடுத்தனர்.

 

03-hitler-600.jpg

 

இரண்டாம் உலகப் போரின் முடிவில் உக்ரைன் பெரும் சேதத்துக்கு உள்ளானது. அதன் நகர்கள் பெரும் அழிவை சந்தித்தன. ஹிட்லர் கொல்லப்பட்டு போர் முடிவுக்கு வந்தவுடன் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் யூனியன் பெரும் பலம் அடைந்தது. வேகவேகமாக பல நாடுகளை தனது நாட்டுடன் இணைத்தது. உக்ரைனில் இருந்து பல லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு, அங்கு ரஷ்யர்களின் எண்ணிக்கையை செயற்கையாக அதிகரித்தது சோவியத் யூனியன்.

 

குருசேவால் வந்த அமைதி

 

சோவியத் அதிபர் ஸ்டாலினின் மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த நிகிதா குருசேவ், தனது நாட்டின் உக்ரைன் கொள்கையை மாற்றினார். உக்ரைனுக்கு அதிக அதிகாரங்கள் தந்தார். சோவியத் வசம் இருந்த கிரைமியா சுயாட்சிப் பகுதியை மீண்டும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் தந்தார். சோவியத் யூனியனின் பெரும் வளர்ச்சி கொண்ட பகுதியாக உக்ரைன் உருவெடுத்தது. சோவியத் யூனியனின் மொத்த பட்ஜெட்டில் 20 சதவீதம் உக்ரைன் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது. சோவியத் யூனியனின் முக்கிய தொழில் கேந்திரமாக உக்ரைன் மாறியது. சோவியத் யூனியனின் முக்கிய ஆயுத தளவாட நிறுவனங்கள், விண்வெளி ஆய்வு மையங்கள் உக்ரைனில் நிறுவப்பட்டன.

 

03-nikita-khrushchev-600.jpg

 

 

சோவியத் யூனியனின் எதிர்காலத் தலைவர்கள் பலரை உக்ரைன் உருவாக்கியது. உக்ரைனைச் சேர்ந்த லியோனிட் பிரஸ்நேவ் சோவியத் அதிபராகவும் ஆனார். 1986ல் உக்ரைனில் செர்னோபில் அணு உலை வெடித்தது நினைவுகூறத்தக்கது. 1990ல் கோர்பசேவ் அதிபராக இருந்தபோது கொண்டு வந்த சீர்திருத்த, ஜனநாயக, சுதந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து உக்ரைன் சுயாட்சி கோர ஆரம்பித்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றியது. 1991ம் ஆண்டில் கோர்பசேவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு ராணுவ ஆட்சி கொண்டு வர சோவியத் யூனியனின் ஒரு பிரிவு கம்யூனிஸ்ட் தலைவர்கள் முயல, அந்தப் புரட்சி தோற்றது. இதையடுத்து சோவியத் யூனியன் கலகலக்க ஆரம்பித்தது.

 

 

 

 

சுதந்திர நாடாக அறிவித்த உக்ரைன்:

 

அந்த சூழலைப் பயன்படுத்தி 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது உக்ரைன் நாடாளுமன்றம். இதைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் 90 சதவீத மக்கள் தனி நாடு ஆனதை ஆதரித்து வாக்களித்தனர். இதையடுத்து டிசம்பர் 21ம் தேதி சோவியத் யூனியன் கலைக்கப்பட்டு உலகின் மாபெரும் வல்லரசு சிதறுண்டது. பல நாடுகளும் சோவியத் யூனியனிடம் இருந்து பிரிந்து போயின.

03-ukraine-independence-600.jpg

 

ஆனால், சோவியத் யூனியனின் பிரிவை/ சரிவைத் துவக்கி வைத்தது உக்ரைன் தான். இதைத் தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் உக்ரைனின் பொருளாதாரம் படுபாதாளத்துக்குப் போனது. ஊழலும் குற்றங்களும் பெருமளவில் அதிகரித்தன. பெரும் பணவீக்கத்தோடு வேலையில்லாமையும் அதிகரிக்கவே அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. 2004ம் ஆண்டில் பெரும் முறைகேடுகளுக்கு இடையே விக்டர் யனுகோவ்ச் பிரதமரானார். 2006லும் இவரே பிரதமரானார். ஆனால், ஆட்சி கவிழ்ந்து 2007ல் நடந்த தேர்தலில் டிமோசென்கோ பிரதமரானார். இவருக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நல்லுறவு இல்லாமல் போனதால், உக்ரைனுக்கு எரிவாயு சப்ளையை நிறுத்தியது ரஷ்யா. இதனால் மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாயினர். 2010ம் ஆண்டு முன்னாள் பிரதமர் விக்டர் யனுகோவ்ச் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வென்றார். இந்தத் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் அதற்கு ரஷ்யாவே காரணம் என்றும் புகார்கள் எழுந்தன.
 


 

 

 

யனுகோவ்ச்- புடினால் வந்த வினை

 

2013ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி ரஷ்ய அதிபர் புடினின் ஆலோசனையால் ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்தார் யனுகோவ்ச். இதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை ஆரம்பிக்கவே, அதை ராணுவத்தைக் கொண்டு அடக்கினார் யனுகோவ்ச். இதில் பலர் பலியாயினர். இதையடுத்து உள்நாட்டுக் கலவரம் வெடித்தது.

 

03-putin--viktor-yanukovych-60.jpg

போராட்டக்காரர்கள் அரசுக் கட்டடங்களை ஆக்கிரமித்துக் கொள்ள, ராணுவத்தின் ஒரு பிரிவும் அவர்களை ஆதரிக்க ஆரம்பித்தது. இதையடுத்து நடந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் உக்ரைன் அதிபருக்கு உதவும் வகையில் அந்த நாட்டு அரசின் 15 பில்லியன் டாலர் கடன் பத்திரங்களை ரஷ்யா வாங்கும் என்றும், உக்ரைனுக்கான எரிவாயு விலையை குறைப்பதாகவும் புடின் அறிவித்தார். ஆனால் மக்கள் போராட்டம் தொடர்ந்து வலுக்கவே அதிபர் யனுகோவ்ச்சுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்தார் உக்ரைன் பிரதமர் அஸாரோவ்.

 

 

 

யுலியா டிமோசென்கோ விடுதலை

 

போராட்டக்காரர்கள் அரசுக் கட்டடங்களை விட்டு வெளியேறினால் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தார் யனுகோவ்ச். ஆனால் மக்கள் செவி சாய்க்கவில்லை. இதையடுத்து பிப்ரவரி 21ம் தேதி எதிர்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தார் அதிபர் யனுகோவ்ச். விரைவில் தேர்தல் நடத்த ஒப்புக் கொண்டதோடு, அவரது அதிகாரத்தையும் உடனடியாகக் குறைக்க ஒப்புக் கொண்டார்.

 

03-yulia-tymoshenko-600.jpg

யனுகோவ்ச் அரசால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரும் எதிர்க் கட்சியின் முக்கியத் தலைவருமான யுலியா டிமோசென்கோவை உடனடியாக விடுதலை செய்து நாடாளுமன்றம் உத்தரவிட்டது. 22ம் தேதி அதிபர் யனுகோவ்ச்சையே பதவி நீக்கம் செய்து உக்ரைன் நாடாளுமன்றம் உத்தரவிட்டது. மே 25ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. சபாநாயகர் ஒலக்ஸாண்டர் டர்ச்சினோவ் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டு, புதிய இடைக்கால அரசும் நியமிக்கப்பட்டது. பிரதமராக அர்செனிவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

'எஸ்கேப்' யுனுகோவ்ச்

 

இந்த அரசு உடனடியாக யுனுகோவ்ச்சை கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அவர் இரவோடு இரவாக தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் தலைநகர் கிவியில் உள்ள தனது மாளிகையில் இருந்து குடும்பத்துடன் தப்பினார். அவர் எங்கு தப்பிச் சென்றார் என்ற விவரம் தெரியாத நிலையில், ரஷ்யாவில் அடைக்கலம் அடைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இந் நிலையில் பிப்ரவரி 26ம் தேதி உக்ரைன் எல்லைப் பகுதியில் போர் பயிற்சியைத் தொடங்கியது. 27ம் தேதி ரஷ்ய ஆதரவுப் படையினர் முகமூடிகளுடன் உக்ரைன் தலைநகரில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களைக் கைப்பற்றினர்.

 

03-viktor-yanukovych-escape-60.jpg

யனுகோவ்ச் தனது நாட்டில் தான் உள்ளதாகவும் அவருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் அளிக்கப்படும் என்றும் ரஷ்யா அறிவித்தது. 28ம் தேதி ரஷ்ய ஆதரவுப் படையினர் உக்ரைனின் கிரைமியா பகுதியின் முக்கிய விமான நிலையங்களைக் கைப்பற்றினர். ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசரமாகக் கூடி நிலைமையை ஆலோசித்தது. உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவம் ஊடுருவினால் கடும் விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்தார்.

 

 

 

புகுந்தன ரஷ்யப் படைகள்

 

ஆனால், உக்ரைனில் உள்ள தனது கடற்படைத் தளத்தை பாதுகாக்கவே தனது படைகள் கிரைமியாவுக்குள் நுழைந்துள்ளதாக புடின் பதில் தந்துள்ளார். கடந்த மார்ச் 1ம் தேதி உக்ரைனுக்கு ராணுவத்தை அனுப்ப புடினுக்கு அதிகாரம் வழங்கி ரஷ்ய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கையைத் தந்துள்ளது. புடினுடன் பராக் ஒபாமா ஒன்றரை மணி நேரம் தொலைபேசியில் பேசி கிரைமியாவில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், உக்ரைனில் வாழும் ரஷ்ய மக்களை காக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகக் கூறி, ஒபாமாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் புடின். நேற்றைய நிலவரப்படி ஆயிரக்கணக்கான ரஷ்ய ராணுவத்தினர் கிரைமியாவுக்குள் ஊடுருவிக் கொண்டுள்ளனர்.

 

03-russian-forces--600.jpg

 

எங்கள் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.. உலக நாடுகள் எங்களைக் காக்க வேண்டும் என்று உக்ரைன் பிரதமர் அர்செனிவ் கோரிக்கை விடுத்துள்ளார். இந் நிலையில் இன்று உக்ரைனும் தனது ராணுவத்தை ரஷ்ய எல்லை நோக்கி குவித்து வருவதோடு, ரிசர்வ் படையினரையும் தயார் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

 

 

 

 

ரஷ்யாவுக்கு ஆதரவாய் உக்ரைன் கடற்படை தளபதி

 

இதற்கிடையே உக்ரைன் கடற்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அட்மிரல் டெனிஸ் பெரேஸோவ்ஸ்கி ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாக அறிவித்து நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறார். மேலும் உக்ரைன் ஆட்சியாளர்களின் கட்டளையை நிராகரிக்குமாறும் கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

03-denys-berezovsky--600.jpg

 

இந் நிலையில் ரஷ்யாவில் வரும் ஜூன் மாதம் நடக்க இருந்த ஜி-8 அதிபர்கள் மாநாட்டை அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து ஆகியவை ரத்து செய்துவிட்டன. புடின் தனது நிலையில் பிடிவாதமாக இருப்பதால் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், போலந்து அதிபர் கோமோரோவ்ஸ்கி என பல நாட்டுத் தலைவர்களுடனும் தொலைபேசியில் ஆலோசனைகள் நடத்த ஆரம்பித்துள்ளார் ஒபாமா. அதே நேரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நேடோ படையினரும் தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றனர். உக்ரைனுக்கு தங்களது ஆதரவை நேரில் தெரிவிக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி நாளை கிவ் நகருக்கு வரவுள்ளார்.
 

 

 

 

என்னதான் பிரச்சனை
 

 

இன்றைய நிலவரப்படி உக்ரைன் கடல் பகுதிக்கு தனது 2 போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது ரஷ்யா. இவை தவிர பல ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களும் கருங்கடல் பகுதியில் நடமாட ஆரம்பித்துள்ளன. ரஷ்யாவுக்கு உக்ரைன் எப்போதும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே நோக்கம். எப்போதுமே உக்ரைன் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருப்பதா, அதை ஐரோப்பிய யூனியனுக்குள் கொண்டு வந்து அந்த நாட்டை தான் மறைமுகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கம்.

 

03-icbm-missiles-600.jpg

 

உக்ரைன் ஐரோப்பிய யூனியனின் கட்டுப்பாட்டில் போய்விட்டால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு அந்த நாட்டில் அமெரிக்க ராணுவம் கால் பதிக்கும் என்பதும், போலந்தில் நிறுவியது மாதிரி ரஷ்யாவுக்கு எதிரான ஏவுகணைகளும் ஏங்கு வானம் பார்த்து நிற்கும் என்பதும் புடினுக்குத் தெரியாதா என்ன? சண்டை என்னவோ அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் தான்.. ஆனால், அதில் பகடைக்காய் உக்ரைன்!

http://tamil.oneindia.in/editor-speaks/crisis-in-ukraine-as-russia-surges-is-us-still-a-superpower-194762.html 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.