Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் - ஆ‌தி‌க்க இனவெறியும் சாதிய அடக்குமுறையும்

Featured Replies

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாலமன் நார்த்தப் என்ற கறுப்பின இளைஞனின் 12 வருட அடிமை வாழக்கையை அடிப்படையாகக் கொண்டு 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் திரைப்படம் எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் அடிமை வியாபாரம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்கள் மீது நடத்திய குரூரமான வரலாறின் சிறு துளி என இந்தப் படத்தை சொல்லலாம்.

img1140311033_1_1.jpg
 
FILE

சாலமன் நார்த்தப் நியூயார்க் நகரில் வசித்த சுதந்திரமான மனிதன். மனைவி இரு குழந்தைகளுடன் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்த வேளையில் இரு வெள்ளையர்கள் அவரை வாஷிங்டன் அழைத்துச் சென்று தந்திரமாக விற்று விடுகிறார்கள். தானொரு சுதந்திரமான மனிதன் என்று நார்த்தப் சொல்வதை அவனை வாங்கியவர்கள் கேட்க தயாராக இல்லை. நார்த்தப் லூசியானாவில் உள்ள பண்ணை முதலாளிக்கு அடிமையாக விற்கப்படுகிறார். பிறகு பல முதலாளிகளிடம் பண்ணை அடிமையாக காலங்கழிக்க வேண்டி வருகிறது. 12 வருட அடிமை வாழ்க்கைக்குப் பிறகு கனடாவைச் சேர்ந்த ஒரு வெள்ளைக்கார தொழிலாளியின் உதவியால் தானொரு சுதந்திர மனிதன் என்பதை நிரூபித்து அடிமை வாழ்விலிருந்து மீள்கிறார்.

img1140311033_1_2.jpg
 
FILE

சாலமன் 1841ல் அடிமையாக விற்கப்படுகிறார். 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சுதந்திர மனிதராகிறார். அந்த அனுபவத்தை அவர் சொல்ல, டேவிட் வில்சன் என்ற வழக்குரைஞர் அதனை புத்தகமாக எழுதினார். 1853ல் அப்புத்தகம் 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் என்ற பெயரில் வெளியானது. அதனைத் தழுவியே இந்தப் படத்தை இயக்குனர் மெக்குயின் எடுத்தார்.

 

படத்தின் பிரதான நோக்கம் அடிமை வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் திரையில் கொண்டு வருவது. நமது சாதிய அடக்குமுறைக்கும் அமெரிக்க நிறவெறிக்கும் அதிகம் தொடர்பு உண்டு. கறுப்பினத்தவர்கள் பிறப்பால் இழிவானவர்கள். வெள்ளையர்களின் சுபிட்சமான வாழ்க்கைக்கென படைக்கப்பட்டவர்கள். வெள்ளையர்களின் விருப்பு வெறுப்புகளே அடிமைகளின் விருப்பு வெறுப்புகள். அடிமைகளுக்கு எழுத்தறிவோ, படிப்பறிவோ கூடாது. கட்டளைக்கு பணிதல் கட்டளையை நிறைவேற்றுதல் இவைதான் அடிமைகளின் அன்றாட வாழ்க்கை. சுருக்கமாகச் சொன்னால் கறுப்பினத்தவர் வெள்ளையர்களுக்கு உடைமையான பொருள். அதனை அடிக்கலாம், உதைக்கலாம், வன்புணர்ச்சி செய்யலாம், தேவையில்லை எனில் கொலையும் செய்யலாம். எதுவுமே தவறில்லை.

img1140311033_2_1.jpg
 
FILE

ஒருவர் அடிமையாக விற்கப்பட்டதும் முதலில் அவரின் சுதந்திரம் பறிக்கப்படும். தான் அடிமை இல்லை என்று முரண்டு பிடிக்கும் நார்த்தப் அடித்து நொறுக்கப்படுகிறார். கறுப்பர்கள் வெள்ளையர்களின் அடிமை என்பது ஒவ்வொரு செயலிலும் சொல்லித் தரப்படும். எல்லோருக்கும் முன்னால் குளித்து, ஆடை மாற்றி, நிர்வாணமாக பலர் முன்னால் விலை பேசப்படுகையில் அடிமைகளுக்கு நிர்வாணம் பழகிப் போகும். அடியும் உதையும் அன்றாட நிகழ்வாகும். கழுத்தில் சுருக்கிடப்பட்டு விரல் நுனி மட்டும் நிலத்தில் தொட நார்த்தப் நாள் முழுதும் தொங்கிக் கொண்டிருக்கையில் வெள்ளையர்கள் மட்டுமின்றி சக அடிமைகளும் அவரவர் வேலைகளில் கவனமாக இருக்கிறார்கள். 


img1140311033_2_2.jpg
 
FILE

வன்முறைகள் பழக்கமான பின்பு குறைவாக அடிக்கும், குறைவாக வன்முறை செய்யும் முதலாளிகள் கருணைமிக்கவர்களாக பார்க்கப்படுவார்கள். நார்த்தப்பின் முதல் முதலாளியும் அப்படியொரு கருணைமிக்கவர். அவரது கருணையும் சக வெள்ளையர்களுக்கு எதிராக எதுவும் செய்வதில்லை. அடிமைக்காக அவர் தனது வாழக்கையை பிரச்சனைக்குள்ளாக்க விரும்புவதில்லை. மாறாக இருப்பதிலேயே கொடூரமான முதலாளிக்கு நார்த்தப்பை விற்று விடுகிறார். அவர் மட்டும்தான் நார்த்தப்பை விலை கொடுத்து வாங்க முன் வருகிறார். 

 

பெண் அடிமைகளின் நிலைமை இன்னும் மோசம். அடிமை சந்தையில் தாயும் சேயும் ஒரே முதலாளியால் வாங்கப்பட்டால் அதிர்ஷ்டம். தாயின் முன்னால் மகளோ இல்லை மகளின் முன்னால் தாயோ இல்லை இருவருமோ வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் போது அந்த அதிர்ஷ்டம் மிகக் கொடூரமான தண்டனையாகவும் மாறும். பெண் அடிமைகளின் உடம்பு முதலாளிக்குப் பிடித்திருந்தால் அவரின் கருணைக்கு பாத்திரமாகலாம். அதேநேரம் முதலாளியின் மனைவியின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டி வரும். மனைவியை திருப்திப்படுத்த முதலாளியே தனக்கு விருப்பமான அடிமையிடம் அளவுக்கு மீறிய வன்முறையை செலுத்தவும் செய்வார். 

img1140311033_3_1.jpg
 
FILE

Patsey என்ற இளம் பெண் எட்வின் எப்ஸ் முதலாளியின் பருத்தித் தோட்டத்தில் தினம் 500 கிலோவுக்கு குறையாமல் பருத்தி சேகரிப்பவள். அடிமைகளிலேயே அவள்தான் சிறந்தவள். அதனால் முதலாளி எப்ஸின் காமப்பசிக்கும், கருணைக்கும் பாத்திரமானவள். அதனாலேயே அவரது மனைவியின் ஜென்ம விரோதி. மற்றவர்கள் 200 கிலோ பருத்தி சேகரிக்க முடியாமல் கசையடி வாங்கிக் கொண்டிருக்க 500 கிலோ சேகரிக்கும் Patsey க்கு உடம்பைக் கழுவ சின்ன சோப்பு கட்டிகூட தர மறுக்கிறாள் எப்ஸின் மனைவி. முதலாளியால் விரும்பப்படும் அடிமையின் நிலைமையே எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு உதாரணம் படத்தில் வரும் Patseyகதாபாத்திரம்.


img1140311033_3_2.jpg
 
FILE

படத்தில் வரும் முதலாளிகள் அனைவரும் கிறிஸ்தவர்கள், மத நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் அடிமைகளுக்கு பைபிளை படித்துக் காட்டவும் செய்கிறார்கள். உன்னைப் போல் பிறரையும் நேசி என்று பைபிளை படித்துக் கொண்டே அவர்களால் அடிமைகளிடம் வன்முறையைச் செலுத்த எப்படி முடிகிறது? பைபிளும் கிறிஸ்தவமும் வெள்ளையர்களுக்கானது. சக வெள்ளையர்களிடம் மட்டும் கிறிஸ்தவத்தை கடைபிடித்தால் போதும். கறுப்பர்கள் அவர்களின் சக மனிதர்கள் கிடையாது. அவர்கள் வெறும் அடிமைகள் மட்டுமே. அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிறார் எப்ஸ். 

தனது பருத்தித் தோட்டம் பூச்சிகளால் நாசமாகும் போது, புதிதாக வந்த அடிமைகளின் பாவத்தால்தான் கடவுள் தனது பருத்தித் தோட்டத்தை நாசமாக்கினார் என்று அவர்களை இன்னொரு முதலாளியிடம் லீசுக்கு விடுகிறார். மதம் மனிதர்களை காப்பாற்றும் என்பது எத்தனைதூரம் மோசடி என்பதை சொல்லும் சிறந்த இடம் இது. மதம் மனிதனால் அதுவும் தன்னை உயர்சாதிக்காரனாக உயர் மரபுக்காரனாக கருதுகிறவனால் படைக்கப்பட்டது. அவன் மதத்தை வைத்து மற்றவர்களை அடிமைப்படுத்துவான் இல்லை மதத்துக்கு வெளியே அதனை செய்வான். மதம் அவனது தீய செயல் எதையும் தடுப்பதில்லை, மாறாக அதுவொரு கேடயம்.

 

இந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்படும் பல கருத்துகள் இந்தியாவின் சாதிய அடக்குமுறைக்கு நெருக்கமானவை.

img1140311033_4_1.jpg
 
FILE

1. கறுப்பர்கள் வெள்ளையர்களின் அடிமைகள், அவர்களுக்கு உடைமையான பொருள். அவர்களை வெள்ளையர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம்.

2. கறுப்பு அடிமைகளுக்கு எழுத்தறிவு, படிப்பறிவு கூடாது (இந்த இரண்டும் இருந்ததால்தான் நார்த்தப்பால் 12 வருடங்களுக்குப் பிறகாவது சுதந்திர மனிதனாக முடிந்தது).

3. எந்த மதமும் ஆதிக்கசாதியை ஆதிக்கஇனத்தை கட்டுப்படுத்தாது, அடிமைகளுக்கு விடுதலைப் பெற்றுத் தராது. கிறிஸ்தவ வெள்ளையனின் சக மனிதன் இன்னொரு கிறிஸ்தவ வெள்ளையன். கறுப்பர்கள் அவர்களின் சக மனிதர்கள் கிடையாது, வெறும் அடிமைகள் (இந்தியாவில் மதமே நால்வருணமாக மனிதனைப் பிரித்து அடிமையாக்கி வைத்துள்ளது. இது வெள்ளையர்களின் கிறிஸ்தவத்தைவிட பல மடங்கு அபாயமானது).

உண்மைக் கதை என்பதால் திரைக்கதை எழுதிய ஜான் ரிட்லியும், இயக்குனர் ஸ்டீவ் மெக்குயினும் அந்தக் கதைக்கு உண்மையாக இருப்பதற்கும், அதனை அப்படியே திரையில் கொண்டு வருவதற்கும் முயன்றிருக்கிறார்கள். ஒருவரின் வலியை பார்வையாளனுக்குள் நுட்பமாக கடத்தும் முயற்சி படத்தில் பெரிய அளவில் இல்லை. ஏற்கனவே அடிமைகளைப் பற்றிய படங்களைப் பார்த்தவர்களுக்கு இது இன்னொரு படமாக தோன்றுவதற்கு அதிக சாத்தியமுள்ளது இதன் பலவீனம். 


img1140311033_4_2.jpg
 
FILE

அடிமைமுறை காலத்துக்கேற்ற பரிமாணங்களுடன் சமூகத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய நவீன உலகில் சிகப்பு விளக்குடன் வரும் முதலாளிகளுக்காக அடிமைகளும் அவர்களின் வாகனங்களும் மணிக்கணக்கில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. தடா பொடா சட்டங்களால் முதலாளிகளின் விருப்பத்துக்கு எதிரானவர்கள் சிறைக்குள் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் ஏவல்துறைகளால் தினம் பல்லாயிரம் அடிமைகள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாகிறார்கள். முதலாளிகளின் விருப்பத்து‌க்கு எதிராக நிற்காத வரையில் மட்டுமே சுதந்திரத்தைப் பற்றி நமது ஜனநாயக இந்தியாவில் பேசவும், வாழவும் முடியும்.

இந்த நவீன அடிமைத்தனத்தையும், இன்னும் நிலுவையில் உள்ள சாதிய அடக்குமுறையையும் இந்த படத்தை முன்னிறுத்தி விவாதிக்க முடியும் என்பதே இப்படத்தின் முக்கியத்துவம். 

 

webdunia

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.