Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டத்தை கையிலெடுத்த பொது பலசேனா; அனுமதி கொடுத்தது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் துப்பாக்கிச் சண்டைகள்  முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனவே தவிர, மோதல்கள் இன்னும் தொடரத்தான் செய்கின்றன. சத்தமின்றி, கத்தியின்றி இந்த மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிகார பலம் என்ற ஆயுதமும், பெரும்பான்மை என்ற பலமும் இந்த மோதல்களில் தாரளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் சிறுபான்மையினராக இருக்கின்ற மக்களும், சிறுபான்மை மதத்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். 
 
நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன. ஒழுங்கு விதிகள் இருக்கின்றன. சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதாகவும், அதற்குப் பொறுப்பாக பொலிசாரும், பொலிசாருக்கு உதவியாக இராணுவத்தி;னரும் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. ஆனால் தண்டனைகளிலிருந்து தப்பிச்செல்லும் கலாசாரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் மோசமடைந்திருக்கின்றது.
 
பல இனங்களைச் சேர்ந்தவர்கள், பல மததங்களைச் சார்ந்தவர்கள் இங்கு வசிக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதாக அரசாங்கம் கூறுகின்றது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்று அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொடக்கம் ஜனாதிபதி வரையில் அனைவருமே அடித்துக் கூறுகின்றார்கள். ஆனால் சிறுபான்மையினத்தவர்களின் மத வழிபாட்டு இடங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அவர்களின் மத வழிபாட்டுச் செயற்பாடுகள் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் அடாவடித் தனமாகத் தடுக்கப்படுகின்றன.
 
இந்தச் சம்பவங்களை உதிரியான சம்பவங்களாகவே அரசு நோக்குகின்றது. இந்தச் சம்பவங்கள் திட்டமிட்டு ஒரு தரப்பினரால் மேற்கொள்ளப்படுவதில்லை என்று காரணம் கூறப்படுகின்றது. இந்தச் சம்பவங்கள் சிறு சிறு சம்பவங்களே அல்லாமல், மதங்களுக்கிடையிலான மோதல் சம்பவங்கள் அல்ல என்றும், இவைகள் எல்லாமே தனிப்பட்ட சம்பவங்கள், தனிப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவை என்று அரசாங்கம் விளக்கமளித்து வருகின்றது.
 
இந்தச் சம்பவங்களை ஊடகங்களும், வெளிநாட்டுத் தொடர்புடைய அரசுக்கு எதிரான சக்திகளுமே பெரிதுபடுத்தியிருக்கின்றன. சுயநல நோக்கத்துடன் இத்தகைய கைங்கரியங்கள் அரசுக்குசேறு பூசும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவங்கள் சாதாரண சம்பவங்களே தவிர, பெரிதுப்படுத்தக் கூடியவையல்ல. அவைகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன. எனவே, அவற்றை எவரும் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று அரசாங்கம் கூறி வருகின்றது.
 
இந்தச் சம்பவங்களின் பின்னணியில் பௌத்த மதகுமார்களைக் கொண்ட அணியொன்று உறுதியாக இருந்து செய்றபட்டு வருகின்றது. இந்தக் குழுவினர் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, சட்டம் ஒழுங்கு, நீதி நியாயம் என்பவற்றைக் கணக்கில் எடுப்பதேயி;ல்லை. தாங்கள் நினைத்ததே சரி. தாங்கள் செயற்படுவதே முறையானது.  அதனை யாரும் தடுக்கவோ தட்டிக் கேட்கவோ முடியாது. அவ்வாறு (அடாவடித்தனமாகச்) செயற்படுவதற்குத் தங்களுக்கு உரிமை இருக்கின்றது. அதனை யாரும் எந்த காரணத்தைக் கொண்டும் தடுக்கவோ, எதிர்த்து நிற்கவோ முடியாது என்று பொதுபலசேனா என்ற அந்தக் குழுவினர் பகிரங்கமாகவே கூறி வருகின்றனர்.
 
நாட்டின் தென்பகுதிகளில் அங்கொன்று இங்கொன்றுமாக சிறிய அளவில் அவ்வப்போது இடம்பெற்றிருந்தன. இப்போது அந்த குழுவினரின் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டிருக்கின்றன. பொலிசாரினாலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மோசமாகியிருக்கின்றன. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்புகளையுடைய பொலிசார் கையாலாகாதவர்களாக கைகட்டி, வாய்பொத்தி இந்த நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
 
மறிச்சுக்கட்டி, மரைக்கார்தீவு காணி பிரச்சினை
 
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மறிச்சுக்கட்டி, மரைக்கார்தீவு என்பன முஸ்லிம் மக்களுடைய கிராமங்கள். வடக்கில் இருந்து முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றியதன் காரணமாக இடம்பெயர்ந்திருந்த இந்தக் கிராமங்களின் மக்கள் யுத்தம் முடிந்து மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டபோது, சொந்த இடங்களுக்குத் திரும்பினார்கள். அப்போது அவர்களுடைய காணிகளில் கடற்படையினர் நிலைகொண்டிருந்தனால், அவர்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாமல் போனது, அந்தக் காணிகளை விட்டுத் தருமாறு அவர்கள் விடுத்த கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகியது.
 
இதனையடுத்து, அரச அதிகாரிகளினால் அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு, அந்தக் காணிகளைத் துப்பரவு செய்து அவற்றில் அவர்கள் குடியேறியபோது, படையினர் தலையிட்டு, அந்தக் காணிகள் இராணுவத்திற்குரியது என்றும், அதனால் அவர்கள் அங்கு குடியேற முடியாது, காணிகளைவிட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்கள். இதன்போது அந்த மக்கள் அமைத்திருந்த தற்காலிக கொட்டில்கள் சிலவற்றிற்குத் தீயிடப்பட்டிருநததாகவும் முறையிடப்பட்டிருந்தது.
 
எனினும் அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறவில்லை. அதேபோன்று படையினர் கையகப்படுத்தியிருந்த பொதுமக்களின் காணிகளும் விட்டுக்கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் தமது சொந்தக் காணிகளைத் திருப்பித் தரவேண்டும் என்ற போராட்டத்தை அந்த மக்கள் முன்னெடுத்திருந்தார்கள்.
 
அரச அதிகரிரகளினல் இந்த மக்கள் குடியேறுவதற்கென வழங்கப்பட்ட காணிகள் அரச காணிகள் என்று இப்போது சொல்லப்பட்டாலும்கூட, பல வருடங்களுக்கு முன்னர் அந்த இடம் அந்தப் பிரதேசத்து முஸ்லிம் மக்களுடைய இடுகாடாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக ஊர்ப் பெரியவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
 
சொந்தக் காணிகளில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இந்த மக்கள் நடத்திய தொடர் போராட்டத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை. இந்த நிலையில்தான் அருகில், வனவிலங்குகளுக்கென அரசாங்க்தினால் ஒதுக்கப்பட்டுள்ள வில்பத்து வனவிலங்கு சரணாலயத்திற்குச் சொந்தமான காணிகளில் இந்த முஸ்லிம் குடும்பங்கள் அடாத்தாகக் குடியேறியிருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
 
காணி உரிமைக்காகப் போராடியவர்கள் அடாத்தாக வனவிலங்கு சரணாலயக் காணிகளைக் கையகப்படு;த்தி வனவிலங்குகளின் வாழ்வுரிமைக்கு ஊறு விளைவித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை பொதுபலசேனா அமைப்பினர் கையில் எடுத்துக் கொணடு அந்தப் பிரதேசத்திற்கு நேரடியாகச் சென்று அந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள்.
 
பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பு நியாயங்களை அவர்கள் கேட்பதற்குத் தயாராக இருக்கவில்லை. மாறாக, வனசீவராசிகளின் வாழ்க்கையோடு விளையாடக் கூடாது என்ற வகையில் அவர்கள் எச்சரிக்கப்பட்டார்கள். அவர்கள் குடியிருக்ளூகும் இடம் வில்பத்து சரணாலயத்திற்குச் சொந்தமானது என்று அவர்களுக்கு அழுத்தி அறிவுறுத்தப்பட்டது, இடம் பெயர்ந்த மக்கள் குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை பொதுபல சேனா ஏற்றுக்கொள்வதாகவும், இருந்தாலும் சரணாலயக் காணிகளில் அவர்கள் குடியிருக்க முடியாது என்றும்  அவர்களுக்கு அதிகாரத் தோரணையில் கூறப்பட்டது.
 
மன்னார் மாவட்டத்தின் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத பொதுபல சேனா அடாவடித்தனமாகத் தங்களுடன் நடந்து கொண்டதாக அந்த மக்கள் கூறி கவலையடைந்தார்கள். இருந்த போதிலும், அந்தக் காணிகளில் இருந்து தாங்கள் வெளியேறப் போவதில்லை என்று அவர்கள் உறுதியாகக் கூறிவிட்டார்கள்.
 
இந்த நிலையில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், மறிச்சுக்கட்டி, மரைக்கார்தீவு கிராமங்களைச் சேர்ந்த பத்து குடும்பங்கள் அத்துமீறி காணிகளை ஆக்கிரமித்திருப்பதாகக் குற்றம் சுமத்தி மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர்.
 
இந்த வழக்கு முதற் தடவையாக மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பிலான நியாயங்களை சட்டத்தரணிகள் எடுத்துரைத்தார்கள். இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிக்கப்பட்டிருந்வர்களில் நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், மே மாதத்திற்கு இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது.
 
ஜாதிக பலசேனா அமைப்பின் மீது பாய்ந்த பொதுபலசேனா அமைப்பு
 
இதற்கு முன்னதாக சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலியுறுத்திச் செயற்படுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த ஜாதிக பலசேனா என்ற அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவொன்று மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்கு விஜயம் செய்து அந்த மக்களின் உண்மையாள நிலைமைகளை நேரில் கண்டறிந்தது. அதனையடுத்து, அந்த மக்களுக்கு நியாயம் பெற்றுத்தர பாடுபடப் போவதாகக் கூறிச் சென்ற ஜாதிப பலசேனா அமைப்பினர் கொழும்பில் நிப்போன் விடுதியில் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
 
ஜாதிக பலசேனா அமைப்பின் முக்கியஸ்தர்களான வட்டரக்க விஜித்த தேரர் மற்றும் முஸ்லிம் மதபோதகராகிய ஆர்.எம்.நியாஸ் ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சமூகமளித்திருந்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பாத்திரக்கடையில்  யானைபுகுந்ததுபோன்று, பொதுபலசேனா அமைப்பினர் புகுந்து கலகம் விளைவித்ததுடன், அந்தச் சந்திப்பை நடக்கவிடாமல் குழப்பியடித்தனர்.
 
முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் ஜாதிக பலசேனா என்ற அமைப்பை உருவாக்கி, உண்மையைத் திரிபுபடுத்தி, முஸ்லிம் பள்ளிவாசல்களுக்குச் சென்று, நாட்டின் புத்த சாசனத்திற்கும், பௌத்த பிக்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் விதத்தில் போலியான பிரசாரங்களை, வட்டரக்க விஜித்த தேரர் மேற்கொண்டு வருகின்றார் என்பதே பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்த ஞானசாரதேரருடைய குற்றச்சாட்டாகும்.
 
இந்தச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரினால் பொதுபலசேனா அமைப்பினரைக் கட்டுப்படுத்தவோ, அவர்களின் அத்துமீறிய செயல்களைத் தடுத்து நிறுத்தவோ முடியாமல் போனது. அல்லது அத்தகைய நடவடிக்கையை அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பதே அவதானிகளின் கருத்தாகும்.
 
இதனையடுத்து, ஜாதிக பலசேனா அமைப்பைச் சேர்ந்த வட்டரக்க விஜித்த தேரரைத் தேடி, அவர் கலந்து கொள்ளவிருந்த பிரதேசசபை மண்டபத்தை பொது பலசேனா அமைப்பினர் முற்றுகையிட்டிருந்தனர். எனினும் பொலிசார் அவரைத் தந்திரமாக மாற்று வழியின் ஊடாக மண்டபத்திற்குள் அழைத்துச் சென்று கூட்டத்தில் பங்குபற்றச் செய்தனர். பொதுபலசேனா அமைப்பினரின் நடவடிக்கைகள் அத்துடன் ஓயவில்லை.
 
கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சராகிய ரிசாட் பதியுதீனின் கொழும்பில் உள்ள அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுபலசேனா அமைப்பினர் அவர்களால்; தேடப்படுகின்ற வட்டரக்க தேரரை அமைச்சர் பதியுதீன் அங்கு மறைத்து வைத்திருக்கின்றார் என குற்றம் சுமத்தி அவரை வெளியில் அனுப்ப வேண்டும் என்று
வற்புறுத்தினர். அத்துடன் அமைச்சரின் அலுவலகத் தொகுதிக்குள் புகுந்து அங்கள் அறைகள் அனைத்தையும் சோதனையிட்டனர். அப்போதும்கூட, பொலிசாரினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை, அல்லது பொலிசார் நடவடிக்கை எதிர் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.
 
பொதுபல சேனா அமைப்பினர் மன்னார் மறிச்சுக்கட்டி, மரைக்கார்தீவு மக்களின் குடியிருப்புக்கு மேற்கொண்ட விஜயம், அங்கு அவர்கள் நடந்து கொண்ட விதம், ஜாதிக பலசேனா அமைப்பினர் கொழும்பு நிப்போன் விடுதியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டு மண்டபத்தினுள்ளே புகுந்து மேற்கொண்ட நடவடிக்கைகள், அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அமைச்சு அலுவலகததை முற்றுகையிட்டது, பின்னர், பொதுபலசேனா அமைப்பினர் அந்த அலுவலகத் தொகுதியில் உள்ள அறைகளை சோதனையிட்டமை என்று இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளையும் நாட்டு மக்கள் வீடியோ காட்சிகளின் மூலம் நேரடியாகக் கண்டறிந்தார்கள்.
 
பொதுபலசேனா அமைப்பின் பௌத்த பிக்குகள் மற்றும் முக்கியஸ்தர்கள் நடந்து கொண்ட விதம், அந்த அமைப்பின் செயலளார் அங்கு வெளிப்படுத்திய கருத்துக்கள், அவருடைய தோரணைகள் என்பவற்றை தொலைக்காட்சிகளிலும், ஏனைய ஊடக்களிலும் கண்ட பலர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பொதுபலசேனா அமைப்பினர் புத்த சாசனம் மற்றும் பௌத்த பிக்குகளின் பெயரில் மேற்கொண்டு வருகின்ற தாக்குதல் நடவடிக்கைகள் இந்த நாட்டின் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் எந்த வகையான நல்லிணக்கத்தை அல்லது நல்லுறவை ஏற்படுத்தப் போகின்றது என்பது குறித்து பலரும் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கின்றார்கள்.
 
கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்
 
அது மட்டுமல்லாமல் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆயர்களுக்கு எதிராக பொதுபலசேனா அமைப்பினர் மூன்று குற்றச்சாட்டுக்களைப் பகிரங்கமாகச் சுமத்தி, தேசத்துரோகிகள் என குறிப்பிட்டு, அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருக்கின்றார்கள்.
 
இராணுவத்திற்கு எதிராக இவர்கள் இருவரும் சர்வதேச சமூகத்திடம் பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதன் மூலம், நாடடை காட்டிக் கொடுப்பதாகவும், இலங்கை இராணுவம் பல்லாயிரக்கணக்கான மக்களை இனப்படுகொலை செய்ததாகக் கூறி, அவர்கள் தேசத்துரோகக் குற்றத்தைச் செய்ததாகவும், பௌத்தர்களை கிறிஸ்தவ மதங்களுக்கு மதம் மாற்றி, பௌத்த மதத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தி;யிருக்கின்றார்கள்.
 
பௌத்த மத அமைப்பினராகிய பொதுபலசேனா அமைப்பினர் மற்றுமொரு மத அமைப்பைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மீது இவ்வாறு பகிரங்கமாகக் கடுந்தொனியில் குற்றம் இவ்வாறு சுமத்தியிருப்பது, இந்த நாட்டில், அமைதியும் சமாதானமும், இன ஐக்கியமும் மேலோங்க வேண்டும் என்ற உயர் விருப்பத்தைக் கொண்டிருப்பவர்களைக் கலங்கச் செய்திருக்கின்றது,
 
யுத்தம் முடிந்த பின்னரும், புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணவேண்டும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நியாயமான நடவடிக்கைகள் அரச தரப்பினரால் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. மாறாக, பழிவாங்கல் நடவடிக்கைகளாக, யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாதிப்புகளுக்கு நியாயம் கேட்பதே தேசத்துரோகம் என்ற கடும்போக்கு சிந்தனையை, பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்படுவதாகவே தோன்றுகின்றது.
 
தற்போது நாட்டில் இடம்பெற்று வருகின்ற இத்தகைய சம்பவங்கள், முப்பது வருடங்களாக மோசமான ஒரு யுத்தச் சூழலில் சிக்கியிருந்த ஒரு நாட்டில் பல இனமக்களும், பல மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து அமைதியாகவும், ஐக்கியமாகவும் வாழ்வதற்கு வழிவகுக்கும் என்று கருத முடியாது. போர்க்காலங்களின் பேரழிவைச் சந்தித்துள்ள இந்த நாட்டின் எதிர்கால சுபிட்சத்திற்கு விட்டுக்கொடுப்பு, சகிப்புத் தன்மை, தாராள சிந்தனையுடன் கூடிய அரசியல் செயற்பாடுகள் என்பனவே அவசியமாகின்றது.
 
இப்போதைய சம்பவங்கள் நாட்டு மக்களை மட்டுமல்லாமல் அயல் நாடுகளையும் சர்வதேசத்தையும் சுண்டி இழுத்திருக்கின்றன. அடுத்த என்ன நடக்கப் போகின்றது, நாட்டு நிலைமைகள் என்னவாகும் என்ற கவலை பலருடைய மனங்களில் எழுந்துள்ளன. எனினும் மதவிவகாரங்களுக்காக தனியான பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள புதிய அறிவித்தலானது, தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அவர் தீவிர கவனம் செலுத்தியிருப்பதை, வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
 
அவருடைய புதிய திட்டம் பற்றிய அறிவித்தல் வரவேற்கத்தக்கது. ஆனால், மத விவாகரங்களுக்கான அமைச்சின் பொறுப்பிலேயே அந்த பொலிஸ் பிரிவு இயங்கும் என்று கூறப்பட்டிருப்பது, மதங்களுக்கிடையில் நல்லுறவை வளர்ப்பதற்கு எந்த வகையில் உதவும் என்ற விளாவை எழுப்பியிருக்கின்றது. பொதுபலசேனாவின் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் தக்க வகையில் அதிகாரமுடையதாக புதிய பொலிஸ் பிரிவு அமைய வேண்டும் என்பதே பொது நன்மைகளில் அக்கறையுடைளவர்களின் ஆர்வமும், எதிர்பார்ப்;புமாக இருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பை  நிறைவேற்றத்தக்க வகையில் யுத்தத்தின் பின்னர் மூண்டுள்ள சத்தமற்ற கத்தியற்ற மோதல்களுக்கு முடிவேற்படுமா, என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
-செல்வரட்ணம் சிறிதரன் -
 
நன்றி – வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.