Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்காளராக பதிவு செய்தலும் அதற்கான வழிமுறைகளும்

Featured Replies

இம்மாதம் அதாவது ஜூன் மாதம் 21 ஆம் திகதி வரை 2014 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு திருத்தப்படிவத்தைப் பெற்றுக் கொள்ளாத குடியிருப்பாளர்கள் தமது பகுதி தேர்தல் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு குறித்த படிவத்தைப் பெற்று உரியபடி பூர்த்தி செய்து கையளிக்க வேண்டும். தவறின் 2014 ஆம் ஆண்டுக்கான புதிதாகத் தயாரிக்கப்படும் வாக்காளர் இடாப்பில் பெயர்கள் இடம்பெறமாட்டாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
 
ஒவ்வோராண்டும் ஜூன் மாதம் 1 ஆம் திகதியன்று 18 வயதைப் பூர்த்தி செய்துள்ள இலங்கைப் பிரஜையொருவருக்கு தான் வசிக்கும் குடியிருப்பின் முகவரியில் தன்னை ஒரு வாக்காளராகப் பதிவு செய்து கொள்வதற்கு சட்டரீதியான உரிமை தேர்தல்கள் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 
 
இதை எவராலும் மறுக்கவோ தடுக்கவோ முடியாது. குடியிருப்பின் அதாவது வீட்டின் உரிமையாளராக இருக்க வேண்டும் என்ற தேவை வாக்காளராகப் பதிவு செய்வதற்கு அவசியமற்றது என்பதும் குறிப்பிடத்தக்கதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதுமாகும். 
 
தேர்தல்களில் வாக்களிப்பதற்கு ஒவ்வொரு இலங்கைக் குடிமகனுக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்தும் செயற்பாட்டிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தின் போது வீட்டின் உரிமையாளர் என்பது தொடர்பில் ஆராய்வது தேவையற்றது. நியாயமற்றது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
 
வாக்காளர் இடாப்புத் திருத்தத்தின் போது ஒவ்வொருவரது பெயர்களும் அவர்கள் வசிக்கும் குடியிருப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. எக்காரணம் கொண்டாவது வாடகைக் குடியிருப்பாளர் என்ற காரணம் காட்டி எவரது பெயரையும் பதிய மறுக்க சட்டத்தில் இடமில்லை.
 
 
வாடகைக் குடியிருப்பாளர்களின் பெயர்களை குறித்த வாடகை வீட்டு முகவரியில் பதிவதன் மூலம் வாடகைக் குடியிருப்பாளர்களை வீட்டின் உரிமையாளர்களாகக் கருதும் நிலை ஏற்படும் என்ற தப்பபிப்பிராயம் அல்லது புரியாத் தன்மை பல வீட்டு உரிமையாளர்களிடம் உள்ளமையும் நிலவும் நிலையாகும். அது தவறானது.  
 
வீட்டின் உரிமைக்கும் வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவுக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை என்பதை வீட்டுரிமையாளர்களும் வாடகைக் குடியிருப்பாளர்களும் அதேபோல் வாக்காளர் இடாப்பு திருத்தப்பணிகளின் ஈடுபடும் கிராம சேவை அலுவலர்களும் அப்பணிகளில் ஈடுபடும் விசேட அலுவலர்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
 
வாடகைக் குடியிருப்பாளர் என்ற காரணம் காட்டி வாக்காளர் திருத்தப் படிவத்தை யைளிக்க மறுக்கும் எவராவது தேர்தல் திணைக்களத்தால் அப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மறுத்தால் அது பற்றி கிட்டிய தேர்தல் அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி நிவாரணம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
 
 
கடந்த ஆண்டு வாக்காளர் இடாப்பில் எமது பெயர் இடம்பெற்றிருந்தது. நடந்து முடிந்த தேர்தலில் இதே முகவரியில் எமது பெயர் இருந்தது. வாக்காளர் அட்டையும் வந்தது. வாக்களித்தோம். அதனால் எமது பெயர் புதிதாகப் பதிய வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே பெயர் இருந்ததால் அது தொடர்ந்து அவ்வாறே இடம்பெறும் என்று எவராவது எண்ணினால் அது முற்றும் பிழையானது, தவறானதாகும்.
 
 
ஒவ்வோராண்டும் வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்படுவது நடைமுறை. அதற்காக ஒவ்வொரு குடியிப்புக்கும் அதாவது வீட்டிற்கும் ஒவ்வொரு வாக்காளர் இடாப்பு திருத்தப் படிவம் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. அந்த ஆண்டிற்கான படிவத்தில் பெயர்கள் உரிய விபரங்களுடன் பதிந்து ஒப்படைத்தவர்களின் பெயர்கள் மட்டுமே புதிதாக தயாரிக்கப்படும் வாக்காளர் இடாப்பில் இடம்பெறும். 
 
கடந்த ஆண்டுகளில் தேர்தல் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வாக்காளர் இடாப்புகள் நடப்பாண்டு திருத்தப் பணிகள் முடிவடைந்ததன் பின்னர் காலாவதியாகிவிடும்,  செல்லுபடியற்றதாகி விடும். இதுவே வழக்கத்தில் உள்ள நியதி.
வாடகைக் குடியிருப்பாளர் என்பதால் வாக்காளர் இடாப்பில் பெயர்கள் பதிவதில் எதுவித சிக்கலுமில்லை என்ற சட்டரீதியான நிலைப்பாடு தெளிவானது.
 
 
அதேபோல் வேறு எந்த வித நோக்குடனும் பெயர்களைப் பதிய மறுக்க முடியாது. பொதுவாக சிறுபான்மையினர் குறிப்பாக தமிழர்கள் தமது பெயர்களை பதிவு செய்து கொள்வதில் பல சிரமங்களை நாடளாவிய ரீதியில் எதிர்கொள்கின்றமை அறிக்கையிடப்பட்டுள்ளது. மொழி, மத ரீதியிலும் அரசியல் ரீதியிலும் இந்த நிலைக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக தமிழ் மக்கள் உள்ளனர். இதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நாட்டின் யதார்த்த நிலை இதுவாகவேயுள்ளது.
 
 
தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ சிதைப்பை நோக்காகக் கொண்டு இயங்கும் தீய சக்திகளின் பயங்கரவாதச் செயலாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள ஏனைய ஏழு மாகாணங்களிலும் பரவலாக இந்நிலை காணப்படுகின்றது. 
 
அது மட்டுமல்ல, தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மக்களின் இருப்பை, பிரதிநிதித்துவங்களை சிதைக்கும் திட்டமிட்ட செயற்பாடாக வாக்காளர் பதிவு கைக் கொள்ளப்படுகின்றது என்பதும் ஆய்வின் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
 
 
குறித்த பிரதேசத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளிலோ, மாகாண சபைகளிலோ அல்லது பாராளுமன்றத்திலோ தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற திட்டமிட்ட செயல்களும் அதேபோல் ஜனாதிபதித் தேர்தலில் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாகத் தமிழர்கள் இருந்துவிடக் கூடாது என்ற தீய திட்டத்துடனும் தமிழர்களது வாக்குரிமை மறுக்கப்படுவதும் கவனத்திற்குரியது.
 
 
சில வேளைகளில் தமிழர்களின் செயற்பாடுகளாலேயே தமிழர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பில் இடம்பெறாது விடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் மாற்று அரசியல் சிந்தனை கொண்டவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பில் இடம்பெறாதிருக்க திட்டமிட்டுச் செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இருப்பது தமிழர்கள் செய்த பாவமாகும்.
 
 
மாற்றுக் கொள்கையுடைவனாக இருந்தாலும் மாற்று மொழியினனாகவோ மதத்தினனாகவோ, இனத்தினனாகவோ இருந்தாலும் அவனது வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளும் உரிமை மறுக்கப்படக்கூடாது, தடுக்கப்படக் கூடாது. ஜனநாயகத்தில் அதற்கு இடமில்லை, ஏற்கப்படவுமில்லை.
 
 
எனவே இன்று வரை தமக்குரிய இவ்வாண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் படிவம் கிடைக்காதவர்கள் இம்மாதம் 21 ஆம் திகதி வரையும் அதனை எதிர்பார்க்கலாம். என்றும் அன்றைய தினம் வரை கிடைக்காதவர்கள் தமது கிராமசேவை அலுவலர்களைச் சந்தித்து உரிய படிவத்தைப் பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.
 
 
கொழும்பு போன்ற சில நகரப் பகுதிகளில் கிராம சேவை அலுவலருக்கும் மேலதிகமாக விசேட அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறித்த இருதரப்பு அலுவலரிடம் படிவத்தைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் தமது பிரதேச தேர்தல் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு தமக்குரிய படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து கையளிக்க வேண்டும்.
 
 
குறித்த அலுவலர்கள் ஒரு குடியிருப்பாளர் கோரிக்கை விடுக்கும் போது குறித்த படிவத்தை வழங்க மறுக்க முடியாது. எனவே இந்நாட்டின் குடிமக்களாக சட்டப்படி ஏற்கப்பட்டுள்ள சகலரும் தம்மை 2014 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ளத் தயக்கமின்றி செயற்பட வேண்டும்.
 
 
கிடைத்த, வழங்கப்பட்ட படிவத்தைப் பூர்த்தி செய்யாமலோ, பூர்த்தி செய்தும் உரிய படி கையளிக்காமல் உள்ளோரோ  தமது சட்டப்படியான உரிமையான வாக்குரிமையைத் தாமே இழந்த, நாட்டின் உரிமையற்ற, அநாதைகளாக, அகதிகளாக மாறிவிடும் அவலமும் காணப்படுகின்றன.
 
 
இவ்வாண்டு தயாரிக்கப்படும் வாக்காளர் திருத்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டே எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் என்பன நடைபெறும் சாத்தியப்பாடுகள் நிறையவேயுள்ளன. 
 
ஆட்சி தொடரவோ மாறவோ எண்ணுபவர்கள் வெறும் பேச்சை விடுத்து அதற்கான வழிமுறையான வாக்கைப் பெற்றுச் செலுத்தி தமது விருப்பை நிறைவேற்றிக் கொள்ளவுள்ள ஒரே வழியை அதாவது தாம் குறித்த தேர்தல்களில் வாக்களிக்கவுள்ள உரிமையைப் பேணிக் கொள்ள வேண்டும்.
 
 
அதற்காக தயக்கமோ தாமதமோ இன்றி 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் திருத்தத்திற்கான படிவத்தைப் பெற்று உரியபடி பூர்த்தி செய்து தமது பெயர்கள் வாக்காளர் இடாப்பில் பதியப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 
 
வாக்காளர் இடாப்பின் பெயர்கள் இடம்பெறுவதானது வெறுமனே தேர்தல்களில் வாக்களிப்பதற்காக மட்டுமே என்று கருதிவிடக் கூடாது. நம்பி வாக்களித்து தெரிவு செய்த பிரதிநிதிகள் அங்கும் இங்கும் பாய்ந்து பாய்ந்து ஆடும் அலங்கோல அரசியலில் வெறுப்பு ஏற்படுவது நியாயம் தான். பொறுப்போ, பொருத்தமோ, சமூக சிந்தனையோ, அற்றவர்களை அரசியலரங்கிலிருந்து அகற்றவும் வாக்கு அவசியப்படுகின்றது என்பதையும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
 
வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறுவதானது வாக்களிப்பதற்கு மட்டுமன்றி இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள, தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள, பிள்ளைகளைப் பாடசாலைகளில் அனுமதித்துக் கொள்ள என்று பலவித தேவைகளுக்கும் தேவைப்படுகின்றது.
 
 
எனவே வாக்காளர் இடாப்பில் பெயர்கள் பதிவு செய்து கொள்வதானது தனிப்பட்ட நலனுக்கும் சமூக நலனுக்கும் அவசியமானது என்பதைப் புரிந்து கொண்டு குறுகிய கால அவகாசமேயுள்ள நிலையில் வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளும் தமது உரிமையை ஒவ்வொருவரும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும், உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
 
thinkkural

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.