Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும்! - முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும்! - முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் photo.png 

[Wednesday 2014-07-16 18:00]
CM-speech-200-news.jpg

பலவித சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம் எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய அபிவிருத்திக்காக உள்ளூராட்சியினை வலுப்படுத்தல் என்ற தலைப்பில் இன்று யாழ்.நகர விடுதியில் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தலைவர்கள், செயலாளர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தனது உரையில்,

  

பிரதேச நல்லாட்சி விழுமியங்களை முன்னிலைப்படுத்தும் விழிப்பூட்டல் நிகழ்வு ஒன்று எம்மிடையே நடைபெறுவது மிகவும் வரவேற்கத்தக்கது. போரினால் நாம் பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரு வித்தியாசமான கலாச்சாரம் எம்மைப் பீடித்திருந்தது. அந்த காலகட்டத்தில் எம்மைக் கட்டாயப் படுத்திய அவ்வந்த நலவுரித்தலகுகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை மறந்து சக நல்லாட்சி விழுமியங்களை மறந்து கடமையாற்ற வேண்டிய அந்தக் கலாச்சாரம் போரின் பின்னரும் தொடர வேண்டிய அவசியமில்லை. உண்மையில் எமது நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்தில் கட்டுக் கோப்புக்குள் வர வேண்டும்.

சக நல் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். காலாதி காலமாகப் பல நாடுகள் பரிசீலித்துப் பார்த்து சரி பிழை கண்டு பிடித்து மனித வள மேம்பாட்டுக்காக அமைத்து வைத்திருக்கும் சில அடிப்படை நடைமுறைகள் இனியாவது பாதுகாக்கப்பட்டு எமது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்தப் பாவிக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த நிகழ்ச்சி நடாத்தப் படுகின்றது என்று நம்புகின்றேன். இதனை பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையம் நடாத்த முன்வந்துள்ளமை சாலச்சிறந்ததே.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழிருந்து சுதந்திரம் பெற்ற 54 நாடுகளின் நட்பு ரீதியான நடைமுறைத் தொடர்புகளைத் தன் வசம் வைத்திருக்கும் ஒரு கூட்டே இந்த இணையம். இது பல்லின, பன்மொழி பேசும், பல்வேறு மதங்களைப் பின்பற்றும், பலவித கலாச்சாரங்களைப் பேணிவரும் சுமார் இரண்டு பில்லியன் மக்களைத் தன்னகத்தே கொண்டநாடுகளில் காணப்படும் உள்ளுராட்சி மன்றங்களின் ஒரு கூட்டமைப்பு. ஏழை, பணக்கார, சிறிய, பெரிய என்ற பேதங்கள் இல்லாமல் பொதுநலவாய நாடுகள் என்ற பாரிய விருட்சத்தின் கிளைகளாக இருந்து ஒன்று கூடிச் செயலாற்றும் ஒரு அமைப்பே இந்த இணையம். 1948ல் இந்தக் கூட்டமைப்பின் அங்கத்துவத்தைப் பெற்ற எமது நாடு தற்போது அதன் தலைமைத்துவத்தை வகிப்பதையும் நாம் மறக்கக் கூடாது.

பொதுவாக பொதுநலவாய நாடுகள் யாவையுஞ் சில எதிர்பார்ப்புக்களைக் கொண்டுள்ளதாகக் கருதலாம். அதாவது சுதந்திரம், சமாதானம், சட்டவாட்சி ஆகியவற்றை தார்மீக அடிப்படையில் பொதுநலவாய அங்கத்துவ நாடுகள் அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கையை அவை பொதுவாகக் கொண்டுள்ளன என்று கருதலாம்.அதே நேரம் அவை ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டம், ஒழுங்கு போன்றவற்றை நிலை நாட்டுதல் என்ற இலக்குகளையுந் தம் மனத்தினுள் கொண்டுள்ளனவாகவுந் நாங்கள் கருத முடியும். இவற்றை நிலை நாட்டவே, இவற்றின் தாற்பரியங்களைப் பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும், திணைக்கள அலுவலர்களுக்கும் கொண்டு செல்லவே பல்வேறு செயலமர்வுகள், பணிப்பட்டறைகள் ஆகியன முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் தான் இன்றைய நிகழ்வு முக்கியத்துவம் பெறுகின்றது. பொதுநலவாயத்தின் சித்தாந்தங்களுடன் உள்ளூர் விழுமியங்கள், சிந்தனைகள், கலாசாரப் பின்னணிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நல்லாட்சித் தத்துவங்களை நாங்கள் உணர்ந்து நலமாக நடைமுறையில் கையாள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இன்றைய செயலமர்வு எமக்கு வழி வகுத்துக் கொடுக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

இங்குள்ள பிரதேசசபைத் தவிசாளர்கள் அடிமட்ட ஜனநாயக பாரம்பரியத்தின் மூலம், தேர்தல் செயற்பாட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நீங்கள் உங்கள் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் மக்களின் உணர்வுகளை, அபிலாஷைகளை, ஆதங்கங்களை, எதிர்பார்ப்புக்களை நன்குணர்ந்தவர்களாக இருப்பீர்கள் என்பது எமது நம்பிக்கை. எனவே அவர்களது தேவைகளை நிறைவேற்றவும் சிறந்த சேவைகளை அவர்களுக்கு வழங்கவும் நீங்கள் கடப்பாடு உடையவர்களாக இருக்கின்றீர்கள்.

எனவே சமூக நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு தவிசாளருக்கும், சபை அங்கத்தவருக்கும் இருக்கின்றது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அது என்ன சமூக நீதி என்று நீங்கள் கேட்கக் கூடும். சகல மக்களையும் சமமாகவும், சமானமாகவும் பேணிவருதல் உங்களைச் சார்ந்த ஒரு கடப்பாடு. இன்று சாதி அடிப்படையிலும் பிராந்திய அடிப்படையிலும் சமூக நீதிக்கு ஒவ்வாத பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.

என்னிடம் வன்னியில் மக்கள் பலர் வந்து கூறினார்கள் 'நாங்கள் மலையகத்தில் இருந்து வந்து குடியேறியதால் எங்களை இந்திய வீட்டுத் திட்டங்களில் புறக்கணிக்கின்றார்கள் அலுவலர்கள்' என்று. எனக்கு முதலில் விந்தையாக இருந்தது இந்தக் கூற்று. அதாவது இந்திய வீட்டுத் திட்டத்திற்குப் பணம் தருபவர்கள் இந்திய அரசாங்கத்தினர். மலையக மக்கள் அண்மைக் காலங்களில் இந்தியாவில் இருந்து வந்து இலங்கையின் மத்திய மாகாணங்களில் குடியேறியவர்கள் அல்லது வெள்ளைக் காரர்களால் குடியேற்றப்பட்டவர்கள். அவர்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் வீட்டுத் திட்டத்தில் இடமில்லை என்றால் விந்தையாகத்தானே இருக்கும்.

ஆனால் விசாரித்துப் பார்த்ததில் அதன் உண்மை விளங்கியது. மிகக் கேவலமான விதத்தில் எமது மலையகச் சகோதர சகோதரிகளை எமது அலுவலர்கள் நடத்துவதாக அறிந்தேன். அதாவது பொது நிகழ்ச்சித் திட்டங்களில் சமூகப் புறந்தள்ளல் நிகழுவதை நான் அவதானித்துள்ளேன். சமூக நீதி என்றால் சமூகப் புறந்தள்ளல் நிகழாமையை உறுதிப்படுத்துவதாகும். உண்மையில் சமூக நீதி எனும் போது இன்னுமொரு முக்கிய முகமும் அதற்கு இருக்கின்றது. அதாவது சமூக உள்வாங்கலைக் கடைப்பிடிப்பதே அது. சமூகத்தினுள் ஒவ்வொரு பிரஜையையும் உள்வாங்கி அவர்களது பங்களிப்பு ஒவ்வோர் செயற்பாட்டிலும் பெறப்படுதலை உறுதி செய்வது சமூக நீதியைக் கடைப்பிடித்தலாகும்.

இவ்வுலகத்தில் பிறக்கும் எந்த இரு மனிதர்களும் ஒரே மாதிரியான பலத்தையோ, திறனையோ, அறிவையோ, அன்பையோ கொண்டுள்ளவர்களாகப் பார்க்க முடியாது. ஒவ்வொருவரின் கைவிரல் அடையாளங்களும் வித்தியாசமாக இருப்பதை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால் சட்டமானது அவ்வாறு வேற்றுமை கொண்ட மக்களிடையே உரித்துக்களைக் கையாளும் விதத்தில் ஒரு சம நிலையைக் கொண்டுவந்துள்ளது. அதாவது சட்டத்தின் முன் யாவரும் சமமே என்று கூறுகின்றோம். அதனால் யாவரும் சமம் என்று ஆகிவிடாது. ஆனால் யாவருக்கும் சட்டம் சம உரித்தை வழங்குகின்றது. சட்டத்தின் முன்னால் யாவரும் சம உரித்துக்களைக் கொண்டுளார்கள் என்பது தான் யதார்த்த நிலை.

அடுத்து இன்று எம்மிடையே சமூகப் பொறுப்புக் கூறல் முக்கியத்துவம் அடைந்து வருவதை நாம் அவதானிக்கலாம். அதாவது எமது பொதுச் சொத்துக்களை முறையாகப் பேணுவதற்கு ஒவ்வொரு பிரஜையும் பொறுப்புடையவர் என்பது இதிலிருந்து தெரியவரும். இதனை நீங்கள் ஒவ்வொருவரும் கடைப்பிடிப்பதோடு மட்டுமல்லாது இந்த உளப்பாங்கை உங்கள் மக்களிடையே பரவவும், ஏற்றுக் கொள்ளப் படவும் ஆவன செய்வதற்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் முன்வர வேண்டும். அவ்வாறான தார்மீகக் கடப்பாடு உடையவர்கள் நீங்கள் என்பதை மறவாது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பல திணைக்களங்களில் நான் கண்டுள்ளேன் மின்குமிழ்களும் மின்விசிறிகளும் அலுவலர்கள் எவரும் இல்லாத நேரத்தில்கூட எரிந்து கொண்டிருப்பதை அல்லது சுழன்று கொண்டிருப்பதை. வெள்ளைக்காரன் காலத்தில் எமக்கு ஒரு குணமிருந்தது. எல்லாம் வெள்ளைக்காரன் சொத்து அதை எப்படி வேண்டுமானாலும் பாவிக்கலாம் என்று நாங்கள் அந்தக் காலத்தில் நினைத்திருந்தோம். எனவே அரசாங்கம் வேறு நாம் வேறு என்ற ஒரு பாகுபாடு எம்முள் வளர்ந்திருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின்னரும் அதே விதமான ஒரு மனோநிலை தொடர்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இது மாற வேண்டும். பொதுச் சொத்துக்கள் எம் மக்களின் சொத்து என்ற எண்ணம் எம்முள் வளர வேண்டும். இது எமது சொத்து. அவற்றைப் பேணிப் பாதுகாப்பது எமது கடமை என்ற எண்ணம் எம்முள் வளர்க்கப் படவேண்டும். இந்த உளப்பாங்கை உங்கள் மக்களிடையே விருத்தி செய்ய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும். பலவித சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம் எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும்.

அதாவது பொருள் வரும் வழிகளை அதிகமாக உண்டாக்குதலிலும், வந்த பொருளைச் சேர்த்தலிலும் அவற்றைப் பாதுகாத்தலிலும் அவற்றை அதன் பின் நாட்டு நலத்திற்காக செலவிடுதலிலும் வல்லவன் தான் அரசன்.அந்த அரசர் சார்ந்த பொறுப்பு தவிசாளர்களான உங்களை இன்று சார்கின்றது. அதாவது உள்ளூராட்சியில் தேவையான நிதி மூலங்களைத் தேடிக் கண்டுபிடித்து நிதியை முறையாகக் காப்பதற்கும் அதன் மூலமாக அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குமுரிய வழி வகைகளைக் கண்டறிய வேண்டியதும் தவிசாளர்காளாகிய உங்கள் ஒவ்வொருவரையுஞ் சார்ந்த கடப்பாடுகளாவன. இது தற்கால கட்டத்தில் முட் கிரீடமாக உங்கள் மீது சுமத்தப் பட்டாலும் அதனை மலர்க் கிரீடமாக மாற்ற வேண்டிய பொறுப்பு உங்களுடையது. அந்தப் பொறுப்பை உங்களுக்கு எடுத்துக் காட்டி உங்கள் தகைமைகளைப் மேம் படுத்தவே இந்தக் கருத்தரங்கம் நிகழ்கின்றது.

எமது சமூகத்தில் இருக்கக் கூடிய பாதிக்கப்பட்ட பெண்கள், பலன் குறைந்து போன முதியோர்கள், மாற்றுவலுவுடையோர் போன்றோர் உள்ள10ர் அபிவிருத்தி முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஓர் கருவியாக இந்த செயற்பாட்டை மாற்றுங்கள். எம்முள் வலுக்குறைந்தவர்களை வலுப்பெற உதவுவதில்த்தான் எமது கலாச்சாரப் பண்புகள் உறைந்து கிடக்கின்றது. சட்டவாட்சியை இறுகப் பற்றுங்கள். குற்றமற்ற மேம்பட்ட சமூகமொன்றைத் தோற்றுவிப்பதற்கு இதை விடச் சிறந்த வரைமுறை இருக்கமுடியாது. மனித விழுமியங்களை மதிப்பதற்குரிய சேவைகளை நாளும் வழங்கத் தலைப்படுவோம். பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதன் நுகரும் சகல தேவைகளையும் வழங்கும் உள்ளூராட்சியின் நற்பண்புகளை நாற்திசையும் அறியும் வண்ணம் உங்கள் செயற்பாடுகள் அமையப் பெற வேண்டும்.

அபிவிருத்திக்குச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபா பணமும் மக்கள் செலுத்திய வரி அல்லது மக்கள் திருப்பிக் கட்ட வேண்டிய கடன் என்பதை மனதில் நிறுத்துவதுடன் ஒவ்வொரு ரூபாவும் வழங்கக் கூடிய அதி உச்சப் பயனை மக்கள் பெறும் வண்ணம் ஊழலற்றதான நல்லாட்சியை வழங்கப் பாடுபடுங்கள். இதற்கான சமூகக் கணக்காய்வை மக்களே செயற்படுத்தும் வகையிலான வழியையும் அடையக்கூடிய தன்மையையும் ஏற்படுத்திக் கொடுப்பது உங்கள் ஒவ்வொருவரின் முதன்மைப் பணியாக இருக்கட்டும். இவை யாவும் ஒரே நாளில் விதைத்து அறுவடை செய்யக்கூடியவை அல்ல. இருப்பினும் இது தொடர்பிலான விடய ஸ்தானங்கள் மக்களிடையே பரவி விரவ வேண்டும். ஒவ்வொரு உள்ளூராட்சியாளனது உள்ளத்தையும் அடைய வேண்டும். தூண்ட வேண்டும். இவற்றைச் சிறப்பாக அடைய வேண்டுமாயின் மனித உரிமையும் அதன் மாண்பும் மதிக்கப்படல் வேண்டும்.

இதற்கான மார்க்கங்களும் உபாயங்களும் வகுக்கப்படல் அவசியம். சட்டவாட்சிக்குக் கட்டுப்பட எவரும் முன்வரவேண்டும். பல்வேறுபட்ட மனக்காயங்களுக்குள்ளான எமது மக்கள் சுயமாக வளம் பெறவும் மனித உரிமையைப் பேணவும் உயரிய ஆற்றல்களை பெற வழிகாட்ட வேண்டியது உங்களது பொறுப்பென்றால் மிகையாகாது. நாங்கள் ஒரு புதிய பயணத்தில் உள்நுழைந்துள்ளோம். வன்முறைக்கு வந்தனம் செலுத்திவிட்டு வருங்காலத்தை நோக்கி வளமான மனித மேம்பாட்டுக் கொள்கைகளை முன்வைத்து முன்னேறுவோமாக!என்று தெரிவித்துள்ளார்.

 

local-body-meeting-160714-seithy%20(1).J

 

 

local-body-meeting-160714-seithy%20(2).j

 

 

local-body-meeting-160714-seithy%20(3).j

 

http://www.seithy.com/breifNews.php?newsID=113242&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.