Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்"

கலையரசன்

"குழந்தைப் போராளிகள்" என்ற கலைச் சொல்லை, யார் தமிழில் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சொற்பதம் உண்டாக்கும் தாக்கம் பெரிது என்பதை மறுப்பதற்கில்லை. புலி எதிர்ப்பாளர்கள் அந்த சொல்லை மிகவும் விருப்பத்துடன் உபயோகித்து வருகின்றனர். புலி ஆதரவாளர்களும் அதையே திருப்பிச் சொல்ல வைப்பதன் மூலம், அகராதியில் இடம்பெற வைக்க முயற்சிக்கின்றனர்.

உண்மையில், புலிகள் இருந்த காலத்தில், "Baby Brigade" என்ற சொல்லை, சில மேற்கத்திய ஊடகவியலாளர்கள் புலிகளை கிண்டலடிக்க பயன்படுத்தி வந்தனர். சிங்கள ஊடகவியலாளர்களும் அதை விரும்பி ஏற்றுக் கொள்ளவே, தமிழில் சிலர் குழந்தைப் போராளிகள் என்று மொழிபெயர்த்து இருக்கலாம். ஆனால், பிபிசி தமிழோசை பல வருட காலமாகவே "சிறார் போராளிகள்" என்ற சொல்லை பயன்படுத்தி வருகின்றது.

பல புலி ஆதரவாளர்கள் நினைத்துக் கொள்வதைப் போல, குழந்தைப் போராளிகள் அல்லது சிறார் போராளிகள் பற்றிய பிரச்சினையை முதலில் கையில் எடுத்துக் கொண்டது புலி எதிர்ப்பாளர்கள் அல்ல. ஏனெனில், ஆரம்ப கால புலி எதிர்ப்பாளர்கள் பலர், புலிகளால் தடை செய்யப்பட்ட ஆயுதபாணி இயக்கங்களில் இருந்து வந்தவர்கள். அப்போது அவர்களும், 16 வயது சிறார் போராளிகளை சேர்த்துக் கொள்வதை தவறாகக் கருதாதவர்கள்.

உண்மையில், மேற்கத்திய மனித உரிமை நிறுவனங்களும், ஐ.நா. வும் தான், சிறார் போராளிகள் விடயத்தை ஒரு முக்கியமான பிரச்சினையாக மாற்றினார்கள். ஐ.நா. அதற்கென்று விசேட பிரிவை உருவாக்கியது. ராதிகா குமாரசாமி என்ற ஒரு யாழ்ப்பாணத் தமிழ் அறிவுஜீவியை அதற்குப் பொறுப்பாகப் போட்டது. தற்போதுள்ள நவநீதம் பிள்ளை, பிற்காலத்தில் ராதிகா குமாரசாமியின் இடத்திற்கு நியமிக்கப் பட்ட ஒருவர் தான்.

அமெரிக்க சி.ஐ.ஏ., தனது இலங்கை தொடர்பான வருடாந்த அறிக்கைகளில், புலிகளின் சிறார் போராளிகளைப் பற்றிக் குறிப்பிட்டு வந்தது. முரண்நகையாக, சி.ஐ.ஏ. அதற்கு ஆதாரமாகப் பயன்படுத்திய வளங்களில் பெரும்பகுதி புலிகளின் பிரச்சார சாதனங்களில் இருந்து பெறப் பட்டன.

உதாரணத்திற்கு, மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த சமாதிகளில், பிறந்த ஆண்டும், மரணமடைந்த ஆண்டும் பொறிக்கப் பட்டிருந்தன. சி.ஐ,ஏ, அதை சுட்டிக் காட்டி, மரணமடைந்த போராளிகளின் வயதைக் கணக்கிட்டு கூறி வந்தது. விழிப்புற்ற புலிகள் இயக்கம், அதற்குப் பின்னர் போராளிகளின் சமாதிகளில் பிறந்த வருடம் குறிப்பிடும் வழக்கத்தை நிறுத்திக் கொண்டது.

ஆயினும், ஐ.நா.வும், மனித உரிமை ஸ்தாபனங்களும், சிறார் போராளிகள் விடயத்தை ஒரு பூதாகரமான பிரச்சினையாக்கி, அதை சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன. இறுதிப் போருக்கு முந்திய சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், புலிகளிடம் இருந்து, சிறுவர்களை படைகளில் சேர்ப்பதில்லை என்ற வாக்குறுதியை பெறுவதற்கு கடுமையாக முயற்சித்தன. புலிகளும் சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்து நடப்பதைப் போன்று காட்டிக் கொண்டனர்.

தற்போதும் சிலர், புலிகளின் சிறார் போராளிகள் விடயத்தில் அதிக கவனம் குவிப்பதை, வெறுமனே புலி எதிர்ப்புவாதமாக குறுக்கிப் பார்க்க முடியாது. இது மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜனநாயகம். ஆப்கானிஸ்தான், ஈராக்கிற்கு அமெரிக்க ஜனநாயகம் ஏற்றுமதி செய்யப் பட்டமை பலருக்குத் தெரிந்திருக்கும். அதே மாதிரியான ஒரு முயற்சி தான் இதுவும். சில புலி எதிர்ப்பாளர்களும், சில இடதுசாரிகளும், ஜனநாயக உரிமையை பாதுகாப்பது என்ற பெயரில், மேற்கத்திய நிகழ்ச்சிநிரலை செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில், புலிகள் இயக்கத்திற்கு ஆட்களை தெரிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். துடிதுடிப்பான, இராணுவ சாகசம் செய்யும் ஆர்வம் கொண்ட கட்டிளம் காளைகளை மட்டுமே தெரிந்தெடுத்தனர். ஆரம்பத்தில் பெண்களையும், சிறுவர்களையும் போராளிகளாக சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அன்றிருந்த ஐந்து பெரிய இயக்கங்களில், புலிகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருப்பதாக கருதப் பட்டது.

PLOTE, TELO, EPRLF ஆகியன, ஒரு மரபு வழிப் படையணியை கட்டுவதற்கு தேவையான ஆள் பலம் வேண்டுமென்று கூறி, வருவோர் போவோர் எல்லோரையும் கூப்பிட்டு சேர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், புலிகளோ கமாண்டோ பாணி தாக்குதல்களை செய்யக் கூடிய கெரில்லாப் படையை வைத்திருப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள். திடீர் கெரில்லா தாக்குதல்களில் கிடைத்த வெற்றிகள், புலிகள் மக்கள் மத்தியில் பிரபலமடையக் காரணமாக இருந்தன.

1986 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், ஒரு பெரிய திருப்புமுனை உருவாகியது. வட மராட்சியில் நடந்த ஒப்பெறேஷன் லிபரேஷன் போர் நடவடிக்கை மூலம், சிறிலங்கா இராணுவம் பெரியதொரு பிரதேசத்தை கைப்பற்றி இருந்தது. அந்தப் போரில், புலிகள் இயக்கத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதாகவும், பெருமளவு போராளிகள் மரணமடைந்ததாகவும் கருதப் பட்டது. இந்தத் தகவலை, அன்றைக்கு அனுப்பப் பட்ட அமெரிக்க தூதரக கேபிள் தெரிவித்ததை, விக்கிலீக்ஸ் பகிரங்கப் படுத்தி இருந்தது. இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டின் பிற பகுதிகளை கைப்பற்றுவதற்கு முன்னர், இந்தியா தலையிட்டு ஒப்பந்தம் போட்டது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின்னர், புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. அப்போது தான், குழந்தைப் போராளிகள் என்ற தோற்றப்பாடு வெளித் தெரிய ஆரம்பித்தது. அதற்குக் காரணம், வழமையான புலிப் போராளிகள் யாரும் வெளியில் நடமாட முடியவில்லை. பல சிக்கல்களுக்கு மத்தியில், தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது.

இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள், தேடுதல்களுக்குள் அகப்படாமல் தப்புவதற்காக, புலிப் போராளிகள் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு, அடிக்கடி நகர்ந்து கொண்டிருக்க வேண்டி இருந்தது. அப்போது வழியில் படையினர் நிற்கின்றனரா என்று உளவு பார்ப்பதற்காக, சிறுவர்களை பிடித்து முன்னுக்கு அனுப்புவார்கள். இந்திய இராணுவமும், எக் காரணம் கொண்டும் சிறுவர்களை சந்தேகிக்கவில்லை. ஊர் மக்களிடையே இரகசியமாக பணம் சேர்ப்பதற்கும் அவர்கள் பயன்படுத்தப் பட்டனர். அப்போது அந்த சிறுவர்கள் வைத்திருந்த ஒரே ஆயுதம், கிரனேட் மட்டுமே.

இந்தியப் படைகள் இலங்கையை விட்டு வெளியேறிய காலத்தில், உதவியாளர்களாக இருந்த சிறுவர்கள், போராளிகளாக மாற்றப் பட்டனர். புலிகள் தமது முந்திய கொள்கைக்கு முரணாக, சிறுவர்களை படையணியில் சேர்த்துக் கொள்வதற்கு சில சமூகக் காரணிகள் இருந்தன.

1985 - 1986 கால கட்டத்தில் நடந்த இயக்க மோதல்கள், புலிகள் பிற இயக்கங்களை தடை செய்தமை, ஆகிய காரணங்களினால் மக்களுக்கு போராட்டத்தில் ஈடுபடும் ஆர்வம் குன்றி இருந்தது. பல வருடங்களாக, இந்தியா படையனுப்பி தம்மைக் காப்பாற்றும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். 1987 ல், எதிர்பாராவிதமாக இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் நடந்த போர் தந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. இதற்கிடையே, வெளிநாடுகளுக்கும், இந்தியாவுக்குமான புலம்பெயர்தல் அதிகரித்திருந்தது.

இந்தியப் படைகள் விலக்கிக் கொள்ளப் பட்ட பின்னர், வட மாகாணத்தில் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகியது. புலிகள் வைத்திருந்த நடைமுறை (de facto) தமிழீழத்தில் இருந்து வெளியேறிச் சென்ற நடுத்தர வர்க்கத்தினரில் பெரும்பான்மையானோர், போராளியாகும் வயதில் இருந்த இளைஞர்கள். அதாவது 16 - 25 வயதிலான இளைஞர்கள் தான் பெருமளவில் புலம்பெயர்ந்தனர். 16 வயதுக்கு உட்பட்டோர் விசா எடுக்கத் தேவையில்லை என்ற சட்டத்தை பயன்படுத்தி, ஏராளமான இளைஞர்கள், 17 - 24 வயதானவர்கள் கூட, போலி கடவுச்சீட்டு தயாரித்து ஜெர்மனிக்கு சென்றனர். ஓரளவு வசதியானவர்கள் கூட, தம்மிடம் சொந்தமாக இருந்த நிலத்தை, நகைகளை அடைவு வைத்து விட்டு, அல்லது அவற்றை விற்று பணம் சேர்த்துக் கொண்டு, வெளிநாடுகளுக்கு செல்ல முடிந்தது.

மூளைசாலிகளின் வெளியேற்றம் ஒரு வளர்ந்து வரும் நாடொன்றின் பொருளாதாரத்தை பாதிப்பது போன்று, போராளிகளின் வயதையொத்த தமிழ் இளைஞர்களின் வெளியேற்றம், புலிகளின் போராட்டத்தை பாதிக்கும் என்று உணரப் பட்டது. அதனால், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து, 45 வயதுக்கு உட்பட்டோர் யாரும் வெளியேறக் கூடாது என்று, புலிகள் சட்டம் போட்டார்கள். விசா போன்று, பாஸ் நடைமுறை கொண்டு வந்தார்கள். ஏதாவது அலுவலாக கொழும்புக்கு செல்வதாக இருந்தால், நெருங்கிய உறவினரை பணயம் வைத்து விட்டு செல்ல வேண்டும். ஆயினும், வசதி படைத்தவர்கள் பெருமளவு பணம் கொடுத்து, பாஸ் எடுத்துக் கொண்டு சென்றனர். அவ்வாறு வெளியேறிய பெரும் பகுதியினர், வெளிநாடுகளுக்கு ஓடி விட்டனர்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், "அன்று ஈழத்தில் வாழ்ந்த காலங்களில், போராளியாக மாறக் கூடிய அருமையான சந்தர்ப்பத்தை உதறித் தள்ளி விட்டு" வெளிநாடுகளுக்கு ஓடியவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் நிரந்தரமாக தங்கி விட்டவுடன், "புலி ஆதரவாளர்" வேஷம் போடத் தொடங்கினார்கள். வெளிநாடு செல்லும் வரையில், அவர்களுக்கும் புலிகளுக்கும் எந்த வித சம்பந்தமும் இருக்கவில்லை. தமிழீழப் போராட்டம் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கவில்லை.

புலிகளின் செயல்களை எல்லாம் நியாயப் படுத்தி வாதாடிக் கொண்டிருக்கும் பலர், தமது வர்க்க நலன் சார்ந்தே அதைப் பார்க்கின்றனர். குழந்தைப் போராளிகள் பிரச்சினை, அவர்கள் மனதில் எந்த மாற்றத்தையும் உண்டாக்காத காரணமும் அது தான். ஏனென்றால்... இங்கே தான் அவர்களது நடுத்தர வர்க்க மனோபாவம் தலை காட்டுகின்றது.

இறுதி யுத்தம் வரையில், புலிகளின் படையணிகளில் இருந்த பெரும்பான்மையான போராளிகள், குழந்தைப் போராளிகள் உட்பட, வறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். நடுத்தர வர்க்க "குழந்தை அறிவுஜீவிகளை" பின்பற்றி, வெளிநாடு செல்வதற்கு பண வசதி இல்லாதவர்கள். வர்க்க முரண்பாடுகள், வர்க்க ஒற்றுமைகள், எந்த நாட்டு அரசியல் போக்கிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியது.

மேற்கத்திய நாடுகளில், வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கையில், திடீரென தமிழ் தேசிய ஞானம் கைவரப் பெற்றவர்கள், விடுதலை உணர்வு பற்றி போதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஈழத்தில் வாழும் வறிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு, விடுதலை உணர்வு, இன மான உணர்வு எல்லாம் தாராளமாகவே இருக்கின்றன.

மார்க்சிய தத்துவம் காலங் காலமாக கூறி வருவதைப் போன்று, "இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் தான் போராட முன்வருவார்கள்." தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் அது தான் உண்மை. இழப்பதற்கு நிறைய சொத்துக்களை வைத்திருப்பவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று, சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, மற்றவர்களுக்கு தமிழ் தேசியப் பாடம் நடத்திக் கொண்டிருப்பார்கள். இது இருப்பவனுக்கும், இல்லாதவனுக்கும் இடையிலான வர்க்கப் பிரிவினை.

ஈழத்தில், புலிகள் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் கலை அலாதியானது. அதற்கென்றே பிரச்சாரப் பிரிவு சில ஆட்களை வைத்திருக்கும். குறிப்பாக பாடசாலைகளில் சென்று மாணவர்களுடன் பேச்சுக் கொடுப்பார்கள். "படித்து என்ன செய்யப் போகிறீர்கள்? சிங்களவன் வேலை கொடுப்பானா? சிங்களவன் குண்டு போட்டு கொன்று கொண்டிருக்கும் நேரத்தில் படித்து என்ன பிரயோசனம்? எப்படியும் சாகத் தானே போகிறோம்? போராடிச் சாகலாம் அல்லவா?" இப்படிப் பல கேள்விகள்.

ஆண் மாணவர்களுடன் உரையாடுவது பெண் போராளிகளாகவும், பெண் மாணவர்களுடன் உரையாடுவது ஆண் போராளிகளாகவும் இருக்கும். போராளி வாழ்க்கையின் மகத்துவம் பற்றியும், சாதாரண வாழ்க்கையின் இழி நிலை பற்றியும் எடுத்துரைப்பார்கள். ஆயுதமேந்திப் போராடாமல், வாழ்க்கையை வீணாக்குவதாக அவர்கள் எண்ணி வெட்கப் படும் அளவிற்கு அந்த உரையாடல் அமைந்திருக்கும்.

பொதுவாக புலிகளின் எந்தப் பிரச்சாரமும், தற்போது வெளிநாடுகளில் தீவிர தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும், நடுத்தர வர்க்க மாணவர்கள் மனதில் எந்த சலனத்தையும் உண்டு பண்ணுவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு நன்றாகத் தெரியும், படித்தால் தமக்கு எதிர்காலம் உண்டென்று. குறைந்த பட்சம், தமது பெற்றோர் தம்மை வெளிநாட்டுக்காவது அனுப்பி வைப்பார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

மத்திய தர வர்க்கத்திலும் விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். தாமாகவே விரும்பி போராளியாக சேர்ந்து கொள்வார்கள். அப்படியான சிலரை, பெற்றோர் தமது செல்வாக்கை பயன்படுத்தி, முகாமில் இருந்து விடுவித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகும் தமது பிள்ளை ஊரில் இருந்தால் இயக்கத்தில் சேர்ந்து விடுவான் என்று நினைத்து, வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பார்கள்.

ஏழை மக்களின் நிலைமை வேறு. அவர்களிடம் வெளிநாடு செல்லும் அளவிற்கு வசதி, வாய்ப்புகள் எதுவும் கிடையாது. ஏழை மாணவர்கள் மனதில், புலிகளின் பிரச்சாரங்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிவிடும். குடும்பக் கஷ்டத்தை உணர்ந்தும் பலர் போராளியாக சேர்ந்து கொள்ள முன்வருவதுண்டு. அப்படியாவது, தாம் பெற்றோருக்கு பாரமாக இருக்க மாட்டோம் என்று அந்த பிஞ்சு உள்ளங்கள் நினைத்துக் கொண்டன.

வெளிநாடுகளுக்கு செல்லும் மத்தியதர வர்க்கத்தினரை குறி வைத்தும், அவர்கள் புலம்பெயர்வதை தடுப்பதற்காகவும் புலிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். "வெளிநாடு சென்று வெள்ளையனுக்கு அடிமை வேலை செய்யப் போகிறீர்களா? அதை விட எமது தாயகத்தில் சுதந்திரமாக போராடிச் சாகலாமே?" என்று நேரடியாகவும், தமது ஊடகங்கள் மூலமும் சொல்லி வந்தனர். புலிகளின் பிரச்சாரத்திற்கு மயங்கும் நிலையிலா, எமது நடுத்தர வர்க்கம் இருக்கிறது?

மத்தியதர வர்க்க "குழந்தை அறிவுஜீவிகள்", சக மாணவர்கள் அரசியலில் நாட்டம் கொள்வதையே கண்டிப்பார்கள். "நமக்கு முக்கியம் படிப்பு, பல்கலைக்கழக அனுமதி, அதற்குப் பிறகு உத்தியோகம், கடைசியாக ஒரு மேற்கத்திய நாடொன்றில் நிரந்தரமாக தங்கி விடுதல்..." என்று அறிவுரை கூறுவார்கள். ஊரில் ஒரு பாடசாலை மாணவனாக வாழ்ந்த காலங்களில் அரசியலை நினைத்துப் பார்க்க மறுத்தவர்கள், பல்கலைக்கழக பட்டம், வெளிநாட்டு வாழ்க்கை கைவரப் பெற்ற பின்னர் தான், "நமக்கு தமிழீழம் வேண்டும்" என்று உணர்ந்து கொண்டார்கள்! அவர்கள் தான் தற்போது இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகளின் குழந்தைப் போராளிகள் இன உணர்வு பெற்று போராடச் சென்றிருக்கலாம். ஆனால், அதற்கு முன்னர் அவர்களுக்கு வர்க்க உணர்வு என்ற ஒன்று இருந்துள்ளது. இழப்பதற்கு எதுவுமற்ற மக்களுக்கு, போராட்டத்தை தவிர வேறு வாழ்க்கை இல்லை. போராளியாக ஆயுதமேந்திய சிறுவனுக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரம், அவன் ஒரு ஏழைக் குடும்பத்தில் அவல வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் கிடைக்கவில்லை. போராளியான பின்னர் கிடைத்த சமத்துவ உணர்வு, சிறார் போராளிகளுக்கு ஓர் உத்வேகத்தை கொடுத்தது.

மறு பக்கத்தில், பண வசதி படைத்தவர்களுக்கு போராடமாலே ஒரு நல்வாழ்வு அமைந்து விடுகின்றது. அவர்கள் சமத்துவத்தை, சமூக அங்கீகாரத்தை தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை. அதை நாம் கேள்வி கேட்டால், "இறைவன் கொடுத்த வரம்" என்று ஆன்மீக சொற்பொழிவாற்றத் தொடங்கி விடுவார்கள்.

அண்மையில் தமிழகத்தில் பரப்பரப்பாக பேசப்பட்ட, புலிப் பார்வை திரைப்படத்தின் இயக்குனர், பாலச்சந்திரன் என்ற சிறுவனுக்கு புலிச் சீருடை அணிவித்திருப்பது பற்றி எழுந்த சர்ச்சை தொடர்பாக கூறிய விளக்கம் இது: "அந்தப் பாலகனுக்கு சீருடை அணிவித்து அழகு பார்த்திருக்கிறோம்." அதே போன்று, நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு சீருடை அணிவித்து அழகு பார்ப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்கிறார்கள். ஈழத்தில், போர்க் களத்தில் சீருடை அணிந்திருந்த சிறுவர்களுக்கு அது வெறும் அலங்காரப் பொருள் அல்ல. போராளி ஆகி விட்டதால், சமூக அந்தஸ்தில் உயர்ந்து விட்டதாக பெருமிதம் கொள்ளும் கனவு. அந்தக் கனவு மாவீரர் துயிலும் இல்லங்களில் மண்ணோடு மண்ணாக மறைந்து போனது.

http://kalaiy.blogspot.nl/2014/07/blog-post_30.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.