Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு ஏதும் தமக்கில்லை என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Featured Replies

cv%20wiki%20994d.jpg

 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இணைத் தலைவராக தலைமை தாங்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களால் அவரின் 18.11.2013ஆம் திகதி கொண்ட கடிதத்தில் நான் கேட்கப்பட்டிருந்தேன். அக்கடிதத்தின் படி, வருங்காலம் சம்பந்தமான மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்தவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறி என்னை அதனை நடைமுறைப்படுத்த உதவும் வகையில், இணைத் தலைவராக வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தேன். ஆனால் மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு எதுவும் எமக்கில்லை. - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இணைத்தலைமைகளில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அவரது உரையின் முழு வடிவம் பின்வருமாறு:-
 
இணைத் தலைவராக வவுனியாவில்; நான் பங்கு பற்றும் முதற் கூட்டமிது. முன்னர் எமது கட்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றாது இருந்தமை உண்மைதான். என்றாலும் தற்பொழுது பல காரணங்களால் அவற்றில் பங்குபற்றி வருகின்றோம். சட்டத்திற்குப் புறம்பான பல நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு, அரச வளங்களைப் பாவித்து, ஆளுநரைத் தமது தேர்தல் கூட்டங்களில் தம் சார்பாகப் பேச வைத்து, இராணுவப் பயமுறுத்தல்களை ஏற்படுத்தி அவற்றின் மத்தியில்தான் வடமாகாண சபைத் தேர்தல் சென்ற செப்ரெம்பர் மாதம் நடத்தப்பட்டது. அப்படியிருந்தும் 38 பிரதிநிதிகளில் எம்மவர்கள் 30 பேர் மிகப் பெருவாரியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே மஹிந்த சிந்தனை உள்ளடங்கிய அரசாங்கக் கொள்கைகளை எமது மக்கள் நிராகரித்து எமது கூட்டமைப்பின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதில் சந்தேகம் எதுவும் எழத் தேவையில்லை ஆனால் தேர்தலின் பின்னர் ஒரு சில வாரங்களினுள் மாகாண மக்கள் நலன் கருதாது ஆளும் கட்சி நலன் கருதியே நடவடிக்கைகள் எடுத்துச் செல்லப்படுவது எம்மால் புரிந்து கொள்ளப்பட்டது. மத்திய அரசாங்க ஆளும் கட்சி தாம் தருவதை மாகாண மக்கள் ஏற்றே தீரவேண்டும் என்ற பாணியில் தான் நடவடிக்கைகள் எடுத்துச் செல்லப்படுவதை அவதானித்தோம். இதனை எவ்வாறு நாங்கள் கணிக்கின்றோம் என்பதை அண்மையில் "துரித மாகாண அபிவிருத்தி - முன்னேற்றத்தின் மார்க்கம்" என்ற பொருளில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் கூட்டப்பட்ட தேசிய கருத்தரங்கத்தின் முன்னிலையில் நான் பேசிய போது எடுத்தியம்பியிருக்கின்றேன்.
 
அதில் அரசாங்கத்தின் நலன்களுக்கு முரணற்ற முறையில் ஆனால் மக்களுக்கு பயனுள்ள விதத்தில் எவ்வாறு முன் செல்ல முடியும் என்று குறிப்பிடும் போது பின்வருமாறு கூறியிருந்தேன்- "…அபிவிருத்தியின் போது, அனைவரையும் உள்ளடக்கக் கூடிய அர்ப்பணிப்பு நிறைந்த ஓர் அணுகுமுறை, பொது மக்களின் விசேட தேவைகள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளிடையே ஒரு சம நிலையைப் பேணிப் பாதுகாக்க வேண்டியமை போன்றவை இன்றியமையாததாவன" என்று. ஆங்கிலத்தில் அமைந்த அப்பேச்சின் ஆங்கில, தமிழ், சிங்கள மொழிப் பிரதிகள் ஒரே கைநூலாக வெளியிடப்பட்டுள்ளன. அக்கைநூலின் பிரதியொன்றை இங்கு சமர்ப்பிக்கின்றேன். வடமாகாண சபையின் முதல் முதலமைச்சர் என்ற முறையில் வழங்கப்பட்ட அப்பேச்சு எமது வடமாகாண சபையின் கொள்கைக் கருத்துக்களைப் பிரதிபலிப்பதால் அதனை வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட நடவடிக்கைக் குறிப்புக்களுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறே யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் முதற்கூட்டத்தில் இக் கைநூலை உள்ளடக்கியுள்ளேன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இணைத் தலைவராக தலைமை தாங்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களால் அவரின் 18.11.2013ஆம் திகதி கொண்ட கடிதத்தால் நான் கேட்கப்பட்டிருந்தேன். அதன் பிரதி ஒன்றை இங்கு சமர்ப்பிக்கின்றேன். அக்கடிதத்தின் படி வருங்காலம் சம்பந்தமான மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்தவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறி என்னை அதனை நடைமுறைப்படுத்த உதவும் வகையில், இணைத் தலைவராக வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தேன்.
 
மஹிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு எதுவும் எமக்கில்லை. அப்படியிருந்துங் கூட அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைக்கலாம் என்ற எண்ணத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாண்புமிகு ஜனாதிபதி அவர்களைச் சென்று சந்தித்தேன். பல உறுதிப்பாடுகளை அவர் அத்தருணத்தில் தந்திருப்பினும் எதனையும் அவர் இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக மக்களின் ஜனநாயக உரிமைகளை மதியாமல் தொடர்ந்து மத்திய அரசாங்கக் கட்டமைப்புக்களே வடமாகாண நிர்வாகப் பரிபாலனத்தைக் கொண்டு நடத்தி வருகின்றன. இங்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன். அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கென சில விடயங்களும், மத்திய அரசாங்கத்திற்கென சில விடயங்களும், இரண்டுக்கும் பொதுவான சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் காரணத்தினால்தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கூட்டப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் ஊடாக சட்டத்தால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன் வசப்படுத்த இடமளிக்க முடியாது. அந்த அதிகாரங்கள் ஊடாக அவ்வந்த விடயங்கள் சம்பந்தமாக கொள்கைகள் வகுப்பதும் அவற்றை நெறிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதும் மாகாண சபைகளையே சாரும் என்பதை இத் தருணத்தில் கூறி வைக்கின்றேன். எதேச்சையாக அரசாங்கமும் அரசாங்க அமைச்சர்களும் நடக்கத் தலைப்பட்டால் மக்களால் புறந்தள்ளப்பட்டவர்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர்களின் தோளில் ஏறிச் சவாரி செய்பவர்களாய் ஆகி விடுவர். இது ஜனநாயகத்தைப் பாதிக்கும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தொடர்ந்தும் எம்மக்கள் எதேச்சாதிகாரத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்க வேண்டும் என்று எண்ணுவது மனிதாபிமானமற்றது மட்டுமல்லாமல் மடமையுமாகும். எமது மாகாண மக்கள் மற்றைய மாகாண மக்கள் போலல்ல. அவர்கள் போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டு வந்துள்ளார்கள். அவர்களின் பிரச்சினைகளும் தேவைகளும் விசேடமானதும் தனித்துவமானதுமாவன. எல்லோருக்கும் ஒரே அளவுப் பாதணிகள் பொருந்தும் என்று நினைப்பது முறையாகாது என்பதை அன்று ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் காட்டினேன். இன்றும் கூறி வைக்கின்றேன். எல்லா மாகாணங்களையும் ஒரேமாதிரி நடத்துவோம் என்று அரசாங்கம் கூறுவது கேலிக்கிடமாக அமைகின்றது.
 
கிழக்கையும் எங்களையும் விட வேறெந்த மாகாண மக்கள் போரின் உக்கிரத்தைக் கிட்டேயிருந்து தொடர்ந்து முகங்கொடுத்து வந்துள்ளார்கள்? வட கிழக்கு மக்களின் விடிவிற்காகத்தான் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப் போய் எமக்குத் தந்துதவப் போன சமச்சீர்மையற்ற அதிகாரப் பகிர்வானது கவனத்திற்கு எடுக்கப்படாமல் போயுள்ளது. தற்பொழுது மத்திய அரசாங்கத்தின் கீழ் சகல அதிகாரங்களையும் உள்ளிழுக்கவே நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்தால் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கு 'திவிநெகும' சட்டம் ஓர் உதாரணம். மாகாண சபைகளின் சுதந்திரத்திலும் அதிகாரங்களிலும் கை வைப்பதாகவே மேற்படிச் சட்டம் அமைந்துள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டை இவ்வாறான எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே நாங்கள் காண்கின்றோம். மத்திய அரசாங்கத்தின் கை மாகாண சபையின் நடவடிக்கைகளில் மேலோங்கும் வண்ணமாகவே ஜனாதிபதி செயலணி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. ஜனாதிபதி செயலணியை வாபஸ் பெற்ற பின்னர் கூட மத்தியின் கையை ஓங்குவிக்க சதிகள் நடைபெறுகின்றன. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் இணைத் தலைமையில் கருமம் ஆற்றும் போது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் எவ்வாறு தனித் தலைமையில் நடத்தப்பட்டு வருகின்றன என்ற கேள்விக்கு இது வரையில் எனக்குப் பதில் கிடைக்கவில்லை. அண்மையில் எமது இணைத் தலைவர் கௌரவ அமைச்சர் அவர்கள் வவுனியாவில், ஒட்டுசுட்டானில் எங்கெங்கே கூட்டம் நடத்தினார், என்ன செய்தார் என்பதெல்லாம் எமக்கு உடனுக்குடனேயே இணையத்தளத்தில் தந்துதவப் பட்டுள்ளது. தேர்தலில் வாக்களித்த பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களை சீரழிக்கும் வண்ணமாகவே இப்பேர்ப்பட்ட செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றன. மத்தி மகுடி ஊதுவதால் "கருடா! சௌக்கியமா" என்ற குரல் கேட்கிறது. மத்திக்கும் மலைப்புக்கள் வந்து கொண்டிருப்பதை நாங்கள் மறக்கக்கூடாது. இவ்வாறெல்லாம் நடப்பதை அவதானித்துத்தான் மாகாண ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் நாங்கள் முன்னர் பங்குபற்றாது இருந்து வந்தோம். எனினும் எமது மக்களின் ஆக்ஞையை நாம் புறக்கணிக்கக் கூடாது. இதனால் எமது முடிவை மாற்றி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கு பற்ற முன்வந்துள்ளோம்.
 
எவ்வளவு தான் மத்திய அரசாங்கம் தனது முகவர்களின் ஊடாக வடமாகாண மக்களின் நலன்களுக்கு எதிராக நடக்க எத்தனிப்பினும் அவற்றை முறியடிப்பதற்கே எம் மக்களின் எதிர் பார்ப்புக்களை வீணடிக்க விடாது நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எனினும் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கம் நடந்து கொண்டால் அவற்றிற்கு உறுதுணையாக இயங்கவும் நாங்கள் பின் நிற்க மாட்டோம். எமது மக்களின் விமோசனமே எமக்கு முக்கியம். எனது சிற்றுரையை முடிப்பதற்கு முன் சில கேள்விகளை உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன். நாம் இதுவரையில் தனிப்பட்ட ரீதியில் பல அலுவலர்களிடம் விவரங்கள் கேட்ட போதும் இதுவரை அவற்றிற்குப் பதில் அளிக்கப்படாமலேயே உள்ளன. எனினும் தற்பொழுது அரசாங்க அதிபரிடம் இருந்து பதிலொன்று கிடைக்கப் பெற்றுள்ளேன். எனினும் என் கேள்விகளை இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பதிவிற்காக முன்வைக்கின்றேன். அவையாவன -
 
1. 2013ம் ஆண்டு ஒக்ரோபர் 7ஆம் திகதி தொடக்கம் திட்டமிடப்பட்ட அல்லது நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட செயற்திட்டங்களின் முழு விவரங்களையும் உரிய அலுவலர்கள் எமக்குத் தந்துதவுவார்களா?
 
2. இந்திய வீட்டுத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? யார் யாருக்கு வீடுகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டன? என்ன அடிப்டையில் அவை வழங்கப்பட்டன? மிகுதியுள்ள வேலைகள் என்ன?
 
3. வடமாகாணத்தில் 2013ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதிக்குப் பின் இணைத் தலைவர் அவர்களின் மத்திய அமைச்சினால் செயல்ப்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களுஞ் செயற்திட்டங்களும் எவையாவன?
 
4. இவற்றிற்கு நிதி வழங்கிய தாபனங்கள், தனிப்பட்டவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசாங்கம், அரச முகவர்கள் என்பன பற்றிய விபரங்களைத் தர முடியுமா?
 
5. ஜனாதிபதி செயலணி தனது காலத்தின் போது முடித்துவைத்த செயற்திட்டங்கள் எவை எவை? ஏதாவது இன்னும் முடிவு பெறாத நிலையில் இருக்கின்றனவா? தற்;போது அவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றனவா?
 
6. 31.05.2014 அன்று செயலணி செயற்படாது போனபின் மேற்படி செயற்திட்டங்கள் எவ்வாறு யாரால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன?
 
7. திவிநெகும வந்த பின் ஆற்றுப்படுத்தப்படுஞ் செயற்திட்டங்கள் எவை எவை? அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்ற விபரங்களைத் தரமுடியுமா?
 
இவ்வாறு 31.05.201இன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வருந் திட்டங்களில், செயற்திட்டங்களில் வடமாகாணசபை இணைக்கப்பட்டுள்ளதா? நான் மேலே கேட்டுக் கொண்ட விதத்தில் கேள்விகளுக்குப் பதில் எனக்குக் கிடைக்கவில்லையானாலும் 17.07.2014ஆம் திகதிய வவுனியா அரசாங்க அதிபரின் கடிதம் நேற்றுமுன்தினமே என்னிடம் கையளிக்கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அதை வாசித்துப் பார்த்து விடுபட்ட விடயங்கள் இருப்பின் அவற்றை நான் பின்னர் அரசாங்க அதிபரிடம் வினவுவேன் - என்றார் -
 
 
http://malarum.com/article/tam/2014/08/04/4212/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF.html#sthash.xZ8IMlBD.dpuf
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.