Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சினிமாவில் பெண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமாவில் பெண்கள்

பிரபஞ்சன்

நான் அண்மையில் படித்த முக்கியமான புத்தகம், கே. பாரதி எழுதிய ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’ (விகடன் பிரசுரம்).

பாதி வானத்தைத் தாங்குபவர்கள் என்றும் பாதி பூமியை நிரப்புபவர்கள் என்றும் நீட்டி முழக்கி ஆடம்பரமாகச் சொல்லப்படும் பெண்கள், நம் தமிழ் சினிமாவில் என்ன மாதிரி சித்தரிக்கப்படுகிறார்கள் என்கிற ஆய்வே இந்தப் புத்தகம். பெண்கள் பற்றி எழுதுவது என்பதும் சினிமாவில் சித்தரிப்பது என்பதும் பெண்கள் பற்றியது மட்டுமல்லாமல் மானுடம், மனிதகுலம் பற்றியது என்பதே உண்மையாகும். சினிமா பேசத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளிலிருந்து அண்மைக்கால, இன்றைய தமிழ் சினிமா பெண் பாத்திரங்களுக்குக் கொடுத்த இடம், பாத்திரங்களாகச் சித்தரித்த முறை, பெண்களின் மனம், சிந்தனை ஆளுமை வெளிப்படுத்தப்பட்ட பாங்கு, பெண்களின் பிரத்யேகப் பிரச்சினைகள் சொல்லப்பட்ட விதம் ஆகிய பல அம்சங்கள் பற்றிச் செய்யப்பட்ட வலிமையான ஆய்வு என்று இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம். மிகத் தெளிவான தரவுகள், தேடித் தேடித் தொகுத்துக்கொண்ட ஆதாரங்கள், கடந்த எழுபது ஆண்டுகளில் தமிழகத்தில் தோன்றிச் செயல்பட்ட அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் கட்டமைத்த பெண்கள் பற்றிய புரிந்துணர்வு, அனைத்துக்கும் மேலாகப் பெண்கள்பால், சமூகத்தின் பால் கொண்ட தீராத அக்கறை ஆகியவைகளால் உருவாக்கப்பட்ட நூல் இது. ஆகவே ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’, ஆவண மதிப்புள்ள நூலாகவும் விளங்குகிறது.

சினிமா ஒரு அற்புதக் கலை. அது ஒன்றுதான் நம் சம காலத்துக் கலை. ஏனைய ஓவியம், கவிதை, கதை, நாடகம் எல்லாம் பல்லாயிர ஆண்டுகள் முன்பு பிறந்த கலைகள். அறிவியல் தொழில்நுட்பமும் கலைஞனின் ஆத்மாவும் இணைந்து செயல்படும் அற்புதக் கலை சினிமா. இந்தத் தலைமுறைக்கு வாய்த்த வரம். இருபதாம் நூற்றாண்டின் முதல் இரு தசாப்தங்களில் அது மௌனமாகத்தான் அசைந்தது. ஆகவே, மக்களுக்குத் தெரிந்த கதைகளைக் கொண்ட கூத்தையும் புரோசீனியத் தியேட்டர்களின் நாடகங்களைப் படம் பிடித்தன சினிமா கேமராக்கள். ஒலி வந்து, பேசும் படம் வந்த பிறகும் நாடகங்களே சினிமாவில் உள்ளடக்கம் ஆயின. சினிமா என்கிற தனித்துவம் மிக்க கலையின் ஆதாரம் அதன் மொழி. அது ஒரு கருத்தை அல்லது அனுபவத்தை வெளிப்படுத்தும் பாணி என்று சினிமாவின் இலக்கணங்கள் அறியப்படாமலே சினிமா, படம் பிடிக்கப்பட்ட நாடகமாகத் தொடங்கியதே தமிழ் சினிமாவின் வளர்ச்சியுறாத சவலைத்தனத்துக்கான காரணங்கள். பாட்டு யுகம் தொடங்கி, தியாகராஜ பாகவதரும், ஹொன்னப்ப பாகவதரும், சின்னப்பாவும் ஒரு சுற்றுப் பாடி முடித்த பிறகு, இதைவிடவும் ஒரு மோசமான அம்சமாக வசன யுகம் தொடங்கியது. தேவையோ அவசியமோ இல்லாமல் கோர்ட் சீன் வசன மழைகள், சரித்திர ஓரங்க நாடகங்கள் என்ற பெயர்கொண்ட அபத்த சீன்கள் சினிமாவைச் சீரழித்தன.

உலக அளவில், சினிமாக்கள் தனித்துவம் பொருந்திய கலையாக (உதாரணம்: பை சைக்கிள் தீஃப்ஸ்) உருவான போதும் தமிழ் சினிமாக்கள் மூன்றாம் தர நாடகங்களாக இருந்தன. தாசி வீடே கதி எனத் திரிந்த கதாநாயகர்கள், தங்கள் கற்பின் பலத்தால் கணவனைத் திருத்தும் கற்பரசிகளான கதாநாயகிகள், மாங்கல்ய மகிமைகள், இத்யாதிகளே சினிமாவில் உள்ளடக்கமாயின. தமிழ் சினிமா முதலமைச்சர்களை, அரசியல்வாதிகளை உருவாக்கியது. இமயங்கள், சிகரங்கள் என்று சிலர் உருவானார்கள். சூப்பர்கள், அல்டிமேட்கள், உலக நாயகர்கள் என்றெல்லாம் பலர் பயம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் சினிமா? ஆகப் பெரிய கலையாக அது வளர்ந்த பிறகும் மாபெரும் தொழிற்சாலைகளில் சினிமா செய்யப்பட்ட பிறகும் அதுகுறித்து புத்தகங்கள் கதை குறித்து, திரைக்கதை பற்றி, வரலாறு பற்றி, கலைநுட்பங்கள் பற்றி, இசை பற்றி, ஒளி, ஒலிப்பதிவு பற்றி, எடிட்டிங் பற்றி இன்னும் பலப்பல தொழில்நுட்பங்கள் பற்றி...?

சினிமா, ஒரு மாபெரும் ஊடகமாக வளர்ந்த பிறகும் அது கலையாகவும், மேதைகள் பலர் அது சார்ந்து உருவான பிறகும் அது பற்றிய அறிவார்ந்த புத்தகங்கள் வெளிவந்துள்ளனவா என்றால் யோசிக்க வேண்டியுள்ளது. வெறும் பாராட்டுகள் அல்லாத விமர்சனப் புத்தகங்கள் மட்டுமே ரசிகர்களைச் சரியான திசையில் அழைத்துச் செல்லத்தக்கவை. மகிழ்ச்சி தரும் விதத்தில் அமைந்துள்ள தரமான புத்தகங்கள் சில சட்டென்று எனக்குத் தோன்றுபவை, தியடோர் பாஸ்கரனின் நூல்கள், அம்ஷன் குமார், பெலபலாஸ் மொழியாக்கம், செழியன், அசோகமித்திரன், எம். சிவகுமார் போன்ற சிலருடையவை. இவை அவசியமான பதிவுகள். இந்த நெறியில் அண்மையில் வெளிவந்துள்ள முக்கியமான புத்தகம் தமிழ் சினிமாவில் பெண்கள். ஆசிரியர் கே. பாரதி ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’ எனும் இந்த நூலில், 1931 முதல் 2013 வரையிலான தமிழ் சினிமாவில் பெண்கள் எப்படிச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள், எவ்வகைப் பாத்திரங்கள் அவர்களுக்குத் தரப்பட்டன. அப்பாத்திரங்களின் ஊடாக எக்கருத்துக்கள் கட்டமைக்கப்பட்டன என்கிற தளத்தில் பாரதி ஆய்வை நிகழ்த்தி இருக்கிறார். அதாவது தமிழ் சினிமா, அதன் கதையாடல் முன்வைக்கும் கருத்தாக்கத்தை விவாதிக்கிறார். தமிழ் சினிமாவில் பெண்களின் இருட்டைச் சொல்ல வந்த இந்த நூல், தமிழ்ச் சமூக வரலாறாகவும் பரிமாணம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு என்றதும், இயல்பாகவே ‘சினிமா பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கிறது’ என்ற கருத்துக்கு நம் யதார்த்தம் அழைத்துப் போகும். “அந்தக் கோணத்தை முழுமையாகத் தவிர்த்துவிட்டு, கதையாடலில் பெண்கள் எவ்விதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே இந்த நூலில் மையப்படுத்தப்பட்டுள்ளது’ என்று சொல்கிறார் பாரதி.

ஆபாசம் என்கிற கருத்தாக்கம், வேறு தளம் சார்ந்தது. உண்மையில் சினிமாக்காரர்கள் மட்டுமின்றிச் சமூகத்தின் பார்வையிலும், ஆபாசம் எப்போதுமே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட கருத்தாக்கம். பெண்களின் உடம்பு பற்றிய சமாச்சாரமாகவே ஆபாசம் கருதப்படுகிறது. சென்சார் அதிகாரிகள் பார்வை இது. ஆடை கொஞ்சம் கீழ் இறங்கினாலோ, மேல் ஏறினாலோ உடனே ஆபாசம் என்ற குரல் ஒலிக்கத் துவங்குகிறது. ஆபாசம் என்பது ஆடையின் அளவில் இல்லை. எது ஆபாசம்? எது இயல்புக்கும் இயற்கைக்கும் மாறானதோ, எது ஒன்றை ஒன்பதாக்கிக் காட்டுகிறதோ, எது உண்மையை விகாரப்படுத்திக் காட்டுகிறதோ, எது இயற்கையின் மேல் தன் வக்ரத்தைப் பூசுகிறதோ அதெல்லாம் ஆபாசம்தான். தமிழ் சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு என்பது பெரும்பாலும் ஆபாசம்தான். ஆனால் அவைகளைச் சித்தரித்த பலருக்கே ஆபாசம் என்னவென்று புரிதல் இல்லை. தன் ஆய்வுக்குள் நின்று, முழுமையான நியாயம் செய்திருக்கிறார் ஆசிரியர். தரவுகள் இல்லாமல் ஆதாரம் இல்லாமல் எந்தக் கருத்தையும் அவர் சொல்லவில்லை. நான்கு தலைப்புகளில் தன் பார்வையை முன்வைக்கிறார். தேசிய இயக்கச் சினிமா, திராவிட இயக்கச் சினிமா, மிகையுணர்வுச் சினிமா, புதிய அலை சினிமா ஆகியவை அத்தலைப்புகள். கடைசி அத்தியாயம் மாற்றங்களும் பின்னடைவுகளும் என்பது. இதில் தான் வந்து சேர்ந்த முடிவுகளை முன்வைக்கிறார்.

தமிழ் சினிமா, சூல் கொண்டபோதே அரசியல் மயப்பட்டிருந்தது. காரணம், தேசிய ஈடுபாடும் விடுதலை இயக்கப் பிரக்ஞையும் கொண்ட நாடக நடிகர்கள் முதல் தலைமுறை சினிமா நடிகர்களாகவும் மாறினார்கள். அதோடு, அன்றைய சினிமாவின் கதை- உள்ளடக்கம் நாடகம் சார்ந்ததாகவும் இருந்தது. 1919ஆம் ஆண்டு ரௌலட் சட்டமும் ஜாலியன் வாலாபாக் கொடூரமும் நடந்ததைத் தொடர்ந்து அரசியல் கிளர்ச்சி உறுதிப்பட்டது. “தேசிய இயக்கத்தின் தாக்கத்தினால் தமிழ் சினிமாவில் பிரதிபலித்த முக்கிய அம்சங்கள் மது விலக்குப் பிரச்சாரம். இந்தியக் கலாச்சாரப் பெருமை உரைத்தல், மேலைநாட்டுக் கலாச்சாரத்தைக் கண்டித்தல், அரிஜன சேவை” ஆகியன சினிமாவில் பிரதிபலித்தன. அதே சமயம் “சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள், பெண்கள் பிரச்சினைகள், விவாதங்கள் இடம்பெற்றுத் தமிழ் சினிமாவின் வரலாற்று முக்கியத்துவத்துக்கு அழுத்தம் சேர்த்தன”.

தேசிய இயக்கச் சினிமா என்ற பகுதியில் பாரதி முக்கியமான மூன்று விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறார். சினிமா என்கிற வஸ்து, விமர்சிக்கத் தகுதியற்றது என்று அறிவுஜீவிகள், பிரபலஸ்தர்கள் ஒதுங்கியபோது கல்கியின் சினிமா பங்களிப்பு பற்றி பாரதி எழுதியுள்ள குறிப்புகள் முக்கியமானவை. கல்கி பற்றிய ஒட்டுமொத்தப் புறக்கணிப்புகள் நிலவும் இலக்கியச் சூழலில், கல்கியின் முக்கியத்துவம் பலரும் அறியாத ஒன்று. பாரதி, கல்கியின் சினிமா பற்றிய முக்கியத்துவத்தைத் தெளிவாக எழுதுகிறார்.

முதல் தமிழ்ப்படம் காளிதாஸ் தொடங்கிச் சினிமா விமர்சனம் எழுதியிருக்கிறார் கல்கி. மட்டுமல்லாமல், பெண்கள் பற்றிய கருத்தாடலை அடுத்த பாய்ச்சலுக்கு உட்படுத்தியவர் அவர். படம் தியாகபூமி, ஆண்டு 1939.

சம்பு சாஸ்திரியின் மகள் சாவித்திரி. ஸ்ரீதரனுக்கு அவள் மணம் முடிக்கப்படுகிறாள். மேல்நாட்டு நாகரிக மோகம் கொண்ட அவன், ஆங்கிலோ இந்தியப் பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளான். மனைவியை நேசிப்பது இல்லை. மாமியார் கொடுமை செய்வதற்காகவே (அக்காலத்து மாமியார்கள் அப்படிச் சித்தரிக்கப்பட்டார்கள்) பிறந்தவள். மருமகளை வெளியேற்றுகிறாள். சென்னையில் தந்தையைத் தேடித் திரிகிறாள். மருத்துவமனையில் குழந்தையைப் பிரசவிக்கிறாள். அங்குள்ள நர்சுகள் பணியைப் பார்த்துத் தானும் பணி செய்து சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் என்ற ஆரோக்கியமான சிந்தனை கொள்கிறாள். குழந்தையைத் தந்தையிடம் போட்டுவிட்டுப் பாம்பேக்கு ரயில் ஏறுகிறாள். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மிகப்பெரிய பணக்காரியாக (ஆறு ஆண்டுகளில் பணக்காரியாவது எப்படி என்று கல்கி நூல் எழுதியதாகத் தெரியவில்லை) உமாராணி என்ற பெயரில் ஊர் திரும்புகிறாள். செல்வத்தைத் தொலைத்த அவள் கணவன், மீண்டும் வாழ அழைக்கிறான். நீதிமன்றம் செல்கிறான். சாவித்திரி தன் பக்கத்து நியாயத்தை அழுத்தமாக எடுத்துரைக்கிறாள். “இது நியாயமா, இது தர்மமா? ஒரு பெண்ணை அவள் விரும்பாத கணவனோடு வாழும்படிக் கட்டாயப்படுத்துவது நீதியா? மனைவியைக் கணவன் தள்ளிவைத்தால் மனைவி கோரக்கூடிய பாத்யதை என்ன? ஜீவனாம்சம்தானே? அது மாதிரி நானும் இவருக்கு ஜீவனாம்சம் தரத் தயாராக இருக்கிறேன். ஆனால் இவரோடு சேர்ந்து வாழ்வதற்கு மட்டும் சம்மதிக்கமாட்டேன். ஒரு நாளும் மாட்டேன்”.

இதை எழுதும் இந்த நேரத்தில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. பெண்ணுக்குச் சுதந்திரமான வார்த்தைகளைக் கொடுத்த கல்கியை மனம் பாராட்டுகிறது.

பாரதி சொன்ன இரண்டாவது, முக்கிய விஷயம்:

தியாகபூமியின் பட முடிவைத் தேசிய இயக்கச் சார்புடையவர்கள் ஏற்கவில்லை. ‘தி இந்து’, ‘மட்ராஸ் மெயில்’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தினமணி’ ஆகிய பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்தன. கணவனை எதிர்த்து ‘ஒரு இந்து ஸ்திரி’ போராடுவதாவது? கதையின் முடிவும் கதாநாயகி கடைசியில் நடந்துகொண்ட விதமும் நமது இந்திய மனோபாவத்துக்கு முக்கியமாக ஹிந்து குடும்பஸ்திரிகளின் மனோபாவத்துக்கு ஒத்ததாகக் காணப்படவில்லை” என்று சுதேசமித்திரன் குற்றம் காட்டியது.

கல்கி, இந்த விமர்சனத்தைப் பற்றிக் கருத்துச் சொன்னார். ‘தியாகபூமி கதையை எழுதியதில் என்னுடைய நோக்கம் பரிபூரணமாக நிறைவேறிவிட்டது’.

கல்கி என்ற எழுத்தாளருக்கு மகிழ்ச்சி தந்த தருணங்களில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும்.

தேசிய விடுதலைப் போராட்டத்தில் பல போராட்டக்காரர்களிடமும் படித்தவர்களிடமும் அரசியலில் இருந்த தீவிரம், சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் குறிப்பாகப் பெண்கள் தொடர்பான விஷயங்களில் சனாதனம் ஊறி இருந்ததை எடுத்துக்காட்டி இருப்பது பாரதியின் ஆய்வைச் சிறப்பாக்கி இருக்கிறது.

ஒருவகையில் காந்தியாரின் அபிப்பிராயங்களும் இந்தப் போக்குக்குக் காரணமாக இருக்கின்றன. “உங்கள் சுதந்திரம் அப்புறம் இருக்கட்டும். நாடு சுதந்திரம் அடையும் வழியை முதலில் பாருங்கள். தேச சேவையில் ஈடுபடுங்கள். சிறையில் சுதந்திரம் காணுங்கள்...” என்கிற காந்தியாருக்கு நாட்டுச் சுதந்திரம் முதலாக இருந்தது. சீர்திருத்தம், இரண்டாம் இடத்தில் இருந்தது. பெரியாருக்குச் சீர்திருத்தம், பெண் விடுதலை, சாதி மத விடுதலை முதலாக இருந்தது. சமூகப் பிரச்சனைகளே பெரியாரின் மையம்.

அடுத்து வந்த எம்.ஜி.ஆர். பற்றிய பாரதியின் அலசல் அச்சில் 13 பக்கங்கள், அற்புதமான ஆய்வு. மொழி, உச்சத்தைப் பெறுகிறது.

நாடக நடிகரான எம்.ஜி. ராமச்சந்திரன் 1936இல் சினிமாவில் தலைகாட்டுகிறார். ராஜகுமாரியில் (1947) கதாநாயகனானார். தன் வாழ்க்கையைத் திட்டமிட்டு உருவாக்கிக்கொள்கிறார். மிகைப்படுத்தப்பட்ட தனிமனிதத்துவம் எம்.ஜி.ஆர் படங்களின் அடிப்படை அம்சமாக இருந்தது.

1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டுத் தனிக்கட்சி காண்கிறார். அவர் ரசிகர் மன்றங்கள் கட்சிக் கிளைகளாயின. எம்.ஜி.ஆர். படம் ஓடும் டூரிங் டாக்கீஸ்கள் ரசிகர்களுக்குப் பயிற்சி வகுப்புகளாயின.

சரி. எம்.ஜி.ஆர். படத்துப் பெண் பாத்திரங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டார்கள்?

பொதுவாக எம்.ஜி.ஆர். தம்மை உழைக்கும் வர்க்கமாகவே, அதாவது தொழிலாளியாக, விவசாயியாக, பால்காரராக, ரிக்ஷாக்காரராக அடையாளப்படுத்திக் கொண்டவர். பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் எப்படியோ ஏழையாகத் தன் இருப்பைக் காண்பார். நீதியின் பக்கம் நிலை பெற்றவர். குடும்பப்பற்று, பாசம் கொண்டவர். வலிமையில் தன்னிகரற்றவர். தோல்வி இவரிடம் மட்டுமே தோற்கும்.

கடமை உணர்வும் பொறுப்பும் உள்ளவர் என்பதால், காதல் அவருக்கு இரண்டாம் பட்சம்தான். முதலில் இவர் காதலிப்பது இல்லை. காதலிக்கப்படுபவராக இருந்தே, காலக்ரமத்தில் காதலில் ஈடுபடுவார். கதாநாயகிகள் இவரைத் துரத்தித் துரத்திக் காதலிப்பார்கள். அவருக்காகவே நவீன ஆடை அணிந்த பெண்கள், புடவைக்கு மாறுவார்கள். அவருடைய காதலிகளே கனவு காண்பார்கள். அந்தக் கனவில் அலெக்சாண்டராக வருவார், எம்.ஜி.ஆர்.

அம்மா என்றதும் அழுதுவிடுவார். தாயின் சிறப்பு பற்றிப் பாடுவார். தங்கைக்காகவே வாழ்வார். பண்பாட்டில் அதுவும் தமிழ்ப் பண்ட்டில் அசாத்தியமான ஈடுபாடு கொண்டவர். பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்கிற வகுப்பெடுக்கும் ஞானம் உள்ளவர். டிசர்ட் அணிந்த பெண்ணை வில்லன் துரத்துவது சகஜம்தான். ஊரில் நடக்கும் பாலியல் வன்முறை பெண்களின் அரைகுறை ஆடையால் நடக்கிறது.

தங்கைகளோ, எதிர்கால மனைவியோ ஆபத்தில் சிக்கிக் கொண்டால் ஆலவிழுதைப் பற்றிக்கொண்டாவது வந்து கற்பைக் காப்பாற்றுகிற ஆபத்பாந்தவர். இந்தப் படிமம், தமிழ்ச் சமூகத்தில் மிகவும் ஆழமாக வேர் விட்டிருந்ததைப் பாரதி எடுத்துக்காட்டுகிறார். 1992ஆம் ஆண்டு சிதம்பரம் காவல் நிலையத்தில் கைதியாக இருந்த தன் கணவரைச் சந்திக்கப்போன பத்மினி என்ற பெண்ணை அங்கிருந்த காவல்துறையினர் வன்புணர்ச்சி செய்தார்கள். தன் கொடூரமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டபோது அவர் சொன்னார். “நான் எம்.ஜி.ஆர். ரசிகை. நிறைய எம்.ஜி.ஆர். படங்களைப் பார்ப்பேன். சினிமாவில் பெண்களுக்குக் கஷ்டம் வரும்போது ஓடிவந்து அவர் காப்பாத்தினது மாதிரி என்னையும் யாராவது வந்து காப்பாத்தமாட்டார்களான்னு கத்தினேன். கதறினேன். எவரும் காப்பாத்த வரவில்லை.”

பொருளாதாரம் பற்றியும் எம்.ஜி.ஆர். சிந்தித்து, சோஷலிசத்தை அமல்படுத்த சில எளிய சூத்திரங்கள் வடிவமைத்துத் தந்தார் என்பது என் கருத்து.

எம்.ஜி.ஆர். ஒரு பெண்ணை நேசிப்பார். தவறு. ஒரு பெண் எம்.ஜி.ஆரை நேசிப்பார். காதல் கத்திரிக்காய் என்பதெல்லாம் எம்.ஜி.ஆருக்கு ஒரு விஷயமில்லை. அவருக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது. அதை நோக்கியே அவர் செல்வார். பேரிடர்களையெல்லாம் அடித்துத் துவைத்துப்போட்டு, நேசித்த பெண்ணைத் திருமணம் செய்கிற கட்டம் வரும். அதுவும் அற்பம்தான் அவருக்கு. அப்பெண்ணின் தந்தை ஒரு வில்லன். அந்த வில்லனுக்கு ஒரு தொழிற்சாலை சொந்தம். பல நூறு தொழிலாளர்கள் அங்குப் பணி செய்கிறார்கள். தலைவர், அந்தத் தொழிற்சாலை அந்தப் பல நூறு தொழிலாளர்களுக்கும் சொந்தம் என்பார். இந்த ‘காதல்’ சோஷலிசத்தை ஏன் கம்யூனிஸ்டுகள் கற்கவில்லை?

எம்.ஜி.ஆர். படத்தின் பெண்கள் நிலை பற்றிப் பாரதி இப்படிச் சொல்கிறார்.

‘பெரியாரின் வழித்தடங்களைப் பின்பற்றி உருவான ஓர் அரசியல் கட்சியின் தொடர்ச்சியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் எம்.ஜி.ஆர். இவரது படங்களின் பெண் சித்தரிப்புகள் பெரியாரின் சமத்துவக் கோட்பாட்டை முழுவதுமாக நிராகரித்தன’

பெரியாரியத்தை ஏற்றுக்கொள்பவராக, பெரியாரிடம் தங்கள் அரசியல் சமூகக் கொள்கை என்று சொன்ன திராவிடம்சார் இயக்கத்தாரால் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.

திராவிடக் கருத்தியலை முன்னெடுத்துச் சென்ற முன்னோடியாக என்.எஸ். கிருஷ்ணனைக் காண்கிறார் பாரதி. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா ஆகியோரிடம் பக்தி மணம் கமழ்ந்து, எந்தக் கணத்திலும் கடவுள் வந்து கதவைத் தட்டப் போகிறார் என்ற சூழ்நிலையில், அந்தச் சூழலுக்கு விரோதமாக, படத்தில் மையக் கருத்துக்கு விரோதமாக நகைச்சுவைக் காட்சிகளை வைத்துப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தவர் கிருஷ்ணன்.

உதாரணத்துக்குத் தன்னம்பிக்கை (1956) படத்திலிருந்து ஒரு காட்சி.

“கற்புள்ள பெண்கள் பெய்யுன்று சொன்னா மழைபெய்யும். பச்சை விறகுகூடப் பற்றி எரியும்’’ என்கிறார் மனைவி.

மூடநம்பிக்கை என்கிறான் கணவன்.

கோபம் கொண்ட மனைவி தன் கருத்தை நிரூபிக்கப் பச்சை விறகை அடுப்பில் வைத்து, “நான் பத்தினிங்றது நெஜமானா குபீர்னு பத்தி எரியணும்’’ என்று வேண்டுகிறாள். தீ பரவுகிறது. சந்தேகமில்லை. ‘நான் பத்தினிதான்’ வந்து பாருங்க, கணவனை அழைக்கிறாள்.

“நீ வெறகை வச்சிட்டுப் போனப்புறம் நான் நிறைய மண்ணெண்ணெய் ஊத்தி வச்சேண்டி. அதான் எரியுது” என்பான் கணவன். கணவர் கிருஷ்ணன். மனைவி மதுரம் அம்மையார். பெய் என்று சொன்னால் மாடு கூடப் பெய்யாதே!

வெகுசன ஊடகங்களைத் திராவிட இயக்கப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் காரியத்தைத் தொடங்கி வைத்தார் அண்ணாதுரை. தொடர்ந்து மு. கருணாநிதி, ஆசைத்தம்பி, கண்ணதாசன், மாறன், அரங்கண்ணல் போன்ற திராவிட இயக்க எழுத்தாளர்களுக்குத் திரைத்துறையில் மாபெரும் வரவேற்பு இருந்தது என்னும் அந்த வரலாற்றைத் தொடங்குகிற பாரதி, அவர்களின் திரைப்படங்களின் கதையைத் தொட்டுப் பெண்களை எவ்வாறு சித்தரிக்கிறார்கள் என்று ஆராய்கிறார். பாரதி மூன்று கேள்விகளுக்கு விடை தேடுகிறார்.

1. திராவிட இயக்கப் படங்களின் பங்களிப்பில் எத்தகைய பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டன?

2. அவை முந்தைய தேசிய இயக்கப் படங்களிலிருந்து வேறுபட்டிருந்தனவா?

3. பெரியாரின் பெண் விடுதலைக் கருத்தாக்கத்தை இவை வெளிப்படுத்தினவா? என்பன அக்கேள்விகள்.

வேலைக்காரி (1949), ஓர் இரவு (1951), தேவகி (1951, பராசக்தி (1952), திரும்பிப் பார் (1953), மனோகரா (1954), ரத்தக்கண்ணீர் (1954), ரங்கூன் ராதா (1956), பூம்புகார் (1964), பூமாலை (1965) முதலான பல படங்களின் கதை, கதாபாத்திரங்கள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்து கருத்துக்களை முன்வைக்கிறார்.

இவர்களுடைய படங்களில் முன்வைக்கப்பட்ட சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் அதன் ஆரம்பகால ஏழெட்டு வருடங்களில் தனது கோட்பாடாக அறிவித்திருந்த கொள்கையோடு பொருந்துமளவில் அமைந்திருந்தது. அதன் பிறகு, திராவிட இயக்க மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பிரபலமாக வெற்றி பெற்றிருந்த நாடகங்கள் திரைப்படமாக்கப்பட்டபோது அவற்றில் இடம்பெற்றிருந்த புரட்சிகரக் கருத்துகளில் பல மழுங்கடிக்கப்பட்டன.

பெரியாரின் காத்திரமான பெண் விடுதலைக் கருத்துக்கள், திமுகழகத்தினரின் படைப்புகளில் நேர்விரோதமான போக்கையே கொண்டுவிடுகிறது என்ற முடிவுக்கு வருகிறார்.

தேசியவாதிகள் சீதையை முன்னுதாரணமாக் கினார்கள். திராவிட இயக்கத்தினர் வள்ளுவப் பெண்மையையும் கண்ணகியின் சகிப்புத்தன்மையையும் தனக்கான கட்டுமானப் பொருளாக்கிக்கொண்டார்கள். திராவிட இயக்கத்தினரின் பெண் கதாபாத்திரங்கள் எந்த மாற்றமுமின்றி பண்டைய ஏற்றத்தாழ்வு மிக்க சமுதாயத்தின் நிலைக்களனாகத் தேங்கி நிற்கின்றன என்ற மிகச் சரியான முடிவை வந்து எய்துகிறார்.

பெரியார், மக்கள் அவ்வளவு சுலபமாகத் தன் கொள்கைகளை ஏற்கமாட்டார்கள் என்று அறிந்தே, தொடர்ந்து தொய்வில்லாமல் தன் பணியை ஆற்றிக் கொண்டிருந்தார். வாக்குக் கேட்டு மக்களிடம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இல்லை. அப்படி நேர்ந்தாலும் பெரியார் தன் முகத்தை மாற்றிக்கொள்பவர் இல்லை. பெரியாரின் பெண்ணியம் முற்போக்கானது. பெண்களை ரத்தமும் சதையுமாக அவர் ஏற்றார். பத்தினித்தனம், கற்பு மற்றும் கல்யாணப் பவித்ரம், மாங்கல்யம் போன்றவைகளை அவர் எள்ளுபவர். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தினர், ஆட்சிக்கு வரும் நோக்கம் கொண்டவர்கள். வந்தும், எந்தக் குளத்திலும் கல் எறியத் தயாராக இல்லாதவர்கள். ஸ்தம்பித்துக் கிடக்கும் பெண்கள் சார்ந்த சமுதாயப் பிறழ்வுகளை உரசக்கூட அவர்கள் தயாரில்லை. சினிமா அவர்களுக்கு முன்னால் இருந்தது.

1937இல் வெளிவந்த சிந்தாமணியில் பாதிக்கப்பட்ட மனைவி (கணவன் - தாசி விவகாரம்தான்) பாலியல் மறுக்கப்பட்ட தன் துயரத்தை மிக வெளிப்படையாகப் பேசி, சினிமாவை நகர்த்த முயற்சிக்கிறார். 1940இல் வெளிவந்த மாத்ரு பூமி படத்தில் கணவன் சொல்கிறான்.

‘நீ என் மனைவி. எல்லா விதத்திலும் எனக்கு அடங்கி நடக்கக் கட்டுப்பட்டவள்’.

மனைவி சொல்கிறாள்.

‘ஒரு துரோகியின் மனைவியாக இருப்பதைவிட நான் விதவையாக இருப்பதேமேல்’ என்று சொன்ன மனைவி தன் தாலியைக் கழற்றிக் கணவன்மேல் வீசி எறிகிறாள்.

அடுத்த ஆய்வு, மிகையுணர்வு சினிமா பற்றியது. 1951 முதல் 1975வரையிலான தமிழ்ப் படங்களை மிகையுணர்வு சினிமா என்று வரையறுக்கிறார் முக்தா சீனிவாசன்.

பாரதி 1951ஆம் ஆண்டு வந்த சம்சாரம் படத்தைத் தொட்டுத் தொடங்குகிறார். ஏழ்மை, குடும்ப உறவுகள் முதலிய உணர்வுகள் கவ்விப்பிடித்த சினிமாக்கள் தொடங்குகின்றன. காதல் வெற்றி தோல்வி, கற்பின் பெருமை (அது இல்லாமலா?) முதலான பொருட்கள் கொண்ட சினிமா. இக்காலத்தில்தான் மரபை சற்றே மீறிய கே. ராம்நாத், ஸ்ரீதர், கே. பாலசந்தர் போன்றோர் வெளிப்பட்டனர். காதலித்தவனையே மணப்பது என்ற பிரச்சினையைத் தூக்கி எறிந்து வேறொருவனை மணக்கிறாள் கல்யாணப் பரிசு கதாநாயகி.

காங்கிரஸ் நாகராஜன் சம்பூர்ண ராமாயணம் செய்தார். இன்னொரு திமுக அல்லாத வாசன் ஔவையார் என்ற படம் தயாரித்தார். அடங்காதவள் என்றால் மனைவியை விட்டு சந்நியாசம் கொள் என்பாள் ஔவை. அவன் சந்நியாசம் கொள்கிறான். மனைவி ஓடிவந்து அவன் கால்களில் விழுகிறாள்.

மிக விரிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட்ட இந்தப் பகுதியில், பாரதியின் சில முடிவுகளைத் தொகுத்துக் கொள்வோம்.

ஆண் மையப் படங்களில் பெரும்பாலானவற்றில் கதாநாயகியரின் பங்கும் கணிசமாக இருந்தது. கொத்தமங்கலம் சுப்பு கதை எழுதி, சிவாஜிகணேசன் நடித்த தில்லானா மோகனாம்பாள் (1968) ஒரு சரியான உதாரணம். அந்தப் படத்தில் கதாநாயகிக்குச் சமவாய்ப்பும் குணச்சித்திரமும் அமைந்திருந்தது. திராவிட இயக்க ஆதரவுப் படமானாலும் எதிர்ப்புப் படமானாலும், பெண்கள் விஷயத்தில் ஒரே நிலைப்பாடுதான். பொருந்தாத திருமணம் (கிழவர் + இளம்பெண்) நியாயப்படுத்தப்பட்டது. ஸ்ரீதரின் எதிர்பாராதது படத்தில் மகன் காதலியைத் தந்தை மணக்கிறார். உண்மை தெரிகிறது. உயிர்விடும் நேரத்தில் (லொக்... லொக்.. இருமல் கேட்கிறதா?) ‘பெண்ணை வாழச் செய்’ என்று விட்டுச் சாகிறார். பெண் திடீர் என்று தாயாக மாறுகிறாள். அறைகூவல் விடுக்கிறாள். ‘ஆம். வாழத்தான் போகிறேன். உத்தமமான கணவருக்கு மனைவியாக. மகனுக்குத் தாயாக.. இனி நான் ஒரு தாய்..’ காதலன், பரிதவித்துக் கொண்டிருந்தவன், சட்டென மகனாக மாறி, ‘தாயே நீ வாழ்க’ என்று தலை வணங்குகிறான்... குழந்தை கட்டிய தாலிக்கு அர்த்தம் இல்லை என்று நினைக்கக் கூடாது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, கட்டியவனும் கட்டப்பட்டவளும் சந்தித்துக் காதல் கொள்கிறார்கள். அதாவது, தாலி கட்டிய நிகழ்ச்சி அறியாமலேயே! தாலியின் மகிமையாக்கும் அது. தங்கக் கோபுரம் என்ற ஒரு படம். 1971இல் வந்தது. காமுகன் ஒருவனைத் திருத்த, அவன் அப்பனுக்கு மனைவியாகி, காமுகனுக்குச் சித்தி ஆகிறாள். ரூம் போட்டு யோசிக்கிறார்கள் போலும்.

...பொதுவாகவே பெண் கதாபாத்திரங்கள் என்றால் அவர்களின் ஒழுக்கம் குறித்த ஒரு பார்வையை முன்வைக்காமல் ஒரு படமும் இருந்ததில்லை. முக்கிய வாழ்க்கைப் பிரச்சினையே காதலும் கல்யாணமும்தான் என்ற நிலையைவிட்டுப் படங்கள் தாண்ட மறுக்கின்றன. கணவனே சொன்னாலும் மறுமணம் என்ற வார்த்தை பெண்களின் காதுகளில் இடியோசையுடன் இறங்கி (ரீ ரிக்கார்டிங்கில்) அவர்களை நொறுங்கவைக்கிறது.. பெண்ணின் வெளியை ஓர் அடிகூட விஸ்தரிக்க விடக் கூடாது என்கிற திடமான முடிவுகளோடு இயங்கிய இக்கால சினிமாக்கள் என்று விளங்குகிறது.

புதிய அலைப் படங்களைப் பேசுகிற பாரதி, அன்னக்கிளி (1976), யதார்த்தம் சார்ந்த வாழ்க்கையைச் சொன்ன, தமிழ்த் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு அடிகோலியது என்று நிர்ணயிக்கிறார். தி. ஜானகிராமனின் நாலுவேலி நிலம், ஜெயகாந்தனின் உன்னைப் போல ஒருவன், நிமாய்கோஷின் பாதை தெரியுது பார் ஆகியவற்றைக் குறிப்பிடத்தகுந்த யதார்த்த சினிமாவாகக் கொள்கிறார்.

அப்பாவித்தனம் மறைந்து வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்ட பெண்களைப் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயிலில் குறிப்பிடுகிறார் பாரதி. ஒரு விடுகதை ஒரு தொடர்கதை படத்தின் கதாநாயகன் அபூர்வமான பாத்திரப்படைப்பு என்று நியாயமாகவே நிர்ணயிக்கிறார். நீண்ட காலத்துக்கு அப்புறம், ஒரு முழுமையான மனிதனைப் பார்த்த மகிழ்ச்சி எனக்கும் ஏற்பட்டது. தமிழ் சினிமாவின் அடுத்த நகர்வு பூட்டாத பூட்டுகள். இது பத்திரிகைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கே. பாலசந்தரின் அரங்கேற்றம் பற்றியும் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவுகூர்கிறார் பாரதி.

பாலியல் தொழிலில் இருந்து விடுபட்ட லலிதாவைத் திருமணம் செய்துகொள்கிறான் ஒருவன். அதன் பிறகு லலிதா பைத்தியம் பிடித்து அலைகிறாள் என்று படத்தை முடிக்கிறார் பாலசந்தர். லலிதாவை ஏன் பைத்தியம் பிடிக்கச் செய்கிறார் இயக்குநர். அவள் வாழ்வதில் அவருக்கு என்ன பிரச்சினை. “பாலியல் தொழிலை நியாயப்படுத்திவிடலாகாது என்பதற்காகவே அப்படி முடித்தேன்” என்று நியாயம் சொன்னார் அவர். பாலியல் தொழிலில் திணிக்கப்பட்ட ஒருத்தி, அதிலிருந்து வெளியேறுவதற்கும், அவளைத் திருமணம் செய்துகொண்ட அவனைப் பாராட்டுவதும் அல்லவா கலைஞர்களின் பணியாக இருக்க முடியும்.

தீவிர ஒழுக்கவாதியான டால்ஸ்டாய், அன்னாவைக் கடுமையாகத் தாக்குவது என்று இருந்தவர், அன்னாவின் நியாயங்களுக்குக் காதுகொடுத்து, மனம் திறந்தவர். அன்னாவின் வழக்கறிஞராக மாறுவதை இலக்கியம் அறிந்தவர் அறிந்திருப்பார்கள்.

கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் படத்தில் வரும் செவந்தி ஓர் உன்னதமான கதாபாத்திரம் என்று அடையாளம் காண்கிறார் பாரதி.

தமிழ் சினிமாவில் பெண் சித்தரிப்பில், கணவனின் காலடியில் சொர்க்கத்தைக் கண்ட பதிவிரதைகள், கற்புக் கரசிகள், அடங்காப்பிடாரிகள் என்று ஒரு பட்டியலே இருந்தாலும் பெண்ணை மனுஷியாகச் சித்தரிப்பது மட்டும் அபூர்வம். “சமூக உணர்வோடு, பொதுநலத்துக்கான போராட்டத்தில் தன் சொந்த நலன்களைத் தள்ளி வைத்துப் போராடிய வித்தியாசமான கதாநாயகியைத் தமிழ் சினிமா முதல் முதலாகப் பதிவு செய்தது” என்று அந்தப் பாத்திரத்தைச் சிலாகிக்கிறார் ஆசிரியர்.

ஆக, தமிழ் சினிமா அதன் மகிழ்வூட்டும் பொறுப்பிலிருந்து நகர்ந்து கலை என்கிற நிலையை அடைந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. உலக அளவில் பல சினிமாக் கலைஞர்கள், ஷேக்ஸ்பியர் போன்ற மேதைகளின் தரத்தில் மதிக்கப்படலாயினர். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் கலையாகச் சினிமா ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

கலை என்ற சொல்லைத் தமிழ் சினிமா தொடர்பான பலபேர் அடிக்கடி சொல்லக் கேட்கிறேன். கலை என்ற சொல்லின் அர்த்தத்தை முழுமையாக அறிந்துதான் அப்படிச் சொல்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அதற்கான தடயம் அவர்கள் சினிமாவில் இல்லை. கலை என்று மதிப்பிடப் பெற்ற ஒன்று, அதன் சமூகநோக்கத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. சினிமா யாரை நோக்கிப் பேசுகிறது, யார் பேசுவது, என்ன பேசப்படுகிறது, எதைத் தொடுகிறது, வலியுறுத்துகிறது, இயக்குநரின் நோக்கம் என்ன என்பதெல்லாம் எதுவும் இன்றித் தலை கால் இல்லாமல் சினிமாக்கள் வந்து போகின்றன, தமிழில்.

சினிமா ஒரு பெரிய வர்த்தகம் என்றான பிறகு, அதன் அறமதிப்பீடுகள் சரிந்து போயின. சரிந்துதான் இருக்கிறது. அறம் என்கிற சாஸ்வதமான ஒன்றைச் சொல்லும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாத எவரையும் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலமும் ஏற்காது.

சிறந்தவற்றை, நல்லவற்றை மக்கள் ஏற்பதில்லை என்பது நிச்சயமாகச் சொத்தை வாதமே ஆகும். மக்கள் ரசனை அற்றவர்கள் அல்லர். மூடர்களும் அல்லர். சினிமாவை முன்நோக்கி வளர்த்த கே. சுப்பிரமணியம், பாரதிராஜா, பாலசந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா, கோமல் சுவாமிநாதன், ருத்ரய்யா முதலான பலரை நினைவில் இருத்தி, அவர்களைப் போற்றி, வரலாற்றில் வாழச் செய்தது மக்களே. மற்றுமுள்ள நூற்றுக்கணக்கான இயக்குநர்களைப் புறம்தள்ளியதும் மக்கள்தான். பத்தாண்டுகளுக்கு முன்னால், தென்ஆற்காடு புதுச்சேரி மாநில எல்லைக் கிராமம் ஒன்றில், பதேர் பாஞ்சாலியைத் திரையிட்டுக் கருத்துகள் கேட்டோம். அந்தப் படம் குறித்து அறிவார்ந்த விமர்சகர்கள் முன்வைத்திருந்த அபிப்பிராயங்களுக்குச் சற்றும் குறை இல்லாத ரசனையைக் கிராம மக்கள் வெளிப்படுத்தினார்கள். சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளுக்குப் பிறகும் சுகாதாரமான குடிநீரைக் கிராமங்களுக்கு அளிக்காத அரசுகள் மாதிரி, நல்ல சினிமாவை மக்களுக்கு அளிக்காதது யார் தவறு?

சினிமா, கதை இல்லை. அது பாரதிக்கும் தெரியும். என்றாலும் கதை இல்லாமலும் சினிமா இல்லை. கதை என்பது ஒருவர் அல்லது சிலர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், இன்பங்கள், சந்தோஷங்கள் ஆகியவைதான். தமிழ் சினிமா, இன்றும் வாழ்க்கையிலிருந்து தன் சினிமாக்களைக் கண்டுபிடிக்கவில்லை. மாறாக, ‘வெற்றி’ பெற்ற படங்களிலிருந்தும், பார்த்த படங்களிலிருந்தும் சினிமாக்களைத் தோற்றுவிக்கிறது.

தமிழ் சினிமா, தன் சமூகத்தில் பல அசாதாரண விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தமிழ் சினிமா, தமிழர்களை ஊடுருவி இருக்கிறது. புடவைகள் முதல் முடிவெட்டிக்கொள்ளும் ஃபேஷன்வரை சினிமா தன் செல்வாக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் நாட்டில் (வடநாட்டிலும்) சினிமா நடிகர்கள் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார்கள். இளைஞர்களில் கணிசமான பகுதியினர் சினிமா நடிகர் நடிகையரின் அனைத்து விவரங்களையும் அறிந்தவர்களாகத் திகழ்கிறார்கள். பிரபலமான தமிழ்ப் பத்திரிகைகளின் பெரும்பாலான பக்கங்களைத் தமிழ் சினிமா நடிகர் நடிகையரே ஆக்கிரமித்திருக்கிறார்கள். நடிகர் நடிகையர் படங்களைத் தவிர வேறு படங்களைத் தங்கள் பத்திரிகையின் அட்டையில் பிரசுரம் செய்யமாட்டோம் என்று சபதம் எடுத்த பத்திரிகைகள் தமிழ்நாட்டில் உண்டு. வெறும் சினிமாவை மட்டும் மறு ஒளிபரப்பும் காட்சி ஊடகங்கள் இருக்கின்றன. தமிழக அரசியலுக்குத் தன்னால் ஆன ஏதோ ஒருவகைப் பங்களிப்பை சினிமா கொடுத்துக்கொண்டே இருக்கிறது. சூப்பர் ஸ்டார், அரசியலுக்கு வருவதைப் பற்றியோ, ‘வாய்ஸ்’ கொடுப்பது பற்றியோ தகவல்கள் மிக முக்கியமான தொனிகளில் பரப்பப்படுவதைக் கேட்க முடிகிறது. எல்லாற்றுக்கும் மேலாக, தமிழ் சினிமா நாட்டின் முதலமைச்சர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையாகவும் மிளிர்கிறது. மிக நவீனமானத் தொழில்நுட்பங்களை அறிந்த கலைஞர்கள் பலர் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள், என்றாலும் தமிழ் சினிமா நல்ல சினிமாக்களை உருவாக்குவதில் பின்தங்கி இருக்கிறது.

தமிழ் சினிமாவில், அதன் கதைகளில் பெண்கள் எவ்வகைப் பாத்திரங்களில் இடம்பெற்றார்கள் என்பதைப் பற்றிய விரிவான ஆய்வு கே. பாரதியால் வெளிவந்துள்ளது மிகுந்த ஆறுதலைத் தருகிறது. மிகுந்த பொறுப்புணர்வுடனும் பெரிய உழைப்புடனும் இந்தப் பணியை அவர் செய்திருக்கிறார். பாராட்டப்பட வேண்டிய பணி. எளிமையான, அதேசமயம் தீர்க்கமான, குழப்பம் இல்லாத சொற்களால் எழுதப்பட்ட புத்தகம்.

குடும்பத்தில், சமூகத்தில் எந்த இடத்தைப் பெண்கள் வகிக்கிறார்களோ, அதே இடத்தைத்தான் சினிமா கதைப் பெண்களும் வகிக்கிறார்கள். இரண்டாம், மூன்றாம், நாலாம் இடத்திலேயே பெண் கதாபாத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். சினிமாவின் நிகழ்வில் பெண்ணின் பங்கு என்பது ஒன்று இல்லை அல்லது குறைவு அல்லது கௌரவமற்ற விதத்தில் அல்லது பரிதாபத்துக்குரிய விதத்தில்

http://www.kalachuvadu.com/issue-176/page61.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.