Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேஸ்புக்: நம் மனதின் ஸ்விட்ச் யார் வசம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்: நம் மனதின் ஸ்விட்ச் யார் வசம்?

அபிலாஷ் சந்திரன்

intrude.jpg

இதுக்கெல்லாம் போய் கோவப்படலாமா என அடிக்கடி நினைப்பேன். அது பெரும்பாலும் முகநூலில் என் நடவடிக்கை சம்மந்தப்பட்டதாக இருக்கும். ஒரு விசயம் பார்த்து கொந்தளித்து மாங்கு மாங்கென்று எழுதி விட்டு கொஞ்ச நேரம் கழித்து இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என தோன்றும். ஒரு அற்ப விசயம் எப்படி எனக்கு முக்கிய பிரச்சனையாக தோன்றியது?

1) ஏனென்றால் முகநூல் சில செய்திகளை நாம் தவிர்க்கவே முடியாதபடி நம் முகத்தில் அறைகிறது. அல்லது தட்டில் வைத்து நீட்டுகிறது. பரிந்துரைக்கிறது. எப்படியோ பார்க்க வைக்கிறது. நாம் டென்ஷனாகிறோம். அதாவது நமக்கு பிடிக்காத ஒருவர் நமக்கு பிடிக்காத ஒன்றை மின்னஞ்சலில் எழுதியிருக்கிறார். நாம் அதை திறந்து பார்க்காமலே அழிக்கலாம். ஏனென்றால் சைன் இன் செய்தவுடன் மின்னஞ்சல் பேச்சில் இப்படி ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது என்கிற மேலோட்ட தகவலை தான் தரும். மின்னஞ்சலை மொத்தமாய் உங்கள் முகத்துக்கு நீட்டாது. நீங்கள் அதை படிக்க வேண்டுமா என யோசிக்கும் நேரத்தை அவகாசத்தை தரும். ஆனால் பேஸ்புக் அந்த பத்து நொடிகளை உங்களுக்கு வழங்காது. நீங்கள் உள்ளே நுழைந்த அடுத்த நொடி நீங்கள் நேற்று படித்தவரின் நிலைத்தகவலை மொத்தமாய் உங்கள் முன் காட்டும். அதற்கு என்ன நிலைப்பாடு எடுப்பது என முடிவெடுக்கும் முன் சில நூறு பேர் அதற்கு தெரிவிக்கிற கருத்துக்களை, விருப்பக்குறிகளை காட்டும். நீங்கள் பிடிக்காத உணவை வலுக்கட்டாயமாய் ஊட்டப்படும் பத்துமாத குழந்தை போல் விக்கித்து போவீர்கள். மனிதனின் ஒரு அடிப்படை குணம் பக்கத்தில் இருப்பவரின் முகபாவத்தை போல செய்வது. பக்கத்தில் இருப்பவர் கொட்டாவி விட்டால் உங்களுக்கும் கொட்டாவி வரும். திடீரென்று சம்மந்தமில்லாத ஒருவர் கேவி கேவி அழுதால் உங்களுக்கும் வயிறு கலங்கும். பேஸ்புக்கில் பின்னூட்டங்கள் உங்களை இது போல் போல செய்ய வைக்கிறது. பத்து பேர் ஒன்றை திட்டி பின்னூட்டமிட்டால் உங்களுக்கும் கோபம் வந்து திட்ட தோன்றும். நிலைத்தகவல் பார்த்து உங்களுக்கு கோபம் வரவில்லை என்றாலும் கூட கொட்டாவி வந்தாலும் கூட பின்னூட்டங்களை கவனித்தால் சற்று நேரத்தில் தாண்டவமூர்த்தி ஆகி விடுவீர்கள்.

2) அது போல் பேஸ்புக்கில் நாம் கால் விநாடிக்கு மேல் எதற்கும் நேரம் ஒதுக்குவதில்லை என்பதால் பார்த்ததும் கோபப்பட்டு/சிரித்து பழகி விட்டோம். கால்நொடி உணர்ச்சிக்கு உடனடியாய் கருத்தெழுத பேஸ்புக் தூண்டுகிறது. அதற்கும் சில விநாடிகள் தாம் அவகாசம். இதற்கும் யோசிக்க எங்கே நேரம்? எனக்கு இதை நினைக்கையில் முன்னர் நள்ளிரவில் கலைஞரை கைது பண்ணின அதிர்ச்சியில் யாரோ ஒரு தொண்டர் இறந்து போனது நினைவு வரும். ஏனென்றால் கலைஞர் அந்த அற்ப சம்பவத்தை தாண்டி ரொம்ப ஆண்டுகள் வந்து விட்டார். இன்னும் ஜம்மென்று இருக்கிறார். ஆனால் அன்றிரவு அதிர்ச்சி அடைந்தவர் தான் பாவம் உயிருடன் இல்லை.

யோசித்து பார்த்தால் பேஸ்புக் மட்டும் இணையத்தில் இருந்து சற்று விடுபட்டு இயங்குவது விளங்கும். இணையத்தில் விளம்பரங்கள் உண்டு. ஆனால் அவை உங்களை தொந்தரவு பண்ணாமல் இருக்கவும் வழி வகையும் உண்டு. ஜிமெயிலிலும் நாம் படிக்கிற மின்னஞ்சலை பொறுத்து உடனடி அல்காரிதம் வைத்து விளம்பரம் வருகிறது. அதாவது நீங்கள் யாருக்கோ குழந்தை பிறந்தது பற்றி சேதி படித்தால் வலப்பக்கம் குழந்தை வளர்ப்புக்கான சாதனங்களின் விளம்பரங்கள் வரும். ஆனால் நம் மனதின் ஒரு சிறப்பு இது போன்ற குப்பைகளை கவனிக்காமலே தவிர்ப்பது. மிக சரியாக கண்கள் மின்னஞ்சலை படித்து விட்டு மூடி விடும். ஆனால் பேஸ்புக்கில் ஒருவர் பணம் செலுத்தினால் அவரது பதிவு (விளம்பரம்) நீங்கள் வழக்கமாய் படிக்கிற ஸ்டிரீமிலேயே நடுவில் உங்கள் பார்வையால் தவிர்க்க முடியாத படி வரும்.

இணையம் என்பது நாம் விரும்புகிறதை தேவையான நேரத்தில் சுதந்திரத்துடன் படிக்கிற பார்க்கிற இடம். ஆனால் பேஸ்புக் நேர்மாறாக டி.வி போல் இயங்குகிறது. அதில் காட்டுவதை தான் நீங்கள் பார்க்க முடியும். உதாரணமாய் நித்தியானந்தாவின் படுக்கையறை காட்சியை திரும்ப திரும்ப ஒரு சேனல் காட்டிக் கொண்டிருந்தால் தமிழகமே அதைப் பற்றித் தான் பேசும். பேச வேண்டும். வேறு வழியில்லை. இப்படி மனிதனின் உணர்ச்சியை, பார்க்கும் உரிமையை கட்டுப்படுத்துவது தான் ஊடகங்களின் உண்மையான அதிகாரம். பேஸ்புக் இதையே தான் பயனர்களின் உதவியுடன் செய்கிறது. அதிகம் பேசப்படுகிற பதிவுகள் எப்படியோ அனைவர் கண்ணிலும் பட்டு ஒரு பரபரப்பு தோன்றுகிறது. அது தீயாக பற்றி எரிகிறது. இதன் வழி நாம் எதற்கு எப்படி எந்நேரத்தில் எதிர்வினையாற்ற வேண்டும் என ஒரு ஊடகம் தீர்மானிக்கிறது. பேஸ்புக்கில் எதற்கும் நேரம் குறைவா, நாம் உடனுக்குடன் கோபப்பட்டு எதையாவது சொல்லி யாரையாவது கோபப்படுத்தி ஒரு இணைய கலவரத்துக்கு தீக்கொளுத்தி போட வேண்டும், தெரிந்தோ தெரியாமலோ.

இது நாம் உணர்ச்சிவசப்படுகிற பாணியை மெல்ல மாற்றி அமைக்கிறது. ஒரு பிரச்சனை முக்கியமா என யோசிக்க தவறுகிறோம். ஒரு பிரச்சனையின் பல்வேறு பரிமாணங்களை பார்க்காமல் கோபப்படுகிறோம். பேஸ்புக்கின் உண்மைத்தன்மை போன்ற தோற்றமும் இதற்கு ஒரு காரணம். இன்று மெல்ல மெல்ல நாம் டி.வி செய்திகள் மேல் அவநம்பிக்கை கொள்ள துவங்கி இருக்கிறோம். ஆனால் அதே சேதியை யாராவது பேஸ்புக்கில் பேசும் போது அது இன்னும் உண்மையாக நெருக்கமாக படுகிறது. அதனால் தான் ஒரு சாதாரண பின்னூட்டத்துக்கு கூட மதிப்பளித்து கடுமையாய் மோதிக் கொள்கிறோம்.

பேஸ்புக் இல்லாத காலத்தில் நாஞ்சில் நாடனின் பட்டியல் இவ்வளவு குழப்பங்களை வெறுப்பான உரையாடல்களை உருவாக்கியிருக்குமா? ஒருவேளை பிளாகுகளில் சில பேர் அதுவும் பின்னூட்டங்களில் அரட்டையடித்து மோதிக் கொண்டிருப்பார்கள். ஆனால் பேஸ்புக் காலத்தில் நாஞ்சிலின் பட்டியலல்ல அது பற்றி பிறர் எழுதும் கருத்துக்கள் தான் அதிகம் சர்ச்சைகளை உருவாக்கியது. இவரை ஏன் சொல்லவில்லை என்று அவர் கேட்டால் அவர் எப்படி இவரை இப்படி சொல்லலாம் என இன்னொருவர் யோசித்தால் ஆயிரம் கற்பனை குடிசைகள் எரியும். யோசித்து பாருங்கள் இந்த சர்ச்சையின் போது நாம் ஏதாவது ஒரு உருப்படியான விவாதத்தை உருவாக்கினோமா? கருத்துக்களை கண்டுபிடித்தோமா? அவதானித்தோமா? இல்லை. முடிவில் வெறும் சாம்பலே எஞ்சியது.

பேஸ்புக் தருகிற வெளிப்பாட்டு சுதந்திரம் அபாரமானது, பாராட்டத்தக்கது. ஆனால் அது நம் உளவியலை கட்டுப்படுத்துவது, உணர்ச்சி தூண்டுதலை தீர்மானிப்பது வருத்தத்துக்கு உரியது. அதை விட சிக்கல் அது உணர்ச்சிகளை மட்டுமே தூண்டுகிறது என்பது. அதுவும் சொடக்கு போடுகிற வேகத்தில். உதாரணமாய் ஒரு நண்பர் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறார். அதில் உங்களுக்கு பிடித்த இளையராஜாவை திட்டுகிறார். நீங்கள் கொந்தளித்து திரும்ப குறுஞ்செய்தி அனுப்ப மாட்டீர்கள். ஏன் இப்படி எழுதுகிறான் என யோசிப்பீர்கள். உங்கள் பதிலை அனுப்புவீர்கள். அல்லது கூப்பிட்டு பேசுவீர்கள். ஆனால் அதற்காக நீங்கள் தெருவில் புரண்டு அடிக்க மாட்டீர்கள். காரணம் உணர்ச்சிகளை ஆறப் போட்டு யோசிக்கும் நேரத்தை குறுஞ்செய்தியின் வடிவம் அளிக்கிறது. பேஸ்புக்கில் போல் டக்கென அடிக்க முடியாது. இலவசமும் கிடையாது. அது போல் இது அந்தரங்கமான உரையாடல் எனும் உணர்வு கூட உங்களை கண்ணியமாய் யோசிக்க செய்யும். ஆனால் பேஸ்புக்கில் நீங்கள் உடனடியாய் எளிதாய் செலவின்றி பதில் அடிக்கலாம். அதை ஊர் உலகமே பார்க்கும். அது ஒரு பெரிய பிரச்சனை போல் தெரியும். ஒரு படத்தையும் இணைத்து விட்டால் உங்கள் நிலைத்தகவல் ஒரு பத்திரிகை தலைப்பு சேதியை போன்றே தோன்றும். சொல்லப்போனால் அதை விட முக்கியமாய் தோன்றும்.

ஆனால் இவை எதுவுமே பத்து நிமிஷம் ஆறப் போட்டால் உங்களுக்கே சரியாய் வேகாத வெண்டைக்காய் பொரியல் போல தோன்றும். என் நண்பர் ஒருவர் பிரபல முகநூல் பதிவர். ஒரு நிலைத்தகவலை போட்டு பத்து நிமிடம் பார்ப்பார். அதற்கு போதுமான விருப்பக்குறிகள் விழாவிட்டால் அழித்து விடுவார். பார்த்த அடுத்த நொடியில் உணர்ச்சிவசப்பட வைக்காவிட்டால் அது முக்கியமல்ல. இந்தளவுக்கு அற்பமாய் அபத்தமாய் போய்க் கொண்டிருக்கிறது நாம் கோபப்படுகிற பாணி.

சரி குறைந்தது நாம் தானே இச்செய்திகளை உருவாக்கி பரபரப்புகளை கட்டுப்படுத்துகிறோம். நாம் அழித்து விட்டால் முடிந்து போய் விட்டது என நினைக்கலாம். ஆனால் அப்படி அல்ல.

பேஸ்புக்கில் அத்தனை பதிவுகளும் உங்கள் முகப்பில் தோன்றாது. நீங்கள் வழக்கமாய் படிப்பவர்களிடம் இருந்து சில பதிவுகள் (எப்படியோ) தேர்ந்தெடுக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும். சமீபமாக அமெரிக்காவில் ஒரு பலகலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடந்தது. பேஸ்புக்கில் சில பயனர்களுக்கு சில குறிப்பிட்ட நிலைத்தகவல்களும், பதிவுகளும் அவர்களுக்கு தெரியாமல் அவர்களது ஸ்டிரீமில் அளிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் எப்படி உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறாரகள், இது அவர்களின் மனநிலையை எப்படி பாதித்தது, அவர்களை தொடர்வோர் எப்படியெல்லாம் எதிர்வினை செய்தார்கள் என பேஸ்புக்கே தரவுகளை வழங்க அதைக் கொண்டு ஆய்வு நடந்தது.

எனக்கொரு சந்தேகம். ஒருவருடைய ஸ்டிரீமில் இப்படி எவையெவை முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பது இந்த ஆய்வுக்காக தனியாய் நடந்ததா அல்லது பொதுவாகவே பேஸ்புக் இதை செய்கிறதா? இல்லை என்றால் பேஸ்புக் இதை செய்ய துவங்கும் காலம் அருகாமையில் உள்ளதா? உதாரணமாய் பெட்ரோல் விலை உயர்வை எடுங்கள். அது பற்றி கோபமாய் எழுதப்படும் நிலைத்தகவல் மற்றும் பின்னூட்டங்களை மட்டும் அனைவர் முகப்புகளிலும் அதிகம் தெரியும்படி பண்ணி பேஸ்புக்கால செயற்கையாய் ஒரு கலவரச் சூழலை, போலி பதற்றத்தை ஏற்படுத்த முடியாதா? இப்போதே நாம் மேற்கொள்ளும் உரையாடல்களை கண்காணித்து அதைக் கொண்டு தோதான விளம்பரங்களை தரும் பேஸ்புக் ஒருவிதத்தில் நம் அந்தரங்களை வெளியே விற்று காசு பண்ணுகிறது. அடுத்த கட்டமாக ஒரு படம் அல்லது பொருளின் விற்பனைக்காக ஒரு செயற்கை பரபரப்பை அது ஏன் ஏற்படுத்தாது? பேஸ்புக் செய்ய வேண்டியதெல்லாம் நம் முகப்பிலும், டிக்கரிலும் எது அதிகமாய் தோன்ற வேண்டும் என தீர்மானிப்பது தான். ஒரு மென்பொருளின் துணையுடன் லட்சக்கணக்கானோரை அது இவ்வாறு கட்டுப்படுத்தினால் இன்று மாலை ஆறு மணியில் இருந்து ஆறு பத்துக்குள் இத்தனை லட்சம் பேரின் ரத்தக்கொதிப்பை உயர வைக்க வேண்டும் என இலக்கை தீர்மானித்து செயல்படுத்த முடியும். இந்த நாள் மாலை முழுக்க இப்படம் பற்றியே லட்சக்கணக்கான பேரின் பேச்சிருக்க வேண்டும் என நம் மனநிலையை முழுக்க ஆட்ரா ராமா ஆடு என பண்ண முடியும். இது நடக்கப் போகிறதா அல்லது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறதா?

இப்படி எந்த பிரச்சனை என்றாலும் நொடியில் உணர்ச்சிவசப்படும் போது நாம் அதன் ஆழத்தை அறிய தவறுகிறோம். அது போல் சில முக்கியமான விசயங்களுக்கும் சிலரிடம் ஒரு அற்பமான/மேலோட்டமான மனவெளிப்பாடு மட்டுமே இருக்கலாம். எல்லாராலும் சரியாக சிந்திக்க முடியாது தான். அதை நாம் நன்கு உணர்ந்தே இருக்கிறோம். ஒரு அரசியல் தலைவர் பற்றி நமக்கு மிகுந்த அபிமானம் இருக்கலாம். அதேவேளை அவர் மீது எல்லாருக்கும் மரியாதை இருக்க வேண்டியதில்லை எனவும் அறிவோம். அதை ஏற்று இவர்களின் கருத்து முக்கியமில்லை என நினைத்து நம் பாதையில் பயணிக்கிறோம். ஆனால் பேஸ்புக்கில் ஒருவர் பிரபாகரனின் படத்தை போட்டு கீழே ஆபாசமாய் எழுதுகிறார் என வைப்போம். நீங்கள் ஒரு ஈழப்போராட்ட அபிமானி. உங்களுக்கு அதைப் பார்த்ததும் ரத்தம் கொதிக்கும். ஆனால் ஏன் கொதிக்க வேண்டும்? பொதுக்கழிப்பறையில் இருக்கையில் அல்லது தெருமுனையில் யாரோ ஒருவர் இதே போல் அவமானகரமாய் பேசினால் நின்று சண்டை போடுவீர்களா? அலுவலக கேண்டீனில் பக்கத்து மேஜை உரையாடலில் ஒருவர் இன்னொருவரிடம் பிரபாகரனை திட்டி பேசினால் தலையிட்டு அவரது கழுத்தை பிடிப்பீர்களா? நீங்கள் வீட்டுக்கு வருகிற வழியில் பத்து பேர் அங்கங்கே நின்று இப்படி பேசுவதை கேட்டு அவர்களிடம் தர்க்கித்தால் நீங்கள் இரவு பன்னிரெண்டுக்கு கூட வீட்டுக்கு வந்து சேர முடியாது. முட்டாள்கள் பேசுகிறார்கள் என நினைத்து விட்டு வந்து விடுவோம். ஆனால் பேஸ்புக்கில் மட்டும் ஏன் உடனடியாய் கோபித்து சண்டை போடுகிறோம்? அது பொதுவெளி என்றா? தெருமுனை கூட பொதுவெளி தானே? எழுதப்படுவதால் அது மதிப்புக்குரியது என்றா? இணையத்தில் ஆபாசக்கதைகளூம் கிசுகிசுக்களும் கூடத் தானே எழுதப்படுகிறது? எழுதப்படுவதால் ஒன்று மதிப்புக்குரியது என்றால் கழிப்பறையிலும் கூடத்தான் ஏகப்பட்ட வாக்கியங்கள் எழுதப்படுகின்றன. அதற்கெல்லாம் ஒரு கரிக்கட்டி எடுத்து பின்னூட்டம் சுவரிலேயே எழுதுகிறோமா?

நீங்கள் சற்றும் பொருட்படுத்தாத மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்போரை பொதுவெளியில் எளிதில் கடந்து போகிற நீங்கள் பேஸ்புக்கில் மட்டும் அவர்களை இவ்வளவு பொருட்படுத்தி பேசுகிறீர்கள்? அவர்கள் போடும் ஒரு சிறுசொல்லுக்கு ஏன் இவ்வளவு கொந்தளிக்கிறீர்கள்? உங்கள் மனம் என்பது யார் கல் வீசினாலும் அலைகளை உருவாக்கும் நீர்ப்பரப்பை போன்றதா? ஒரே ஆள் எப்படி ரெண்டு விதமாய் இருக்கிறீர்கள்? நம் மனதின் ஸ்விட்ச் யார் வசம் இருக்கிறது?

நன்றி: அமிர்தா ஆகஸ்டு 2014

http://thiruttusavi.blogspot.in/2014/08/blog-post_20.html

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனைப்பிற்க்கு கிருபன். முகநூலில் புதிதாக இல்லாவிடின் ஒரு கட்டத்தில் icq chat,hearme voice chat, yahoo chat மாதிரி காணாமல் போய்விடும் முக நூல் கணக்கை என்னுடைய சிமார்ட் போனில் உபயோகிப்பது கிடையாது காரணம் மின்கல பிரச்சிணை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.