Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடு... - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடு... - நிலாந்தன்

14 செப்டம்பர் 2014

House%20with%20mavai_CI.png

இவ்வாண்டு முடிவுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இவ்வாறான அறைகூவல்களை விடுப்பது இது தான் முதற் தடவையல்ல. காலக்கெடு விதித்து ஒரு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருப்பதும் இது தான் முதற் தடவையல்ல. ரெலோ இயக்கத்தின் தலைவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை தொடங்க போவதாக அறிவித்திருந்ததை இங்கு நினைவுகூரலாம். எனினும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளில் மிகப்பெரியதும் பல தசாப்த கால வரலாற்றையும் பாரம்பரியத்தையும்; கொண்டிருப்பதுமாகிய தமிழரசுக் கட்சியின் தலைவர் வவுனியாவில் நடந்த அக்கட்சியின் மாநாட்டில் வைத்து இவ்விதமாக அறிவித்திருப்பதை ஒரு வெற்றுக்கோஷமாக எடுத்துக் கொள்ள முடியுமா? அல்லது, வரும் ஆண்டில் நடக்கவிருக்கும் தேர்தல்களை மனதில் வைத்து அவர் அப்படி அறிவித்திருக்கலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

மாவை சேனாதிராஜா அப்படி அறிவித்ததிற்குப் பின்னால் வேறு உள்நோக்கங்கள் இருக்கக் கூடும். ஆனால் நிச்சயமாக அராசாங்கம் அவர் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதில்லை. கடந்த, சுமார் 60 ஆண்டு கால அனுபவத்தை வைத்து அதிலும் குறிப்பாக கடந்த சுமார் ஐந்தாண்டுகால அனுபவத்தை வைத்து அப்படிக் கூற முடியும். வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கும் ஓர் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட தரப்போடு சமரசத்திற்கு வரப்போவதில்லை. குறிப்பாக வரும் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் ஓர் பின்னணியில் இந்த அரசாங்கமானது எவ்வளவுக்கு எவ்வளவு தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறதோ. அவ்வளவுக்கு அவ்வளவு அது தனது வெற்றிவாய்ப்புக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரது அலுவலகத்தால் நடத்தப்படும் விசாரணைகளின் முடிவுகள் அடுத்த ஆண்டில் வெளியிடப்படும்.ஜிரிஎன் அப்பொழுது சிங்கள வெகுசனத்தின் உளவியலானது வெள்ளைக்கார நாடுகளுக்கு எதிராகவும் அந்த நாடுகளை பின்னிருந்து தூண்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டும் தமிழர்களுக்கு எதிராகவும் கொதிப்புற தொடங்கும். அப்படியொரு கொதிப்பான அரசியற் சூழலை இலக்கு வைத்தே அரசாங்கம் தேர்தல்களை திட்டமிடக் கூடும். மாவை அறிவித்திருக்கும் போராட்டமும் ஏறக்குறைய அக்காலகட்டத்திற்கு உரியதுதான். எனவே தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வலைகள் மிக உச்சமாக காணப்படும் காலகட்டத்தில் தேர்தலை நடாத்தினால் வெற்றிக்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

இப்படிப் பார்த்தால் தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதை விடவும் அவற்றிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதே அரசாங்கத்திற்கு அதிகம் அனுகூலங்களை தரும். அதாவது தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளை அரசாங்கம் அநேகமாக நிறைவேற்றாது. அக்கோரிக்கைகள் ஐக்கிய இலங்கைக்குள் தான் ஒரு தீர்வை கேட்கின்றன. ஆனாலும் அவற்றை நிறைவேற்றுவதை விடவும் எதிர்ப்பதன் மூலம் இந்த அரசாங்கம் தேர்தல் வெற்றிகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இது தவிர தமிழ் மிதவாதிகளின் செயலுக்குப் போகா வீரம் குறித்தும், சிங்கள தலைவர்களுக்கு நன்கு தெரியும். தமிழ் மிதவாதிகள் கூறிக் கொள்வது போல அஹிம்சை போராட்டத்தின் தோல்வியினால் தான் ஆயுதப் போராட்டம் தோன்றியது என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றே. எனது கட்டுரைகளில் ஏற்னவே பல தடவை இது பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அஹிம்சை எனப்படுவது சாகப் பயந்தவர்களின் ஆயுதம் அல்ல. அது சாகத் துணிந்தவர்களின் ஆயுதம் தான். அது ஒரு போராட்ட முறையல்ல மாறாக அது ஒரு வாழ்க்கை முறை. சிலர் இரத்தம் சிந்துவதோடு மற்றவர்கள் அதிலிருந்து பின்வாங்க முடியாது.ஜிரிஎன். தமது இறுதி இலக்கை அடையும் வரை உச்சமான தியாகங்களைச் செய்யத் துணிந்தவர்களே அஹிம்சைப்போராட்டத்தில் வெற்றிபெறலாம்.

ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பு தமிழ் மிதவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட அஹிம்சை போராட்டம் மேற்சொன்ன பண்புகளை கொண்டிருந்ததா? தமிழ் மிதவாதிகளின் சத்தியாக்கிரகத்தை சிங்கள தலைவர்கள் மூர்க்கமான வன்முறை மூலம் எதிர்கொண்ட போது ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ் தலைவர்களால் நின்று பிடிக்க முடியவில்லை.

இந்திய அமைதி காக்கும் படையிடம் நீதி கேட்டு மாமாங்கப் பிள்ளையார் கோவிலில் உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதி அளவுக்கு உயிரைத் துறக்க ஒரு மிதவாத தலைவர் கூட தயாராக இருக்கவில்லை. நடுத்தர வயதைக் கடந்த ஒரு சாதாரண குடும்பத்தலைவியான அன்னை பூபதி தனது கோரிக்கைகளுக்காக சுமார் 30 நாட்களுக்கு மேல் உண்ணாதிருந்து முடிவில் தன் உயிரைத் துறந்தார். அப்படியொரு தியாக சிந்தை தமிழ் மிதவாத பாரம்பரியத்தில் யாரிடமாவது இருந்ததா? மாவை சேனாதிராஜாவைப் போன்ற சில மிதவாதிகள் சிறைபோயிருக்கிறார்கள் சித்திரவதைப் பட்டிருக்கிறார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் அது ஒரு வயது வரை தான். ஒரு கட்டத்திற்குப் பின் நாடு உயிரைத் தா என்று கேட்ட போது பெரும்பாலான மிதவாதிகள் அரங்கிலிருந்து மறைந்து போனார்கள்.

எனவே, அஹிம்சை போராட்டத்தின் தோல்வியிலிருந்தே ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது என்பது முழுக்கச் சரியல்ல. மாறாக அஹிம்சை எனப்படுவது தமிழ் மிதவாதிகளால் சாகப் பயந்தவர்களின் ஆயுதமாகவே கையாளப்பட்டது. இது சிங்கள அரசியல் தலைவர்களுக்கு நன்றாக தெரியும். இந்த அனுபவத்திற்கூடாகவே அவர்கள் தமிழ் மிதவாதிகளின் அஹிம்சை போராட்டங்களை பார்ப்பார்கள்.

அதிலும் குறிப்பாக இப்போதிருக்கும் அரசாங்கமானது தமிழர்களுடைய ஆயுதப்போராட்டத்தை தோற்கடித்த ஓர் அரசாங்கம். தமிழ் மிதவாதிகளைப் போலன்றி ஆயுதமேந்திய இயக்கங்கள் தமது இலட்சியத்திற்காக ஆயிரக்கணக்கில் உயிர்களை துறந்த போராடின. அதனாலேயே அது முழு உலகத்திற்கும் முன்னெப்பொழுதும் கிடைத்திராத ஒரு புதிய அனுபவமாக மாறியது. அப்படிப்பட்ட ஆயுதப்போராட்டத்தையே தோற்கடித்த ஓர் அரசாங்கம் தமிழ் மிதவாதிகளின் அறைகூவல்களை எப்படிப் பார்க்கும்?

எனவே மேற்கண்டவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கும் அஹிம்சைப் போராட்டம் மிக மலிவான ஓரு தேர்தல் உபாயமாக பொலிவிழந்து போகக் கூடிய நிலைமைகளே அதிகம் தென்படுகின்றன.

உண்மையில் இப்படி ஏதும் செய்வதை தவிர கூட்டமைப்புக்கு வேறு வழிகளும் இல்லைத்தான். ஏனெனில் கடந்த சில மாதங்களாக தமிழ் மக்களின் அரசியல் ஆர்வம் குறைந்து வருவதை காணமுடிகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. தமிழ் அரசியல் கட்சிகளின் கடந்த ஐந்தாண்டுகால செயலின்மைகளின் மீது ஏற்பட்ட சலிப்பு ஒரு முக்கிய காரணம்.

ஈழத் தமிழர்கள் பிராந்திய மற்றும் அனைத்துலக சக்திகள் பெரும்பாலானவற்றால் கையாளப்பட்ட இப்பொழுதும் கையாளப்படுகிற ஒரு சிறிய மக்கள் கூட்டம். மிகப் பலமான படித்த நடுத்தர வர்க்கம் ஒன்றை கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். கடந்த சுமார் 60 ஆண்டு கால அனுபவத்தை பிழிந்தெடுத்து ஒரு தீர்மானத்திற்கு வர அவர்களால் முடியும். குறிப்பாக ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட கடந்த ஐந்தாண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் அவர்களால் சிந்திக்க முடியும். கடந்த ஐந்தாண்டுகால அரசியல் எனப்படுவது பெருமளவிற்கு செயலின்றி வெளியாருக்காக காத்திருப்பதாகவே காணப்படுகிறது. மற்றவர்கள் தங்களுக்காக எதையாவது செய்யட்டும் என்று காத்திருக்கும் பொழுது ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பே உண்டாகும் மாறாக மற்றவர்களை, தங்களை நோக்கி வளைக்கும் விதத்தில் எதையாவது செய்யும் போது அந்த செயலும் அந்த செயலின் விளைவுகளும் அரசியலை உயிர்த்துடிப்போடு வைத்திருக்கும். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் வெளியாருக்காக காத்திருப்பது என்பது அதன் அவலட்சணமான எல்லைகளை எட்டத்தொடங்கி விட்டது. இப்போது உருவாகிவரும் சலிப்பிற்கு இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் மாகாண சபை தேர்தலின் போது கூட்டமைப்பு உருவாக்கிய இனமான அலை. அண்மை தசாப்தங்களில் தேர்தல் அரங்கில் எழுப்பப்பட்ட மிகப்பெரிய இனமான அலை அது. அப்படியொரு இனமான அலையை தோற்றுவித்து மகத்தான மக்கள் ஆணையை பெற்ற கூட்டமைப்பானது கடந்த சுமார் பத்து மாதங்களுக்கு மேலாக எதைச் சாதித்திருக்கிறது? வட மாகாண முதலமைச்சர் அரசாங்கத்திற்கு எதிராக தெரிவித்து வரும் கருத்துக்கள் எறக்குறைய அவற்றின் கூர்மையை இழக்கத் தொடங்கி விட்டன. கடந்த சுமார் பத்து மாதங்களுக்கு மேலாக அவை பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்ததிற்கும் அப்பால் வேறெதையும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. தான் முன்பு பேசியவற்றை விட இன்னும் தீவிரமாக பேசினால் தான் முதலமைச்சரின் பேச்சுக்களுக்கு ஓரு கவனிப்பு கிடைக்கும். அது கூட ஒரு கட்டம் வரையிலும் தான். ஏற்கனவே சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பு வரதராஜபெருமாள் அதன் உச்ச கட்டத்தை தொட்டு விட்டே நாட்டை விட்டு வெளியேறினார். அவர் தனி நாட்டுப் பிரகடனத்தை செய்து விட்டு இந்திய படைகளோடு சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார். விக்னேஸ்வரனால் அந்த எல்லைக்குப் போக முடியாது. ஆனால் அதற்காக திரும்ப திரும்ப செயலின்றி அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கவும் முடியாது. குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது மட்டுமே இப்போதைக்குச் செய்யக்கூடிய ஒரே பெரும் செயல் என்று அவர் கருதுகிறாரா?

ஆனால் செயலுக்குப் போகாமால் திரும்ப திரும்ப குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது என்பது தமிழ் மக்களை சலிக்கச் செய்கிறது. மாகாண சபை தேர்தலின் போது உருவாக்கப்பட்ட எதிரபார்ப்புக்கள் எத்துணை பெரியவையோ அவைபோல அந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத போது வரும் ஏமாற்றங்களும் அத்துணை பெரியவைகளாகவே இருக்கும். இது இரண்டாவது காரணம்.

மூன்றாவது காரணம் ஐ.நா தீர்மானங்கள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் தீர்க்கத் தவறிவிட்டன என்பது. எல்லா வெளித்தரப்புக்களும் தங்களை கறிவேப்பிலைகளாக பயன்படுத்துக்கின்றன என்ற ஒரு சலிப்பு படித்த தமிழ் மத்திய தரவர்க்கத்தினர் மத்தியில் படிப்படியாக பலமடைந்து வருகிறது. இது மூன்றாவது காரணம்.

நான்காவது காரணம் இந்தியாவை நோக்கிக் காத்திருப்பதால் உடனடிக்கு பெரிய அதிசயங்களோ அற்புதங்களோ நிகழ்வதற்கில்லை என்ற ஒரு சலிப்பு படித்த தமிழ் நடுத்தர வர்;க்கத்தினர் மத்தியில் உருவாகத் தொடங்கி விட்டது.

ஐந்தாவது காரணம் கூட்டமைப்புக்கு மாற்றாக அரங்கில் பலமான கட்சி எதுவும் இல்லையென்பது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது தன்னை அப்படியொரு மாற்றீடாக கட்டியெழுப்ப தவறி விட்டது. குறியீட்டு வகைப்பட்ட சிவில் எதிர்ப்புக்களை முன்னெடுத்தமை, ஐ.நா அரங்கில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை ஒன்று திரட்டியமை, மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவிற்கு சாட்சியமளிக்க முன்வரும் மக்களை ஊக்குவித்தமை போன்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சில நகர்வுகளுக்கும் அப்பால் அக்கட்சியானது கூட்டமைப்பிற்கு நிகரான ஒரு பலமான எதிர்த்தரப்பாக தன்னை கட்டியெழுப்பத் தவறி விட்டது.

குறிப்பாக அண்மை வாரங்களில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக்கு சாட்சிகளை ஒழுங்குபடுத்தும் மிகத் துணிச்சலான ஒரு பணியில் அக்கட்சி ஈடுபட்டு வருகின்றது. நாட்டுக்குள் இருந்து கொண்டு அதைச் செய்வதால் வரக்கூடிய ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கு அக்கட்சி தயாராக காணப்படுகிறது. இது போன்ற மிகத் துணிச்சலான செயல்களின் மூலம் தமிழ் வாக்காளர்களின் அபிப்பிராயங்களில் மாற்றங்களை கொண்டு வர முடியுமா? பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள நிலைமைகளின் படி அக்கட்சியானது கூட்டமைப்புக்கு நிகரான ஒரு சவால் இல்லைத் தான். இது ஆறாவது காரணம்.

மேற்கண்ட ஆறு காரணங்களின் பின்னணியில், அதாவது படித்த தமிழ் நடுத்தர வர்க்கம் அரசியலில் சலிப்படையத் தொடங்கும் ஓர் பின்னணியில், வரும் தேர்தலில் மறுபடியும் ஓர் இனமான அலையை தோற்றுவிக்க முடியுமா? மாகாண சபை தேர்தல் நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்குள் அத்தேர்தலில் உற்பத்தி செய்யப்பட்டதைப் போன்ற ஓர் இனமான அலையை மறுபடியும் தோற்றுவிப்பதென்றால் தமிழ் மக்களின் மறதியைக் கூட்ட மருந்து கொடுக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்து கணக்குப்போட்டே தமிழரசுக் கட்சி மேற்படி அறைகூவலை விடுத்திருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா? ஆனால், வெற்றிவாதம் எனப்படும் வலுக்கோட்டையின் சுவரில் தனது தலையை மோதும் துணிச்சலும் தியாக சிந்தையும் அரங்கில் இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களில் யாரிடமுண்டு? அல்லது மாவை சேனாதிராஜா தனது அறைகூவலை விடுத்த அதே மாநாட்டின் தொடக்கத்தில் சம்பந்தர் உரையாற்றியது போல தமிழரசுக் கட்சியின் காலக்கெடுவும் ஒரு 'கற்பனாவாதமாக, அல்லது வெற்றுக்கோஷமாக' வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டு விடுமா?

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111548/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.