Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹொங் கொங்கில் குடைப்புரட்சி குடைசாய்ந்துவிட்டதா?- வேல் தர்மா (கட்டுரை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹொங் கொங் சீனாவின் ஒரு பகுதி என்றாலும் அங்கு நடக்கும் ஆட்சி முறைமை சீனாவின் ஆட்சி முறைமையிலும் வேறுபட்டது. ஏனைய சீனப் பகுதிகள் போல் அல்லாது ஹொங் கொங்கில் மக்களுக்கு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை உண்டு, சிறந்த பேச்சுரிமைய உண்ட, ஹொங் கொங்கிற்கு என்று சீனாவிலும் வேறுபட்ட பொதுச் சட்டம் உண்டு, தனித்துவமான நீதித் துறை உண்டு, ஓரளவு சுதந்திரமான ஊடகத் துறை உண்டு.

சீன அரசு ஹொங் கொங் மக்களுக்கு 2017-ம் ஆண்டு ஒரு சுதந்திரத் தேர்தலுக்கான உறுதி மொழியை வழங்கியுள்ளது. ஹொங் கொங்கில் பொதுவுடமை ஆட்சி இல்லாமல் அங்கு ஒரு முதலாளித்துவ அரச கட்டமைப்பு நிலவுகின்றது எனச் சொல்லலாம். இதற்கான காரணம் 1997-ம் ஆண்டு வரை ஹொங் கொங் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததமையாகும்.

ஹொங் கொங்கின் வரலாற்றுப் பின்னணி

hk-city.jpg

ஹொங் கொங் சீனாவை ஒட்டிய 1104 சதுர கி.மீ நிலப்பரப்புக் கொண்ட ஒரு தீவாகும். இதன் வர்த்தக முக்கியத்துவம் 1557-ம் ஆண்டு போர்த்துக்கேயரால் அறியபப்ட்டது. அன்றில்  இருந்து  பல ஐரோப்பிய வணிகக் கப்பல்கள் அங்கு செல்லத் தொடங்கின.

பின்னர் போர்த்துக் கேயர் அங்கு ஒரு சிறு குடியேற்றத்தையும் வர்த்தக நிலையத்தையும் உருவாக்கினர். பின்னர் 17-ம் நூற்றாண்டில் பிரித்தானியாவின் கிழக்கிந்திய  வர்த்தகக் கம்பனி அங்கு வர்த்தகத்தை ஆரம்பித்தது. இதன் ஆபத்தை உணர்ந்த சீனப் பேரரசு பல கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தது. அந்தக் கட்டுப்பாடுகள் “கண்டோன் முறைமை” என அழைக்கப்பட்டது.

அம்முறைமையின் படி கண்டோன் துறை முகத்தில் மட்டும் வெளிநாட்டு வர்த்தகர்கள் வர்த்தகம் செய்ய முடியும். வெளிநாட்டு வர்த்தகர்கள் சீன மொழியைக் கற்கக் கூடாது. வெளிநாட்டு வர்த்தகர்கள் சீனச் சில்லறை வர்த்தகர்களுடன் வர்த்தகம் செய்ய முடியாது.

வெளிநாட்டு வர்த்தகர்கள் சீன அரசினால் அங்கீகரிக்கப் பட்ட பெரு வர்த்தகர்களுடன் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி கண்டோன் பகுதியில் ஒரு களஞ்சியசாலையையும் கைத்தொழிற்ச்சாலையையும் அமைத்துக் கொண்டது.

hong-kong-umbrella_3058255k.jpg

ஐரோப்பியரை சீனர்கள் செம்மயிர்க் காட்டுமிராண்டிகள் என அழைத்தனர். சீனாவின் பட்டு, மட்பாண்டங்கள்(பீங்கான்) தேயிலை ஆகியவை ஐரோப்பியரை மிகவும் கவர்ந்தது.  அவற்றைப் பெருமளவில் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி வாங்கியது.

இதற்காக பெருமளவு வெள்ளிகளை சீனர்களுக்கு கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி கொடுக்க வேண்டியிருந்தது. இந்த வர்த்தகச் சமநிலை இன்மையைச் சமாளிக்க பிரித்தானியாவில் பயிரிட்ட அபின் போன்ற போதைப் பொருட்களை கிழக்கிந்திய வர்த்கக் கம்பனி சீனர்களுக்கு விற்கத் தொடங்கியது.

இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை சீனப் பேரரசு தடை செய்த போதிலும் இரகசியமாக அந்த விற்பனை தொடர்ந்தது. சீனர்கள் பலர் போதைப் பொருளுக்கு அடிமையானதால் பெருமளவு வெள்ளிகள் சீனாவில் இருந்து வெளியேறின.

இயற்கைத் துறைமுகத்தைக் கொண்ட ஹொங் கொங் தூர கிழக்கு நாடுகளுக்கும் மற்றும் அவுஸ்த்திரேலியா, நியூசீலாந்து ஆகிய நாடுகளுக்குமான கடற்போக்குவரத்திற்கும் வாணிபத்திற்கும் அவசியமான ஒன்றாகியது.

அபின் போர்கள்

சீனர்களின் போதைப் பழக்கத்தால் பொருளாதாரரீதியில் சீனா பாதிக்கப்பட்டிருந்தது. போதைப் பொருள் விற்பனையை சீன அரசு தடை செய்த போதிலும் அந்த வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிரித்தானியாவிற்கும் சீனாவிற்கும் போர் மூண்டது.

இது அபின் போர் என அழைக்கப்படுகின்றது. இந்தப் போர் இரண்டு தடவை நடைபெற்றது. இந்தப் போர்களைத் தொடர்ந்து சீனா ஹொங் கொங்கை பிரித்தானியாவிற்கு குத்தகைக்கு வழங்கியது. இதற்காக நான்கு ஒப்பந்தங்கள் 1841, 1842, 1860,1898 ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்டன.

Pleiades-Hong-Kong-Portvictoria-01-02-20

விக்டோரியாத் துறைமுகம்

பாரிய விக்டோரியாத் துறைமுகத்தை பிரித்தானியா ஹொங் கொங்கில் நிர்மானித்தது. சீனாவில் பொதுவுடமை ஆட்சி ஏற்பட்ட போது ஹொங் கொங்கிலும் எழுச்சிகள் உருவாகி அது பிரித்தானியாவால் அடக்கப்பட்டது.

பின்னர் சீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் பல அங்கு நடந்தன. 1960இற்கும் 1990இற்கும் இடையில் ஹொங் கொங் பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. ஹொங் கொங், தாய்வான், சிங்கப்பூர், தென் கொரியா ஆகிய நாடுகள் ஆசியாவின் சிறு புலிகள் என அழைக்கப்பட்டன. ஹொங் கொங்கின் பொருளாதார வளர்ச்சிக்கு அது சீனாவுடன் செய்த வர்த்தகமும் காரணமாக இருந்தது.

கை மாறிய ஹொங் கொங் ஆட்சி முறைமை மாற்றத்தை வேண்டி நின்றது.

1997-ம் ஆண்டு பிரித்தானியா ஹொங் கொங்கை சீனாவிடம் கையளித்தது. 155 ஆண்டுகள் ஹொங் கொங்கை மக்களாட்சி இன்றி ஆளுநர் மூலம் ஆண்டு வந்த பிரித்தானியா சீனாவிடம் கையளிக்க முன்னர் ஹொங் கொங்கில் மக்களாட்சி வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியது.

சீனா ஹொங் கொங்கை ஒரு நாடு இரு ஆட்சி முறைமைகள் என்ற அடிப்படையில் தன்னுடன் இணைத்தது. பிரித்தானியா ஹொங் கொங்கை ஆளுநர் மூலம் ஆண்டு வந்தது.

சீனா ஹொங் கொங்கை தலைமைச் செயலர் மூலம் ஆள்கின்றது. பெயர் மட்டும்தான் வித்தியாசம் எனச் சொல்லலாம்.. இந்தத் தலைமைச் செயலரை தேர்தல் குழு தெரிவு செய்கின்றது.

ஹொங் கொங்கின் அரசியலமைப்பு அடிபடைச் சட்டம் என அழைக்கப்படுகின்றது. 2004-ம் ஆண்டு ஹொங் கொங்கில் முழுமையான மக்களாட்சிப்படி தேர்தல் நடாத்த முடியாது எனச் சொல்லிவிட்டது.

அத்துடன் ஹொங் கொங்கில் தேர்தல் விதிகளை மாற்றுவதாயின் அது சீன அரசின் அனுமதியுடனேயே செய்யப்பட்ட வேண்டும் என அறிவித்தது. ஹொங் கொங்கின் சட்ட சபை உறுப்பினர்கள் பல கட்சிகள் கொண்ட அரசியல் அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படுகின்றனர்.

தலைமைச் செயலர் எண்ணூறு பேர்களைக் கொண்ட ஒரு சபையால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருதடவை தெரிவு செய்யப்படுகின்றனர். 2017-ம் ஆண்டிலிருந்து ஹொங் கொங்கின் தலைமைச் செயலரை பொது வாக்களிப்பின் மூலம் மக்கள் தெரிவு செய்யலாம் என்றும்

….2020-ம் ஆண்டில் இருந்து ஹொங் கொங்கின் பாராளமன்றம் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் என்றும் சீனா ஹொங் கொங் மக்களுக்கு 2007-இல் உறுதியளித்திருந்தது. 2013 ஜனவரி மாதம் “அமைதியுடனும் அன்புடனும் மையத்தை ஆக்கிரமித்தல்” என்னும் இயக்கத்தை பேராசிரியர் பெனி தாய் ஆரம்பித்தார்.

வெள்ளை அறிக்கையும் கருத்துக் கணிப்பும்

2014-ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா ஹொங் கொங்கின் ஆட்சி முறைமை மாற்றம் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையைச் சமரிப்பித்தது. அது மீண்டும் ஒரு நாடு இரு ஆட்சி முறைமைகள் என்ற தத்துவத்தை வலியுறுத்தியது.

தலைமைச் செயலரை 2017-ம் ஆண்டு எப்படித் தெரிவு செய்வது என்பது தொடர்பாகப் பிரச்சனை எழுந்தது. தேர்தலில் நியமனக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டும் போட்டியிடலாம் என்பது சீன அரசின் நிலைப்பாடாகியது.

இந்த நியமனக் குழுவை சீன அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்படும் என அஞ்சப்பட்டது. 1997-ம் ஆண்டிலிருந்து தலைமை அமைச்சரை நியமிக்கும் குழு சீன அரசு சார்பானதாகவே இருக்கின்றது. இதனால் இந்த நிலைப்பாட்டிற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

“மையத்தை ஆக்கிரமித்தல்” என்னும் அமைப்பு தலைமைச் செயலர் வேட்பாளர் தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. இந்த உத்தியோகப்பற்றற்ற தேர்தலில் முழுமையான மக்களாட்சி முறைமைப் படியான தேர்தலுக்கும் மக்கள் பேராதரவு வழங்கினர்.

“UNIVERSAL SUFFRAGE” என்ற பதம் எல்லோரும் வாக்களிக்கும் உரிமையை மட்டுமே குறிப்பிடுகின்றது. யார் வேட்பாளரைத் தெரிவு செய்வது என்பதையல்ல என்பது சீன ஆட்சியாளர்களின் வியாக்கியானமாக இருக்கின்றது. அது யாரும் வேட்பாளராக நிற்கலாம் என்பதையும் உள்ளடக்கியது என்பது கிளர்ச்சிக்காரர்களின் நிலைப்பாடாகும்.

hong-kong-pro-demo_3070006b.jpgமாணவர் எழுச்சி மக்கள் எழுச்சியானது.

2011-ம் ஆண்டு சீனாவின் கல்வி முறைமையை ஹொங் கொங் தீவிலும் அறிமுகம் செய்ய சீன அரசு முயன்றபோது ஜொஷுவா வொங் என்னும் ஒரு பதினைந்து வயது மாணவன் அதற்கு எதிராகக் கிளர்ந்த் எழுந்தான்.

“அறிஞரியல்” என்னும் அமைப்பையும் அவன் ஆரம்பித்தான். இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை அவன் தெருவில் இறக்கிப் போராடினான். இப்போது ஹொங் கொங்கில் முழுமையான சுதந்திரத் தேர்தல் வேண்டும் எனப் போராடுபவர்களில் அவன் முக்கியமானவனாக இருக்கின்றான்.

இவனுடன் மாணவர் பேரவை என்னும் அமைப்பு 24 வயதான அலெக்ஸ் சோ என்பவன் தலைமையில் இணைந்து செயற்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களும் பாடசாலை மாணவர்களும் முன்னணியில் நின்று போராடுகின்றார்கள்.

“மையத்தை ஆக்கிரமித்தல்” என்னும் அமைப்பு 50வயதான சட்டத் துறைப் பேராசிரியர் பெனி தாய் யூ ரிங்கின் தலைமையில் இவர்களுடன் இணைந்து போராடுகின்றது. இவரகளுடன 70 வயதான சான் கின் மான் என்னும் மதகுருவும் இணைந்து செயற்படுகின்றார். இவர்களின் முதல் கோரிக்கையாக ஹொங் கொங்கின் தலைமைச் செயலர் சி வை லியூங் பதவி விலக வேண்டும் என்பதாகும்.

hong-kong-umbrella_3058254k.jpgகுடைப் புரட்சிக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட அடக்கு முறை

மையத்தை ஆக்கிரமித்தல் என்னும் பெயரில் ஹொங் கொங் வீதிகளை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது ஹொங் கொங் அரசு ஒரு மட்டுப்படுத்தப் பட்ட அடக்கு முறையையே பிரயோக்கித்தது.

கண்ணீர்ப் புகைக் குண்டு வீசுதல் மிளகுப் பொடி வீசுதல் போன்றவற்றையே காவற் துறையினர் செய்தனர். இவற்றில் இருந்து தம்மைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் குடைகளை கையில் வைத்திருந்தனர். இதனால் இவர்களது எழுச்சி குடைப்புரட்சி என அழைக்கப்படுகின்றது.

HONG-KONG-led_3061630k.jpgமௌனமான சீன ஆட்சியாளர்கள்

சீன அரசு ஹொங் கொங் தீவில் நடக்கும் கிளர்ச்சியை ஒரு சட்ட விரோத தீவிரவாதம் எனக் குற்றம் சாட்டுகின்றது. சீன அரச ஊடகங்கள் இந்தக் கிளர்ச்சியைப் பற்றி காட்டமான கண்டனத்துடன் விமர்சிக்கின்றன. சீன அதிபரோ அரச உயர் மட்டத்தினரோ இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

ஒரு சிறு இளைஞர் குழுபற்றி பல கோடி மக்களின் தலைவர் கவலைப்படாமல் தனது பணியைத் தொடர வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. ஆனால் சீனாவின் அதிகார எல்லைக்குள் ஒரு மேற்கத்தைய பாணித் தேர்தல் நடக்கக் கூடாது என்பதில் சீன அதிபர் உறுதியாக இருக்கின்றார்.

சீன அரசு கடுமையான வன்முறைகளை கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. ஹொங் கொங்கில் கிளர்ச்சிக்காரர்கள் வெற்றி பெற்றால் இதே மாதிரிக் கிளர்ச்சி சீனா எங்கும் பரவலாம் என சீன ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஹொங் கொங்கில் நடக்கும் கிளர்ச்சியைப் பற்றி பல இருட்டடிப்புக்கள் சீனாவில் செய்யப்பட்டுள்ளது. கிளர்ச்சிக்காரர்களுக்கு இடையிலான தொடர்பாடல்களையும் சீன அரசு துண்டித்துள்ளது. அவர்கள் வை-ஃபை இன்றிச் செயற்படக்கூடிய ஒரு கைப்பேசிச் செயலியை உருவாக்கி அதன மூலம் தொடர்பாடலகளைச் செய்கின்றனர்.

Hong-Kong.jpgஹொங் கொங்கும் சீனர்களும் சீனச் சீனர்களும்

ஹொங் கொங் வாழ் சீனர்கள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருக்கும் போது தாம் மேலைத் தேசத்தவர்கள் போல் கனவான்கள் என்றும் சீனாவில் வாழும் சீனர்கள் படிக்காத பாமரர்கள் என்றும் கருதி இருந்தனர்.

அவர்கள் சீனாவில் வாழும் சராசரிச் சீனர்களிலும் பார்க்க பொருளாதாரச் செழிப்பு மிக்கவர்களாக இருந்தார்கள். ஆனால் பொருளாதார ரீதியில் பெரிது முன்னேறிய சீனாவைன் பெரும் செல்வந்தர்கள் இப்போது ஹொங் கொங் செல்வந்தர்களிலும் பார்க்க பல மடங்கு செல்வம் படைத்தவர்களாகவும் விடுமுறைக்கு அவர்கள் ஹொங் கொங் செல்லும்போது அங்குள்ள சீனர்களைக் கீழ்த்தரமாகப் பார்ப்பதும் உண்டு.

சீனாவில் வாழும் சீனர்களில் பெரும்பான்மையானவர்கள் மக்களாட்சி வயிற்றுக்குச் சாப்பாடு போடாது என நம்புகின்றார்கள். இதற்கு அவர்கள் தம்மைச் சூழவுள்ள நாடுகளில் உள்ள வறுமையை ஆதாரமாகக் கருதுகின்றனர். சீனாவில் நடக்கும் வேலை நிறுத்தங்களில் 60 விழுக்காடு ஹொங் கொங் தீவிற்கு அண்மையான சீன நகரங்களில்தான் நடக்கின்றது.

சீனத் தேசிய தினம்: நம்ம ஏரியா உள்ளே வராதே!

ஒக்டோபர் முதலாம் திகதி சீனத் தேசிய தினத்தன்று என்றுமில்லாத அளவு பெரும் தொகைக் கிளர்ச்சிக்காரர்கள் ஹொங் கொங் தெருக்களில் திரண்டனர். பெருமளவில் திரண்டாலும் எந்த வித வன்முறையும் இன்றி கிளர்ச்சிக்காரர்கள் கட்டுக் கோப்புடன் இருக்கின்றனர்.

ஹொங் கொங்கை தனக்கு எதிரான களமாகப் பாவிக்க வேண்டாம் என சீன அரசு மேற்குலக நாடுகளுக்குத் தெரிவித்துள்ளது. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் வெளியுறவுக் கொள்கைக்கான குழுவின் தலைவர் பொப் மெனெண்டஸ் ஹொங் கொங்கின் தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில் ஹொங் கொங் மக்களின் மக்களாட்சி உரிமையை மதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதற்கு அமெரிக்காவில் உள்ள சீனா பதிலளித்துள்ளது. மையத்தை ஆக்கிரமித்தல் என்பது ஒரு சட்ட விரோத நடவடிக்கை. ஹொங் கொங் விவகாரம் சீனாவின் உள்விவகாரம். இதில் யாரும் தலையிட்டு இந்த சட்டவிரோதச் செயல் புரிபவர்களுக்கு தவறான சமிக்ஞைகளைக் கொடுக்க வேண்டாம் என்றது சீனா. சீன ஊடகங்கள் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் அமெரிக்க உளவுத் துறையின் கைக்கூலிகள் என்று பரப்புரை செய்கின்றன

ஹொங் கொங்கில் வாழும் சீன அரசு சார்புடையவர்கள் நடக்கும் ஆர்ப்பாட்டங்களால் தமது நாளாந்த நிகழ்வுகள் வருமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறார்கள்; இவர்கள் ஒக்டோபர் 3-ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலும் நடாத்தினார்கள்.

சீனா இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முதலில் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மிளகுத் தூள் போன்றவற்றை வீசியது பின்னர் தனக்குச் சார்பானவரகளால் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தியது.

இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹொங் கொங் அரசுடன் நடாத்து வந்த பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டனர். ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது.

இனி சீனா ஒன்றில் இதை இப்படியே தொடரவிட்டு பொது மக்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சலிப்பு உருவாகச் செய்யலாம். பொது மக்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மேலும் மோதலைத் தூண்டலாம். தனது படையினரையே பொதுமக்கள் போல் ஆடையணியச் செய்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தலாம். இவற்றிலும் மோசமாக படையினர் பார படைத்துறை ஊர்திகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கலாம்

HKG-Hong-Kong-Advertising.jpgவிலகி நிற்பது போல் சீன் போடும் சீனா

சீனாவின் நீண்ட காலத் திட்டங்களில் ஒன்று தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவது. அதற்கு நன்கு வளர்ச்சியடைந்த நிதிச் சந்தையும் முன்னேற்றமடைந்த வங்கிகளும் அவசியம்.

சீனாவில் அப்படி இன்னும் உருவாகவில்லை. ஹொங் கொங்கில் அவை உள்ளது. சீனாவிலேயே உலக மயப்படுத்தப்பட்ட ஒரே நகரம் ஹொங் கொங் ஆகும். சீனாவின் எதிர்காலத் திட்டங்களுக்கு அமைதியான ஹொங் கொங் அவசியம். அமைதியற்ற ஹொங் கொங் சீனாவிற்கு மட்டும் பின்னடைவை ஏற்படுத்தாது சீனாவில் முதலீடு செய்ய ஹொங் கொங்கை ஒரு வாயிலாகப் பயன்படுத்தும் மேற்கு நாடுகளுக்கும் தடையானதாக அமையும்.

இதானால் சீனா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வன்முறை பாவிக்காமல் இருந்தது. சீனா ஹொங் கொங்கில் நடப்பவற்றை ஹொங் கொங்கின் தலைமைச் செயலரே கையாள்கின்றார் போல வெளியில் காட்டிக் கொண்டு இருக்கின்றது.

எல்லாப் புரட்சியும் ஒரே பாணிதான்

எல்லாப் புரட்சிகளிலும் முதலில் உள்ளக வேறுபாடு உருவாகும். அது உள்ளக முறுகலைத் தோற்றுவிக்கும். பின்னர் பிளவு உண்டாகும். பிளவு பெரும் உள்ளக மோதல்களைத் தோற்றுவிக்கும். குடைப் புரட்சிக்குள் இப்போது ஒரு உள்ளக வேறுபாடு உருவாகியுள்ளது.

இந்தச் சந்த்ரப்பத்தைப் பாவித்து 2014-ம ஆண்டு ஒக்டோபர் 6-ம் திகதி திங்கள் காலை ஹொங்கொங்கில் எல்லாப் பணிமனைகளுக் திறக்கப்படவேண்டும் அல்லது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை தலைமைச் செயலர் விடுத்தார். சில பிரிவினர் இதற்கு உடன்பட்டனர்.

சிலர் நாம் இதை ஏற்க மாட்டோம் இனி அரச பணிமனைக் கட்டிடகளுக்குள் நுழைந்து கட்டிடங்களையே ஆக்கிரமிப்போம் என எச்சரித்தனர். இது முதல் முரண்பாடாகியது. இதனால் பல கிளர்ச்சிக்காரர்கள் தாம் ஆக்கிரமித்திருந்த தெருக்களில் இருந்து விலகி விட்டனர்.

எஞ்சியவர்கள் சில நூற்றுக் கணக்கானவர்கள் மட்டுமே. தம்மால் பணிமனைகளுக்கு ஊழியர்கள் செல்வதைத் தடுக்க முடியாது என உணர்ந்த எஞ்சிய கிளர்ச்சிக்காரர்கள் பணிமனைக்குச் செல்லும் வழிகளை அடைக்காமல் வழி விட்டனர். இதனால் ஹொங் கொங் அரசின் முதற் தலையிடி நீங்கியது.

ஆனால் கிளர்ச்சிக்காரர்களின் இரு பெரும் கோரிக்கைகளான எவரும் தலைமைச் செயலர் பதவிக்குப் போட்டியிட முடியும் என்ற கோரிக்கையும் தற்போது பதவியில் உள்ள தலைவமைச் செய்லர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குடைப் புரட்சியில் மேலும் தொய்வுகள் ஏற்பட்டு அது குடைசாயும் என்ற அச்சம் இப்போது அதிகரித்துள்ளது.

http://ilakkiyainfo.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.