Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதர்கள் மனிதத் தன்மையை இழந்துவிட்டார்கள். அவர்கள் சுயநலவாதிகள் ஆகிவிட்டார்கள். அவர்களை அழிக்க வேண்டும்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாஸ்டர் டைரக்டர்!
எஸ்.கலீல்ராஜா
 

ஒரு சினிமா எப்போது தொடங்கும்? உண்மையில் ஒரு படம் முடிந்த பின்தான், அது ஆரம்பிக்கும்! ஜாக்கி சானின் பக்கா ஆக்ஷன் படத்தைப் பார்த்து முடித்தவுடன் பைக் திராட்டிலை வேகமாக முறுக்கினால்... 'தாரே ஜமீன் பர்’ பார்த்துவிட்டு கண் கலங்க வெளியே வந்தால்... 'சதுரங்க வேட்டை’ பார்த்துவிட்டு, 'ஊர்ல எம்புட்டு ஃப்ராடு இருக்காய்ங்க... சூதானமா இருக்கணும்’ என மனதுக்குள் நினைத்தால்... அது நல்ல சினிமா. இதெல்லாம் நமக்குத் தெரிந்த கமர்ஷியல் உதாரணங்கள். படம் முடிந்து வெளியே வந்ததும், 'மனுஷன் பின்னிருக்கான்யா... ஆனா, கிளைமாக்ஸில் என்ன சொல்ல வர்றாரு?’ எனப் பிரமிப்பு விலகாமல் பார்த்தால், 'அந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்’ என முடிவுசெய்தால்... அது 'கிறிஸ்டோபர் நோலன்’ சினிமா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையை சிலமுறை கேட்ட பிறகு ரொம்பப் பிடிக்குமே, அதுபோல கிறிஸ்டோபர் நோலன் படங்களைப் பார்க்கப் பார்க்கப் புரியும்; புது அனுபவம் கிடைக்கும்!

இப்போது உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்பது நோலன் இயக்கும் 'இன்டர்ஸ்டெல்லர்’! இது கிறிஸ்டோபர் நோலனின் கனவுப் படம். கனவு, கனவுக்குள் கனவு, அதற்குள் ஒரு கனவு என 'இன்செப்ஷன்’ படத்தில் புரட்டிப் புரட்டி பரோட்டா போட்டவர், தன் கனவுப் படத்தை எப்படி எடுத்திருப்பார்? படம் வெளியாகட்டும்! அதற்கு முன் கிறிஸ்டோபர் நோலனைப் பற்றி பார்த்துவிடுவோம்.

தன் சினிமாக்களைப் போலவே நோலனும் 'சம்திங் டிஃப்ரென்ட்’. கிறிஸ்டோபர் ஜோனாதன் ஜேம்ஸ் நோலன், பிரிட்டிஷ் - அமெரிக்கப் பிரஜை. அவரது அப்பா, விளம்பர நிறுவனங்களுக்கு காப்பிரைட்டர். அதனால், நோலன் ஜீனில் அபார கிரியேட்டிவிட்டி. அப்பாவின் சூப்பர்-8 கேமராவை எடுத்துக்கொண்டு, ஒரு படம் எடுக்கப்போகிறேன் என நோலன் கிளம்பியபோது, பையனுக்கு வயது ஏழு. கல்லூரிப் படிப்பு முடிந்ததும், கார்ப்பரேட் -  இண்டஸ்ட்ரி வீடியோக்கள் எடுத்துக் கொடுத்தார். கிரியேட்டிவ் மூளைகொண்ட நோலனுக்கு வெறுமனே இருப்பதை ஆவணப்படுத்திக்காட்டுவது அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

p30c.jpg

மூன்று குறும்படங்கள் எடுத்துவிட்டு, 1998-ல் 'ஃபாலோயிங்’ என்ற த்ரில்லர் கதையை எடுக்க ஆரம்பித்தார். எழுத்தாளனாக ஆசைப்படும் ஒருவன், சம்பந்தம் இல்லாத மனிதர்களைப் பின்தொடர்வதுதான் கதை. அப்படி ஒரு திருடனைப் பின்தொடரும்போது என்ன நடக்கிறது என்பது படம். படத்தின் பட்ஜெட் வெறும் 6,000 டாலர். ஆனால், அந்தக் காசு அப்போது நோலனிடம் இல்லை. வாரம் ஐந்து நாட்கள் வேலைபார்த்து, சம்பாதித்து அதைக் கொண்டு சனி, ஞாயிறுகளில் படம் எடுத்தார்.  

கறுப்பு-வெள்ளைப் படமாக வெளியானது 'ஃபாலோயிங்’. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 'சேவிங் பிரைவேட் ரியான்’, மைக்கேல் பே இயக்கிய 'ஆர்மகெடான்’ என  டெக்னாலஜியில் படங்கள் மிரட்டிக்கொண்டிருந்த காலம் அது. யானையின் காலுக்கு இடையே புகுந்து பூனை ஓடிய கதையாக இரண்டு லட்சத்து 50 ஆயிரம் டாலர் வசூல்செய்தது 'ஃபாலோயிங்’. ஒரு காட்சியில் இருந்து சம்பந்தமே இல்லாமல் அடுத்த காட்சிக்குத் தாவும் 'நான்லீனியர்’  திரைக்கதை, 'நீங்களே கெஸ் பண்ணிக்கோங்க’ என ரசிகர்களின் கற்பனைக்கு விடப்படும் கிளைமாக்ஸ், 'கதைக்குள் கதை’ எனப் புத்தம் புதியதாக இருந்தாலும் நோலனை அப்போது யாருக்கும் தெரியவில்லை. படம் வசூலித்த  தொகை குறைவுதான். ஆனால், போட்ட பட்ஜெட்டைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், பெரும் லாபம்! அந்த உற்சாகமே நோலனை அடுத்த படத்தை நோக்கித் தள்ளியது.

p30b.jpg

தன் தம்பி ஜோனதன் எழுதிய 'மெமன்டோ மோரி’ என்ற சிறுகதையைத் தழுவி திரைக்கதை அமைத்து எடுத்த படம்தான் 'மெமன்டோ’. 'ரிவர்ஸ் குரோனலாஜிக்கல்’ என்ற முறையில் திரைக்கதையை எழுதினார் நோலன். படத்தில் கிளைமாக்ஸை முதல் காட்சியிலேயே சொல்லிவிட்டு, பின் கதையை கலரில் படிப்படியாக ரிவர்ஸில் சொல்லிக்கொண்டே, கறுப்பு-வெள்ளையில் முதலில் இருந்து நடந்ததை இன்னொரு பக்கம் சொன்னார். முதலில் கதை சாதாரணமான ரசிகர்களுக்குப் பிடிபடவே இல்லை. வெறும் 11 தியேட்டர்களில் மட்டுமே வெளியானதால், படம் வந்ததே யாருக்கும் தெரியவில்லை. யூகிக்கவேமுடியாத கிளைமாக்ஸ், மீண்டும் மீண்டும் பார்க்கும்போது பிடிபடும் புதுப்புது விஷயங்கள்... என அதன் கனமான உள்ளடக்கத்தால், ஹாலிவுட் சூப்பர் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கவனத்தை ஈர்த்தது 'மெமன்டோ’. படம் பார்த்துப் பிரமித்த அவர், தான் செல்லும் விழாக்கள், கொடுக்கும் பேட்டிகளில் எல்லாம் 'மெமன்டோ’வைப் புகழ்ந்து பேச, 11-வது வாரத்தில் 500 தியேட்டர்களில் வெளியாகி, பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. ஐந்து மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்பட் படம் 40 மில்லியன் வசூல் செய்தது. படத்தில் பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கும். அதில் ஒன்றான 'ஷார்ட்டெர்ம் மெமரி லாஸ்’ என்பதை மட்டும் தழுவி எடுக்கப்பட்ட 'கஜினி’ தமிழ், இந்தியில் ஓடு ஓடு என ஓடி, ஒரிஜினலைவிட அதிகம் சம்பாதித்தது தனிக் கதை!

p30.jpgஅவருடைய வித்தியாசமான திரைக்கதை ட்ரீட்மென்ட்டைக் கவனித்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க நினைத்தது. இங்கே நோலனின் விநோத இயல்பைக் குறிப்பிட வேண்டும். திரைக்கதையில் புதுப்புது உத்திகளைக் கையாண்டாலும், நோலன் ஒரு பழமைவாதி. தன்னை ஒரு Luddite எனச் சொல்லிக்கொள்பவர். அதாவது மனிதர்கள் செய்யக்கூடிய வேலையை இயந்திரத்தை வைத்துச் செய்பவர்களை எதிர்ப்பவர்களே இந்த லுட்டிட்கள். அந்தவகையில் இன்றுவரை செல்போன்கூடப் பயன்படுத்தாதவர் நோலன். இ-மெயில் ஐடி-யும் கிடையாது. அலுவலில் தவிர்க்க முடியாது என்பதால், அலுவலக மெயில் ஐடி மட்டும் உண்டு. மிக அபூர்வமாக மெயிலைத் திறந்து பார்ப்பார். அவருடைய நண்பர்கள் அவரை கடிதம் மூலமே தொடர்புகொள்வார்கள். ஆயிரத்திச் சொச்சம் மெயில் அனுப்பிய பின், ஒருவழியாக அவர் மெயில் பார்த்து வார்னர் பிரதர்ஸ் நிர்வாகிகளைச் சந்திக்கச் சம்மதித்தார்.

குறைந்த பட்ஜெட்டில் வார்னருக்காக நோலன் எடுத்துக்கொடுத்த ரீமேக் படமான  'இன்சோம்னியா’ 100 மில்லியன் டாலர் வசூல் குவிக்க, அப்போதுதான் பொது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் நோலன். அப்போது ஹாலிவுட்டில் கதைக்கு ஏகபோக பஞ்சம். 'ஸ்பைடர்மேன்’, 'பேட்மேன்’ போன்ற சூப்பர் ஹீரோ கேரக்டர்களைத் தூசுதட்டி காலத்துக்கு ஏற்ப ரீபூட் செய்ய ஆரம்பித்தன தயாரிப்பு நிறுவனங்கள். ஏற்கெனவே அறிமுகமான கேரக்டர் என்பதால், வித்தியாசமான கதைசொல்லும் முறை வார்னருக்குத் தேவைப்பட்டது.பலமும், பலவீனமும்கொண்ட சூப்பர் ஹீரோ நாயகன், டேங்கைப்போல இருக்கும் அவனது புதுமையான கார் மற்றும் டெக்னாலஜி, ஹீரோவைவிட அதிக பலம்கொண்ட வில்லன் என பேட் மேனை புது ஃபார்மெட்டில் நோலன் சொன்ன விதம் வார்னர் பிரதர்ஸுக்குப் பிடித்துவிட்டது. அடுத்து அவர் போட்ட நிபந்தனைகள்தான் அதிர்ச்சி ரகம். 'டிஜிட்டல் கேமராவில் ஷூட் பண்ண மாட்டேன்; கிராபிக்ஸ் பயன்படுத்த மாட்டேன். முடிந்த வரை அனைத்தையும் செட் போட வேண்டும். எடிட்டிங்கும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். நான் நினைத்தபடிதான் படம் வர வேண்டும்’ - இப்படி நிறைய. சினிமாவின் ஆன்மா இப்போதைய மாடர்ன் வெர்ஷனில் தொலைந்து போய்விடும் என்பது அவர் எண்ணம். நோலனிடம் விஷயம் இருப்பதைத் தெரிந்துகொண்ட வார்னர்,  'சரி வரட்டும் பார்க்கலாம்’ என்று சம்மதித்தது.  

'ஊரை அழிப்பவன் வில்லன். ஊரைக் காப்பாற்றுவன் ஹீரோ!’ - இதுதானே சூப்பர் ஹீரோ படங்களின் கான்செப்ட். சூப்பர் ஹீரோ கதைகளில் வில்லனுக்கு என எந்த நியாயமும் இருக்காது. ஆனால், நோலன் தன் படங்களில் வில்லனுக்கு நியாயத்தை ஏற்படுத்தினார். 'மனிதர்கள் மனிதத் தன்மையை இழந்துவிட்டார்கள். அவர்கள் சுயநலவாதிகள் ஆகிவிட்டார்கள். அவர்களை அழிக்க வேண்டும்’ என்பது வில்லன் தரப்பு நியாயம். 'மனிதர்கள் மாறிவிட்டார்கள்தான். அவர்களின் தீய எண்ணங்களை அழிக்க வேண்டும்; அவர்களை அல்ல’ என்பது ஹீரோ தரப்பு நியாயம். இப்படி வெவ்வேறு சிந்தாந்தங்களில் வேறுபட்ட இருவரை ஹீரோ - வில்லன் ஆக்கினார் நோலன். புதிய பாணி சூப்பர் ஹீரோ, புதிய சித்தாந்தங்கள், அதற்குள் பல அறிவியல் தொழில்நுட்பங்கள் என வித்தியாசமான படைப்பாக நோலன் இயக்கிய 'பேட்மேன் பிகின்ஸ்’ ரசிகர்களிடையே ஆரவார வரவேற்பு பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 'தி டார்க் நைட்’ (2008), 'தி டார்க் நைட் ரைஸஸ்’ (2012) என தொடர் பாகங்கள் கொடுத்தார்.

நோலனின் வில்லன்கள் அசாதாரணமானவர்கள். 'அவன் எனக்கு வேணும்’ என காது கிழியக் கத்த மாட்டார்கள். 'ஒரு மைதானத்தில் சாதாரண மனிதர்களையும், குற்றவாளிகளையும் தனித்தனியாக நிறுத்தி, இருவரது கையிலும் வெடிகுண்டுகளைக் கொடுத்து, யாரேனும் ஒரு தரப்பினருக்குத்தான் உயிர்வாழ அனுமதி என உத்தரவு கொடுத்தால், குற்றவாளிகள் யோசிப்பார்கள். ஆனால், சாதாரண மனிதர்கள் யோசிக்காமல் குற்றவாளிகளைக் கொன்றுவிடுவார்கள். இப்போது சொல்... யார் குற்றவாளி?’ -இப்படி யோசிக்கவைப்பதுபோல பேசுவார்கள். உயிருக்குப் போராடும் ஹீரோ 'இப்போ என்னைக் கொல்லப் போறீயா?’ எனத் திணறும்போது, 'நோ நோ... உன்னைக் கொன்னுட்டா, அப்புறம் எனக்கு என்ன வேலை இருக்கு?’ என நக்கலடிப்பார்கள்.

'நான் இப்போ அவரை நேரில் பார்க்கணும்’

'இப்போ அவர் யாரையும் சந்திக்கிற மூடுல இல்லை!’

'ஓ அப்படியா... அரெஸ்ட் வாரன்ட் இருந்தாக் கூடவா?’ - என படத்தில் வரும் சின்னச் சின்ன கேரக்டர்கூட மாஸ் வசனம் பேசும்.

நடுவில் நோலன் இயக்கிய  'தி பிரஸ்டீஜ்’ படத்தின் திரைக்கதையே மேஜிக் மாதிரி இருக்கும். போட்டியும் பொறாமையும் பிடித்த இரண்டு மேஜிக் நிபுணர்கள், பெயரும் கைதட்டலும் வாங்குவதற்காகப் போடும் சண்டையே கதை. படத்தில் 'யார் வில்லன், யார் ஹீரோ?’ என நோலன் சுட்டிக்காட்டவே மாட்டார். இருவரும்  அவரவர் நியாயங்களுக்கு உட்பட்டு எதிரிக்குக் கெடுதல் செய்வார்கள். படத்தைப் பார்க்கும் 'நாமே யார் ஹீரோ, யார் வில்லன்?’ என முடிவு செய்துகொள்ள வேண்டியதுதான்.

p30a.jpgநோலன் இயக்கிய 'இன்செப்ஷன்’தான் புதுப் பாணி சினிமாவில் மாஸ் பட்டாசு. உலகில் எங்கோ ஒரு மூலையில் 'இன்செப்ஷன்’ எந்த நேரமும் பிளே ஆகிக்கொண்டே இருக்கும் எனச் சொல்லும் அளவுக்கு விமர்சகர்களையும் ரசிகர்களையும் கட்டிப்போட்டது அந்தப் படம். சும்மாவா, படத்தின் திரைக்கதையை ஏழு வருடங்களாக எழுதினார் நோலன்.

அடுத்தவனின் கனவுக்குள் புகுந்து, அவனது ஐடியாவைத் திருடும் அட்டகாசமான படம். ஆனால், படம் வெளியானபோது படம் பார்த்த பலரும் 'எதுவுமே புரியலை’ என்றே குழம்பினார்கள். ஆனால், 'படத்தில் ஏதோ பெருசா இருக்கு’ என மீண்டும் மீண்டும் பார்த்துப் பாராட்டி, சிலாகித்ததில் 'வேர்ல்டு கிளாசிக்’ அந்தஸ்து கிடைத்துவிட்டது படத்துக்கு! படத்தின் ஹீரோ பாதி நாள் நிஜ உலகிலும், பாதி நாள் தான் கட்டமைத்த கனவு உலகிலும் இருப்பான். தான் எதில் இருக்கிறோம் என அடிக்கடி குழம்புவான். அப்போதெல்லாம் ஒரு பம்பரத்தைச் சுழற்றிவிடுவான். அது சுற்றி கீழே விழுந்தால், நிஜ உலகம்; விழாமல் சுற்றிக்கொண்டே இருந்தால், கனவு உலகம். படத்தின் முடிவில் பம்பரத்தைச் சுழற்றும் ஹீரோ, அதன் முடிவைப் பார்க்காமல், தன் குழந்தைகளைப் பார்க்கக் கிளம்பிவிடுவான். அது சுற்றிக்கொண்டிருக்கும்போதே படத்தை முடித்துவிடுவார் நோலன். 'மொத்தப் படமும் கனவா, இல்லை... ஹீரோ கனவு உலகத்தில் இருந்து வெளியே வரவே இல்லையா?’ எனக் குழப்பம் கும்மியடிக்கும். எது முடிவு என்பதை நாமே முடிவு செய்துகொள்ளவேண்டிதுதான். இதுவே நோலன் ஸ்பெஷல்.

படத்தில் பேரடாக்ஸ் தியரி, பென்ரோல் படிக்கட்டுக்கள், லூசிட் கனவுகள்... என எமோஷனல் கதையில் ஏராளமான அறிவியல் சங்கதிகளைப் புதைத்திருப்பார் நோலன். அவரின் ஒவ்வொரு கதையில் இருந்தும் ஒன்பது கதைகள் எடுக்க முடியும் என்பதால், இப்போது அவரது கதையைத் தழுவி உலகம் எங்கும் பல படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.    

பூமியில் இருந்து இன்னொரு பூமியைத் தேடி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களின் கதையே 'இன்டர்ஸ்டெல்லர்’. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்குவதாக இருந்த படம். விநோதக் கிரகம், 'வார்ம் ஹோல்’ உட்பட எக்கச்சக்க விண்வெளி அறிவியல் விஷயங்களை வைத்து இயக்குவதாக இருந்தார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ஆனால், என்ன காரணமோ கடைசி நேரத்தில் படத்தில் இருந்து விலகிக்கொண்டார். அந்தப் படத்தை இப்போது நோலன் இயக்கியிருக்கிறார். மணிரத்னம் ஒரு கதையை சின்சியராக உருவாக்க, அதை ஷங்கர் இயக்கினால் எப்படி இருக்கும்? அப்படி ஓர் ஆவல் எதிர்பார்ப்போடு 'இன்டர்ஸ்டெல்லர்’ படத்துக்காக உலகமே காத்திருக்கிறது.

சாதாரணமாக ஒரு படம் பார்க்கும்போது இயக்குநர் கதை சொல்வார். நாம் கேட்கலாம்... இல்லை மொபைலை நோண்டலாம். கிண்டல் மெமீஸ் உருவாக்க ஐடியா தேடலாம். ஆனால், நோலனின் படங்களுக்குச் சென்று அமர்ந்துவிட்டால், அங்கே அவர் வாத்தியாராகிவிடுவார். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாணவர்கள் ஆகிவிடுவோம். அவர் கிளாஸ் எடுத்து முடித்ததும், அதைப் புரிந்துகொள்ள நாம் நிறைய ஹோம்வொர்க் செய்ய வேண்டும். அதுதான் நோலன் மேஜிக்!

vikatan

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.