Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றம் செய்யத் திறமை தேவையில்லை!- கமல் ஹாசன் சிறப்புப் பேட்டி

Featured Replies

  • kamal_2190611g.jpg
    கமல் | படம்: கிரண் சா
  • uv_2190610g.jpg
    'உத்தம வில்லன்' படத்தில் கமல்

‘உலக நாயகன்’ எனத் தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசனுக்கு 60-வது பிறந்தநாள். தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி, சக படைப்பாளியாகவும் பயணிக்கும் கமல் ஹாசனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…

உங்களுக்கு இதுவரை தமிழ் சினிமா செய்தவை என்னென்ன?

எதை நான் சொல்றது..? சம்பளம், பாடம், சவுக்கடிவரை எல்லாமே கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. நான் பெற்றவை எல்லாம் இங்கிருந்து பெற்றவைதான். கற்றவையும் துன்புற்றவையும் இங்கிருந்து வந்தவைதான்.

 

தொழில்நுட்ப ரீதியில் ஏற்படும் மாற்றங்களை அப்டேட் செய்துகொண்டாலும்கூட, தமிழ் சினிமாவில் வர்த்தக ரீதியிலான சாதக நிலையை அனுபவிக்கும் சூழல் பரவலாகவில்லையே...

தொழில்நுட்பத்தை வளர விடமால், நாம் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். முற்காலத்தில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு மகாராஜா வந்து மக்களின் விசுவாசத்தை சோதிப்பதற்காக கோயிலுக்கு வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய அண்டா செய்தாராம். மக்களிடம் 'எல்லோர் வீட்டில் இருந்து பால் கொண்டு வந்து நிரப்பி விடுங்கள்' என்றாராம். அண்டா என்பது கோபுர அளவிற்கு பெரியது. அப்போது ஒரு சிலர் 'இவ்வளவு பெரிய அண்டாவில் பால் ஊற்றி நிரப்ப வேண்டும் என்றால் கட்டுப்படி ஆகாது' என்று நினைத்தார்கள். இத்தனை பேர் பால் ஊற்றினார்கள் என்பது இரண்டு பேர் தண்ணீர் ஊற்றினால் தெரியாது என்று நினைத்திருக்கிறார்கள். எல்லாருமே பால் ஊற்றி இருக்கிறார்கள், ஆனால், எல்லாமே நீர்ந்து போய்விட்டது. ஏனென்றால், அதில் தண்ணீர்தான் மேம்பட்டு தெரியுதே தவிர பால் தெரியவில்லை. அதேதான் தற்போது தமிழ் சினிமாவில் நடக்கிறது.

 

நேர்மை இருந்தால் மட்டுமே எந்த வியாபாரமும் ஜெயிக்கும். எல்லாருமே காயைப் பழுக்க வைக்க மருந்து அடிச்சே பண்ணிட்டு இருக்க முடியாது. நிஜமாவே ஒரு பழம் இருக்கணும். அந்த பழம் தானே, இந்தப் பழம் என்று கவுண்டமணி - செந்தில் காமெடி எல்லாம் இந்த விஷயத்தில் பண்ண முடியாது. கண்டிப்பாக நேர்மை வந்தாக வேண்டும். வரும். எல்லாருமே கருப்பு பணத்தில் வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறவர்கள்... வந்து பிற்பாடு வீடு வாங்கும்போது கஷ்டப்படுவார்கள். தன்னை ஒரு பணக்காரனாகக் காட்ட வேண்டும் என்ற நிலை வரும்போது பெரிய சூழ்ச்சி எல்லாம் பண்ண வேண்டியது வரும். அதேபோல் எல்லோரும் உண்பதற்கு இங்கே உணவு உண்டு. அதை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தி திரையுலகில் எப்படி 400 கோடி, 300 கோடி என்று பேச முடிகிறது? நேர்மை வந்ததுதான் காரணம். இங்கேயும் வந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

 

 

ஒரு முக்கியப் படைப்புக்கு 'எதிர்ப்பு, போராட்டம்' முதலான சூழலுக்கு வித்திட்டது, 'சண்டியர்'. அப்போது ஓர் கலைஞனாக உங்கள் தரப்புக்கு ஏற்பட்ட கோபம் தணிய எவ்வளவு நாளானது? ?

 

 

என்ன கோபம். நான் திட்டுவதற்குப் பதிலா... அவங்களே அவங்கள திட்டிக்கிட்ட மாதிரி இல்ல. கெட்டதோ, நல்லதோ வார்த்தைகள் தேவையில்லை. அவங்களுக்கே தெரிஞ்சு போச்சு. என்னை எதிர்த்தவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். அதில் என்ன வீரம் இருக்கிறது?

 

சண்டியர் என்பது சாதிப்பெயர் அல்ல. விருமாண்டி என்பதுதான் சாதிப்பெயர். அதைக்கொண்டு வந்து வைக்க வைத்தார்கள். சண்டியர் என்பது எந்தச் சாதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ரவுடித்தனம் பண்ணுபவர்கள் எல்லாருமே சண்டியர்தான். இந்தப் பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னவரை வேண்டுமானால்கூட அப்படிச் சொல்லலாம். அவர்களுக்கான பதிலைக் காலம் சொல்லிவிட்டது.

 

ஆனால், ஒரு படைப்பின் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதில் அரசியல் தலையீடு அதிகரித்தபடி இருக்கிறதே...

 

கடந்த 50 வருடங்களாக அரசியல்வாதிகள்தான் இதை பண்ணிகிட்டு இருக்காங்க. அமெரிக்காவில் இருக்கிற சுதந்திரம் கண்டிப்பா இங்கு கிடையாது. நாவலாசிரியர் ஜெய மோகனுக்கு இருக்கும் சுதந்திரம், ஒரு திரைக்கதையாளனாக ஜெயமோகனுக்குக் கிடையாது. சென்சார் போர்டு ஒண்ணு வைச்சு பரவாயில்லை, கொஞ்சம் வெட்டி எடுத்துக்கோங்க என்று சொன்னாலும், அதையும் தாண்டி ஒரு கூட்டம் உட்கார்ந்துகொண்டிருக்கிறது.

 

‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ என்று தலைப்பு வைத்ததிற்கு என் மீது வழக்கு போட்டாங்க. டாக்டர்கள் அனைவரும் எங்களை வசூல்ராஜா என்று சொல்கிறார் என்றார்கள். ஃப்ரீயா பண்ற டாக்டர் எத்தனை பேர் இருக்கிறார்கள். இப்போ சொல்றேன். எனக்குத் தெரிஞ்சு இப்போ நிறைய நிஜ வசூல்ராஜாக்கள் இருக்கிறார்கள். என்ன பண்ணப் போகிறார்கள் இவர்கள்!

 

சரி, அரசியல் தலையீடுகளைக் காட்டிலும், இணையத்தில் மலிந்துவரும் விமர்சனங்கள் மீதுதான் தமிழ் சினிமா கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு ஒருவித அச்சுறுத்தல் இப்போது அதிகரித்து இருக்கிறது என்பதை கவனித்தீர்களா?

 

இணையத்தில் விமர்சனம் பண்ணக் கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை எப்படித் தடுக்க முடியும்? என் கலைக்கு விமர்சனம் இருக்கக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு படம் நல்லாயில்லை என்று சொல்லும் உரிமையை நீங்கள் எப்படித் தடுக்கலாம். கமல் ஹாசனுக்கு நடிப்பே வரலைங்க, அவர் எல்லாம் வீட்டில் போய் நடிக்காமல் உட்காரலாம் என்று சொல்லும் உரிமை அவனுக்கு இருக்கிறது. அந்த உரிமை உனக்கில்லை என்று சொல்லும் திறமை என்னுடையதாக இருக்கிறது. அதுதானே ஒரு நடிகனுடைய வெற்றி. ஆள் வெச்சு அடிக்கவா முடியும்.

 

‘ராஜபார்வை’, ‘மகாநதி’, ‘அன்பே சிவம்’ முதலான படங்கள் வெளியானபோது பெரிதாக கவனிக்கப்படாமல், காலம் கடந்து கொண்டாடப்பட்டுவருகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

அது மாறி மாறி நடக்கும். ‘கை கொடுத்த தெய்வம்’ என்று ஒரு படம், அது வந்து ‘பாசமலர்’ அளவுக்குப் போகவில்லை. ‘கான் வித் த விண்ட் ’ என்னும் படம் இன்று எல்லோரும் பேசும் படம். முதல் சுற்றில் அது ஒரு தோல்விப் படம். 'சந்திரலேகா' கணக்குப் பார்த்தார்கள் என்றால் கம்மியான லாபம்தான் ஈட்டி இருக்கும். காலப்போக்கில் அது அடித்த அடிக்கு யாருமே பக்கத்தில் நிற்க முடியாது. அதே மாதிரி நிறைய படங்கள் இருக்கின்றன. திரும்ப திரும்ப வருமானம் ஈட்டும் வழிகள் அனைத்தையும் நாம் அடைத்துவிட்டோம். அதனால் சில உண்மைகள் நமக்குப் புரிவதில்லை.

 

 

'குருதிப் புனல்', 'அன்பே சிவம் போன்ற' படங்களை மீண்டும் திரையில் பார்க்க விரும்புவதாக ட்விட்டரில் ரசிகர்கள் அவ்வப்போது சொல்லி வருவதைப் பார்த்திருக்கிறேன். ரீ-ரிலீஸ் சாத்தியமா?

 

அது என்னுடையது இல்லையே. தயாரிப்பாளர்களே அந்தப் படத்தை நம்பவில்லை. தயாரிப்பாளர் நம்ப வேண்டும், தயாரிக்கும் போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். குதிரை ஒட்டத் தெரியாதவன் எப்படி மேலே ஏறி உட்கார்ந்தால் உடனே கீழே தள்ளி விட்டுவிடும். அதே மாதிரி தான் ரசிகர்களும். தயாரிப்பாளர்களின் பதற்றம் எல்லாம் ரசிகர்களுக்கும் பரவிவிட்டது. 'இது நல்லா இருக்காது போலிருக்கே.. தயாரிப்பாளரே இப்படி பயப்படுறாரு' என்று வேறு பக்கம் திரும்பி பார்த்து விட்டார்கள். அப்புறம் தெரிந்து சிலர் தேடி வருகிறார்கள். எனக்கு சிவாஜி சார் சொல்லித்தான் தெரியும், 'உத்தம புத்திரன்' வெற்றி படம் இல்லை என்று. என்னால் நம்பவே முடியவில்லை. நானே 10 தடவை பார்த்த படம் இது. எனக்கு தெரிந்து நான்கைந்து முறை பார்த்தவர்களும் இருக்கிறார்கள்.

 

"என்ன.. சும்மா உத்தம புத்திரன் பத்தியே பேசிட்டு இருக்க. அது வெற்றி படம் எல்லாம் ஒண்ணும் கிடையாது. தெரியுமா?" என்று சிவாஜி சாரே என்னிடம் சொல்வார். நான் அவர்கிட்டயே சண்டை போட்டு இருக்கேன். "படம் பார்த்தப்போ உனக்கு நாலு வயசு இருக்கும். நான் அந்தப் படம் போகலயேனு கவலைப்பட்டிருக்கேன். ஒடுச்சுனு சொல்றால... வசூலைக் கொண்டுவந்து காட்டு. நம்புறேன்" அப்படினு சொல்லியிருக்கார் சிவாஜி சார். அது தோல்விப் படம் கிடையாது. ரி-ரீலீஸ் ஆகி படம் வெற்றியாகி இருக்கிறது.

நான் என்னுடைய படத்தை பண்ணலாம். மற்றவர்கள் படத்தை நான் எப்படிப் போய் சொல்ல முடியும். ரி-ரீலீஸ் பண்ண வேண்டும். திரையரங்கிற்கு மறுபடியும் பழைய படங்கள் வருவது ஒரு வாடிக்கையாக வேண்டும். அதை தொலைக்காட்சியில் மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு.

 

 

கமல் ஹாசன் என்றாலே ஜீனியஸ் என்ற பிம்பம், தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் உண்டு. உன்னைப் போல் ஒருவனில் உங்களை ஒரு சாமானியாக ரசிகர்களால் பார்க்க முடியவில்லை என்ற ஒரு வாதமும் உண்டு. அப்படி இருக்க, த்ரிஷ்யம் படத்தின் அடிப்படை அம்சமே ஓர் எளிய மனிதனின் அசாதாரண முயற்சி என்பதுதான். மலையாளம் ஆடியன்ஸ் மோகன்லாலை ஜார்ஜுகுட்டியாகத்தான் பார்த்தார்கள்... ஆனால், பாபநாசத்தில் கமல்ஹாசனை கமல்ஹாசனாகவே பார்க்க நேர்ந்தால்..?

 

 

நான் இதை மறுக்கிறேன். அந்தப் படத்தில் நான் மோகன்லாலாகத்தான் பார்த்தேன். ‘த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லால்தான் தெரிகிறார். இதைவிட மோகன்லால் சிறப்பாக நடித்த படங்களை நான் காட்ட முடியும். இந்த மாதிரி பேசுபவர்கள் அனைவருக்கும் பதில் சொல்லும் படமாகப் ‘பாபநாசம்' அமையும்.

 

நடித்தால் நடிக்கிறார் என்கிறீர்கள், ஓவராக மேக்கப் போட்டால் மேக்கப் என்கிறீர்கள். நான் செய்ததைப் பாருங்கள். நல்லா இருந்தால் நல்லாயிருக்குன்னு சொல்லுங்க, நல்லாயில்லை என்றால் பிடிக்கலன்னு சொல்லுங்க. தவறுகள் இருந்தால் ஒத்துக் கொள்ளலாம், இந்த மாதிரியான அவதூறுகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ‘தேவர் மகன்' படத்தில்கூட கமல் தெரிவான். ஆனால் ‘மகாநதி'யில் அவன் கிருஷ்ணா. ‘தசாவதாரம்' பல்ராம் நாயுடு வேடத்தில் கமல் ஹாசன் எங்கு தெரிகிறான்?

 

இந்தத் தொழிலில் ரசிகர்களை விட எனக்குக் கொஞ்சம் அதிகமாகத் தெரியும். பாலமுரளி கிருஷ்ணாவின் பாடல்களை ரசித்துவிட்டு, இப்படிப் பாடியிருக்கலாம் என்று சொல்லத் தெரியாது. இன்றைக்குத் தொண்டை கட்டியிருக்கிறதுபோல என்று வேண்டுமானால் சொல்லலாம். இது கர்வம் அல்ல. எனது ஆளுமையால் வரும் தன்னம்பிக்கை.

 

ம்... 'துரோகால்' சஸ்பென்ஸ் படம். அதை ரீமேக்கும்போது 'குருதிப் புனல்' சஸ்பென்ஸுடன் ஆக்‌ஷன் வகையறாவாக மாற்றப்பட்டது. 'வசூல்ராஜா'வில் மைக்கேல் மதன காமராஜனில் இருந்த வசன விளையாட்டு மிகுந்திருந்தது. அந்த வகையில், 'பாபநாச'த்தில் தமிழுக்காக என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

 

கதையை மாற்றவில்லை. ரொம்ப வித்தியாசமாக வந்திருக்கிறது என்று இயக்குநர் சொன்னார். நான் நம்பக் கடமைப்பட்டிருக்கிறேன். இல்லையென்றால் டேக் 2 கேட்டிருப்பார்.

 

 

இந்த ஆண்டு கோவா திரைப்பட விழாவுக்கான ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் ஒரேயொரு தமிழ்ப் படம்தான் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி விழாக் குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது "தமிழ் சினிமா தொழில்நுட்பத்தில் ஸ்ட்ராங்கா இருக்கு. ஆனா, கன்டென்ட்-டில் வீக்கா இருக்கு" என்றார். தமிழ் சினிமாவுக்கு ஏன் இந்த நிலை?

 

தலை குனிகிறேன். இன்னும் கோபத்தில் தலை நிமிர்ந்து அடுத்தப் படத்தில் நல்லா எடுக்கலாம். இதுக்கு மறுத்துப் பேசி, தமிழுக்கு இடம் கொடுங்கள் என்று பேசாதீர்கள். அது விலாசம். தகுதிக்கு இடம் கேளுங்கள். அது தப்பு என்றால் என்னவென்று பாருங்கள். நீ இந்த படிப்பு படிக்கல, அதனால் உனக்கு இந்த வேலை கிடைக்காது என்றால், அந்த வேலையை படித்து விடலாமே. இன்றைக்கே வேலை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது நடக்காது. எனக்கே அந்தக் கருத்து உண்டு. நாம ஏதோ பெருசா சாதித்து விட்டோம் என்று பத்து படம் பார்த்து விட்டு எடுத்தால், நாமும் அதற்கு நிகராகி விடுவோமா? சிவாஜி மாதிரி நடித்துவிட்டால், அவரை விஞ்சிவிட்டதாக அர்த்தமா? யாரை மாதிரி பார்த்து நடித்தாலும், அது மிமிக்ரிதானே. 'கிஸ்தி, திரை, வட்டி' என்று நாங்கள் பேசியது எல்லாம் மிமிக்ரிதானே. நாகேஷ் மாதிரி செய்பவர்கள் எல்லாரும் நாகேஷ் ஆகிவிட முடியாது. அவர்கள் நாகேஷின் விசிறிகள்.

 

 

அந்த மாதிரிதான் நம்ம எடுக்கும் படங்கள் வந்து, வெள்ளைக்காரன் படத்தைப் பார்த்து காப்பியடிச்சு எடுத்தா அதற்கு நிகராகி விடாது. எழுத்தாளர்களில் ஜெயகாந்தனும், புதுமைப்பித்தனும் இப்போது இருக்கிற நிறைய நல்ல எழுத்தாளர்கள் மாதிரி, சினிமாவிலும் வர வேண்டும். ஜெயகாந்தன் எங்கிருந்து எடுத்தார் என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அது ஒரு தனி ஊற்று. சுடச்சுட எப்போதும் வந்துகொண்டே இருக்கும். அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். அப்படி வர வேண்டும் சினிமாவில். வரும் என்று நம்புகிறேன். வராததற்கு வியாபாரம் பெரிதாக கலந்துவிட்டது. வியாபாரிகளும் பின்னாடி நின்றுகொண்டு பேனாவை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவங்களுக்கு வெற்றியின் ரகசியம் தெரியாது. எனக்கு எந்த அளவுக்குத் தெரியாதோ, அதேதான் அவங்களுக்கும். சினிமா காட்டப்படும் தளங்கள் மாறிக்கொண்டே வருகிறது. அந்தத் தளங்களில் எல்லாம் சுதந்திரம் வேண்டும். தனியாருக்குப் போய் சேர வேண்டிய பணங்கள் போய்ச் சேர வேண்டும். அபகரித்தல் என்பது நிறுத்தப்பட வேண்டும். அதை நிறுத்தினால் எல்லாருக்கும் பணம் வரும். வேலி கட்டினால்கூட ஒத்துக்கொள்வேன். விஷத்தை போட்டால் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.

 

அப்படி என்றால், கதை - திரைக்கதையிலும் தமிழ் சினிமா வலு பெறுவதற்கு, இலக்கியத்தின் பங்களிப்பு அவசியமாகிறது என்பது உணரப்பட வேண்டுமா? தமிழ் சினிமா - இலக்கியம் இடையிலான் பாலத்தை உறுதிப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்பது சரிதானா?

இதை நான் சொல்லி 40 வருஷமாச்சு. பாலம் கட்டுறோம், பாலம் கட்டுறோம் என்று முயற்சியும் பண்ணினோம். பாலகுமாரன் எல்லாம் அப்படி வந்தவர்தான். சுஜாதா எல்லாம் அந்த பாலத்தில் நடந்து வந்தவர்தான். முதலில் வாசித்தல் வேண்டும். திரைக்கதை என்பது தனித்துறை என்றாலும்கூட, அதை எடுப்பது ஒரே இடத்தில் இருக்க வேண்டும். புதுசா ஏதாவது ஒண்ணு காற்றில் பிடிக்கலாம் என்றால் அதற்கும் இருக்கிறது. அது ஒரு யுக்தி. அத்தனை பேருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் இருக்கிற நீர்ச்சுணை நோக்கி போவதில் தப்புக் கிடையாது. போறதில்லை இங்க. இங்கே யாரு வேண்டுமானாலும், சினிமா எடுக்கலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. சினிமா என்பது இப்போது குற்றம் மாதிரி ஆகிவிட்டது. குற்றம் செய்வதற்கு பெரிய திறமை எல்லாம் வேண்டியதில்லை, தைரியம் மட்டும் இருந்தால் போதும். அப்படி ஆகிவிட்டதே என்ற கோபம் இருக்கிறது.

 

'கிராமத்தில் இருந்து வந்தான்யா பாரதிராஜானு ஒருத்தன். அவனைப் பார்த்து எல்லாரும் வந்துவிட்டார்கள்' என்று பழைய தொழில்நுட்ப கலைஞர்கள் சொல்லுவார்கள். ஏன் பாராதிராஜாவை சொல்லுகிறீர்கள். அவர் அப்படியெல்லாம் வரவில்லை. அவரை அப்படி பேசுபவர்கள் பார்க்கும் போது கோபம் வரும். இவர்கள் எல்லாம் பாரதிராஜாவை பாராட்டமலே இருக்கலாம். அவர் வந்து பட்ட கஷ்டங்கள் எவ்வளவு?. இளையராஜாவிற்கு பின்னால் எவ்வளவு கல்வி, கடின உழைப்பு இருக்கிறது தெரியுமா இவர்களுக்கு. நான் பார்த்து வியக்கிற உழைப்பாளி இளையராஜா. அந்த உழைப்பு இல்லாமல் வருபவர்கள் விழாவிட்டாலும், விழுந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன். அதில் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. அறுவடை பண்ணுவது போல் நடித்தால் என்னவாகும் அறுவடையே நடக்காது. அப்புறம், எங்களுடன் வந்து பங்கிற்கு மட்டும் நிற்பார்கள்.

 

ஒரு முக்கியப் படைப்புக்கு 'படத்தின் வெற்றி என்பது மூன்று வாரங்களாகச் சுருங்கிவிட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

2, 3 வாரங்கள் படங்கள் ஓடுவது போதும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் முன்பு 13 பிரின்ட் ரிலீஸ் பண்ணினார் எஸ்.எஸ். வாசன். அதைப் பார்த்தே என்ன முரட்டுத்தனமா பண்றாரே என்று சொன்னவர்கள் இருக்காங்க. தியாகராஜ பாகவதர் காலத்தில் 3 பிரின்ட்தான் போடுவார்கள். பிய்ந்துவிட்டது என்றால், அதைச் சரி செய்வார்கள். புதிதாகப் போட மாட்டார்கள். அதை அதிகரித்தவர்தான் வாசன். நான் 40 பிரின்ட்டாக இருக்கும்போதே, 100 பிரின்ட் தாண்டப் போகிறதுன்னு சொல்லிட்டிருந்தேன். இன்றைக்கு 3000 பிரின்ட்டைத் தொட்டிருக்கிறது. ஆகையால் இரண்டு வாரம் போதுமானது.

 

உள்ளூர் ரசிகர்களுக்கு உலக சினிமா பார்க்கும் வாய்ப்பு மிக எளிதில் கிடைக்கும் இந்தக் காலக்கட்டத்தில், தமிழ் சினிமா கலைஞர்கள், படைப்பாளிகளின் கூடியிருக்கும் பொறுப்புகள் எத்தகையது?

 

முதலில் பார்க்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதாக கருதுகிறேன். ரசிகர்கள் பார்க்கிற அத்தனை படத்தையும் பார்க்க வேண்டும். இவர்கள் தன் சினிமாவை மட்டுமே பார்க்கிறார்கள். உறவுக்குள், உறவுக்குள் கல்யாணம் பண்ணிக் கொண்டே இருந்தால் உருவங்கள் ஒரே மாதிரி இருக்குமே தவிர, வியாதிகள் வருவதற்கு வாய்ப்புண்டு. அதனால் தான் சாதி திருமணம் போன்றவை எல்லாம் நடப்பதாக நினைக்கிறேன். ஒரு வித்தியாசமான சிந்தனைக்காக அல்ல. காதல் தான் இந்த சாதியை எல்லாம் ஒழிக்கும் என்று நினைத்தேன். இப்போ அதையும் கெடுக்கிறார்கள்.

கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் பேசுறோம். ஆனால் சாதி ஒழிப்பைப் பற்றி யாருமே பேச மாட்டிக்கிறோம். சாதி ஒழிப்பு ரொம்ப மெதுவா நடக்குது. சாதி இல்லையடி பாப்பா என்று பாட்டு பாடிய பாப்பாவிற்கு எல்லாம் கொள்ளு பேத்தி பிறந்தாச்சு. இன்னும் சாதிக்கலவரம் இந்தியா முழுவதும் இருக்கிறது. ஏதோ தமிழர்களை மட்டும் சாடுவதாக நினைக்க வேண்டாம். நகரத்தில் இருப்பவர்கள் என்னிடம் என்னங்க சாதி என்று இன்னமும் பேசி கொண்டே இருக்கிறீர்கள் என்று? சரவண பவனில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு சாதி எங்கிருந்து தெரியும். கொஞ்சம் தள்ளிப்போனால் தட்டில் சாப்பாடு கொடுக்க மாட்டுக்கிறார்கள். அந்த அநியாயத்தை பத்திரிக்கைகள் கூட சுட்டுக் காட்டுவதில்லை. என்ன அக்கிரமம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். சாதி மாறவில்லை என்பது தான் நிஜம். சொல்லுவதற்கே பயமாக இருக்கிறது. இப்போது உற்றுக் கவனித்தீர்கள் என்றால், 'தேவர் மகன்' கதையை எப்படி எழுதியிருக்க வேண்டும். சாதிக் கலவரம் என்றால் ரெண்டு சாதி காட்ட வேண்டும் அல்லவா? ஆனால், நான் காட்டவே இல்லை. நான் சொல்ல நினைத்தது அது தான். ஏன் வம்பு என்று நான் சொல்லவே இல்லை.

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article6573364.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.