Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அரங்கில் தமிழரின் கௌரவம் காக்கப்பட வேண்டும்

Featured Replies

கடந்தகால வரலாறு, நிகழ்கால நிகழ்வுகள் போன்றவற்றை கூர்ந்து ஆய்ந்து விளங்கி எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவது ஏற்றது, பொருத்தமானது. பயனுள்ளது என்பது புத்தியுள்ளோர் புரிந்து வைத்துள்ள உண்மை. யதார்த்தமும் கூட. இது தனிப்பட்ட மனிதனின் வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமல்ல நாட்டை, சமூகத்தை வழிநடத்தத் தலைப்பட்டுள்ள அரசியல் அரங்காடிகளுக்கும் பொருந்தும். வரலாறு என்பது வெறும் பழங்கதையல்ல.

 

நிகழ்வுகளின் தாக்கம் எவ்வாறமையும், அதனால் விளையும் நன்மை, தீமைகள் எவ்வாறு நாட்டை,  சமூகத்தை, இனத்தை, மதத்தை, மொழியை, தனிப்பட்ட வாழ்வை பாதித்தன என்பது பற்றி புரிந்து கொள்ள, எதிர்காலத்தை திட்டமிட, உகந்ததாயமைந்துள்ளது.  ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வுகளை அதாவது வரலாற்றை மறந்தோ, புறந்தள்ளியோ செயற்பட முற்படுவதானது தவறான வழிக்கு இட்டுச் செல்லும் வழியாகவும் அமைந்துவிடும்.

 

நமது நாட்டின் வரலாற்றை சரிவர புரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பு. அதிலும் தமிழர்கள் நாட்டின் ஆதிமுதல் இன்றுவரையான வரலாற்றை, அதன் நிகழ்வுகளின் தாக்கங்களைச் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் வரலாற்று ரீதியாக பல்வேறு தாக்கங்களுக்கு, தாக்குதல்களுக்கு உள்ளான ஒரு இனமாக இலங்கைத் தமிழர்களாகிய நாம் உள்ளோம் என்பதை வரலாறு பதிவேற்றியுள்ளது. நாட்டிலே தமிழர்கள் பெற்று வந்த அனுபவங்களை புதிதாக புட்டுக்காட்ட வேண்டியது தேவையற்றது.

 

ஏனெனில் அது உலக அரங்கிலேயே இன்று அம்பலமாகியுள்ளது. குப்பையைக் கிளற வேண்டிய தேவையில்லை. இருந்தபோதிலும் பல்வேறுபட்ட தாக்கங்களைத் தொடர்ந்து தாங்கிவரும் தமிழினம், பொறுப்புடன் சிந்தித்து கருத்துரைக்க, செயற்பட வேண்டிய கால கட்டத்தில் உள்ளது. "கரணம் தப்பினால் மரணம்' என்பது போல் தமிழர்கள்,  தமிழ்த் தலைவர்கள், தமிழ் அரசியலரங்காடிகள் நடைபெறவுள்ள நாட்டின் தலைவரைத் தெரிவு செய்யவுள்ள தேர்தலில் எவருக்கு வாக்களிக்க வேண்டும், எவரை ஆதரிக்க வேண்டும் என்று நாட்டின் பெரும்பான்மையின அரசியலரங்காடிகள் ஆவலுடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழர்கள், தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக் கட்சித் தலைமை யாரை ஆதரிக்கின்றது என்ற எதிர்பார்ப்பு தம்மை ஆதரிக்க வேண்டும் என்று நன்நோக்கின் பாற்பட்டதல்ல. இதுவே உண்மை.

 

கடந்தகால வரலாறு இதையே தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.  தமிழர் தரப்பு ஒரு போட்டியாளர் தரப்பை ஆதரித்தால் மறு தரப்பினர் தமிழர் தரப்பு ஆதரிக்கும் தரப்புக்கு புலிமுத்திரை குத்தவும் பிரிவினை வாதிகளுக்கு ஆதரவாளர்கள் என்று அலறி நாடு முழுவதும் சென்று ஒப்பாரி வைக்கவும் காத்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே புலிகளுடன் ஒப்பந்தம், சர்வதேசத்தில் புலம் பெயர் தமிழர்களுடன் கூட்டுச்சதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தம் என்று ஓலமிடப்படுகின்றது.

 

அவலக்குரல் எழுப்பப்படுகின்றது. சிங்கள மக்களுக்கு பூச்சாண்டி காட்டும் நாடகம் அரங்கேறத் தொடங்கிவிட்டது. சிங்கள மொழியை மட்டுமே தெரிந்த, எழுத்து சிங்களத்தில் பேசினால் புரிந்து கொள்ள முடியாத பேசும் சிங்களம் மட்டுமே தெரிந்த கிராமப்புற அப்பாவிச் சிங்கள மக்களை தமிழருக்கெதிராகத் தூண்டி உணர்ச்சியூட்டி, வெறுப்பேற்றும் செயற்பாடுகளை கடந்தகால தேர்தல் கால வரலாறுகள் தெளிவாகவே காட்டுகின்றன. தமிழர் தரப்பு யாரை ஆதரிக்கின்றதோ அத்தரப்பு பிரிவினைவாதத்திற்கு உந்துதல் தரும் தரப்பாகக் கூறப்படுகின்றது.

 

கடந்த கால வரலாற்றை நோக்கும் போது சுதந்திரக் கட்சி மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் இதே வழியையே பின்பற்றியுள்ளது. நாட்டை அபிவிருத்தி செய்தலுக்கான வழிமுறைகள், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான திட்டங்கள் எதையும் முன்வைக்காத,  முன்வைக்க முடியாத இலங்கைத் தீவின் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் தமிழர்களை அடக்கியாள்வது எப்படி? தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க முடியாது தடுப்பது எப்படி? தமிழர்களுக்கு அரசியல் உரிமையை மறுப்பது எப்படி? என்பவற்றையே தேர்தல் காலத்தில் நாட்டிலே உலா விடுவர்.

 

நாட்டில் நடைபெறும் கொள்ளைகள், கொலைகள், பாலியல் பலாத்காரங்கள், சூதாட்டங்கள், பொய்கள், புரட்டுகள், வஞ்சகச் செயற்பாடுகள், ஏமாற்றுகள், இலஞ்சம், ஊழல் உள்ளிட்ட படுபாதகச் செயல்களையெல்லாம் மூடி மறைக்க தமிழர் விரோத நிலைப்பாடு என்னும் திரையை அரசியல் மேடைகளில் பின்னணியில் தொங்கவிட்டு அரங்கத்தில், அம்பலத்தில் ஆடுவர் இந்நாட்டின் அரசியலரங்காடிகள். தமிழருக்கெதிரான கூத்தில் பெரும்பான்மையினருடன் துணை பாத்திரமேற்று அரங்காடும் சிங்களவரல்லாதவர்களும் காணப்படுவதும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

 

"தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப் பிழையாயமையட்டும்' என்று கடந்த காலங்களில் தமிழர் விரோதப் போக்கில் உல்லாசம் கண்டவர்கள் இன்று கொதிக்கும் எண்ணைச் சட்டியில் வீழ்ந்து அவதிப்படுவதையும் காணலாம்"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது போல. "நாயை மெத்தையிலே தூக்கி வைத்தாலும் அது செத்தையிலேயே போய் படுக்கும்' என்பது எவ்வாறு யதார்த்தமோ அதுபோல் பன்றியை சுத்தமாகக் கழுவி வாசனைத் திரவியங்கள் பூசி அழகுபடுத்தினாலும் அது சேற்றுக்குள் மூழ்கி தனது பாரம்பரியத்தை நிலைநாட்டி உறுதிப்படுத்துவது போல நம்நாட்டிலும் அநேக அரசியல் அரங்காடிகளின் செயற்பாடுகளுள்ளன.

 

பன்றியின் இயல்பான குணத்தை மாற்ற முடியாது. அதே போல்..... இந்த நிலையிலே தமிழர் தரப்பின் நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அது சமூகத்தின் நலனில் கருத்தூன்றிச் சிந்திக்கும் ஒவ்வொரு தமிழரதும் கடமை. தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தரப்பு உடனடியாக எவரையும் ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அது தென்னிலங்கையின் அப்பாவிச் சிங்கள மக்களை தமிழ்ப் பேய், புலிப் பூதம், பிரிவினைவாத சுனாமி என்று பயமுறுத்த இனவாத சக்திகளுக்கு உதவியாயமைந்துவிடும். ஏற்கனவே தமிழர்களைக் காட்டி சிங்கள மக்களை வெருட்டும் நாடகம் தொடங்கிவிட்டது.

 

இனி அது உச்சத்தைத் தொடும் வாய்ப்பும் உள்ளது. அது ஒருபுறமிருக்க தமிழர் தரப்பு அரசியல் அரங்கையும் அலச வேண்டியது சமூகப் பொறுப்பு. தமிழர் தரப்பு முத்தரப்பாக அரசியல் அரங்கில் பாத்திரமேற்றுச் செயற்படுகின்றது. தேர்தலின் பின் ஒரு சிலர் தொடர்ந்தும் ஒரே நாடகத்தில் நடிப்பர் என எதிர்பார்க்க முடியாது. முஸ்லிம் தரப்பில் முக்கிய அரசியலரங்காடிகள் எந்த நாடகத்தில் பாத்திரமேற்பது பற்றி, எதில் பங்கு பற்றினால் ஆதாயம் கிட்டும் என்று முடிவுக்கு வர முடியாது திண்டாடும் நிலையில் தமிழர் தரப்பு இன்றைய ஆளும் தரப்புடனும் எதிரணித் தரப்புடனும் கை கோர்த்து மேடையேறத் தீர்மானித்துள்ள நிலையில், தாம் மேடையில் ஏறினால் மாற்றுத் தரப்பால் வில்லர்களாக காட்டப்படுவர் என்ற உண்மையை உணர்ந்து இதுவரை அரங்கெதிலும் புகவில்லை.

 

அது புத்திசாலித்தனமும் கூட. ஆனால் தமிழர் தரப்புக்கு அரசியல் அரங்கு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள வட மாகாண சபையில் அண்மையில் அரங்கேறிய நிகழ்வொன்று தமிழர் தரப்பை தலைகுனிய வைத்துள்ளது.  தமிழர் தரப்பை ஏனையோர் மத்தியில் கோமாளிகளாகச் சித்திரிக்கச் செய்துள்ளது. நாடகத்தினை நடிகர்கள் நடிப்பர். அவர்களது நடிப்புத்திறனை, ஆற்றலை, தவறுகளை பார்வையாளர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

 

இலங்கையின் கடந்த காலங்களின் நிகழ்வுகள் இன்று உலக ரீதியில் அம்பலப்படுத்தப்பட்டு நாட்டை அவலப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் மீண்டும் அதை கிண்டிக் கிளறித்தான்  வெளிப்படுத்த தேவையில்லை. அவ்வாறு செய்வதால் இன்றைய தேர்தல் மேடைகளில் தமிழருக்கெதிராக வெறுப்பூட்டல் கூற்றுகள் இடம்பெறவும் ஒரு பகுதி அதை வைத்து அரசியல் இலாபம் பெற, வாக்குகளை வாரிக்கொள்ளவும் கூடியதாக வட மாகாண சபையில் அண்மையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படாது பின் தள்ளப்பட்டுள்ள முன்மொழிவை நோக்க முடிகின்றது.

 

இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியும் அதில் ஏதேனும் பயனைப் பெற முடியாத நிலையில், தேர்தல் காலத்தில் சிங்கள மக்களைக் கடுப்பேற்ற இனவாத அரசியல்வாதிகளுக்கு, தமிழர் விரோத அரசியல் அரங்காடிகளுக்கு கைகொடுத்து உதவக்கூடிய முன்மொழிவை பின்தள்ளி வைத்த வட மாகாண சபையின் அரசியல் மதிநுட்பத்தைச் சிந்திக்கும் தமிழர் சமூகம் வரவேற்கும் அதேவேளை,  தமிழர்கள் பாரம்பரியமாக ஆட்சியின் வளைவில்லாத, நேர்மையை, பக்கச்சார்பின்மையை வெளிப்படுத்தும் பண்டு முதல் அதாவது அரசர் காலம் முதல் பேணிப் போற்றும் செங்கோல் தூக்கியெறியப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியையும் அவமானத்தையும் இலங்கைத் தமிழர் சமூகத்துக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தடுக்க முடியாதவொன்றாகும். ஆத்திரம், ஆவேசம், ஆணவம், பொறுப்பின்மை, பின் விளைவுகளை ஆராயாமை போன்றவற்றால் செயற்படும் அரசியல் வேடதாரிகளின் பாத்திரம் சமூகத்தின் நலனுக்கும் கௌரவத்திற்கும் ஏற்றதல்ல.

 

சமூகத்தின் ஒட்டுமொத்த மதிப்பையும் கீழிறக்கம் செய்வதாயமையும் பெரும்பான்மை மொழி ஊடகங்களுக்கு தமிழர் பொறுப்பிலுள்ள வட மாகாண சபையைக் கேலிக்குரியதாக வெளிப்படுத்தும் செங்கோல் வீழ்த்தும் செயல் உதவிவிட்டது. சிங்கள மக்களை வசீகரிக்க இனவாதம், மொழிவாதம், மதவாதம் முதலிய முடக்குவாதங்களைக் கட்டவிழ்த்து விடும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு கைகொடுத்து உதவும் செயற்பாட்டை தமிழர் தரப்பிலிருந்து மேற்கொள்ளக் கூடாது. பிரேரணைகளை நிறைவேற்றுவதால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. செயல்முறையில் ஈடுபட வேண்டும் அதுவே உரிமையை உறுதிப்படுத்தும்.

 

தமிழ் மொழிக்கு நாட்டில் உரிமையில்லையென்று கூறிக்கொண்டு தமது சொந்தப் பணிகளில் ஆற்றக்கூடிய பலவற்றில் தமிழைப் பயன்படுத்தாதவர்கள் பலருள்ளனர். வங்கியில் பணம் வைப்பிலிடவோ, மீளப் பெறவோ, தமிழ் மொழியில் படிவங்களை நிரப்ப வழியிருந்தும் அதனைச் செய்யாதோர், பிறந்த நாள் வாழ்த்தையோ, திருமண வாழ்த்தையோ தமிழில் கூற முடியாது தயங்கி ஆங்கிலத்தில் கூறுவோர் நிறைந்துள்ள சமூகம் மொழியுரிமையை எப்படி நிலைநாட்டும்?

 

வெறும் பேச்சுகளால், வெட்டிப் பேச்சுகளால் ஆவேசப் பேச்சுகளால் சமூகம் அடையப்போவது ஒன்றுமில்லை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தவறாது, தயங்காது, வாக்களிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தமிழர்களை திசை திருப்ப, வாக்களிப்பை தவிர்க்க கூட பல சக்திகள் முன்வர இடமுண்டு. தேர்தல் வேண்டாம் உள்ள ஆட்சி தொடரட்டும் என்று 1982 இல் தென்னிலங்கை மக்கள் வாக்களித்த போது ஜனநாயகத்தைப் பேண பொதுத் தேர்தல் உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்று வாக்களித்த பெருமை, புத்திக் கூர்மை கொண்டவர்கள் தமிழர்கள் என்பதை வட மாகாண தமிழர்களும் கிழக்கின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத் தமிழர்களும் நிரூபித்தனர்.

 

ஜனநாயகத்தின் பால் வட, கிழக்குத் தமிழர் கொண்டிருந்த பற்றுறுதியை முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையார் பாராட்டியமையும் வரலாற்றில் உள்ளது. இன்றைய ஜனாதிபதி உட்பட தென்னிலங்கையின் சிங்களத் தலைவர்கள் எவ்வளவு முயன்றும் 1982 இல் ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தில் தோல்வியையே தழுவினர். ஆனால் வடக்கு, கிழக்கு தமிழர்கள் வெற்றி பெற்றனர். இவ்வாறான பாரம்பரியம் கொண்ட இந்நாட்டில் வாக்களிப்பது யாருக்கு, எதற்கு என்று தமிழர் மத்தியிலே எடுத்துக்கூற வேண்டிய தேவை அரசியலரங்காடும் எவருக்கும் ஏற்படாது. ஜனாதிபதி முறைமை நீக்கம் முதன்மையல்ல.

 

பறிக்கப்பட்ட, தடுக்கப்பட்ட அடிப்படை வாழ்வுரிமையைப் பெற்றுக்கொள்ளப் போராடும் தமிழர் சமூகம் அதையே இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். தமிழர்களை பிரிவினைவாதிகளென்போர் தாமே நாட்டின் பிரிவினைவாதப் பயங்கரவாதிகள் என்ற உண்மையை உணர்த்த வேண்டும். இறைமையுள்ள நாடு என்னும் போது அந்நாட்டின் சகல குடிமக்களும் சகல வாழ்வுரிமைகளையும் கொண்டவர்கள். அனுபவிக்க உரிமையுள்ளவர்கள் என்பது பொருள்.

 

நாட்டின் ஒரு பகுதி மக்களை, தமிழ் மக்களை அவர்களது அடிப்படை உரிமையை மறுப்பது, பறிப்பது, தடுப்பது, விரட்டுவது, அச்சுறுத்துவது போன்றவையே மக்களிடம் ஏற்படுத்தப்படும் பிரிவினைவாதம் என்பதை புரியாத நாடோ, நாட்டின் அரசியல் அரங்காடிகளோ உருப்பட வழியில்லை. படுகுழியில் வீழ்ந்து பரிதவிப்பவனை கைதூக்கி வெளியேற வழிசெய்வது போல் நமது நாட்டை அவலத்திலிருந்து மீட்டெடுக்க யார் உதவுவது? காலம் தான் பதிலளிக்கவல்லது. -

 

//www.thinakkural.lk/article.php?article/2tpdnushjt452437bf8bb2459576ddjdac5ae952fb107153f18958flbkjv#sthash.29qMMIXt.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.