Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ A+ ] /[ A- ]

download-5.jpg

 

 

 பெயர் : நரேன்.

தொழில் : பாண் போடுவது.

தகுதி : இலங்கை அகதி .

தந்தை பெயர் :வல்லிபுரம் .

தொழில் :பாண்போடுவது.

உபதொழில் :கள்ளு அடிப்பது .

*************************************************************

 

 

1997 ஆம் ஆண்டின் நடுப்பகுதி ஒன்றில் பிரான்சின் புறநகர் பகுதி ஒன் று காலை விடியலின் ஆரம்பத்தைக் காணத் தயாராகிக்கொண்டிருந்தது. வசந்த காலத்தின் மொக்கவிழ்க்கும் காலமாகையால் அந்த தொடர்மாடிக்குடியிருப்பின் முன்பு நின்றிருந்த அனைத்து மரங்களும் தங்கள் தவம் கலைந்து தங்களை பச்சை பூசி அலங்கரிக்கத் தொடங்கியிருந்தன. அவற்றின் மேலே இருந்த குருவிகள் வெளிச்சத்தைக் கண்ட சந்தோசத்தில் கிலுமுலு கிலுமுலு என்று துள்ளித்துள்ளி சத்தம் இட்டுக்கொண்டிருந்ததன. தூரத்தே தெரிந்த புகைபோக்கியினூடாக அந்த அதிகாலை குளிரைப் போக்க எரிந்த நெருப்பின் புகை வந்துகொண்டிருந்தது. நரேன் அந்த அதிகாலையின் பிறப்பை அணுவணுவாக அனுபவித்து தேநீர் அருந்திகொண்டிருந்தான். அவன் இரவு செய்த வேலையால் கண்முழித்ததால் கண்கள் சிவந்து இருந்தன. காலை வேலையால் வந்தவுடன் தனது அம்மா மீனாட்சிக்கு போன் பண்ணியிருந்தான். நரேனுக்கு கிழமையில் ஒருமுறையாவது அம்மாவுடன் கதைக்காது போனால் விசரே பிடித்து விடும் . தனிய தம்பி தங்கைகளுடன் இருக்கும் அம்மாவுக்கு வல்லிபுரத்தாரின் இழப்புகள் தெரியகூடாது என்ற காரணத்தாலும், அவனுக்கு என்னதான் தலை போகின்ற வேலைகள் இருந்தாலும் அம்மா மீனாட்சிக்கு நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை. பல குடும்ப விடயங்களை கதைத்துக்கொண்டு, இறுதியில் இந்த மாத இறுதியில் வரவிருக்கும் அவனது அப்பா வல்லிபுரத்தின் திவசத்தை நினைவு படுத்தினாள் மீனாட்சி .வீட்டிற்கு மூத்தவன் என்ற முறையில் அவனே வல்லிபுரத்தாருக்கு விரதம் இருந்து திவசம் செய்வது வழக்கம். அவன் ரசித்துக் குடித்துக்கொண்டிருந்த தேநீரின் ஆவியுடன் தன்னை மறந்து வல்லிபுரதாரின் நினைவுகளில் ஆழப் புதைந்தான் .

 

அழையா விருந்தாளிகளாக வந்த ஒட்டகங்கள் கூடாரமடித்து கொட்டமடித்த 1987 இன் ஆரம்ப கால நாட்கள் அது. தொடர் ஊரடங்குசட்டங்களும், மின்சார வெட்டுக்களும் ஆகாய தரைவழி தாக்குதல்களும் மனிதத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்கிய காலங்களில், ஒரு திங்கள் கிழமையில் வரணிக் கிராமம் அதன் அதிகாலையை வரவேற்றுக்கொண்டிருந்ததது. அது அதிகாலையானலும் மெதுவான வெக்கை அப்பொழுதே ஆரம்பமாகியிருந்தத்து. என்னதான் இழப்புகள் இருந்தாலும் துக்கங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு சனங்கள் தங்கள் அன்றாட வேலைகளை கவனிக்க பழகிக்கொண்டார்கள். வரணியில்தான் வல்லிபுரத்தின் வீடும் இருந்தது. அந்த வீடு சிறியதும் அல்லாமல் பெரியதும் அல்லாமல் நடுத்தரமாக மூன்று அறைகளுடன் கூடிய வீடாக இருந்தது. வல்லிபுரம் கடுமையான உழைப்பாளி. சிறு வயதிலேயே படிப்பு வராமல் சுன்னாகத்தில் இருந்த அபயசேகராவின் பேக்கறியில் சேர்ந்து பாண் போடும் தொழிலை அச்சர சுத்தமாக கற்றுக்கொண்டார். அபயசேகரா மாத்தையாவும் வஞ்சகமில்லாமல் பாண் போடும் தொழில் நுணுக்கங்களை வல்லிபுரதிற்கு சொல்லிக்கொடுத்தால், வல்லிபுரத்தார் விரைவிலேயே வரணியில் ஒரு பேக்கறி போடும் அளவுக்கு வளர்ந்து விட்டிருந்தார்.

 

தமிழனும், சிங்களவனும், இஸ்லாமியனும் ஒன்று கூடி வாழ்ந்த யாழ்ப்பாணம், மேய்ப்பர்கள் வழிவந்த சுதந்திரம் என்ற சுத்தமான காற்றால் அல்லாடத் தொடங்கியது.பரம்பரை பரம்பரையாக இருந்த நிலங்களில் இருந்த சிங்களவனும் இஸ்லாமியனும் மெதுமெதுவாக இடம்பெயரத் தொடங்கினார்கள் .இந்த இடப்பெயர்வுகளானது தமிழர்கள் வருங்காலங்களில் எப்படிப்பட்ட வினையை அறுவடை செய்யப்போகின்றார்கள் என்பதை காட்டி நின்றது . ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த குழப்பங்களால் அபயசேகராவின் பாண் பேக்கறி முற்றாக எரிக்கப்பட்டு நாசமாகிப்போனது . அபயசேகரா குடும்பத்துடன் இரவோடு இரவாக தனது சொந்த ஊரான கம்பஹாவிற்கு சென்று விட்டார். அபயசேகரா கம்பஹா சென்றதால் வல்லிபுரமே சுற்று வட்டாரங்களில் பாண் போடுவதில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தார்.

 

வல்லிபுரத்தான் அவருக்கு வாழ்க்கையில் சிறிது ஏழ்மையை கொடுத்தாலும், பிள்ளைகள் விடயத்தில் அவரைப் பணக்காரனாகவே வைத்திருந்தான். மொத்தம் பன்னிரண்டு குழந்தை செல்வங்கள் அவரது திருமண வாழ்வில் கிடைத்தார்கள். தானும் மீனாட்சியும் எவ்வளவு கஸ்ரப்பட்டாலும் குழந்தைகளை நன்றாகவே வளர்த்தார்கள். சின்னனும் பொன்னனுமாக குழந்தைகள் அவர்களை சுற்றி இருந்து லூட்டி அடிப்பது, அயல் வீடுகளில் குழந்தைகள் விடயத்தில் சிக்கனமாக இருந்தவர்களுக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியது என்னமோ உண்மைதான். நரேன் அந்தக் குழந்தைகள் குழுமத்தில் மூத்தவனாக இருந்தான். இதனால் வல்லிபுரத்திற்கு நரேனில் அதிக அக்கறை இருந்தது. இந்த அக்கறையானது

வருங்காலத்தில் நரேன் தனது பெயரையும் தொழிலையும் காப்பாற்றப்போகின்றவனாக இருந்ததாலும் வந்திருக்கலாம். இதனால் தான் என்னவோ நரேனுக்கு பள்ளிக்கூடப் படிப்புடன் நின்றுவிடாது தனது தொழில் என்ற வாழ்க்கை அனுபவப்படிப்பையும் சேர்த்தே கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார் வல்லிபுரத்தார் . நரேனும் தனது பொறுப்புணர்ந்து படிப்பிலும் சரி அனுபவப்படிப்பிலும் சரி சுட்டியாகவே வளர்ந்துகொண்டிருந்தான். நரேன் தனது படைப்பை தொடர வடமராட்சியின் பிரபலமான கல்லூரியான ஹாட்லி கல்லூரியில் தனது சக்திக்கும் மீறி வல்லிபுரத்தார் விட்டிருந்தார். அதற்காகவே அவர் தன்னைக் கடுமையாக வருத்த வேண்டியிருந்தது. குடும்பநிலை உணர்ந்த நரேன் தந்தையுடன் சேர்ந்து பாண் போடுவதிலும், அதனைக் கொண்டுபோய் சுற்றுவட்டாரங்களில் விற்பதிலும் அவருக்கு உதவியாக இருந்தான்.

 

வல்லிபுரத்தார் அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தார். எழுந்த கையுடன் அருகில் இருந்த வேப்ப மரத்தில் இருந்த ஒரு கிளையை ஒடித்துப் பல்லுக்குள் செருகிக்கொண்டு வீட்டின் பின்னே இருந்த தோட்டத்துக்கு சென்றுகொண்டிருந்தார். அவரது தோட்டம் அவருக்கு சீதனமாக வந்த காணி. அந்த அரைப்பரப்பு காணிக்குள் வாழை, மிளகாய் ,வெங்காயம், மரவள்ளி என்று அவரது கடுமையான உழைப்பு பச்சைகளாக பரந்து விரிந்திருந்தது. வேப்பங்குச்சியை வாயிற்குள் வைத்து சப்பிப் பற்களை தேய்த்தவாறே வெங்காயம் மிளகாய் கண்டுகளுக்கு இடையில் இருந்த களைகளை வேகமாக பிடுங்கதொடங்கினார். அவரது கைகள் வேகமாக இயங்கினாலும் அவரது மனமோ கடந்த ஒருகிழமையில் நடந்த சம்பவங்களால் மிகவும் கலக்கமடைந்து இருந்தது. போராளிகளின் நடமாடங்கள் வடமராட்சியில் அதிகம் இருந்தததால் அழையா விருந்தாளிகளுக்கு அதிக இழப்புகள் வந்து கொண்டிருந்தன. வடமராட்சியின் இயல்பு வாழ்க்கை தடம் மாறியது. எங்கும் மரண ஓலங்களும் இரத்தத்தெறிப்புகளும் தினசரி வாழ்க்கையாகின. அதிகாரம் பொருளாதாரத்தடை என்ற இறுதி ஆயுதத்தை தனது குடிகளுக்கு எதிராகக்கொண்டுவந்தது. மின்சாரமும், மருந்துப்பொருட்களும் அத்தியாவசிய உணவுப்பொருட்களும் சனங்களிடம் இருந்து விடைபெற்றே நாட்கள் அதிகம் ஆகி விட்டிருந்தன. எல்லாவற்றிற்கும் சனங்கள் மைல்கணக்கில் வரிசையில் நின்றனர். சனங்களின் வாக்குகளிலும் வரிகளிலும் வந்த அதே அதிகாரம் தான் தனது சனங்களை வேண்டதகாதவர்களாக பார்த்துக்கொண்டது . போராளிகளை தாங்கள் அழிக்கின்றோம் என்ற போர்வையில் அதிகாரம் தங்களை பலப்படுத்த புதிது புதிதாக பல ஆள் நடமாட்டமற்ற சூனியப் பிரதேசங்களை வடமராட்சியில் கொண்டு வந்ததது.

 

வல்லிபுரத்தாரின் பேக்கரியும் மின்சாரம் இல்லாததால் தொடர்ந்து இயங்க முடியாது அவரின் வீட்டுக்கு இடம் பெயர்ந்தது. பேக்கரியின் மின்சாரப் போறணை மரத்தால் எரிக்கும் போறணையாக மாறியது. தினசரி போட்டுவந்த பாண் கிழமையில் ஒருதரம் என்று சுருங்கி விட்டது. செல்வாக்குடன் இருந்த வல்லிபுரத்தாரின் வாழ்க்கையில் வறுமை தன் முடிச்சை மெதுமெதுவாக இறுக்கிக் கொண்டு வந்தது. தான் பட்டினி கிடந்தாலும் மீனாட்சியையும் பிள்ளைகளையும் வறுமையின் சாயல் பிடிக்காது பார்த்துக்கொண்டார் வல்லிபுரத்தார். இரண்டு நாட்களாக தண்ணி இல்லாது பயிர் பச்சைகள் எல்லாம் வாடியிருந்தன. இன்று எப்படியும் துலாவால் தண்ணி இறைக்க வேணும் என்றும் நாலுநாளாக போடாத பாணை இன்று போட்டு கொஞ்சம் காசு எடுக்கவேணும் என்றும் நினைத்துக்கொண்டார் .பாண் போடவேண்டும் என்று அவர் நினைத்ததுக்கு காரணமும் இல்லாமல் இல்லை. சனங்களும் கடைக்காரர்களும் பாணுக்கு அவரை நச்சரித்துக்கொண்டிருந்தனர். பசி அவர்களை நச்சரிக்க வைத்தது. அவசரமாகக் களைகளைப் பிடுங்கி விட்டு கிணற்றடிக்கு வந்து துலாவால் தண்ணீர் இறைக்கத் தொடங்கினார் வல்லிபுரத்தார். படித்துக்கொண்டிருந்த நரேன் கிணற்றடிக்கு வந்து அவருக்கு உதவியாக துலா மிதிக்கத் தொடங்கினான். அவனது கால்கள் லாவகமாக துலாவின் முன்னேயும் பின்னேயும் நடைபயின்றன . தண்ணீர் வாய்க்காலில் சலசலவென்று பாயத்தொடங்கியது. துலா மிதிப்பின் சத்தம் கேட்டு மீனாட்சியும் எழுந்து விட்டிருந்தாள். அதன் தொடர்ச்சியாக எல்லா பிள்ளைகளும் வரிசையாக நித்திரையால் எழும்பத்தொடங்கினார்கள். எல்லோருக்கும் தேநீர் தயாரித்த மீனாட்சி இடைக்கிடை தோட்டத்தில் பாத்தி மாறிக்கொண்டிருந்தாள். தண்ணீர் கண்ட பயிர் பச்சைகள் எல்லாம் புத்துயிர் பெற்றுக்கொண்டிருந்தன. தோட்டத்தின் மூலையில் நின்ற இரண்டு மரவள்ளி மரங்களைப் பிடுங்கிய வல்லிபுரத்தார், காலை உணவு செய்யும் படி மீனாட்சியிடம் கொடுத்தார். அன்று காலை அவர்கள் எல்லோரதும் பசி போக்க இயற்கை கொடுத்த அந்த மரவள்ளிக்கிழங்குகளே துணை செய்தன. நரேன் குளித்து விட்டு கல்லூரி செல்ல ஆயுதமாக வந்த பொழுது, வெண் நிறத்தில் அவிந்த மரவள்ளிக்கிழங்குகளும் கல்லுரலில் இடித்த சம்பலும் தயாராக இருந்தன. தோட்டத்துக்கு தண்ணீர் இறைத்து தானும் குளித்துவிட்டு விட்டு காலை உணவை அருந்திய வல்லிபுரத்தார் பாண் போடுவதற்கு ஆயதங்களை செய்யதொடங்கினார்.

 

பாண் போடுவதே ஓர் கலைதான் . அதிலும் வல்லிபுரத்தார் பாண் போடும் அழகே அழகு. கோதுமை மாவை கும்பியாக குவித்து, அதன் உச்சியில் ஓர் குழியை கையால் போட்டு, அதனுள் உப்பையும் ஈஸ்ற் ஐயும் அளவு தப்பாது போட்டு ,தண்ணீரை மெதுமெதுவாக கலந்து வல்லிபுரத்தார் மா குழைக்கும் அழகோ அழகு. மாவை குழைத்த பின்பு சிறிது நேரம் குழைத்த மாவை புளிக்க விட்டு பின்பு மீண்டும் குழைக்க வேண்டும். அப்போது வல்லிபுரத்தார் கால்களை நன்றாக கழுவிவிட்டு கால்களாலேயே மாவை குழைப்பார். அப்பொழுது பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து கொள்வார்கள். எல்லோர் கால்களிலும் மா படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும். மா பட்டுப்போல குழைந்த பின்பு, சிறிய உருண்டைகளாக உருட்டி அச்சுகளில் அதை வைத்து தட்டி போறணையில் வைப்பார்.அப்பொழுது குழைந்த மா, அச்சுப்பாண் , சங்கிலிப்பாண் , றோஸ் பாண் ,பணிஸ் பல விதங்களில் தன்னை உருமாற்றிக்கொள்ளும். சின்னன் பொன்னன்களுக்கு அவரின் சங்கிலிப்பாணும், பணிசஸ்சுமே மிகவும் பிடித்தவை .போறணையிலும் மின்சார போறணைக்கும் மரத்தால் எரிக்கும் போறணைக்கும் பாணின் சுவையால் வேறுபாடு உண்டு. வல்லிபுரத்தார் இரண்டு போரணைகளிலும் பாண் போடுவதில் வல்லவர். தனது உடல் களைப்பு போக வரணியில் இறக்கிய உடன் கள்ளுப்போத்தல் இரண்டை எப்பொழுதும் அவர் தன்னுடன் வைத்துக்கொள்வார். கள்ளு தந்த சிறிய போதையில் முகம் முழுக்க சிரிப்புடன் அவர் பாண் போடும் அழகே அழகு.

 

அன்றும் கள்ளுத் தந்த மிதப்பான போதையில் மாவைக்குழைத்து விட்டு போறணைக்கு விறகுக்காக தோட்டக்காணியில் வேலியோரமாக இருந்த பூவரசு மரத்தை தறிக்க ஆரம்பித்தார் வல்லிபுரத்தார். பச்சைப் பூவரசு போறணையில் கொழுந்து விட்டு எரியத்தொடங்கி அந்த இடமெங்கும் புகை மண்டலமாக இருந்தது. பாண் அச்சுக்களை லாவகமாக நீண்ட தடியில் வைத்து போறணையில் வைக்கத் தொடங்கினார் வல்லிபுரத்தார் . சிறிது நேரத்தில் பாண்கள் பொன்னிறமாக வெந்து வாசம் கிளப்பின. காலையில் கல்லூரி சென்ற நரேன் போகும் வழியில் இராணுவ பரிசோதனையில் மாட்டுப்பட்டு கல்லூரிக்கு செல்லாது வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டிருந்தான். இராணுவங்கள் றோட்டில் நிற்பதாக நரேன் சொல்லியும் கேளாது , மீனாட்சி தந்த தேநீரை குடித்துவிட்டு தான் குறுக்குப்பாதைகளால் போவதாக சொல்லி விட்டு வல்லிபுரத்தார் தான் போட்ட பாண்களை சைக்கிளின் பின் பக்க பெட்டியில் அடுக்கி வைத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். தான் எடுத்த காரியத்தை முடித்து நாலு காசு பார்க்கவேண்டும் என்ற கவலை அவருக்கு. போகும் பொழுது வல்லிபுரக்கோவில் இருந்த திசையைப் பார்த்து கும்பிட்டவாறே சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார். சின்ராசா கடை, தவம் கடை, காராளி கடை, மற்றும் சில தனிப்பட்ட வீடுகளுக்கும் பாண்களை விற்று விட்டு சிறிது பாண்களுடன் வந்த வல்லிபுரத்தார் அளவுகடந்த புழுகத்துடன் சின்னப்புவின் கள்ளுத்தவறணைக்குள் நுழைந்தார். அவரைக்கண்ட சின்னப்பு அப்பொழுது இறக்கிய இரண்டு கள்ளு முட்டியை அவருக்கு நுரை தள்ளக் கொடுத்தான். சோட்டைக்கு வறுத்த ஈரலை எடுத்து வைத்தான் .வல்லிபுரத்தார் ஈரலைக் கண்ட புழுக்கத்தில் மேலதிகமாக இன்னுமொரு கள்ளு முட்டியை எடுத்துக்கொண்டார். மதிய நேரமாதலால் கள்ளு வல்லிபுரத்தாருக்கு வெறியை கூட்டியது. சின்னப்பு அவரை கைத்தாங்கலாக பிடித்து சைக்கிளில் ஏற்றிவிட்டு வீட்டிற்கு அனுப்பினான்.

 

கள்ளுத் தந்த போதையில் தனது மனைவி மீனாட்சியை நினைத்து ” மயக்கமென்ன இந்த மயக்கமென்ன ” என்ற வசந்த மாளிகை படப்பாடலை பெரிய குரலில் பாடிக்கொண்டே சைக்கிளை குறுக்கு மறுக்காக ஒழுங்கையில் ஒட்டிக்கொண்டு வந்தார் வல்லிபுரத்தார். மயக்கமென்ன என்று பாடியவாறு வந்த வல்லிபுரத்தாரை விதி மயக்கி வேறுவழியில் இழுக்கத்தொடங்கியது அவர் வந்த சைக்கிள் வெறி வளத்தில் ஒழுங்கையின் கடைசி சந்தியில் இருந்து தொடங்கிய மக்கள் நடமாட்டம் இல்லாத சூனியப் பகுதியில் நுழையத் தொடங்கியது அந்த சூனியப்பகுதியின் மத்தியில் இருந்த சென்றியில் இருந்த அழியா விருந்தாளி , வந்தது போராளி என்ற நினைப்பில் தனது இயந்திரத் துப்பாக்கியை விரைவாக இயக்கினான் பறந்து வந்த குண்டுகள் சல்லடையாக வல்லிபுரத்தாரை தாக்கின. அதில் ஓர் குண்டு அவரின் தலையின் பின்புறத்தை பிழந்து இருந்தது. தலையிலிருந்து மூழை வெளியே வந்து இருந்தது. அதை காகங்கள் கொத்திக்கொண்டிருந்தன. சுட்டவன் வெளியே எட்டிப்பார்த்தான். மேலிடத்தில் இருந்து வந்த அழைப்புக்கு, தான் போராளி ஒருவனை சுட்டதாக சொன்னான். உடனடியாக அங்கு வந்த சிறிய படையணி அவரது உடலத்தை ஒழுங்கைக்கு அப்பால் போட்டுவிட்டு சென்றனர். ஆள் அரவம் அகன்றதும் சனங்கள் வெளியே வந்து பார்த்தனர். மீனாட்சி ஓலமிட்டவாறே ஓடி வந்தாள். அவளுடன் கூட வந்த பிள்ளைகள் விபரம் அறியாது தந்தையைப்பர்த்து அழுது கொண்டு நின்றனர். நரேன் விக்கித்து பொய் நின்றான். தந்தையின் சிதையில் தீ மூட்டிய நரேனது மனம் நாளைய பற்றிய நினைவில் கொழுந்து விட்டு எரிந்தது.

 

*************************************************

 

1988 இன் ஓர் கோடைகாலப் பொழுது ஒன்றில் , தனது கனவுகளை ஆழப்புதைத்து விட்டு அம்மாவையும் சகோதரங்களையும் பார்க்கவேண்டும் என்பதற்காக, இருந்த வீட்டையும் தோட்ட்க்காணிகளையும் ஈடு வைத்து கல்வியங்காட்டில் பிரபலமான பயண முகவர் மூலம் பிரான்சுக்கு வந்து சேர்ந்தான். பிரெஞ் மொழியும், பிரான்ஸ் வாழ்க்கை முறைகளும் நரேனுக்கு கிலியை ஏற்படுத்தின. ஆனாலும் இருத்தல் பற்றிய வேட்கை அவனை வெறிபிடித்தவனாக்கியிருந்தது. அவன் வந்த ஆரம்பத்தில் அவன் வேலை செய்வதற்கான அனுமதியும், தற்காலிக வதிவிட உரிமையும் மட்டுமே பிரான்ஸ் உள்துறை அமைச்சு வழங்கியிருந்தது. அவனது அகதி அந்தஸ்துக்கான வழக்கு நிலுவையிலேயே இருந்தது. வரணியில் பெரிய வீட்டில் வளைய வந்தவனுக்கு இருபது சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அறையில் பத்து பேருடன் இருந்தது மூச்சு முட்டியது .ஒழுங்கான வேலை கிடைப்பது முயற் கொம்பாக இருந்த அந்தக் காலப்பகுதியில் கிடைத்த எந்த வேலை எதையும் செய்ய அவன் தயாராகவே இருந்தான். ஒருநாள் நரேன் வீடு வீடாக பேப்பர் போட்டுக்கொண்டு வரும் பொழுது ஓர் பாண் போடுகின்ற பேக்கறியைக் கண்டான். அதில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று போடப்பட்டிருந்தது. அவனது கால்களும் கண்களும் அவனியறியாமல் நின்று உள்ளே நோட்டமிட்டான. அந்த பேக்கறியில் ஓர் வயது முதிர்ந்த பிரெஞ் தம்பதிகள் நின்றிருந்தனர். அவன் தயங்கியவாறே உள்ளே நுழைந்தான். அவர்களுக்குத் தன்னை அறிமுகபடுத்தி விட்டு தான் வேலை தேடி வந்திருப்பதாக அவர்களிடம் தெரிவித்தான். அந்த முதியவர் தன்னை மிஷேல் பிரான்சுவா என்று அறிமுகப்படுத்திவிட்டு ,அவனை ஏற இறங்கப்பார்த்து ” உனக்கு பாண் போடத் தெரியுமா ?” என்று கேட்டார் .நரேன் தனக்கு ஓர் சந்தர்ப்பம் தரும்படி அவர்களை பார்த்துக்கேட்டான். ஆனாலும் அவனை ஒருவித சந்தேகத்துடன் பார்த்த அந்த முதியவரின் காதுகளை அவரின் மனைவி இரகசியமாக எதோ கடித்தாள் . நரேனை உள்ளே அழைத்துச் சென்ற மிஷேல் பிரான்சுவா தனக்கு பாண் போடடுக்காட்டும்படி அவனைக்கேட்டார்.அந்த பாண் போடும் இடம் விஸ்தாரமாக நவீன போறணைகளுடன் இருந்தது. அதில் டிஜிட்டல் வெப்ப மானிகளும், பாண் வெந்தவுடன் அறிவிக்க அலார்ம் களும் என்று அந்த இடம் அவனை வெகுவாகக் கவர்ந்தது. பரபரவென்று இயங்கிய அவனது கைகளை மிஷேல் பிரான்சுவாவின் கண்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன .முயல் பிடிக்கின்ற நாயை மூஞ்சையில் வைத்துப் பிடித்துக்கொண்டார் மிஷேல் பிரான்சுவா .அந்த தம்பதிகள் அவனை வேலைக்கு எடுத்துக்கொண்டனர் .நரேன் தான் வல்லிபுரத்தாரிடம் கற்ற வித்தைகள் எல்லாவற்றையுமே ஓர் ஈடுபாட்டுடன் பாண் போடுவதில் காட்டினான். அவனது தொழில் நேர்த்தியால் பிரான்சுவாவின் பேக்கறியில் கூட்டம் அலை மோதியது. காலம் அவனை அந்த பேக்கறியில் தலமை பாண் போடுபவனாக ஒன்பதினாயிரம் பிராங்குகளுடன் பதவி உயர்த்தியது. இரண்டு பனிக்காலங்களும் , இரண்டு கோடைக்காலங்களும் நரேனின் வாழ்வில் கடந்தபொழுது மைதிலி என்ற தென்றல் அவன் வாழ்வில் நுழைந்து கொண்டது .அவர்களின் இன்ப வாழ்வின் எதிர்வினையாக மிருதுளா வந்து சேர்ந்து கொண்டாள் .

 

நினைவுகளில் ஆழப்புதையுண்டிருந்த நரேன் போறணையின் அலார்ம் ஒலி கேட்டு நிஜத்துக்கு வந்தான். போறணையைத் திறந்தபொழுது பாண்கள் நீண்ட வடிவில் பொன் நிறத்தில் மொறுமொறுப்பாக வெந்து இருந்தன. பேக்கரியில் அந்த அதிகாலைவேளையில் கூட்டம் அலை மோதத்தொடங்கியிருந்தது. நரேன்போட்ட பாண்களின் வாசம் அந்த இடமெல்லாம் சூழ்ந்து வாடிக்கையாளர்களை மயக்கியது. இரவெல்லாம் கண்முழித்த்தினால் கண்கள் இரண்டும் சிவந்திருக்க வீட்டை நோக்கி நரேன் தனது காரில் பறந்தான். காரில் அவனுக்குப் பிடித்த சுப்பிரபாதம் மெல்லிய குரலில் உருகிக்கொண்டிருந்தது. சிறுவயதில் இருந்தே வல்லிபுரக்கோவிலில் இந்த சுப்பிரபாதத்தை கேட்டு அவனது மனதில் ஆழமாக வேரோடிய விடையம் இது. ஓவ்வரு அதிகாலையிலும் சுப்பிரபாதம் கேட்காவிட்டால் அன்றைய பொழுது அவனுக்கு விடியாது. அப்பா வல்லிபுரத்தின் நினைவலைகள் அவனது மனதை பிழிந்து எடுத்தன. அவனது கார் வீட்டினுள் நுழையும் பொழுது மனைவி மைதிலி மகள் மிருதுளாவுடன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதில் மல்லுக்கட்டுவது தெரிந்தது. நரேனைக் கண்டவுடன் மிருதுளா ஓடிவந்து கட்டிப்பிடித்து முத்தம் தந்தாள். ஐந்தே வயது நிரம்பிய மிருதுளாவை நரேன் என்றுமே கோபித்ததில்லை. மைதிலி மகள் விடயத்தில் கட்டுப்பாடானவள். மிருதுளா அவனுடன் பள்ளிக்கூடம் செல்வதற்கு அடம்பிடித்தாள். வேலைக்கு செல்லும் அவசரத்தில் இருந்த மைதிலியை சமாதானப்படுத்தி அனுப்பி விட்டு ,மிருதுளாவை பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றான் நரேன். அப்பாவின் கையுடன் தனது பிஞ்சுக்கையை இணைத்துக்கொண்டு மிதப்பாக மிருதுளா நடந்துக்கொண்டிருந்தாள் . போகும் வழியில் ஒரு பாண் பேக்கரியைக் கண்டு தனக்கு பண் வாங்கித்தரும்படி நரேனை நச்சரிக்கதொடங்கினாள் மிருதுளா. ஒருகட்டத்தில் அவளது பிடிவாதம் றோட்டில் நின்று அழும் அளவிற்கு வந்து விட்டது. நரேனின் மனது முட்ட அவனது அப்பா வல்லிபுரத்தின் துயர நிகழ்வுகளே நிறைந்து இருந்ததினால் கோபம் தலைக்கேறி அவனது கை மிருதுளாவின் சளீர் என்று முதுகைப் பதம் பார்த்தது.என்றுமே அடிக்காத அப்பாவின் செய்கையால் அந்த பிஞ்சு கண்களில் நீர்முட்ட விம்மியவாறு நின்றது.

 

 

http://malaigal.com/?p=5753

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.