Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள சினிமாவும் எல்லாளனின் மறு உயிர்ப்பும் - என்.சரவணன்

Featured Replies

சிங்கள சினிமாவும் எல்லாளனின் மறு உயிர்ப்பும் - என்.சரவணன்

 
1890522_318879448302283_6073354829259032
கடந்த 23ஆம் திகதி இலங்கை சிங்களத் திரைப்படத் துறையினர் எதிர்பார்த்துக் காத்திருந்த “மகாரஜ கெமுனு” திரைப்படம் இலங்கையின் பல பாகங்களில் திரையிடப்பட்டது. இலங்கையின் திரைப்பட வரலாற்றில் மிகப் பெரிய பட்ஜட் திரைப்படம் இது தான் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 150 மில்லியன் இலங்கை ரூபாய்கள் இதன் செலவு. லிங்கா திரைப்படத்திற்கு ரஜினியின் சம்பளம் 360 மில்லியன் இந்திய ரூபாய்கள் என்பது கொசுறுச் செய்தி.
 
சிங்கள மொழி திரைப்பட சந்தை என்பது சிறியது என்பதால் பெரும் பொருட்செலவில் திரைப்படங்கள் தயாரிப்பது சாத்தியமில்லை. இப்படிப்பட்ட பட்ஜட் படங்கள் என்பது அதன் தரத்திலும் தாக்கம் செலுத்தவே செய்திருகின்றன. அந்த சவால்கள் மத்தியில் சர்வதேச திரைப்பட விழாக்களில் போட்டியிடும் அளவுக்கு பல நல்ல திரைப்படங்களை இலங்கை சிங்கள திரைத்துறை தந்திருக்கிறது. இந்திய திரைப்படங்கள், தொலைகாட்சி நாடகங்கள் போன்றவற்றின் ஆக்கிரமிப்பின் மத்தியிலும் மிகப் பெரும் சவால்களை எதிர்கொண்டபடி சிங்கள திரைத்துறை நின்றுபிடித்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் “மகாரஜ கெமுனு” திரைப்படத்திற்கு 150 மில்லியன்கள் பெரியதொகை தான். இந்த திரைப்படம் குறித்த சமகால பேரினவாத அரசியல் போக்குடன் அலசிப்பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
 
 
 

உருவானதன் பின்னணி
இத்திரைப்படம் குறித்த பல செய்திகளும் கட்டுரைகளும் காணொளிகளும் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வெளிவந்தம் இருந்தன. இந்த திரைப்படத்தை இயக்கிய ஜயந்த சந்திரசிறி “மகாரஜ கெமுனு” எனும் பெயரில் இதனை நூலாக வெளியிட்டிருந்தார். 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த நூலின் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. குணதாச அமரசேகர, விமல் வீரவங்ச போன்றோர் பிரதம விருந்தினர்கள். அந்த நிகழ்வு குறித்து பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில்வெளிவந்த படங்களும் செய்திகளும் இன்னமும் பார்வையிடலாம். இந்த நூலுக்கான அணிந்துரையை எழுதியிருப்பவர் இலங்கையின் பேர்பெற்ற இனவாதியாக அறியப்பட்ட குணதாச அமரசேகர.
20110401_01AA4.jpg குணதாச அமரசேகர, விமல் வீரவங்ச, கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டோர் "மகாரஜ கெமுனு" வெளியீட்டின் போது 2010ஆம் ஆண்டு திவய்ன பத்திரிகையில் தொடராக வெளியிடப்பட்ட இந்த கதை பின்னர் 277 பக்கங்களில் நூலாக வெளியிடப்பட்டு இப்போது திரைப்படமாக அதே நூலாசிரியரால் இயக்கப்பட்டுள்ளது. ஜயந்த சந்திரசிறி ஏற்கெனவே பல பிரபல தொலைக்காட்சி நாடகங்களையும், திரைப்படங்களையும் இயக்கிய அனுபவமுள்ளவர். ஆனால் தற்போதைய இனவாத சந்தையை சரியாக இனங்கண்டு தருணம் பார்த்து இந்த திரைப்படத்தை இயக்கியிருகிறார் என்றே கூற வேண்டும். இலங்கையின் பிரசித்திபெற்ற பேரினவாதியாக அறியப்பட்ட பேராசிரியர் நளின் டி சில்வா இத் திரைப்படம் குறித்து தனது கட்டுரைகளுக்கு ஊடாகவும், விரிவுரை, தொலைகாட்சி உரைகளுக்கு ஊடாகவும் வழங்கியிருக்கிற சான்றிதழே போதும் இதன் இனவாத உள்ளடக்கத்தை அறிந்துகொள்ள.
 
இலங்கையின் வரலாற்றில் மட்டுமல்ல பெரும்போக்கு அரசியல் தளத்திலும் கூட எல்லாளன் – துட்டகைமுனு கதையாடல் மிகவும் பிரசித்திபெற்றது. இலங்கையின் இனப்பிரச்சினையோடு ஒட்டிய பேரினவாதத்தின் அணுகுமுறையில் துட்டகைமுனு தவிர்க்கமுடியாத பேசுபொருள். மகாவம்ச போதனைக்கூடாக சிங்கள பௌத்த மாணவர்களுக்கு தமிழர்களுக்கெதிராக போதிக்கப்பட்டுவரும் முக்கிய கதாபாத்திரங்கள்  எல்லாளன் – துட்டகைமுனு கதை. எல்லாளன் என்கிற ஆக்கிரமிப்பு தமிழ் மன்னனை தோற்கடித்த துட்டகைமுனு எனும் சிங்கள பௌத்த மன்னனின் வெற்றிப்பெருமிதங்களை கூறும் கதை தான் “மகாரஜ கெமுனு”.
 

10888918_339667919556769_173743977160625திரைப்பட விளம்பரங்களில் திரும்பத் திரும்ப காட்டப்படும் ஒரு காட்சி இங்கு கவனிக்கப்படவேண்டியது.

 

 


ஒரு தடவை துட்டகைமுனு கால்களைக் குறுக்கிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த போது தாய் விகாரமாதேவி மகனை நோக்கி, ’ஏன் இவ்வாறு உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறாய் மகனே! நன்றாகக் கால்களை நீட்டிக் கொண்டு படுக்கலாமே’ என்று கேட்டாள். அதற்கு துட்டகைமுனு, ‘ஒரு புறம் தமிழர்களும் மறு புறம் கடலும் இருக்கும் போது நான் எவ்வாறு தாயே காலை நீட்டிப் படுத்துறங்க முடியும் என்று கேட்டதாக கதை கூறுகிறது. 

 

எல்லாளனை கொன்று எல்லாளனின் இறுதிச்சடங்குகளை கௌரவமாக நடத்தி தானே கொள்ளியையும் வைத்த துட்டகைமுனு எல்லாளனுக்கு நினைவுத் தூபி கட்டி அதனை வழிபடுமாறு மக்களுக்கு ஆணையிட்டதாக மகாவம்சம் கூறுகிறது. தமிழர்களுக்கு எதிரான ஒரு குறியீடாகவே துட்டகைமுனுவை சிங்கள மக்கள் மத்தியில் நிலைநிறுத்தியிருக்கிறது பேரினவாதம். போரின்போது பலமான ஒரு சிங்களப் படைப்பிரிவுக்கு “கெமுனு படைப்பிரிவு” என்றே பெயரிடப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக வடக்கிலும் எல்லாளன் படை என்கிற பெயரில் வெளியிடப்பட்ட துண்டுபிரசுரங்களையும் அறிந்திருக்கிறோம்.
 
யுத்த காலத்தில் மட்டுமல்ல யுத்தம் முடிந்ததன் பின்னரும் சிங்கள கலை, இலக்கிய வெளிப்பாடுகளில் சிங்கள பௌத்த தேசியவாதத்தையும், இனவாதத்தையும் பிரதிபலிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது.  நாவல்கள், பொப்பிசை மற்றும் சாஸ்திரிய பாடல்கள், நூல்கள், தொலைகாட்சி நாடகங்கள், திரைப்படங்கள் என சந்தையில் பலவற்றில் அதன் தாக்கத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது. கூடவே கலைஞர்களும் யுத்த பிரச்சாரத்துக்கும், சிங்கள தேசியவாதத்தை பரப்புவதற்கும் கடந்த ஒரு தசாப்தத்துக்குள் அதிகமாக பயன் படுத்தப்பட்டிருக்கிறார்கள். நியாயமான பார்வையைக் கொண்டவர்கள் என்று அறியப்பட்ட பல கலைஞர்களைக் கூட இனவாத மேடைகளில் கண்டோம்.
20610_2015-02-01_01_02_2015_014.jpg
யுத்த பிரசாரத் தொனியுடைய பயங்கரவாத பீதியைக் கிளப்பும் திரைப்படங்களைப் போல மறுபுறம் யுத்த எதிர்ப்பு திரைப்படங்களும் சவால்களின் மத்தியில் வெளிவரவே செய்தன. அப்படியான திரைப்படங்களை இயக்கிய அசோக ஹந்தகம, பிரசந்த விதானகே போன்றோர் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்களும், தடைகளையும் நாம் அறிவோம். 
 
சென்ற வருட நடுப்பகுதியில் வெளியான எஹெலபொல குமாரிஹாமி திரைப்படம் கண்டி மன்னனை அந்நியனாகவும், அயோக்கியனாகவும் புனையப்பட்டு வெளியானது. சில மாதங்களுக்கு முன்னர் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முன்னோடியான அநகாரிக தர்மபால பற்றிய திரைப்படம் வெளிவந்தது. அந்த திரைப்படத்தை தயாரித்தது கூட பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர். அது போல கடந்த இரு தசாப்தத்துக்குள் யுத்தம், ஆக்கிரமிப்பு, போர் பிரச்சாரம். சிங்கள வரலாற்றுப் புனைவு என்பவற்றை பேசுகின்ற பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 1994இல் காமினி பொன்சேகா “நொமியன மினிசுன்” (இரவா மனிதர்கள்) என்கிற திரைபப்படத்தை எடுத்தார். சமீபத்தில் சுலங்க எனு பினிச (காற்று வருவதற்காய் - 2005), பிரபாகரன்(2008), அபா (2008), இனி அவன் (2012) மாத்தா (2012), காமினி  (2011), நீல் (2011), அலிமங்கட (ஆனையிறவு - 2011), Flyingfish (2011), விஜய குவேனி (2012), போம்ப சஹா ரோச (வெடிகுண்டும் ரோஜாவும் - 2012), சிறி பெறக்கும்(2013), பவதாரண (2014), சிறி தலதா கமனய (2014), அஜாசத்த (2014), என்பவற்றை குறிப்பிட்டு கூறலாம். ராவணனைப் பற்றி ஒரு திரைப்படமும் கூட உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சமீபகாலமாக இராவணனை தமது தலைவனாக சிங்களவர்கள் போற்றிப் புனையும் ஒரு போக்கும் வேகமாக வளர்ந்து வருகிற சூழலில் இராவணன் பற்றியா திரைப்படமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
 

 
 
கண்டி மன்னனை அந்நியனாகவும், அயோக்கியனாகவும் புனையப்பட்டு வெளியான "எஹெலபொல குமாரிஹாமி" திரைப்படத்தின் விளம்பரம்

 
 
சிங்கள சிவிலியன்களை இராணுவமயமாகும்படி போதிக்கும் பிரசார திரைப்படம் "காமினி"
 

 
 
விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்திரிப்பதற்காக எடுக்கப்பட்ட பிரச்சார திரைப்படம் "பிரபாகரன்"
 
இனவாத பின்புலம்
சிங்கள திரைப்பட வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்தே பண்டைய காலத்து வரலாற்றுப் புனைகதைகள் திரைப்படங்களாக வெளிக்கொணரப்பட்டுள்ளன.  ஆனால் அப்போதெல்லாம் காணப்படாத தமிழ் விரோத போக்கு சமீபகாலமாக; குறிப்பாக கடந்த இரண்டு தசாப்தகாலமாக தோன்றி வளர்ந்து செழித்திருக்கிறது என்றே கூறவேண்டும். சந்தையில் மேற்படி திரைப்படங்களுக்கான கிராக்கி செயற்கையாகவே உருவாக்கப்பட்டது என்றால் அது மிகையும் இல்லை.
 
சமீப காலமாக வரலாற்றுப் புனைவுத் திரைப்படங்களின் உருவாக்கத்திற்கான ஒரு அலை உருவாகியிருக்கிறது. அதனைப் பார்ப்பதற்கான ஒரு பார்வையாளர் கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சந்தையில் அதற்கான கேள்வி உருவாகியிருக்கிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்தால் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கான மனவலிமையை பலப்படுத்த இது எப்படியெல்லாம் துணை நின்றிருக்கிறது என்பதையும் சேர்த்தே  அறியக்கூடியதாக இருக்கும். 3 தசாப்த யுத்தகாலத்தில் சிங்கள பௌத்த பேரினவாத கருத்துருவாக்கத்துக்கும், அதன் புனைவுக்கும், ஐதீகங்களுக்கும், அதன் வியாபகத்திற்கும், அதன் பரப்புரைக்கும் தென்னிலங்கை சிங்கள கலைப்படைப்புகள் எப்பேர்பட்ட வகிபாகத்தை ஆற்றியிருக்கிறது என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. அந்த வரிசையில் சிங்கள சினிமா ஆற்றிய  பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
 
சிங்களத் திரைப்படங்களின் சந்தை தமிழர்களில் தங்கியில்லை என்பதும் சாதாரண சிங்கள மக்களே இதன் ஜனரஞ்சக ரசிகர்கள் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
 
கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக ஒரு பாரிய கருத்தியல் போரை பேரினவாத சக்திகள் மேற்கொண்டதால் தான் ஒரு பாரிய அழிவுக்கான அங்கீகாரத்தையும், ஆதரவையும் பெரும்பான்மை மக்களிடமிருந்து பெறமுடிந்தது. அந்த கருத்தியல் போரின் தேவை போருக்கு பின்னும் தேவைப்பட்டது சிங்கள  பௌத்த வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்வதற்கும், சர்வதேச போற்குற்றச்சாட்டுக்கு எதிரான உள்நாட்டு சக்தியை பலப்படுத்துவதற்கும், தமிழர் உரிமை போராட்டம் மீள தலைதூக்க விடாது தடுப்பதற்காகவும் இந்த கருத்தாதிக்கத்தை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டியிருந்தது.
 
பேரினவாத சித்தாந்தத்துக்கு இலங்கையை சிங்கள பௌத்த நாடென்று நிறுவுவது அவசிமாகிறது. தமிழர் தாயகக் கோட்பாட்டை முறியடிப்பது அவசிமாகிறது. வடக்கு கிழக்கு சிங்கள பௌத்த பூமி என்றும் தமிழர்கள் அவற்றை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்கள் என்கிற புனைவை தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழர்கள் வந்தேறு குடிகள், கள்ளத்தோணிகள் என்று தொடர்ந்தும் புனயவேண்டியிருக்கிறது. இந்த புனைவை இனவாத விஷமேற்றி பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் தலைகளில் கருதேற்ற வேண்டியிருக்கிறது.
 
பாட நூல்கள், மத உபதேசங்கள், அறநெறிகள், ஊடகங்கள் வாயிலாக இதனை பிரயோகிக்க வேண்டியிருக்கிறது. பேரினவாத பிரதான ஊடகங்கள் இந்த பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்குள் ஏற்கெனவே உள் நுழைக்கப்பட்டிருந்தன. ஊடக சந்தையில் சிங்கள பௌத்த சித்தாந்தத்துக்கு சந்தைப் பெறுமதியை ஏற்படுத்தினார்கள். சிங்கள பௌத்த கருத்தியல் போருக்கு சாதகமற்ற ஊடகங்கள் சந்தையில் வெற்றிபெற முடியாத நிலையைக் கொண்டு வந்தார்கள். அனைத்து தளங்களிலும் தமிழர் எதிர்ப்பு உணர்வுநிலையை மக்கள்மயப்படுத்துவதில் பாரிய வெற்றி பெற்றார்கள். அவர்கள் எந்த தகவலையும், கருத்தையும் புனைவேற்றி பரப்பினாலும் அதற்குப் பின்னால் பெரும்பான்மையோர் அணிதிரளும் நிலைக்கு கொண்டுவந்தார்கள்.
 
உள்ளூர் சிங்கள திரைப்பட சந்தை தீவிர சிங்கள பௌத்ததேசியவாதத்தில் தங்கியிருப்பதைபோல நல்லிணக்கம், சமாதானம், கழிவிரக்கம் போன்ற உள்ளடக்கங்ககளைக்கொண்ட படைப்புகள் வெளிநாட்டு சந்தையையும் திரைப்பட விழாக்களையும், விருதுகளும் நம்பியிருக்க வேண்டியிருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. அவர்கள் உள்ளூரில் ஒட்டுமொத்தமாக சந்தையில் இருந்து அந்நியப்பட்டுவிடுவோமோ என்கிற தயக்கத்தின் காரணமாக அவ்வப்போது பல அரசியல் சொதப்பல்களுக்கு உள்ளாகிவிடுவதையும் வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்கிறது.
 
இன்றைய சிங்கள திரைப்பட சந்தையில் விலைபோகக் கூடிய ஒன்றாக “இனவாத பரப்புரை” ஆகிவிட்டிருகிறது என்றால் அதன் அர்த்தம் மக்கள்மயப்பட்ட பேரினவாதத்துக்கு இனவாத – இனப்பெருமித ஏக்கமும் அவாவும் உருவாக்கப்பட்டிருகிறது என்பதும் தான். கூடவே இதன் எதிர்விளைவாக அந்த சந்தையின் தேவையை ஈடுசெய்ய திரைப்படத்துறையினரும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தான்.
 
திரைப்படவுருவாக்கத்தை தேசபக்தி மற்றும் தேசத்துரோக பிரச்சாரத்துக்கான ஊடகமாக பயன்படுத்துவது. தமிழர்களின் போராட்டம் பயங்கரவாத போராட்டம் என்பதை சித்திரித்து  அதற்கெதிரான போராட்டம் என்றும் தமிழர்களை விடுவிக்கும் போராட்டமாக புனைவதற்கும் சிங்கள திரைப்படங்கள் பாவிக்கப்பட்டன.. இந்த கருதுகோளின்படி தேசிய வீரர்கள் குறித்த அபரித சித்திரிப்புகளும், தேசத்துரோகிகளை களைவதற்கான கதையாடல்களும் கதாபாத்திரங்களும் உள்ளடக்கப்பட்டன.
 
அதே வேளை இலங்கை அரசையோ, யுத்தத்தையோ பேரினவாத்தத்தையோ விமர்சித்து தமிழில் திரைப்படம் மட்டுமல்ல ஒரு சாதாரண நாடகம் கூட போட முடியாது என்பது இன்றைய இலங்கையின் யதார்த்தம்
 
“மகாரஜ கெமுனு”  முற்றிலும் தமிழர்களுக்கு எதிரான ஒரு திரைப்படமென்று கூறிவிட முடியாது. ஆனால் அத்திரைப்படத்தின் உள்ளடக்கம் கூறும் அரசியல், சொல்லப்படும் காலகட்டம், திரைப்பட உருவாக்கத்தின் பின்னணியில் இருந்தோர், அதனைப் போற்றுவோர் என்வற்றை நோக்கும்போது இத்திரைப்படம் இன நல்லிணக்கத்துக்கு ஆதரவானதாக இருக்கமுடியாது. பாடநூல்கள் வாயிலாகவும், வாய்மொழி வழியாகவும் அறியப்பட்டிருந்த துட்டகைமுனு; இப்போது வெகுஜன காட்சிப்படுத்தலுக்கு ஊடாக ஜனரஞ்சகப்படுத்தி முன்வைக்கப்படுகிறார். நிச்சயமாக இது துட்டகைமுனுவின் மறு உயிர்ப்பு தான். இனத்துவேசத்தின் மறுவடிவம் தான்.
 

 

Edited by BLUE BIRD

  • 3 weeks later...

சிங்களவர் தம்கருத்தை மக்களுள் திணிக்க சிங்கள அரசியல் தலைமைகளும், தயாரிப்பாளர்களும் முன்நிற்பதைபோல ஈழத்தமிழருள் ஓர்திரைப்படத்தையோ குறும்படத்தையோ தயாரிக்க புலம்பெயர் உறவுகள முன்வருவது குறைவு என்பது வேதனையான விடையம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.