Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாச்சாரக்குழு - எரியாமல் தப்பிய நாட்குறிப்புகள் ஊடாக:- தேவ அபிரா:-

Featured Replies

கலாச்சாரக்குழு - எரியாமல் தப்பிய நாட்குறிப்புகள் ஊடாக:- தேவ அபிரா:-
02 பெப்ரவரி 2015
 
 

 

deva_CI.jpg

 

முன்குறிப்பு:

1989ம் ஆண்டளவில் தற்பொழுது கிழக்குப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் திரு ஜெயசங்கர் அவர்களுடன் நட்பு ஏற்பட்டது. அவரினதும் அவரின் நண்பர்களினதும் நாடகம் மீதான ஈடுபாடு என்னை நாடக அரங்கக்கல்லூரியை நோக்கி இழுத்துச் சென்றது. அக்காலப்பகுதியில் நாடக அரங்கக்கல்லூரியில் இருந்த திரு சிதம்பரநாதன் அவர்கள் பிற்பாடு விடுதலைக்கான அரங்கச் செயற்பாடு என்னும்  கருத்தியலுடன் செயற்பட ஆரம்பித்தார்.  ஆரம்பத்தில் நாடகக்களப்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கியசிதம்பரநாதன் நாடகக்களப்பயிற்சிகளினூடாக ஒன்றிணைந்த நாடகமற்றும் சமூக ஆர்வம் கொண்டவர்களை இணைந்துக் கொண்டுஒரு குழுவாக செயற்படத்தலைப்பட்டார். அக்குழுவில் தொண்ணூறுகளில் நானும் ஒருவனாக இணைந்து கொண்டேன். பத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட ஒரு அடிப்படையான அரங்கக்குழுவாக அது பரிணமித்திருந்தது.  ஆரம்பத்தில் நாடக அரங்கச் செயலாளிகளாக இருந்த எங்களுக்குநாங்கள் ஒரு கலாசாரக்குழுவாகப் பரிணமிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது.

இந்திய இராணுவம் வெளியேறிக் குடாநாட்டின் கணிசமான பகுதிகளும்   வன்னியின் கணிசமான பகுதிகளும் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்து புலிகள் பலமடையத் தொடங்கிய காலமது. இக்காலப்பகுதியில் ஒரு கலாச்சாரக்குழுவை அவர்களின் கட்டுப்பாட்டுப்பகுதியுள் உருவாக்க நாங்கள் முனைந்திருந்தோம். சிறுவயதில் இருந்தே நாட்குறிப்புக்களை எழுதும் பழக்கம் கொண்டிருந்த காரணத்தினால் இந்தக் கலாசாரக்குழுக்கால என் மனப்பதிவுகளையும் உரையாடல்களையும் அவ்வப்போது எனது நாட்குறிப்புகளில் எழுதி வந்திருந்தேன். இவ்வகையில் கணிசமான அளவு நாட்குறிப்புகள் என்னிடம் சேர்ந்திருந்தன. இக்காலத்தில் புலிகளின் அரசியலுடன் உடன்படாத ஆனால் தமிழ் சமூகத்தின் உண்மையான சமூக அரசியல் விடுதலையை நேசித்த பலர் வடக்கை விட்டு நீங்கிக் கொண்டிருந்தனர். அல்லது விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த நண்பர்கள் பலருடனும் எனக்கு நட்பு இருந்தது. எனது நாட்குறிப்புகளில் இது தொடர்பான பதிவுகளும் நிரம்பியிருந்தன. ஒரு கட்டத்தில்  விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு வலையத்துக்குள் வர நேர்ந்த போது ஏற்பட்ட அச்சத்தினாலும் கலாசாரக்குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகளால் வந்த மன அழுத்தத்தினாலும் எனது நாட்குறிப்புகளில் அனேகமானவற்றை எரித்து விட்டேன். அப்பொழுது எனது கவனத்துக்குத் தப்பிப் புத்தகங்களுக்குள் அகப்பட்டிருந்த சில நாட்குறிப்புகள் இப்பொது எனது கைக்கு கிடைத்திருக்கின்றன. அவற்றில் ஒரு பகுதியை உங்கள் முன் விரித்து வைக்கிறேன். இந்த இடத்தில் குற்றவுணர்வுடன் இன்னுமொன்றையும் நான் நினைவு கூர வேண்டும். எனது நாட்குறிப்புகளை எரித்த போது புலிகளால் தேடப்பட்ட எனது மிக நெருங்கிய நண்பன் ஒருவன் என்னிடம் பாதுகாத்துத்தரும்படி தந்த அவனது இளமைக்காலப்படங்களையும் சேர்த்து எரித்து விட்டேன். அவனுக்கும் எனக்குமிடையிலான நட்பில் நான் எரித்த அவனது நினைவுகளின் சாம்பல் பரவிக்கிடக்கிறது. அவனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டிய தருணம் இது.

கீழ்வரும் நாட்குறிப்புகள்  தெருவெளி நாடகம் ஒன்றை உருவாக்க முனைந்த நாட்களில் நிகழ்ந்தவைகளை எனது பார்வையில் முன்வைக்கின்றன. இவற்றுக்கு என்ன முக்கியத்துவம் இன்றைக்கு இருக்க முடியும்?  வாசிப்பவரைப் பொறுத்து முக்கியத்துவங்கள் மாறுபடும்.

தனிமனித மென்நய உணர்வுகளும் அரசியலும் கலந்திருக்கும் இந்த நாட்குறிப்புகளுள் முன்னுதாரணமற்ற முறையில் கலாசாரக்குழு ஒன்றை உருவாக்க முனைந்தமையின் இயக்கவியலைக் கண்டு கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

இங்கு விபரிக்கப்படும் ஒன்றுகூடல்கள் உரையாடல்கள் ஒத்திகைகளின் பின் தயாரிக்கப்பட்ட மானுடம் சுடரும் ஓர் விடுதலை என்னும் தெருவெளி நாடகம் கோப்பாயில் ஒரு கோவில் முன்றலில் முதன்முதலாக நிகழ்த்தப்பட்டது. எனது கைக்கு கிடைத்த நாட்குறிப்புகளில் நாடகம் அதன் கரு   அதன் அளிக்கைகள் தொடர்பான குறிப்புகளைக் காணவில்லை. இயல்பான அரசியல் ஈடுபாடு காரணமாக குழு உருவாக்கம் குறித்தே அதிகம் எழுதி இருக்கிறேன் என நினைக்கிறேன். சில வேளைகளில் குறிப்புகளை உதிரி ஒற்றைகளிலும் எழுதியிருந்ததால் அவை தொலைந்தோ எரிபட்டோ போயுமிருக்கலாம். எனது ஞாபங்களின் தேசம் பலஸ்தீனம்  போற் சிதைந்து கிடக்கிறது. இதை வாசிக்கும் போது தோன்றும் இடைவெளிகளில் உங்கள் கற்பனைக்குதிரைகளை ஓட விடும்படி கேட்பதைத்தவிர எனக்கு வேறு வழிகள் இல்லை.

30-09-1992

தெருவெளி அரங்கு ஒத்திகை நான்காம் நாள்  

மறந்து போனதால் சிதம்பரநாதன் சேர் நாடக ஒத்திகைக்கு வரவில்லை. எனவே ஒத்திகையும் நடைபெறவில்லை. சேர் வராத போது நாடகம் தொடர்பாக எதுவும் செய்ய முடியாமற் போவது வியப்பானதல்ல. அதையும் இதையும் பேசிக்கொண்டிருந்து விட்டுக்கலைந்து செல்லாமல் நாடக ஒத்திகையைச் செய்யும் நோக்கோடு ஐந்தரை மணிக்கு  மண்டபத்துள் வந்து வட்டமாக அமர்ந்தோம். (திருநெல்வேலி செங்குந்தா பாடசாலை மண்டபம் என்று நினைவு) முன் தயாரிப்புகள் எதுமற்ற வகையில் (improvising) ஒரு வீதி நாடகத்தைத் தயாரிக்கும் நோக்கத்துடனேயே நாங்கள் கூடியிருந்தோம்.

சேர் புற நிலையான வழிப்படுத்துனராக இருந்தார். அவர் வராதபோது குழுவில் இருந்த ஒருவர் வழிப்படுத்துனராக - தன்னியல்பாக வழிப்படுத்துனராக மாறக்கூடும் என நினைத்தோம். அப்படிச் செய்வோம் இப்படிச் செய்வோம் எனச் சில குரல்கள் எழுந்த போதும் எதுவும் சாத்தியப்படவில்லை. தேவன் வழிப்படுத்துவானென்று பார்த்தேன். அவனும் செய்ய முன் வரவில்லை. எங்களுக்குள் அக்கறையற்ற தன்மை ஒன்று நிலவவே செய்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கிருவின் உதவியுடன் சில நாடகப்பாடல்களைப் பாடிப்பார்த்தோம். அது நன்றாக இருந்தது.  கிருவும் சேர்ந்து பாடினான். தரன் தீர்த்தக்கரை ஓரத்திலே பாடலைப்பாடச் சொன்னான். கிரு பாடினான். நான் வைகரையில் வைகைக் கரையில் பாடும்படி கேட்டேன். கோபி தேவன் மற்றும் கரன்  ஆகியோர் எங்களைக் குழப்பினர் அல்லது நாங்கள் மூழ்கியிருந்த உலகத்துடன் தொடர்பற்றிருந்தனர்.

“ஆவியில் மேவிய செய்திகளை ஆசையில் உன்னிடம் கூற வந்தேன்”

கிரு மனம் உருக்கிப்படிப்பான். காதலின் துயரத்தை உணராதிருக்க ஒருவரால் எப்படி முடியும்?

இப்படி மாலைப்பொழுது முடிவுக்கு வந்தது.

01-10-1992

ஈரக்காற்று வீசுகிறது. காலணிகளுக்கிடையில் நிலம் சளக்கிடுகிறது.  சற்று முன்னர் தான் மழை ஓய்ந்திருந்தது. மழை முடிய நிலத்திலிருந்து கிளம்பும் ஆவி பூமியின் இதயத்தில் இருந்து வருவது போல இருக்கிறது. மழைக்காலம் இன்றுடன் ஆரம்பமாகிறது. துயரம் நிறைந்த கோடை முடிவது பூமிக்கு நல்லது.

ஒரு சோடி நுளம்புத்திரிகளை வாங்கிக் கொள்ளக் கரனிடம் 5 ரூபா காசு வாங்கினேன். வாங்கிக் கொண்டு அவனோடு உரையாடினேன். கொஞ்சம் தள்ளி  கிருஸ் தன்னுடைய சினேகிதர்களோடு கதைத்துக்கொண்டு  நின்றான்.

“ பொருளாதாரப்பிரச்சனைகள் இல்லையென்றால் நாங்கள் விரும்புற துறையில் முன்னேறுறது நல்லது கரன்”

அடிக்கடி குழம்புகிற மனநிலையைக் கரன் கொண்டிருக்கிறான்.

“ஆயுள் வேதத்தைப்படிச்சு முடிச்சுப் போட்டு முழுமனதோடை அதில உன்னால ஈடுபடமுடியுமோ” என்று அவனைக் கேட்டேன்.

ஆயுள்வேத வைத்தியம் படிச்சனான்தான் ஆனா இப்ப கொஞ்சநாளா குழம்பிப் போனன்  நாடகமா இல்லை ஆயுள்வேதமா எண்டு”

பிறகு தேன் சுரபிக்குள் தேனீர் குடிக்கப்போனோம். மல்லித்தேனீருக்கு வேண்டுதல் விடுத்து விட்டுக் கதைத்துக் கொண்டிருந்தோம்

“சும்மா இருந்தமெண்டா வாழ்க்கை அள்ளிக்கொண்டு போடும்” என்று நான் சொன்னேன்

2-10-1992

தெருவெளி நாடகம் ஒன்றை உருவாக முனைந்த ஆறாம் நாள் இன்று. பலர் தாமதமாக வந்ததனால்  ஒத்திகை நடைபெறவில்லை.

ஆயினும் கூடி இருந்து மனப்பகிர்வுகளைச் செய்வோம் என்று முடிவெடுத்தோம். ஒத்திகைக்கு வருவதென்று முடிவெடுத்த பின்னரும் அனேகமானவர்களுக்கு  வருவதற்கான மன உந்துதல் இல்லாமல் போவதற்கான காரணங்கள் என்ன என அறிவதே இந்த மனப்பகிர்வின் நோக்கம்.

நான்: “நாங்கள் இந்தச் சமூக வாழ்க்கையோடு ஒத்தோட வெளிக்கிடேக்கை எங்கடை போர்க்குணத்தை இழந்து விடுகிறோம். இந்த வாழ்க்கையோட எங்களை எப்படிப்பொருத்திக்கொள்ளுறது எண்டு யோசிக்கிறதுக்குள்ள நேரம் போயிடும். எனது மனம் தளம்பிக் கொண்டிருக்குது. நான் உயிர்ப்பாகவும் இல்லை.”

தேவன்: “எனக்கிருக்கிற பிரச்சனைகளுக்கு என்ன தீர்வெண்டும் என்ன செய்யிறதெண்டும் எனக்குத் தெரியேல்லை. என்ரை பிரச்சனை ஒண்டாயிருக்கு நாட்டுப்பிரச்சனையோ இன்னொண்டாயிருக்கு”

கரன்: “இங்கை நீங்கள் நாடகம் தொடர்பாக எதையாவது யோசிச்சு வைச்சிருப்பியள் சொல்லுறதைச் செய்வம் எண்டு வந்தனான்.”

மிகுதி நண்பர்களும் தங்களது மன உணர்வுகளைப் பகிர்ந்தார்கள்.

நண்பர்களின் மன உணர்வுப்பகிர்தலைத் தொகுத்துச் சாராம்சமாக்கினால் இரண்டு அம்சங்கள் மேலெழுந்து வருகின்றனவென்று  நான் சொன்னேன்.

முதலாவது அம்சம்:-  நாட்டில் முனைப்படைந்திருக்கிற இராணுவப்பிரச்சனைக்கும் எமக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது. விடுவிக்கப்பட்ட பிரதேசமாக இருப்பதால் நடைமுறை வாழ்வுப்பிரச்சனையே மேலெழுந்து இருக்கிறது. மேலும் இங்கு முனைப்படைந்துள்ள அரசியல் எழுச்சியுடன் மக்கள்  அறிவு பூர்வமாக இணைக்கப்படவில்லை.

இரண்டாவது அம்சம்:- பொறுப்புகளை மற்றவர்களிடம் விட்டு விட்டு ஏனோதானோ என்று இருக்கும் பண்பு. 

யுத்தம், பொருளாதாரநெருக்கடிகள் மனதுக்குப் பிடித்தமான துறைகளில் முன்னேறமுடியாமை பெண்கள் ஆணாதிக்கக் குடும்பச் சூழ்நிலைகளுக்குள் கட்டுண்டுகிடத்தல் உள்ளுறை படைபாற்றலை வெளிக்கொண்டு வராத கல்விமுறை, சமூகத்துள் விரவிக் கிடக்கும் அதிகார அடுக்குகள் போன்றவையே பல சந்தர்ப்பங்களில் எங்கள் மனப்பகிர்வுகளில் மேலெழுந்து வருபவையாக இருந்தன. இவையே இளைஞர்  சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள  ஆளுமைச் சிதைவுக்கு காரணமாகவும் இருக்கக்கூடும்.

குழுவிலுள்ளவர்களின்  மனப்பகிர்வுகளை  இன்னும் ஆழமாக ஆராயும் போது எனக்குத் தோன்றியவற்றைக் கூறினேன்

இன்றைய தமிழ்ச் சமூகத்தில் முன்று வகையானவர்கள் இருக்கிறார்கள்.

·         ஏற்கனவே நிலவுகிற சமூக அமைப்பின் பார்வையில் பெறுமதியானவை அல்லது கௌரவமானவை எனக்கருதப்படுகிற உயர் நிலைகளை அடைய விரும்புபவர்கள். (உயர்கல்வி வழியாகப் பட்டம் பெற்றுப் பதவியை அடைதல், தொழில்சார் தகைமையை அடைதல், வர்த்தகம் மூலம் பண ரீதியான உயர்நிலையை அடைதல் போன்றவை) கணிசமானவர்கள் இந்தத் தெரிவைச் செய்துள்ளனர்.

·         முனைப்படைந்துள்ள விடுதலைப்புலிகளின் விடுதலைப் போராட்டத்துள் தம்மை இணைத்துக்கொள்ளுகிறவர்கள். (இந்தப்போராட்டம் வீரம் மானம் மரணம் என மறப்பண்புகளை உயர்த்திப்பிடிக்கும் ஒன்றாக இருக்கிறது. இந்தத் தெரிவைச் செய்பவர்களின் தொகையும் வளர்ந்து வருகிறது. ஆனால் இவர்கள் நடைமுறைச் சமூகத்துடன் அறிவு பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தும் அரசியற் தெளிவைக் கொண்டிருக்கவில்லை.)

·         மேற்குறித்த இந்த இரண்டு தெரிவுகளையும் அறிவு பூர்வமாகவோ உணர்வு பூர்வமாகவோ ஏற்றுக்கொள்ளமுடியாத முன்றாவது வகையினர். இவர்கள் நடைமுறையில் உள்ள சமூக விழுமியங்களுடன் ஒத்துப்போகிறவர்களாகவும் இல்லை அதே வேளை வெறும் இராணுவக்கண்ணோட்டம் கொண்ட விடுதலைப்போராட்டத்துடன் தம்மை இணைத்துக்கொள்ள முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமன்றி வறுமைச் சுமையோடும் அன்றாடத் துயரங்களோடும் அல்லாடிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களும் இந்த மூன்றாம் வகையுள் அடங்குவர் எனக்கூறினேன்.அனேகமான நாடகக் குழு உறுப்பினர்களும் மூன்றாம் வகைக்குளேயே வருகின்றனர்.

எங்கள் உரையாடலில் மேற்கிளம்பிய அம்சங்களில் முக்கியமானதாக பொறுப்புகளை மற்றவர்களிடம் விட்டு விடும் மனப்பான்மையைதான் அதிகம் கவனம் செலுத்தி விவாதிக்க வேண்டியதாகச் சேர் கருதினார். உண்மையிலும்எல்லைப்புறங்களில் புலிப்போராளிகளைப் போராட விட்டு விட்டுத்தமிழ் மக்கள் தங்கள் பிரச்சனைகளில் மூழ்கியிருப்பதாக அவர்கருதினார்.

எமது சமூகத்தில் நிலவும், பொறுப்புகளை  மற்றவர்களிடம் விட்டு விடும் மனப்பான்மையைக் கூட ஒரு குற்றச்சாட்டாகமேம்போக்காக வைக்க முடியாது.  நமது சமூகத்தின் அரசியற், பண்பாட்டு மற்றும் பொருளாதாரக் காரணிகளை ஆராயாது இச்சமூக மனப்பான்மையைப் புரிந்து கொள்ள முடியாது. மேலும் நாட்டில் முனைப்படைந்துள்ள  அரசியற்பிரச்சனையை அலச முற்பட்டால் இனமுரண்பாடு, யுத்தம், புலிகளின் சனநாயகமறுப்பு மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றையும் கேள்விக்குட்படுத்த வேண்டிவரும். என்னைப்பொறுத்த வரை சேரிடம் காணப்படும் இந்தவகையான மேலோட்டமான ஆழமற்ற பார்வை நல்லதல்ல.

அனேகமான சந்தர்பங்களில் சேர் ஆழமான விவாதத்தைத் தவிர்த்து விட்டு எல்லாம் சரிவரும் என்ற நம்பிக்கையைத் தூக்கிப்பிடிக்கிறார்  என எனக்குப்படுகிறது.

21-10-1992

இரவு வந்தனா வீட்டுக்குச் சென்று  காயாவுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தேன் . ஐந்தாம் வகுப்புப்புலமைப்பரிசில் பரீட்சைக்காக காயாவைத்  தயார் படுத்தும் பொறுப்பு என்னுடையது. பிறகு வந்தனாவோடு கதைத்துக்கொண்டிருந்தேன். காயா வந்தனாவின் அக்காவின் மகள். வந்தனா எங்களோடு நாடகக் குழுவிலிருந்தாள். நாடக ஒத்திகைக்காக மட்டும் நாங்கள் சந்தித்துக்கொள்வதில்லை. வந்தனா குடும்பத்தோடு எனக்கு நல்ல நட்பும் உருவாகியிருந்தது. எனக்கு மட்டுமல்ல நாடகக் குழுவில் இருந்த அனைவருக்கும் அவர்களுடன் நல்ல பிணைப்பு இருந்தது.

வந்தனாவுடன் உரையாடும் போது அவள் முகம் தெளிவாகவும் நிதானமாகவும் இருந்தது. A/L இல் தமிழை ஒரு பாடமாகப்படிப்பவர்களுக்கு படிப்பிப்பதற்காக தன்னை அவள் தயாரித்துக்கொண்டிருந்தாள்.

ஒரு ஆர்வத்தில் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தைக் கேட்டேன். அது திருக்குறளில் தொடங்கி இரட்சணீய யாத்திரீகத்தில் முடிந்தது.  “ அப்பாடா”  என்றேன்

அருகில் இருந்த அருணா வந்தனாவின் தங்கை, நீங்களே ’அப்பாடா’ என்றால் படிக்கப்போற மாணவர்கள் என்ன செய்வினை என்றாள்.

“தொடர்ச்சியாகப்படித்துக் கொண்டிருக்கிறவர்களிடம் ஒரு ஓட்டமிருக்கும் அதாலை அவர்களால படிக்க ஏலும் நான் தான் எல்லாத்தையும் இழந்து போனன்” என்றேன்.

உங்களுக்கெல்லாம் கொலரைப்பிடிச்சு இழுத்து நல்ல அடிபோடவேணும். படிப்பைப்பற்றி உங்களோடை கதைச்சு என்ன பிரயோசனம் அதைவிடுவம் என்றாள் வந்தனா.

“ஏன் அதை விடுவம் என்கிறீர்கள் நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லலாம் தயங்கவேண்டாம். தயங்கினீங்கள் எண்டா அதுக்கு இரண்டு அர்த்தமிருக்கு  ஒண்டு நீங்கள் உரையாடிக்கொண்டிருக்கும் நபரில அக்கறை இல்லாமல் இருக்கிறியள் அல்லது சொல்லவந்ததைச் சொன்னால் எதிரில் இருப்பவர் நட்பை முறித்துக் கொண்டு விடுவார் எண்டு பயப்பிடுறியள்”

மனதில் நினைப்பவற்றைப் பரிமாறாமல் விடுவது நேர்மையற்ற தனம் என்று நினைத்தேன். அது நட்பை வளர்க்கத்தடையாக இருக்கும் என நினைத்தேன். மற்றபடி யாரில் அக்கறை கொள்வது அல்லது  கொள்ளாமல் விடுவது என்பது ஒருவரின் தெரிவு அதையிட்டு நானென்ன சொல்ல முடியும்

உரையாடல் ஒன்றில் பரிமாறப்படும் வசனங்களை வைத்து மனிதச் சிந்தனைகளை ஆய்வு செய்யும் என் குணத்தை உணர்வுகளை உளவு பார்க்கிற குணம் என்றாள் வந்தனா ’உது சரியோ பிழையோ எண்டும் எனக்குத் தெரியேலை’ என்றாள்.

உளவென்று அவள் சொன்னது வேதனையைத் தந்தது.

அவளுக்கு எனது பார்வையை விளக்க வேண்டி வந்தது.

அன்றைக்கு மத்தியானம் கிரியோடு உரையாடிய போது தாரா அக்காவைச் சுருதிப்பெட்டியைக் கொண்டு வந்து வீட்டில் வைக்குமாறு சொன்னதாக அவன் சொன்ன போது : “ ஆரேனும் பெடியளை கேட்டிருக்கலாமே ஏன் அவைக்கேட்டனீ சுருதிப்பெட்டி பாரமெல்லோ   ” என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. தாரா அக்கா வந்தனாவின் அக்கா. உடலாலும் உள்ளத்தாலும் மென்மையானவர். எனக்கு அக்காவாயிருந்த பெரியம்மாவின் மகள் யாழ்பாணத்தை விட்டுப்போனபின் அக்கா என்ற உணர்வு தரும் பாதுகாப்பையும் அன்பையும் தாரா அக்காவிடம் உணர்கிறேன்.

ஆரேனும் பெடியளைக் கேட்டிருக்கலாமே என்ற என்னுடைய வார்த்தைகள் என்னுடைய ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து வந்ததை பிற்பாடு உணர்ந்தேன். இப்படித்தான் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு கருத்தியலும் உளவியலும் இருக்கிறது. இப்படி எத்தனையோ அழுகி நாற்றமெடுக்கிற கருத்தியல்களும் உளவியல்களும் எங்களுக்குள் இருக்கின்றன. எங்களுடைய மனங்களைச் சுத்தப்படுத்த வேண்டுமென்றால் இந்த நாற்றங்களின் ஊற்றுக்களைக் கண்டுபிடிக்கத்தானே வேண்டும். இது மனித மனங்களை உளவு பார்ப்பதாக ஆகுமா? எங்களுடைய எண்ணங்களை நாங்களே பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதைப்பலரால் சீரணிக்க முடிவதில்லை.

பிறகு எங்களுடைய உரையாடல் அன்றைய நாடகக் குழு விவாதத்தை நோக்கித் திரும்பியது.

அவளுடனான உரையாடல் அறிவுபூர்வமானதாகவும் தமது உணர்வுகள் குறித்த தன்னம்பிக்கை  கொண்ட இருவர் சந்திக்கும் போது இருக்கிற  இறுக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் உணர்ந்தேன்.

இன்றைய நாடகக் குழு (கலாச்சாரக் குழு) உரையாடலில் காதல் தொடர்பாக குழு எடுத்த முடிவு எனக்கு என்ன விதங்களில் உடன்பாடானதாக இல்லை என்பது குறித்து விளக்கமாக உரையாட முடியவில்லை

அவளது வீட்டுச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளவேண்டிய தேவை எனக்கிருக்கிறது. தனது வீட்டுக்காரரைப்பற்றி அவள் எனக்கு தன்னம்பிக்கை அளித்து எதைப்பற்றியும் வெளிப்படையாக உரையாடலாம்  என்ற போதும் அவர்களைப்பற்றி எனக்கும் ஓரளவு தெரியும் என்ற போதும் என் மனம் தயங்கிக் கொண்டது.

மனித உறவுகளுக்குள் உள்ள எல்லைக் கோடுகளை முற்போக்கானவர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் கூட மீற முடியாமல் தமது எண்ணங்களை மனதுக்குள் வைத்து அவித்துக்கொண்டிருக்கும் போது ஒரு கலாசாரக்குழுவில் உரையாடப்படும் விடையங்களை வீட்டில் பெற்றொர் முன் வைத்து உரையாடுவது அவர்களின் உணர்வுகளைச் சோதிப்பதாக அமைந்து விடுமோ என்று  பட்டது.  நாங்கள்  உரையாடிக்கொண்டிருந்த போது வந்தனாவின் அம்மா  அந்த அறையில் இருந்து அவதானித்தபடிதான் இருந்தார் ஆனால் அவரது அவதானிப்பு மிக மிக நாகரீகமாக இருந்தது.

குழுவுக்குள் ஏற்படும் காதல் தொடர்பாக குழு எடுத்துக்கொண்ட முடிவும் அம்முடிவை நாங்கள் வந்தடைந்த முறைமையும் ஆரோக்கியமற்றதாகப்பட்டது; தூர நோக்கற்றதாகப்பட்டது. குழுவுக்குள் இருக்கிற இருவர் காதலித்தால் அதனைச் சமூகம் பிழையாகப்பார்க்கும். அது குழுவின் நலன்களுக்கு ஆபத்தானது குழுவை அது சிதறடிக்கும் என்பது சேரின் பிரச்சனை. அவ்வாறு குழுவுக்குள் இருக்கிற இருவர் காதலித்தால் அவர்கள் குழுவை விட்டு வெளியேறி வெளியே சென்று எங்களுடன் நண்பர்களாக இருக்கட்டும் என்கிறார் சேர். சேர் காதலை மறுக்கவில்லை ஆனால் கடந்த காலங்களில் இப்படியான காதல் பிரச்சனைகளால் தான் நாடகவேலைகளைச் செய்வோரால் ஒரு குழுவாக இயங்க முடியாமற் போனதாகக் கருதுகிறார்.

காதலிக்கிற இருவர் குடும்பமாகிப்போவதால் பொது வாழ்வில் ஈடுபடமுடியாமல் போகிறது என்றும்  குடும்பம் ஒன்றுக்குரிய நிர்ப்பந்தங்களைச் சுமக்க வேண்டி ஏற்படுகிறது என்றும் கருதப்பட்டது.

இன்னுமொரு பிரச்சனையும் இருந்தது இப்படியான நாடக அல்லது கலாசாரக் குழுவில் ஈடுபடும் பெண்கள்  அல்லது ஆண்கள் “ மாப்பிளை பிடிக்க அல்லது பொம்பிளை பிடிக்கத் தானே உங்கை போயின ” என்றவாறான கதைகளும்  எங்களது சமூக வட்டத்துள் உலவின. கலாசாரக்குழு ஒன்று உருவாகும் போது அது எதிர்கொள்கிற பல்வேறு புற அழுத்தங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மேற்குறித்த கதை.

ஒரு குழு நீண்ட காலம் சீவிக்க வேண்டும் என்பது உண்மைதான். இந்தச் சீவிப்புக்கு குழுவுக்கென்றொரு நோக்கம் இருப்பது முக்கியமானது. மேலும் அந்தக்குழுவில் உள்ளவர்களிடத்தில் அந்த நோக்கம் ஊடிச் செறியவும் வேண்டும். இதற்காக  நாங்கள் எமது குழுவின் நோக்கங்கள் தொடர்பான ஆழமான நீண்ட விவாதங்களைச் செய்ய வேண்டுமே ஒழியக் காதலித்தால் குழுவாக வேலை செய்ய முடியாமல் போகுமென்று நினைத்து மனித உணர்வுகளை நசுக்குவது பிழை என்று நினைக்கிறேன்.

மானுட விடுதலைக்கு தனிமனிதரின்  சுதந்திரத்தையும் அதன்வழி  மனிதர்களின் கூட்டுணர்வையும் கூட்டுழைப்பையும் உறுதிசெய்வதே தேவையானதென்று நினைக்கிறேன்.

குழு நிலைப்பட்ட கூட்டு வேலைக்கு  செல்வது காதலிக்கவே என்பதும் காதலிப்பவர்கள் குழுவுக்குள் இருக்க முடியாது என்பதும் அடிப்படையில் நடைமுறையில் உள்ள சமூக விழுமியங்களை ஏற்றுக்கொள்வது என்பதாகவே அமையும். நாங்கள் நாடக்குழுவாக இருந்து கலாசாரக்குழுவாக பரிணமிக்க விரும்புவர்களாக இருக்கிறோம். கலாச்சாரக்குழுவாக வருவதன் நோக்கம் நடைமுறையில் இருக்கிற சமூக விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்தவே. எனவே  நாங்கள் இந்தச் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களிடம் என்ன திட்டம் இருக்கிறது? மேலும் நாடகக் களப்பயிற்சிகள், தெருவெளி அரங்க நிகழ்வுகள்  படச்சட்ட மேடை அரங்க நிகழ்வுகள் என்ற முன்று வழிமுறைகளினூடாகவே நாங்கள் எங்கள் நோக்கங்களை அடைய வேண்டும். தவிர வேறு என்ன வழி இருக்கிறது? இந்தச் சமூகத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் கருத்தியல்களுடன் மோதவும் தேவைப்படுகிற பலத்தை அரங்கச் செயற்பாடுகள் மட்டுமே தருமோ? அரங்கச் செயற்பாடுகள் நடைமுறை உலகுடன் முரண்பாடு கொள்கிற மனிதர்களை அடையாளப்படுத்தித் தரும் ஆனால் இது போதுமோ?

எங்களது செயல் திட்ட வடிவங்களில் ஒன்றான தெருவெளி அரங்கு உடனுக்குடன்  எரியும் பிரச்சனைகள் தொடர்பானதென்பதால் யுத்தம் தொடரும் மட்டும்  தெருவெளி அரங்கை (street play) உயிர்ப்பாகச் செய்ய வேண்டும் ஆனால் அதன் வெற்றியும் தோல்வியும் விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாட்டுடனும் தொடர்புபட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளும் தம்மைப் புரட்சிகரமான அரசியல் அமைப்பாக வளர்த்துக்கொள்ளும்  சாத்தியங்களைக் கொண்டவர்களல்ல. மேலும் அனேகமான நாடகக்குழு உறுப்பினர்களிடையே விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாடு தொடர்பான ஆழமான பார்வைகளும் இல்லை.  இவை எல்லாமுமே கலாசாரக்குழு ஒன்றின் உருவாக்கத்தினைப் பாதிக்கிற விடையங்கள்.

இந்த நிலையில் எங்களால் செய்யக்கூடியது எங்கள் கொள்ளவுக்குரிய வேலைத்திட்டங்களைச் செய்வதும் அங்கு வரும் பிரச்சனைகள் தொடர்பான ஆழமான விவாதங்களைச் செய்வதும் மட்டுமே.

ஒரு பிரச்சனை வரும் போது அது குழுவைப்பாதிக்கிறதே குழுவை உடைக்கப்போகிறதே என அச்சம் கொள்வதற்கு முன்னர் அப்பிரச்சனையின் அடிப்படைகள் என்ன என்று யோசிக்க வேண்டும். அந்தப்பிரச்சனைகள் தொடர்பாக குழுவிலிருப்பவர்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிய வேண்டும். இவை குழுவினுள் நன்கு விவாதிக்கப்படவேண்டும். இந்த விவாதத்தினூடாக குழுவில் உள்ள அனைவரும் கருத்துத் தெளிவொன்றை அடையவேண்டும். இந்தத் தெளிவினூடாகப் பொதுவான முடிவொன்றை எட்டவேண்டும். இதுவே பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிமுறையாக (Problem Sloving Method) இருக்கும். இவ்வாறு இல்லாத பட்சத்தில்  உறுப்பினர்களின் சிந்தனைகள் பல்வேறு திசைகளில் இருக்கும். எனவே குழுவை உடையாது பாதுகாப்பதற்காக எல்லோருக்கும் பொதுவான விதி ஒன்று உருவாக்கப்படும். (குழு வேண்டும் என்றால் விதி வேண்டும்)  தன்னளவில் விருப்பமில்லாத  ஒன்றுக்காகத் தானே தெளிவடையாத ஒன்றுக்காக வேலை செய்ய அல்லது தன்னையே இழக்க வேண்டிய நிர்ப்பந்தம் விதிகளின் மூலம் ஏற்படுத்தப்படுகிறது.  குழுவாக இணைந்து வேலை செய்வதனால் உருவாகும் நட்புணர்வும் இந்த நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளச் செய்ய உதவுகிறது. சிலவேளை விதிகளை மீறுகிறவர்கள் வெறுக்கப்படுகிறவர்களாகவும் ஆகிறார்கள். கொள்கைத் தெளிவு ஒன்றை ஏற்படுத்தாமல் உருவாக்கப்படுகிற விதிகள் மனித உணர்வுகளையும் உயிர்களையும் நசுக்குவது என்பதற்குமேல் எந்தப்பலனையும் தருவதில்லை. தெளிவு பட்ட நோக்கம் ஒன்றை நிறைவேற்றுவதற்காக குழு வளரவேண்டும் என்பதற்காக பிரச்சனைகளை எதிர்கொண்டு ஒருவர் தன்னை இழப்பது தியாகம்.

எங்களது கலாசாரக்குழுவின் ஒழுக்கக் கோவை அல்லது விதிகள் தொடர்பாக நாங்கள் இன்னும் இறுதியான முடிவுக்கு வரவில்லை.

எங்களது தனிப்பட்ட  நலன்களையும் ஆசைகளையும் எள்ளளவும் விட்டுக் கொடுக்க விரும்பாத தன்மையும் எங்களிடம் இருப்பதையும் உணர்கிறேன். இந்தக்கலாச்சாரக்குழுவின் எதிர்கால வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக ஒடுக்குமுறைச் சமூகத்தின் பெறுமானங்களை கேள்விக்குட்படுத்தல் என்பது இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த வகையில்தான் இக்குழுவுடன் நான் என்னை அடையாளம் காண விரும்புகிறேன்.

இந்தக்குழுவின் நோக்கங்கள் சாதிக்கப்படுவது கீழ் வரு விடையங்களில் தங்கியிருக்கிறது.

●    அரசியற் சக்திகள் (அரசு ,புலிகள்)

●    குழுவில் உள்ளவர்களின் செயல் முனைப்பு

●    குழுவில் உள்ளவர்களின் தத்துவார்த்த மற்றும் அரசியற் தெளிவு

●    நாங்கள் வாழும் சமூகத்தின் முற்போக்கான மற்றும் பிற்போக்கான குணாம்சங்கள்

●    குழுவுக்கான பொருளாதரம்

●    குழுவினது படைப்பாக்க மற்றும் கலைத்திறன்களின் வளர்ச்சி

 

28-10-1992

இரவு காயாவுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்போனேன். தாரா அக்கா இல்லை. அவவோடை கதைக்க வேணும் போல இருந்தது. தாரா அக்காவின் கையெழுத்து மணி போல அழகாக இருக்கும். எனது கவிதைகளை அவரது கையெழுத்தில் எழுதித் தரும் படி கேட்டுக் கொடுத்திருந்தேன். இன்றைக்கும் எழுதிய மூன்று கவிதைகளை அவரிடம் எழுதக் கொடுப்பதற்கென எடுத்துச் சென்றிருந்தேன். வந்தனாவுக்கு எனது கவிதைகளைக் காட்டினேன். வாசித்த பின் ஒரு கவிதையைக் கடுமையாக விமர்சித்தாள். அவநம்பிக்கையுடன் சுருங்கிபோகிற ஒருவன் அக்கவிதையில் இருப்பதாக அவள் சாடினாள். தன் நண்பர்களில் ஒருவன் அவநம்பிக்கையுடன் இருப்பதை விரும்பவில்லை ஏன் அனுமதிக்கவே முடியாதென்றாள்.

அக்கவிதை அவநம்பிக்கை தருவதுதான் ஆனால் அதுதானே யதார்த்தமாக இருக்கிறது வாழ்க்கை நடைமுறையைப் புரிந்து கொண்டால் அவநம்பிக்கையை வெல்லலாம் நிகழ்காலத்தை அனுபவிக்கலாம் என்பது அவள் வாதம். ‘ எதிர்காலத்துக்கு காத்திருந்து அழிஞ்சு போடா’ என்றாள். அவளது ஆளுமை அவநம்பிக்கை என்னைச் சூழப் போர்த்தியிருந்த  திரையைக் கிழிப்பதை உணர்ந்தேன்.

பிற்பாடு எமது உரையாடல் எங்கள் குழு விவாதங்கள் பற்றித் திரும்பியது.

குழுவில் நிகழும் உரையாடல்களில் நான் ஏற்கனவே விழுங்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில் பேசுவதாகவும் அது விளக்கமற்றதாகவும் நடைமுறைச் சார்பற்றதாகவும் இருப்பதனால் மற்றவர்கள் பயம் கொள்கிறார்கள் என்றாள்

“உனக்குள்ள  குழந்தைத்தனம் இருக்கு  ஆனால் நீ அதை மறைச்சுக் கொண்டு வேணுமெண்டே பெரிய மனிசத்தனத்தோடை இருக்கப்பார்கிறாய். ஒண்டு குழந்தையாகவே இரு அல்லது பெரிய மனிசனாகவே இரு இரண்டுக்குள்ளையும் ஓடித் திரியாதே” என்றாள்

நீ சொல்லுறது சரிதான் தாரா அக்காட்டையும் இதைப்பற்றிக்கதைச்சிருக்கிறன். ஆனா ஆரிடம் தான் குழந்தைத்தனமும் பெரிய மனிசத்தனமும் இல்லை? நான் பல சந்தர்ப்பங்களில் ஒரு குழந்தையாக இருக்க விரும்புறன். 

அவள் கதைத்துக்கொண்டிருந்தபோது நான் அவளைப் பார்க்கவில்லை சின்னச் சிம்னி விளக்கின் சுடரைப் பார்த்தபடி இருந்தேன்.  அவள் என்னை மூடி நான் போர்த்தியிருந்த திரைகளைக் கிழித்து உள் நுழைகிற  சந்தோசத்தை அனுபவித்தபடி இருந்தேன். அவளோ என்னை விமர்சித்து எனக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.  இப்படியான ஒரு நட்பைத்தான் நான் எல்லா நண்பர்களிடமும் விரும்பினேன். இரவு என்னிடம் அவள் உரையாடிய கணங்களில் அவளிடமிருந்த ஆளுமையை நான் நேசித்தேன்.. 

இப்படி ஒரு விமர்சனத்தை அவளிடம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தேனென்று கூறினேன்.    என்னுள் குமைகின்ற பிரச்சனைகளில் பெருமளவை உடன் தீர்க்க முடியாது எனினும் அவை பற்றி அறிவு பூர்வமாகச் சிந்திக்கும் வலுவை அவளுடனான உரையாடல் தந்தது. அவள் மடியில் கிடந்து ஐயோ என்று அழவேண்டும் போலிருந்தது.  பெரிய மனிதன் போல ”நிரம்ப பிரயோசனமாக இருந்தது” எண்டு மீண்டும் சொல்லியபோது ”பார்ரா திரும்ப பெரிய மனிசன் போல” என்றாள்.

இவளை நான் தனிமனிதனாகச் சந்தித்திருக்கலாம் அல்லது சந்திக்காமலேயே விட்டிருக்கலாம் என ஏனோ அடிக்கடி உணருகிறேன்.  இவளுடனான நட்பு என் அக்கா என் அண்ணா என் நண்பன் என்பது போல என்றாவது ஆகுமோ? நான் என்னை வெளிப்படுத்திய அளவுக்கு அவள் தன்னை எனக்கு வெளிப்படுத்தவில்லை. என்னைப்பற்றிய முழு நம்பிக்கை அவளுக்கு இன்னமும் இல்லாதிருக்கலாம்.  இன்னமும் இன்றைக்கு எனக்கு சொல்ல முடியாத உணர்வுகளால் அலைப்புண்டு மௌனமாக இருக்கலாம்.  அவளின் வார்த்தைகளை விடவும் விழிகளில் இருக்கும் செய்தி மௌனமாக இருக்கிறது. என் வெளிப்படைத்தன்மையாலும் நேசத்தால் அவள் விழிகளைக் கௌரவப்படுத்துவதைத்தவிர என்ன செய்ய முடியும்?  காலம் அவளை என்னிடம் இருந்து பிரிக்கும் என்ற ஆழ்மன உணர்வு ஒன்று ஒவ்வொரு கணமும் இருந்த படி உள்ளது.

29-10-1992

உண்மையிலும் குழு ஒன்றினுள் அது எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பற்றி ஆழமாக விவாதிக்கப்படாது எடுக்கப்படுகிற முடிவுகள்  ஆபத்தானவை.  ஆழமாக விவாதித்தல் என்பது என்ன? குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆழமிருக்கும்.  ஒவ்வொருவரும்  வேறுபட்ட அறிவு மற்றும் சிந்தனை நிலைகளையும் கொண்டிருப்பர்.   எனவே ஆரம்பத்தில் இவர்களுக்கிடையில் சமநிலையான கருத்துப் பகிர்வை நடத்துவது சாத்தியமற்றதாக இருக்கும். ஆரம்பத்தில் குழுவிலுள்ளவர்களைப் பிணைத்திருக்கக்கூடியது நட்பு மட்டுமே. வேறுபட்ட சமூகத் தாக்கங்களுக்கு உட்படுகிற இவர்களுக்குள் நட்பு என்பது என்ன அர்த்தத்தில் இருக்கச் சாத்தியமிருக்கும்? அன்றாட வாழ்க்கையில் ஏற்படுகிற இன்ப துன்பங்களிலும் தேவைகளிலும் பரஸ்பரம் பங்கெடுப்பதாக  இருக்கும்  இந்தப் பங்கேற்புக்கூட ஒரு எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும். நட்பு என்பதில் இருந்து கோட்பாட்டு ரீதியான ஒன்றிணைவுக்கு செல்வது இலகுவானதல்ல.

வாழ்க்கை நிலமைகளும் தேவைகளும் மனித மனங்களை பொது நோக்கத்துக்கான ஒன்றிணைவை நோக்கி வளர விடுவதில்லை. எனவே நாங்கள் எங்கள் சூழ்நிலைகளையும் மீறி மனரீதியான வளர்ச்சியொன்றை எட்ட வேண்டியவர்களாகிறோம்.

30-10-1992

இன்றும் தெருவெளி அரங்குக்காக கூடினோம். Improvisation முறையில் உருவாக்கப்பட்ட நாடகத்தை  மேலும் மெருகூட்ட முயன்றோம். முதலில் warming up உடன் ஆரம்பித்தோம். இசையுடன் கூடிய உடற்பயிற்சிமனத்தளர்வுப்பயிற்சி,மனஒருமுகப்பயிற்சி போன்றவற்றை உள்ளடக்கியது இந்த warming up.

இன்றைக்கு நாடக அங்கத்தவர்களின்  ஈடுபாடு மிக முக்கியமானது.  உருவாகி வரும் தெருவெளி அரங்கின் வடிவத்தையும் அதன் கலைத்துவத்தையும் கருத்தையும் மெருகூட்ட வேண்டும் எனவே எங்கள் உள்ளுறை படைப்பாறல்களை வெளிப்படுத்துமளவுக்கு warming up இல்மனமொருங்கி  ஈடுபடும்படி சிதம்பரநாதன் சேர் சொன்னார். உண்மையிலும் இப்படியான warming up க்குப் பிறகு நாங்கள் எங்களை மூடியிருந்த திரைகளை விலக்கி உயிர்ப்புள்ளவர்களாக வருவது சாத்தியமாகி இருந்தது. நீண்ட கால நாடகக்களப்பயிற்சிகள் எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்திருந்தன. உற்சாகமாகவும் உயிர்துடிப்பாகவும் தெரிவு செய்த கதைக்கருவுடன்  ஈடுபாடான இடைத்தாகத்தைக் கொண்டிருக்கும் போது புதிய படிமங்களும் வெளிப்பாடுகளும் இயல்பாக வரும் என்று சேர் கூறினார். கரன் ஓரளவுக்கு அந்த நிலையை எட்டியிருந்தான்.  நாடகத்தில் தமிழர்களின் தற்பெருமையை வெளிபடுத்தும் பாத்திரமொன்றிற்குரிய உடல் மொழியைக் கண்டு பிடித்துச் செய்து காட்டினான்.

01-11-1992

இன்றைக்கு உப குழுக்கள் தொடர்பான உரையாடல் நிகழ்ந்தது. குழுவில் உள்ள நண்பர்களுக்கிடையில் தோன்றும் அதிருப்திகளும்  அடைய வேண்டிய நடைமுறை இலக்குகள் தொடர்பாக முரண்பாடுகளும் தோன்றும் போது குழு  ஒன்றுக்குள் தன்னியல்பாக உப குழுக்குள் தோன்றுகின்றன.

திறந்த விமர்சனத்துக்கான தளம் உருவாக்கப்படும் வரை உப குழுக்கள் தவிர்க்கவியலாதபடி தோன்றியபடியே இருக்கும். நட்புணர்வில் குறித்த இருவர்  மூவருக்கிடையில் தோன்றுகிற வேகமான நேச வளர்ச்சியை உபகுழுக்களாக உடனே கருத முடியாது.  அவர்கள் உருவாகும் பிரச்சனைகளை- தம்முள் உரையாடப்பட்ட பிரச்சினைகளை மறைக்க முயலும் போது தான் உபகுழுவாகின்றனர்.  இந்த மறைத்தல் கூட மற்ற நபர்கள் மீதான நம்பிக்கையீனத்தில் இருந்துதான்  வருகிறது. நட்பையும் அதன் வழி எழுகிற ஆழமான உணர்வுப் பரிமாறல்களையும் எல்லோருக்கும் விரிக்க வேண்டும் என்பது புரிந்து கொள்ளப்படக்கூடியது எனினும் அது மட்டும் ஒரு குழுவைக் கட்டிவளர்க்கப் போதாது. உணர்வுரீதியாக மட்டும் மனிதர்களை நெருங்கச்செய்வது ஆபத்தானது. இந்த வகையில் நண்பர்களிடையே ஏற்படும்  சிறு அதிருப்தி கூடக் குழுவை உடைக்குமளவுக்கு வளர்ந்து விடும்.  இணைகிற நண்பர்கள் யாவருக்கும் இடையில் பொது நோக்கம் ஒன்றை இனமறிவதற்கான நீண்டதும் ஆழமானதுமான கருத்துப் பரிமாற்றங்கள் நடாத்தப்படவேண்டும். அதற்கான தளத்தையும் சூழலையும் நட்பு வழங்கும் மறுபுறம் இனம் காணப்பட்ட பொது நோக்கத்தை அடைவதற்கான பாதையில் வரும் இன்ப துன்பங்களில் பங்கேற்கும் போது நட்பு இனமறியப்பட்டு வளரும். பொய்யான முகங்கள் அம்பலப்படும். ஆனால் எல்லோருக்கிடையிலும் நட்பு என்பதை ஒரு குழுவின் கலாசாரமாக வளர்க்க முடியுமா? வளர்க்க வேண்டுமா? ஒரு குழுவினுள் பொது நோக்கத்தையும் குழுவின் செயற்பாட்டையும் பாதிக்காத இயல்பான சரியான மனிதப் பண்புகளுக்கான வெளி எப்படி இருக்கும்? எனக்குத் தெரியவில்லை. எங்கள் குழுவுக்கும் தெரியவில்லை.

நிரம்ப யோசிக்க வேணும்.  முடிந்தவரை இந்தக் குழுவுடன் நின்று எனக்குச் சரி எனப் படுபவற்றுக்காகப் போராடுவேன்.  பயம் கொண்டு ஓடவேண்டியதில்லை. ஆனால் அவதானமாகச் செயல்படவேணும்.  மனிதமனங்களைப் புண்படுத்தாமலும் அரசியல் நெருக்கடிகளைத் தாங்கிக் கொண்டும் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லியும்…  முடியுமா என்னால்? 

பிற்குறிப்பு:

இவ்வாறு உருவான கலாச்சாரக்குழுவில் இருந்து நான் 1993 இன் நடுப்பகுதியில் வெளியேறிப் படிப்பதற்காகக் கொழும்பு சென்றேன். எனது வெளியேற்றத்துக்கு பெருமளவுக்கு தனிப்பட்ட பொருளாதாரக்காரணங்களும்,   குழுவின் அரசியல் நிலைப்பாடும் காரணமாக இருந்தது. விடுதலைப்புலிகளின் அரசியல் வறுமை குறித்த எனதும் இன்னுமொரு உறுப்பினரதும் பார்வை அனேகமானவர்களுக்கு உடன்பாடானதாக இருக்கவில்லை. கலாசாரக்குழுவொன்றின் நோக்கம் வெறும் மண்மீட்பு என்பதாக இருக்க முடியாது என்று நானும் இன்னுமொரு நண்பனும் கருதினோம்.  ஆனால் குழு உருவாக்கம் என்றளவில் சனநாயகப்பண்புகளுடன் கூடிய உரையாடலை அக்கலாசாரக்குழு கொண்டிருந்தது என்பதை நினைவு கூருகிறேன். பின்னர் வேறுசிலரும் குழுவில் இருந்து வெளியேறினர். ஆனால் அனேகமானவர்கள் தொடர்ந்து செயற்பட்டதுடன் புதியவர்களும் இணைத்துக்கொண்டனர் பின்னர் இக்கலாசாரக்குழு பொங்குதமிழ்ச் செயற்பாடுகளை முன்னெடுக்குமளவுக்கு சென்றது வரலாறு. ஆரம்பத்தில் இருந்தே இக்கலாசாரக்குழுவில் பணியாற்றிய பொங்குதமிழ்ச் செயற்பாடுகள் வரை இணைந்திருந்த ஒரு நண்பர் பின்னாளில் உரையாடிய போது பின்வருமாறு கூறினார்: “ நீயும் உன் நண்பனும் குழுவில் உரையாடி உணர்த்த முற்பட்ட விடையங்களை இப்பொழுது நான் புரிந்து கொள்கிறேன்.”

எந்தவொரு படைப்பாளியும் இனம் மதம் மொழி பால் மற்றும் வர்க்க எல்லைகளுக்குள் நிலவுகிற அனைத்து அதிகாரங்கள் பற்றிய  புரிதல் இல்லாமல் இருக்கும் போது தனது அடிகளில் சறுக்கிவிடுகிறார்.

தேவ அபிரா

30-08-2014

நன்றி: காலம் சஞ்சிகை

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.