Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தீவில் அரசியல் மாற்றத்தின் பின்னணியும் மக்களும் : புதிய திசைகள்

Featured Replies

தமிழ் தேசத்தின் மீதான வெற்றியை நிலைநாட்டிய சிங்கள தேசத்தின் வீரன் நவீன துட்டகெமுனுவாகிய ராஜபக்ச தேர்தல் தோல்வியின் பின் பெட்டி பாம்பாக அடக்கப்பட்டிருப்பதை சிங்கள தேசமும் ஏன் இலங்கை தீவு முழுவதும் வியப்புடன் பார்த்து நிற்கிறது. அனைத்து ஆதிகாரங்களையும் கையில் கொண்டிருந்த சர்வாதிகாரி, அரசின் மையங்களில் முழு செல்வாக்குடனும் அரசாங்கத்தை தங்களது குடும்பத்தின் முழுகட்டுபாட்டிலும் வைத்திருந்த ராஜபக்ச குடும்பம், ஒரு தேர்தல் தோல்வியின் பின்; இன்று "எங்களை அநியாயமாக தண்டிக்காதீர்கள், வெளியே சுதந்திரமாக நடமாட விடுங்கள்" என்று கோரிக்கை வைக்கும் நிலையில் இருக்கிறதென்றால் இது இலங்கைதீவின் சாதாரண நடைமுறையல்ல.

தேர்தல் காலத்திலும் சரி தேர்தலின் பின்பும் சரி அரசியல் கொலைகளும் கலகங்களும் கூடவே இராணுவப் புரட்சி அச்சுறுத்தல்கள் ஒருபுறமும்; திட்டமிடப் பட்ட மற்றும் தான் தோன்றித் தனமான சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் ஒரு புறமும்; சிங்கள பெளத்த பேரினவாத அமைப்புகளின் இனவாத முழக்கங்களுடன் தமிழ் பேசும் மக்கள் மீதான அராஜகங்கள் இன்னொரு புறமாகவும்; பெளத்த பிக்குகளின் உரிமை மறுப்புக் கூச்சல்களும், சிங்கள பெருந்தேசிய புத்தி ஜீவிகளின் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மீதான உரிமை மறுப்பு ஆதரவு போதனைகளும் தான் இதுவரை சிங்கள பெளத்த பிரிவில் இருந்து நாம் கண்டு வந்துள்ளோம்.

தமிழ் பேசும் தரப்பின் தலைமைகள், தமது சொந்த மக்களுக்கு அவர்களது உரிமைகள் சார்ந்து உன்னதமான கோரிக்கைகளையும் வாய்சவடால்களையும் முன்வைத்து அம்மக்களை எமாற்றி வந்திருப்பதையுமே நாம் காலாகாலமாக பார்த்து வந்திருக்கிறோம்.

புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கத்தின் விபரங்களை வெளியிடாத சிங்கள அரசு இன்று ராஜபக்ச குடும்பம் கொள்ளையடித்த பணம் மற்றும் சொத்துக்களின் விபரங்களை உடனுக்குடன் பகிரங்கப்படுத்தி வருவதும் வியப்பூட்டுவதாகவே இருக்கிறது. மிகக்குறுகிய காலத்திலேயே தமிழ் பேசும் மக்களுடனான அதிகாரப்பகிர்வு தொடர்பாக பேச ஆரம்பித்திருப்பதும், காணாமல் போனோர் தொடர்பான விவரங்கள் சேகரித்தல், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான பரிசீலனைகள் என்பன பெளத்த சிங்கள அரசின் பொதுவான குணாம்சங்களை வெளிப்படுத்துவதாக இல்லை. இலங்கையரசின், ஆளும் வர்க்கத்தின் இவ்வகை பெளவியத்தின், பதுங்கலின் உள்ளடக்கம் தான் என்ன? பேய் அமைதியாக இருக்கிறதென்றால் அதை பூதம் விழுங்கி விட்டது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா?

உலக வரை படத்தில் ஒரு மூலையில் இருக்கும் சிறு தீவு தனக்கென ஒரு தனித்தன்மையை இதுவரை பேணிவந்துள்ளது. சிங்கள தேசத்தின் இருத்தல் என்பது திட்டமிட்ட அதன் தொடர்ச்சியான ஒரு ராஜதந்திரத்திலேயே இது வரை தங்கியிருந்திருக்கிறது. இந்தியாவை அயல் நாடாக கொண்டிருப்பதில் சர்வதேச அளவில் இலங்கை பெற்ற முக்கியத்துவமும் அதே நேரம் இந்தியாவின் தலையீட்டையும் ஆதிக்கத்தையும் தவிர்ப்பதில், வினையாற்றியதில் உலக அரசியல் சதுரங்கத்தில் சிக்குண்டதும் நிகழ்ந்திருக்கிறது.

பிரித்தானிய ஆட்சி காலத்திற்கு பின் எப்பொழுதும் இந்திய அரசின் ஒருவகை ஆதிக்கத்துகுட்பட்டே இலங்கை இருந்து வந்துள்ளது. சீனா, மேற்குலகு, அமெரிக்கா ஆளுமைகள் காலத்திற்கு காலம் மாறுபட்டு வந்துள்ளன. சீனாவின் உலகு தழுவிய பொருதார ஆளுமையை எதிர்கொள்ளும் அமெரிக்க மற்றும் மேற்குலக கூட்டு யுத்ததை வியாபாரமாக்கி ஜனநாயகத்தின் பெயரில் படுகொலைகளை செய்கிறது.

வட ஆபிரிக்காவில் இருந்து மத்திய கிழக்குவரை ஜனநாயகம், சர்வாதிகார ஒழிப்பு என்ற பெயரில் அரச எதிர்ப்பு அணிகளுக்குள் ஊடுருவி அல்லது செல்வாக்கு செலுத்தி மக்கள் காலா காலமாக வெளிப்படுத்தி வந்த சர்வாதிகார எதிர்ப்பு அலையை பயன்படுத்தி மிக இலகுவாக தமது சார்பு அரசுகளை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். ஈராக் என்னும் நாடு உலக வரைபடத்தில் இன்று சன்னி, சியா, குர்திஸ் என மூன்று நாடுகளாக வரையப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். இஸ்ரேல் என்னும் அமெரிக்காவின் வளர்ப்பு நாய் அப்பகுதியை கட்டுபடுத்துவதற்கு போதுமானதாக இல்லாத நிலையில் அப்பகுதியில் நிலவும் முஸ்லீம் மதவெறி பிரிவை ஊக்கிவித்து ஐ.எஸ் போன்ற காட்டுமிராண்டி பிரிவுகளை வளர்த்து அப்பிராந்தியத்தை அமெரிக்க மேற்குலகு கூட்டு கட்டுப்படுத்தி வருகின்றது.

ஈரான்,ஈராக்,சிரியா ஆகிய நாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் ஐ.எஸ் வகை குழுக்கள் பயன்படுகின்றன. அவர்கள் வளர்க்கும் வெறி நாயை அவிழ்த்து விடுவதும் அதன் அட்டூளியங்களை வைத்து அது சார்ந்த சமூக மக்களை இழிவுபடுத்துவதும் அதே நேரம் அவ்வெறி நாயை கட்டுப்படுத்துபவர்களாக வந்து அப்பிரதேசங்களில் ஆளுமை செலுத்துவதுமாக நவீனவகை ஆளும் யுக்திகள் பிரயோகிக்கப்படுகிறன.

ஆப்கானிஸ்தானை நீண்டகாலம் ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்க மேற்குலக அரசுகள் இந்தியாவை படிப்படியாக தமது கூட்டாளியாக்கியிருப்பது தெளிவாகியிருக்கிறது. இந்தியாவும் இவ்வகை கூட்டினூடாக தனது வளர்ச்சியையும் சீனாவுடன் ஒரு வகை போட்டியையும் நிகழ்த்த முடியும் என்று கருதுவதாகவே தெரிகிறது. இந்தியாவின் பொருளாதார திட்டமிடலில் இயங்கும் மொறிசியஸ் நாட்டில் மேற்குல நாடுகளின் மூலதனங்களும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளும் இந்தியாவின் பிராந்தியத்தில் அது எவ்வகை அணுகுமுறை மாற்றங்களை மேற்கொள்கின்றது என்பதை புரிந்து கொள்ள உதவும். இதன் அர்த்தம் இந்திய அரசு தனது பழைய ரஷிய பங்காளியையோ சீன அயலவரையோ முழுமையாக பகைத்து கொண்டுவிட்டதாக அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. பனிப் போர் காலந்தொட்டு, இந்திய அரசு வரலாறு முழுவதும் இவ்வகை சந்தர்ப்பவாத அரசாகத்தான் இருந்து வருகிறது.

அமெரிக்க மேற்குலகின் தென்கிழக்கு ஆசியாவிற்கான இராணுவ, அரசியல், பொருளாதார நகர்வின் இருபெரும் நடவடிக்கைகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு மற்றையது இந்தியாவுடனான சமரச உறவு. இப்பிராந்தியத்தில் இவ்வகை ஆளுமைக்குத் தடையாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், பாகிஸ்தானில் கட்டுப்பாடற்ற தலிபான் செல்வாக்கு அல்லது மதவாதக்குழுக்கள், இந்தியாவில் மாவோயிஸ்டுகள், இலங்கையில் புலிகள் விளங்கியிருந்தனர்.

ஆப்கானிஸ்தான் மீதான முழுமையான ராணுவ படையெடுப்பு தலிபான்கள் மற்றும் பாகிஸ்தானில் செல்வாக்கு செலுத்திய குழுக்களை ஒடுக்குவதற்கு வழிசமைத்தது. கிறீன் ஹன்ட் என்னும் இந்திய மாவோயிஸ்டுகள் மீதான திட்ட மிட்ட அழித்தொழிப்பு அவர்கள் எதிபார்த்த வெற்றியை தரவில்லை. மக்களின் வாழ்முறையுடன் இணைந்த போராட்டங்களை எளிதில் முறியடித்து விடமுடியாது என்பதை மலைவாழ் மக்களுடன் இணைந்த இந்திய மாவோயிஸ்டுகளின் போராட்டம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. இலங்கையில் புலிகள் பேச்சுவார்த்தை, சமாதானம், ஊடுருவல், உள்முரண்பாடுகளை வைத்து பிளவுபடுத்தல் என்னும் தந்திரங்களாலும், இதே சதிகார அரசுகள் இந்திய, இலங்கையரசுகளுடனான கூட்டுறவுடன் புலிகளை அழிப்பதற்கான முழுவேலையையும் செய்து கொண்டே புலிகளின் நண்பனாகவும் இருந்தபடி புலிகளை அழித்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசியாவின் மீதான ஆக்கிரப்பின் தடைகள் இவ்வகையில் நீக்கப்பட்டிருப்பினும், தமிழ் தேசத்தின் மீதான வெற்றியின் நாயகனாக்கப்பட்ட ராஜபக்சவின் அரசாங்கமும், தமிழகத்தில் தமிழீழ, தமிழக தேசியத்தில் அரசியல் அதிகாரம் செய்து கொண்டிருந்த ஜெயலலிதா அரசும் இவர்களின் இச்சந்தை விரித்தலுக்கு தடையாக இருந்தனர். தமிழகத்தில் நிறுவப்பட்ட "அம்மா" நிறுவனங்களின் ஆதிக்கங்களும், அரசியல் இலாபத்திற்காக ஜெயலலிதா பயன்படுத்திய தமிழீழ,தமிழக தேசிய நலன் சார்ந்த கோரிக்கைகள் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டாக அரங்கேற்றப்பட்டு பதவியிறக்கப்பட்டார்.

புலிகளை வென்று தருவதில் இந்திய அமெரிக்க மேற்குலகின் கூட்டாளியாக இருந்த ராஜபக்ச இலங்கையை பங்குபோடுவதில் அவர்களுக்கு ஒரு வசதியான கூட்டாளியாக இருக்கவில்லை. அவரது அரசாங்கத்தின் சீன சார்பும், குடும்ப சர்வாதிகார ஆட்சியும் அவர்களது முழுமையான ஆதிக்கத்திற்கு பெரும் தடையாக இருந்தது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் தொடர்பான திட்டமிடல் மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஒன்றகவே கருத இடமுண்டு. இலங்கையில் யாப்பு மாற்றம், சகல அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றம், ஜனாதிபதி முறை ஒழிப்பு என்பதான கோரிக்கைகளுடன் சந்திரிகாவை முன்னிறுத்தி இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் பலமுகவர்கள் பிரச்சாரம் செய்தனர்,செயலாற்றினர். தன்னார்வ குழுக்களும், முகவர்களும் களத்தில் இறக்கபட்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இவ்வகை அரசியல் காய்நகர்த்தல் சந்திரிகா,ரணில்,சம்பந்தன் எனும் தலைமைகளுக்கூடாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

1978ம் ஆண்டிலிருந்து இலங்கை மக்கள் மீதான அத்தனை அடக்குமுறைகளுக்கும் குறிப்பாக சிங்கள பெளத்த அதிகார வர்க்கம் தமிழ் பேசும் மக்கள் மீது நிகழ்த்திய சகல அடக்குமுறைகளும் பிரதான கருவியாக இருந்த இந்த ஜனாதிபதி ஆட்சி முறை தொடர்பான கேள்வி என்பது சிங்கள பெளத்த ஆளும் பிரிவின் ஒரு பிரிவிற்கு பிரச்சனையாக வரும் பொழுது மட்டும்தான் எழுகிறது. ஆக இலங்கையின் ஆழும் பிரிவின் ஒருபகுதியின் தேவையும் அமெரிக்க மேற்குலக இந்திய கூட்டின் தென்கிழக்காசிய ஆக்கிரமிப்பின் நோக்கமும் இணைந்த இடம்தான் இலங்கையில் நடந்த ஆட்சிமாற்றம் எனலாம்.

எது எப்படி இருந்தபோதும் சிங்கள தேசத்தில் தமிழ்தேசத்தின் மீது வெற்றி வாகை சூடிய ராஜபக்ச "மன்னனிற்கே" வெற்றி கிடைத்துள்ளது. சிங்கள மக்களின் மீதான ராஜபக்ச அரசின் ஒடுக்குமுறைகளும், ஊழல் மற்றும் குடும்ப கொள்ளைகள் அனைத்தையும் மீறி சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் ராஜபக்சவை ஆதரித்துள்ளனர். தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பான சிங்கள தேசத்தின் இவ்வகை அறிவிப்புகளை தமிழ் பேசும் மக்கள் மிக உன்னிப்பாகவும் உறுதியாகவும் புரிந்து கொள்ளவேண்டும்.

தென்கிழக்கு ஆசியாவில் உலக அதிகார மையங்கள் உருவாக்கும் அரசியல், மூலதன ஆதிக்கத்திற்கேற்ற சாதகமான சூழல் எவ்வகையில் சிங்கள,தமிழ்பேசும் மக்களை பாதிக்கப்போகிறது என்பது எம் அனைவரதும் மிக முக்கியமான பிரச்சனை. பெளத்த சிங்கள பேரினவாதம் இவ்வகை புதிய சூழலில் வீரியம் குறைந்து போகுமா அல்லது வீரியம் குறைக்கப்படுமா? வீரியம் குறைந்து போவதற்கான வாய்ப்புகள் தற்காலத்தில் இல்லை, ஆனால் அதனை பயன்படுத்தும் முகமாக அதன் வீரியம் குறைந்தது போன்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டு சிங்கள தேசம் கொண்டிருக்கும் இரட்டை தேசங்களில் ஒன்றான சிறீலங்கா என்னும் போலி தேசத்திற்கான அடிப்படைகள் அதிகமாக்கப்படும்.

சிங்கள மக்கள் மீதான சிறீலங்கா அரசின் சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் மூடிமறைக்கும் ஆயுதம் தான் சிங்கள பெளத்த இனவாதம் என்பதையும், அவர்கள் ஒரு ஒடுக்கும் தேசத்தின் பிரஜைகள் என்பதையும் புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கலாம். ஆனால் தமிழ் பேசும் மக்கள் மேலான தேசிய இன ஒடுக்குமுறையின் கதியில் சிங்கள மக்கள் தங்கள் தேசத்தையும் அந்நியருக்கு தாரைவார்த்து விட்டார்கள் என்பதுதான் உண்மை.

தமிழ் பேசும் தேசிய ரீதியில் ஒடுக்கபடும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைமைகள் அனைத்தும் இலங்கை ஆளும் பிரிவுடனும் அமெரிக்க மேற்கத்தைய இந்திய கூட்டுடனும் முழு ஒத்துழைப்புடன் இணைந்த வேலைத்திட்டதுடன் இயங்கும் நிலையில் தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் ஒட்டு மொத்தமாக மக்களின் அரசியல் உரிமைகளை விலைபேசி விற்று விட்டார்கள் என்பது தெளிவாகிறது. குறிப்பாக, இந்திய அரசின் வழிகாட்டுதலில் இயங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அமெரிக்க மேற்கத்தைய கூட்டு திட்டத்துடன் இணைந்துள்ள நிலையில் எதிர்பார்த்தபடி தமிழ் மக்களின் தேசியம் சார்ந்த அனைத்து உரிமைகளையும் அடகு வைத்துள்ளனர். தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதிப்படுத்துவதற்கான தகுதியையும் இந்த அரசியல் "சாணக்கியர்கள்" இழந்தவர்களாகிறார்கள்.

வெளி சக்திகளால் இலங்கை மக்களுக்கு தரப்பட்டுள்ள புதிய வாழ்முறையும், அரசியல் தேர்வும் இத்தீவின் தேசிய இன முரண்பாட்டில், தேசிய இன ஒடுக்குமுறையில் பாரிய வேறுபாட்டை தோற்றுவிக்குமா? சமூகங்களுக்குள் இருக்கும் மாறுபாடுகளை கூர்மைபடுத்தியோ அல்லது அதை தமக்கு வசதியான தளத்திற்கு மாற்றியோ கையாள்வதென்பதும் சாத்தியமான தளங்களில் புது முரண்பாடுகளை அடையாளம் கண்டு ஊக்கிவிப்பது அல்லது புது சக்திகளை உருவாக்கி சமூகத்தை குழப்பி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நிகழ்வுகளைதான் நாம் வரலாறு முழுவதும் பார்க்கிறோம்.

இலங்கையில் உருவாகியுள்ள இன்றைய சூழலும் இதிலிருந்து பெரிதாக மாறிவிடப்போவதில்லை. பெளத்த சிங்கள பேரினவாதம் திருப்தி அடையக்கூடிய ஒரு நவீன ஒடுக்குமுறைவடிவம் பாதுகாக்கப்படும். பிரிவினை கோரிக்கைகளற்ற சிங்கள மக்கள் விரும்பும் சிறீலங்கா என்னும் அவர்களது கற்பனை தேசியம் காப்பாற்றப்படும். சலுகைகள் அல்லது தேசிய அபிலாசைகளுக்கு இணையான உரிமைகள் என்பதான போலி உரிமைகள் வழங்கப்பட்டு தமிழ் பேசும் மக்கள் எமாற்றப்படுவர் அல்லது திருப்தி கொள்ளவைக்கப்படுவர்; ஏன் ஒருவகையில் இடித்துரைக்கப்படுவர்.

ஐக்கிய தேசிய கட்சி, சிறீலங்கா சுதந்திர கட்சி என்பன ஒரே அரசியல் தளத்தில் வந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிக்கான வெற்றிடமும், தீவிர சிங்கள பெளத்த தேசிய அரசியலுக்கான வெளியும் தோன்றியுள்ளது. புரட்சி வாதிகள் என்ற போர்வையில் அப்பட்டமான தேசிய ஒடுக்குமுறை அரசியலையும், சிங்கள இனவாதத்தையும் தன்னகத்தே தெளிவாக கொண்டுள்ள ஜேவிபி மற்றும் அதன் பரம்பரைகளும் இனவாத புத்திஜீவிகளும் தான் இவ்வெற்றிடத்தை நிரப்பும் நிலையில் உள்ளவர்களாக தெரிகிறது. ஜேவிபியின் புத்திஜீவிகள் பிரிவு இதற்கான வேலையை ஏற்கனவே ஆரம்பித்து விட்டிருக்கிறார்கள்.

மைத்திரியின் வருகையின் பின் விலைவாசி குறைப்பும் போக்குவரத்து வசதிகளுமே தமக்கு விடுதலையை தந்து விட்டதாக சில தமிழ் தரப்புகள் இன்றே உணர ஆரம்பித்திருக்கும் பரிதாப நிலை தான் இன்றைய ஜதார்த்தம். குறிப்பாக தேசிய விடுதலைக்காக போராடிய தமிழ் மக்கள் ராணுவ சுற்றாடலில் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட ஆனால் ஆளும் பிரிவிற்கு சேவகம் செய்யும் தலைவர்களினால் ஆளப்படுவர்; காட்டிக்கொடுக்கப்படுவர். கிடைத்திருக்கும் உரிமையே உங்களுக்கு பெரிதுதான் திருப்தி அடைந்து கொள்ளுங்கள் என்னும் செய்தி தெளிவாக அறிவிக்கப்படும்.

சலுகை பெற்ற தேசிய இனமக்களாக சிங்கள மக்கள் இருகின்ற போதும் அவர்கள் மீதான மேலாதிக்க சக்திகளின் சுரண்டலும் ஒடுக்குமுறையும் குறைந்து விடப்போவதில்லை. சக தேசிய இன மக்கள் மீது அவர்களது பெயரில் நடத்தப்படும் எந்த நவீனவகை ஒடுக்குமுறையும் அவர்களை நிம்மதியாக வாழவிடப்போவதில்லை.

கால காலமாக அனைத்து ஒடுக்குமுறைகளையும் குறிப்பாக தேசிய இன ஒடுக்குமுறையையும் சந்தித்து வரும் தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் இவ்வகை நவீன ஒடுக்குமுறை வடிவங்களுக்கான தமது எதிப்பு வடிவங்களை கண்டறிந்து போராடுவர் என்பதுதான் வரலாறு. உலக ஆளும் பிரிவுகள் வரலாற்றில் இருந்தும்,, நிகழ்காலத்தில் இருந்தும் எவ்வாறு எம்மை ஆளுவதற்கு பாடம் கற்றுக்கொள்கிறார்களோ அணி சேருகிறார்களோ அதேவகையில் ஒடுக்கப்படுபவர்கள் தமக்கான போராட்ட தற்காப்பு வழிகளை கண்டறிவதும் இன்று மிக அவசியமாகிறது. இத்தனை அழிவுகளையும் கடந்து வாழ்ந்து வரும் ஒடுக்கப்படுபவர்களாகிய நாம் புதிய சூழலில் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயலாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்.

புதிய திசைகள்: 07/02/2015

[url=https://www.facebook.com/puthiyathisaikal.nds/posts/450606368429555:0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.