Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகரமுதல்வனின் கவிதைகள் புலம்பெயர்ந்த வெளியில் நின்று ஈழத் தேசியத்தின் உரிமைகளைப் பாடுகிறது – கவிஞர் குட்டிரேவதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவித்துவமான வார்த்தைகளும் கலையம்சம் நிரம்பிய செயல்களும் சமூக விடுதலைக்கு எதிரானவை என்று தமிழர்களுக்கு எங்கோ அடிப்படையில் ஒரு சந்தேகம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறை விடுதலைப் பாடலுக்கான தன் எழுச்சியையும் இச் சந்தேகத்துடனேயே கடந்து போகிறான். அல்லது, தனக்குத்தானே இறுமாப்புடன் கவிஞன் என்று கூறிக் கொள்கிறான்.இரண்டிலும் நிரம்பிய சிக்கல்கள் தாம் விடுதலைக்கான வேகத்தை மட்டுப்படுத்துகின்றன என்று கொள்ளலாம் .

கவிதையெங்கும் அர்த்தம் சலித்த வார்த்தைகளை நிறைத்து வைக்கும் காலகட்டம் இது போல. அதாவது முன்னமே பலர் எழுதியதை மீண்டும் மீண்டும் எழுதிப்பார்த்து தாகத்தை ஆற்றிக் கொள்ளுதல்,அதே வார்த்தைகளை அடுக்கு மாற்றி கவிதை என எழுதிப் பார்த்தல்,

 424321_354045148035712_2031368207_n.jpg

பிரச்சார நெடியுடன் முழக்கங்களுடன் வரிகளை ஆக்குதல் என சமீபகாலமாகக் கவிதை செய்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது .ஆனால் “கவிஞன்” என்ற அடையாளம் கூறும் செயற்பாட்டில் எந்தப் பின்னடைவுமே இல்லை. அதிலும் இம்மாதிரியான தமிழகத்தின் எழுச்சியான விடுதலை நிரம்பிய தருணத்தில் மொழியிலும் உணர்விலும் ஊக்கம் பெற்ற பலர் எழுத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் கவித்துவமான வார்த்தைகளும் கலையம்சம் நிரம்பிய செயல்களும் சமூக விடுதலைக்கு எதிரானவை என்ற சந்தேகம் வலுத்துவிட்டதாலோ என்னவோ நாம் “உண்மையான கவிதைகளின்சமூகச்செயற்பாட்டை”விரிவாகச் சிந்திப்பதுமில்லை உரையாடுவதுமில்லை.

ஈழத்திலிருந்து எழுந்த கவிதை அலை தான் தமிழகக்கவிதையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன்.மந்ததனத்தோடும் சொகுசுத்தன்மைகளோடும் வாழ்ந்து வரும் தமிழக மக்களுக்கு போர் என்பது வன்முறை என்பதும் எதிர்ப்புணர்வு என்பது ஈழக் கவிதைகள் வழியாகத் தான் தமிழகத்திற்கு எப்பொழுதுமே கடத்தப்பட்டிருக்கிறது.தொடக்கத்தில் எழுத வந்த ஈழப்பெண் கவிகளின் பங்கும் பெருமளவு இருந்திருக்கிறது. தமிழக இலக்கிய வரலாற்றை,ஈழக் கவிதைகளின் தாக்கம் பற்றி அறியாமல் எழுதினால் அதற்கு தொடக்கமும் இருக்காது போக்கும் இருக்காது என்பது என் பார்வை.

சட்டிக்குள்ளேயே அகப்பையின் உலகம் கண்டு எழுதும் தமிழ்க்கவிதை மொழி வீரியமாக தமிழ்ப் போக்கை நிறுவ முடிந்ததில்லை. இயல்பாக அறச்சீற்றம் கொண்ட ஒருவன்,தன் தொடர் மொழி நுகர்ச்சியாலும்,சுய விடுதலையை சமூக விடுதலையாகக் காணும் இடத்திலும் கவிதையைக் கண்டடைகிறான்.அப்படி அத்திப் பூத்தாற் போல கவிஞர்கள் தோன்றி எந்தக் கவி அதிகாரமும் வேண்டாது சமூக மறைவில் தொடர்ந்து கவிதைகளை எழுதிக் கொண்டே தான் இருக்கின்றனர். என்றாலும் தமிழகத்தில் கவிதை என்பது ஜோடனைகளாலும்,’நான் கவிஞன் பார்!’என்ற சுய அகந்தையாலும் நிறைந்தது.இன்னும் சொல்லப்போனால்,இலக்கிய ‘Manipulations’\ தொக்கணங்களால் ஆனது.

நான் அறிந்த மட்டும் கவிதையின் சமூகப் பங்களிப்பு தமிழகத்தைப் பொறுத்தவரை ‘Tissue Papers’க்கு இணையானதே.

இந்தச் சூழலில் அகரமுதல்வனின் கவிதைகள் வாசிக்க கிடைத்த பொழுது இன்னொரு ‘மொழிக்களம்’ என்றே உணர்ந்தேன் .

‘எவையெல்லாம் இழந்தோமோ அவையெல்லாம் மீட்க வேண்டும்’ என்ற முதல் கவிதை தான் ஒட்டுமொத்தத் தொகுப்பின் அடிப்படை கோரலாகவும் இருக்கிறது.

எல்லா கவிதைகளுமே  தேச விடுதலையையும் இனி உரிமையையும் பேசுகின்றன.

இதற்கு முன்பு ஈழக் கவிதைகளில் நாம் கண்ட துயரின் குரல் மட்டும் அல்லாது,அகரமுதல்வனை அங்கமாகக் கொண்ட இந்தத் தலைமுறை எழுச்சியைக் கொண்டுள்ளது .

‘முடிச்சுகள்’ என்றொரு கவிதை .

கல்லடிபட்ட நாயாகவே

அலறியபடி ஓடிக் கொண்டிருக்கிறது

மனசு

முடிவுகள் முரணாகுமோவென்ற

அச்சத்திலேயே

முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலிருக்கின்றன

நள்ளிரவின் அமைதியை

நண்பகலிற்கூட  உணரமுடிகிறது

சத்தங்கள் அற்றுக் கிடக்கும்

எனது பகல் பொழுதுகள்

எச்சிலினால் வலை பின்னி

இரை காணும் சிலந்தி

எனைப் பார்த்து சிரிக்கிறது

நம்பிக்கை இல்லாதவன் என

முடிச்சுகளோடு முரண்பட்ட படி

நான் மட்டும் தனியறையில்

எல்லோரும்  தம் அக உலகத்தினுள்ளேயே  மூழ்கிக்கிடப்பதும் அங்கிருந்து  ஊற்றெடுக்கும் சொற்களை நம்பிக்கொண்டிருப்பதும் இக்காலச் சமூகத்தின்  முதல் முரண் .

சொற்களை ,கவிதையை  அதன் வழியாக சமூக எழுச்சியை ,பிரக்ஞையை  நகர்த்திப் போகும்  திறனும் வீரியமும் இல்லாமல்  சொற்களைச் சலித்துக் கொண்டிருக்கையில் உயிர்களும் சொற்களைப் போல் மரணமெடுக்கும்.

பிரிவு

ஒரு கணம்

குண்டு விழுந்த நிலம் போல

மனம் சிதறியது

உடைந்து போன கண்ணாடித்

துகள்களின் மேல்

நான் நடப்பதுவாகவே உணர்ந்தேன்

கண்களின் அனுமதியில்லாமல்

கண்ணீர் பெருக்கெடுத்தது

ஒரு கண்ணீர் சுனாமியாய்

நாங்கள் சேர்ந்திருந்த

வினாடிகள் அத்தனையும்

வரம் பெற்றிருக்க வேண்டும்

பள்ளிக்கூடம் ,மைதானம் ,கல்விநிலையம்

கோவிலென எல்லா இடத்திலும்

இப்போதெப்பெடி பிரிந்து கொள்ள முடியும் ?

நான் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்

பிரிவின் மரண வலியை

அந்தப் பேருந்து யன்னல்

கம்பியோடு சேர்த்து

அகரமுதல்வனின் காதல் வரிகள் மிகவும் எளிமையாக கவிதையாகிவிடுகின்றன. இங்கே நான் கவிதை உத்தியையோ தொழில்நுட்பத்தையோ வைத்துக் கவிதையை  எடை போடவில்லை .

மாற்றாக ,அகரமுதல்வனின் காதலுக்கும் அத்தகைய கவிதைக்கும் இடையே எந்த இடைவெளியும் இல்லை .மாறாக,அவர் எழுதியிருக்கும்  அரசியல் விடுதலைக் கவிதைகளுக்கும் அவருக்கும் இடையே நிறைய கருத்தியல் இடைவெளிகளும் ,அரசியல் சுவர்களும் இருப்பதை உணரமுடிகிறது .

ஈழம் என்பது  நம் எல்லோருக்கும் ஓர் அரசியல் திணை.தமிழன் இன அடிப்படையில் கொல்லப்படுவது,இந்திய நிலப்பரப்பில் சாதியின் அடிப்படையில் வடிவமைக்கப்படுவதை நாம் உணரவேண்டும். இந்திய தேசியமா ,தமிழ் தேசியமா  ஈழத் தேசியமா என்ற  வரையறைகளுக்கும் புரிதல்களுக்குமிடையே நம் சொற்கள் கண்ணீராய்  உகுத்துக் கொண்டிருக்கின்றன.எனில் , அகரமுதல்வனின் கவிதைகள் புலம்பெயர்ந்த வெளியில் நின்று  ஈழத் தேசியத்தின் உரிமைகளைப் பாடுகிறது .பல சமயங்களில் அதன் பண்பாட்டு வெளிகளைஅடையாளப்படுத்துகிறது,நுட்பமாய் பதிவு செய்கிறது .அகரமுதல்வனின் ‘அத்தருணத்தில் பகைவீழ்த்தி ‘ தொகுப்பின் கவன ஈர்ப்பாக நான் உணர்வது இதைத் தான் .இது ஈழக் கவிதைகளில் மிகவும் முக்கியமான சவாலான ஒரு பொருளே .அதை அகரமுதல்வன் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலும் தெளிவாகச் செய்திருக்கிறார் .

ஓர் இனப்படுகொலை நம் எல்லோரின் வாழ்வு ,மரணம் பற்றிய உணர்ச்சிகளையும் நம்பிக்கைகளையும் சலித்துப் போகச் செய்திருக்கிறது .அரசியலின் பகடையாட்டத்திலும் இன ஒடுக்குமுறையின் ஏய்ப்பிலும் மொழி பற்றிய நம்பகத்தன்மையும் கேள்விக்குரியதாகி இருப்பதை உணரமுடிகிறது.என்றாலும் ,அகரமுதல்வன் போன்றோரின் கவிதைகளில் நிறைந்து கிடக்கும் எழுத்து பற்றிய அறிவுபூர்வமான நம்பிக்கையை எளிதாகவோ,விளையாட்டாகவோ எடுத்துக் கொள்ளமுடியவில்லை .நூலெங்கும் தன் நிலம்,மக்கள்,போர் பற்றிய முழக்கங்களும் கொந்தளிப்புகளும் எழுச்சிகளும் நிறைந்திருக்கின்றன.ஈழம் என்ற புலத்திற்கு எழுத்தின் வடிவில் நியாயம் செய்யும் கவிதைகள் !

“ஈழம்” என்பது பேருரு கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில்,அது தொடர்பான மாணவர் போராட்டமாகட்டும்,ஒரு சுவரொட்டியாகட்டும்,ஒரு தீக்குளித்தலாகட்டும்எதுவென்றாலும் அது நம் உணர்வுகளோடு தொடர்புடையது என்பதால் எதுவுமே நமக்கு முக்கியமாகிறது.இந்நிலையில் ‘கவிதை’ என்பதை அறிவுபூர்வமான சிந்தனைத் தெளிவுகளை உணர்ச்சியின் வடிவில் வெளிப்படுத்துவதே என்ற கூறு ஏற்றுக்கொள்ளப்படும் எனில் அகரமுதல்வனின் ‘அத்தருணத்தில் பகைவீழ்த்தி’என்ற கவிதைத்தொகுப்பு அதை வாசிக்கும் என் பயணத்தில் எத்தருணத்தில் கவிதையாகிறது,எத்தருணத்தில் கவிதையாகத் தவறியது என்ற தேடலுக்குப் பதில் தெளிவுபடுத்தி விட்டு கவிதையின் அரசியலுக்குள் செல்வது சரி என்று நம்புகிறேன்.இது அகரமுதல்வனுக்கும் எனக்கும் ஒரு சேர உதவக் கூடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

அயராத மொழி வளம் மிக்க அகரமுதல்வனின் எழுத்து,மண்ணின் விடுதலை வேட்கைக்கான விசையுடன் தான் உணர்ச்சிகள் ஓங்க பாடிக்கொண்டே இருக்கிறது.பெரும்பான்மையும் அதன் பாடுபொருள் “தேசியம்” என்பதால் மட்டுமன்று,அதன் கூறுகளான,வன்முறை,போர்,மரணம்,மனிதர்கள் மறைந்து போவது,தொலைந்து போவது, பசி,துணிவு,உரிமை,விடுதலை,பகை,உறவின் தனித்த கூறுகளும் அடையாளங்களும் என்பதாலும் இவற்றின் கூட்டுத்தொகை தான் தேசியம் என்பதாலும் அதன் உணர்ச்சிகள் பெரிய குரல் எடுக்கிறது.

சுடுகாடு போகிறார், அத்தருணத்தில் பகைவீழ்த்தி

கலையம்சமும் கவித்துவமும் இல்லாத வார்த்தைகள் காலத்தின் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுவது வேதனைக்குரிய விவாதப் பொருள்.ஏனெனில் மேலே கூறப்பட்ட தன்மைகள் அற்று கவிதைகள் தொடர்ந்து எழுதப்படுவதும் அணுகப்படுவதும் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

“தேசியம்”என்பதற்கு பொது வரையறை உண்டுமோ என்ற சந்தேகம் கூட எனக்கு எழுகிறது. எம் ஆளுகைக்கு எம் நிலத்தை விட்டு விடுங்கள்,அதில் எம் பண்பாட்டையும்,பாடுபொருள்களையும்,உரிமைகளையும் பேணிக்கொள்கிறோம் என்ற உரிமை கோரலே ஈழத்தைப் பொறுத்தவரை “தேசியம்’ என்றாகிறது. ஒடுக்கப்பட்டோர் மரணத்திலிருந்து திமிறி வந்து நிகழ்த்தும் உரிமைப் போர்.

ஒரு நல்ல கவிதையில் வார்த்தைகள் மறு அர்த்தம் பெறவேண்டும் .

ஈழம் என்பது தமிழர்களின் அரசியல் உரிமையாக ஆகும் இடத்து,கவிதையை அதன் எல்லா வடிவத்திலும் நாம் திருத்தி நேர் செய்ய வேண்டியிருக்கிறது.அப்பொழுது தான் அதை ஒரு நியாயமான ஆயுதமாகவும் பயன்படுத்த முடியும்.

மொழி,நடை,உணர்ச்சி வேகம்,வடிவம் எல்லாவற்றிலும் நவீனத்துவத்தைச் செழுமைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

கலைவடிவங்கள் எல்லாமே எடுப்பார் கைப்பிள்ளையாக,கையில் எடுத்தவர் என்ன சொல்கிறாரோ அதன் பேரில் தான் வியந்து பாராட்டப்படுகிறது.இது கவிதைக்கு மட்டுமன்று ஓவியத்திற்கும் சினிமாவிற்கும் கூடப் பொருந்தும்,

சமூக மாற்றத்திற்கோ சமூக அழுத்தத்திற்கோ பயன்படாத எழுத்தினால்,கலையினால் தனி மனிதன் சுய இன்பம் கூடப் பெற இயலாது என்பதை நாம் அறிவது நமக்கும் சமூகத்திற்கும் நல்லது.

அகரமுதல்வனின் கவிதை அதற்கான பயணத்தை உணர்ச்சியின் நுட்பமான இயங்கு தலத்தில் கண்டடைந்திருக்கிறது.அவர் தான் இலட்சியபூர்வமான ஈழம் எனும் அரசியல் திணையைத் தன் மொழியில் ஆக்கிவிட்டால் அதுவே நம் எல்லோருக்கும் வெற்றி.

ஈழம் குறித்த எல்லாமே ஒரு ஆயுதமாக மாறும்,நம்முடைய செயற்பாடாக மாறிக்கொண்டிருக்கும் வாய்ப்பு வாய்த்த வேளையில் கவிதை மட்டும் அப்படி ஆகாத ஒரு மந்த நடையில் இருப்பதை உணர்ந்தே இவ்வளவு எழுத வேண்டியிருந்தது என்பதைத் தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன் .

                                                             குட்டி ரேவதி

 

 

நன்றி மூலம் :- http://www.periyarthalam.com/2013/05/25/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.