Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்னைத் தகவமைக்கிறது தமிழ்ப்பல்கலைக்கழகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘Establishing Tamil University is a shot against National Integration’

என்று சீறினார் இந்திரா காந்தி.

‘No Madam, I am telling you as a congressman it is not’

என்று மறுத்துப் பேச நேர்ந்தது.

 

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் திரு. வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள், தமிழ் பல்கலைக்கழகத்தின் அடிமனை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளைத் திட்டமிடும்போது பெருந்தச்சன் திருவாளர் கணபதியார் அவர்களிடம் கூறிய செய்தி இது.

 

திருவாளர் கணபதியார் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் முதல்வராகவும், அன்றைய தொழில் நுட்பக் கல்வித்துறையில் மிகவும் செல்வாக்குப்பெற்ற மரபு வழிப்பட்ட கட்டடக்கலை வல்லுநர் ஆகவும் இருந்த படியால், திட்டமிடுவோர் மனங்கொள்ள வேண்டும் என்ற தேவை கருதி அவரிடம் இந்த உண்மையைக் கூறினார் திரு. வ.அய்.சு.

 

திருவாளர் கணபதியார் அவர்கள் ஒரு 40 ஆண்டுத் திட்டத்தை வகுத்தார். அதில் கடைசிப் பத்தாண்டுகளில் வெளிப்படையாகத் தெரிவிக்கலாம் என்ற அவரது முடிவின்படி இக்கால வேளையில் வெளிவருகிறது இந்தக் கருத்து.

 

திருவாளர் கணபதியார் அவர்களோடு திட்ட வரைபடங்கள் ஆக்குதலில் அப்போது உறுதுணையாக இருந்த பணியாளர்கள் சிலரில் திரு பெருமாள், திரு இராதாகிருட்டிணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். திரு குமரேசன் உள்ளிட்ட இளம் பட்டதாரிகள் பலர் பெரும் பங்களிப்புச் செய்தனர்.

 

இவர்களில் திருவாளர் கணபதியார் இன்று உயிருடன் இல்லை. திரு பெருமாள் பணியின்போதே இறந்து விட்டார். 1982-86களில் கோயிற்கட்டடக்கலை விரிவுரையாளராகவும், திட்டப்பணிகளில் திருவாளர் கணபதியாருக்கு உதவியாகவும் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியின் துணை முதல்வராகவும் போற்றப்பட்ட திரு இராதாகிருட்டிணன் திடீரென அரசுப் பணியிலிருந்து மறைக்கப்பட்டார். திரு குமரேசன் அவர்கள் கருநாடக மாநிலத்தில் மரபு வழிக் கட்டடக்கலைஞராகவும் ஒப்பந்தக்காரராகவும் அறியப்பட்டுள்ளார். கருநாடக அரசு தனது தலைமைச் செயலகத்தின் இரண்டாவது வளாகம் கட்டும் பணியில் இவரைப் போன்ற கலைஞர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

 

‘ஆளு ரொம்ப வெறப்பா இருக்காருடப்பா!’ இந்திராகாந்தி எதைப்பார்த்து அஞ்சுகிறாரோ அதைச் செய்யுங்கோ! என்று கூறுகிறார்.

 

முதலமைச்சரிடம் பேசி ஓராயிரம் ஏக்கர் நிலத்தைப் பெற்றவர், அது சதுரமாகவோ செவ்வகமாகவோ வேண்டாம், தமிழ் நாட்டு வரைபட வடிவில் வேண்டும் என்று கேட்டுப் பெற்றிருக்கிறார். அது அவரது விருப்பம். ஆனால் அந்த நிலப்பரப்பைத் தமிழ் நாட்டு மாவட்டங்களைப் போல பிரித்துச் சுற்றுப் சாலைகள் அமைக்க வேண்டும் என்கிறார். ஆனா ஆவன்னாஎன்று தரையில் எழுதிக் கட்டுமானங்களைச் செய்ய விரும்புகிறார். நான் மென்மையாக மறுத்து விட்டேன். முதன்மை வளாகத்தை மட்டும் அச்சுக் கோட்டில் அமைக்க ஒப்புதல் பெற்று வந்து விட்டேன். நூலக வடிவமைப்பில் மையக் கட்டடம் மட்டும் நாம் கட்டுகிறோம். அவ்வளவுதான் என்றார் திருவாளர் கணபதியார்.

 

திரு இராதாகிருட்டிணனின் கோயிற்கட்டடக்கலை இளங்கலைப் படிப்பில் திட்டப்பணியாக ‘திராவிடப் பல்கலைக்கழகம்’ வடிவமைக்கப்பட்டது. நூல் மரபாகவும் கருங்கற்களில் ஆவணமாகவும் உள்ள பல்லவர் காலப் பாணி முதல் நாயக்கர்காலம் வரையிலான வடிவ மாற்றங்களை ஒரே தூணில் வடிவமைத்து ‘பல்லவர் காலத்து சிம்மங்கள் தாங்கிநிற்க நாயக்கர் காலத்துக் கழுத்து போதிகை’ வரை வடிவமைக்கப்பட்ட அந்த அமைப்பு கல்லூரியின் ஆவணங்களில் ‘புளு பிரிண்ட்’ ஆக உள்ளது. அந்த வரைபடத்தில் சில மாற்றங்களை மட்டும் செய்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் அமைக்கப்பட்டது.

 

அன்றைய தமிழக முதல்வரின் ஒப்புதலுக்குக் கொண்டு செல்லும் முன்பாகத் தேக்கு மரத்தில் ஒரு அளவிட்ட மாதிரி (scale model) செய்திடுமாறு ஆணையிட்டார் வ.அய்.சு.

 

மாமல்லபுரத்தின் மரத்தச்சுக் கலைஞர்கள் திரு சண்முகம், வயிரமணி, முருகேசன் ஆகியோர் அழகிய மாதிரி ஒன்றைத் தேக்கு மரத்தில் செய்து தந்தனர். அது மூன்று துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு வ.அய்.சு முன்பாக மேசை மீது வைக்கப்பட்டிருந்தது. சுற்றிச் சுற்றி வந்தும், தள்ளி நின்றும் பார்த்த வ.அய்.சு அவர்கள், துணைவேந்தரின் அறை இருக்கும் முதல் தளத்திற்கு நேரடியாக மகிழுந்தில் செல்ல வேண்டும், துணை வேந்தரை யாரும் வழியில் இடைமறித்துச் சந்திக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அதற்காகவே முகப்பில் ஒரு நீண்ட பலகணி திட்டமிடப்பட்டது. அங்கே இப்போது ஒரு திருவள்ளுவர் சிலையை வைத்து விட்டார்கள். மகிழுந்து மேலே செல்லும் ஏறுசாலை போடப்படவில்லை. வ.அய்.சுவைத் தொடர்ந்து 9 துணை வேந்தர்களும் படிக்கட்டுகள் வழியாகவும் மின் தூக்கிகள் வழியாகவும் சென்று கொண்டிருக்கிறார்கள். வழியில் யாரெல்லாம் சந்திக்கிறார்களோ அவர்கள் எல்லாம் தாம் விரும்பியதை அவ்வப்போது முடித்துக்கொண்டு வருகின்றனர் என்று தெரிகிறது. ஒரு கட்டுமானப்பிழை என்பது எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதனை இதன் வழியே உணர வேண்டும்.

 

மரத்தாலான அந்த மாதிரியைப் பிரித்தும் சேர்த்தும் சற்றுத் தள்ளி விரிவு படுத்தியும் பார்த்துக் கொண்டிருந்த வ.அய்.சு. அவர்கள், மரபு வழிப்பட்ட இந்த வடிவமைப்பில் தமிழ் பல்கலைக்கழகத்தின் பண்பைக் குறிக்கும் வடிவமைப்பாக என்ன இருக்கிறது என்று கேட்டார்.

 

இதுவரை இல்லை ஐயா ! மரபு வழியில் அமைக்கப்பட்டுள்ள பயன்பாட்டுடன் கூடிய வடிவமைப்பு. புறத்தோற்றம் மரபு வழியிலும், கட்டுமானங்கள் தற்காலப் பொறியியல் தன்மையோடும் உள்ளன என்றார் கணபதியார்.

 

ஒரு சிறப்புப் பண்பை ஏற்ற வேண்டும் என்றால் வழக்கத்திற்கு மாறாக ஒரு புதுமையைச் செய்யலாம். ஆங்கில எழுத்து ‘T’ போன்ற இதன் தரைப்படத்தை மாற்றி ‘V’ போன்று உட்குழைவாக அமைத்திடலாம் என்றார்.

 

வருவோரை நிமிர்ந்து நின்று யார் நீ? என்று கேட்கும் கட்டுமானத்தை விடவும், இரு கைகளையும் நீட்டி வரவேற்கும் குழைவுடையதாகச் சாய்த்து அமைக்கலாம் என்றார்.

 

வாஞ்சையோடு வரவேற்கும் பண்பே தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு உகந்ததாக இருக்கும் என்று முடிவெடுத்தார் வ.அய்.சு. தமிழ்ப்பல்கலைக் கழக முதன்மை வளாகத்தின் இரு சிறகுகள் போன்ற கட்டுமானங்கள் கோணலாகவே கட்டப்பட்டுள்ளன.

 

நடைமுறை வாழ்வில் யாருக்கும் முன்னால் குழைந்து பழகாத வ.அய்.சு, தமிழ்ப் பல்கலைக் கழக முதன்மை வளாகத்திற்கு ஒரு தாய்மைக் குழைவு வேண்டும் என்று முடிவு செய்தது அவரது மென்மையான தமிழ் உள்ளத்தின் கசிவு என்று கருதலாம்.

 

இவ்வாறெல்லாம் நெருக்கமான அக உணர்வுகளைத் திருவாளர் கணபதியார் அவர்களோடு பகிர்ந்துகொண்ட வ.அய்.சு. 1996ஆம் ஆண்டில் நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் ஓர் அரிய பதிவை ஏற்படுத்தினார்.

 

வ.அய்.சு. தன்னிடம் நண்பராகப் பழகினார் என்று கணபதியார் மேடையில் குறிப்பிட, அதை மறுத்த வ.அய்.சு. தனது பணிக்காலத்தில் தான் யாருடனும் நண்பராகப் பழகியதாக நினைவில்லை என்றார்.

 

‘பரதன் பாதுகாத்த பாதுகையைப் போல’ தமிழ்ப்பல்கலைக் கழகத்தை ஒப்படைக்கிறேன் என்று தான் பொறுப்பிலிருந்து விடைபெற்ற நாளில் குறிப்பிட்ட வ.அய்.சு. மீண்டும் 1998ஆம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு வந்தார். பார்வையிட்டார். அவரது நெஞ்சம் பதறியிருக்கும். ஆனால் வெளிப்படுத்தவில்லை. அனைத்து இடங்களுக்கும் நடந்தே சென்றவர், ஒரு குறையையும் சுட்டிக்காட்டவில்லை.

 

வரலாறு இவ்வாறு இருக்க, தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் 10வது மாண்பமை துணைவேந்தர் திரு. ம.திருமலை அவர்கள் தனது பணிக்காலம் நிறைவுறும் வேளையில் 18.12.2014 அன்று பொது மேடையில் பதிவு செய்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

 

தில்லியில் உள்ள சாணக்கியபுரிக்குச் சென்று தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு நிதி வேண்டும் என்று தெலுங்கில் கேட்டேன். நம்மாளு ஒருத்தன் வந்திருக்கிறான் என்று மகிழ்ச்சியடைந்து ஒரு கோடி கொடுத்தார்கள். அதனை வைப்புத் தொகையாக வைத்து ஒரு பேராசிரியரைப் பணியமர்த்திட இயலும் என்றார்.

 

தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் மரபு வழியில் உயராய்வு செய்து கட்டிக் காப்பாற்ற உளங்கொண்டு தமிழக அரசால் வளர்க்கப்படும் தமிழ்ப்பல்கலைக் கழகம், தெலுங்கில் பேசிப் பணம் பெற வேண்டிய நிலைக்கு ஏன் தள்ளப்பட்டது என்பது தமிழர்களைக் கவலை கொள்ளச் செய்கிறது.

 

தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் பலர் தமிழ்த்துறைப் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். அறிவு வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்து இருக்கிறார்கள். அவர்கள் தமிழர்களாகப் பிறக்கவில்லை என்றாலும் அவர்களில் தமிழர்களாக இறக்கக் கூடியவர்களைத் தமிழினம் என்றும் போற்றும்.

 

தமிழ் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்திற்கு அருகிலேயே அதன் முகப்பில் 60 ஏக்கர் நிலத்தைக் குடைந்து எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒன்றைக் கட்டியிருக்கிறது இன்றையத் தமிழக அரசு.

 

அந்தக் கட்டடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ‘அட்ரா பார்க்கலாம்’ என்று டாசுமாக் கடைக்கு முன்பு நின்று சண்டையிழுப்பவனைப் போல ‘சாறு அயர் கனத்து வீறு பெறத் தோன்றி’ நிற்கும் கோலம் தமிழர் நெஞ்சங்களில் வேல் பாய்ச்சுகிறது.

 

என்ன நடந்தது இந்த இடைக்காலத்தில் ? ஏன் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் அடிமனை அவ்வப்போது பிடுங்கப்படுகிறது?

 

தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு 25 ஏக்கர், வீட்டு வசதி வாரியத்தின் தனியார் குடியிருப்புக்கு 50 ஏக்கர், தற்போது மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு 60 ஏக்கர் என்று குரங்கு அப்பத்தைக் கடிப்பதைப் போல மூளியாக்குவதில் யார் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பனவெல்லாம் கவலை கொள்ளச் செய்கிறது.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தை இழிவுபடுத்தினால் இந்த தமிழக முதல்வர் மகிழ்ச்சியடைவார் என்று கருதித் திட்டத்தை முன்வைப்பவர்கள் இருக்கிறார்களா? அந்தத் தமிழக முதல்வர் மகிழ்ச்சியடைகிறாரா என்பது உயராய்விற்கு உரியது.

 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சரிவு தமிழ்நாட்டின் சரிவு என்பதனையும், தமிழக அரசுக்கு மூளையாகச் செயல்பட ஓராயிரம் அறிஞர்களை ஒரிடத்தில் திரட்டுவதே தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் நோக்கம் என்பதனையும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைக் கட்டிக் காப்போரும் திட்டமிடுவோரும் எண்ணிப் பார்க்க வேண்டிய நேரம் இது.

 

புதர் மண்டிக் கிடக்கும் ஓராயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் கீரிப் பிள்ளைகளும் சில பல தமிழ்ப் பிள்ளைகளும் வேலியில்லாமல் விளையாடிய கடந்த காலம் தோல்வியின் அடையாளங்களை விட்டுச் சென்றிருக்கிறது.

 

‘ஆய்வு என்ப்படுவதே சார்பற்ற ஐயப்பாடுதானே’ என்று 1983-ல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் ஆய்வு நூல் வெளியீட்டில் முதல் செய்தியாகக் குறிப்பிட்டுள்ளார் வ.அய்.சு. ஒரு சார்பு என்று குறிப்பிடுவதைக் கூடப் பிழையென்று கருதி ‘சார்பற்ற’ என்ற பொதுச்சொல்லில் குறிப்பிடும் வ.அய்.சு. அவர்கள் தமிழின் நடுநிலை ஆற்றலின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் அதன் வழியே இறுமாப்பும் கொண்டு தமிழகத்தின் துணை முதல்வர் போலத் திட்டமிட்டார் என்று அவரை இப்போது மதிப்பீடு செய்வது பிழையாகாது.

 

வ.அய்.சு அவர்கள் சில நல்ல மரபுகளை உருவாக்கித் தந்திருக்கிறார். அவற்றுள் ஒன்று ‘தமிழ்ப்பல்கலைக்கழகத்தாரேம்’ என்ற ஒற்றைச் சொல். துணைவேந்தரை முதன்மையாகக் கொண்டு படிநிலையில் வரிசைப் படுத்தினால் உலகில் வாழும் கடைக்கோடித் தமிழ் மகன் வரையில் அனைவரும் அணிவகுத்து நிற்பர் என்ற புரிதலில் சங்க இலக்கிய மரபு வழிப்பட்ட இந்தச் சொல்லுக்கு ஆளுமை இருக்கிறது.

மொழிவழி இனமாகவும் பண்புத் தகுதிகளின் வழிப்பட்டதாகவும் ஆன ‘தமிழினம்’ என்ற சொல்லுக்கு வ.அய்.சு. தந்த புதிய விளக்கமாகவும் வரையறையாகவும் இதனைக் கொள்ளலாம்.

 

இதன் வழியே பல்கலைக்கழகத்தில் ஏற்படும் வெற்றியும் தோல்வியும் ஒரு குறிப்பிட்ட நபரைச் சாராமல் அனைவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புரிந்து கொள்ளலாம்.

தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கென 1982-ம் ஆண்டு தமிழக அரசால் தனிச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அதற்கு நேர்மாறாக 2013-ம் ஆண்டு தமிழக அரசினால் இசை கவின் கலைப் பல்கலைக் கழகச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உண்மையில் இந்த இரண்டாவது சட்டம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தைப் புதைகுழிக்குள் இட்டு மூடிவிடும் சட்டமாகும்.

 

‘தமிழ்ப்பல்கலைக்கழக’ நலன் கருதி ‘நிதி’ உள்ளிட்ட எந்தச் சட்டப்பிரிவையும் யாரும் கையில் எடுக்கலாம், உரிய முறையில் பின்னேற்பு வழங்கப்படும் என்று ஒரு மரபை உருவாக்கினார் வ.அய்.சு. என்று அவரிடம் நெடுங்காலமாக நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்த தஞ்சைக் கவிராயர் கூறுகிறார்.

 

‘என்று ஆய்வின் தரம் குறைகிறதோ அன்று நல்கைகள் குன்றும், பொருள் முட்டுப்பாடு தோன்றும்’ என்று வ.அய்.சு. பணியிலிருந்து விடைபெற்ற நாளில் 31.07.86 மாலை 5 மணியளவில் எழுதிய மடல் பல்கலைக்கழக முகப்பில் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது.

 

முட்டுப்பாடு என்ற சொல்லைக் கலித்தொகை குறிப்பிடுகிறது. பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பயன்படுத்துகிறார். அதேபொருளில் வ.அய்.சு.வும் பயன்படுத்துகிறார்.

 

தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு பணம் இல்லை என்று தமிழக அரசால் சொல்ல இயலாது. பணம் இருக்கும்! ஆனால் தர மறுக்கும். அந்த நிலையே முட்டுப்பாடு.

 

ஆய்வின் தரம் குறைந்தால் அந்த முட்டுப்பாடு தோன்றும் என்று மட்டும்தான் வ.அய்.சு. குறிப்பிடுகிறார். தமிழின் மீதான காழ்ப்பு உணர்வினாலும் பொருள் முட்டுப்பாடு தோன்றும் என்று இப்போது புரிகிறது.

 

ஆய்வின் தரம் குறைவதால் இந்த முட்டுப்பாடு தோன்றினால் ஆய்வின் தரத்தை மேம்படுத்தி இந்த முட்டுப்பாட்டை நீக்கிவிடலாம். பொருள் முட்டுப்பாடு தோன்றுவதால் ஆய்வின் தரம் குறைந்தால் உலகத் தமிழர்கள் தான் முன்வந்து முட்டுக் கொடுக்க வேண்டும்.

 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நிகழும் வெளிப்படையான உயர் ஆய்வுகளின் தரத்தைக் காப்பாற்ற வேண்டியது நேர்மையான அறிஞர்களின் கடமை என்பதிலிருந்து ஒருவரும் பின்வாங்க முடியாது.

 

சிறந்த அறிஞர்களின் உளமார்ந்த வழிகாட்டுதலில் தமிழ்ப்பல்கலைக்கழகம் பிறழாப் பெருநடை பீடுறப் பயில வேண்டும்.

 

‘தை’யென்றாலும் தப்படிப்பது! சித்திரை என்றாலும் கூத்தாடுவது போன்ற கோமாளித்தனங்களை விடுத்து உண்மைத் தன்மையினை அரசுக்கும் மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் அமைப்பாகத் தமிழ்ப்பல்கலைக்கழகம் விளங்க வேண்டும்.

 

தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒரு நலிவுற்ற நிறுவனம் என்றும், அதனை மீட்க வந்த போராளி போல ஒரு துணை வேந்தர் வருவார் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. துணை வேந்தரை மட்டுமே சார்ந்து இராமல் தமிழ்ப்பல்கலைக்கழகச் சட்ட விதிகளையும், துணைச்சட்ட விதிகளையும், நல்ல மரபுகளையும் சார்ந்து சீரான துடிப்புடன் அது  இயல்பாக இயங்கிட வேண்டும் என்பதுவே தமிழர்களின் விருப்பம் ஆகும்.

 

தமிழ்ப்பல்கலைக்கழக வளர்ச்சியில் முதன்மையான பங்கு, அதன் அடிக் கட்டமைப்பை உருவாக்கும் பொறியியற் பிரிவுக் கட்டடக்கலை வல்லுநர்களின் கையில் இருக்கிறது.

 

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் அனைவருமே பொறியியல்  பிரிவினரால் நன்கு ஏமாற்றப் பட்டிருக்கின்றனர்.

 

பொதுவாகத் தமிழ்துறைப் பேராசிரியர்களே துணை வேந்தர்களாக வருகிறபடியால் அவர்களைத் தொடர்ந்து ஏய்க்கப் பொறியாளர்கள் நன்கு பயிற்சி பெற்றுள்ளனர்.

 

ஓராயிரம் ஏக்கர் நிலப் பரப்பிலான ஒரு கல்வி நிறுவனத்தை மேம்படுத்தக் குறைந்த அளவில் ஒரு நிருவாகப் பொறியாளர் [Executive Engineer] தலைமையிலான ஓர் அலுவலகம் முழு நேரமும் செயல் பட்டிருக்க வேண்டும். தற்காலக் கட்டடவியல் வல்லுநர்களுடன் மரபு வழிப்பட்ட கட்டடவியல் வல்லுநர்களும் ஒரு குழுவாக இயங்கி இருக்க வேண்டும்.

 

தமிழ்ப்பல்கலைக்கழகம் தமிழர்களின் உலக அடையாளம் ஆகும். சக்கரவாளக் கோட்டம் ஒன்றினை மண்ணினால் உருவாக்கிய ‘மயன்’ என்பானைப் படிக்கும் தமிழறிஞர்களைக் கான்கிரீட்டுக் கட்டுமானங்களுக்குள் சிறைவைக்கும் தற்காலக் கட்டடப்பொறியாளர்கள் திருந்த வேண்டும்.

 

மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியிலிருந்து ஒரு மகர தோரண வாயில் குறைந்த விலைக்கு வாங்கி வரப்பட்டது. வாங்கி வரப்பட்டது என்று சொல்வதை விடவும் அக்கல்லூரியின் படிப்புகளை, வேலை வாய்ப்புகளை நிலைகுலையச் செய்து அந்த அரிய கலைப்படிப்பை கொள்ளை கொண்டு வரப்பட்டது என்றே கூறலாம்.

 

அதை எப்படி வைப்பது என்று தெரியாமல் காட்சிக்கு வைப்பது போல மேடைகட்டி வைத்து விட்டார்கள். அதற்கு முன்பாக ஒரு வாயில் அமைத்து அதற்குப் பாண்டியன் நுழை வாயில் என்று பெயரிட்டு எப்போதும் பூட்டியே வைத்துள்ளனர்.

 

திருச்சியிலிருந்து நாகை செல்லும் நெடுஞ்சாலையில் இடது புறமாகப் பார்த்தால் முதலில் தென்படுவது தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை. சுற்றுவேலி கூட இல்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது.

 

அடுத்ததாகத் திடீரெனத் தோன்றும் ஆட்சியர் அலுவலக வளாகம். மீண்டும் புதர். அடுத்ததாகப் பூட்டிக் கிடக்கும் பாண்டியன் நுழைவாயில். அதைப் பார்த்த அளவிலேயே தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒரு நலிந்த நிறுவனம் என்று எண்ணத் தோன்றும். இதுபற்றித் திட்டமிடுவோர் ஒரு போதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

 

தமிழ்ப்பல்கலைக்கழக முதன்மை வளாகம் என்பது மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் பயிற்சி மாணாக்கர் தந்த கொடை. தமிழ்ப்பல்கலைக்கழக நூலகம் அக்கல்லூரியின் உற்பத்திப் பிரிவினரின் படைப்பு. இந்த இரண்டு மரபு அடையாளங்களும் இல்லையென்றால் தமிழ்ப்பல்கலைக்கழக வளாகம் என்பது பெட்டிப்பு போன்ற கட்டடங்களைக் கொண்ட ஒரு பொதுப்பணித்துறை வளாகம் போன்று தான் இருந்திருக்கும்.

 

அரசின் கொள்கை முடிவுகள் ஏதும் இல்லாமலே மரபு வழிப்புறத்தோற்றங்கள் பொறியாளர்களால் புறக்கணிக்கப்பட்டன.

 

தமிழ்ப்பல்கலைக்கழக முதன்மை வளாகத்தின் கொடுங்கை வரியின் உட்புறம் நெடுகிலும் புறாக்கள் தங்குவதை அனைவரும் பார்க்கலாம். காலங்காலமாகப் புறாக்களுக்கு என்றே வடிவமைக்கப்பட்டது அப்பகுதி. அங்கு தங்கும் புறாக்களுக்கு ‘இறையுறைபுறவு’ என்றே பெயர்.

 

அது முறைப்படி வடிவமைக்கப்பட்டிருந்தாலும் தீர்மான வேலை செய்யும் போது எந்த அறிவாளிப் பொறியாளர் அறிவுறுத்தினாரோ தெரியவில்லை. அதன் மேல்மட்டம் உருட்டி விடப்பட்டிருக்கிறது.

 

அங்கே புறாக்கள் தங்கி எச்சமிடும், அதனால் அவை அங்கே நிற்காமல் இருக்க இவ்வாறு செய்யலாம் என்று கருதியிருக்க வேண்டும். 30 ஆண்டுகள் ஆகியும் கால்கள் வழுக்கிய நிலையிலும் புறாக்கள் அங்குதான் நின்று கொண்டிருக்கின்றன.

 

‘விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த தண்கமழ் அலர் இறால்’ என்று திருமுருகாற்றுப்படை குறிப்பிடும் பெரிய தேன் கூடுகள் கடைகால் இல்லாமல் தலைகீழாகக் கட்டப்பட்டுத் தொங்கும். அவ்வப்போது கால்வழுக்கி உறங்கிவிழும் புறாக்களால் அவை கலைத்து விடப்படும். அப்போதெல்லாம் அந்தத் தேனீக்கள் வருவோர் போவோரைத் தாக்கும். தீயணைப்புத் துறையினரை அழைத்து நீர் பீய்ச்சியடித்து அந்தத் தேன்கூடுகளைக் கலைப்பர். அவை மீண்டும் கட்டும்.

 

ஒரு பொறியாளன் செய்த சிறு பிழை, எத்தனை உயிர்களுக்கு நெடுங்காலத் துன்பம் என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டும். அந்தப் புறாக்கள் நிற்கும் பரப்பில் நீண்ட பலகைத் துண்டுகளை ஒருவரியாகத் தைத்துவிட்டால்  அவற்றின் துன்பம் தீர்ந்து விடும்.

 

‘அரிந்துடம்பிட்டோன்’ என்ற சோழ மன்னனின் மரபில் வந்தவர்கள் புறாக்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தர வேண்டும்.

 

பொறியாளர்கள் வேறு வகையில் முடிவு எடுத்து விட்டனர். அருகில் அமைக்கப் பட்டுவரும் ஆட்சியாளர் வளாகத்தில் கொடுங்கை இருக்கும் புறாக்கள் தங்கும் பகுதி இருக்காது. மொத்தமாகத் தட்டை வடிவக் கான்கீரிட் பலகை அமைத்து மூடிவிட்டனர். தஞ்சாவூர்ப் புறாக்கள் யாரிடம் சென்று இது பற்றி மனுக் கொடுக்கப் போகின்றன என்று தெரியவில்லை. இதற்கும் தற்காலக் கட்டடவியல் பிரிவினரே பொறுப்பு.

 

இப்போதெல்லாம் புதிய கட்டுமானங்களைத் தேவைக்கேற்பக் கட்டிவிட்டு ஒரு பம்மாத்து வேலையாகப் புறத்தோற்றம் அமைப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளனர்.

 

எடுத்துக்காட்டாகக் கொடுங்கைவரிக்கு மேல் வரும் ஓர் ஓடுவரி ‘வியாழவரி’ ஆகும். ஆலிங்கம், அந்தரி, பிரதி, வாசனம் என்ற நான்கு உறுப்புகளைக் கொண்டு ஒரு கட்டு பல்லாயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அதனை அப்படியே மாற்றி ஐந்து பட்டை போட்டு இருக்கிறார்கள்.

 

இந்தக் கட்டுக்கள் எல்லாம் உட்பொருள் உடையவை. நாடிக் கட்டுகளோடு தொடர்புடையவை. இவ்வாறான மரபுகளை உடைக்க இந்தப் பொறியாளர்களுக்கு உரிமை வழங்கியது யார்? இது அறியாமை அல்ல. ஏமாற்று வேலையும் வன்முறையும் ஆகும். இவ்வாறான அனைத்துத் தவறுகளுக்கும் பொறியாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். துணைவேந்தர் போன்றோரும் தமிழக அரசும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

தமிழ்ப்பல்கலைக்கழகம் திட்டமிடப்படும்போதே ஓவியத்துறை, சிற்பத்துறை, கட்டடக்கலைத்துறை மூன்றும் உடன் திட்டமிடப்பட்டன. ஆனால் இதுவரை இந்த மூன்று துறைகளிலும் ஒரு கலைஞர் கூட பணியமர்த்தப் படவில்லை. வரலாற்றுத் துறைப் பேராசிரியர்களைக் கொண்டு இயன்றவரை சிதைத்ததுதான் மிச்சம்.

 

1980களில் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு முன் மாதிரியாக விளங்கிய நிறுவனம் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரி. தமிழ்ப்பல்கலைக்கழகம் அதன் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு அங்கே உயர்கல்வியைத் தடுத்து மொட்டையடித்தது. அதனால் மாமல்லபுரம் கல்லூரியின் முன்னாள் மாணாக்கர் பலர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மீது தீராத சினம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

 

தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு இணையாகவும் மிகையாகவும் மாற்றாகவும் கடல்கடந்த தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒன்றைத் தமிழ்நாட்டிலிருந்தே கட்டியமைத்துத் தரும் பெருந்தச்சுத் திட்டத்திற்கான அடிப்படை வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதன்வழியே எந்த உள்ளூர் சட்டத்தையும் மீறாமல் உலக அறிகஞர்களுடன் கண்ணியமான அறிவுத்தொடர்பை ஏற்படுத்துவர் என்று எதிர்பார்க்கலாம்.

 

தஞ்சைப் பெரிய கோவில் தமிழர்களின் மரபறிவு அடையாளமாக இருப்பதால் தஞ்சாவூரே தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒன்றினை அமைக்கப் பொருத்தமான இடமாக இருக்கும் என்று அன்று கருதப்பட்டது. அந்தத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஒரு கோயிற்கட்டடக்கலைஞனுக்குக் கூட வேலைதர அரசுக்கு விருப்பம் இல்லை என்பது வருத்தம் தருகிறது.

 

உண்மையில் தமிழ்ப்பல்கலைக் கழகமானது இந்நேரம் தஞ்சைப் பெரிய கோயிலைப் பகுப்பாய்வு செய்து பாடப் புத்தகம் ஆக்கியிருக்க வேண்டும். அதாவது தஞ்சைப் பெரிய கோயில் தொடர்பாக 100 வல்லுநர்களையாவது உருவாக்கியிருக்க வேண்டும். அங்குள்ள கல்வெட்டுகளை மீண்டும் படியெடுத்து ஆவணப்படுத்தியிருக்க வேண்டும். வரலாற்றுத் துறைப் பேராசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு கலைப்பிரிவுகளைக் கட்டியாள முடியாது.

 

இலக்கியத் துறை போன்ற பிற துறைகள் எவ்வாறு தனியே இயங்குகின்றனவோ அவ்வாறே கலைத்துறைகள் இயங்கிட வேண்டும். உயர் ஆய்வு மையங்களாக உயர்ந்திட வேண்டும். அதற்குக் கலைஞர்களின் பங்களிப்பும் தேவை என்ற உண்மையை அரசு உணர வேண்டும்.

 

வரலாற்றுத்துறை கண்டிப்பாகத் தனியாக இயங்க வேண்டும். பிற துறைகளை ஒருபோதும் மாறாட்டம் செய்யக்கூடாது.

 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியென்பது தமிழர் மரபில் இன்றைய காலச் சூழலில் மிகவும் போற்றத் தக்கது ஆகும். அந்தப் பதவியில் ஒரு குழந்தை அமர்ந்தாலும் உரிய மதிப்பைத் தமிழர்கள் தந்தாக வேண்டும்.

 

ஆனால் அரசியல் காரணங்களுக்காகப் பலர் வரும் போதே சுவர் ஏறிக் குதித்து வருவதும், சிலர் போகும்போதும் வாசல் வழியாகச் செல்லாமல் சுவர் ஏறிக் குதிப்பதும் வேறு சிலர் பணிக்காலத்தில் ஏறிக்குதித்துப் பயிற்சி எடுத்துக் கொண்டு பதவி நீட்டிப்புக்கு ஆள் பிடிப்பதும் தடுக்கப்பட வேண்டும்.

 

துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த துணைவேந்தர் பதவியேற்பதற்கு இடையில் பெரிய இடைவெளி விழுந்து விடாமல் அனைவரும் கண்காணிக்க வேண்டும்.

 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அரசியல் செல்வாக்கு மிக்க சிலர் 15 நாட்களில் துணைவேந்தராகப் பதவியேற்றுள்ளனர். வேறு சிலர் 9 மாதங்கள் கழித்து துணை வேந்தராகியுள்ளனர். துணை வேந்தரைத் தெரிவு செய்யும் இடைக்காலப் பொறுப்புக்குழுவுக்குத் துணைவேந்தரைத் தெரிவு செய்வதைத் தவிர வேறு அக்கறை தேவையில்லை. பெருந்திட்டங்களில் கை வைப்பது தவறு.

 

மொழியின் பெயராலும், இனத்தின் பெயராலும், அன்றாட அரசியல் செயல்பாடுகளிலும் நம்பிக்கை தோற்றுகின்ற நடுநிலையாளர் ஆகவும், எத்தரப்பினரும் தத்தமது கருத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வாய்ப்புத் தரும் தாய்மைப் பரிவுடைய நேர்மையாளர் ஆகவும், கண்ணியம் மிக்கவராகவும் துணைவேந்தர் அமையத் தமிழர்கள் நோற்றாக வேண்டும் இனி.

 

இரும்பின் பயன்பாடும் கான்கிரீட்டின் பயன்பாடும் தற்காலப் பொறியாளர்களின் தொண்டும் அற்றதாகத் தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தை முற்று முழுதாக மரபு வழியில் திட்டமிட்டு விரிவு படுத்துவது நலம் தரும்.

 

‘தமிழ்நாடு’ என்ற சொல்லில் உள்ள ஐந்து எழுத்துக்களையும் தனித்தனியே தரையில் எழுதி அவற்றின் மீது ஐந்து வளாகங்களைக் கட்டி எழுப்பி வருகின்றனர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தார். இது சிறுபிள்ளைத்தனமானதுதான். எந்த வடிவமைப்பு கொள்கையும் இந்த முயற்சிக்குக் கோட்பாட்டு அடிப்படை கற்பிக்க இயலாது. ஆனால் அவற்றையும் மரபு வடிவ புறத் தோற்றம் தந்து தகர வளாகம், மகர வளாகம், ழகர வளாகம், நகர வளாகம், டகர வளாகம் என முறையே பெயர் சூட்டி மானத்தைக் காத்திடலாம்.

 

தமிழ்நாட்டு வரைபட வடிவில் அடிமனை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கூடக் குழந்தைதனமானதுதான். ஆயினும் முதல் துணை வேந்தரின் அடிமனத்திட்டமானது மொழிவழி மாநிலங்களின் மரபறிவைப், பண்பாட்டுக் கூறுகளைக் கட்டிக் காப்பாற்றும் முன்னோடி நிறுவனமாக அமைத்திடவே இவ்வாறாக நில வரைபடத்தை வற்புறுத்தியிருக்கலாம் என்று கருத இடம் இருக்கிறது. பிற மாநிலங்களும் அவரவர் மொழியில் எத்தனை அறிவுத்துறைகளை வகைப்படுத்தி ஆய்வு செய்திட இயலும் என்று தமிழ்ப்பல்கலைக்கழகத்தோடு போட்டியிடலாம்.

 

தன்னேர் இல்லாத தமிழில் கமுக்கமான ஆய்வு அறைகள் என எவையும் இல்லை. உயர் ஆய்வுகள் அனைத்துமே வெளிப்படையானவைகள் தாம்.

 

தமிழ்ப்பல்கலைக்கழகத் திட்டமிடுதலில் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரியின் தொடக்க காலப் பங்களிப்பு இல்லாது போயிருந்தால் 15 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப்பல்கலைக்கழகம் திசை மாறிப் போயிருக்கும்.

 

மரபு வழிப்பட்ட தமிழர் அறிவில் ஆழங்கால் பட்டு நின்று இன்றைய அறிவியல் வளர்ச்சியை எதிர்கொள்ள வேண்டுமேயன்றி வேர்க்கால்களைச் சிதைத்துக் கொண்டு விளைச்சலை வென்றிட இயலாது.

 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இயங்கும் பல புதிய துறைகள் வழிகாட்டுதல் இன்றியும் ஒருங்கிணைப்பு இன்றியும் அந்தந்தத் துறைப் பேராசிரியர்களின் மூப்புக்கும் முனைப்புக்கும் ஏற்பத் திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றன.

 

தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடிமனை தற்போதுள்ள துணைவேந்தர் பதவியேற்கும் முன்பாக 9 மாதங்கள் பொறுப்பில் இருந்த இடைக்காலப் பொறுப்புக்குழுவினரால் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது. மாண்பமை துணைவேந்தர் ம.திருமலை அவர்கள் தான் பதவியேற்ற சில நாட்களிலேயே முறையான ஒப்புதல் தந்திருக்கிறார். ஒருவரிடமும் கருத்துக் கேட்கவில்லை. அவர் நினைத்திருந்தால் தமிழக அரசுக்குக் கனிவாக எடுத்துச் சொல்லி அந்த வளாகத்தை தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு வெளியே அமைக்க ஏற்பாடு செய்திருக்கலாம். அவர் அதைச் செய்யவில்லை. தோழர் பெ. மணியரசன் தலைமையில் தமிழ்ப்பல்கலைக்கழகப் பாதுகாப்பு இயக்கம் ஒன்று தலையெடுத்துத் தடுத்துப் பார்த்தது. கோரிக்கை வைத்தது. போராட்டம் நடத்தியது. வழக்குத் தொடுத்தது.

 

பொது நலவழக்கிற்குத் தகுதியற்றது என்ற அடிப்படையில் அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி, தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்குள்ளிருந்து ஒருவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதுதான்.

 

இது உண்மைக்குப் புறம்பானது. ஒருவரது கருத்தும் மதிக்கப்படவில்லை என்பதுவே உண்மை. தோழர் மணியரசன் தஞ்சாவூரில் நடத்திய கண்டனக் கூட்டத்தில் துணை வேந்தரைத் தவிர அனைத்துப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர் என்பதும் முன்னாள் துணைவேந்தர்களும் பங்கெடுத்தனர் என்பதும் உண்மை.

 

தோழர் மணியரசன் மிகவும் பெருந்தன்னையானவர். அறிஞர்கள் மீது பழி சுமத்தப்படுவதை அவர் ஒரு போதும் விரும்ப மாட்டார். வாய்க்காலில் விட்ட கழுதையைப் போக்கில் விட்டுத்தான் திருப்ப வேண்டும் என்பதனை நன்கு உணர்ந்தவர். காலம் கனியும் வரை காத்திருப்பார் என்று நம்பலாம்.

 

ஆட்சியர் வளாகம் இங்கு வருவதால் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள நிலமனைகளின் விலை 20 ச.கி.மீ பரப்பிற்கு பல மடங்காக உயர்ந்திருக்கிறது. இதுவே இத்திட்டத்தைக் கொணர்ந்தோரின் நோக்கம் என்பது இன்றாவது தமிழர்களுக்குப் புரிந்தால் சரி.

 

ஆட்சியர் வளாகம் தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைவதால் தமிழ்ப்பல்கலைக்கழகம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள 2 கி.மீ. நீளத்திற்கு சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். அப்படி ஒரு திட்டமே தமிழ்ப்பல்கலைக்கழகத்தாரிடம் இல்லை என்று தெரிகிறது. மாவட்ட ஆட்சியரே பார்த்து ஒரு வேலி கீலி போட்டுத்தந்தால் நல்லது.

 

நாடெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் படுகொலைகள் மிகுந்து வரும் இக்கால வேளையில் ஒரு கல்வி வளாகத்தைப் பாதுகாப்பற்றதாக மாற்றுவது கொடுமை என்பதை அரசு உணர வேண்டும். புதர் மண்டிக்கிடக்கும் இந்த வளாகத்தில் அப்படி ஏதேனும் நடந்தால் அதற்குத் துணைவேந்தரே பொறுப்பு என்றும் அறிய வேண்டும்.

 

தமிழ்ப்பல்கலைக்கழகம் அமைக்க ஓராயிரம் ஏக்கர் நிலம் தருவதாக முன்னாள் முதல்வர் அறிவித்தபோது கைதட்டிக் கூத்தாடிக் கொண்டாடிய தமிழர்களைத் தலையில் அடித்தாற்போல தமிழக அரசே நிலத்தைப் பிடுங்கியிருப்பது வரலாற்றுப் பிழை.

 

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மூன்று சட்டங்களைத் தடுக்க தவறியிருக்கிறது தமிழ்ப்பல்கலைக்கழகம்.

1.    சித்திரை முதல் நாளை முதன்மைப்படுத்திய தமிழ்ப்புத்தாண்டுச் சட்டம்.

2.    கருநாடக இசையை முதன்மைப் படுத்திய இசை கவின் கலைப் பல்கலைக்கழகச் சட்டம்.

3.    ஆரிய வைதிக நலனை முன்னிறுத்திய தமிழ்நாடு மரபு ஆணையச் சட்டம்-2012.

 

இவற்றில் இன்னும் ஓராயிரம் ஆண்டுகளுக்குத் தமிழர்களை அடிமைப்படுத்தும் ஆரிய சூழ்ச்சியே இருக்கிறது. இது பற்றி வாய் திறவாமல் இருக்கும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தார் வரலாற்றுப் பிழை செய்திருக்கிறார்கள். குறிப்பாகத் துணைவேந்தர் திருமலை நடித்து ஏமாற்றி விட்டு 09.02.2015 பணி முடித்துச் சென்று விட்டார் .

 

மேற்குறிப்பிட்ட பிழைகளுக்கெல்லாம் மேலாகத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் நோக்கங்களோடு எந்த ஒற்றுமையும் இல்லாத சில கூறுகளில் நேர் எதிரான நோக்கம் கொண்ட ‘சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின்’ சோதிடப் பட்டதாரிகளைத் தமிழ்ப்பல்கலைக்கழக மெய்யியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வாளர்களாகச் சேர்த்துக்கொண்டு அவர்களைக் கொண்டே தொலைநிலைக் கல்வித் துறை வழியாக சோதிடப் பட்டயப் படிப்பை நடத்திக் கொண்டுத் தமிழர்களைச் சீண்டிப் பார்க்கிறது ஆரிய வைதிகம்.

 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தைப் போன்ற உயர் ஆய்வு நிறுவனம் என்பது தமிழக அரசின் அறிஞர் குழுவாகவும் தலைமைச் செயலகமாகவும் கடமையாற்ற வேண்டுமேயன்றி பணம் ஈட்டுகிற தொலைக்கல்வி நிறுவனமாக இயங்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.  தமிழ்ப்பல்கலைக்கழகத்திடம் இருந்து உலகம் நிறைய எதிர்பார்க்கிறது. ஏமாற்றி விடாமல் இருந்தால் சரி.

 

தமிழ்ப்பல்கலைக்கழகம் என்பது அரசாங்க ஊதியம் பெறும் சிலரால் மட்டும் நடத்தப்படவில்லை. கையிலிருந்தும் பையிலிருந்தும் அறக்கொடைகளாக எடுத்து வைக்கும் நல்ல உள்ளங்களின் உள்ளுணர்வின் உந்துதலாலும் நடத்தப்படுகிறது.

 

அரசாங்கத்தாரிடம் கோரிக்கை வைக்கும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல இக்கட்டுரை. எதிர்வினை புரிவோரை நெறிப்படுத்தும் போக்கில் எழுதப் பட்டது.

 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தோடு தங்கள் வாழ்வை இணைத்துக் கொண்ட பல பேராசிரியர்கள் தஞ்சாவூரிலேயே வீடுகளைக் கட்டிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தஞ்சாவூர் பெரிய தொழில் நகரம் என்பதாலோ அல்லது வாழச் சிறந்த இடம் என்ற தகுதினாலோ அல்ல. தமிழ்ப்பல்கலைக்கழகத்தை நேசிப்பதால் அதன் அருகில் வாழ விரும்பியே அணைந்தனர். அவர்களில் எவரையும் தமிழ்ப்பல்கலைக்கழகம் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டதே இல்லை.

 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பெருநோக்கங்களுக்கு எதிரானவர்கள் தனிநபர்களாகவும், பல குழுக்களாகவும், சில நிறுவனங்களாகவும் இயங்கி வருகின்றனர். அவர்கள் எப்போதும் அரசின் தளர்வான நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் இயல்பு உடையவர்கள்.

 

மாணாக்கரின் கல்வியார்வம், ஆய்வாளர்களின் உயர் நோக்கம், பெரும் பேராசிரியர்களின் மன உறுதி இவையனைத்தையும் உள்ளடக்கிய தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டு அரசாங்கத்தார் காட்டும் அக்கறையினால் மட்டுமே போற்றப்படும்.

 

தமிழ் நாட்டு அரசாங்கத்தாரின் அக்கறை என்பது தமிழ் நலம் நாடும் தக்காரின் கூட்டு முயற்சியினால் மட்டுமே கைகூடும். தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாளில் அன்றையத் தமிழக அரசு தமிழ் ஈழப் போராளிகளுக்கு வெளிப்படையாக உதவிகள் செய்த வரலாற்றை எவரும் மறுக்க முடியாது.

 

தமிழ்ப்பல்கலைக்கழகம் கடந்த 30 ஆண்டுகளில் நிமிர்ந்து நடந்திருந்தால் அந்தப் போராட்டம் ஓர் இனப்படுகொலையில் சிக்கியதைத் தடுத்திருக்கலாம். அறிவுக்கு முதன்மை தரும் இக்காலக் கட்டத்தில் அறிஞர்கள் பத்தாம் பசலிகளாக இருக்கக் கூடாது.

 

‘இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை’ மக்கள் திரள் எழுச்சியைக் கொண்டு கட்டமைப்போம் என்று தோழர் மணியரசன் கூறுகிறார். தேவையான திருத்தங்களோடு எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தமிழ்ப்பல்கலைக்கழகமும் அது போன்ற உயர் ஆய்வு நிறுவனங்களும் தமிழ்த்தேசியக் கருத்தியலை வளர்த்தெடுக்கும் அமைப்புகள் என்பதில் ஐயம் இல்லை.

 

அப்படி ஒரு கருத்தியலின் போக்கில் தமிழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தாரும் உரிய முறையில் தங்களைத் தகவமைத்துக்கொள்ள இதுவே உகந்த வேளை.

 

இதுவரையிலும் நேர்ந்துள்ள திட்டப் பிழைகளைச் சரி செய்து கொள்ள இப்போது தவறினால் தமிழர்களை அச்சவுணர்வு ஆட்கொள்ளும். அரசுக்கு உரிய நேரத்தில் உரிய அறிவுரைகளைச் சொல்ல மாட்டார்கள். ஆட்சியாளர்களின் முகத்திரைகள் கிழியும், முத்திரை மூளியாகும், முடங்குவர்.

 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் நோக்கம் தமிழ்தான் என்றாலும் தொடர்புடையவர்கள் தமிழ் வழிப் பட்ட பார்வையை ஏற்று எடுக்கவில்லை என்றால் அது தடம் மாறும். தமிழர்களுக்கு எதிரான நிறுவனமாக நடைமுறையில் மாற்றப்பட்டுவிடும். தவறுகள் தெரிய வரும்போதே தட்டிக் கேட்கத் தமிழ் இனத்தார் முழு புரிதலும் விழிப்பும் அடைய வேண்டும். அதுவே இக்கட்டுரை முன்வைக்கும் கோரிக்கை.

 

(இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இராதா கிருட்டிணன் என்பவரே தென்னன் மெய்ம்மன் ஆவார். மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் முதல் கோயிற்கட்டடக்கலைப் பட்டதாரியும், முதல் விரிவுரையாளரும் ஆவார். தற்போது அவர் முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளராக தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார்.)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.