Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 104

 

புதிய கோடங்கிகள்

 

சதியை ஒழித்த தீரர்கள்

சாதியை ஒழிக்கத் துணிகையில்

தார்ச்சாலைகளால் நிலங்களை இணைத்து

மலைகளின் சிகரம் வரை இரும்புச்சாலைகள் அமைத்தவர்கள்

கல்விச்சாலைகளால் மனங்களை இணைக்கத் தலைப்படுகையில்

சுதந்தரம் வந்தால் நல்ல காலம் பிறக்குமென்று

கொடியில் சுற்றிய குடுகுடுப்பைகளுடன்

கிளம்பிய புதிய கோடங்கிகளால்

தொடங்கியது எங்கள் கெட்டகாலம்.

  • Replies 228
  • Views 34k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 104

 

கேள்வி

பதில்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

கேள்வி

எதையாவது

கேட்டுக்கொண்டுதானிருக்கிறது

பதில்

எதற்கும்

பதிலளிக்காத போதும்

ஆதியில்

ஒரு கேள்வி

ஒரு பதில்தான்

இருந்ததாம்

ஒரு கேள்வி

விளங்காமல்

இத்தனை கேள்விகள்

ஒரு பதிலும்

விளங்காமல்தான்

இத்தனை பதில்கள் -

கேள்வி தான்

பதில்.

பதில் கேள்வி

கேளாமல் போ.

seyonyazhvaendhan@gmail.com  (நன்றி: திண்ணை.காம் 27.7.15)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 106

கற்பு நிலை

 

 

கற்றறிந்த சான்றோர்கள்

 

யாருமில்லாத சபையொன்றில்

 

ஒரு கட்டத்தில் என்னைக் கட்டங்கட்டி

 

நாக்கில் நரம்பில்லாத சிலர்

 

தாக்குதலைத் தொடுத்தபோது

 

உன் சொல்வன்மை

 

என் உதவிக்கு வருமென்று

 

ஒருபாடு நம்பிக்கையோடு

 

கலங்காது நின்றிருந்தேன்

 

ஆனாலும் நண்பா உன் நாக்கு

 

இறுகிய உதடுகளுக்கு உள்ளே

 

பற்களின் அரணுக்குப் பின்னால்

 

பதுங்கியே இருந்தது

 

அதுகூடப் பரவாயில்லை,

 

அன்று அகம் பேசாத உன் நாக்கு

 

பின்பு புறம் பேசிய செய்தி

 

பிறர் கூறத் தெரிந்துகொண்டேன்

 

நேருக்கு நேர் நின்று

 

நான் கேட்கும்போது கூட

 

உன் நாக்கு என் கண் முன்னே

 

இரண்டாகப் பிளந்து

 

இரண்டு மொழி பேசியது.

 

பிளவுண்ட நாக்கின் விஷம்

 

பெருந்துயர் செய்யும் நண்பா.

 

கற்பு நிலையென்று சொல்ல வந்தால்

 

நட்புக்கும் நாவுக்கும்

 

பொதுவில் வைப்போம் இனி.

 

(நன்றி. திண்ணை.காம் 3.8.15)

Edited by seyon yazhvaendhan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 107

பயன்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

இலைகள் உணவு தயாரிக்கின்றன

இலைகள் உணவாகின்றன

இலைகள் உணவு பரிமாறுகின்றன

இலைகள் எரிபொருளாகின்றன

இலைகள் உரமாகின்றன

இலைகள் நிழல் தருகின்றன

இலைகள் சருகாகி சப்தம் செய்து எச்சரிக்கின்றன

இலைகள் குடையாகின்றன

இலைகள் கூரையாகின்றன

இலைகள் ஆடையாகின்றன

இலைகள் பாடையாகின்றன

இலைகள் வர்ணங்கள் செய்கின்றன

இலைகள் தோரணாமாகின்றன

இலைகள் எழுதும் மடலாகின்றன

இலைகள் மருந்தாகின்றன

இலைகள் படுக்கையாகின்றன

இலைகள்  புகைக்கப்படுகின்றன

இலைகள்  போதை தருகின்றன

இலைகள் பூசாரிகளால் மந்திரிக்கப்படுகின்றன

இலைகள் மந்திரிகளாக்குகின்றன

இலைகளின் பயன்களைப் பட்டியலிட்ட கல்வி

இறுதிவரை சொல்லவே இல்லை

இலைகள் கனிகளை மறைப்பதையும்

கவிதைகள் சமைப்பதையும்

seyonyazhvaendhan@gmail.com  நன்றி திண்ணை.காம் 10.8.15

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 108

டெங்கூஸ் மரம்

-    சேயோன் யாழ்வேந்தன்

அதோ

தூரத்தில் தெரிகிற

டெங்கூஸ் மரத்தில்

நேற்றொரு மிண்டோ அமர்ந்திருந்ததைப்

பார்த்தேன் என்றான்

பக்கத்து வீட்டுப் பொடியன் -

வெகு தொலைவிலிருக்கிற மரம்

இன்னதென்றே தெரியவில்லை

தவிரவும் டெங்கூஸ் என்றொரு

மரமே இல்லையென்றேன் -

டெங்கூஸ் மரங்கள்

தூரத்து மலைகளில் மட்டுமே இருக்கின்றன

அவற்றை யாரும் அருகினில் பார்த்ததில்லை

டெங்கூஸ் என்றால்

தூரம் என்றொரு பொருளும் உண்டு

இன்னும் பெயரிடப்படாத

ஒரு மொழியில்  - அது

டெங்கூஸ் மரந்தான்

என்றான் மறுபடியும் -

நேற்று அதில்

அமர்ந்திருந்தது என்னவென்று

மறுபடியும் அவனிடம் கேட்கவில்லை

(நன்றி திண்ணை.காம் 17.8.15)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 109

விலை

-    சேயோன் யாழ்வேந்தன்

 

ஊருக்குப் போனபோது

கருப்பட்டி மணக்க

வறக்காப்பி கொடுத்தாள்

பொன்னம்மாக் கிழவி

எல்லாவற்றுக்கும்

விலை கேட்டுப்

பழகிவிட்ட மகன்

திரும்புகையில் கேட்டான் -

என்ன விலை இருக்கும் இந்த

கருப்பட்டிக் காப்பி என்று -

வாழ்க்கை என்று

மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்

(நன்றி. திண்ணை.காம் 24.8.15)

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 107

பயன்

 

-    சேயோன் யாழ்வேந்தன்

 

 

 

இலைகள் உணவு தயாரிக்கின்றன

 

இலைகள் உணவாகின்றன

 

இலைகள் உணவு பரிமாறுகின்றன

 

இலைகள் எரிபொருளாகின்றன

 

இலைகள் உரமாகின்றன

 

இலைகள் நிழல் தருகின்றன

 

இலைகள் சருகாகி சப்தம் செய்து எச்சரிக்கின்றன

 

இலைகள் குடையாகின்றன

 

இலைகள் கூரையாகின்றன

 

இலைகள் ஆடையாகின்றன

 

இலைகள் பாடையாகின்றன

 

இலைகள் வர்ணங்கள் செய்கின்றன

 

இலைகள் தோரணாமாகின்றன

 

இலைகள் எழுதும் மடலாகின்றன

 

இலைகள் மருந்தாகின்றன

 

இலைகள் படுக்கையாகின்றன

 

இலைகள்  புகைக்கப்படுகின்றன

 

இலைகள்  போதை தருகின்றன

 

இலைகள் பூசாரிகளால் மந்திரிக்கப்படுகின்றன

 

இலைகள் மந்திரிகளாக்குகின்றன

 

இலைகளின் பயன்களைப் பட்டியலிட்ட கல்வி

 

இறுதிவரை சொல்லவே இல்லை

 

இலைகள் கனிகளை மறைப்பதையும்

 

கவிதைகள் சமைப்பதையும்

 

seyonyazhvaendhan@gmail.com  நன்றி திண்ணை.காம் 10.8.15

இலைகளைப் பற்றி இத்தனை தகவல்களை  ஒரு கவிதையில் தந்தமைக்கு நன்றி  சேயோன்.
இலை என்றவுடன் சிறுவயதில் பூவரசம் இலையைச் சுற்றி பீப்.. பீப்.... என்று
ஊதுவது தான் எனக்கு ஞாபகம் வரும்  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலைகளைப் பற்றி இத்தனை தகவல்களை  ஒரு கவிதையில் தந்தமைக்கு நன்றி  சேயோன்.
இலை என்றவுடன் சிறுவயதில் பூவரசம் இலையைச் சுற்றி பீப்.. பீப்.... என்று
ஊதுவது தான் எனக்கு ஞாபகம் வரும்  tw_blush:

உண்மையில் வியக்கிறேன்,  இத்தனை பயன்களைப் பட்டியலிட்டும், அதில் விடுபட்ட ஒன்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள், நன்றி!  

உங்கள் அனுமதியுடன், கவிதையின் அடுத்த பதிப்பில் (அல்லது பதிவில்)  இந்தப் பயனையும் சேர்த்துக்கொள்கிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வார  (27.8.15 - 4.9.15) ஆனந்தவிகடனில் சொல்வனம் பகுதியில் "மந்திரக்காரி" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, யாழ் களத்  தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

மந்திரக்காரி! 

என்னை ஒரு நாய்க்குட்டியாக
இருட்டில் உருட்டும் திருட்டுப் பூனையாக
தலையணை மெத்தையாக
கண்ணீர்த்துளிகளை ஒற்றி
மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாக
மாற்றிக்கொள்ளும் மந்திரக்கோல்
அவளிடம் இருக்கிறது.
பிறர் காணும்போது
அவளை ஆட்டுவிக்கும் மந்திரவாதியாகவும்
என்னை மாற்றிக்காட்டும்
மாயவித்தைக்காரி அவள்.
வார நாட்களில்
என்னை நானாக்கி
வாசல் நிலையில் சாய்ந்து நின்று
வழியனுப்பிவைப்பாள்
மந்திரக்கோலை முதுகில் மறைத்து!
- சேயோன் யாழ்வேந்தன்

 

 

நன்றி. ஆனந்தவிகடன்.

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109675#sign_in_paid

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 110

 

சிகாகோவிலிருந்து சரவணன்

 

அவனேதான்

சிகாகோவிலிருந்து சரவணன் என்று

சிரிக்கிறான் முகநூலில்

அவனேதான்

பெட்ரோல் பங்குகளுக்கு அடியில்தான்

பெட்ரோல் எடுக்கிறார்களென்றான்

ஆரம்பப் பள்ளி நாட்களில்

அவனேதான்

தமிழ் நாடு

இந்தியா என்ற

இன்னொரு நாட்டுக்குள்

எப்படி இருக்கமுடியுமென்றான்

உயர்பள்ளி நாட்களில்

அவனேதான்

தை ஒன்றா

சித்திரை ஒன்றா

தர்க்கம் எதற்கு

தமிழ்ப்புத்தாண்டு

சனவரி ஒன்று

என்பதில் என்ன தவறென்றான்

கல்லூரி நாட்களில் -

அவனேதான்

சிகாகோவில்

கோடிங் எழுதுகிறான்

நான் சொந்த மண்ணில்

கவிதை எழுதுகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 111

எமக்குத் தொழில்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

ஒரு கடனைப்போல்தான்

இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது

ஒரு கட்டாயத்தின் பேரில் தான்

இக்கவிதைக்கு தலைப்பு இடப்பட்டிருக்கிறது

இக்கவிதை உணர்த்தும் சேதி

வேண்டுமென்றே ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது

இக்கவிதை பேசப்படவேண்டுமென்பதற்காக

தன் இயல்பான மொழி மறந்து

வேறுமொழி பேசவைக்கப்பட்டிருக்கிறது

இக்கவிதை சுட்டும் இலக்கு

உங்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காகவே

சுழற்றி வைக்கப்பட்டிருக்கிறது

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி : கீற்று இணைய தளம்.)

எல்லாவற்ரையும் உடனே வாசிக்க முடியாது 
வாசித்தவை அருமை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவற்ரையும் உடனே வாசிக்க முடியாது 
வாசித்தவை அருமை 

நன்றி தோழரே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வார ஆனந்த விகடனில் (17.9.15-23.9.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற  எனது கவிதைவெளியாகியுள்ளதை, யாழ் களத்  தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.  உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி!

உள்ளுறையும் ஈரம்

ஊருக்கு வரும்போதெல்லாம்

அம்மாவிடம் நான்

வழக்கமாகக் கேட்கும் கேள்வி

மழையேதும் பெய்துச்சா?

 

அம்மா கூடுதலாக

இன்னொரு பதிலும் சொல்வாள்

விடுப்பில் வந்தபோது நீயும்

வீட்டுக்கு வந்து போனாய்

வழக்கம்போல் என் நலத்தை

விசாரித்துச் சென்றாய் என்று.

 

நான் இல்லாதபோதும்

என் மண்ணில் மழை பொழிவதும்

என் மனையில் நீ புகுவதும்

எனக்கு மகிழ்ச்சியே.

 

பிடிவாதம் என்ற செல்லாக்காசின்

இரு பக்கங்களாய்

நீயும் நானும்!

-சேயோன் யாழ்வேந்தன்

நன்றி:  ஆனந்த விகடன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 112

 

கடவுளைச் செய்பவள்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

நிலாக்குட்டிக்கு ஒரு பழக்கம்

பூரி சப்பாத்திக்கு மாவு பிசையும்போதெல்லாம்

கடவுளைச் செய்வாள்

பூரிக்கட்டையில் கடைசியில் நசுங்குவது

கடவுளாகத்தான் இருக்கும்

பின்பு உனக்கு எனக்கு என்று

எங்களுக்குள் போட்டி

கடவுளைப் புசிக்க.

(நன்றி கீற்று இணைய இதழ்)

seyonyazhvaendhan@gmail.com

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 113

மராயணம்

 

சுயநலத்துடன் வளர்த்தாலும்

பொதுநலத்துடன் தான்

வளர்கிறது மரம்

*

அறுக்கப்பட்டு செதுக்கப்பட்டு

அடுக்கப்பட்டு

பயணம் செய்வதைவிட

நின்ற இடத்தில்

நிற்பதொன்றும்

குறையில்லை மரங்களுக்கு

*

வளர்க்க வக்கற்ற வாழ்க்கை

வருடியாவது கொடு

இறந்த மரங்களை

வாசிக்கும்போதாவது

*

மக்கட் பண்பில்லா

மரங்களால்

நிரம்பி வழிகிறது

கான்கிரீட் வனம்

****

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 114

அனிச்சம்

விருந்தாளியை

கதவுக்குப் பின்னிருந்து

பயமுறுத்தும் குழந்தைகள்

முன்பைப் போல் இப்போது

எந்த வீட்டிலும் இல்லை

கதவைத் திறக்கும்போதே

நீங்கள் காட்டும் முகம்

பயமுறுத்துவதால் இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 115

49ஓ-வுக்கு முதல் வாக்கு

பெண்பார்க்க வந்தபோது

மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு

சும்மாதான் இருக்கிறேனென்று சொன்னதால்தான்

பரவாயில்லை என்று சம்மதம் சொன்னாளாம்,

கவிதை எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தால்

கல்யாணமே நடந்திருக்காதாம்.

என்னிடம் வாக்குக் கேட்ட இருவரில்

யாருக்குச் சம்மதம் சொல்வதென்று தெரியாமல்

49ஓவுக்கு வாக்களித்ததுபோல்தான்

நான் சொன்ன சம்மதம் என்று

நான் ரோஷப்பட்டுப் பதில் சொன்னது

நல்லவேளை அவளுக்கு இன்றுவரை புரியவில்லை.

-சேயோன் யாழ்வேந்தன்  

(நன்றி : வலைத்தமிழ் இணைய இதழ்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 116

சிறு தெய்வம்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

பால் செம்புடன்

பக்தை ஒருத்தி

திரும்பிச் செல்கிறாள்.

 

மரத்தடிக் கருப்பனை

நான்கு நாய்க்குட்டிகள்

நக்க ஆரம்பிக்கின்றன

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி: கீற்று.காம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 117

 

புனிதம் வளரும் மனிதம்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

புனிதமென்று இப்போது சொல்லுவதை

புசித்தபடிதான் இம்மண்ணில் நுழைந்தனர்

புனிதமென்று சொல்லும் நதியை

பிணக்காடாக்கினர்

புனிதமென்று சொல்லும் மண்ணை

மலடாக்கினர்

புனிதமென்று சொல்லும் நாட்டை

விலைபேசினர்

மனித உயிரும் புனிதமென்று

அவர்கள் சொல்லும்வரை

பொறுமையுடன் காத்திருங்கள்!

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி: கீற்று)

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 118

சிவசக்தி

-    சேயோன் யாழ்வேந்தன்

 

மனிதம் கடந்த

சக்தி ஏதுமில்லாத சிவா

தன் இளநீர் வண்டியை

சாக்கைப் போட்டு மூடி

காவலரைப் பற்றியும் பயமின்றி

சாலையோர மரத்தடியில் விட்டுச்செல்கிறான்.

பக்கத்தில் ஓர் அறையில்

சக்தியை உள்ளே வைத்து,

வெளிப்பக்கம் பூட்டிச் சொல்கிறான் பூசாரி.

seyonyazhvaendhan@gmail.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 119

 

பிரிவின் சொற்கள்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

விடைபெற்ற கடைசிக் கணத்தில்

ரயில் நகரும்போது கிடைத்த

சொற்ப அவகாசத்தில்

‘திரும்பி வருவேன்’ என்றாய்

எப்போதென்று சொல்லவில்லை

நான் இங்கு வந்து

காத்திருக்கவேண்டுமா என்று சொல்லவில்லை

தனியாகத்தான் வருவாய் என்றும் சொல்லவில்லை.

பிரிவின் கடைசிக் கணங்களில்
பரிமாறப்படும் சொற்கள்

பிரிவை விடத் துயரம் தருகின்றன.

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி. திண்ணை.காம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 120

இறுதி விண்ணப்பம்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

சிறுபிள்ளை விளையாட்டுபோல்

எளிதான அந்தச் சிறு உதவியைக்கூட

நான் அவளுக்குச் செய்யவில்லை.

கண்ணீர் மல்க என் கைகளைப் பிடித்து

ஒன்றே ஒன்றைத்தான் அவள் கேட்டாள்

“உன் கவிதைகளில்

என்னையும் ஒரு

கதாபாத்திரமாக்கிவிடாதே”

(நன்றி. திண்ணை.காம்)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 121

 

தனக்கென்று

-    சேயோன் யாழ்வேந்தன்

 

தமக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல்

பொழிந்து போகின்றன மேகங்கள்

தமக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல்

கனிகள் தந்து வாழ்கின்றன மரங்கள்

தமக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல்

பயிர்களை உயிர்களை வாழவைக்கின்றன நதிகள்

தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாத

தங்கத் தாரகையின் ஜொலிப்பில்

ஒளி(ர்)கிறது தமிழ் மண்.

(நன்றி: கீற்று.காம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 122

 

புரட்சித்தாய்

-    சேயோன் யாழ்வேந்தன்

 

ஒரு பெரிய புரட்சிதான்

சிறிய புரட்சிகளைத் தோற்றுவித்தது

சிறிய புரட்சிகள்

தத்தம் குட்டிப் புரட்சிகளைப் பெற்றெடுத்தன.

குட்டிப் புரட்சிகள்

தம் பங்குக்கு

துளித்துளிப் புரட்சிகளைப் பிரசவித்தன

சிறு துளிகள் பல்கிப் பெருவெள்ளமாகி

புரட்சித்தாயை அடித்துக்கொண்டுபோய்விட்டது!

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி: திண்ணை.காம்)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.