Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தா முகாமில் 700 பேர், கடற்படை முகாமில் 35 குடும்பங்கள் ; இவர்களுக்கு என்ன நடந்தது? - த.தே.கூ. கோரிக்கை

Featured Replies

TNA1.jpg

 

உலக நடப்புக்கள் எதுவும் அறியப்படாத வகையில் திருகோணமலை கடற்படை முகாமில் 35 குடும்பங்களும் அதேமுகாமில்  கோத்தா முகாம் என்றழைக்கப்படுகின்ற  பிறிதொரு முகாமில் 700 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது.
 
அத்துடன் திருகோணமலை கடற்படை முகாம் தொடர்பான இந்த சந்தேகங்கள் தொடர்பிலும் அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? சித்தரவதைகள் இடம்பெற்றனவா அவர்கள் இருக்கின்றனரா? இல்லாது செய்யப்பட்டு விட்டனரா என்பது தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சு உடனடியாக கவனம் செலுத்தி அங்கு சென்று ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
 
மேலும், காணாமல் போனோரை  கண்டுபிடிப்பதற்கென நியமிக்கப்பட்ட  ஆணைக்குழுவினர் எத்தகைய தகவல்களை திரட்டியுள்ளனர் என்பதையும் எத்தனை பேரைக்கண்டு பிடித்தனர் என்ற தகவல்கள் தொடர்பிலும் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் வலியுறுத்தியது.
 
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை  சமர்ப்பிக்கப்பட்ட குற்றசெயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான  உதவி மற்றும் பாதுகாப்பு சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தகவல்களை வெளியிட்டதுடன் வலியுறுத்தல்களையும் முன்வைத்தார்.
உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
 
இலங்கையை பொறுத்தவரையில் கடந்த காலங்களில் பல்லாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் பிரகாரம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எழுபதாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
 
20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  காணாமல்போயுள்ளனர். இத்தகைய விடயங்கள்  பற்றி சாட்சியமளிப்பதற்கான சூழல் இங்கு இல்லாதிருந்தது. யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்களாகின்ற நிலையில் கூட கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட தாயும் மகளும் இன்னும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பினை பெற்றுக் கொடுக்கும் வகையில் இங்கு சட்டம் கொண்டு வரப்படுகிறது. ஆனாலும் நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்து வருகின்ற நிலையில் மேற்படி சட்டம் நிறைவேற்றுவதில் அர்த்தம் கிடையாது.
 
பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருக்கும் வரையில் அதனை எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் மீது பிரயோகிக்க முடியும். 18 மாதங்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைக்க முடியும் என்ற நிலை இருக்கின்றது. ஆகவே, இங்கு முதலாவதாக செய்ய வேண்டியது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டியதாகும்.
 
திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மூதூரில் பிரான்ஸ் நாட்டின் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
 
இந்த படுகொலைகள் தொடர்பில் ஆணைக்குழுக்கள் அமைத்து விசாரணைகள் இடம்பெற்ற போதிலும் அவை முழுமையடையவில்லை. சாட்சியாளர்கள் மிரட்டப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டனர். சாட்சியமளித்தவர்களுக்கு கொழும்பில் வீடு தருவதாகக் கூறி பேரம் பேசப்பட்டனர். அச்சுறுத்தல்கள் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று மறைந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
 
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற ரீதியில் சர்வதேச விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. எனினும் அத்தகைய விசாரணைகளுக்கு இங்கு அனுமதி வழங்கப்படவில்லை. எப்படியிருப்பினும் தயாரிக்கப்பட்ட அறிக்கையை செப்டெம்பர் மாதம் வரையில் பிற்போடுவதற்கு புதிய அரசாங்கம் கோரியிருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிகத் தெளிவாகக்கூறியுள்ளார்.
 
விசாரணை அறிக்கையை பிற்போடுவதற்கான தேவை புதிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரையில் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்கென ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. அவ்வாறு ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழு கடந்த இரண்டு வருடங்களாக விசாரணைகளை நடத்தி வந்துள்ளன. உண்மையில் இந்த இரண்டு வருட விசாரணைகளின் பிரதிபலன் தெரியாதுள்ளது.
 
இந்த ஆணைக்குழு இதுவரையில் எத்தனை பேரைக் கண்டுபிடித்திருக்கின்றது என்பது தொடர்பில் நாம் அறிய வேண்டும். எனவே, காணாமல் போனோரைக் கண்டுபிடிப்பதற்காகவென அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் இரண்டு வருட விசாரணைகளின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், திருகோணமலை கடற்படை முகாமில் 35 குடும்பங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குடும்பங்களில் சில குடும்பங்கள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பபட்ட 35 குடும்பங்களும் வெளியுலகில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறியப்படாத வகையிலேயே தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சில குடும்பங்கள் இங்கிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் ஏனைய குடும்பங்களுக்கு என்ன நடந்துள்ளது என்பது தெரியாதுள்ளது.
 
அதேபோன்று திருகோணமலை கடற்படை முகாமில் பிறிதொரு முகாமும் இருக்கின்றது. அந்த முகாம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பார்வையின் கீழான முகாமாக அமைந்திருப்பதாகவும் அங்கு 700 பேர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
 
இது கோத்தா முகாம் என்றே அழைக்கப்படுகின்றது. இந்த 700 பேரும் கூட  வெளியுலகம் தெரியாத வகையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
அப்படியானால் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட 700 பேருக்கும் என்ன நடந்தது?அவர்கள் இருக்கின்றனரா? இல்லையா?சித்திரவதைக்குட்படுத்தப்பட்டனரா இல்லையென்றால் திருகோணமலை கடற்படை முகாமில் இவ்வாறு 35 குடும்பங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனரா? கோத்தா முகாம் அங்கு இருந்திருந்தால் பாதுகாப்பு அமைச்சு உடனடியாக சென்று இவற்றை ஆராய வேண்டும்.
புதிய அரசாங்கம் அமையப் பெறுவதற்கு தமிழ் மக்களின் பங்களிப்பு பாரியதாகும். அதேபோன்று நல்லாட்சி மலர்ந்திருப்பதாகவும் தமிழ் மக்களுடன் இணைந்து நல்லிணக்கத்துடன் செயற்படுவதாக புதிய அரசாங்கம் சர்வதேசத்துக்கு கூறி வருகின்றது.
 
தமிழ் மக்களுடன் நல்லிணக்கம் பேணப்படுவதாக சர்வதேசத்துக்கு கூறுவது உண்மையாயின் இங்கு என்னால் கூறப்பட்ட விடயங்களுக்கு புதிய அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்.
 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

john-amaratunga_0.jpg

திருகோணமலை கடற்படை முகாம் மற்றும் கோத்தா முகாம் விவகாரங்கள் தொடர்பில் உடனடியாகவே பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வருவதாக  பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள்  காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட குற்றச் செயல்களுக்குப் பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பளித்தல் தொடர்பான சட்ட மூலம் 
மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அமைச்சர் ஜோன் அமரதுங்க இங்கு மேலும் கூறுகையில்,
 
கடந்த காலங்களில் பாரிய அளவில் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க உட்பட வடக்கைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்களும் படுகொலை  செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்காகினர். 
 
அதுமாத்திரமின்றி ரகர் வீரர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பிலும் எவரும் சாட்சியமளிக்க முன்வரவில்லை. முன்னைய காலத்தில் சாட்சியம் வழங்குவதற்கு  அச்சமே பிரதானமாக இருந்தது. தற்போது சட்டம் கொண்டு வரப்படுவதால் அத்தகைய அச்ச நிலைமை நீக்கப்படுகிறது.
 
கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் பாரதூரமான குற்றச் செயல்களை அடுக்கிக்கொண்டே செல்ல முடியும். 
 
இதேவேளை திருகோணமலை கடற்படை முகாம் மற்றும் கோத்தா முகாம் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
 
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே இருந்து வருகிறார். எனவே இவ்விடயம் தொடர்பில் உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருவேன் என்றார். 
 

இற்றைவரை ததேகூவிடம் இறுதி யுத்ததிலோ அன்றில் அதற்கு முதலோ காணாமல் போணவர்கள், கடத்தப்பட்டவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்கள் என எந்த ஆணங்களும் இல்லை, அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டவில்லை. சும்மா மூடிய அறைக்குள் இருந்து ஓரிரு அறிக்கைகள் விடுவதை விட ஆவணப்படுத்தபட்ட அறிக்கைகளுடன் சர்வதேச ஊடங்களுக்கு வாருங்கள், வெளியிடுங்கள். 

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த, காணாமல்போன, கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை

இலங்கையின் திருகோணமலை கடற்படை முகாமில் 700 பேர் இரகசியமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த முகாம் 'கோத்தா முகாம்' அழைக்கப்பட்டிருந்ததாகவும் கிடைத்த தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

அந்தப் படைத்தளத்தில் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களும் இரகசியமாக ஒன்றுக்கொன்று தொடர்பின்றியும், வெளியுலகத்திற்குத் தெரியாத வகையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நம்பகமான சிலரிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடுத்தே, இந்த விடயங்களை நாடாளுமன்றத்தில் தான் வெளிப்படுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

'இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது விடுதலை செய்யப்படாமலும் இருக்கலாம். ஆனால், இத்தகைய முகாம் ஒன்று இருந்ததா, அங்கு அவ்வாறு ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்களா, அவ்வறாயின் அங்கு யார் யாரெல்லாம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதைக் கண்டறிந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்' என்றும் அவர் கூறினார்.

இந்த 700 பேரும் 'கோத்தா முகாம்' என்ற பெயர் கொண்ட ஒரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்தவர்களினால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அங்கிருந்தவர்களுக்கு ட்ரக் வண்டிகளில் நாளாந்தம் உணவு கொண்டு செல்லப்பட்டதாகவும் தனக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் கடத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், அகதி முகாம்களில் இருந்து படையினரால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக காணாமல் போயிருப்பவர்கள் பற்றி விசாரணை செய்யும் குழுவுக்கு மக்கள் சட்டப்படி முறையிட்டிருக்கின்றார்கள்.

'அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அந்தக் குழு இன்னும் கண்டறியவில்லை. அதன் விசாரணைகள் தொடர்பான தகவல்களோ அல்லது இடைக்கால அறிக்கையோ வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இவ்வாறு 700 பேர் இரகசியமான ஓரிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற தகவலை உண்மையென்றே நான் நம்புகிறேன்' என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டம்-ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருப்பதாகவும் பிரேமச்சந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

வியாழனன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, அதில் அரச தரப்பில் கலந்து கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரின் கவனத்திற்கும் இந்த விடயத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், பிரதமரும் இது குறித்து விசாரணைகள் நடத்துவதாக தமக்கு உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தப் பிரச்சனை தொடர்பில் அரசாங்கத் தரப்பின் கருத்துக்கள் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/02/150220_trinco_camp

கருணாவுடன் இணைந்து கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் 28 தமிழ் இளைஞர்களை உயர் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் ஒன்று படுகொலை செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்த உயர் கடற்படை அதிகாரிகள் குழுவில் முன்னாள் கடற்படைப் பேச்சாளர் ஒருவரும் உள்ளடங்குவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடத்தல்கள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய மூன்று உயர் கடற்படை அதிகாரிகளில் ஒருவர் தற்போது வெளிநாட்டில் பயிற்சி நெறியொன்றில் கலந்து கொண்டுள்ளதாகவும், விரைவில் அவர் இலங்கைக்கு அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை மற்றும் கொழும்பில் அமைந்துள்ள இரண்டு கடற்படை முகாம்களில் இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனவும், கப்பம் பெற்றுக் கொண்டதன் பின்னர் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயர் கடற்படை அதிகாரி ஒருவரின் காரியாலயத்தை சோதனையிட்ட போது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் கடவுச்சீட்டுக்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் கடத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடற்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் தமிழ் இளைஞர்களை கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடத்தி கொலை செய்தமை தொடர்பில் மிக முக்கியமான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 28 பேரில் 11 பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான சகல விபரங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களிடமிருந்து கப்பம் பெறும் முகவராக கருணாவே செயற்பட்டுள்ளார்.

http://www.jvpnews.com/srilanka/98215.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.