Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்ல மறந்த கதைகள்

Featured Replies

10602616_756269317764112_1631062928_n_th

 

 

அப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ம் ஆண்டு.
சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். ஒருநாள் அந்தப்பாடசாலையில் இன்னொரு ஆசிரியையும் இணைகிறார். அந்த ஆசிரியை அண்மையில் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சமரநாயக்காவின் மனைவி. நாளடைவில் இரண்டு ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள்.
தினமும் பாடசாலை முடிந்தபின் மனைவியை ஜீப்பில் அழைத்துப்போகவரும் இன்ஸ்பெக்டர், அந்த தனவந்தரின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஒருநாள் அப்படி இறக்கிவிடும்போது உள்ளேபோய் ஒரு டீயும் குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும் தனவந்தர் குடும்பமும் நட்பு கொள்கிறது. டீ குடிக்க தினமும் இன்ஸ்பெக்டர் வரத்தொடங்குகிறார். தனவந்தர் இல்லாத டைம் பார்த்தும் வரத்தொடங்குகிறார். இன்ஸ்பெக்டரின் சரளமான ஆங்கிலம், மிடுக்கான சீருடை. கம்பீரம். சரத்ஹாமுவின் மனைவியின் அழகு. சிரிப்பு … இப்படி பல காரணங்கள்.
இன்ஸ்பெக்டருக்கும் சரத்ஹாமுவின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு உருவாகிறது.
 
 
இன்ஸ்பெக்டரின் கண் சரத்ஹாமுவின் மனைவிமீது மட்டுமல்ல. சொத்திலும்தான். சரத்ஹாமுவை கொலை செய்துவிட்டு சொத்தையும் மனைவியையும் நிரந்தரமாக சுருட்டலாம் என்பது அவருடைய எண்ணம். ஜேவிபி பெயராலே கொலை செய்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. பக்காவாக திட்டம் திட்டி, ரவுடிகளை அனுப்பி தனவந்தரை கொலை செய்தும் விடுகிறார். கொலை செய்யப்போன ரவுடி இலவச இணைப்பாக சரத்ஹாமுவின் மனைவியை பாலியல் வல்லுறவும் செய்துவிடவே பிரச்சனை சிக்கலாகிவிடுகிறது. எப்படியே இன்ஸ்பெக்டர்  சாட்சிகளை மடக்கி, ஜேவிபி மீது பழியினைப்போட்டு தப்பி விடுகிறார். சில வருடங்களில் சரத்ஹாமு வீட்டு வேலைக்காரன் மூலமாக உண்மை வெளிவருகிறது. சரத்ஹாமுவின் அரசியல் தொடர்புகளின் அழுத்தம் காரணமாக, கொலை வழக்கை விசாரிக்கவென சிஐடி வருகிறது. மக்கள் இன்ஸ்பெக்டர் மீது ஆத்திரமடைகிறார்கள். பாதுகாப்புக் கருதி வழக்கு நீர்கொழும்பு நீதிமன்றுக்கு இடம் வருகிறது.
 
 
இங்கேதான் நீர்கொழும்பில் வாழும் முருகபூபதி வழக்கு விசாரணையை நேரடியாக அறிந்து அதனை வீரகேசரிக்கு தொடராக எழுதுகின்ற பணியில் அமர்த்தப்படுகிறார். மிக நுணுக்கமாக, சுவாரசியமாக வழக்கு பற்றிய துணுக்குகளை ஒரு திரில்லர் கதைபோலத் தருகிறார். நீதிமன்றத்தின் நடைமுறைகள், கைதிகளுடனான பேச்சுகள், ஜூரிகள் என்று வழக்கு பற்றிய சம்பவங்களும் விசாரணை நீதிமன்றமும் நம் கண்ணுக்கு முன்னே தெரிகிறது.
 
இறுதியில் இன்ஸ்பெக்டர் உட்பட்ட அத்தனை கொலையாளிகளுக்கும் மரணதண்டனை விதிக்கப்படுகிறது.
 
வழக்கு உயர் நீதிமன்றத்துக்குப் போகிறது. இப்போது ஆட்சி மாறிவிடுகிறது. அழுத்தங்களும் குறைந்துவிடுகிறது. உயர்நீதிமன்றத்தில் தகுந்த சாட்சியங்கள் இல்லை என்று சொல்லி மரணதண்டனை விதிக்கப்பட்ட அத்தனைபேரும் வழமைபோன்று விடுதலையாகிறார்கள். அந்த இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை. பணிநிறுத்தப்பட்ட காலத்து சம்பளம்கூட கிடைக்கிறது.
1987ம் ஆண்டு. கொலை நடந்து பதினாறு வருடங்கள் கழிந்துவிட்டன.
மீண்டும் ஜேவிபி கிளர்ச்சிக்காலம். எந்த ஜேவிபி பெயரைப் பயன்படுத்தி இன்ஸ்பெக்டர் அந்த கொலைகளை செய்தாரோ அதே ஜேவிபியினரால் அவரே படுபயங்கரமாகக் கொல்லப்படுகிறார்.
 

 

************************************************************

   

 

“சொல்ல மறந்த கதைகள்”

 

எழுத்தாளர் திரு. முருகபூபதி அவர்களின் இருபதாவது நூல். நீண்டகாலமாக வீரகேசரி  பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து எண்பதுகளின் இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த முருகபூபதியின் பல்வேறு அனுபவங்களின் தொகுப்புத்தான் “சொல்ல மறந்த கதைகள்”. இதில் அவர் செய்த பயணங்கள் இருக்கும். பார்த்து வியந்த மனிதர்கள் இருப்பர். அரசியல் சம்பவங்கள் இருக்கும். அரசியல் இருக்கும். மனிதம் இருக்கும். புனைவு கலக்காமல், தன்னுடைய அனுபவங்களை “ரிப்போர்ட்” பண்ணும் ஒரு தேர்ந்த பத்திரிகை நிருபரின் புத்தகம் “சொல்ல மறந்த கதைகள்”
 
 
முருகபூபதி அவர்கள் ஒரு அனுபவ மூட்டை. அனுபவம் என்பது எல்லோருக்கும் கிடைப்பது.  ஆனால் முருகபூபதியினுடையது பிரத்தியேகமானது. வெகு சுவாரசியமானது. நம்முடையதிலிருந்து சற்று மாறுபட்டது. அத்தோடு முருகபூபதிக்கு அவருடைய எந்த அனுபவங்கள் சொல்லப்படவேண்டியவை, தேவையானவவை என்பதும் தெரிந்திருக்கிறது. அவர் சிறுவனாக இருந்தகாலத்திலே 56ம் ஆண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. அதன்பின்னர் தொடர்ந்த அரசியல் குளறுபடிகள். பின்னர் எழுபதுகளின் சிறிமா ஆட்சியில் அவர் ஒரு உத்தியோகம் பார்க்கின்ற இளைஞர். இந்தியா, இலங்கை, விடுதலை மற்றும் கிளர்ச்சி இயங்கங்கள் பெயரால் நிகழ்த்தப்பட்ட பல அரசியல் சூறாவளிகள் இடம்பெற்ற காலப்பகுதியான 80களில் அவருக்கு நடுத்தரவயது. அப்போது அவர் பத்திரிகை நிரூபர்.
 
ஈழத்தின் அந்தக்காலத்து தமிழ் எழுத்துக்கள் வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த, தளமாகக் கொண்ட எழுத்துகளால் நிரம்பியிருக்கையில், நீர்கொழும்பு மற்றும் கொழும்பிலிருந்து முற்றிலும் வேறுவிதமான பார்வையில் அனுபவங்களை பகிருகின்ற எழுத்தாளராக இந்த நூலிலே முருகபூபதி தெரிகிறார். அந்தப் பார்வையை தருகின்ற நூலாக “சொல்ல மறந்த கதைகள்” மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு அனுபவத் தொகுப்பு இரண்டு முறைகளால் சுவாரசியமாக்கலாம். ஒன்று சாதாரண அனுபவத்தை எழுத்தாளர் தன்னுடைய அபரிமித எழுத்துநடையால் சுவாரசியமாக்குவது. இரண்டாவது, எழுத்து நடை சாதாரணம் என்றாலும் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்கும்பட்சத்திலும் புத்தகம் நன்றாக இருக்கும். “சொல்லமறந்த கதைகள்” இதில் இரண்டாவது ரகம்.
 
 
ஒரு பத்திரிகை நிருபரின் வாழ்க்கை மிகச்சிக்கலானது. நேரம் காலம் இல்லாத வேலை. செய்திகளை உறுதிப்படுத்தாமல் வெறுமனே போடமுடியாது. தமது செய்திகளை போடுமாறு பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் நெருக்கடி கொடுக்கும். அநாமதேய அழைப்புகள் வரும். போட்டால் “போட்டுவிடுவோம்” என்று இன்னொரு பக்கம் நெருக்கடி வரும். வேறு தொலைபேசியில் இன்னொரு கட்சிக்கோ, இயக்கத்துக்கோ அவதூறு ஏற்படும் நோக்கில் கொலைகளுக்கு, சம்பவங்களுக்கு உரிமை கோரப்படும். எது செய்தி, எது போலி என்று இனம்காண வேண்டும். கரணம் தப்பினால் மரணம், பொல்கொட ஆற்றிலோ, கஸ்தூரியார் ரோட்டிலே பிணமாக கிடக்கவேண்டும். இப்படியான அரசியல் சூதாட்டங்களுக்கு மத்தியில் பணிபுரியும் பத்திரிகையாளருக்கு சம்பளம் எதுவோ கிள்ளுக்கீரைதான். பிள்ளையின் பால்மா செலவுக்காக தொடர்கதை எழுதி ஐம்பது ரூபா வாங்குகின்ற நிலையில்தான் முருகபூபதி இருந்திருக்கிறார்.
 
 
அப்போது இணையம் இல்லை. மொபைல் போன் இல்லை. சாதாரண தொலைபெசிகளே பரவலாக இல்லாதசமயம். செய்தி சேகரிப்பு என்பதை அவ்வளவு எளிதாக செய்துவிடமுடியாது. அதுவும் கொழும்பில் இயங்கும் பத்திரிகை நிருபருக்கு யாழ்ப்பாணத்து செய்திகள் சேகரிப்பது என்பது பெரும் சிக்கல். செய்திகளை எப்படியேனும் உடனடியாக பெற்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தில் ஊரிலிருந்து பயணத்தால் வரும் நண்பர்களிடம் கூட “ஏதாவது புதினம் இருக்கிறதா?” என்று கேட்டு அறிந்து எழுதும் வழக்கம் கூட இருந்திருக்கிறது.
 
 
அப்படி நடந்த ஒரு சம்பவம்தான் முருகபூபதியை பெரும் அலைச்சலில் கொண்டுபோய்ச்சேர்த்திருக்கிறது.
 
1986ம் ஆண்டு நவம்பர் மாதம். வடக்கு கிழக்கில் தமிழ் இயக்கங்களின் பிரசன்னம் உச்சநிலையடைந்து ஸ்ரீலங்கா படையினர் முகாம்களுக்குள்ளேயே முடங்கியிருந்த காலப்பகுதி.
 
காலையில் கொழும்பு வீரகேசரி அலுவலகத்துக்கு வழமைபோல வேலைக்கு வந்த முருகபூபதி, அப்போதுதான் ஊரிலிருந்து வந்திறங்கிய நண்பர் திக்வயல் தர்மகுலசிங்கத்திடம் “யாழ்ப்பாணப் புதினம்” பற்றி எதேச்சையாக கேட்கிறார். “வடமராச்சியில் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் சில பொதுமக்கள் இறந்திருக்கிறார்கள். மந்திகை ஆஸ்பத்திரிமீது ஹெலியும் அடித்திருக்கிறது” என்று அவர் புதினம் சொல்கிறார். அவ்வளவுதான். இதைக்கேட்ட முருகபூபதி உடனடியாகவே யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகக்கடையை தொடர்புகொண்டு, உள்ளூர் பத்திரிகைச் செய்திகளை அறிந்துகொள்கிறார். அடுத்ததாக அரசாங்க அதிபர் பஞ்சலிங்கத்தையும் தொலைபேசியில் அழைத்து விஷயத்தை உறுதிப்படுத்துகிறார். செய்தி அச்சுக்குப்போகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் அமிர்தலிங்கம் அப்போது தமிழ்நாட்டில் இருந்தசமயம். பொதுவாக அவர் நாட்டு நடப்புகளை அவர் வீர்கேசரியிடம் தொடர்புகொண்டு  அறிந்தபின்னர் இந்தியா மற்றும் ஏனைய சர்வதேச ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவார்.
 
அன்றைக்கென்றுபார்த்து அமிர்தலிங்கம் தொலைபேசி அழைக்க, முருகபூபதி வடமராச்சி சம்பவத்தைப்பற்றி தெரிவிக்க, விடயம் இந்திய பத்திரிகைகளுக்கு பரவிவிடுகிறது. அது ஜே.ஆர் இந்தியாவில் ஒரு மாநாட்டுக்காக இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த சமயம். அவரைச்சந்தித்த ராஜீவ்காந்தி ஜே. ஆரிடம் இதுபற்றி விசாரிக்கவும், சிக்கல் பெரிதாகிறது. ஜே.ஆர் நாடு திரும்பியபின்னர் அரசாங்கத்தினால் வீரகேசரி அலுவகத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அந்த அழுத்தம் நிர்வாகம், பிரதம் ஆசிரியர்வழி வந்து கடைசியில் முருகபூபதியின் கழுத்தை நெரித்துவிடவே, முருகபூபதியே யாழ்ப்பாணம் சென்று, குறிப்பிட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர் குடும்பங்களைச் சந்தித்து, ஆதாரங்களை திரட்டி வீரகேசரி ஆசிரியர்பீடத்துக்கு கொடுக்கவேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு வருகிறது. அதுவும் யாருக்கும் தெரியாமல் சுகவீன லீவிலேயே முருகபூபதி யாழ்ப்பாணம் போகிறார். அவர் செய்திகளை ஆர்மியிடமிருந்து மறைத்து இரகசியமாக கொண்டுவந்ததிலும் பெரும் ஆபத்து இருக்கிறது.
 
 
இந்த சம்பவங்களைக் அறிக்கையில் பத்திரிகையாளர் தொழில் மீது நாம் கொள்ளும் மதிப்பு ஒருபடி உயரும். இன்றைக்கு ஏராளமான ஈழத்து பத்திரிகைகள், இணையத்தையும்  ஏனைய பத்திரிகைச் செய்திகளையும் கேட்டுக்கேள்வியில்லாமல், அனுமதியின்றி திருடி வெளியிடுகையில், ஒரு செய்தி சேகரிப்பை நேர்மையாகவும், அதன் ஆதாரங்களை அறிவதற்காக கடின முயற்சிகளையும் மேற்கொண்ட தலைமுறையை வாசித்தறியும்போது எமக்கு மரியாதை கலந்த வியப்பே ஏற்படுகிறது.

 

 

poopathlast-Copy-2_thumb%25255B3%25255D.

 

சமகாலத்தில் முருகபூபதிக்கு இடதுசாரித்தொடர்புகளும் இருந்திருக்கின்றன. மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்கிறார். செஞ்சக்தியில் எழுதியிருக்கிறார். ரோகண விஜேவீரவுடன் நட்பும் கொண்டிருக்கிறார். இடதுசாரிக் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்திருக்கிறார். புதுவையோடு நெருங்கிய நட்பு அவருக்கிருந்திருக்கிறது. தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரோடும் ஓரளவுக்கு பரிச்சயம் கொண்டவர். இப்படி பன்முக இயல்புகள் கொண்ட நபர்களோடு பழகியிருக்கிறார். இவ்வெல்லா மனிதர்களையும் தனி மனிதர்களாவே இந்த நூலில் நுழையவிட்டிருக்கிறார். புதுவை விடுதலைப்புலிகளின் உறுப்பினராக பார்க்கப்படாமல் முருகபூபதி அறிந்த இரத்தினதுரையாகவே வருகிறார். ரோகண விஜெவீரவிடம் துணிச்சலாக அவருடைய தவறுகளை சுட்டிக்காட்டிஇருக்கிறார்.
 
ஜே. ஆர். ஜெயவர்த்தன முதற்கொண்டு சாதாரண இராணுவ அதிகாரி, முன்வீட்டு சிங்களக்குடும்பம், பிரபாகரன், முன்னால் இலங்கைப் பிரதமர் தஹாநாயக்கா, தமிழ் தெரிந்த புத்த பிக்கு என எல்லோருமே மிகைப்படுத்தல் இல்லாத இயல்பான மனித குணங்களோடு உள்ளது உள்ளபடியே காட்டப்படுகிறார்கள். பத்திரிகையாளர் பின்னணியில் இருந்து வந்தமையால் உணர்ச்சிவசப்படாமல் முருகபூபதியால் இப்படி எழுத முடிகிறது என்று நினைக்கிறேன். முன்முடிபுகள் இல்லாமல் மனிதர்களையும் அமைப்புகளையும் அனுபவங்களையும் பதிவு செய்யும் பண்பு ஒரு சிறந்த கட்டுரை எழுத்தாளனுக்கு அவசியமாகிறது. இது இப்போதைய பத்திரிகையாளர்களுக்கும், பத்தி எழுத்தாளர்களுக்கும் ஒரு பாலபாடம்.
 
 
உண்மை சொள்ளப்ப்படும்போதே பொய்யாகத் தொடங்கிவிடும் என்பார் எழுத்தாளர் சுஜாதா. அனுபவங்களை புனைவு கலக்காமல் பகிர்வது என்பது இலகுவான காரியம் அல்ல. ஏனென்றால் நிஜவாழ்க்கை, புனைவு அளவுக்கு சுவாரசியமானதாக இருக்காது. சுவாரசியமான விசயங்களுக்கு மத்தியில் கூட ஏராளமான சுவாரசியமற்ற சம்பவங்கள் இருக்கும். எழுத்தாளனின் சவால் எதுவென்றால் இவற்றில் எதை எழுதி எதை எழுதாமல் விடுவது என்பதை முடிவு பண்ணுவதுதான். அனுபவங்களை எழுதும்போது எண்ணம் எங்கெல்லாம் போகிறதோ அவற்றை அப்படியே எழுதுவது ரிஸ்க்கானது.
 
வாசகனையும் அதே எண்ண ஓட்டத்துக்குள் செலுத்தமுடியாமல் போனால் கட்டுரை சறுக்கிவிடும். இந்த நூலில் அந்த சறுக்கல்கள் பல இடங்களில் இருக்கிறது. சில சம்பவங்கள் பத்திரிகை துணுக்குப் போன்று தகவல்களாகவே கொடுக்கப்படுகின்றன. இடையிடையே முருகபூபதி இந்தக்காலத்துக்கு வந்துபோகிறார். எடுகோள்கள், உதாரணங்கள், பழமொழிகள் என்று பல சொல்கிறார். இவை எல்லாமே ஒரு அனுபவ கட்டுரைகளுக்கு தேவைப்படுவதில்லை. வாசகன் அந்த அனுபவத்தை அடைந்துகொண்டிருக்கையில் எழுத்தாளரே இடையிடையே குறுக்கே வந்தால் வாசகனின் கனவு கலைந்துவிடும். பிறகு அவனை மீண்டும் கனவு காண வைப்பது கடினம்.
 
முருகபூபதியின் எழுத்தில் இடையிடையே வெளியே போய் “டீ” குடித்துவிட்டுவரும் இயல்பு அடிக்கடி நடக்கும். ஆனால் இவை எல்லாமே ஒவ்வொரு கட்டுரையினுடைய மூலத்துக்கு முன்னாலே அடிபட்டுப்போகின்றன. முருகபூபதி அவர்கள் தயவு தாட்சண்யமின்றி கட்டுரைகளை மேலும் எடிட் பண்ணியிருந்தால், இந்தப்புத்தகம் இன்னமும் அதிகமாக எங்களோடு ஒன்றியிருக்கும்.

 

 

குஞ்சியம்மா

 

அரியாலை பிள்ளையார் கோயிலடியில் வாழுபவர். கணவன் வெளிநாட்டில் வேலைசெய்ய,  இளந்தாரிப் பிள்ளைகளை குஞ்சியம்மாவே தனியாக வளர்த்துவருகிறார். எண்பதுகளில் அது இலகுவான வேலை அல்ல. பிள்ளை எந்த இயக்கத்துக்குப் போவான் என்று தெரியாது. எவன் தூக்குவான் என்று தெரியாது. ஆர்மி சுடுவானா, கொண்டுபோவானா அதுவும் தெரியாது. குஞ்சியம்மா கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்க்கிறார்.
 
 
மூத்தமகன் டெலோவில் சேருகிறான்.
 
டெலோக்காரனை சுடுவதற்கு ஆர்மியும் கலைக்கிறது. புலிகளும் கலைக்கிறார்கள். பெடியன் இந்தியாவுக்கு ஓடுகிறான்.  கொஞ்சநாளில் டெலோ தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டபின்னர், டெலோ வேட்டை முடிந்தது என்று நம்பி மகன் ஊருக்கு வருகிறான். அவனை நோர்வே நாட்டுக்கு அனுப்ப குஞ்சியம்மா முழுமூச்சில் இயங்குகிறார். ஆனால் அவன் வெளிக்கிட முன்னமேயே புலிகள் அவனை விசாரணைக்காக பிடித்துவிடுகிறார்கள். பின் ஒருமாதிரி காலில் கையில் விழுந்து மகனை மீட்டுக்கொண்டு குஞ்சியம்மா கொழும்பு பயணம் ஆகிறார். ஆனால் வழியில் ஆனையிறவில் வைத்து அவனை ஆர்மி பிடிக்கிறது.
 
பலாலி முதல் பூசாவரை மகனை ஆர்மி கொண்டுதிரிய குஞ்சியம்மாவும் பின்னாலே திரிகிறார். ஒவ்வொருவர் காலில் விழுகிறார். சட்டத்தரணி, அரசியல்வாதி, பத்திரிகையாளர், வர்த்தப்பிரமுகர்  என்று பலவிதமான கால்கள். ஊர்க்காணியை விற்றுச் செலவழித்தும் குஞ்சியம்மாவின் மகன் விடுதலையாகும் சிலமன் இல்லை. ஊர்கோயில்கள் எங்கும் அர்ச்சனை செய்கிறார். கடவுள் கண் வைக்கவில்லை.
 
ஒரு வழியாக இலங்கை இந்திய ஒப்பந்த பிரகாரம் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவே, மகனும் வெளியே வருகிறான். வந்த கையேடு அவனை குஞ்சியம்மா வெளிநாடு அனுப்புகிறார். இப்போது அவன் திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளோடு வெளிநாட்டில். குஞ்சியம்மாவின் ஏனைய பிள்ளைகளும் வெளிநாட்டில். வெளிநாட்டில் இருந்த குஞ்சியம்மாவின் கணவர் ஊர் திரும்பி கொஞ்சநாளில் காலமாகிப்போனார்.
 
 
குஞ்சியம்மா இன்றைக்கும் தனியனாக அரியாலை பிள்ளையார் கோயிலில் பிள்ளைகளுக்கு அர்ச்சனை செய்துகொண்டிருக்கிறார்.
"சொல்ல மறந்த கதைகள்" நூலில் இந்த அத்தியாயத்தை வாசித்தபோது எனக்கு முருகபூபதியே குஞ்சியம்மாவாக தெரிந்தார். நான் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த சமயம் முருகபூபதியே என்னை இனம்கண்டு தொடர்புகொண்டு எழுத்தாளர் விழா ஒன்றில் உரையாற்றுமாறு அழைத்தார். ஜீவநதி சஞ்சிகைக்கு சிறுகதை எழுதி அனுப்பச்சொன்னார். அனுப்பியதில் தேவையான திருத்தங்களை தானே செய்யாமல் எனக்கு எடுத்துச்சொல்லி திருத்தவைத்தார். என் நூல் வெளியீட்டுக்கு உறுதுணையாக நின்றார். அவருக்கும் எனக்கும் எழுத்து என்பதைத்தவிர வேறு எந்த தொடர்புமில்லை.
 
ஆனால் பிள்ளைபோன்று கவனித்தார். என்னை என்றில்லை, அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற ஒவ்வொரு தமிழ் ஆர்வலரையும் வளர்த்துவிடுபவர் முருகபூபதி. தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுப்பவர். அவரை பயன்படுத்திவிட்டு பலர் ஏறி மிதித்தும் சென்றிருக்கிறார்கள். துரோகி என்பார்கள். முருகபூபதி எதுவுமே நடக்காததுபோல அடுத்து வருபவனை வளர்க்கத்தொடங்குவார். அவர் செய்யும் சேவையை மறந்துபோனால் எமக்கெல்லாம் சாப்பாடு செரிக்காது.
 
இந்த நூலில் குஞ்சியம்மாவின் உண்மைக்கதையை சொல்லும் அத்தியாயத்துக்கு அவர் இப்படி தலைப்பு கொடுத்திருப்பார்.

 

"வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை"

 

முருகபூபதியும்தான்.

 

http://www.padalay.com/2014/12/blog-post_22.html

 

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.