Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்வினை- காயப்படுத்தும் கத்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வினை - காயப்படுத்தும் கத்திகள்

கருணாகரன்

aaaaa.png

“நஞ்சுண்டகாடு“ நாவலைப்பற்றி எழுதும் இரவி அருணாசலம் அந்த நாவலுக்கு அப்பால், அதனுடைய விமர்சனத்துக்கு அப்பால், அந்த நாவலை எழுதிய குணா கவியழகனைப் பற்றிய தவறான புரிதல்களையும் எழுதியிருக்கிறார். முகநூலிலும் இணையத்திலும் பிற ஊடகங்களிலும் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இழைத்து வருகின்ற வழமையான தவறு இது. போதாக்குறைக்கு அதற்குப் பயன்படுத்தப்படும் சொற்கள், அவற்றை முன்வைக்கும்முறை போன்றன மிகவும் தரந்தாழ்ந்தவையாகவும் அமைந்து விடுகின்றன. இது ஏன் நிகழ்கிறது என்றால், படைப்பைப் பார்ப்பதையும் விட, படைப்பாளியையும் படைப்பாளியின் அரசியலையும் அவருடைய பின்புலங்களையுமே இவர்கள் அதிகமும் நோக்குகிறார்கள். படைப்பையும் விட படைப்பாளியின் பின்புலமும் படைப்பாளியின் அரசியலுமே (நோக்குமே) இவர்களுக்குப் பிரச்சினையாக உள்ளது. இதுதான் இவர்களுக்கு முக்கியமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. இதனால் அந்த நோக்கின் அடிப்படையில் படைப்பாளியின் பின்னணியை ஊகிக்க முற்படுகிறார்கள். கவனிக்கவும், படைப்பைப்பற்றி, படைப்பாளியைப் பற்றி முறையாக ஆராய்வதற்குப் பதிலாக படைப்பாளியைப் பற்றி தங்கள் மனம்போன போக்கில் ஊகிக்க முற்படுகிறார்கள்.

இதனால் ஊகத்தின் அடிப்படையில் படைப்பாளியை முன்னிறுத்திப் படைப்பை அணுகும் போக்கை உருவாக்குகிறார்கள். இரவி அருணாசலம் இந்தத் தாழ் நிலையிலிருந்து சற்று விலகியிருந்தாலும் குணா கவியழகன் மீதான கேள்விகளை முன்வைத்த விதமும் அவரைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பிய முறையும் தவறானது. வருத்தத்திற்குரியது. இதற்கான அடிப்படைக்காரணம், முற்றிலும் ஊகங்களால் எழுந்த சந்தேகங்களே. இந்தச் சந்தேகங்கள் குணா கவியழகனைப் பற்றித் தவறான புரிதல்களை இரவி அருணாசலத்திடம் ஏற்படுத்தியிருக்கிறது. இதை அடியொற்றி, தீபச்செல்வனும் சந்தேசங்களின் பின்னாலும் ஊகங்களின் பின்னாலும் அலைகிறார். இதுதான் நமது இன்றைய அவலம்.

“நஞ்சுண்டகாடு“ நாவல் எழுதப்பட்டுப் பிரசுரத்திற்காக முயற்சிக்கப்பட்டபோது எழுந்த தடைகளால், அல்லது அனுமதியின்மையால் நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்டு, பெரியதொரு காத்திருப்பின் பின்னர் இப்பொழுது வெளியாகியிருக்கிறது. தாமதித்து வந்திருந்தாலும் இப்பொழுதாவது பிரசுரமாகியிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியது – வரவேற்க வேண்டியது. இந்த நாவல் முன்பு, “ஏணைப்பிறை“ என்ற பெயரில் தயாராகியிருந்தது. இப்பொழுது “நஞ்சுண்டகாடு“ என்று வந்திருக்கிறது. ஏணைப்பிறை என்ற தலைப்புடன் 2005 இல் இந்த நாவலை உட்சுற்றில் கவியழகனுடன் நெருக்கமாக இருந்த போராளிகளிற் சிலரும் நான் உட்பட, நிலாந்தன், மு. திருநாவுக்கரசு, பாலகுமாரன் போன்றவர்களும் வாசித்திருந்தோம். “நல்ல முறையில் நாவல் இருப்பதால் அதை வெளியிடுவது நல்லது. போராட்ட அமைப்பிலும் நடைமுறைகளிலும் இருக்கும் விடயங்களை மென்னிலை விமர்சனமாகவும் உள்ளோட்டமாகவும் நாவல் சொல்வதால், அது போராட்டத்திற்கு மேலும் செழுமையை அளிக்கும். குறைபாடுகளைக் களைவதற்கான பார்வையையும் உந்துதலையும் வழங்கும்“ என்று அபிப்பிராயப்பட்டோம். இதனால் அதனைப் பிரசுரிக்கும் முயற்சிகளை குணா. கவியழகன் மேற்கொண்டார்.

அப்பொழுது தொடர்பாடலில் நெருக்கமாக இருந்த கி.பி. அரவிந்தனுக்கு இந்த நாவல் அனுப்பப்பட்டது. அதைப்படித்தபின், வெளியிடவேண்டும் என்ற ஆவல் கி.பி அரவிந்தனுக்கு ஏற்பட்டது. அதற்காக தமிழகத்தில் பா.செயப்பிரகாசத்துடன் தொடர்பு கொண்டு பதிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டார்.. இதற்கான முன்னுரையை நாவலைப் படித்து குணா. கவியழகனுடன் அது பற்றிப் பேசிய வே. பாலகுமாரன் எழுதினார்.

ஆயினும் நாவலை வெளியிடுவதற்கு ஒரு அனுமதிப்பிரச்சினை இருந்தது. குணா கவியழகன் போராளியாக – விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக – இருந்த காரணத்தினால் அந்த அமைப்பினுடைய அனுமதி அல்லது ஒப்புதல் பெறுவது சம்பிரதாயபுர்வமாக முறைமை. ஆகவே, நாவலைப்பற்றிய தகவலை அமைப்பிற்குத் தெரியப்படுத்துவது பொதுவான ஒரு விடயம் என்ற நிலையில் நாவலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் அனுப்பிவைத்தார் கவியழகன். “நல்லது வெளியிடுங்கள்“ என்று பிரபாகரன் தெரிவித்தார். ஆனால் இடையில் நின்றவர்கள் எப்படியோ அதைக் குழப்பினார்கள். இதனால் மீண்டும் இதைப்பற்றி குணா கவியழகன் பிரபாகரனிடம் தெரியப்படுத்தினார். அவர் மீண்டும் சம்மதித்தார். எனினும் எப்படியோ இடையில் நின்றவர்கள் மீண்டும் குழப்பிவிட்டார்கள்.

இதனால் தமிழகத்தில் பதிப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த பா. செயப்பிரகாசம் அனுமதிக்காக அல்லது ஒப்புதலுக்காகக் காத்திருந்தார். நாட்கள் நீண்டன. மௌனமே பதிலாக நீண்டு கொண்டிருந்தது. அப்பொழுது இந்த நாவலைப்பற்றிப் பிரசுரிப்பதைப் பற்றி உட்சுற்றில் வாசித்தவர்கள் தமிழ்ச்செல்வனிடம் விசாரித்தனர். அதற்கு அவர் சொன்னார், “இப்பொழுதுள்ள சூழலில் இதை வெளியிடுவது பொருத்தமில்லை“ என்று. இந்தப் பேச்சுடன் நாவல் கிடப்பில் போடப்பட்டு விட்டது. ஆயினும் இது தொடர்பான துக்கம் எல்லோர் மனதிலும் இருந்தது. நல்லதொரு நாவல், உரிய காலத்தில் வரவேண்டிய நூல், அதற்கான வாய்ப்பை இழந்து போயிருக்கிறது என்று. எனினும் இது தொடர்பாக பாலகுமாரனும் இன்னும் சிலரும் தமிழ்ச்செல்வனுடன் தொடர்ந்து பேசினார்கள். சாதகமான பதில் கிடைக்கவில்லை என்ற அளவில் நாவலின் பதிப்பு முயற்சிகளில் எத்தகைய முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. இந்த நிலையில் யுத்தம் தீவிரமடையத்தொடங்கச் சூழலும் மாறியது. நாவலைப்பற்றிப் பேசுவதை விட வேறு விடயங்கள் முக்கியமாகி விட்டன. அதன் பிறகு எதைப்பற்றியும் பேச முடியா வாழ்க்கை.

இதேவேளை யுத்தத்தின் இறுதிவரை அந்தக் களத்திலே வாழ்ந்து, தடுப்பு முகாமுக்குச் சென்று மீண்டவர் குணா கவியழகன். அதையும் விட அவர் 1990 களில் போர்க்களத்தில் தன்னுடைய ஒரு காலை முழுதாகவே இழந்தவர். மேலோட்டமான பார்வையில் குணா கவியழகனுக்கு இப்பொழுது ஒரு கால் இல்லை என்று சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், கால் இல்லை என்பதை விட தன்னுடைய கால் ஒன்றை முழுதாகவே இந்தப் போராட்டத்துக்காக, பொதுவாழ்வுக்காக இழந்தவர் என்பதே நாம் உணரவேண்டியது. அதன் வலியை இன்றுவரை குணா கவியழகனும் அவருடைய குடும்பமும் சுமந்து கொண்டிருக்கிறது என்பதை ஆழமாக உணர்வோரினால் புரிந்து கொள்ள முடியும். இதையெல்லாம் இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற ஒரு நிலையை, அவசியத்தைத் தமிழ்ச் சூழல் கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு அபத்தமானது? எவ்வளவு கொடுமையானது?

பொதுவாழ்வில் ஈடுபட்டதன் விளைவாக இளமைக்காலத்தில் தொடர்ந்திருக்க வேண்டிய கல்வியை இழந்தவர். குணா கவியழகன். குணா கவியழகனின் தந்தை ஒரு கணக்காளர். 83 இனக்கலவரத்தோடு உயர் பதவி உத்தியோகத்தை உதறிவிட்டுக் கொழும்பில் இருந்து குடும்பத்தோடு ஊர் திரும்பியவர். குணா கவியழகனின் சகோதர்கள் உயர் கல்வி கற்று இன்று பொருத்தமான – உயர் பதவிகளி்ல் இருக்கிறார்கள். இப்படியான குடும்பப்பின்னணியில் வந்த குணா கவியழகன், தன்னுடைய கல்வியை இழந்து, காலினை இழந்திருக்கவும் வேண்டியதில்லை. என்றபோதும் சளைத்து விடாமல் பல போராட்டப்பணிகளையும் பொதுப்பணிகளையும் செய்துகொண்டிருந்தார். செய்த பணிகளின் காரணமாகவும் தன்னுடைய திறன்களின் நிமித்தமாகவும் இயக்கத்திலும் வெளியிலும் தெரியவந்தார். அதனால் தனியான அடையாளத்தோடு துலங்கியவர். இலக்கியத்தில் மட்டுமல்ல அரசியற் சிந்தனையிலும் அவருடைய சிந்தனையும் அவதானங்களும் முக்கியமானவை. நஞ்சுண்டகாடு நாவலிலேயே இதைக் கூர்மையான வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

குணா கவியழகன் அந்த நாட்களில் எழுதிய “களத்து மேடு“ என்ற களவாழ்வைச் சாராம்சமாகக் கொண்ட படைப்புகள் முக்கியமானவை. குணா கவியழகனின் ஆழமான படைப்பு மனவெளிப்பாட்டின் முதல் அடையாளங்களாகவும் சாட்சியங்களாகவும் “களத்துமேடு“ பதிவுகள் உள்ளன. அவை நூலுருப்பெறும்போது இதை வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் இந்தப் பிரதிகளைப் பெற முடியாத நிலையில் யுத்தம் இவற்றையும் சிதைத்து விட்டது. யாரேனும் களத்து மேடு பிரதிகளை வைத்திருப்பவர்கள் தந்துதவினால் அவை நூலுருப்பெறும். இதைத் தவிர, இன்னும் ஏராளமான அரசியல் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் கவியழகன். எல்லாவற்றையும் விட முக்கியமானது, “அமெரிக்காவின் ஆசிய மறுசீராக்கற் கொள்கையும் எங்கள் எதிர்காலமும்” என்ற தலைப்பைக் கொண்ட ஆய்வு. இந்த ஆய்வு உரிய தரப்பினால், உரிய முறையில் உரிய காலத்தில் கவனம் கொள்ளப்பட்டிருக்குமானால் நடந்த பேரழிவைத் தடுத்திருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் அந்தப் பேரழிவைக் குறைத்து, அதன் பாதிப்பைத் தணித்திருக்க முடியும். இப்பொழுது கூட இந்த ஆய்வுக்கான கவனம் அப்படியேதான் உண்டு.

எனவே, இவ்வாறான உண்மைப் பின்னணியைக் கொண்ட குணா கவியழகனைப் பற்றி இரவி அருணாசலமும் தீபச்செல்வனும் அவசரப்பட்டு, பதற்றமடைந்த நிலையில் எதையெல்லாமோ ஊகித்துக் கொட்டியிருக்கின்றனர். இது வருத்தமளிப்பது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும்கூட. இந்த ஊகங்களை இரவி அருணாசலம் எப்படித் தன்னுள் எழுப்பிக் கொண்டார் என்றால், இதற்கு முன்னுரை எழுதிய பாலகுமாரனும் நானும் கி.பி. அரவிந்தனும் ஈரோஸ் இயக்கப்பின்னணியைக் கொண்டவர்கள். ஏறக்குறைய பா. செயப்பிரகாசமும் இடதுசாரியப் பின்னணியுடைய ஈழப்போராட்ட ஆதரவாளர். ஆகவே இவர்கள் எல்லாம் இந்த நாவலோடும் குணா கவியழகனோடும் தொடர்பில் உள்ளதால், நிச்சயமாக ஏதோ ஈரோஸ் தொடர்பான பின்னணி கவியழகனுக்கும் இருக்கலாம் என்று ஊகிக்கிறார். அதனால் இவற்றை வைத்து ஒரு தனியான சித்திரத்தைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப இரவி உருவாக்கிக் கொண்டார். இதனால்தான் எடுத்த எடுப்பிலேயே குணா கவியழகனை “ஈரோஸ் குணத்தின் மகனா நீங்கள்?“ என்று கேட்கிறார். இதை அடியொற்றி, இந்தப் புனைசித்திரத்தை தீபச்செல்வனும் கொண்டாடத் தொடங்கி விட்டார்.

ra-com-1024x629.png

ஆகவே, தவறான ஊகத்தைத் தன் மனதில் எழுப்பிய இரவி, உணர்ச்சிகரமாக இயங்கத்தொடங்கி விட்டார். உணர்ச்சிகரமாக இயங்கத் தொடங்கும்போதுள்ள பிரச்சினையே இதுதான். அறிவுரீதியாகச் சிந்திப்பதும் தர்க்கத்தை உணர்வதும் இல்லாமற் போய்விடுகிறது. அறிவற்ற சிந்தனை ஒருபோதும் சமனிலையில் இருப்பதில்லை. சமநிலை எய்துவதுமில்லை. ஆகவேதான் உணர்ச்சிகரமான இயக்கத்தில் தான்தோன்றித்தனங்களும் தவறுகளும் அதிகமாக நடக்கின்றன. இந்தத் தான்தோன்றித்தனத்தில் அடிப்படைகளும் அறமும் தகர்ந்து விடுகிறது. ஊகங்களை உருவாக்கிக் கொள்ளும் மனதில் நியாயத்துக்கும் நிதானத்துக்கும் இடமில்லை. ஊகங்கள் எவ்வளவு தூரம் பொய்யாக இருந்தாலும் அதைப்பற்றி ஊகங்களைப் பின்தொடரும் மனம் பொருட்படுத்துவதில்லை. ஊகமானது, தவறான கற்பிதத்தின் ருசியை உண்டு கொண்டே பயணிக்கிறது.

இரவியின் மனம் கொள்ளும் ஊகம் உடனடியாகவே அவரைக் கலவரப்படுத்திக் கோபப்படுத்தியிருக்கிறது. இதனால் அவர் சட்டனவே, கொதிநிலையடைந்து விடுகிறார். ஆகவே வசையும் கோபமும் கூராக வந்திறங்குகின்றன. இதன்காரணமாக தாராளமாக வசைகளைப் பொழிந்து தள்ளுகிறார். மிகவும் நெருக்கடிக்குள் வாழ்ந்த, அப்படி வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட, நேர்மையாகச் செயற்பட்ட, தன்னை அர்ப்பணித்த ஒரு படைப்பாளியின் மீது, போராளியின் மீது முறையற்ற கேள்விகளை முன் வைக்கிறேனே என்று ஒரு கணமும் இரவி சிந்திக்கவில்லை. இப்படிச் செய்யும் இரவி, பின்னர் சமனிலை அடையும் போது மன்னிப்புக்கோருகிறார். இது இரவி அருணாசலத்தின் ஒரு தொடர் நிகழ்ச்சி. உண்மையில் நல்லதொரு ஆற்றல்வாய்ந்த படைப்பாளியான இரவி அருணாசலம், இந்த மாதிரித் தடுமாறாமல் இருந்தால், அதன் மதிப்பும் நல்விளைவுகளும் அதிகமாக இருக்கும்.

இரவியும் தீபச்செல்வனும் புலிகளையும் போராட்டத்தையும் போராளிகளையும் விசுவாசிப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அப்படிச் சொல்லிக்கொள்கின்றவர்கள், இன்னொரு நிலையில் அர்ப்பணிப்போடு செயற்பட்ட ஒரு போராளியின் மீது அபாண்டமான வசையாகவும் ஆதாரங்கள் அற்ற முறையிலும் எந்தக் குற்றச்சாட்டையும் வைப்பது வருத்தத்திற்குரியது என்று உணரவில்லை.

இப்பொழுது குணா கவியழகனின் “நஞ்சுண்ட காடு“ பற்றிய விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாவலைப்பற்றிய விமர்சனங்கள், அதன் படைப்பு நிலை பற்றி அபிப்பிராயங்கள் முறையாக இன்னும் வைக்கப்பட வேண்டும். நாவலில் உள்ளோட்டாக உள்ள அரசியலைப்பற்றியும் அதன் தத்துவார்த்தப் பின்னணிபற்றியும் உரிய விமர்சனங்களை யாரும் தாராளமாக முன்வைக்கலாம். அப்படி வைக்கப்படுவது அவசியமும் கூட. அதற்கான வெளியும் சுதந்திரமும் உரிமையும் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அத்தகைய விமர்சனங்கள் படைப்பை வளப்படுத்துவதுடன் வாசகத்தளத்தையும் விரிவு படுத்த உதவும். அத்துடன் விமர்சனச் சூழலும் வளம்பெறும். படைப்பாளிக்கும் அது ஊக்கத்தை அளிக்கும். அதனால் அவர் மேலும் செழுமைப்படலாம்.

பதிலாக “குணா.கவியழகன், 24 மனித்தியாலமாயிற்று. நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே. காத்துக் கொண்டிருக்கின்றேன். உங்கள் பதிவைப் பார்த்தபின்தான் என் பதில்“ என்று முகநூலில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதும், “அடக் கடவுளே, ஈரோஸ் குணத்தின் இன்னுமொரு போக்கிரியா நீங்கள்? நம்பி நம்பி ஏமாறுவதா நம் கடன்?“ என்ற மாதிரியெல்லாம் எழுதுவதும் நல்லதல்ல. அது படைப்பாளியை முடக்கிவிடும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளாகும். இது குணா கவியழகனின் மீது (படைப்பாளியின் மீது) தேவையற்ற நெருக்கடிகளையும் மன உளைச்சலையுமே ஏற்படுத்தும். ஆகவே, நாவலுக்கு அப்பால், அதனுடைய படைப்பாளியைப் பற்றி ஊகங்கொள்வதும் அந்த ஊகங்களை முன்னிறுத்தி, கடுஞ்சொற்களில் வசைகளை முன்வைப்பதும் படைப்பாளியின் மீது எழுத்தின் வாயிலாகத் தாக்குதல்களை மேற்கொள்வதும் முற்றிலும் தவறானதாகும் என்பது நிரூபணம். இந்த மாதிரியான போக்கினைக் கைவிடுவோம்.

குணா கவியழகனின் புதிய நாவல் ஒன்று விரைவில் வெளியாகவிருப்பதாக அறிய முடிகிறது. அந்த நாவலையும் மகிழ்ச்சியுடனும் திறந்த மனதுடனும் வரவேற்போம். அதற்கான ஊக்கத்தை குணா கவியழகனுக்குக் கொடுப்போம்.

00000

(குணா.கவியழகன்,அ.இரவி, தீபச்செல்வன் தங்களது கருத்துக்களை , எமக்கு அனுப்பி வைப்பின் உடன் பதிவேற்றப்படும்)

http://eathuvarai.net/?p=4605

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.