Jump to content

இன்று புனித வெள்ளி - இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இன்று புனித வெள்ளி - இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள் !

[Friday 2015-04-03 12:00]
good-friday-040415-400-seithy-news.jpg

புனித வெள்ளி, கிறிஸ்துவர்கள் கொண்டாடும் விழாக்களில் இதும் ஒன்றாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் விழா இது. இந்த புனித வெள்ளியானது, இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் சன்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இயேசு கிறிஸ்து கி.பி.33ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை இறந்தார் என்பது சான்றோர்களின் கருத்து.

  

முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவை அவரது சீடராக இருந்த யூதாஸ் என்பவரே காட்டிக் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது. வரலாற்றின் படி இயேசு எருசேலம் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இயேசுவை கயபா என்ற தலைமைக் குரு விசாரித்தார். அவர் மீது பல முரண்பாடான குற்றங்கள் வைக்கப்பட்டது. இயேசுவுடன் இருந்த அவரது சீடர்களும் அவர் கைது செய்யப்பட்டதும் அவரை விட்டுவிட்டு ஓடி விட்டனர். பின்னர் இயேசு, ரோமின் மன்னர் பிலோத்துவிடம் அழைத்து செல்லப்பட்டார். அவர் இயேசுவை விசாரித்தது விட்டு அவர் குற்றமற்றவர் என்று கூறினார். ஆனால் மக்கள் அவர் கூறியதை ஏற்கும் மனநிலையில் இல்லை. சரி, இயேசுவின் பகுதியான கலிலேயாவின் மன்னர் ஏரோதுவிடம் அவரை அனுப்ப முடிவெடுத்தார்.

ஆனால், அவர் எருசேலம் சென்று விட்டதால் இயேசுவை சவுக்கால் அடித்து தண்டனை நிறைவேற்றி விடுதலை செய்துவிடலாம் என்று முடிவெடுத்தார் பிலோத்து. எனினும் மக்கள் விடுவதாயில்லை, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையயுமாறு கூறினார்கள். மக்களுக்கு எதிராக முடிவெடுத்தால் கலவரம் வெடிக்கும் என்று பயந்த பிலோத்து மக்கள் கூறியபடியே செய்ய முன்வந்தார்.

எனினும், இதில் என் பங்கு ஏதும் இல்லை என்று கூறிவிட்டார். பின்னர், இயேசு முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிலுவையை சுமந்துவாரே கல்வாரிக்கு செல்ல பணிக்கப்பட்டார். இயேசுவை தலைவனாக ஏற்றுக் கொண்ட மக்கள் பலரும் கதறி அழுதனர். அந்நிலையிலும் இயேசு, ‘எனக்காக யாரும் அழ வேண்டாம். உங்களுக்காகவும், உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்’ என்று கூறினார். கல்வாரியின் ஒரு குன்றின் மேல் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்.

மேலும் அன்றைய தினத்தில் மதிய நேரமே வானம் இருண்டு காணப்பட்டதாகவும் வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இயேசு சிலுவையில் அறையப்பட்ட 15 நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை உயிர் நீத்தார் என்றும், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதும் சான்றோர் கூற்று.

இந்த உயிர்நீத்த தினத்தை புனித வெள்ளியாகவும், மீண்டும் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் சன்டேயாகவும் கொண்டாடி வருகின்றனர் கிறிஸ்துவர்கள்.

http://www.seithy.com/breifNews.php?newsID=129536&category=TamilNews&language=tamil

Posted

மண்ணுயிர்க்காகத் தன்னுயிர் ஈந்த மனுமகன் இயேசுகிறிஸ்து! : இன்று புனித வெள்ளி

 

good-friday.jpg

 

 

 

இன்று அனைத்துலக கிறிஸ்தவர்கள் புனித பெரிய வெள்ளியைப் பக்திச் சிறப்போடு நினைவுகூருகிறார்கள்.

 
இன்றைய நாள் புனிதத்தின் ஊற்று. கடவுள் நமக்காக நாம் மீட்படைய தம்மையே தியாகப் பலியாக நம்மேல் கொண்டிருக்கும் அன்பை நிரூபித்த நாள்.
 
அன்று இஸ்ராயேல் மக்கள் தங்களின் பாவங்களைக் கழுவிக் கொள்வதற்காக மாசுமறுவற்ற செம்மறி வெள்ளாடு ஒன்றை பாவக்கழுவாயாகப் பலியிட்டார்கள்.   
இன்று இறைவன் மனுக்குலத்தின் மீது கொண்ட அன்புக்கும் பரிவுக்கும் இரக்கத்திற்கும் உச்சக்கட்டமாகத் தம்மையே பரிகாரப் பலியாக்கி நம்மீட்பின் காரணராகிறார்.   
 
 "அவரைக் கண்டபலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்து மனித சாயலே இல்லாது போயிற்று. அவர் இகழப்பட்டார் மனிதரால் புறக்கணிக்கப்பட்டு, வேதனையுற்ற மனிதராய்  இருந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் இருந்தார். அவர் தம் பாடுகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார். நம் குற்றங்களுக்காக  காயப்பட்டார்.  நமக்கு நிறைவாழ்வளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர் தம் வாயைத்திருவாதிருந்தார்."
 
 
இந்த அநீத உலகமே உய்ய உத்தமர் இயேசு உயிர்கொடுத்த நாள். பாவத் தளையில் சிக்குண்டு சீரழிந்த இம் மனுக்குலத்தை தெய்வத்திருமகன் மீட்டு இரட்சித்த இரட்சணியத்தின் நாள். ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்விலும் மறக்க முடியாத நாள். 
 
எனவே தான் இதைப் பெரிய வெள்ளி என நாம் அழைக்கின்றோம்.  இயேசுவின் மரணத்தால் நாமனைவரும் மீட்கப்பட்டோம். 
பெரிய வெள்ளிக்கிழமையாகிய இன்று நாம் ஆலயங்களில் திருச்சிலுவையை தியானித்து ஆராதித்து நம்மையே அந்த இயேசுவுக்கு ஒப்பு கொடுக்கிறோம்.
 
இயேசுவின் சிலுவையை நாம் தியானித்து கொண்டிருக்கலாம். ஏனென்றால் சிலுவையில் இன்று நமக்கு மீட்பு இல்லை. சிலுவை அவமானத்தின் சின்னம். ஏனென்றால், அது கொலைக்காரன், கொள்ளைக்காரன், கலகக்காரனுக்கு கொடுக்கப்படும் தண்டனை. ஆனால் நம் இயேசு இந்த அவமான சின்னத்தை வெற்றியின் சின்னமாக மாற்றினார். 
 
எனவேதான் நாம் இயேசுவின் மரணத்தை நாம் நினைவுகூருகின்றோம். இரண்டு மரங்கள் நெடுவாக்கிலும் குறுக்கு வாக்கிலும் இணைகின்ற போதுதான் சிலுவை உருவாகின்றது. எப்படி சிலுவையின்றி கிறிஸ்தவ வாழ்வு இல்லையோ, அதே போல் கடவுள் அன்பும் பிறர் அன்பும் இன்றி ஒருவன் இயேசுவின் தொண்டனாக இருக்க முடியாது. இரண்டும் இணைகின்ற போதுதான் அங்கு புதியதோர் வாழ்வு மலர்கின்றது. 
 
 
இயேசுவின் சிலுவை நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் பல. இயேசுவின் சிலுவை நமக்கு மீட்பையும் மன்னிப்பையும் தருகின்றது. இயேசுவின் சிலுவை அருகில் இரு  கள்வர்கள் அறையப்பட்டார்கள். இந்த இருவருமே கள்வர்கள். முற்றிலும் தவறாக வாழ்ந்தவர்கள்.  
 
ஆனால் ஒருவன் இயேசுவைப் பார்த்து மனம் வருந்தினார். மன்னிப்பு மீட்பும் தருவேன் என்று கூறவில்லை. மாறாக  மனம் வருந்தி தன் குற்றத்தை ஏற்றுக்கொண்ட அவனுக்கு, "இன்றே நீ இப்போதே வான் வீட்டில் இருப்பாய்..." என்று திருவாய் மலர்ந்தருளினார். 
 
இயேசுவை அண்டிச் செல்லும் எவரையும் அவர் வெறுத்து ஒதுக்குவதில்லை. மாறாக அன்புடன் தழுவி,  புதிய வாழ்வை தருபவர் தான் நம் ஆண்டவராகிய இயேசு. இந்த இயேசுவை தான் நாம் சிலுவையில் ஆராதித்து நம் வாழ்வை அவருக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறோம். 
 
இயேசு சிலுவை மரணத்துக்குக் கையளிக்கப்பட்ட போது அவர் புரிந்த குற்றம் தான் என்ன? அவர் ஊழல்கள் புரிந்தாரா? களவு செய்தாரா? கொலைகள் செய்தாரா?  கடத்தல் செய்தாரா? இல்லவே இல்லை. 
 
மாறாக மூன்று ஆண்டுகள், ஊர்கள், நகர்களுக்குக் கால்நடையாய் சுற்றிச் சென்று நற்செய்தி அறிவித்தார்;   பசித்தோருக்கு உணவளித்து, குருடருக்குப் பார்வை கொடுத்து, செவிடருக்கு கேட்கும் திறனளித்து, ஊமைகளைப் பேசவைத்து, முடவர்களை நடக்க வைத்து, நோயுற்றோரை - தொழுநோயாளர்களை குணபடுத்தி, இறந்தோரை உயிர்பித்து, அற்புதங்கள் புரிந்துதான் குற்றமா? அதுவும் மரண தண்டனைக்குரிய குற்றமா? 
 
மனிதருக்காகத் தான் ஓய்வு நாள்; ஓய்வு நாளுக்காக மனிதர் அல்ல. ஓய்வு நாளிலும் கடவுள் நன்மை புரிகின்றார் என கடவுளின் பார்வையில் திருச்சட்டத்தின் உண்மை விளக்கத்தை எடுத்துக்கூறி அதன்படி நன்மை புரிந்தது குற்றமா? 
 
"ஏழைகளுக்கு இறங்குங்கள், ஒதுக்கப்பட்டோருக்கு வாழ்வளியுங்கள்"  என்றார். தம்முடைய போதனைகள் தமது தந்தையின் போதனைகள் தான். தமது செயல்கள் அனைத்தும் தன் தந்தையின் செயல்களே என வாழ்ந்து காட்டினார்.  இதுதான் மரணத்துக்குரிய குற்றமா? 
 
இவரை எதிர்த்தவர்கள் இவரைக் காட்டிக் கொடுக்கவில்லை.  மாறாக,  அவருடைய சீடர்களின் ஒருவரே முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்தார். 
 
மற்றொரு சீடரோ, "அவரை அறியேன்... அறியேன்..." என்று மறுதளிக்க ஏனையோர் அவரை தன்னந் தனியே விட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டனர்.  இயேசுவோ கைதியாக விலங்கிடப்பட்டார்.
 
கசையால் அடிக்கப்பட்டு, கள்வனைப் போல் இழுத்துச் செல்லப்பட்டு,  குற்றவாளை போல் சிலுவையில் அறையப்பட்டார்.  மும்மணி நேரம் விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே தொங்கி உயிர்துறந்தார். 
 
இயேசு மரணித்த  நாளான பெரிய வெள்ளிக்கிழமையன்று இயேசுவின் திருச்சிலுவையை முத்தி செய்வது நம் வழக்கம். இயேசு இவ்வுலகில் இருந்த போது,  அவர் பெற்ற முத்தங்கள் மூன்று. ஒன்று தம் அன்புத் தாயிடமிருந்து பெற்றது; இரண்டு பாவியான மரிய மதலேனாவிடமிருந்து பெற்ற மன்னிப்பின் முத்தம்; மூன்று தம்மோடு வாழ்ந்த யூதா என்ற துரோகியின் முத்தம்.
 
நாம் சிலுவையை முத்தமிடும் போது, அது எந்த வகையைச் சார்ந்தது? அன்பு முத்தமா? மன்னிப்பின் முத்தமா? துரோக முத்தமா?    
சிலுவை துன்பத்தின் அடையாளம் என்று பார்க்காமல் பகிர்ந்தலின், மன்னிப்பின் அடையாளம் என்பதை உணரவேண்டும். 
 
சிலுவை ஆடம்பரத்திற்காக அணிவதல்ல என்பதை உணர்வோம்.   மரண வேளையில், வேதனையில் தொங்கிய இயேசு மெல்லிய வார்த்தைகளில், "தந்தையே இவர்கள் அறியாது செய்யும் குற்றங்களை மன்னியும்..." என்பது கிறிஸ்தவத்தின் அத்திவாரமாகும். 
 
நீதிமானின் மாரணத்தில்  நீதி பிறக்கிறது. போராளியின் மரணத்தில் தீர்வு பிறக்கிறது. இலட்சியவாதியின் இறப்பில்  இலட்சியம் மலர்கிறது. நமது இறப்பில்  விளையப் போவது என்ன? 
சிலுவை படைப்பின் பாதுகாவலன்,திருச்சபையின் அணிகலன், நம்பிக்கையின் பலம். 
 
மரணம் பிறந்தது ஒரு மரத்தாலே. வாழ்வு பிறந்ததும்  ஒரு மரத்தாலே. 
 
குற்றவாளிகளைத் தண்டிக்கும்  யூதர்களுக்கு சிலுவை அவமானச் சின்னம். இயேசு உயிர்த்ததால் கிறிஸ்தவர்களுக்கு அது வெற்றியின் சின்னம்.  
 
எனவே புனித வெள்ளியை தூய்மை இதயத்துடன் நினைவுகூருவோம். இயேசுவின் பாதம் பணிந்து, நம் பாவங்களை மானதார நினைந்து, மனம் வருந்தி மன்னிப்பு கேட்போம்.
இன்றைய எமது சிந்தனை இதுவாகவே இருக்கட்டும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.