Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் வீசிய நாட்டு வெடிகுண்டு! -புகழேந்தி தங்கராஜ்

Featured Replies

Vicneswaran.pngஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான நீதியை சர்வதேச சமூகத்தின் வாயிலாகப் பெற்றுவிட முடியும் - என்று உறுதியாகநம்பியவர்கள் இரண்டுபேர். ஒருவர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளை. இன்னொருவர், கல்லம் மேக்ரே. நடந்த இனப்படுகொலையை 'சேனல் 4' மூலம் அம்பலப்படுத்திய  'நோ ஃபயர் சோன்' ஆவணப்படத்தின் இயக்குநர் மேக்ரே.

பிள்ளை மற்றும் மேக்ரேவின் முயற்சிகளைப் பார்த்து வியர்த்துக் கொட்டியது இலங்கைக்கு! தமிழருக்கு எதிராக தமிழரையே பயன்படுத்தும் பௌத்த சிங்களக் கயமைத்தனம் மீண்டும்  அரங்கேற்றப்பட்டது. இந்த இனத்தில் பண்டார வன்னியனுக்குத் தான் பஞ்சம். காக்கை வன்னியன்களுக்கு என்ன குறை!

காக்கைகள் இப்படித்தான் பேசத்தொடங்கின..... 
'இனப்படுகொலை என்று சொன்னால் சர்வதேசம் உடனடியாக உதவிக்கு வராது. அப்படிச் சொல்வது முட்டாள்தனம். முதலில், போர்க்குற்றம் என்று சொல்லி சர்வதேசத்தை நம் பக்கம் கொண்டுவருவோம்... அதுதான் ராஜதந்திரம்' என்றெல்லாம் அவர்கள் நாக்கு நீண்டபோது, அந்த நாக்கு நீல நிறத்தில் இருந்ததை நாம் கவனிக்கவில்லை.

இந்த இனத்துக்கு அந்த நீல நாக்குப் பேர்வழிகள் ராஜதந்திரம் கற்றுத்தரத் தொடங்கி இப்போது ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இன்றுவரை ஒரே ஒரு போர்க்குற்றவாளியைக் கூட நீ.நா.பேர்வழிகளால் கூண்டில் நிறுத்தமுடியவில்லை. இத்தனைக்கும், கல்லம் மேக்ரே தயவில் காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்கள் எக்கச்சக்கமாகச் சிக்கியுள்ளன. அப்படியிருந்தும் ஒரே ஒரு குற்றவாளியின் தலைமுடியில் கூட எவரும் கைவைத்துவிட முடியவில்லை.  

சிங்கள ராணுவப் பொறுக்கிகள் செய்த கொடூரங்களுக்காக, வெட்ட வேண்டிய விஷயத்தை வெட்ட முடியாவிட்டால் கூட, வேறு  சில நாடுகளில், குறைந்தது அவர்களது விரல்களையாவது வெட்டி இருப்பார்கள். இவர்களால் அவர்களது நகத்தைக் கூட வெட்ட முடியவில்லை. ஒன்றே ஒன்றைத்தான் இந்த நீ.நா.பேர்வழிகள் சாதித்தார்கள். அது - நடந்தது இனப்படுகொலை என்கிற உண்மையை மூடி மறைப்பதில் அவர்கள் தற்காலிகமாகப் பெற்ற வெற்றி.

அவர்கள் சொல்வதைக் கேட்காமல், இனப்படுகொலை என்கிற உண்மையைத் தொடக்கத்திலிருந்தே நாம் உரக்கப் பேசியிருந்தோமென்று வைத்துக் கொள்ளுங்கள்...... 'உங்களால்தான் சர்வதேசம் நமக்கு உதவத் தயங்குகிறது' என்று கூசாமல் பேசி நம்மை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பார்கள். இப்போது, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்களுடைய ராஜதந்திர பாச்சா எலிப்புலுக்கை அளவுக்குக் கூட பலிக்காத நிலையில், இவர்களை அம்பலப்படுத்த இன்னொருவர் தேவையில்லை என்கிற நிலை தானாகவே உருவாகிவிட்டது.

இவ்வளவுதூரம் அம்பலமான பிறகும், 'சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்' என்கிற கித்தாப்பு மட்டும் குறையவில்லை நீ.நா.பேர்வழிகளுக்கு! இலங்கையில் மைத்திரி தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்துவிட்டதாம்!  மைத்திரியும் ரணிலும் சர்வநிச்சயமாக எதையாவது கிழிப்பார்களாம்! 'இதனால் நாங்கள் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இப்போதைக்கு மைத்திரிக்கு வாய்தா கொடுக்க வேண்டியது அவசியம்..... அவசரப் படேல்' என்று புலமெல்லாம் தண்டோரா போடுகிறார்கள் அவர்கள். (அவசரப் படேல் - என்பதைக் கேட்டு, சர்தார் படேல் பெயரை ைந்த மன்பதையே நினைவில் வைத்திருக்கிறது என்று  கமலாலயத்தில் இருப்பவர்கள் புளகாங்கிதம் அடைந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல!)

புதிய ஆட்சி - அவகாசம் தேவை - நல்லிணக்கமே முக்கியம் - என்றெல்லாம் ஜனவரி 8ம் தேதியே ஊருக்கு முந்திக்கொண்டு தந்தி அடித்தவர்கள் அந்த நீ.நா.பேர்வழிகள். ஜெனிவாவில் தந்தி சேவை இருக்கிறது என்று நினைக்கிறேன்...... இனப்படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் அவசர அவசரமாக அவகாசம் கொடுத்தது. மார்ச்சில் வெளியிடவேண்டிய அறிக்கையை செப்டம்பருக்குத் தள்ளிவைத்தது.

தாங்கள் விரும்பியதைப் போலவே ஐ.நா. அறிக்கை தள்ளிவைக்கப் பட்டதை வெடிபோட்டுக் கொண்டாட வேண்டும்  என்றுதான் ராஜதந்திரப் பெருச்சாளிகள் திட்டமிட்டிருந்தார்கள். அவர்களது 'பிழைப்பில்' மண்ணள்ளிப் போடுகிற மாதிரி நாட்டுவெடிகுண்டைப் போட்டார் ஒருவர். அவர், தமிழினத்தின் முதல்வராகத் திகழும் நீதியரசர் விக்னேஸ்வரன். நாட்டிலிருந்தே வீசப்பட்டது என்பதால், அந்த நாட்டுவெடிகுண்டு வீரியம் மிக்கதாக இருந்தது, இருக்கிறது.

வன்னி மண்ணில் நடந்தது இனப்படுகொலை என்பது தெரிந்தும், அந்த மண்ணைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம்கூட  இல்லாமல் மந்தமாகக் கிடந்தது  சர்வதேசம். அந்த அசமந்தங்களின் மீதிருந்த நம்பிக்கையில்தான்,  'போர்க்குற்றம்' என்று கயிறுதிரித்துக் கொண்டிருந்தார்கள், இனப்படுகொலைக் குற்றவாளிகளும் அவர்களது புரோக்கர்களும்! விக்னேஸ்வரன் நிறைவேற்றிய 'இனப்படுகொலை' தீர்மானம், எவ்வளவு சக்தி வாய்ந்த நாட்டுவெடிகுண்டு என்பது, அலறி அடித்துக்கொண்டு அமெரிக்கா வன்னிக்குச் சென்றபோதே உறுதியாகிவிட்டது.   அமெரிக்க எஜமானரைத் தொடர்ந்து அத்தனை நாடுகளும் முற்றுகையிடுகின்றன விக்னேஸ்வரனை!

'நல்லிணக்கத்துக்கு வாய்ப்புள்ள நிலையில் இனப்படுகொலை  தீர்மானம் எதற்கு' என்பதுதான் அத்தனைப் பேரின் கேள்வியும்! இப்படிக் கேட்டவர்கள் அத்தனைப் பேருக்கும், நடந்த இனப்படுகொலையில் பங்கிருந்தது. 'உங்களுக்குப் பங்கிருந்ததால் இப்படிக் கேட்கிறீர்களா' என்று திருப்பிக் கேட்கவில்லை விக்னேஸ்வரன். அப்படிக் கேட்பது நாகரிகமில்லை என்பதால்,  'நடந்தது என்னவென்பது மூடி மறைக்கப்படும்வரை நல்லிணக்கம் எப்படி சாத்தியம்' என்று யாரையும் புண்படுத்தாமல் கேட்டார் அவர். 'கொலைக் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் நல்லிணக்கம் எப்படி சாத்தியம்' என்பதைத் தவிர வேறென்ன பொருள் அதற்கு?

வளவளா கொழகொழா என்று கத்தரிக்காய் வியாபாரமெல்லாம் செய்யாமல், 'நடந்தது இனப்படுகொலை' என்கிற உண்மையை,   முருகண்டி விநாயகருக்கு உடைக்கிற சிதறு தேங்காய் மாதிரி,  போட்டு உடைத்திருக்கிறார் விக்னேஸ்வரன். 'போர்க்குற்றம்' என்கிற பொய்யை நம்மீது திணிக்க முயற்சித்தவர்களுக்குத்தான் வார்த்தை விபசாரமெல்லாம் தேவைப்பட்டது. ஒரு திட்டவட்டமான உண்மையைத் தெரிவிக்கிற தீர்மானம் என்பதால், விக்னேஸ்வரனின் தீர்மானத்தில் பூசி மெழுகுகிற வேலையெல்லாம் இல்லை. தெள்ளத் தெளிவாக இருந்தது அது.

நவநீதம் பிள்ளையாலும் கல்லம் மேக்ரேவாலும் நம்பக்கம் திரும்பிப்பார்த்த உலகம், இன்று விக்னேஸ்வரனால் திரும்பிப்பார்க்கிறது. மூன்று பேருமே அறிவாளிகள், மதி நுட்பம் மிக்கவர்கள். சொந்த இனத்தின் முதுகில் குத்துவதற்காகவே தமது அறிவைப் பயன்படுத்திய அயோக்கியர்களைப் பார்த்துப் பார்த்துப் பொருமிய எம் இனம், பிள்ளை, மேக்ரே, விக்கி என்கிற மூன்று  நேர்மையான அறிவாளிகளைப் பார்த்துப் பெருமிதம் கொள்கிறது இன்று!

நச்செலிக்குப் பொறிவைப்பது மாதிரிதான், பிள்ளையும் மேக்ரேயும் பொறிவைத்தார்கள் இலங்கைக்கு! பொறியில் சிக்காமல்  தப்பிவிட முயன்றது இலங்கை. அப்படியெல்லாம் தப்பிவிட  முடியாத அளவுக்கு பொறியை நோக்கி எலியைத் திருப்பியிருக்கிறார் விக்னேஸ்வரன். இலங்கையின் ஏஜென்டுகளால் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

ரணிலுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்கக் கூடாதாம்.... அப்படியொரு மோதல் போக்கை விக்னேஸ்வரன் கடைபிடித்தால் தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டிய நன்மைகள் (!!!!) கூட  கிடைக்காமல் போய்விடுமாம்! இது, நவீன உபதேசியார்களின் அதிநவீன அரிய கண்டுபிடிப்பு! இப்படியொரு நவநாகரீக நயவஞ்சகக் கண்டுபிடிப்புக்கென்று தனியாக ஒரு நோபல் பரிசு இருக்கிறதா - என்று, நோர்வேயிலிருக்கிற ஸ்டீவன் புஷ்பராஜாவிடம் விசாரிக்க வேண்டும். அப்படியொரு விருது மட்டும் இருக்கிறது என்றால், அது இந்த நவீன உபதேசியார்களுக்குக் கிடைக்காமல் வேறு யாருக்குக் கிடைக்கப் போகிறது?

இப்படியெல்லாம் சம்மனே இல்லாமல் ஆஜராகிற பேர்வழிகளுக்கு,  விக்னேஸ்வரனுக்கு உபதேசிப்பதுதான் நோக்கமென்று நினைக்கிறீர்களா? இல்லை! இனப்படுகொலைக் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவதும் வாய்தா வாங்குவதும் தான் பிரதான நோக்கம். 

இந்த உண்மையை எவர் சொன்னாலும், கோபம் வருகிறது அவர்களுக்கு! 'ஆதரவு கொடுக்கலாம் நீ... அனுதாபம் தெரிவிக்கலாம் நீ.... ஆனால் எம் மீது எதையும் திணிக்கக் கூடாது' என்கிறார்கள் ஆத்திரத்துடன்! 

தமிழக சட்டப் பேரவையில், 'இனப்படுகொலை தொடர்பாக  சர்வதேச விசாரணை தேவை' என்கிற தீர்மானம் ஆண்மையுடன் நிறைவேற்றப்பட்டபோது, அதை இவர்கள் விமர்சித்திருக்கலாம்....  புலத்தில் இருந்தாலும் வன்னி நிலத்தில் பிறந்தவர்கள் என்கிற உரிமையோடு பேசியிருக்கலாம். இப்போது,  இனப்படுகொலை நடந்த மண்ணிலிருந்துதானே ஒலிக்கிறது விக்னேஸ்வரனின் குரல்! அதைக் கேட்டுப் பதறுகிறார்களே ஏன்? இப்படியெல்லாம் பேசக் கூடாது - என்று பாய்கிறார்களே, ஏன்? அந்த மண்ணிலிருந்தே  எழுகிற குரலைத் தடுக்கவும், தங்கள் குரலைத் திணிக்கவும் முயல்கிறார்களே, ஏன்? இனப்படுகொலைக் குற்றவாளிகளை மயிரைக் கொடுத்தாவது காப்பாற்றிவிடவேண்டுமென்று துடிக்கிறார்களா?

உலகிலிருக்கிற ஒவ்வொரு தமிழனுக்கும், ரணிலின் குற்றப் பின்னணி குறித்து தெளிவாகத் தெரிகிறது. எம் இனத்தின் தோளில் கைபோட்டபடியே,  குரல்வளையை நெரிப்பதில் ரணில் எவ்வளவு கைநேர்ந்தவர் என்பதும் தெரிகிறது. அதையெல்லாம் மறைத்துவிட்டு, கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேரின் உறவுகள் கொலைகாரர்களுடன் சேர்ந்து குலவையிடுவதுதான் பண்பாடு - என்று போதிக்கிற போதிசத்துவர்கள் யாராயிருந்தாலும், ஆம் ஆத்மி சின்னத்தால் நாலு சாத்து சாத்தவேண்டும். ரணிலைச் சாத்துவதற்கு முன்  ஏஜென்டுகளைச் சாத்துவதுதானே முறை!

ரணிலுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்கக் கூடாது - என்று சொல்பவர்களுக்கு, பறங்கிக் காயை பல்பொடிக்குள் வைத்து மறைக்க முடியாது என்கிற அற்ப அறிவு கூட இல்லாமல் போய்விட்டதே, எப்படி? ரணில் ஒரு பொய்யர் - என்று விக்னேஸ்வரன் சொன்னாரா? விக்னேஸ்வரன் ஒரு பொய்யர் - என்று ரணில் சொன்னாரா? ரணிலைச் சந்திக்க மாட்டேன் - என்று விக்னேஸ்வரன் சொன்னாரா? விக்னேஸ்வரனைச் சந்திக்கமாட்டேன் - என்று ரணில் சொன்னாரா? 

எம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் முதல்வரை அவமதிக்காதே - என்று ஒருவார்த்தை பேச வக்கில்லாவிட்டால், குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டியதுதானே! அதைவிட்டுவிட்டு,  முள்வேலிகளுக்கு முதுகு சொரியும் முயற்சி இவர்களுக்கு எதற்கு? 

ஐ.நா. என்கிற ஒரு கௌரமான சர்வதேச அமைப்பை இலங்கை எப்படியெல்லாம் கேவலப்படுத்துகிறது என்பது, ரணிலுக்கு வக்காலத்து வாங்குகிற இவர்களுக்குத் தெரியுமா தெரியாதா? 

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் ஒரு பிரிவான காணாதுபோனோருக்கான பிரிவு, இலங்கையைச் சேர்ந்த  தாமரா குணநாயக பொறுப்பில் சில ஆண்டுகள் இருந்தது.  காணாதுபோவோர், ஈராக் நாட்டுக்கு அடுத்தபடியாக இலங்கையில்தான் அதிகம். என்றாலும், சுழற்சி அடிப்படையில் வெவ்வேறு நாடுகளுக்கு வழங்கப்படும் அந்தப் பொறுப்பில் இலங்கை இருந்தது. தாமரா அதன் பொறுப்பாளராக இருந்தார்.

தாமரா அந்தப் பொறுப்பில் இருந்தபோது, இலங்கையில் காணாதுபோனோர் தொடர்பாக அளிக்கப்பட்டிருந்த ஆவணங்களை அழித்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டு இப்போது எழுந்துள்ளது. இப்படிக் குற்றஞ்சாட்டுபவர் தமிழரும் இல்லை. ஐரோப்பாவைச் சேர்ந்த அட்ரியன் யூலர் என்கிற மூத்த மனித உரிமைச் செயல்பாட்டாளர். சென்றமாதம் ஜெனிவா கூட்டத்தில், இந்தக் குற்றச்சாட்டை அட்ரியன் எழுப்பியபோது, அனைவரும் அதிர்ந்துபோயினர். 

ஐ.நா. பதவி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்திய தாமரா என்கிற அந்தப் பெண்மணியை வெளிநாட்டுத் தூதர் பதவியில் அமர்த்தி மகிழ்ந்திருக்கிறதே இலங்கை அரசு... இந்தக் கேவலத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ரணில்? சர்வதேசத்தையே நம்ப முடியாமல் போய்விட்ட கொடுமை குறித்து நாம் விசனத்தோடு விமர்சித்துக் கொண்டிருக்கிற நிலையில், ரணிலை நம்புங்கள் - என்று நக்கலடிக்கிற நண்பர்கள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

சென்றமாதம், ஜெனிவாவில், ரணிலின் செல்லப்பிராணி மங்கள சமரவீர ஆற்றிய உரையின் உள்நோக்கமாவது நீலநாக்கு மேதாவிகளுக்குப் புரிகிறதா? கிழக்கு மாகாணத்தில் தமிழ் இந்துக்களும் தமிழ் முஸ்லிம்களும் மோதிக்கொள்ள வேண்டும் -  என்பதைத்தவிர வேறென்ன நோக்கம் தென்படுகிறது அந்த உரையில்!

இதே மங்கள சமரவீரவை நசுக்க ராஜபக்சே சகோதரர்கள் முயன்றதும், தமிழர்களுக்காக மங்கள நீலிக்கண்ணீர் வடித்ததும் நேற்றுதான் நடந்ததைப் போலிருக்கிறது. ஆட்சியில் வந்து அமர்ந்ததும், ராஜபக்சேவைக் காப்பாற்றுவதுதான் முதல் முக்கிய வேலையாகியிருக்கிறது மங்களவுக்கு! அதற்காக, இந்து - முஸ்லிம் மோதல் நடந்தால்கூட பரவாயில்லை என்கிற நிலைக்கு மங்கள போயிருப்பது, பௌத்த சிங்கள இனவெறிக்  கொள்கையிலிருந்து இலங்கை விலகவே விலகாது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்துக்களும் முஸ்லிம்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. யாராவது ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, வழக்கம்போல அதற்கான பழி அடுத்தவர் மீது போடப்படலாம். ஆடுகள் மோதிக்கொண்டால் தானே, ஓநாய்க்குக் கொண்டாட்டம்!

 

http://www.pathivu.com/news/39176/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.