Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத்தைக் கலைக்க முன்னர் கரையோர முஸ்லிம் மாவட்டத்தை உருவாக்க கோருகிறார் பசீர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தைக் கலைக்க முன்னர் கரையோர முஸ்லிம் மாவட்டத்தை உருவாக்க கோருகிறார் பசீர்!

[saturday 2015-06-06 08:00]
Basheer-sugudawood-250-seithy.jpg

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக முஸ்லிம்களின் கரையோர மாவட்டத்திற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வர வேண்டுமென ஸ்ரீல.மு.கா. தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு நீண்ட கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

  

 

இதனை நீங்கள் நிறைவேற்ற தாமதமானால் குறைந்த பட்சம் தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளை உள்ளடக்கிய முழு அதிகாரம் கொண்ட மேலதிக அரச அதிபர் பணிமனையாவது நிறுவித்தருமாறும் பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். பசீர் சேகுதாவூத் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர், புதியதொரு ஆட்சி என்ற வகையில் நாட்டில் அமைதியான நல்லாட்சி நடைபெற்று வருகின்ற வேளையில், கிழக்கு மாகாண முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட விடயங்களைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்தி இக்கோரிக்கையை முன்வைக்கும் முகமாக இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன்.

 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அன்றைய ஜனாதிபதியும், வேட்பாளருமாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் அவருக்கு ஆதரவளிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகக் குறைந்த பட்சமாக அம்பாறை கரையோர மாவட்டக் கோரிக்கையை முன்வைத் திருந்தது. இது தொடர்பாக அன்றைய ஜனாதிபதியுடனும், அரசுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை தலைவர் ரவூப் ஹக்கீம் நடத்தியிருந்தார்.

 

இறுதியில், ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை எமது கட்சி ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுத்து அறிவிக்கவிருந்த வேளையில் அன்றைய ஜனாதிபதியின் செயலாளர் திரு.லலித் வீரதுங்க அவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டார். அம்பாறைக் கரையோர மாவட்டத்திற்கு முன்னோடியாக முழு அதிகாரம் பொருந்திய மேலதிக அரச அதிபர் பணிமனையை அமைத்துத் தருவதற்கான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பொருத்தனைக் கடிதம் தயாராக இருக்கிறது எனவும் அதனைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றுவதோடு அதனை ஊடகங்களுக்கும் அறிவிக்க வேண்டும் எனவும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

 

ஊடகங்களும் கட்சியின் தலைமைக் காரியாலயமாகிய தாருஸ்ஸலாமுக்கு வந்து குழுமியிருந்தன. இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் அரசியல் அதியுயர் பீடம், தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கியிருந்தது.

 

ஆனால், மேற்கூறிய பொருத்தனைக் கடிதம் கிடைக்க இருந்த சூழலிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது இரண்டு அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து அரசிலிருந்து வெளியேறி, அந்த ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்தீர்மானம் தங்களது வெற்றியில் கணிசமான பங்களிப்பை வழங்கியது.

 

இந்நிலையில், நல்லாட்சி அரசின் தலைவராகிய உங்களிடம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் ஆகக் குறைந்த உரிமை வேட்கையான அம்பாறைக் கரையோர மாவட்டத்தை அம்மாவட்டத்தில் அதிகூடிய ஆதரவைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் என்ற வகையில் கோரி நிற்கின்றேன்.

அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கென தனியான கரையோர மாவட்டத்தின் அவசியம் குறித்து பல முஸ்லிம் பிரமுகர்களால் ஆட்சியிலிருந்த தலைவர்களிடம் வலியுறுத்திக் கூறப்பட்டு வந்துள்ள போதிலும், இக்கரையோர மாவட்டக் கோரிக்கையானது முதன் முதலில் அகில இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பினாலேயே முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான முன்மொழிவு 1977 ஜூன் 12ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

 

ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கீழேயே அம்பாறைப் பிரதேசம் உள்ளடங்கியிருந்தது. 1959 ஆம் ஆண்டு தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்ட போது கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் மற்றும் அம்பாறை தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கி 1955 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க நிர்வாக சட்டத்தின் கீழ் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அம்பாறை பிரிக்கப்பட்டது.

 

அத்துடன் ஊவா மாகாணத்தின் கீழிருந்த விந்தனைப்பற்று வடக்கு (மஹா ஓயா), விந்தனைப்பற்று தெற்கு (பதியத்தலாவ) முதலியன 1976 ஆம் ஆண்டு அம்பாறையுடன் இணைக்கப்பட்டது. இந்நடவடிக்கை இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாவட்டமான அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை பலத்தை இல்லாமற் செய்வதற்குரிய இனப்பாகுபாட்டு நடவடிக்கையாகும்.

 

புற்றுக்களாக நிர்வாகப் பிரிவுகள் அடையாளப்படுத்தப்பட்டு, கரவாகுப்பற்று, நிந்தவூர்ப்பற்று, சம்மாந்துறைப்பற்று, வேகம்பற்று என நான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட போது அம்மாவட்டத்திற்கான கச்சேரி அமைப்பதற்கான இடமாக கல்முனையே தெரிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் மக்களின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் வேகம்பற்றுப் பிரதேசத்தில் நிரந்தரக் கச்சேரி அமைக்கப்பட்டது.

 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் மொரகொட என்பவரின் தலைமையிலான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் சிபாரிசின்படி கிளிநொச்சி மாவட்டமும், கல்முனை மாவட்டமும் உருவாக்கப்படுவதாக இருந்த போதிலும் 1982 இல் கிளிநொச்சி மாவட்டம் மாத்திரமே உருவாக்கப்பட்டு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் உதாசீனப்படுத்தப்பட்டனர்.

 

2002 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கெளரவ ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், குளியாப்பிட்டி மாவட்டம், மஹியங்கனை மாவட்டம், அம்பாறை கரையோர மாவட்டம் என மூன்று புதிய மாவட்டங்களை உருவாக்க முன்வந்த போதிலும் இறுதியில் அது நிறைவேறாமல் போனமை கவலைக்குரியதாகும். அதன் பின் 2003 ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சியின் பயனாக நிக்கவரெட்டிய மாவட்டம், அம்பாறை கரையோர மாவட்டம் என்பவற்றுக்கான அமைச்சரவைத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது.

 

அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லிம்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போயிருப்பது குறித்து அம்மாவட்ட முஸ்லிம் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். கிழக்கு மாகாணத் தமிழர்களின் பிரதான கோரிக்கையான சம்பூர் காணிப்பிரச்சினையில் நீங்கள் காட்டிய கரிசனைக்காக உங்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன், அதேபோன்ற ஒரு நியாயமான கோரிக்கையாகவே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கான நிர்வாக மாவட்டக் கோரிக்கை காணப்படுகிறது என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

 

இனிவரும் காலங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகக் காணப்படுகின்ற நிலையில் இலங்கை அரசியல் யாப்பில் 19வது திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக அமோக ஆதரவுடன் நிறைவேற்றியிருக்கிaர்கள். அத்துடன் 20 வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இதனுடன் சேர்த்து முஸ்லிம்களின் கரையோர மாவட்டத்திற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பே வழங்க நீங்கள் முன்வர வேண்டும் எனக் கோருகின்றேன்.

 

அதை நிறைவேற்றக் காலதாமதமானால் குறைந்த பட்சம் தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளை உள்ளடக்கிய முழு அதிகாரம் கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் பணிமனையையாவது நிறுவித் தருமாறும் கோருகின்றேன்.

http://www.seithy.com/breifNews.php?newsID=133442&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.