Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூதக்கண்ணாடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூதக்கண்ணாடி

கதையாசிரியர்: ஜே.பி.சாணக்யா

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊரில் நடந்து முடிந்திருந்த அந்தச் சம்பவங்களைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றைப் பற்றிய குறைந்தபட்ச விவரிப்புகள்கூட அவற்றின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும் என்பதாலும் நானும் அச்சம்பவங்களின் சாட்சிகளில் ஒருவனாய் இருப்பதாலும் இவற்றை உங்களுக்குத் துணிந்து சொல்கிறேன். நமக்கு அருகிலுள்ள மனிதர்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளை இவை எனக்குத் தந்திருப்பினும், அவற்றிலிருந்து மெய்ஞ்ஞானிகள் தவிர்த்து, ஒருவருக்கும் பயனற்றதாகவே அவை முடிந்துவிடும். எங்களுக்கும் வத்சலாவுக்கும் நேர்ந்ததைப் போல.

இளவழகனுக்கு நான்காவது வயது நடந்துகொண்டிருந்த ஒரு நாளில் அவன் அம்மா மனப்பிறழ்வுற்ற வேசியாகப் பாண்டிச்சேரிப் பேருந்து நிலையத்தில் அவனைக் கையில் பிடித்துக்கொண்டு பொது இட மென்ற எண்ணமற்று மாராப்பை விலக்கிப் பேருந்து நிலையத்திலிருந்தவர்கள் சிலரைப் பகிரங்கமாக விபச்சாரத்திற்கு அழைத்துக்கொண்டிருந்தாள். அப்போது இளவழகன், பொத்தான் மாற்றிப் போடப்பட்ட அழுக்கடைந்த, மேல் சட்டையுடன் அழுதுகொண்டே கையில் ஒரு கொய்யாப்பழத்தைப் பிடித்தவாறு அவளை வீட்டுக்குக் கூப்பிட்டுக்கொண்டிருந்தான். பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் தகாத இடத்தில் சிறுநீர் கழிக்கும் நாயை விரட்டுவதுபோல் அவளை விரட்டினார்கள். குடி மலிந்த அந்நகரத்தில் அவள் வெட்கப்பட்டுப் போவதுபோல் சாடைகாட்டினாளே ஒழிய வளைய வளைய வரும் வீட்டுப் பூனையைப் போல் அங்கேதான் சுற்றிக்கொண்டிருந்தாள்.

அன்று மதியம் அங்கிருந்த காவலர்களிடம் அவள் ஒப்படைக்கப்பட்ட பிறகு இளவழகனின் அம்மாவின் தங்கை வத்சலாவும் அவள் கணவன் தங்கப்பனும் வந்து அவர்களை எங்கள் ஊருக்கு அழைத்து வந்தார்கள். இடைப்பட்ட அந்தப் பகல் நேரத்தில் காவல் நிலையத்தில் இளவழகனின் தாய் அழைத்தபோதும் அழையாத நேரத்திலும் காவலர்கள் பிஸ்கட்டும் டீயும் வாங்கிக்கொடுத்து அவளைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இளவழகன் அறியாமை கலந்த பயத்துடன் அழுது வடிந்து அழுக்கேறிய கன்னங்களுடன் அந்தக் காவல் நிலையத்தில் கொய்யாப்பழத்தையும் பிஸ்கட்டுகளையும் பிடித்துக்கொண்டு மர பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். இதை எனக்கு வத்சலா எங்கள் வீட்டில் அந்தக் காலை நேரத்தில் மனம் புழுங்கிச் சொன்னாள்.

எங்கள் கிராமமான பூதங்குடி, சிதம்பரத்திற்கு மேற்கே இருபது கிலோமீட்டர் தொலைவில் வீராணம் ஏரியில் சென்னைக்கு நீரேற்றும் முகப்பின் முன்னும் புகழ்பெற்ற நாச்சியார் சன்னதியின் பின்னும், கூச்ச சுபாவம் கொண்ட மனிதனைப் போல் எல்லாப் பிரதான சாலைகளிலிருந்தும் சற்று உள்ளடங்கி இருந்தது. வத்சலா வயல் வேலைகளுக்குப் போகாத நாட்களில் அதிகாலையில் வந்து பாட்டிக்கு உதவியாகச் சில வேலைகளைச் செய்துவிட்டுச் சென்றுகொண்டிருந்தாள். வத்சலாவுக்கு மாநிறத்திற்கும் கீழான நிறம். வடிவானதும் திடகாத்திரமானதுமான நடுத்தர உடல்வாகு. தங்கப்பனுக்கு ரத்த சோகை நோய்க்கூறின் வெளுப்பில், கன்னங்கள் உப்பி, கண்கள் சிறுத்து, பற்களெல்லாம் மஞ்சள் படிந்த பலவீனத் தோற்றத்தை வெளிப்படுத்தும் தட்டையான உருவம். வீங்கிய நரம்புகளுடன் அவனது கைகள் மெலிந்திருந்தன. தங்கப்பன் அருகிலுள்ள அழுக்கடைந்த டவுனில், சினிமா தியேட்டரின் எதிரே உள்ள, எப்போதும் மெல்லிய இருட்டுப் பரவி நிற்கும், சிறிய ஹோட்டலில் சர்வராகப் பணிபுரிந்துகொண்டிருந்தான். அந்த டவுன் என்பது ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும் வழியில் இருபக்கமும் விரிந்திருந்த கடைத் தெருவாகும். சில டிராக்டர் லேத் ஒர்க்ஸ் கடைகள், சிமிண்டு ஒர்க்ஸ் கடைகள், வீட்டு விறகுகள் உட்படத் தைல மரங்கள் நிரம்பிக் கிடக்கும் டிம்பர் டிப்போக்கள், ஒரு தர்மாஸ் பத்திரி, ஒரு மேல்நிலைப் பள்ளிக்கூடம், ஒரு சில மளிகைக் கடைகள், பரோட்டாக் கடைகள், அவற்றோடு சிறியதும் பெரியதுமான குட்டிக் கடைகளால் நிரம்பியிருந்தது அந்தத் தெரு. பெரும்பாலும் சந்தை நாளான புதன்கிழமைகளில் மட்டுமே கூட்ட நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் அக்கடைத்தெரு, மற்ற நாட்களில் விரைந்துசெல்லும் தொலை தூரப் பேருந்துகள் மற்றும் லோடு லாரிகளின் உறுமல்களிலும் விதவிதமான ஹாரன் சப்தங்களிலும் ஒரே மாதிரியான செயலற்ற தோற்றத்தை வெளிப்படுத்தியவாறு புழுதியில் களைப்புற்றுக் கிடந்தது. தங்கப்பன் பணிபுரிந்த கடை சினிமா விடும் நேரமும் தொடங்கும் நேரமும் சற்றுக் களைகட்டும். இரண்டாவது ஆட்டம் சினிமா முடிந்த பிறகு சாப்பிட வரும் ஒரு சிலருக்காகத் திறந்திருக்கும் ஒரே கடை இதுதான் என்பதால் வேலை முடிந்து வீடு திரும்ப அவனுக்கு சில்வண்டுகள் பாடித் தொலைக்கும் நள்ளிரவு ஆகிவிடும். சில சமயம், அமைதியைச் சிதறடித்துச் சாலைகள் நடுங்குவதான பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தும் காலியான டிராக்டர்களில் வீடு வந்து சேர்வான். பெரும்பாலும் வீட்டிலிருந்து கடைக்கு நடந்தோ டிராக்டர்களில் தொற்றிக்கொண்டோ செல்வதை நான் எனது வழக்கமான வாழ்க்கையினூடாகவே பார்த்திருக்கிறேன்.

இளவழகனுக்கு ‘பூதக்கண்ணாடி’ எனும் பெயர் எங்கள் ஊருக்கு வந்த பின்பே ஏற்பட்டது. இவ்வூருக்கு வந்த நான்கு நாட்களில் இளவழகனின் தாய் அவனை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டிருந்தாள். மாலை நேரத்தில் கண்கள் சரியாகத் தெரியவில்லை என்று அவன் சொன்னதால் தங்கப்பன் அவனைத் தர்மாஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றான். அவனைப் பரிசோதித்துவிட்டு இது மாலைக் கண் நோயில்லை என்று கூறி அருகிலுள்ள பெரிய டவுன் ஆஸ்பத்திரிக்குப் போகச் சொல்லி சிபாரிசுக் கடிதம் கொடுத்தனுப்பினார்கள். பெரிய டவுன் ஆஸ்பத்திரிக்குச் சென்றுவந்தபோது இருவரும் சூரிய ஒளி எதிரொளித்து அலையக் கண்ணாடி போட்டுக்கொண்டு வந்தார்கள். அவர்களின் முகங்கள் ஒரே நாளில் பழைய தன்மையிலிருந்து விலகிவிட்டிருந்தன. கண்ணாடி நழுவி விழுந்துவிடும் என்ற எண்ணத்தில் இளவழகன் எல்லோரையும் சற்று முகத்தைத் தூக்கியே பார்த்துக்கொண்டிருந்தான். சிறுமிகள் அவனைத் ‘தாத்தா’ எனக் கூப்பிட்டுப் பரிகாசம் செய்தார்கள். அவன் வயயொத்தவர்கள் அந்தக் கண்ணாடியை வாங்கிப் போட்டுப் பார்த்தபோது அதிர்ச்சியூட்டும்படி எறும்புகள்கூடச் சுண்டு விரல் அளவுக்குப் பெரிதாக நகர்ந்து கொண்டிருந்தன. பிறகு அவர்கள் அவனை மிக இயல்பாக ‘பூதக் கண்ணாடி’ என்று கூப்பிட்டார்கள்.

சுற்றிலும் மண் சுவர் எழுப்பப் பட்டுக் கரும்புச் சருகுகளாலான கூரையுடன் இருந்த அவர்களின் வீடு வயல்கள் தொடங்கும் மேற்குப் பார்த்த திசையில் மக்கள் புழக்கமில்லாத மீன் குத்தகைக்கான குளக்கரையில் இருந்தது. அதன் அருகில் மாவிலிங்க மரமொன்று வீட்டுக்குத் துணையைப் போல் உயர்ந்து பரந்து வானம் பார்த்துக்கொண்டிருந்தது. மனிதர்கள் உண்ண முடியாத பழத்தைத் தரும் அம்மரம் பழுக்கும் பருவத்தில் பறவைகளின் கூட்டு இரைச்சல்களால் நிரம்பியிருக்கும். வத்சலா குளிப்பதற்கு ஊருக்குள் உள்ள குளத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால் சில சிமிண்டுக் கற்களைப் பொறுக்கி வந்து தோட்டத்தை ஒட்டிப் படித்துறை உருவாக்கிக் கொண்டு அங்கேயே துணிதுவைத்துக் குளித்துக்கொண்டாள்.

இளவழகன் எங்கிருந்தாலும் கருப் பையில் உறங்கும் குழந்தைபோல அமைதியாக முழங்கைகளால் கால்களைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். வேடிக்கை பார்ப்பதன் பொது அம்சங்களைத் தாண்டி வேடிக்கைப் பொருட்களின் முக்கியத்துவங்களை மீறி அவன் வேடிக்கை பார்ப்பதில் அத்தனை ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். தங்கப்பன் அவனை விஜயதசமி அன்று பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தான். அவன் மதிய சாப்பாடு முடியும் முன்னரே ஓடி வந்துவிட்டான். தங்கப்பன் மதிய சோற்றுக்காகப் பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகளைப்போல் அவனைப் போகச் சொன்னான். தனக்கு மதிய சோறு வேண்டாமென்று இளவழகன் கூறிவிட்டான். வேறு வழியின்றித் தங்கப்பன் அவனைத் தன்னுடைய ஓட்டலுக்கே அழைத்துச் சென்றான். அங்குச் சில்லறை வேலைகளுக்கு அவன் பயன்பட்டுக்கொண்டிருந்தான். சினிமா தியேட்டருக்கு எதிரே உள்ள ஓட்டல் என்பதால் இளவழகன் அடிக்கடி திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றுவிடுவான். அங்கும் அவனுக்கு வேடிக்கை பார்ப்பது பிடித்தமானதாக இருந்தது. ஒருவேளை அங்கு அனைவரும் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருப்பது என்பது அவனை வேற்றுமையில்லாத ஆளாக உணர வைத்திருக்கும். திரைப்படத்தில் என்ன பிடித்தது என்று கேட்டால் எதுவும் பேசாது நிற்பான். கேள்வி கேட்டவர்களே ‘போ’ என்று சொல்லும்வரை நின்றுகொண்டிருப்பான். அவன் தங்கப்பனிடமும் ஊர்ச் சிறுவர்கள் சிலரிடமும்தான் எப்போதாவது சிரித்துப் பேசுவதைப் பார்க்க முடியும். அதுவும் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் அளவில்தான்.

அதிகாலையில் அவர்கள் இருவரும் ஓட்டலை நோக்கி, எதுவும் பேசிக் கொள்ளாமல், சோகமான இசைத் துணுக்கொன்று மீண்டும் மீண்டும் அலுப்புடன் ஒலிப்பது போல ஒரே சீரான நடையில் தேசிய நெடுஞ் சாலையின் ஓரத்தில் நிதானமாக நடந்து சென்றுகொண்டிருப்பார்கள். ஊருக்குள்ளே திருவிழா சமயங்களில் அவர்கள் பொதுக்காரியத்தில் ஈடுபடும் நடவடிக்கைகள் கூட நிழலைப்போல மௌனமாகவே இருந்தன. இருவரும் தனிமையிலும் ஒத்த மனம் பெற்றவர்களைப் போல் அமைதியாக அமர்ந்து எதையாவது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் வத்சலாவுக்குக் குழந்தை பிறக்குமென்ற எதிர்பார்ப்பு இன்னும் பூர்த்தியாகவில்லை. தங்கப்பனின் ஆரோக்கியம் ஊரறிந்த கதை என்பதால் எல்லோரும் அவனையே குற்றம் சொன்னார்கள். அவனது ஆரோக்கியக் குறைவிற்கும் அவளுடனான அவனது தாம்பத்திய உறவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று தெரிந்த வத்சலாவும் அதையே சொல்வதாக ஒரு குற்றச்சாட்டாகத் தங்கப்பன் என்னிடம் சொன்னான். தங்கப்பனைத் தனக்குப் பொருத்தமில்லாதவனென்று நினைக்கும் வத்சலாவுக்கு எப்போதும் அவனைப் பிடித்ததில்லை. பெற்றோர்களற்ற அவளுடைய வாழ்க்கையில் குடும்ப உறவினர்கள் ஏற்பாடு செய்த திருமணம் அது. வாழத் தொடங்கிவிட்ட பிறகு தனக்கு விதிக்கப்பட்டது என்று அவனை சகித்துக்கொண்டாள். இது தங்கப்பனுக்கும் தெரிந்ததுதான். பகலில் அவனுடன் ஏதாவது தெருவில் பேசுவதாயிருந்தால் சத்தமாக அவன் எதற்கும் லாயக்கற்றவன். தான் மட்டுமே அவனைச் சகித்துக்கொண்டிருக்க முடியும்’ எனும்படி பகிரங்கமாக அனைவரின் முன்னிலையிலும் தொண்டை நரம்புகள் வெளியே தெரியக் கத்திப் பேசுவாள். அவன், காரியவாதி சிந்தனை வசப்பட்டுத் தலைசாய்த்து நடப்பது போலக் கிளம்பிச் சென்றுவிடுவான். ஏனென்றால் அவன் யாருக்கும் தெரியாதபடி அவளை விரும்பிக்கொண்டிருந்தான். வார்த்தைகளைச் சமயத்திற்கு உபயோகப்படுத்தத் தெரியாதவன் அப்படித்தான் ஒரு பெண்ணைக் காதலித்திருக்க முடியும்.

இளவழகன் அவனுக்கு அமைந்த உள்ளார்ந்த தனிமையுடன் வயலில் வளரும் ஒற்றைப் பனைமரக் கன்றைப் போல வளர்ந்துகொண்டிருந்தான். வத்சலா அவனுக்குத் தான் செய்யவிருக்கும் ஒரு கடமை திருமணம் தான் என்று கருதி அவனைப் பற்றிப் பாட்டியிடம் பேசும் சமயங்களிலெல்லாம் தன்னுடைய நிறை வேறாத கனவுக்கு மாற்று செய்வது போல உரிமையுடன் வெளிக்காட்டும் தாய்மையுடன் பேசுவாள்.

அந்த வருடக் கோடைக் காலத்தின் ஒரு மாலை நேரத்தில் காகங்கள் பறந்தமர்ந்துகொண்டிருந்த மாவிலிங்க மரத்தின் கீழ், எங்கள் வயலில் இருந்து பார்த்தால் தெரியும் தூரத்திலும் பேசினால் கேட்காத தூரத்திலுமாக மூவரும் அவர்களின் வீட்டைச் செப்பனிட்டுக்கொண்டிருந்தார்கள். இளவழகன் மூங்கில்களில் ஏறி ஒட்டடைகளை அடித்தான். மறுநாள் ஒரு நாட்டுக் கொத்தனாரை வைத்துக்கொண்டு கூரைக்குப் புதிய கரும்புச் சருகுகளை வேய்ந்தார்கள். ஊறவைத்த தென்னம்பாளைகளை மர ஊசியில் கயிறாகக் கோர்த்துக் கொடுக்கவும் கூரையின் வெளியே வரும் மர ஊசியை வாங்கி உள்ளே மாற்றிக் கொடுக்கவும் இளவழகன் உதவினான். நாங்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் சாயங்காலத்தில் தரைக்கு சிமிண்டுப் பால் ஊற்றி மெழுகிக்கொண்டிருந்தாள் வத்சலா.

அனைவரும் ஒரே வரிசையில் படுத்துறங்கும்படி அவர்களுடைய வீடு இருந்தது. அடுப்படியிலிருந்து வரிசையாக வத்சலாவும் தங்கப்பனும் இளவழகனும் படுத்துக்கொள்வார்கள். அந்நாட்களின் தொடர்ச்சியில் ஒரு நாள் இரவில் சிறுநீர் கழிக்க எழுந்தபோது இளவழகன் அவள் காலடியில் குத்துக்காலிட்டு அமர்ந்து அவளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததாக வத்சலா எங்களிடம் சொன்னாள். அவளுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அது திடுக்கிட வைக்கும் நடத்தையாகத்தான் இருந்தது. அவள் எழுவதைப் பார்த்ததும் அவன் அதிவேகத்தில் நகரும் பாம்பைப் போல் நழுவித் தன் படுக்கையில் படுத்துக்கொண்டான். அவள் தனது துணி விலகியிருந்ததா என யோசித்துச் சரிசெய்துகொண்டாள். எழுந்து தோட்டத்திற்குச் சென்று சிறுநீர் கழித்தவள் குழப்பத்துடன் வந்து படுத்துக்கொண்டாள். இது நிச்சயம் அவனுடைய பெண் விருப்பம் சம்பந்தப்பட்டது; பிள்ளைகள் வளர்வதே தெரியவில்லை; இன்னும் கொஞ்சம் வளர்ந்தவனாக இருந்தால் ஏதாவது திருமண ஏற்பாடு செய்யலாம்; இது சாதாரணமானதுதான் என்று நினைத்துச் சமாதானம் அடைந்தாள். ஆனால் அவளுக்கு வழக்கமான தூக்கம் அன்றிலிருந்து போய்விட்டது.

மறுநாள் அந்தக் காலை நேரத்தில் நேற்றைய இரவின் யதார்த்தமற்ற தன்மையை இருவரும் புரிந்து கொண்டாலும்கூடப் புரிந்துகொள்ள முடியாத காரணமற்ற சங்கடங்களை உருவாக்கும் சூழலே அந்நேரத்தை நிர்வகித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். இருவரில் யாராவது ஒருவருக்குத் தொடரும் தலை வலியாலோ பீதியூட்டக்கூடிய கனவுகளை எழுந்த உடன் மறந்துவிட்டதாலோ அப்படி இருக்கலாம். அது ஒரு மறைமுகமான யதார்த்தம். அவள் பாத்திரங்களைக் கழுவும் போது அவன் முகத்தைப் பார்த்தாள். கண்டுபிடிக்கவியலாத தூரத்தில் புதைந்திருந்த அவன் முகம் கண்ணாடியில் எதிரொலித்த சூரிய ஒளியின் ஆக்ரோஷமான கதிர் வீச்சால் மூடப்பட்டிருந்தது. அவள் அவனது பருவத்தை நினைத்து தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். அவளே பேச்சுக் கொடுத்தாள். ஒளியின் கீழிருக்கும் இருட்டில் அவன் உதடுகள் அசைய அவன் வழக்கம்போலப் பேசினான். சமாதானத்தை, நியாயத்துக்கு மாறாக அவளே செயல்படுத்தியும் கூட.

அடுத்தடுத்த நாட்களில் அவள் வயல் வேலைகளுக்குச் சென்றாள். இளவழகனும் தங்கப்பனுடன் ஓட்டலுக்குச் சென்றவன் புதன் கிழமைதான் வந்தான். தங்கப்பன் வராத சந்தை நாளான அந்த இரவு படுக்கையை விரித்தபோதுதான் வத்சலாவுக்கு அந்நிகழ்வை மறந்துவிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. அவன் தனது அக்காளின் மகன் என்பதும் தன் வீட்டில் வளரும் பிள்ளை என்பதும் மேலும் அவளுடைய தாய்மை உணர்வும் சேர்ந்து தான் அந்நிகழ்வைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள உதவியிருந்தன. அவள் ஆழ்ந்த கனவொன்றிலிருந்து விடுபட்டுப் புரண்டு எழுந்தபோது தான் அவன் மறுபடியும் தன் கால்களின் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். இந்தமுறை அவள் அதிகம் விதிர்த்துப் போனாள். இது விபரீதம்; தவிர்க்க முடியாதது என்று உடனே உணர்ந்த அவள் அருவருப்பான உணர்ச்சியால் தீண்டப்பட்டாள். அவன் பழையபடி சென்றுபடுத்துக்கொண்டான். அதிர்ச்சியில் அவள் எழுந்து செல்லாமல் அவனை என்ன செய்வது என்ற குழப்பத்தில் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு எழுந்து வெளியே சென்றாள். நட்சத்திரங்கள் அற்ற வானத்தைப் பார்த்த நினைவுடன் வீட்டுக்குள் வந்து விளக்கைக் கொளுத்தினாள். மங்கிய வெளிச்சத்தில் அவன் கவிழ்ந்து படுத்திருந்தது தெரிந்தது. அவள் அவனைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டாள் – இருமுறை. அவனுக்குள் மறைந்துகொண்டிருக்கும் ரகசியத்தின் வாசனையைக்கூட யாரும் அறிந்துகொள்வதை அவன் விரும்பியிருக்க முடியாது. அவன் நடித்துக்கொண்டிருப்பதாக நினைத்த அவள், அவனுக்குக் கேட்கும் என்பதால் அவனைப் பார்த்துச் சொன்னாள்:

“இனிமே இதுபோலச் செஞ் சீன்னா நான் அதுகிட்ட சொல்லி விடுவேன். உனக்கு கல்யாணத்துக்கு இன்னும் வயசிருக்கு. எங்கிட்டே இப்பிடியெல்லாம் நடந்துக்கக் கூடாது.”

அவன் எந்த அசைவுமில்லாமல் படுத்திருந்தான். அவன் எழப்போவதில்லை என்று தெரிந்தும் அவனிடம் ஏதாவது அசைவுகள் தெரிகிறதா என்று சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள். அடக்கப்பட்ட கோபத்துடன் விளக்கை ஊதி அணைத்தாள்.

இது அவனைப் பற்றிய முன்கூட்டிய முதல் எச்சரிக்கைச் செய்தி என்பதை, அவளால் மட்டுமல்ல எங்களாலும் அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் எங்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய விபரீதக் கற்பனைகள் எதுவும் இருந்திருக்கவில்லை. அது யதார்த்தமல்ல. அல்லது அதியதார்த்தமானது. நோயை அறிந்துகொள்ளும் முன்பே மருந்துகள் தயாரிப்பதும் மடத்தனமானது.

முன்பு நிகழ்ந்தபோது ஒதுக்கித் தள்ளியதுபோல் செய்ய முடியாமல் உள்ளுக்குள் சிறிய வெறுப்பு நுழைவதை அவள் தடுக்க முயன்று கொண்டிருந்தாள். ஆண்பிள்ளை அவனைச் சிறு வயதிலேயே தகாத இடங்களுக்குக் கூட்டிச்சென்று கெடுத்துவிட்டாள் என்று தன் அக்காமீது அவளுக்கு எரிச்சல் வந்தது. அவனோடு சகஜமாக இருக்கும் சமயத்தில் இது குறித்து அவனுக்கு விளக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அதற்குப் பிறகு அவன் வீட்டில் இருக்கும்போதெல்லாம் அவளுடைய இயல்புநிலை சீர் குலைந்துகொண்டிருந்தது. அவள் உறங்கும்போதும் புரண்டு படுக்கும் ஒவ்வொரு சமயத்திலும் விழித்திருக்கும் பகல் நேரத்திலும் அவன் அருகில் இருக்கிறானா என்று தனது ஆடைகளை மேலும் கவனத்துடன் சரிபார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதற்காக அவள் மிகவும் வருத்தப்பட்டாள்.

புரிந்துகொள்ள முடியாத அந்தச் செயலுக்காக வத்சலாவும், தனக்கு மட்டுமே தெரிந்த பாஷையுடன் பழகும் அவனும், அது அரங்கேறும் சமயத்திற்காக இருளில் ஒரே அறைக்குள் நடமாடும் எதிரிகளைப் போல் நள்ளிரவுவரை தூங்குவது போல் அன்றிரவு காத்திருந்தார்கள். அவள் எதிர்பார்த்ததைப் போலவே அவன் எழுந்துவந்து அவள் கால்மாட்டில் குத்துக்காலிட்டு அமர்ந்தான். அவள் ஊசிக் கீறலைப் போல் இருளில் கண் திறந்து பார்த்தாள். அது வினோதம் நிரம்பிய நடவடிக்கை. அவளைப் பார்த்து அவன் தலையில் அடித்துக் கொண்டதாகச் சொன்னாள். அவன் தன் அக்காவைப் போலவே பைத்தியமாகிக்கொண்டு வருவதாக நினைத்து அவன் இனி எக்கேடாவதுகெட்டு ஒழிந்துபோகட்டுமென அழுகையைக் கட்டுப்படுத்தி ஒருக்களித்துப் படுத்தாள். மீண்டும் அவன் அப்படியே சிலைபோல அமர்ந்திருந்தான். அவள் புரளும்போது நழுவிப் படுக்கைக்குச் செல்வதும் மீண்டும் அப்படியே வந்து அமர்ந்திருப்பதுமாக இருந்தான். இதை அவள் தங்கப்பனிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்தாள். இதனால் அவன் விரட்டப்பட்டு அவள் போக்கிடம் பற்றிய கவலையாக முடிந்துவிட்டால் என்ன செய்வது என்றெண்ணிப் பயந்துகொண்டிருந்தாள். ஆனால் அது புரிந்துகொள்ள முடியாத எங்களுடைய குறைபாடாகவே கடைசிவரை இருந்து தொலைத்தது. மறுநாள் ஊர் தூங்கும் அந்த இரவில் அபூர்வமான அந்தக் கணத்தில் ஒட்டுமொத்தமாக – தெளிவில்லாமல் – வத்சலா கண்ணீர் எழும்பப் படிக்கட்டில் அமர்ந்தபடி சொன்னாள்: அவனுடைய எந்தச் செய்கையையும் பொதுவான ஒரு மனிதனின் விஷயத்தோடு சம்மந்தப்படுத்திப் பார்க்கவோ சந்தோஷம்கொள்ளவோ திருப்திகொள்ளவோ முடியாதபடி சற்று விசித்திரமாக இருக்கிறது. எறும்புகள் ஊர்ந்து செல்வதை மணிக்கணக்காக உற்றுப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றான்; கேட்டால் இதுதான் என் கனவில் அடிக்கடி வருகிறது என்கிறான்.

முன்புபோல் அவன் இயல்பாக இல்லாததால் வீட்டுக்குள் பனிமூட்டம் உருவாகிவிட்டிருந்தது. அவள் அதை எதிர்கொள்ள முடியாமல் சுவர்களில் மோதிக்கொண்டிருந்தாள். தங்கப்பன் இருக்கும் சமயங்களில் அது வெளிச்சத்தைக் கொண்டிருந்தது. சாப்பாட்டைத் தட்டில் போட்டுவிட்டு வெளியில் சென்று அமர்ந்துகொண்டாள். குளிக்கும் சமயங்களை அவனில்லாத நேரமாகத் தேர்ந்தெடுத்தாள். வெளி வேலைகளில் ஈடுபட்டு வெயிலில் களைப்புற்று வீடு திரும்பும் அவளுக்குக் காற்றுக்காகவோ அலுப்பிற்காகவோ சற்றுத் தளர்ச்சியுடன் தூங்க முடியாதிருந்தது. துணி மாற்றிக்கொள்வதற்குக் கதவை அடைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. எந்த ஒன்று அவன் நினைப்பைத் தவறான திசைக்கு அழைத்ததோ! ஆனால் தான் மறந்தும் தன் அறியாமையின் இயல்பினால்கூட அவனுடைய திசை தெரியாத கற்பனைக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் வத்சலா கவனமாக இருந்தாள்.

அது புரட்டாசி மாதத்தின் நள்ளிரவு. ஊருக்குள் ஒரு வீடு தீப்பற்றிக்கொண்டது. அப்போது பல ஆவேசமான பதற்றக் குரல்களைக் கேட்டு வத்சலாவும் எழுந்து ஓடிவந்தாள். மற்ற பெண்களைப் போல் அல்லாது எங்களுடன் தீயை அணைத்ததில் அவளும் தன்னை மறந்து ஒரு ஆண் பிள்ளையைப் போலப் பங்குகொண்டாள். நெருப்பை அணைத்து முடித்துச் சற்று ஆசுவாசமாகவும் அதன் முழு அழிவையும் நினைத்து எழும்பிய பதற்றம் தீராமலும் தெரு மக்கள் தூக்கம் கலைந்த முகங்களுடன் ஆங்காங்கே கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாட்டிதான் அப்போது வத்சலாவின் முதுகைக் கவனிக்க நேர்ந்ததாகச் சொன்னாள். முதுகுப் பக்கம் அவளது ரவிக்கை கத்தரிக்கோலால் துண்டிக்கப்பட்டதுபோல் இரண்டாகத் தொங்கிக்கொண்டிருந்தது. எல்லோரும் சட்டென அவளின் பின்பக்கம் வந்தும் அவளைத் திரும்பச் சொல்லியும் அவளது வெற்று முதுகைப் பார்த்துச் சிரித்தபடி கேட்டார்கள், இதுகூடத் தெரியாமல் ஒரு பெண்பிள்ளை இருப்பாளா என்று. நெருப்பை அணைக்கையில் எதிலாவது மாட்டிக் கிழிந்திருக்கும் எனப் பொதுவான காரணம் சொன்னார்கள். சட்டெனப் புடவையை எடுத்து வெகுளியாகச் சிரித்தவாறே முதுகை மூடிக்கொண்ட அவளுக்குத் தான் வலுவாகத் தாக்கப்பட்டிருப்பதை நினைத்து உள்ளுக்குள்ளே நடுக்கம் படர்ந்தது. அவனை நன்றாக அடித்து உதைக்க வேண்டுமென நினைத்தாள். அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை.

வீட்டுக்குள் நுழைந்து சிம்னி விளக்கைக் கொளுத்தி அவனை எழுப்பினாள். அவன் தூங்கித்தான் போயிருந்திருக்க வேண்டும் என்று முகத்தைப் பார்த்தவுடன் நினைத்தாள். அவன் ஒன்றும் புரியாதவன் போல் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு அவளைப் பார்த்தான்.

“என் ஜாக்கெட்ட பிளேடு வச்சி கிழிச்சியா?” என்றாள். அவன் சட்டென அதிர்ச்சி காட்டி மிக இயல்பாய் இல்லையென்று தலையாட்டினான்.

“பொய் புளுவாத. உன்னைத் தவிர வேற யாரு இருக்கா இங்க?”

அவன் முகத்தைத் தூக்கி அவளைப் புதிதாகப் பார்ப்பவனைப் போல் ஒரு பொம்மையாக அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

“நான் உனக்கு அம்மாடா! எங்கிட்ட அப்படியெல்லாம் நடந் துக்கக் கூடாது. அதுக்குத் தெரிஞ்சா உன்ன ஊட்ட உட்டுத் தொரத்திடும். நீ நடுத் தெருவுலதான் நிக்கணும்.”

அவன் எதுவும் பேசாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“வச்சிருக்கிறதே நாலு ஜாக்கெட்டு. இதில ஒண்ண கிழிச்சிட்ட. உன் புத்தி ஏன் இப்படிப் போவுது?”

அவள் பேசப் பேச அவளையே பார்த்துக்கொண்டிருந்த அவனிடமிருந்து எந்தப் பதிலையும் இனி வாங்க முடியாது என்று அவளுக்குத் தெரிந்தது. “இதே நாம் பெத்த புள்ளையாருந்தா இப்பிடிச் செய்யுமா?” என்றவுடன் சட்டென அவளுக்கு அழுகை வந்தது.

அவன் மெதுவாக எழுந்தான். அவளுக்கு அவனை எதிர்கொள்ள முடிகிற அளவுக்கு உடலில் பலமும் மனதில் தைரியமும் இருக்கறதென்று உடனே நினைத்தாள். அப்படியானவன் அல்ல. சிறுபிள்ளைத்தனம். முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

அவன் கதவுப் படலைத் திறந்து வெளியேறினான். அவளது தாய்மை உணர்வால் அவனது நடை அவளுக்குப் பரிதாபத்தைத் தோற்றுவித்தது. அவன் குளக்கரைப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான் அவன். மதகுக் கட்டையில் சென்று அமரும்வரை எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்பு ஜாக்கெட்டை மாற்றிக்கொண்டு கிழிந்ததைக் கரித்துணிக்காக அடுப்பின் மேல் எரவாணத்தில் செருகினாள். அவனை வெளியில் படுக்க வைப்பதற்கான எந்தக் காரணத்தையும் தங்கப்பனிடம் சொல்ல முடியாது. பிறகு வெகு நேரம் தூக்கம் வராமல் குழப்பத்துடன் விழித்துக்கொண்டிருந்துவிட்டு எழுந்து வாசலுக்கு வந்து அவனைப் பார்த்தாள். இருளில் கரிய உருவமாய் மதகுக் கட்டையிலேயே சுருண்டு படுத்திருந்தான்.

மறுநாள் காலையில் வத்சலா, வாழ்க்கை தரும் எதிர்பாராதவைகளில் நேரும் விசனங்களால் இயல்புக்கு மாறான முதிர்ச்சியுடன் தோன்றினாள். ரத்த பந்தத்தால் எழும் இயலாமையும் குழந்தை இல்லாவிடினும் இளகிய இதயம் கொண்ட அவளது இயல்பான பெண்மைக்குள் சுரக்கும் தாய்மையும் அவளை அழுத்திக்கொண்டிருந்தன. வேலைக்குக் கிளம்பிய நேரத்தில் அவன் மதகுக் கட்டையில்தான் படுத்திருப்பான் என்று நினைத்து ஏமாந்தாள். வழி நெடுகத் தென்பட்ட அவன் வயதொத்த பிள்ளைகளிடம் அவனுக்குச் சாப்பிடுவதற்கு வீட்டில் பழையதை வைத்திருந்ததைச் சொல்லி, அவனைக் கண்டால் போய் சாப்பிடச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டு சென்றாள்.

பூதக்கண்ணாடி அன்று பகல் முழுதும் சூரியனை நேருக்கு நேர் பார்க்க முடியாத அனல் வீசும் வெய்யலில் முடப்பேறிய வெளிர்மஞ்சள் சருகுகள் மூடிய கதிரறுக்கப்பட்ட சோளவயல் காடுகளில் சுற்றிக் கொண்டிருந்தான். அவனைக் கண்டவர்கள் “மொட்டை வெயிலில் என்ன செய்கிறாய்?” என்றார்கள். அவன் நிதானமான நடையுடன் ஆட்களற்றுத் திறந்துகிடந்த டீசல் வாசனை வீசும் இஞ்சினுக்குச் சென்று கரடுதட்டிப்போன களிமண் தரையில் படுத்திருந்தான். நாங்கள் பாசனத்திற்காக இஞ்சின் கொட்டகைக்குச் சென்றபோது அவன் ஒரு பழைய துணி மூட்டையைப் போல் கிடந்தான். அவன் கால்களில் திடமான சோளச் சருகுகளின் கூர்மை குறுக்கும் நெடுக்குமான ரத்தக் கோடுகளைக் கிழித்திருந்தன. சில வாரங்களுக்குப் பிறகு, எங்கள் வீட்டு வாசலில் வந்து அமர்ந்து, மாட்டுக்கு லாடம் அடித்துக்கொண்டிருந்ததை அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோதும் கவனித்தேன். அவன் கால்களில் கிழித்திருந்த சோலைகள் காய்ந்து வறண்ட கோடுகளாக மாறிவிட்டிருந்தன.

உச்சி வெயிலில் வேலை கலைந்து வீடு திரும்பிய வத்சலா முதலில் தன் அலுப்பைப் போக்கிக்கொள்ளக் கூட உட்காராமல் வைத்தது வைத்தபடி இருந்த சோற்றுப் பானையை ஆர்வமிழந்து திறந்து பார்த்தாள். பழையது அப்படியே நீரில் ஊறிக் கொண்டிருந்தது. அவள் பெருமூச்சினூடாக அவனை நினைத்தபடி வியர்வையைத் துடைத்துக் காற்று வாக்கில் அமர்ந்தாள். அவன் வீட்டுக்கு வராதது குறித்து அவளுக்குள் பலவித யோசனைகள் உருவாயின. வயலில் அவள் வேலை செய்து கொண்டிருந்தபோதும் உடனிருக்கும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத அவளது வீட்டு நிகழ்வுகள் குறித்து மௌனித்திருந்தாள். அவன் அவளை விட்டுச் சென்றுவிடுவான் என்று யோசித்தபோது அவளுக்கு மனத் தாங்கலாக இருந்தது. எந்தத் தொழிலும் தெரியாத அவனை எல்லோரும் நிராகரித்துக் கேலிசெய்வதான கற்பனையில் அவளுக்குக் கண்ணீர் திரண்டுவந்தது.

வெய்யில் தணியும் முன்மாலை நேரத்தில் சோகம் விரவிய முகத்துடன் மண்குடத்தைத் தூக்கிக் கொண்டு தண்ணீர் மொள்ளச் சென்றபோது மிகச் சாதாரணமாக ஊர்ப் பையன்களிடம் விசாரித்தாள். உள்ளூர அவன் எங்கேயும் தன்னை விட்டுச் சென்றுவிடமாட்டான் என்று அவள் நம்பினாலும் அவனை நேரில் பார்க்கும் ஆர்வம் மிகுந்தது. ஊர் பரிகசிக்கும் லத்தைக் கண்ணாடியும் ஒல்லியான கைகால்களும் அவளுக்குப் பிடிக்கவே செய்தன. அவனிடம் ஏதாவது பேசி எப்படியாவது ஒரு வார்த்தையைப் பிடுங்கி விடும் ஆர்வம் துளிர்த்தது. ‘அறியாப் பிள்ளை. அவனை என்ன செய்வது?’ என்று நினைத்துக்கொண்டாள். பகலில் அவனைக் கண்டவர்கள் விவரம் சொன்னதை வைத்துச் சாயங்காலமாய் அவள் அவனைத் தேடிக்கொண்டு வயல்வெளிக்குச் சென்றாள். சூரியன் சரியும் திசையில் ஆடுகளை வீட்டுக்கு ஓட்டிவரும் பிள்ளைகளை விசாரித்தாள். அவர்கள் அவன் மெயின் ரோடு பக்கமாய்ச் சென்றதாகச் சொன்னார்கள். அவள் அவனைச் சரியாக யூகித்தாள். சற்று ஆறுதலோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

அவள் யூகித்தபடியே நிழல்கள் தோன்றாத இருளில் தங்கப்பனுடன் அவன் வீட்டுக்கு வந்தான். தங்கப்பன் அவளை மங்கிய மஞ்சள் வெளிச்சப் புகை பரப்பும் சிம்னிவிளக்கு வெளிச்சத்தில் ஏறிட்டுப் பார்த்தான். வத்சலா தலைக் கேசம் கலைந்து ஒளியிழந்த ஒரு பழைய சித்திரத்தைப் போல வீட்டின் இருட்டினூடே தெரிந்தாள். அது ஒரு கேள்வி போலும் அவனே அதற்கு விடை கொடுத்தது போலும் பார்வையைத் தாழ்த்தி உள்ளே சென்றான். அவனுக்கும் பின்னே பூதக்கண்ணாடி தன்னை மறைத்துக்கொண்டு தங்கப்பனின் வால்போல் சென்றான். வீட்டுக்குள் அவர்களின் நிழல்கள் கோரச் சித்திரங்களாக அசைந்தன. அவரவர் தேவைகளை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவள் குழப்பமாகத் தடுமாறினாள். சுமுகமான வார்த்தைகளை எதிர்பார்த்துப் பாத்திரங்களில் முகம் கொடுத்து வேலை செய்தாள். எதிர்த்தரப்பின் மூச்சடைக்கும் மௌனம் அவள் முதுகுக்குப் பின்னே கத்திபோலப் பாய்ந்துகொண்டிருந்தது. அவள் சோர்ந்துபோனாள். தைரியமற்றவளாய் எதுவும் பேசாமல் இருவருக்கும் சோறு பரிமாறினாள். அவர்கள் விடிந்து கிளம்பியபோதும் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவள் வாசல் பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள். உபயோகமற்ற வார்த்தைகளாக இருப்பினும்கூட அவள் பரிதாபமான முகத்துடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘எனக்கு ஒரு பிள்ளைப்பூச்சி இல்லையே ஆண்டவா’ என்று முணுமுணுத்து ஏங்கினாள். யாருடனாவது தன்னை முழுதாய் ஒப்புவித்துவிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும்போலிருந்தது. திரண்ட கண்ணீரை அடக்கிக்கொண்டாள்.

அன்று இரவும் அதன் பின்பு வந்த இரவுகளும் பதற்றம் விரவியதும் தன்னை மறந்து தூங்கியதும் துர்க் கனவுகளின் அதிர்ச்சியில் கண் விழித்துச் சூழலைக் கவனித்துக்கொள்வதுமான இரவுகளாக அவளுக்கு இருந்தன. பூதக்கண்ணாடி கருப்பையில் சுருண்டுகிடப்பது போலவே எப்போதும் தூங்கிக்கொண்டிருந்தான். அதில் மறைந்திருக்கும் அதிகாரம் அவளை நிம்மதியிழக்கச் செய்தது. வீட்டுக்குள் நிரம்பிக்கொண்டிருந்த அவனது அதிர்வலைகளில் அவள் மயக்கம்போட்டு விழாத குறையாய்த் தன்னை நிர்வகித்துக் கொண்டிருந்தாள். ஒரே நாளைப் போல எந்த மாறுதலுமின்றிக் கிழமைகளின் பெயர்கள் மாறிக்கொண்டிருந்தபோதும் அவள் சிந்தித்தவரை அது எப்போதும் நடைபெற முடியாதது. ஆனால் அவள் தன் எண்ணம் பொய் என்றும் நினைத்தாள். பூதக்கண்ணாடிக்கும் தங்கப்பனுக்கும் இருக்கும் நெருக்கம் அவளால் விளங்கிக்கொள்ள முடியாதது. இத்தனை வயதுக்குப் பிறகும் அவனைச் சில சமயம் தங்கப்பன் குளிப்பாட்டிவிடுவான். எதுவுமே பேசிக்கொள்ளாமல் இருவரும் மணிக்கணக்காகத் தனியாக உட்கார்ந்திருப்பதையும் நினைத்துப் பார்த்தாள். பழைய சாதாரணக் காட்சியாக இருப்பினும் புதிய அர்த்தத்தைத் தருவதுபோலவும் ஆனால் புரிந்துகொள்ள முடியாததுமான அதை நினைத்து வியந்துகொண்டிருந்தாள்.

நெல் அறுவடைக் காலம் ஆரம்பித்தபோது தூக்கு வாளியில் கஞ்சியை எடுத்துக்கொண்டு சும்மாடு துணியாக ஈரிழைத் துண்டை மேலில் போட்டுக்கொண்டு கதிர் அரிவாளுடன் ஈர வைக்கோல் மணம் வீசும் வயல்வெளி வழியே நிலையற்றதும் மகிழ்ச்சியற்றதுமான நினைவுகளில் அவளும் அறுவடைக்குப் போனாள். காட்சியும் கருத்தும் ஒன்றிணைய முடியாதபடி அவள் பார்வையும் நடையும் விசனத்தில் தோய்ந்திருந்தன. எங்கள் வயலைத் தாண்டிப் பக்கத்து வயலில் இறங்கியபோது பாட்டி அவளை நலம் விசாரித்தாள்.

ராஜமாணிக்கம் தன் களிமண் நிற உடலில், சமச்சீரான வெண் பழுப்பு நிறத்துத் தலைமுடி மற்றும் அணில் வால் மீசையுடன், பூனைக் கண்களுடன் கம்மங்கூழிலும் கேழ்வரகிலும் வளர்ந்த வளப்பமான தொப்பையுடன் மேல் சட்டையற்றுக் கயிற்றுக் கட்டிலில் வெயிலில் குடைபிடித்து அமர்ந்திருந்தார். இடுப்பொடிய நிலம் பார்த்துக் கதிரறுத்தவள் வேலை முடிந்து அவரிடம் இளவழகனை அவர் வீட்டு மாட்டுப் பண்ணையில் ஏதாவது வேலைக்குச் சேர்த்துக்கொள்ள முடியுமா என்று கேட்டாள். “உலகம் தெரியாத அவன் ஒரு ஆளாய் வரவேண்டும்” என்று சொன்னாள். மீசையை உருவியபடி தலையாட்டிக் கேட்டுக்கொண்டவர், “ஆகட்டும் பார்க்கலாம்” என்றார். சூரியன் சாயும்வரை வயலில் உதிரிக் கதிர்களைப் பொறுக்கி வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் அரிகிடையில் போட்டாள். பின்பு அவள் தனித்த நடையில் காலிப் பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு வெறுமையும் குழப்பங்களும் சூழ்ந்த வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.

அந்தப் புதன்கிழமை பண்ணையிலிருந்து ஒரு கிழவன் வந்து இளவழகனைக் கூட்டிச் சென்றதாக வத்சலா சொன்னாள். தங்கப்பனும் அதை விருப்பமில்லாமல் ஏற்றுக்கொண்டான். அவனுக்கு மீசைக்காரரைப் பிடிப்பதில்லை என்றும் வத்சலாதான் சொன்னாள். இருப்பினும் அவனுக்குச் சரியான இடம் அதுதான் என்று நாங்களும்கூட நினைத்தோம். மனக்குழப்பங்கள் கொண்டு ஒழுங்கற்ற காரியங்களை செய்யும் அவன் அங்கே சென்றால் வேலைமீது கவனம் குவியும் என்று நாங்களும் எதிர்பார்த்ததில் தவறொன்றும் இல்லை.

வத்சலாவின் வீட்டை ஒட்டி நீளும் வயல்கள் ராஜமாணிக்கத்தினுடையவைதான். அவர் அந்தப் பக்கத்தில் அறுவடை தொடங்கும்போது எப்போதும்போல அங்கேயே ஒரு தற்காலிக வைக்கோல் கூரைப்பந்தலை உருவாக்கிக்கொண்டார். அவருக்குப் படுக்கையும் சாப்பாடும் அங்குதான் நடந்தன. அந்தப் பக்கத்து அறுவடை தொடங்கும்போது சென்ற தங்கப்பன் அறுவடை முடிந்த ஆறாவது நாளே வீட்டுக்கு வந்ததாக வத்சலா சொன்னாள். “அந்த மடக்குக் கட்டில் ஏன் வீட்டினுள் கிடக்கிறது. அதை மரியாதையாக அவர் வீட்டு ஆட்களைவிட்டு எடுத்துச் செல்லச் சொல்” என்று சத்தமிட்டுவிட்டுப் போனதாகவும் சொன்னாள். அந்தக் கட்டிலின் வருகை அவனை இம்சைக்குள்ளாக்கிக்கொண்டிருந்தது.

தங்கப்பன் அந்த ஞாயிற்றுக் கிழமை இளவழகனைத் தேடிக்கொண்டு சென்றான். தோட்டத்தில் நின்று அவனைப் பார்த்துப் பேசி விட்டு வாங்கிச் சென்றிருந்த பகோடா பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு அறிவுரை கூறிவிட்டு வந்தான். அடுத்த வாரமும் கட்டில் எடுக்கப்படாமல் வீட்டினுள் கிடந்தது குறித்துக் கேட்டான் தங்கப்பன். வத்சலா பயந்துகொண்டே ஆனால் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு சாதாரணமாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டாள்.

“நான் சும்மா கேட்டேன். இந்தக் கட்டில நான் எடுத்துக்கவான்னு. அவரும் சரின்னுட்டார். நாம தரையிலதான படுத்துக்குறோம். குளத்தங்கரை பக்கமா இருக்குறதால பாம்பு பூச்சி ஏதாவது வரும். நாம மேலே படுத்துக்கலாம்” என்றாள். அவன் அவளை முறைத்துவிட்டுக் கிளம்பி வேலைக்குச் சென்றுவிட்டான்.

அவள் கட்டிலின் மேல் ஆசைப்படுவது இயற்கையானது. ஆனால் அவனுடைய ரோஷமும் இயல்பானதுதான். ஆனால் அவன் அதை அத்தனை தீவிரமாக எதிர்க்கும் போது மனைவியானவள் அதை அனுப்பிவிடுவதுதான் முறை என்று பாட்டி என்னிடம் அன்றிரவு சாப்பிடும்போது விவாதித்தாள். தங்கப்பன் அவளிடம் மறைமுகமாகச் சொல்லியிருப்பான் என்றேன். அப்படித்தான் இருக்கும் என்றாள் பாட்டி.

ஏமாற்றங்களைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக, சுயப் பழிவாங்தலுக்குப் பயன்படுத்தப்படும் செயல்கள்மீது எப்போதும் எல்லோருக்கும் ஒரு ரகசிய பிரேமை இருக்கவே செய்கிறது என்பதை அவனுக்கு யாரும் புரியவைக்க முடியாது. ஏமாற்றுபவர்களைப் போல ஏமாறுபவர்களின் பிடிவாதமும் அதற்கு இணையானதுதான். எனினும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவன் நினைப்பதற்கு உண்டான செயல்களையும் அவள் செயல்படுத்திக் காட்ட வேண்டுமென்று எதிர் பார்த்துக்கொண்டிருந்தான்.

தங்கப்பன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்டிலை ராஜ மாணிக்கம் வீட்டுப் பண்ணையில் எடுத்துச் சென்று போட்டு வருவதற்கு இளவழகனைத் துணைக்கு அழைத்து வரப் போனான். உச்சி வெயிலில் அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்தபோது அனைவரது உள்ளுணர்வுகளும் அவரவருக்கு விசுவாசமாக எச்சரித்துக்கொண்டிருந்தன. வீட்டுக்குள் இருந்த வத்சலாவுக்குத் தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதாக எழும் எண்ணம் ரகசியமாக அவளது காதில் சொல்லப்பட்ட வார்த்தைகளைப் போல் உண்மையானதாகவும் அழுத்தமானதாகவும் பதிந்தது. அவளால் எதையும் உதறிவிட முடியவில்லை. அவள் துணுக்குற்றாள். கண்மணி அளவுள்ள கீற்றுப் பொத்தல்கள் வழியே பாயும் ஒளி, பூனையை ஒத்த இடம் வலமான நடையசைவுகளால், தடைபட்டுத் தடைபட்டு வீட்டினுள்ளே பாய்ந்ததைக் கண்டபோது முழுதாய்ப் பயந்து மிரண்டாள். அச்சமயத்திற்குச் சற்றுப் பிந்திய நேரத்தில் பாட்டியிடம் வத்சலா தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள். எண்ணை காணாத செம்பட்டையான தலைமுடியுடன், எண்ணைப் பசை படிந்த அவள் முகம் இருண்டும் பயத்தில் வெளுத்தும் சுயப் பழிவாங்கலில் முழுதாய்த் தோற்றுப்போயிருந்தது.

மீண்டும் உச்சி வெயிலில் அழகும் தங்கப்பனும் ஹோட்டலை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது உரம் வாங்க நண்பர்களுடன் வண்டியை எடுத்துச் சென்ற நாங்கள் அவர்களைக் கடக்கவிருந்தோம். எங்கள் பகுதியிலிருந்து யாரும் செல்லாத அப்பாதையில் – அது ஒரு பாதையே அல்ல – குறுக்காக வளைந்து சென்றுகொண்டிருந்தார்கள். ஆற்றைக் கடந்தாலொழிய, முட்கள் நிறைந்த அந்த வழியற்ற வழி, ஆற்றைத் தவிர வேறெங்கும் அழைத்துச் செல்லாது. பாட்டி, அவனைக் கண்டால் வீட்டுக்கு வரச் சொன்னதாகக் கூறியதைத் தங்கப்பனிடம் சொன்னேன். அவன் தலையாட்டினான். ஆனால் அவர்கள் திரும்பிப் பிரதான சாலைக்கு வந்து, ஓட்டலை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

வத்சலாவின் பேச்சை வைத்து எங்களால் அதை உணர முடிந்தது. மீட்க முடியாத தொலைவுக்குச் சென்றுவிட்ட வாழ்க்கையின் கசப்பை அவர்கள் சுவைத்திருந்தார்கள். அவர்கள் வழக்கம்போலவே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பூதக்கண்ணாடி சாலையில் கிடந்த காய்ந்த மரவள்ளிக் குச்சி ஒன்றை எடுத்துத் தரையில் தட்டிக்கொண்டே போனான்.

வத்சலாவுக்கு இருவரும் வராத மற்ற இரவுகள் பற்றிக் கவலை இருந்ததில்லை. எத்தனை விதமான கற்பனைகளில் தன்னுடைய விடுதலை குறித்துச் சிந்தித்தும் அவளால் சுலபமான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எங்காவது சென்றுவிடலாம் எனத் தோன்றியது. ஆனால் எதிர்கொள் வதைத் தவிர்த்து அவளுக்குச் செய்ய முடிந்தது எதுவுமில்லை.

அவள் மறுநாள் வேலைகளை முடித்த மதியத்தில் தோட்டத்துப் பக்கக் குளக்கரையில் குளிப்பதற்கு இறங்கினாள். வீட்டை ஒட்டிய குளமாக இருப்பதால் அவள் எப்போதும் மக்கட்டி மாராப்போடும் சோப்பு டப்பாவோடும் மஞ்சளோடும் இறங்கிவிடுவாள். சாலையை அந்நேரத்தில் உபயோகிப்பவர்கள் யாராயிருப்பினும் தூரத்தில் ஒருத்தி மக்கட்டி மாராப்புடன் குளிப்பதைப் பார்க்க முடியும். அன்றும் அதை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. அது ஒரு நிதானமான குளியலாக இருந்தது. நீரில் ஊறிக் கிடப்பது அவள் மனதுக்கு உணக்கையாக இருந்தது. ஆனால் புழுக்கமான நினைவுகளை அவளால் களைந்துவிட முடியவில்லை. குளித்து முடித்துக் கரையேறி வாசல் படலைத் திறந்து வீட்டினுள்ளே வந்தபோது அவள் சற்றும் எதிர் பாராத செயலில் பேச்சு மூச்சற்று நின்றாள். அவளுக்கு உடலெங்கும் உதறல் எடுத்தது. அவளுடைய அனைத்துத் துணிகளும் ஒன்று விடாமல் எலி குதறியதைப் போல சுக்கல் சுக்கலாகக் குதறப்பட்டு, அதனுடன் குழம்பு சாமான்களான மிளகாய்த்தூள், புளி, தானியங்கள், சில்லரைக் காசுகள் கிழிக்கப்பட்ட ரூபாய்த் தாள்கள் அனைத்தும் சேர்த்துக் கலந்து முட்டாடி வைக்கப்பட்டிருந்தன. அலுமினியப் பாத்திரங்கள் நசுக்கப்பட்டும் மண் சட்டிகளும் பானைகளும் உடைத்துத் தூளாக்கப்பட்டும் கிடந்தன. வீட்டை ஒட்டிக் குளித்துக்கொண்டிருந்தபோதே சத்தமில்லாமல் யாரோ இத்தனை காரியங்களைச் செய்திருப்பதைக் கட்டுப்படுத்தப்பட்ட நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஈரம் சொட்டிக்கொண்டிருந்த பாவாடையோடு வேகவேகமாக வெளியே வந்தாள். மக்கட்டி மாராப்போடு தெருவில் செல்ல முடியாததால் அங்கிருந்தபடி ஊரைப் பார்த்தாள். காத்திருக்கவோ துணைக்கு ஆள் கூப்பிட்டுச் சொல்லவோ இயலாதவளாய் கையறுந்த நிலையில் அவள் குரல் நெருக்கப்பட்டு வார்த்தைகளை இழந்து அரைநிர்வாணத்துடன் அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.

ஊரிலுள்ளவர்கள் அவளை வந்து பார்ப்பதற்கு முன்பு அவள் உடுத்திக் கொள்வதற்கு அவள் சினேகிதி ஒரு வாயில் புடவையும் ரவிக்கையும் கொடுத்திருந்தாள். அவளுக்குள் குளிர் நடுக்கம் உருவாகிக்கொண்டிருந்தது. வேடிக்கை பார்த்தவர்கள் சிலர் அவளுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆறுதலைக் கூறுவதைவிடவும் சம்பவத்தின் பின்னிருக்கும் ரகசிய மனிதனைப் பற்றியே அவர்கள் ஆழ்ந்து பேசிக்கொண்டிருந்ததை அவள் விரும்பவில்லை. எளிமையான கற்பனைகளுக்குள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்த அவளுக்கு இது உண்மையிலேயே அதிகப்படியான அதிர்ச்சிதான். அவள் திடமாக இருக்க முயன்றாள். அவளைப் பொறுத்தவரை அவள் நேரிடையாகவே பயமுறுத்தப்பட்டிருந்தாள். கழுவேற்றப்படக் காத்திருக்கும் பொழுதுபோல் அவளுக்குக் கிலிபிடித்திருந்திருந்திருக்கும். கேட்பவர்களிடம் அவள் பதில் சொல்லி மாளாது தலைவிரி கோலமாய் மரத்தடியிலேயே பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தாள். உள்ளூரத் துரத்தப்படுவதாக உணர்ந்த அவள், தப்பித்தலுக்காகவே அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். வேறு யாரைவிடவும் சரியாக யூகிக்கப்பட்ட அந்த முடிவு அவளைப் பொருத்தவரை மிகச் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். சாயங்காலம் சினேகிதியிடம் சில்லரை வாங்கிக்கொண்டு ஊர் விசாரிப்புகளுக்கு ஒன்றும் சொல்லாமல் சொந்த ஊரான வயலூருக்குச் சென்றாள்.

அதுதான் நாங்கள் வத்சலாவைக் கடைசியாகப் பார்த்தது. பறவைகள் வீடு திரும்பும் அந்தச் சாயங்கால வேளையில் அள்ளிக் கொண்டையிட்ட கூந்தலுடன் புறங்கையால் அழுகையைத் துடைத்தபடியே ரோட்டில் நடந்து போனாள். நாங்கள் வழிமறித்துச் சொன்ன சமாதானங்களை ஏற்க அவள் ஒன்றும் சிறுமியல்ல.

ரகசியமாக ஆடப்பட்டுக்கொண்டிருந்த ஆட்டத்தில், அவரவர்களின் பாத்திரங்களை உணரும் அரூபமான கணத்தை எட்டியிருந்த அவர்கள், அப்போது அவற்றைத் தங்களின் இயல்புகளாகக் கருதி மன ஊக்கம் பெற்றிருந்திருக்க வேண்டும் – தங்கப்பனும் பூதக்கண்ணாடியும் மிகத் தெளிவாக அந்த முடிவை எடுக்காமல் விட்டிருந்தாலும்கூட. ஏனெனில் அவர்கள் வழியற்ற ஊருக்குப் போவதைப் போல ஆற்றுப் பாதைக்குள் நுழைந்த நிகழ்வும் வத்சலா கிளம்பிச்சென்றதும் குறிப்பிட்ட ஒன்றை நோக்கி அது தன் அடியெடுத்து வைத்திருந்ததன் அடையாளமாகவே இதைச் சொல்கிறேன்.

இளவழகனுக்கும் தங்கப்பனுக்கும் செய்தி எட்டுவதற்கு மறுநாள் ஆகி விட்டிருந்தது. அவர்கள் வீட்டிற்கு வந்தபோது ஊரில் வேலையற்று இருந்தவர்களும் அவர்களின் எதிர் நடவடிக்கைகள் என்னவாக இருக்குமென்று எதிர்பார்த்தவர்களும் வந்து வேடிக்கை பார்த்தார்கள். அப்போது சூழலை இம்சிப்பதுபோலக் காண்டாமிருக வண்டின் எந்திர கதியில் இயங்கும் றெக்கைகளின் சப்தம், பேய் வண்டு அடித்தொண்டையில் ரீங்கரித்துப் பாடிக் காதைக் குடையும் சப்தத்தைப் போலும், துர்வருகையைக் குறிப்பிடுவதுபோலத் தூரத்தில் நாய்கள் கூட்டாக ஓலமிடுதலும் கலவையாகக் கேட்டுக்கொண்டிருந்தது. பூதக்கண்ணாடி வாசலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தான். தங்கப்பன் எல்லோரையும் விரட்டாத குறையாகக் கலைந்து போகச் சொன்னான். வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தான். சிலர் அவர்களைப் போய் வத்சலாவைக் கூட்டிக்கொண்டுவரச் சொன்னார்கள். “அவள்தானே போனாள்; அவளே வரட்டும்” என்றான் தங்கப்பன். சிலர் “அதுவும் சரிதான். அவனிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்” என்றார்கள்.

மானுடர்களின் பூர்வீகத் தனிமை தங்கப்பனுக்கும் பூதக்கண்ணாடிக்கும் அந்நொடியிலிருந்து தொடங்கி விட்டிருந்தது. வத்சலா சென்ற பிறகு அவ்வீட்டிற்கான நேரடித் தொடர்பை நாங்கள் முழுமுற்றாக இழந்துவிடவில்லை என்றாலும் அதிகபட்சத் தொடர்பை இழந்துவிட்டிருந்தோம். அவர்களுக்கான நாடகம் அடுத்த மூன்று நான்கு நாட்களிலேயே முடிந்துவிட்டிருக்கும். வழியற்றதைப் போல் அவர்களின் அலுப்பூட்டும் அதே தினசரிக்குள் நுழைந்து விட்டிருந்தார்கள்.

ஊருக்குள் விவசாயத்தின் அடுத்த போகத்திற்கான உழவுப்பாடுகள் நடக்கத் தொடங்கின. மழை இல்லாமலேயே நிலவும் குளிர்ச்சி மிகுந்த பருவம். வெவ்வேறு திசைகளைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லா மோட்டார்களும் தண்ணீரை முழுமையான வீச்சில் பாய்ச்சிக் கொண்டிருந்தன. நீர் நிரம்பிய வயல்களில், தீனிகளுக்காகத் தூரத்திலிருந்து தினம் தினம் பறந்துவந்த கொக்குகளைக் குறவர்கள் நாட்டுத் துப்பாக்கிகளால் சுட்டு ஊருக்குள் விலை பேசி விற்றுச் சென்றார்கள். அவ்வப்போது பெய்து நின்ற மழைக்குப் பின்பு வெறிக்கும் வெயிலில் ஆடுகளும் மாடுகளும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் வாகனங்களுக்கு வழிவிட்டுப் படுத்தும் நின்றும் வெயிலில் காய்ந்தபடி அசை போட்டுக்கொண்டிருந்தன. நடவு முடியும்வரை எங்கள் வாழ்க்கை அள்ளித் தெளித்த கோலத்தின் மிச்சங்கள்தான். இருப்பினும் நடவு முடிந்த பின்பு கிடைக்கும் பகல் நேர ஓய்வு வயல்களில் களை மண்டும்வரை நீளும். வத்சலாவின் நினைவுகள் எங்களைப் பல சமயங்களில் அவளைப் பற்றிப் பேசவைத்திருக்கின்றன. சாதாரண நாட்களிலேயே ஊரின் கண்களில் தென்படாதவர்கள் தங்கப்பனும் பூதக்கண்ணாடியும். விதைப்புக் காலத்தில் விவசாயத்திற்கான மெது ஓட்டம் தொடங்கிவிடும்போது அவர்களை நினைத்துப் பார்க்கவே எங்களுக்குத் தோன்றியிருக்கவில்லை.

அன்று தங்கப்பனையும் பூதக் கண்ணாடியையும் நாங்கள் வயலில் பார்த்தோம். சில பெண்கள் தங்கப்பனைப் போய் வத்சலாவைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்கள். அவனது அசட்டையான பதில்களுக்குப் பெண்களும் ஏகத்திற்கு வத்சலாவுக்குச் சலுகையாகப் பேசி அவனை வம்புக்கிழுத்தார்கள். ஒரு வகையில் எங்களையும் கடக்க வேண்டிய நெருக்கடி அவனுக்கிருந்தது. அவன் வயலூருக்குக் கிளம்பிப் போவதாகச் சொல்லிப் போனான். அது எங்களின் பொருட்டே இருக்க முடியும்.

வேலைக்குப் போகாத கைக் குழந்தைக்காரிகளும் வயதானவர்களும் பள்ளிக்கூடத்திற்குப் போகாத பிள்ளைகளும் ஊதாரிகளும் நிறை மாதப் பெண்களும் மிச்சமிருந்த அந்தப் பிற்பகலில், ஊருக்குள் வத்சலா இல்லாமல் அவர்கள் பிரவேசித்தார்கள். திண்ணையில் படுத்திருந்த சிலர் அவனை வலிந்து கேட்டார்கள். அவள் வர முடியாது என்று கூறிவிட்டதாகத் தங்கப்பன் சொன்னான். அதன் பிறகு அந்த வீட்டில் அவர்கள் இருவரின் இருப்பு என்பதே எல்லோருக்கும் இயல்பாகிப்போனது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு வத்சலாவின் அத்தை, ஊரின் வேலையற்ற நாளில் பக்கத்து ஊருக்கு ஒரு விசேஷத்திற்கு வந்தவள், ஒருமுறை பிள்ளையைச் சென்று பார்த்து வரலாமென்று எங்களூருக்கு வந்தபோது தான் ஒரே விடுகதைக்குப் பல்வேறு விடைகள் எனும் ரகசியத்தின் வாலை நாங்கள் பிடிக்க ஆரம்பித்தோம்.

ஊர் முனையிலேயே அவளுக்குத் தங்கப்பனின் வீட்டைப் பற்றிய செய்திகளே கேள்விகளாய் உரு மாறிக்கொண்டன. வத்சலா கிளம்பி வந்த மறுநாளே தங்கப்பனுடன் அவளை அனுப்பிவிட்டதாக வத்சலாவின் அத்தை சொன்னாள். மூன்று மாதங்களாக வத்சலா ஊரில் இல்லை என்றோம் நாங்கள். அழுத்தமான குழப்பத்துடன் பூட்டிக்கிடந்த வீட்டையும் நாட்களையும் விசாரித்துவிட்டு அவள் நேரே தங்கப்பன் வேலை செய்யும் கடைக்குக் கிளம்பிச் சென்றாள். தங்கப்பன், “அவள் வழியிலேயே என்னிடம் சண்டை போட்டுப் பிரிந்து உங்களூருக்கே வந்துவிட்டாள்” என்றான். அதிர்ச்சியடைந்து கடைத்தெருவிலேயே அழத் தொடங்கியவள் தனது உறவினர்களுடன் அன்று மாலையே எங்கள் ஊர்ப் பகுதியின் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தாள்.

மறுநாள் ஊருக்குள் உயிர்த் தன்மையற்ற முகங்களைக் கொண்ட கொழுத்த காவலர்கள் இருவருடன் வாடகைக் காரில் வந்த வத்சலாவின் உறவினர்களுடனும் குழம்பிய நிலையில் ஒழுங்கற்ற பட்டாளத்தைப் போல் பின்தொடர்ந்த ஊர்க்காரர்களுடனும் வீட்டைத் திறந்து பார்த்தார்கள். சுத்தமாகக் கூட்டப்பட்டு மூன்று மாதத்துத் தூசுபடிந்து கிடந்தது வீடு. அத்தரு ணத்திலிருந்து நாங்கள் அவர்களைப் பற்றிய உண்மையை ஒட்டிய அனுமானங்களைக் கற்பனை செய்யத் தொடங்கினோம். ஊரில் அகப்பட்டோரிடமெல்லாம் விசாரணை நடந்தது. எல்லோரும் பார்த்திருக்க ‘பட்டா பாபு’ கடையில் மதிய சாப்பாடும் முன்மதியத்தில் சூடான டீயும் பகோடாவும் சாப்பிட்டு, பொழுதுசாயப் போனார்கள்.

அன்று இரவு தங்கப்பனையும் பூதக்கண்ணாடியையும் விசாரணைக்குக் கொண்டு சென்ற போலீஸ்காரர்கள் காலையில்தான் திருப்பியனுப்பினார்கள். இறுதியாய் இரண்டு வாரம் கழித்து, கற்பனை வறண்ட, வேலைகளைத் தட்டிக் கழிக்கும், அவர்களின் முடிவைச் சொன்னார்கள்: “அவள் எங்காவது பிழைப்பதற்குப் போயிருக்கலாம்.” மிக மோசமாக அடி வாங்கித் திரும்பி வந்திருந்தான் தங்கப்பன். அவமானத்தில் சுருங்கிப்போயிருந்த அவன், தலையைச் சாய்த்தபடி வேடிக்கை பார்ப்பவர்களைப் பொருட்படுத்தாது தெருவோரமாய் நடந்து சென்றான். பூதக்கண்ணாடியின் உருவத்தைப் பார்த்து மிரட்டி மட்டும் அனுப்பிவிட்டதாகச் சொன்னார்கள். அடிவாங்கியபோதும் தங்கப்பன் “அவளுக்கு என்னோடு வாழ விருப்பமில்லை. அவள் வழியிலேயே ஊருக்குத் திரும்பிப் போய்விட்டாள்” என்று கதறி அழுது சொன்னான். அவன் வாங்கிய அடிக்குச் செத்துப்போயிருக்க வேண்டும் என்றும் சொன்னார் வத்சலாவின் உறவினர் ஒருவர். இதனால் எங்களுக்கு மேலும் நம்பகமான யூகங்களைச் சித்தரிக்கும் போக்குகள் உருவாயின.

தங்கப்பனின் உடல் கன்றிப் போயிருந்தது. பூதக்கண்ணாடியின் பராமரிப்பில் அவன் அனத்திக் கொண்டு வீட்டிலே கிடந்தான். மீண்டும் போலீஸ் விசாரணை என்ற பெயரில் வத்சலாவின் உறவினர் தரப்பு இரண்டாவதுமுறை பணம் கொடுத்தபோதும் காவலர்கள் அடியாட்களைப் போல மூர்க்கமாக அடித்து அனுப்பினார்கள். குழப்பமான சாதக பாதகமான முடிவுகளை நோக்கி நாங்கள் கிசுகிசுக்கத் தொடங்கியிருந்ததில் நியாயத்தின் சாய்மானம் தெரியாமல் ஊர் இந்த முறை வத்சலாவுக்குச் சலுகை செய்வதை நிறுத்திக்கொண்டது.

அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கடலூர் மாவட்டத் தினசரியில், ஒரு துண்டுப் பகுதியில், “காணவில்லை” என்ற கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் எங்கள் பகுதி காவல் நிலையத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் வத்சலா இடம்பெற்றிருந்தாள். சலூன் கடையில் அன்று இது பகல் முழுக்கப் பார்த்துத் தீர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் தேவைப்படுமென்று யாரோ சொன்னதன் பெயரில் துண்டாகக் கத்தரிக்கப்பட்டுச் சினிமா நடிகைகளுக்கு நடுவில் தற்காலிக நிரந்தரத்துடனும் ஒட்டப்பட்டது.

ஊர்ப் பெண்கள் களையெடுப்பிலும் இளம் பெண்களும் வளர்ந்த சிறுமிகளும் புளியங்கொட்டையில் பாண்டி ஆட்டமும், ஆண்கள் வயலில் அண்டைக் கழிப்பது, மரம் வெட்டுவது, மரத்தடிகளில் சீட்டாடுவது போன்றவைகளிலும் பெருவாரியாக ஈடுபட்டிருந்தபோது தங்கப்பன் சகஜமாக நடமாடத் தொடங்கியிருந்தான். பூதக்கண்ணாடி தினமும் அவனை சைக்கிளில் ‘டபுள்ஸ்’ ஏற்றிக்கொண்டு போனான். வழக்கத்திற்கு மாறாக எதுவும் எங்களை ஆக்கிரமிக்காத அப்பருவத்து இயல்பு வாழ்க்கை அதுதான். வத்சலா ஊர்க்காரர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு அனுமானங்களுக்கு ஏற்ப, விதவிதமான பிம்பங்களில் வலம்வந்துகொண்டிருந்தாள். ஆனால் அது முக்கியமற்ற கதையாக மாறிவிட்டிருந்தது.

எல்லாப் பருவங்களும் எங்களைக் கடந்து போனபோது நாங்கள் அவைகளுக்கு உண்டான பரிபக்குவத்தோடு ஓடிக்கொண்டிருந்தோம். ஊருக்குள் எங்கள் தெருவுக்கான நீர்த்தேக்கத் தொட்டியை ஒன்று கூடிக் கையெழுத்திட்டும் கைநாட்டிட்டும் வரவழைத்தோம். மயானத்திற்கான பொதுச் செம்மண் சாலை வந்தது. மழைக்காலம் தொடங்கிவிட்ட நாட்களின் தொடர்ச்சியில் நள்ளிரவில் குறவர் இனக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தச்சுப்பட்டறைகளும் கொல்லன் பட்டறைகளும் கொண்ட எங்கள் ஊரின் அரசமரத்தடி முகப்பில் நின்று தன்னைப் பார்த்துக் குரைத்த நாய்களின் தொல்லைகளைக் கடுமையாக எதிர்கொண்டபடி அதை உரக்கக் கத்திச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் சொல்வதைப் புரிந்துகொள்வதற்கு மழையும் இரவும் நாய்களும் இடைஞ்சல்களாக இருந்தன என்று தர்மாசாரி சொன்னார். பிறகு, நாங்கள் தூக்கம் கலைந்து மழையில் நனைந்தபடியும் கிடைத்ததைப் போர்த்திக்கொண்டும் தேசிய நெடுஞ்சாலையில் மெது ஓட்டத்திலும் நடையிலுமாக ஓடிக் கொண்டிருந்தோம். இளகிய இதயம் கொண்ட சில பெண்கள் அங்கேயே அழுகையைத் தொடங்கிவிட்டிருந்தார்கள்.

ஹோட்டலிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில், அந்தத் தேசிய நெடுஞ்சாலையில் விளக்குகள் எரியாத அந்த வளைவுப் பாலத்தின் ஓரம், சாபம் பெற்றவனைப்போலவும் கேட்பாரற்ற ஒரு நாயைப் போலவும் தங்கப்பன் லாரியில் அடிபட்டு இறந்துகிடந்தான். அவன் உடலை அள்ளிச் சாக்குப்பையில் மூட்டை கட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் குடைபிடித்தபடியும் சிலர் நனைந்த படியும் டார்ச் லைட்டிலும் ஜீப்பின் பின் சீட்டில் எரியும் பெட்ரோமாக்ஸ் விளக்கிலும் ஜீப்பின் ஹெட்லைட் வெளிச்சத்திலும் கடந்து செல்லும் வாகனங்களுக்குக் காவலர்கள் வழிகாட்டிக்கொண்டிருந்தார்கள். அவன் தங்கப்பன்தான் என்று அடையாளம் காணப்படுவதற்காகவே அவனது தலையும் கழுத்துமாய் அரைபட்டு விழுந்த மீதி உடல் நடுச் சாலையில் கவிழ்ந்துகிடந்தது. பூதக்கண்ணாடி அடிபட்ட ஜோடிப் பறவையைப் போல் கதறிக்கொண்டிருந்தான். அழுதபடியே அவனைப் பிடித்துக்கொண்டு சிலர் தேற்றினார்கள். மழையும் இருளும் சூழ்ந்திருந்த அச்சமயத்தில், எங்களைக் கட்டுப்படுத்த மிகவும் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர்களின் அதட்டல்களை மீறித் தங்கப்பனின் ரத்தம் மழைநீரில் கரைந்தோடிக் கொண்டிருந்தது. மறுநாள் மழையின் நசநசப்பிலும் தானாகவே கடை பிடிக்கப்பட்டிருந்த ஊரறிந்த மௌனத்திலும் ஒரு கோணிப்பையில் தர்மாஸ்பத்திரியிலிருந்து வந்த தங்கப்பனின் உடலை ஊர் கூடிப் புதைத்தது. மனம் பேதலிக்கும் தனிமையுடன் பூதக்கண்ணாடியின் மீதமுள்ள வாழ்க்கை தொடங்கியது.

ஆரம்ப நாட்களில், எப்போதும் பூட்டிக்கிடந்த வீட்டில் எப்போதாவது அவன் இருந்தான். திடகாத்திரமான மனநிலை இருந்தது அவனுக்கு. ஹோட்டலில் உறுதிப்பூர்வமாக வேலைக்குச் சேர்ந்துகொண்டான். மூன்று வேளையும் கடையிலேயே சாப்பிட்டான். அதி காலையில் ஊருக்குள் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நெடுஞ்சாலைக்கு வந்து, இருபுறமும் நோட்டம் விட்டுக் கண்ணாடியைச் சரிசெய்து போட்டபடி சைக்கிளில் ஏறிச் செல்லும் அவனை, சாணி தெளித்து வாசல் கூட்டும் பெண்களும், டீ கடைக்கும் அதிகாலைப் பேருந்தைப் பிடிப்பதற்குச் செல்பவர்களும் நிச்சயமாகப் பார்க்க முடியும். தூக்கமற்றவர்களும் கண் விழித்திருப்பவர்களும் அவன் இரவில் வீடு திரும்புவதைப் பார்க்க முடியும்.

அவன் உருட்டிச் செல்லும் சைக்கிளின் ஓசை, பாதி உறக்கத்தில் இருப்பவர்களின் கனவில் நுழையும் சாமர்த்தியம் பெற்றது. அது அவனைப் பற்றிய ஒரு மென்சப்தம். வெளிச்சத்தில் தெரியும் மெல்லிய இழையைப் போல. அல்லது இரவின் தனிமையில் பாடும் ஒற்றைச் சில்வண்டைப் போல. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எந்த மாற்றங்களும் இல்லாமல் அவனுடைய வாழ்க்கை அப்படித்தான் கழிந்தது ஒரு நாயினுடையதைப் போல.

அதன் பிறகு சூழலே இளகியது போல உரையாடலுக்கானதோ எதற்கோ ஒரு துணை அவனுக்குத் தேவைப்பட்டிருக்க வேண்டும். திரையரங்கத்திற்குச் செல்லும் ஊர் வாலிபர்கள் ஓட்டலுக்கு வரும் பொழுதில் வலிந்து அவனுடன் உறவு ஏற்படுத்திக்கொண்டதை அவனால் தொடர முடிந்தது. பிறகு சில நாட்கள் அபூர்வமாக அவனை ஒத்த வாலிபர்கள் அவனுடன் மதகுக் கட்டையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அவன் எங்கள் பிராந்தியத்தின் புகழ்பெற்ற டிடர்ஜென்ட் சோப்பின் விளம்பரம் பதித்த பனியனைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அந்த வருடப் பொங்கல் விளையாட்டில் ஊர் வாலிபர்களின் வற்புறுத்தலின் பேரில் பானை உடைத்தலில் கலந்துகொண்டு எல்லோரையும் சிரிக்கவைத்துத் தோல்வியடைந்தான்.

1994ஆம் வருடத் தொடக்கத்தில் பஞ்சாயத்துத் தலைவரே அந்தப் புதிய வருடத்திற்கான மீன் குத்தகை ஏலத்தை எடுத்திருந்ததார். லாபத்தின் கூட்டல் பெருக்கல்களில் மயங்கிக் குளக்கரையில் நிகழ்ந்துவந்த ஆக்கிரமிப்பிலிருந்து சட்டப்பூர்வமாக அதை மீட்டு அகலப்படுத்த வேண்டி ஊர்ப் பஞ்சாயத்து முடிவுசெய்தது.

பூதக்கண்ணாடியின் வீடும் அகற்றப்பட வேண்டிய புறம்போக்கில் இருந்தது. அதைத் தனித்துவிட முடியாது. இந்தச் செய்தி எட்டியதும் அவன் அன்று பகலிலேயே ஊர் முக்கியஸ்தர்களிடம் பரிதாபமான முகத்தோடு வெயிலில் நின்றபடி கெஞ்சிக்கொண்டிருந்தான். பூதக்கண்ணாடிக்காக ஆதரவு தெரிவித்து அவன் வீட்டை விட்டுவிடச் சொல்லிப் பேசியவர்களும் பள்ளிக்கூடத்தை ஒட்டி வரும் புறம்போக்கில் அவனை வீடு கட்டிக்கொள்ளச் சொன்னதும் பஞ்சாயத்திற்குக் கட்டுப்பட்டார்கள். ஆனால் அன்று முழுதும் வேலைக்குப் போகாமல் பரிதவித்து அங்குமிங்குமாய்க் குழப்பமான முகத்துடன் திரிந்துகொண்டிருந்தான்.

குளக்கரையை அகலப்படுத்த வேண்டிய வேலைக்கான முதல்நாள் ‘பொக்லைன்’ வைத்து மண் மேட்டைச் சரிக்கத் தொடங்கிய போது ஊரில் வேலையற்றவர்களின் கும்பல் முகத்தில் அறையும் காலைப் பகலின் வெயிலில் அவனும் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். மதியத்திற்கு மேல் அவன் வீட்டைப் பிரிப்பதற்காக அவனுக்குக் கடைக்கு ஆள் அனுப்பினார்கள். அவன் இன்னும் வரவில்லை என்றார்கள். வேறு வழியில்லாமல் அவனுடைய அந்தக் கூரை வீடு கூலியாட்களால் பிரிக்கப்பட்டு மறுபக்கத்தில் அடுக்கப்பட்டது.

தங்கப்பன் வீட்டின் பகுதிகளைப் பொக்லைன் மண்ணைச் சரித்து அள்ளத் தொடங்கியபோது பூதக் கண்ணாடியின் சைக்கிள், திட்ட வரைவுகள் இல்லாத இலக்கற்ற பயணத்தில் களைப்புடன் சென்று கொண்டிருந்திருக்கும். திரும்பிச் செல்ல முடியாத ஊரின் நினைவுகளில் அவன் மூழ்கிக்கொண்டிருப்பதை, தடுக்க முடியாமல் தடுத்தபடி அவன் தனக்குள் உரையாடிக்கொண்டிருந்த காலத்தின் ஒரு காலத்தில், எப்போதும்போல அவன் சைக்கிள், அவனுடைய துணையைப் போல ஒரு ஆறுதலுடன் இருந்திருக்கலாம். எதிர்காலத்தைப் பற்றிய பதற்றத்தாலும் தன் பெயருக்குப் பின்னே இனி எழுப்பப்படவிருக்கும் அழிக்க முடியாத துரோகம் மிகுந்த திகிலை நினைத்தும் ஹாண்டில்பாரைப் பிடித்த கரங்களுக்குள் பிசுபிசுத்த வியர்வையை உணர்ந்தபடி அவன் ஒரு துளிக்கும் தாண்டிய கண்ணீரையும் விட்டிருக்கலாம். அல்லது அவன் தங்கப்பனின் இழப்பிற்குப் பிறகும் இருந்த மனத்திடத்தால் கனவுகளில் தோன்றும் சிவப்புக் கட்டை எறும்புகளை நினைத்தவாறு சாவதானமாகவும் சைக்கிளை மிதித்தபடி குறிப்பிட்ட ஏதோ ஒன்றைத் தேடியும் சென்றுகொண்டிருந்திருக்கலாம். தோண்டி எடுக்கப்படும் மண், மனதைப் போல, நினைவில் வரும் காலத்தைப் போலப் பின்னோக்கிப் புரண்டுகொண்டிருந்தது. ஒரு சிதிலமடைந்திருந்த உடலின் கால் பகுதியைப் பொக்லைன் புரட்டத் தொடங்கியபோது, மலையேற்றத்தில் காதுகளை அடைத்த தன்மையுடன் வெளியிடப்படாத எங்களின் கூட்டு அலறல்களால் அத்தருணம் நிரப்பப்பட்டிருந்தது. வேடிக்கையின் திசையில் சட்டென எழுந்த காற்று மண்ணை வாரித் தூற்றியது. மாவிலிங்க மரம் இலைகளை அலட்சியத்துடன் உதிர்த்துக் கொட்டத் தொடங்கியது. டிம்பர் டிப்போக்களில் கூரான இரும்புப் பற்கள், ஈவிரக்கமற்றுக் கத்திக்கொண்டு அறுத்து முடித்து விடுவதுபோல அது தொடங்கப்பட்டும் முடிக்கப்பட்டும் இருந்த வாழ்க்கையின் சகல காலங்களுக்கான அத்தனை தருணங்களையும் வீசியடித்தது. பதற்றக் குரல்களுடன் உறுதிசெய்யப்பட்ட செய்தியை நாங்கள் திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தோம்; கட்டுப்படுத்த முடியாமல் எழும்பிய ஊர் பெண்களின் அழுகை, வேறு வழியின்றி முட்டிக் கொண்டிருந்த அணையை உடைத்தது.

போக்குவரத்து ஸ்தம்பித்து வேடிக்கைப் பொருளைப் போல பார்க்கப்பட்ட அவ்வுடலை போலீஸ் வரும்வரை எல்லோரும் குளக்கரை மேட்டில் பார்த்துக்கொண்டிருந்தோம். அது வத்சலாதான் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் தேவைப்படவில்லை. வாழ்க்கைக்கான நம்பிக்கையுடன் திரும்பி வந்த அவள் சினேகிதியின் இரவல் ரவிக்கை புடவையுடன் புதைக்கப்பட்டிருந்தாள். துரோகத்தின் கொடிய நிழலும் ஊக்கம் பெற்ற மனப் பிறழ்வின் நடத்தைகளின் முன்னும் அவள் வலுவாகப் போராடியிருப்பாள் என்பதே அவள் வாழ்க்கைக்கான கடைசிப் போராட்டமாக இருந்திருக்கும். 

 

http://www.sirukathaigal.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.